Episode 1
“மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரப்போவுது, யார்லாம் மண்டாபிடி செய்யப்போறீங்களோனு வரிசையா வந்து பதிவு பண்ணிடுங்க” கோவில் நிர்வாகி சொல்ல ஊரார் எல்லாரும் வரிசையாக பதிவு செய்தனர். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார் கோவில் நிர்வாகி சண்முகம்.
“காசி”
“தமிழ்செல்வன்” என்று அவரவர் பெயர்கள் சொல்லிக் கொண்டு வர இடையே,
“லட்சுமணன்” என்று சத்தமாகக் குரல் கொடுத்தான் சக்தி.
“என்னது? லட்சுமணனா? திலகர்னு எழுதுங்க” என்று முன்னே வந்து சட்டமாக சொன்னார் வாஞ்சிநாதன். திலகரின் மகன்.
“என்ன தம்பி, திலகர் அய்யா தானே முதல்ல செய்வார்?” என்று சண்முகம் கோபமாக வாஞ்சிநாதனை பார்த்திருந்த சக்தியிடம் கேட்க,
“இப்ப வரிசையாதானே பெரியப்பா பெயர் எழுதுறீங்க? அப்போ எங்க தாத்தா பெயரை எழுதுங்க. பின்னாடி சொன்னவர் பெயரை அப்புறம் எழுதுங்க” என்றான் அவன்.
“வரிசையானாலும் ஊர்ல எப்பவும் இதே வழக்கம்தானே சக்தி? திலகர் மாமா கோச்சுப்பார்” என்றதும்,
“அவன் கிட்ட என்ன மச்சான் விளக்கம் சொல்றீங்க? நாங்கதான் முதல்ல செய்யணும். அப்புறம் அவங்களை சொல்லுங்க” என்று வாஞ்சிநாதன் பிடிவாதம் கொள்ள,
“ஏன் வாஞ்சி? அவன் முதல்ல பெயரை சொல்லிட்டான்னு விட்டுக்கொடுத்தா என்ன?” இன்னொரு பெரியவர் கேட்க,
“இவனுங்களுக்கு ஏன் விட்டுக் கொடுக்கணும்?” என்று வாஞ்சிநாதன் கத்தினார்.
“எங்க அப்பா இந்த நாட்டுக்காக போராடினாரு, இவனுங்க குடும்பம் என்ன பண்ணானுங்க துரைக்குக் கூஜா தூக்கின கும்பல்தானே?” என்று எள்ளலாய்க் கேட்டார் வாஞ்சிநாதன்.
அதில் பாஸ்கரனுக்கு கோபம் வந்தது.
“வாயை மூடு வாஞ்சிநாதன்! அதிகம் பேசாத.” என்று அதட்ட,
“என்ன பெரியப்பா? எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவர் திலகரா இல்லை ஹிட்லரா? நானும் இந்த நாட்டுக்கு சேவை செய்ற வேலையிலதானே இருக்கேன்” என்று சக்திவேல் சண்முகத்தைக் கேட்டான். சக்திவேல் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.
“ஆமா ஆமா! பெரிய சேவை…” என்று அதுவரை அமைதியாக இருந்த லாலா வாயைத் திறந்தான். திலகரின் பேரன், வாஞ்சி நாதனின் மகன் லாலா லஜபதி ராய்.
“என்னடா திமிரா?” என்று சக்தி எகிற,
“சக்திவேல்!” என்று அவனை அதட்டினார் அவன் அப்பா பாஸ்கரன்.
“திமிர்தான்!” என்ற லாலா சொல்லியவன்,
“என்ன மாமா? அவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறீங்க?” என்றபடி பேனாவை எடுத்து பெயரை எழுத போக, சக்தி அவன் கையை முறுக்கினான்.
அவ்வளவுதான் கலாட்டா அங்கே! இருவரும் அடித்துக் கொள்ள, இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தனர். லட்சுமணனும் திலகரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே வர இருவரின் பேரன்களும் முறைத்தபடி நின்றனர்.
சக்தியின் அடியால் லாலாவின் சட்டை கிழிந்து அவன் முகம் கன்றி போய்விட்டது. சக்திவேலின் கன்னம் சிவந்திருக்க , பார்த்த லட்சுமணன் துடித்துவிட்டார்.
“வேலை வெட்டி இல்லாத வெட்டி பய கூட எல்லாம் உனக்கு என்ன பேச்சு சக்தி? இவனோட சண்டை போட்டு இவனை சண்டியர் ஆக்குறியா? சும்மா பழைய பெருமை பேசிட்டு கிடக்குற பயலுக்கிட்ட ஏன் சண்டை போற, உனக்கு ஒரு தகுதி இருக்கு. தெய் ஆர் நாட் ஈகுவள் டூ யூ! ” என்றபடி பேரனின் கசங்கிய சட்டையை நீவிவிட, லாலா கடுங்கோபத்துடன் சக்திவேலை முறைத்தான்.
திலகர் லட்சுமணனை முறைத்து,
“கண்ட பய கிட்ட பேரனை அடி வாங்க விட்டு வேடிக்கை பார்ப்பியா நீ?” என்று மகனை கடிந்தபடி பேரனை தன்னோடு அழைத்து செல்ல,
“இவனுங்க மண்டாபிடி பண்றதுக்குள்ள, மண்டையை உடைக்காம விட மாட்டானுவ போலயே” என்று சண்முகம் புலம்பினார்.
அருகே இருந்த ராஜதுரை அவனிடம், “நீங்க செய்றதும் தப்புதானே பெரியப்பா, திலகர் தாத்தாவே எப்பவும் செய்யணுமா? வரிசைப்படி பெயர் சொன்னது சக்திவேல் தானே?” என்று கேட்டான்.
“நீ உங்க பங்காளிக்குத்தாண்டா வக்காலத்து வாங்குவ” என்று சண்முகம் ராஜதுரையைப் பேசினார்.
“நியாயம் பேசினா என்னை பேசுறியா நீ?” என்று ராஜதுரை அவரை முறைக்க,
“என்னடா என்ன முறைக்கிற? உன் பொண்டாட்டிக்கு அவங்க பங்காளி முறை. மருமக கிட்ட சொல்லவா?” என்று சண்முகம் மிரட்ட,
“அவளும் நியாயமாத்தான் பேசுவா. நீ என்ன பெரியப்பா சொல்றது. நானே சொல்லிப்பேன். லட்சுமணன் தாத்தா பெயருக்கு அப்புறம் நாங்க செய்யணும். பெரியப்பா பெயரை எழுதிடு” என்று அவன் பாட்டுக்கு சொல்லிவிட்டு போய்விட்டான்.
சண்முகம் இரண்டு கையாலும் கன்னத்தைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க, வெளியூரிலிருந்து வந்திருந்த அவரின் சகளை இதையெல்லாம் பார்த்துவிட்டு,
“ஏன் சகளை? ஒரு பெயர் எழுதுறதுக்கு உங்க ஊர்ல இப்படி அடிச்சிக்கிறீங்க? மண்டாபிடிதானே? யார் செஞ்சா என்ன? நானும் பார்த்தேன், அந்த ஆள் வாஞ்சிநாதன் பின்னாடி நின்னாரு, அந்த பையன்தான் முன்னாடி நின்னு பெயர் சொன்னான்” என்று அவரும் நியாயம் பேசினார்.
“யோவ்! நீ வேற ஏன்யா? அதெல்லாம் சொன்னா திலகர் மாமா கேட்கமாட்டார். அந்த சக்தி பயலுக்குத் தெரியும் தமிழ்செல்வனுக்கு அப்புறம் திலகர் பெயர் வரும்னு, வேணும்னுதான் அவங்க தாத்தா பெயரை சொன்னான்.” என்று சக்தியைத் திட்டினார்.
“ஏன் சொன்னா என்ன தப்பு? அவங்க கோவில்ல மரியாதை எதிர்ப்பார்த்தா நியாயம். இது பொதுதானே?” என்று கேட்டிட,
“இந்தியாவும் பாகிஸ்தானும் என்ன சொந்தம்?” என்று சண்முகம் கேட்டார்.
“பக்கத்து நாடு”
“அதே மாதிரி அவனுங்க ரெண்டு பேரும் பக்கத்து வீடு” என்றதும்,
“பக்கத்து வீட்ல இருந்துட்டா இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி அடிச்சிக்கிறானுங்க?” என்று சகளை ஆச்சரியப்பட்டார்.
“இதுக்கு எதுக்கு வாயைப் பொளக்கிற? இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை போட்டுக்கல, சீனாவும் இந்தியாவும் பக்கத்துல இருந்தாலும் அடிச்சிக்கல, கீழே இலங்கை, அது கூட நமக்கு நல்ல பழக்கம் இருக்கா இல்லையே? பார்டர்னாலே பிரச்சனைதானே? இந்த ஊரோட இந்தியா பாகிஸ்தான் அந்த ரெண்டு வீடும். என்னைக்கு எந்த குண்டு வெடிக்கும்னே தெரியாது.”
“அப்படி என்ன பகை?”
“ஒரு மசுரும் கிடையாது! இந்த திலகரோட அப்பா சுப்ரமணியம் இருக்காரே, அவர் சுதந்திர போராட்ட வீரர். ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் பண்ணினப்போ கூடவே போனாரு. அதே நேரம் லட்சுமணன் பெரியப்பா அப்பா வேதையன் இங்கிலிஷ்காரன் கிட்ட குமாஸ்தாவா வேலை பார்த்தார். அதனால இரண்டு குடும்பத்துக்கும் அப்போ ஆகாது, சுதந்திரம் கிடைச்ச பின்னாடியும் இவங்க திருந்தல..”
“சின்ன வயசுல இருந்தே அவன் தொரைக்குக் கூஜா தூக்கினவனு திலகர் மாமா வீட்ல லட்சுமணன் பெரியப்பா வீட்டை பேச, அப்படியே இத்தனை வருஷம் ஆகியும் பகை தீரவே இல்லை. திலகர் மாமா இப்படி பேசினதால லட்சுமணன் பெரியப்பா அவர் பேரனை போலீஸ் ஆக்கி இந்த நாட்டுக்கு சேவை செய்ய வச்சிட்டார்.”
“திலகர் மாமா அப்பவும் நாங்க நாட்டுக்காக போராடினோம்னு அதே பேச்சு. சுதந்திரம் கிடைக்கிறதுக்கு முன்னாடி சக்தி குடும்பத்துக்கு நிறைய மரியாதை இருந்தது, கிடைச்சதுக்கு அப்புறம் அப்படியே தலை கீழா மாறி போயிடுச்சு.”
“இப்படி இருக்கும்போது திலகர் மாமா பையன் சித்ரஞ்சன், லட்சுமணன் பெரியப்பா பொண்ணு வசுந்தராவை லவ் பண்ணி வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிட்டான்.”
“அட்ரா சக்க! அப்போ இதான் சங்கதி. சம்பந்திக்காரங்களா இருந்துட்டு இவ்வளவு ரகளையா?” என்று சகளை சத்தமாக சிரித்தார்.
“அட நீ வேற, இன்னும் அந்த பொண்ணை அவங்க வீட்ல ஏத்துக்கல, சித்ரஞ்சனும் ரொம்ப ஊருக்கு வர மாட்டான். அவன் மெட்ராஸ்ல செட்டில் ஆகிட்டான். பாரு அவனவன் வெள்ளைக்கார பொண்ணை எல்லாம் கட்டி நாடு மாறிடுச்சு, இவங்க இன்னும் எம்பது வருஷ சண்டையைப் பிடிச்சு அந்த சின்ன பயலுங்க சக்தி லாலா கூட எங்க பார்த்தாலும் ஒரே வம்புதான்” என்று வரலாற்றை சொல்லி முடித்தார்.
வாஞ்சிநாதன் மகனை பைக்கில் ஏற்றிக்கொண்டு சுதந்திர விலாஸுத்துக்குள் நுழைந்தார்.
சுதந்திர விலாசம் திலகரின் வீடு. திலகரின் தந்தை சுப்ரமணியம் சுதந்திர போரட்ட தியாகி. அதனாலயே மகன், பேரன், கொள்ளு பேரன் என்று எல்லாருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர். பேரன் லாலா கிழிந்த சட்டையும் வீங்கிய முகமுமாக உள்ளே நுழைய அஞ்சம்மா
“அப்புச்சி! என்ன ஆச்சு? ஏன் இப்படி சட்டை கிழிஞ்சிருக்கு?” என்று பதறினார்.
“ஏன் ஆத்தா? நானே கிழிஞ்சிருக்கேன், உனக்கு சட்டை கிழிஞ்சது பிரச்சனையா?” என்றபடி சட்டையைக் கழட்டினான். அவன் உயிர் நண்பன் ஆசையாக முதல் மாத சம்பளத்தில் வாங்கிக் கொடுத்தது, அதை கிழித்துவிட்டானே என்று சக்தியை நினைத்து பல்லைக் கடித்தான்.
சக்தி கையை முறுக்கியது வேறு வலியெடுக்க,
“வலிக்குது ஆத்தா” என்றான் கண்ணை சுருக்கி. திலகருக்குப் பேரன் வலியில் துடிப்பது கண்டு பொறுக்கவில்லை.
“அந்த பய போலீஸ்னா பெரிய இவனா? என் பேரன் மேல எப்படி கை வச்சான்? நீ என்னடா பண்ணின?” என்று மகனை திட்டினார்.
“முதல்ல அவனை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போங்க” என்று மகனை முறைத்தபடி சொன்னார் சித்ரா.
“வீட்ல ஒழுங்கா இல்லாம உப்பு சப்பு இல்லாத சண்டைக்கு போய் அடி வாங்கிட்டு வரான்” என்று திட்டியபடி சமைக்க போய்விட்டார். அவருக்கு இத்தனை வருடத்தில் இந்த சண்டைகள் எல்லாம் சலித்து போய்விட்டன.
சுதந்திரம் பெற்ற பின்னும் மாறாமல், உறவான குடும்பத்தை ஒவ்வொன்றுக்கும் குத்திக் காட்டி பேசுவது எல்லாம் தப்பு என்ற எண்ணம் அவருக்கு. மகன், மகள் எல்லாரும் அப்படித்தான், இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள், எல்லாருக்கும் தாத்தா செல்லம்.
இவர்கள் வீட்டில் இப்படி கலாட்டா நடக்க,
“ஐ அம் ப்ரவுட் ஆஃப் யூ சக்தி!” என்று சக்தியின் தோளில் தட்டினார் லட்சுமணன். பணிவாக குனிந்து நின்ற சக்தி,
“அது என் கடமை தாத்தா” என்றான்.
“தட்ஸ் மை பாய்!” என்று சிரித்தார் அவர். லட்சுமணன் அந்த காலத்திலேயே ஆங்கில வழி கல்வி கற்றவர், வங்கியில் வேலை பார்த்து ஓய்வுப்பெற்றவர். சின்ன வயதில் அவர்கள் ஊரில் ஒன்றிரண்டு பேரை தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரியாது, இவருக்குத் தெரியும் என்பதில் பெருமை.
அது எல்லாம் திலகருக்கு பொறாமை. சுதந்திரம், சுதேசம் என்று சொல்லி இவர்கள் மீதான வஞ்சத்தை தீர்த்துக் கொள்வார்.
“எத்தன வருஷத்துக்கு அந்த திருட்டுப்பயலுக்கே முதல் மரியாதை கொடுக்கிறது? நீ சரியா நடந்திருக்க சக்தி. ஆனாலும் அவனோட பேரன் லாலா.. அவன் எல்லாம் ஒரு ஆளா? அவன் கூட எல்லாம் சண்டை போடாத, சில்லி ஃபெல்லோ, கன்ட்ரீ ப்ரூட்!” என்று திட்ட, சக்தி வாய்க்குள்ளே சிரித்தான்.
இரவு மணி ஒன்பது ஆகிவிட, டவுனில் இருக்கும் அந்த பரோட்டா கடையில் கூட்டம் அலைமோதியது. லாலா பரோட்டா சால்னா என்று கண்முன் இருந்தாலும் வேகமாக உண்ண முடியவில்லை. சக்தி முறுக்கியது கை வலித்தது. அதே நேரம் லாலாவின் பக்கத்தில் சக்தி வந்து நின்றான்.
“சாத்தான் நினைச்சதும் வந்துடுச்சு” என்று முணுமுணுக்க,
“யார்டா எரும சாத்தான்” என்று சக்தி லாலாவின் தோளில் கையைப் போட, லாலா முகத்தைத் திருப்பினான்.
“என்ன மச்சானுக்கு அடிச்சது கோவமா?” என்று சக்தி அவன் தாடையைப் பிடிக்க,
“மண்ணாங்கட்டி! அடிச்சது கூட விடு, அந்த சட்டையை ஏண்டா கிழிச்ச நாதாரி” என்றான் கடுப்பாக.
“எனக்குப் பிடிச்ச சட்டை, நீ வாங்கிக் கொடுத்ததுடா விளக்கெண்ண” என்று வசைப்பாடியவன்,
“கையை வேற பிடிச்சு வலிக்கிற மாதிரி முறுக்கிட்ட, டேய் நிஜமா எனக்கு ப்ரண்ட்தானா?” என்றதும் சக்திவேல் முறைத்தான். அவன் கோபித்துக் கொண்டான் என்று புரிய,
“பின்ன என்னடா மாப்ள, அந்த தலைவெளுத்த தற்குறிங்க தொல்லை பண்ணீனா நீயும் ஏண்டா இன்னிக்கு சண்டைக்கு வந்த, நம்மதான் இப்படி இருக்கோம். அவனவன் இத்தாலி பொண்ணு, இங்கிலாந்து பொண்ணுனு கரெக்ட் பண்றான். உன் தாத்தனும் என் தாத்தனும் கடைசி வரைக்கும் திருந்தவே மாட்டானுங்க”
“இதுல கடுப்பேத்துற மாதிரி, அப்போதான் உன் தாத்தா அந்த மேஜர் சுந்தர்ராஜன் இங்கிலிஷ்ல பேசுறார், வீட்ல அதை சொல்லி என் தாத்தான் உசுர வாங்குறார்” என்றான் லாலா கடுப்பாக.
“ஏண்டா இப்படி புலம்புற? எங்க தாத்தாவும் பாவம்தானே? ஒரு தடவ உன் வீட்டு பெருசு விட்டுக்கொடுத்தா என்னவாம்? நான் சும்மாதான் பெயரை சொல்லி பார்த்தேன், நீதான் முதல்ல என்னை பேசின, தாத்தா அப்பா எல்லாம் இருக்கவும் எமோஷனல் கை நீட்டிட்டேன்.”
“நீ கூடத்தான் என் மூஞ்சுல குத்திட்ட. பாரு இதுக்கே நான் ஃபேசியல் பண்ணனும் போல. நம்ம நண்பன் ஒரு போலீஸ் காரன் ஆச்சே? இப்படி முகத்தோட போனா யார் மதிப்பானு யோசிச்சியாடா லாலா நீ?” என்று லாலாவைப் பேசினான்.
“நானும் ஒரு எமோஷன்ல அடிச்சிட்டேன், சரி விடு ஒரு கலக்கி சொல்லு.” என்றதும் சக்தி அவனுக்கும் பரோட்டா சொன்னான். இருவரும் உண்டு கொண்டிருக்க,
லாலா புன்னகையோடு, “ஏன் ஆளு, இவங்களும் நம்மை மாதிரி ஒற்றுமையா இருந்தா இந்த உலகமே அமைதியாகிடும், உலக அமைதி கெடுறதே இந்த பெருசுங்களாலதான்” என்றான்.
சக்தி ஏதோ பேச வர, லாலாவின் போன் சத்தம் போட அவன் தங்கை அழைத்தாள்.
“என்னடி?” லாலாவின் குரல் அதட்டலாக வர,
“எங்கடா இருக்க?”
“அது எதுக்கு உனக்கு?” என்று லாலா வம்பாக பேசினான்.
“எங்க பொறுக்கிட்டு இருந்தாலும் பத்து மணிக்குள்ள வீட்டுக்கு வரணும்னு தாத்தா ஆர்டர், இல்லனா சுதந்திர விலாசம் கதவு மூடப்படும்” என்றாள் அவனின் பாசமான தங்கை.
“வாயாடி! வீட்டுக்கு வந்து உன்னை பேசிக்கிறேன்” என்று திட்டி வைக்க, அடுத்து சக்திவேலின் போனுக்கு அழைப்பு வர பார்த்தாள் ‘எஸ்.பி’ என்று வர,
“யார்டா?” என்றான் லாலா.
“எஸ்பி டா, வேலையா கூப்பிடுவார். அப்புறம் பேசிக்கிறேன்” என்றான்.
“சரி, எப்படி போவ, பைக்ல வந்தியா? நான் ட்ராப் பண்ணவா?” என்று சக்தி கேட்க,
“வேற வினையே வேண்டாம், அந்த தவுட்டுக்கு வாங்கினவளுக்கு மட்டும் நீயும் நானும் ப்ரண்ட்னு தெரிஞ்சா அவ்வளவுதான், திலகர் டெரர்ஸ்டா மாறிடுவார்” என்று லாலா பயப்பட,
“ஏண்டா? என்னை உன் ப்ரண்டுனு சொல்றதுக்கே இப்படி பயப்படுற, உன் சித்தப்பனே பரவாயில்லை போலடா.” என்று சக்தி அவனை பேசினான்.
“ஏன் சொல்லமாட்ட, நீ சொல்லேன் என்னை உன் ப்ரண்ட்னு உன் மேஜர் சுந்தர்ராஜன்கிட்ட, கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்தான்” என்றான்.
“நான் சொல்லுவேன். இப்போ வா பஸ் ஏத்தி விடுறேன் வா” என்று சக்தி அவனை அவர்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு அவன் வீடு சென்றான்.
——————————————————
ஒரு பத்து நாளைக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவுகள் வரும் ஃப்ரண்ட்ஸ். அருகினில் என் தூரமேவுக்கு மட்டும் அப்படி!
Read and Share your thoughts.
இந்த கதையை முதன்முதலாக யார் படிக்கிறீங்க? யாருக்கு இது மீள் வாசிப்புன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
✅ End of Episode 1
SP வரவுக்காக waiting....
Sp யாரு கா இதுல.. you mean சித்தப்பா
@Pavithra Narayanan யாருகிட்ட இருந்து போன் வந்ததோ அந்த sp க்கு தான்
@Sathya Velusamy
Very nice. Sp sitharanjan thane.
சக்தி - லாலா கூட்டுக் களவாணிகள்.