Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 8

காளிதாஸ் 8

“சொல்லு நித்தி? எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் தாஸ், உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று நித்தி தயங்கினாள்.

“கம் ஆன் நித்தி! சொல்லு” என்று அவன் சொல்ல,

“அது அன்னிக்கு நீ கடத்தி வச்சிருந்த பொண்ணை என் ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன்” என்றதும்,

“அவங்க கூட என்னைக் கடத்தல் பண்ணினன்னு சொல்ல மாட்டாங்க, ஆனா நீ இருக்கியே” என்று தோழியைத் திட்டினான்.

“டேய்! சொல்றது கேளு. அந்த பொண்ணு செம டிப்ரஷன்ல இருக்கா போல, டிஹைட்ரேட் ஆகி மயங்கின ஸ்டேஜ்ல ஹாஸ்பிட்டல் வந்தா. நேத்து அட்மிட் பண்ணினாங்க, இன்னிக்குக் காலையிலதான் டிஸ்சார்ஜ். உனக்கு  நேத்தே சொல்ல நினைச்சேன்” என்றதும்,

“இதை ஏன் நீ எங்கிட்ட சொல்ற?” என்று எதிர்க்கேள்வி கேட்டான் காளிதாஸ்.

“ஹ்ம்ம், நீங்கதானே ஸர் கடத்தல் எல்லாம் பண்ணீங்க. அதான் சொல்லணும் தோணிச்சு சொன்னேன். நல்லவேளை அந்த பொண்ணுக்கு என்னை ஞாபகமே இல்லை” என்று நித்திலா சொல்ல,

“ஞாபகமில்லாத வரை சந்தோஷப்பட்டுக்கோ, இல்லைனா அவங்கப்பா கிட்ட சொல்லியிருந்தா டாக்டரே நீ காலி” என்று சிரித்தான்.

“போடா, எனக்குத் தெரிஞ்சது சொல்லிட்டேன். இதுல இன்னிக்கு க்ளோகோஸ் போட்ட கையை அசைச்சு, நீடில் குத்தி ப்ளட் வந்து இம்சைப் பண்ணிட்டா டா” என்று சொல்ல சொல்ல, காளிதாஸனுக்கு கார்த்தியாயினியை நினைத்துக் குழப்பமாய் இருந்தது.

“விடு நித்தி, அம்மாகிட்ட போய் இதை சொல்லிட்டு இருக்காத. அவங்க மறுபடி மயங்கினதுக்கும் நாந்தான் காரணம் சொல்லுவாங்க” என்றதும் நித்திலா வாய்விட்டு சிரித்தாள்.

“எல்லாரையும் மிரட்டுற காளிதாஸை மிரட்டுற ஒரே ஆள் எங்கத்த சிவகாமிதான்” என்று சொல்லி மீண்டும் சிரிக்க காளிதாஸனுக்கு இங்கே புன்னகை.

“ரொம்ப பண்ணாத, எங்க என் தோஸ்த்?” என்று தன் நண்பன் கவினைக் கேட்க,

“உன் தோஸ்த் எனக்குத் தலைவலினு காஃபி போடப் போயிருக்கார்” என்றதும்,

“அடிப்பாவி! நீ என்னோட கதைப் பேசிட்டு அவனை வேலை வாங்கிறியா?” என்று கேட்க,

“ஏன் செஞ்சா என்ன?” என்று சிலிர்த்துக் கொண்டு வந்தாள் நித்திலா.

அதற்குள் கவின் காஃபியுடன் வந்தவன் மனைவியிடம் தந்து விட்டு நண்பனிடம் பேச, “என்னடா? உன்னை வேலை வாங்குறாளா?” என்று காளிதாஸ் சிரிக்க,

“நீயும் காலகாலத்துல கல்யாணம் பண்ணியிருந்தா இதையெல்லாம் செஞ்சிருப்ப” என்றான் கவின்.

“ஸர் கல்யாணம் எல்லாம் செய்ற ஐடியாவே விட்டுட்டார் போல. சரி, காமராஜர் மாதிரி இருக்க போறார்னு நினைச்சா கடத்தல் மன்னன் ஆகிட்டான் கவி” என்று கடுப்பாய் சொன்னாள் நித்தி.

“நித்தி!” என்று காளிதாஸனின் குரல் அதட்டலாய் ஒலிக்கவும், மனைவியை அமைதியாய் இருக்க சொன்ன கவின்,

“டேய் அவ சொல்றதும் நியாயம்தானே? அம்மாவும் உன் இஷ்டப்படி விட்டுட்டாங்க. பாரு உன் வயசு எனக்கு, என் பொண்ணு ஃபிஃப்த் போறா” என்று நண்பனுக்காக வருத்தப்பட்டு கவின் பேசினான்.

“விருப்பம் இருந்தா பண்ணிக்க மாட்டேனா? எல்லாரும் செய்றாங்கன்னு நானும் செய்யணுமா என்ன?”

“டேய்! நமக்கு வயசு என்ன ஆகுது தெரியுமா? நாற்பதாகிடுச்சுடா உனக்கு”

“ஸோ வாட்?!” என்றான் காளிதாஸன் கூலாக.

“ஸோ வாட் ஆஹ்? ஏன் டா தலையில முடி இன்னும் கறுப்பா இருக்கறதால உன் வயசு வெளியே தெரியல” என்று கடுப்பானான் கவின்.

“இஸீட்? நிஜமாவா? அதனாலதானா?” என்று நக்கலாய்க் காளிதாஸ் கேட்க,

“டேய், தாஸ்! என்ன இப்போ? நீ யோகா பண்ற, ஃபிட்டா இருக்க. நல்லதா சாப்பிடுற, அதனால ஆரோக்யமா இளமையா இருக்க” என்று நீட்டி முழக்கினான் கவின்.

“டாக்டர் கவின்! கூடவே ஒன்னு சேர்த்துக்கோங்க, எனக்கு எந்த ஸ்ட்ரெஸூம் இல்லை, குடும்பம், மனைவின்னு. எனக்கு நானே ராஜா! ஸோ ரிலாக்ஸா இருக்கறதால யங்கா இருக்கேன். வேணும்னா நம்ம இரண்டு பேரும் தெரியாதவங்கட்ட ஏஜ் கேப்போமா?” என்று கிண்டல் செய்ய,

“எரும கிடா! குடும்பம், மனைவி எல்லாம் உனக்கு ஸ்ட்ரெஸாடா? உன்னோட அந்த அரசியல் நல்லா இருக்கு இல்ல” என்று எரிச்சல்பட்டவன்,

“நீ ஃபிட்டா இருக்கறது எனக்கு சந்தோஷம்தான். ஆனா, எனக்கு ஹாஸ்பிட்டல்ல, வெளியே என்ன பிரச்சனைனாலும் நான் முதல்ல தேடுறது நித்துவை. உனக்கு சொன்னா புரியாது டா”

“ரைட்! உனக்கும் சொன்னா புரியாது. எனக்கு stress உம் என்னாலதான், ரிலாக்ஸும் நானே ஆகிப்பேன். வேற யார்கிட்டவும் நான் அதைத் தேடத் தேவையில்லை கவி, அண்ட் நான் உடல் யங்கா இருக்கறதால சொல்லல, ஈவன் இஃப் ஐ அம் சிக்ஸ்டி, நான் மனசளவுல யங்க்தான்!” என்றான் அமைதியான ஒரு புன்னகையுடன்.

“ஷப்பா! தாஸே! உனக்கு மேரேஜ் பத்தின ஐடியா இருக்கா இல்லையா? நானும் எத்தனை நாளைக்கு உன் ப்ரைவேசில தலையீடக் கூடாதுன்னு டீசண்டாவே நடிக்கிறது பரதேசி. ஒழுங்கா ஒரு கல்யாணத்தைப் பண்ற வழியைப் பாரு” என்று உரிமையாய் சண்டையிட்டான் கவின்.

“இனிமேலும் டீசண்டாவே இருடா. சும்மா உனக்கும், உன் வீட்டம்மாவுக்கும் இதே வேலைதான். அப்படி எனக்குக் கல்யாணம்னா சொல்றேன், வந்து வாழ்த்திட்டு போ” என்றான் காளிதாஸன் எரிச்சலாக.

கவினிடம் பேசி முடித்து இரவு உணவை முடித்தவன், அவன் அறைக்குள் நுழைந்தான்.

“அலெக்ஸா! கீப் அலார்ம் அட் மார்னிங் சிக்ஸ்” என்று அமேசானின் மெய் நிகர் உதவியாளரிடம் சொன்னவன் மெத்தையில் விழுந்து டீவியை ஆன் செய்தான்.

செய்திகள் ஓட, அப்போதுதான் கார்த்தி பற்றி நித்திலா சொன்னது நினைவில் எழ, ஒரு யோசனையுடன் அவளுக்கு அழைத்தான்.

அங்கே கார்த்தியின் வீட்டில் அவளின் அம்மா விசாலாட்சி, “இன்னும் கொஞ்சம் சாப்பிடு காதுமா” என்று படுத்திக் கொண்டிருந்தார்.

“ம்மா, போதும்” என்ற மகளின் மறுப்புகளைக் காதில் வாங்கவில்லை.

பட்டினியாய்க் கிடக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கார்த்தியிடம் கொஞ்சமும் இல்லை. உண்மையில் பசி என்ற உணர்வே இல்லை, மனம் உடல் எல்லாம் மரத்த ஒரு நிலை! எதிலுமே எண்ணங்கள் போகவில்லை.

உடைந்து போய் விட்டாள் கார்த்தி! அப்பா மோசமானவன், அண்ணன் கீழ்த்தரமானவன் என்று நினைக்க நினைக்க அந்த  நினைவுகள் நெஞ்சினை அறுக்க உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை.

உண்டு முடித்து அவளின் அறைக்குள் போய்விட, செல்வா தங்கையின் அறைக் கதவைத் தட்டினான்.

“உங்கிட்ட பேசணும் கனி” என்று சொல்ல கதவைத் திறந்து அவள் கட்டிலில் அமைதியாய் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏன் சரியா சாப்பிடுறதில்லை நீ?” என்று அவன் அதட்டலாய்க் கேட்க, இத்தனை நாள் இனித்த அக்கறை இன்று அகக்கரையை எரித்துக் கொன்றது.

எல்லாமே நடிப்பு, எல்லாரையும் போல்தானே அம்மா இவனையும் வளர்த்தார்கள். அதிலும் அண்ணன் சொன்னால் சரியாக இருக்குமென அக்காவும், தம்பியும் அவனை ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.

பத்து வயது வரை அவனும் நல்ல பிள்ளையாகத்தான் இருந்தான். அதன் பின் கார்த்தி பிறக்க, அடுத்து இரண்டு வருடத்தில் ராஜீவ் பிறக்க பெரியவனைக் கவனிக்கத் தவறினார் விசாலாட்சி. அதில் செல்வா தவறியும் போனான். சின்னப்பிள்ளைகள் அம்மாவுடன் ஒட்டிக் கொள்ள, பெரியவன் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டான். அவரின் அரசியல், பணம், பகட்டு என்று அதில் மோகம் கொண்டவன், அவனாகவே தடம் மாறிப் போனான். தட்டிக் கேட்க வேண்டிய தந்தையும் கூட,

“என் பெயரைக் கெடுக்காம என்னமோ செய்” என்று சொல்லி விட, தறிகெட்டுப் போனான் கார்த்தியின் தமையன். ஆள் பலம், அதிகாரத் திமிர் எல்லாம் அவனை ஏற்றிவிட தூற்றும் வழியில் தானாய்ப் போய் விழுந்தான்.

ஒரு பெண்ணை தற்கொலை வரை அனுப்பிவிட்டு இன்று இவன் வீட்டுப்பெண் என்றால் அக்கறைப் பிறக்குமா? இது சாத்தியமா? இல்லை, இதுவும் வேஷமா? என்று யோசனை ஓட,  கார்த்திக்கு தலைவலித்தது. கைகள் தானாய்த் தலையைப் பிடித்துக் கொள்ள,

“என்னாச்சு கனிம்மா?” என்று செல்வா அருகே வர,

தள்ளி உட்கார்ந்தவள், “இல்லை, லேசா தலைவலி” என்று கண்மூடி கொண்டாள்.

“சரி சரி, இரண்டு நாளா கேட்கணும் நினைச்சிட்டே இருந்தேன். அன்னிக்கு அந்த காளிதாஸ் கூட உனக்கென்ன பேச்சு? மால்ல அவன் கூப்பிட்டதுமே நீ போற? அவன்தான் உன்னைக் கடத்தினது தெரியுமா?” என்று மனதை குடைந்த கேள்வியை செல்வரத்னம் தங்கையிடம் கேட்டு விட்டான்.

கார்த்திக்கு அதிர்ச்சி! 

என்ன சொல்வாள்? உன் உண்மை முகத்தை கிழித்தார் அவர் என்றா? இப்போது கூட அவனின் சட்டையைப் பிடித்து சண்டையிடலாம்தான். ஆனால், அம்மா??

நீயும் சுயநலமாகி விட்டாய் என்று மனம் காறி உமிழ, பொங்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டாள் கார்த்தி. ஊர்ப்பெண்கள் நலனை விட, உனக்கு உன் அம்மா, உன் அண்ணி என்ற சிந்தனை தானே என்ற மனசாட்சியின் கேள்விக்குப் பதில் இல்லை அவளிடம்.

“கனிம்மா?” என்று செல்வா மீண்டும் அழைக்க, அந்த அழைப்பே பிடிக்கவில்லை.

“அவன் உன்னை எதாவது ப்ளாக்மெயில் பண்ணினானா?” என்று செல்வா கேட்க,

இறுகிய குரலும் முகமுமாக, “அதெல்லாம் இல்லை, அவர் லெதர் பிஸ்னஸ் பத்தி எங்கிட்ட கேட்டார், நான் சொன்னேன். அவரோட ஃபாக்டரி அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லவும் நான் கார்ல ஏறினேன். அப்புறம் நான் மயங்கிட்டேன், எனக்கு என்ன நடந்துச்சு தெரியாது. அவர் ஏன் கடத்தினார்னு உங்ககிட்ட சொல்லியிருப்பாரே, ஏனாம்?” என்றாள் எரிச்சல் மேலிட. செல்வாவுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.

“அது அவன் பணத்துக்காகம்மா, விடு..! ஓகேம்மா. ஆனா, அவன் கூப்பிட்டதுமே நம்பி போய்டுவியா?” என்றதும்,

“அவர் அவரோட ஐடி காட்டினார், அதான் போனேன். அதான் பத்திரமா வந்துட்டேனே, என்னைத் தனியா விடு” என்று சொல்லி தலையைப் பிடித்துகொள்ள செல்வாவும், அறையை விட்டு வெளியேற கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

தங்கையின் நடவடிக்கைகள் புதிராய் இருந்தாலும், தங்கையின் எரிச்சல் கேள்வி கேட்க விடவில்லை செல்வாவை.

அறைக்குள் இருந்த கார்த்திக்கு, ‘செத்துவிடு!’ என்ற அறைகூவல். உயிரோடு இப்படி வதைப்படுவதை ஒரே நிமிடம், மொத்தமாய் உனக்கு நிம்மதி கிட்டி விடும் என்று மனம் அலறியது.

அப்போது பார்த்து தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. இஷ்டமே இல்லை.

“இட்ஸ் மீ காளிதாஸ்!” என்று அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வர இதயம் அதிரும் சத்தம் கேட்டது. அவனைக் காணாமல் இருந்திருந்தால் பொய்யாய் இருந்தாலும் தன்னளவில் நிம்மதியாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை. இன்னும் என்ன செய்து வைத்திருக்கிறார்களோ என்ற அச்சம் அகத்தை ஆட்டி வைத்தது.

அதே நேரம், இப்போதும் ‘நான்’ என்ற சுயநலமா என்று நாணியவளுக்கு பூஜாவைப் பற்றி தெரிய வேண்டி இருக்க, அவனின் அழைப்பை ஏற்றாள். உன்னால் முடிந்தளவு உன் அப்பாவும், அண்ணனும் செய்த பாவங்களைத் தீர்த்துவிடு என்று சொன்ன மனத்திடம், தீர்க்கும் பாவங்களா என்று கேட்டவளுக்குக் கண்ணோரம் கண்ணீர்த் துளிகள்.

“சொல்லுங்க” என்றாள். குரலில் அவ்வளவு மாற்றம், அன்று தன்னிடம் முதல்முறை பேசியபோது இருந்த ஆளுமை, நிமிர்வு எல்லாம் காணாமல் போய் ஒரு குற்றவுணர்ச்சி நிறைந்த குரல்.

“எப்படி இருக்கீங்க கார்த்தி மேம்?” என்றான் மரியாதையாகவே.

“இருக்கேன்” என்றவள்,

“பூஜா எப்படி இருக்கா? என்னால எதாவது ஹெல்ப் செய்ய முடியுமா?” என்ற பாவையின் குரலில் பரிதவிப்பு.

“ஷி இஸ் ஃபைன்! உங்க உதவி அவசியப்படல. தேங்க்ஸ் நீங்க செஞ்சதுக்கே” என்றவன்,

“சாப்பிடாம இருந்தா உங்கப்பா உங்கண்ணா எல்லாம் திருந்திடுவாங்களா? திருந்தற மாதிரியான தப்பெல்லாம் அவங்க செய்யல, இட்ஸ் க்ரைம்” என்றான் அழுத்தமாக.

கார்த்தியிடம் மௌனம்! என்னதான் செய்வாள், அவளும்? யாரிடமும் பகிர முடியாத பாரம். நெஞ்சு அடைத்தது, உணவே இறங்கவில்லையே. அவன் பேச்சில் வந்த அழுகையை அடக்கினாள்.

“வாழணும்னு ஆசை இல்லாதப்போ எப்படி பசியை உணர முடியும் ஸர்?” என்று அவனிடம் கேட்டாள்.

“லிஸன் கார்த்தி! இட்ஸ் ரப்பிஷ்! அப்பா, அண்ணா சரியில்லையன்றதுக்காக எல்லாம் உங்களை நீங்க அழிச்சிப்பீங்களா? அட்லீஸ்ட் அப்பாவா, அண்ணாவா அவங்க சரியா இருக்காங்கனு சந்தோசப்படுங்க. அப்படி கூட அமையாத துரதிர்ஷ்டசாலிங்க நிறைய பேர் இருக்காங்க. அதுக்காக இப்படி ஒருத்தர் கூட பொறந்துட்டோம், ஒருத்தருக்குப் பொறந்துட்டோம்னு உங்களைக் கஷ்டப்படுத்திக்கக் கூடாது”

அவன் சொன்னதன் அர்த்தம் புரிய அடக்கிய அழுகை அணை உடைத்தது.

“ஷ்! அழாதீங்க. நம்ம யாருன்றதை நம்ம பிறப்போ, குடும்பமோ தீர்மானிக்காது. நம்ம எண்ணங்கள், செய்ற செயல்கள்தான் அதை முடிவு செய்யும். குடிப்பிறப்புன்றதெல்லாம் வேஸ்ட், எண்ணங்கள்தான் மனுஷனை உருவாக்குது. அப்படி பார்த்தா நீங்க ரொம்ப நல்ல பொண்ணு, உங்களை அழிச்சிக்காம நல்ல வழியில உங்க மனசைக் கொண்டு போங்க” என்றான் பொறுமையுடன்.

அவன் சொன்னதெல்லாம் மனத்தில் ஏறினாலும், பட்டென்று ஒரு கேள்வி வந்தது. இதை அவனிடம் கேட்கவே கூசியது.

“ராஜீ.. ராஜீவ் நல்ல பையனா இல்லை, அவனும்?” என்றாள் தேம்பலுடன்.

“ஓஹ் மை காட்! நீங்க ஏன் அவ்வளவு யோசிக்கிறீங்க? ஹி இஸ் குட்! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், நான் வாட்ச் பண்ணின வரை. எல்லாரையும் நம்புறதும் தப்பு, யாரையும் நம்பாம இருக்கறதும் தப்பு. இந்த விஷயத்துல ஏமாத்தின அவங்கதான் தப்பானவங்க. எந்த ஹெல்ப்னாலும் கேளுங்க. டேக் கேர்!” என்று அவன் வைக்கப் போக,

“இன்னும் என்னை வாட்ச் பண்றீங்களா? எனக்கு முடியலன்னு எப்படி தெரியும்?” என்று கேட்க, லேசாய் சிரித்தவன்,

“உங்களுக்கு அன்னிக்கு என் வீட்ல டீரிட்மெண்ட் பண்ணின டாக்டர்தான் இப்பவும் உங்களுக்குப் பார்த்தாங்க, அவங்க சொன்னாங்க. உங்களை வாட்ச் பண்ற அவசியம் இப்போ இல்லை எனக்கு” என்று தெளிவாய் சொன்னான்.

“அப்பா, அண்ணா மட்டும் குடும்பம் இல்லை, அவங்கதான்  வாழ்க்கையும் இல்லை. நெஸ்ட் வீக் உங்களுக்கு எங்கேஜ்மெண்ட்ல, மை பெஸ்ட் விஷஸ்! டேக் கேர், பை” என்று வைத்து விட காளிதாஸனிடம் பேசிய பின் ஒன்று புரிந்தது.

நான் இல்லாது போய் விட்டால் மட்டும் இவர்கள் செய்தது எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகி விடுமா? அவன் சொன்னது போல் அந்த அயோக்கியர்கள் மட்டும் என் குடும்பம் இல்லை, அதற்கு நான் உடையக் கூடாது என்று தெளிவு பிறந்த பின்தான் உறக்கம் வந்தது. அடுத்த நாள் அவள் எடுத்த முடிவில் குடும்பமே ஆடிப் போனது.

✅ End of Episode 8
How did you feel about this episode?
❤️ 2 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Mrs Beena loganathan Reader 8 hours ago

அலெக்ஸா வந்தாச்சு 😂😂😂😂😂🔥❤️🫡

❤️ 2 more...
Mrs Beena loganathan Reader 8 hours ago

நாம் எல்லோரையும் அப்படியே 

நம்பவும் கூடாது யாரையும் நம்பாமலும் இருக்கக் கடாது....
குலம் தீர்மானிக்காது
குணம் தான் தீர்மானிக்கும்....

Super 👏🏻👏🏻👏🏻🔥🔥❤️❤️👍🏻👍🏻👍🏻💐💐💐💐
❤️ 3 more...
Srichitra Reader 7 hours ago

Very nice 

❤️ 1 more...
Kavi Natarajan Reader 7 hours ago

💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top