Episode 6
யாரும் எதிர்ப்பார்க்கவில்லை சிவகாமி அப்படி கை நீட்டுவார் என.
நித்தி உடனே “அத்த, என்ன செய்றீங்க?” என்று அவரை அதட்ட,
“நீ பேசாத நித்தி” என்று அவளை அடக்கியவர், அழுத்தமாய் நின்ற மகனைப் பார்த்தார்.
“அவங்க எப்படிப்பட்டவங்களா இருக்கட்டுமே, அவங்க அளவுக்கு நீயும் இறங்கினா அப்போ நம்ம அவங்களை மாதிரி ஆகிட மாட்டோமா? இதுதானா கண்ணா எங்க வளர்ப்பு?” என்றார் கோபமாக. அதனைவிட, என் மகன் இப்படி செய்திருக்கக் கூடாதே என்ற எண்ணம் மட்டும் தீவிரமாய் இருந்தது சிவகாமியிடம்.
“செய்ற செயல்ல இருக்க நேர்மை, அதுக்கான வழியில கூட இருக்கணும். வழி தவறி செஞ்சா அதுல என்ன நேர்மை இருக்கு, பொண்ணைக் கடத்துறது, ச்ச! ஒருவேளை நீயும் ஒரிஜினல் அரசியல்வாதி ஆகிட்டியோ?” என்றார் இளக்காரமானக் குரலில்.
அதுவரை அம்மாவின் அடி கொடுத்த அதிர்விலும், அவனுக்குமே மனதோரம் குற்றவுணர்வும் இருக்க, அமைதியாக இருந்தான். ஆனால், இந்த பேச்சு, சுத்தமாய் பிடிக்கவில்லை.
“அம்மா!” என்று அதட்டி அழைத்தவன்,
“போற வழியை டிசைட் பண்றது அந்த பிரச்சனைதான். நம்ம இல்லை, காந்தி அஹிம்சை வழி போனார்னா அவர் முன்னாடி இருந்தது வெள்ளைக்காரன். இதே ஹிட்லர்கிட்ட அஹிம்சை ஜெயிச்சிருக்குமா சொல்லுங்க? ஒவ்வொரு ப்ரச்சனையும் ஒவ்வொரு வகையில தீர்க்கணும். எல்லாத்துக்கும் ஒரே வழி சரியா இருக்காது. முதல்ல நீங்க நம்புங்க, உங்க மகன் தப்பு செய்ய மாட்டான்னு. சும்மா கடத்துன்னேன்ற வார்த்தையெல்லாம் நீங்க யூஸ் செய்யக் கூடாது. நான் பேசிதான் இவங்களை இங்க அழைச்சிட்டு வந்தேன்” என்றான் கண்டிப்புடன்.
“அப்புறம் ஏன் இந்த பொண்ணு மயங்கியிருக்கு?” என்று சிவகாமி முறைப்புடன் மகனைக் கேட்க,
“பின்ன, அப்பாவும் அண்ணாவும் உத்தமனுங்கன்னு அவ்வளவு நம்பினாங்க. அவனுங்க பேசினதை இங்க அப்படியே லைவ் வீடியோ போட்டோம். அதைப் பார்த்து அந்த ஸ்ட்ரெஸ்ல மயங்கியிருப்பாங்க” என்றான்.
இவர்கள் பேசுவதையே நித்திலா கேட்டுக் கொண்டிருக்க,
“நீ டீரிட்மெண்ட் பார்ப்பியா மாட்டியா? டீரிட்மெண்ட் பார்க்கறதுக்கு முன்னாடியே மாமா, அம்மான்னு ஊரையே கூப்பிட்டுட்ட. பேசாம நான் கவினைக் கூப்பிட்டிருக்கனும்” என்று அவளின் கணவனை சொல்ல,
“ஏன் போய் அவரைக் கூப்பிட்டுக்கோயேன், யார் வேண்டாம்னா?” என்றாள் கடுப்பாக.
“இரண்டு பேரும் குழந்தைங்க மாதிரி சண்டைப் போடாம இந்த பொண்ணைக் கவனிங்க” என்று சிவகாமி சத்தம் போடவும் நித்திலா கார்த்தியைக் கவனித்தாள்.
வாலியை முறைத்த சிவகாமி, “நீயும் இவனுக்கு உடந்தை இல்ல? கவனிச்சுக்குறேன் உன்னை! அவங்க போலீஸ் போயிருந்தா தெரிஞ்சிருக்கும் இரண்டு பேருக்கும். அதுவும் பொண்ணுக் கடத்தின்னு வந்திருந்தா மானமே போயிருக்கும்” என்றவர் அங்கிருந்த திவானில் உட்கார்ந்து கொண்டார்.
“panic attack தான். கொஞ்சம் நேரம் ஆச்சுனா அவளே முழிச்சிடுவா” என்று சொல்ல,
“அப்போ நீங்க கிளம்புங்க” என்றான் காளிதாஸன்.
“இந்த பொண்ணு கண் முழிக்கட்டும், அப்புறம் போறோம்” என்று சிவகாமி மறுத்து விட, காளிதாஸன் பதில் பேசாமல் அம்மாவின் அருகே உட்கார்ந்தான்.
மயங்கி விழுந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கார்த்தியாயினி கண் விழித்தாள். அவளின் அழுகை சத்தம் கேட்டு நால்வரும் அவள் அருகே செல்ல,
“ரிலாக்ஸ்மா, உனக்கு ஒன்னும் இல்லை. ஜஸ்ட் அதிர்ச்சிதான்” என்று நித்திலா அவளின் கைப்பற்றி ஆறுதலாய் சொல்ல, சத்தம் குறைந்தாலும் இன்னும் அவள் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவரவில்லை.
அவள் அப்பாவின் பதவி போய், பணம் போய் நடுத்தெருவில் நின்றிருந்தால் கூட அவள் இவ்வளவு வேதனைக் கொண்டிருக்க மாட்டாள். குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதே! பணம் தானே பார்த்துக்கொள்வோம் என்று சமாதானப்படுத்தியிருப்பாள். ஆனால், குடும்பத்தைத் தாங்கிய நம்பிக்கை சிதைந்ததை தாளவே முடியவில்லை. தனக்குத் தெரிந்து பூஜா, தெரியாமல்? அந்த எண்ணம் இன்னும் வலி தர, விழிகள் அதனை அப்பட்டமாய் பிரதிபலித்தது
ஷார்ட் டாப்ஸ், பட்டியாலா பேண்ட் அணிந்திருந்தாள். முகம் அழுது அழுது ஈரமாய் இருக்க, கண்களில் பயங்கர சோர்வு. கூடவே மனதின் வலி விழி வழி தெரிய, தொண்டை வலிக்க, “த..தண்ணீ வேணும்” என்றாள் கார்த்தி.
வாலி தண்ணீரை நீட்ட, நித்திலா அதனை வாங்கி மெல்ல குடிக்க வைத்தாள். மகனை முறைத்த சிவகாமி, “கண்ணா! பட்டினி போட்டு வச்சிருக்கியா நீ?” என்று கத்த,
“ஷ், ம்மா! சத்தம் போடாதீங்க” என்று சீறியவன்,
“அவங்கதான் சாப்பிட மாட்டேன் சொன்னாங்க” என்றான்.
அதற்கும், “ஆமா, இப்படி தனியா அழைச்சிட்டு வந்து சாப்பிடக் கொடுத்தா எப்படி பயமில்லாம சாப்பிட முடியும்?” என்று மகனைக் கடிந்தவர்,
“நீ அண்ணன் கிட்ட சொல்லி இந்த பிரச்சனையைப் பார்த்துக்கோ. நானும் நித்தியும் இந்த பொண்ணை அவங்க வீட்ல விட்டுடுறோம்” என்று சிவகாமி கட்டளையிட்டார்.
“அதெல்லாம் முடியாது!” என்று அவரை விடவும் உறுதியாய் சொன்னான் காளிதாஸன். எத்தனை ரிஸ்க் எடுத்து அவன் இதை செய்திருக்க, அம்மாவின் பேச்சு பிடிக்கவில்லை.
“காளிதாஸ்! இந்த பொண்ணைப் பார்த்த இல்ல? சின்னப்பொண்ணுடா. இன்னொரு அறை வாங்காத!” என்று சிவகாமி அழுத முகத்துடன் இருந்த கார்த்தியைப் பார்த்தபடி மகனிடம் பேச,
காளிதாஸன் மறுத்துப் பேசும் முன், “இல்ல, நான் இங்க இருக்கேன்” என்று மெல்ல பதில் சொன்னாள் கார்த்தி.
உண்ணாமல் இருந்தது அவளின் தவறு! இப்படி இவனை இந்த நிலைக்குத் தள்ளியது அப்பா, அண்ணன் செய்த பிழை. இதில் காளிதாஸன் மீது எந்த தவறுமில்லை என்று தெளிவாய்க் கார்த்திக்குப் புரிய, அம்மா மகனின் பேச்சு வார்த்தை காதில் விழ, அதுவும் தனது அப்பா, அண்ணன் பற்றி தெரிந்தும் கூட தன்னை அவர்கள் வீட்டுப் பெண்ணாய் நினைத்து பேசும் சிவகாமி மீது மரியாதை தோன்றியது. கூடவே சொல்லொண்ணா வலி!
இப்படித்தானே தன்னுடையை அப்பாவையும் அண்ணனையும் நினைத்தாள். ஆனால், அவர்கள் வீட்டுப்பெண் என்றால் ஒரு வேஷம், வெளியே துவேஷம் என வாழ்ந்திருக்க, இத்தனை ஆண்டு வாழ்க்கையும் நொடியில் பொய்யாய் போன நிலை.
தானும் இவர்கள் வீட்டுப் பிள்ளையாய் இல்லாமல் இருந்திருந்தால், தனக்குமே பூஜாவின் நிலைதான். அதனையும் விட மோசமாய் இருந்திருக்கலாம். சின்ன வயதில் இருந்தே விசாலாட்சி பிள்ளைகளை மரியாதை முக்கியம் என்று சொல்லியே வளர்த்திருந்தார்.
“நமக்கு ஏதோ அதிர்ஷ்டம் அதனால இப்படி வசதி, மரியாதைன்னு வாழ்றோம். எல்லாருக்கும் அது அமையறதில்லை காதும்மா, அதுக்காக நம்ம மேல அவங்க கீழனு நினைக்க கூடாது. டிரைவர் அண்ணான்னுதான் சொல்லணும். இதே அவங்க இடத்துல நீ இருந்து உன்னை இப்படி நடத்தினா யோசிச்சுப் பாரு” என்று பத்து வயதில் இவள் டிரைவரை அப்பாவைப் போல் பெயர் சொல்லி அழைத்திருக்க, அம்மா சொன்ன அறிவுரையை என்றும் கடைப்பிடிப்பவள்.
இப்போதும் பூஜா இடத்தில் தன்னை நினைக்க, சுருக்கென வலித்தது நெஞ்சம். பூஜா இவளை விடவும் சின்னப்பெண், வயது இருபத்தொன்றுதான். இவளின் அண்ணனுக்கு என்ன இல்லை? அன்பான மனைவி, மகன் என அழகான குடும்பம் இருக்க, எப்படி இப்படியொரு இழிபுத்தி? நினைக்க நினைக்க ரணமாய் வலித்தது. இதே காளிதாஸன் போல் இல்லாமல், அண்ணன் செய்த செயலுக்குப் பழிவாங்க வேறு யாராவது தன்னைக் கடத்தி இருந்தால் இப்படியே விடுவார்களா என்று நினைக்க இன்னும் பெருகியது கண்ணீர்.
கார்த்தியின் பதிலை எதிர்ப்பாராத சிவகாமி, “கண்ணா! இந்த பொண்ணு பெயர் என்ன?” என்று மகனிடம் கேட்க,
“கார்த்தியாயினி” என்றான்.
“அம்மன் பெயரை வச்சிட்டு இப்படி அழலாமா கார்த்திம்மா? பொண்ணுங்கன்னா தைரியமா இருக்கணும். நீ பயப்படாத, நான் உன்னை உங்க வீட்ல விட்டுடுவேன்” என்று சிவகாமி அவளின் கைப்பிடித்து வாஞ்சையாய்ப் பேச தடுக்க முடியாமல் இன்னுமே கண்ணீர் வெள்ளம் கார்த்தியின் கண்களில்.
“இல்லைமா, நான் இருக்கேன். உங்களுக்கு அவங்களைத் தெரியாது. இவர் சொல்றதுதான் ரைட், என்னை அனுப்பிட்டா இவரை சும்மா விடமாட்டாங்க” என்றவள் காளிதாஸனைப் பார்த்து,
“நீங்க என்ன செய்ய நினைச்சாலும் செய்ங்க. நான் எப்பவும் உங்க பக்கம்தான் இருப்பேன்” என்று வாக்குத் தந்தவளை மெச்சுதலாய்ப் பார்த்தவன்,
“கேட்டாச்சு இல்லை, கிளம்புங்க” என்று சொல்லி சிவகாமியை அனுப்ப பார்க்க, அவர் அடமாய் இருக்க நித்திலாவைப் பார்த்தவன்,
“ஒழுங்கா அழைச்சிட்டுப் போ நித்தி, இவங்க இருந்தா எனக்கு டிஸ்டர்ப் ஆகும். நான் பத்திரமா இவங்களை அனுப்பிடுவேன், ஐ ப்ராமிஸ்” என்று சொல்ல நித்திலா, சிவகாமியை சமாதானம் செய்து அழைத்துப் போனாள்.
“கண்ணா! சீக்கிரமே கார்த்தியாயினியை வீட்டுக்கு அனுப்பிடு” என்றவர் வாலியைப் பார்த்து, “அந்த பொண்ணு பத்திரம்” என்று மிரட்டி விட்டு போனார்.
அவர்கள் சென்ற பின் காளிதாஸன் கார்த்தியை அழைக்க, அவள் நிமிரவில்லை. இன்னமும் நடந்ததை நம்பவே முடியவில்லை. எல்லாம் கனவாய் கானலாய் இருந்து விடக் கூடாதா என்று கனவு கண்டாள் கார்த்தி.
✅ End of Episode 6
எதிரி தான் முடிவு செய்கிறான்_ நாம்
அம்மாவின் கட்டளை
Nice
Nice