Episode 13

ஒரு காதல் 13

இளந்திரையன் புனே போய் சேர்ந்தவுடன்,
“வந்துட்டேன் வஞ்சி, நான் தூங்கப் போறேன், நீ பார்த்து இருந்துக்கோ” என்று சொல்லி வைத்தவன் அடுத்த நாள் ஒரு அழைப்பும் செய்யவில்லை.
வஞ்சுளவல்லி அவன் செல்கையில் இருந்த நிலை வேறு, அவன் சென்ற பின்பு இருந்த நிலை வேறு.

அத்தனை வருட தனிமையை இந்த ஒரு மாதமாக தீர்த்தவன் இப்போது அவளுடன் இல்லை, அவன் சென்ற பின் நேரம் செல்ல செல்ல உள்ளுக்குள் உடைந்தாள். அதுவும் அவனுடன் பேசி பேசி போக்கிய பொழுதுகள் எல்லாம் நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் ஒருவித வலி.

இந்த உணர்வு தீர்ந்துவிடும், இன்னும் ஒரு மாதம் தானே அவன் வந்துவிடுவான் என்று மனதைத் திடப்படுத்தி வீட்டு வேலையில் கவனம் வைக்க, அதுவும் கூட முடியவில்லை. அலுவலகத்தில் அவனின் நினைவு வந்தாலும் ஒதுக்கி வேலையில் கவனம் வைத்தாலும் வீட்டில் அவனையும் அவனின் நினைவையும் தவிர்க்கவே முடியவில்லை.

அவள் அகம் மட்டுமல்ல, வீடு முழுவதும் நிறைந்திருந்தான் இளந்திரையன். அவன் சோஃபாவில் உட்காருவது, கிச்சனில் அவளுடன் வந்து நின்று பேசுவது, பால்கனியில் நின்று அவளுடன் தண்ணீர் விடுவதென அவளின் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இளந்திரையனும் கலந்து போனான்.

ஒரு நாள் பிரிவை கூட அவளால் தாங்க முடியவில்லை, தனித்த இருந்த போதும் தனிமையில் இருந்த போதும் இத்தனை வலி இல்லை, இப்போது அகம் இணைந்த போதிலும் விழியும் மொழியுமின்றி ஒரு வெற்றிடம் அவளிடம்.

இதில் அவளை தகிக்க செய்வது போல் ஒரு அழைப்பு கூட அவனிடமிருந்து இல்லை. தேடல், பயம், ஏக்கம் என்று அத்தனை உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தாள் வஞ்சுளவல்லி நாச்சியார்.

ஒரு நாள் முழுவதும் அழைக்காமல் அடுத்த நாள் அவள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த நேரம் அழைத்தாள் இளந்திரையன். எடுத்தவுடனே

“இப்போதான் உனக்குப் போன் பண்ண தோணுச்சா?” என்று கோபமாய் வஞ்சி கேட்க, இளந்திரையனுக்கோ அவள் எண்ணவோட்டம் ஒன்றும் எடுபடவில்லை. ஏனெனில் அவன் ஊருக்குக் கிளம்பும்போது கூட வஞ்சி மிகவும் தெளிவாகவே இருந்தாள், ஒரு தேடலோ பிரிவுத்துயரோ கொஞ்சமும் அவளிடம் காணமுடியவில்லை.

அதனால் இளாவும் மிகவும் இயல்பாக,

“இப்போதான் ஆபிஸ் விட்டு வந்தேன் வஞ்சி” என்று சொல்ல

“ஒஹ், ஆபிஸ் இருந்தா என்னோட ஞாபகம் உனக்கு இருக்காதா?” என்று கோபத்துடன் கேட்டவள்

“நேத்து ஃபுல்லா ஒரு கால் இல்லை, இன்னிக்கும் இப்போதான் உனக்குப் பேச மனசு வந்துச்சு, இல்ல?” என்று திட்ட

“ஏட்டி வஞ்சி! சொல்றது கேளு, நான் யார்கிட்டவும் போன் பேசலை” என்று சொல்லவருவதற்குள் வஞ்சி அவனை வறுத்தெடுத்தாள்.

“யாருக்கிட்டவும் பேசலைன்னா நானும் எல்லாரும் உனக்கு ஒன்னா?” என்று கத்தியவள்

“இப்போ மட்டும் ஏன் எனக்குக் கூப்பிட்ட, டெய்லி எங்கூட பேசி என்னை உனக்குப் பழக்கமாக்கிட்டு இப்போ என்னை தனியா விட்டுப் போய்ட்ட” என்று தத்தை தயக்கமின்றி தலைவனிடம் உணர்வுகளைப் பகிர

“ப்ச், வஞ்சி! என்னோட சார்ஜர் நான் அங்கேயே விட்டு வந்திட்டேன் டி, இங்க நேத்து ஆபிஸ் விட்டு வந்தப்புறம்தான் பார்த்தேன், ஸ்வீட்ச் ஆஃப் ஆகிடுச்சு, பவர் பேங்கும் இல்லை எங்கிட்ட” என்று அவன் காரணம் சொல்ல

“இல்லன்னா பக்கத்துல யார்கிட்டவாச்சும் கேட்க வேண்டியதுதானே?”

“நான் ஆபீஸ் விட்டு வரவே பத்து மணி ஆகிடுச்சு, நானே சமைச்சு அப்புறம் சாப்பிட்டேன். இங்க எங்கூட யாரும் தங்கி இல்லை இல்லையா? பக்கத்துல இருக்க வீடும் மராத்தி ஃபேமிலி, அவங்களைப் போய் நைட் நேரத்துல தொந்தரவு செய்ய முடியுமா சொல்லு? இன்னிக்கு ஆபிஸ் போகவும்தான் அங்க என் கொலிக் கிட்ட வாங்கி சார்ஜ் போட்டு, வரும்போது வேற சார்ஜர் வாங்கிட்டு வந்தேன்” என்று விலக்க

“ஆபிஸ் போய்ட்டு கூப்பிட வேண்டியதுதானே?”

“நீயும் வேலைய இருப்ப, எனக்கும் நிறைய வேலை டி” என்றவன் கொஞ்சம் கடுப்புடன்

“எங்கம்மாவுக்குக் கூட இரண்டு நாளைக்கு ஒருதடவ தான்டி பேசுவேன், அவங்க கூட என்னை இப்படி பேசமாட்டாங்க, ரொம்ப பண்ற நீ” என்றான்.

“நீ என்னதான் காரணம் சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன் இளா, வேற யார்கிட்டவாச்சும் போன் வாங்கி நீ கால் பண்ணியிருக்கலாம்” என்று அவனுடன் பேசா பொழுதின் தாக்கத்தில் அவள் உரைக்க, அவளோ உணர்வலையில் துவண்டு போய் பேச, இளந்திரையனோ எதார்த்தவாதி அவளின் உணர்வுகள் புரியாமல்,

“ப்ச், என்னமோ நானும் நீயும் முன்னாடியெல்லாம் டெய்லி பேசிட்டா இருந்தோம், இரண்டரை வருஷம் நான் எப்படி இருக்கேன்னு கூட உனக்குத் தெரியாதுதானே? அதான் இன்னிக்கு பேசிட்டேனே” என்றதும் இன்னும் அவளின் உணர்வுகள் வெடித்து சிதறின.

“ஒஹ், அப்போ எங்கூட பேசலைன்னா உனக்கு ஒன்னுமே இல்லை இல்லையா? என்னைத் தனியா விட்டோம்னு இப்பவும் உனக்கு ஃபீலே இல்லை, போங்க எல்லாரும் என்னைத் தனியா விட்டுப் போங்க” என்றாள் அழுகையுடன்.

அவளின் அழுகை இன்னும் எரிச்சல் தர,
“ஏய் என்ன சும்மா தனியா விட்டேன்னு அழற நீ? நான் என்ன செத்தாப் போய்ட்டேன், ஒரு நாள் போன் பேசலைன்னு ஓவரா பண்றடி நீ” என்று கோபத்தில் இளாவும் பேசிவிட, அவ்வளவுதான் அகத்தில் பேரிரைச்சல் பெண்ணிற்கு! பெருங்கோபம் நெஞ்சம் சூழ்ந்தது!

அவன் வார்த்தையாய் சொன்னாலும் வலி என்னவோ வஞ்சிக்குத்தானே? இரண்டு இழப்புகளைத் தாங்கி இருந்தவளுக்கு இளாவின் வருகை இளவேனிற்காலமாய் இருக்க, இப்போது தனியே விட்டுப் போயிருக்க, தனிமையும் அதன் ஆற்றாமையும், அதனால் விளைந்த இயலாமையும் அவளை அப்படி பேசவைக்க, இளாவின் பேச்சு வலிக்க உடனே அவனின் அழைப்பைத் துண்டித்தாள்.

இளாவும் ,
“கட் பண்றா திமிரெடுத்தவ’ என்று வாய்விட்டுத் திட்டினான்.

மேலோட்டமாய்ப் பார்த்தால் அவளின் கோபம் மட்டும் பெரிதாகத் தெரிய, இன்னும் ஆழமாய்ப் பார்க்க அவளின் அகமும் , அதனில் அவனுக்கான தேடலும் தெரிய கொஞ்சம் குளிர்ந்தவன் அவளை சமாதானம் செய்ய அழைத்தான்.

அவளோ ஒரு அழைப்பைக் கூட எடுக்கவில்லை, ஒரு மூன்று அழைப்பு வரை ஒன்றும் இளாவிற்குப் பாதிக்கவில்லை, ஆனால் அழைத்துக்கொண்டே இருக்க, அவள் எடுக்கவில்லை என்றதும் என்னவோ ஒரு பதட்டம். கூடவே தூரம் இன்னும் பயத்தை அதிகரிக்க கிட்ட தட்ட பதினைந்து முறை அழைத்துப் பார்த்தவன் வேறு வழியின்றி தங்கைக்கு அழைத்து அவளிடம் பேச சொல்ல, கமலி பேசிவிட்டு அவனிடம் சொல்ல, இளந்திரையனுக்கு அவ்வளவு கோபம்..தங்கையிடம்,

“கமலி! இப்ப நான் அவளுக்குக் கால் செய்வேன், அவ எடுக்கலன்னா நான் என்ன செய்வேன்னு தெரியாது சொல்லு உன் அண்ணிக்கிட்ட” என்று பல்லைக் கடித்தான்.

அதுவரைக்கும் கமலியிடம் நான் பேச சொன்னேன் என்று சொல்லாமல் பேசியிருக்க, என்னவோ இருவருக்கும் பிரச்சனையோ என்று பயந்து போனாள் கமலி. ஏற்கனவே இருவரும் பிரிந்து இருந்தவர்கள் வேறு ஆயிற்றே.

“அண்ணா, எதாவது ப்ரச்சனையா? திரும்பவும் சண்டையா?” என்று கலங்கிப் போய் கமலி கேட்க

“ஒன்னுமில்ல கமலி, சண்டையெல்லாம் இல்லடி, நீ அவளை போன் செய்ய சொல்லு” என்று கமலியிடம் சொல்ல, கமலி சொன்னபோதும் வஞ்சி அழைக்கவில்லை.

பத்து நிமிடம் பொறுத்தவன் கார்த்திக்கேயனுக்கு அழைத்தான்.

“கார்த்தி, உங்க தங்கச்சி என் போன் எடுக்க மாட்டேங்கிறா, கொஞ்சம் அவளுக்குக் கால் செய்யுங்க” என்று சொல்ல, அண்ணன் சொல்லவும் சரியென்றவள், இளாவின் அழைப்பை இம்முறை எடுத்தாள்.

“யாரைக் கேட்டு அண்ணாவுக்குக் கால் பண்ணின நீ? அன்னிக்கு மட்டும் யாரும் எங்களுக்கு நடுவுல வரக்கூடாதுன்னு டயலாக் விட்ட” என்று திட்ட

“நான் சொன்னேன்தான், ஆனா நீ அப்படி நடக்கவிடலையே? கமலி சொல்லும்போதே கால்லை எடுத்தா நான் ஏன் கார்த்திக்குக் கூப்பிடப்போறேன்” என்று இளாவும் இலகுவாய்ப் பேச

“நீ செத்துப் போய்ட்டான்னு கேட்ப, நான் எதுவும் நடக்காத மாதிரி உன் பேச்சைக் கேட்பேனா?” என்றவளின் குரலில் இன்னும் அழுகைத் தெரிய, உடனே விடியோ காலுக்கு மாறினான்.

அவளின் முகம் பார்க்க மேக்ஸீ அணிந்து இருந்தவளின் முகத்தில் பொலிவு என்பதே துளியுமில்லை, இதுவரை அவளை அப்படி அவன் கண்டது இல்லை. அவளின் அம்மா இறந்தபோது அப்படியொரு சோக பதுமையாய் இருந்திருக்கிறாள். ஆனால் அப்போது இளாவிற்கு அவளின் மீது கவனம் பதியவில்லையே. அவளைப் பார்த்தவன்

“ஏன் வஞ்சி இப்படி அழுது வடியுற? நான் கோபத்துல பேசிட்டேன், நீ மட்டும் சும்மா தனியா விட்டேன் தனியா விட்டேன் அதையே சொன்னா” என்று கொஞ்சம் தணிந்த நிலையில் தலைவன் பேச, அந்த தணிந்த நிலையில் பணிந்தாள் தலைவியும்.

அழுகுரலில் “கோவத்துல அப்படி பேசுவாங்களா? நீ எப்ப கோவம் வந்தாலும் இப்படிதான் பேசுற, உன்னோட வொர்ட்ஸ் அடுத்தவங்களை ஹர்ட் செய்யும்னு யோசிக்க மாட்ற நீ?” என்று குற்றம் சொன்னவள்

“எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றவள் அவனின் முன்னே தேம்பி அழுதாள்.

“என்ன இஞ்சி இது? நான் வரும்போது சிரிச்சு வழியனுப்பின, இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி அழற நீ?” என்று அவன் கொஞ்சம் கனிவுடன் கேட்க

“எனக்குத் தனியா இருக்க கஷ்டமா இருக்கு” என்றாள் வஞ்சி வாய் திறந்து.

“வஞ்சி!” என்றவனுக்கு அடுத்துப் பேச வார்த்தை சிக்கவில்லை, வஞ்சியிடம் இருந்து அப்படியான பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

அவனறிந்த வஞ்சி தன்னைத் தானே செதுக்கிய சிற்பி! அதில் அவனுக்கு நிறைய பெருமை! முன்பு பொறாமைதான் ஆனால் மனைவியாய் மனதால் உணர்ந்த பின் அந்த உணர்வில் பெருமிதம் மட்டுமே!

தந்தையின்றி தாயைக் கவனித்து அதன்பின்னும் தன்னைத் தேற்றிக்கொண்டு, நன்றாய்ப் படித்து நல்ல வேலையில் அமர்ந்து, தனக்கென அழகாய் ஒரு வீட்டை அமைத்தி, அதுவும் அவ்வளவு நேர்த்தியுடன் அவள் வீட்டைப் பராமரிப்பதே அழகுதான்!

அப்படியான பெண் தன்னைத் தேடி இருக்கிறாள் என்பதில் கர்வமாகவே உணர்ந்தான் கணவன், இத்தனை இருந்தும் கூட என்னைத் தேடுகிறாளே என்ற எண்ணம் துளிர்த்த கணம், காதல் பெருகியது வஞ்சியின் மீது.

அவன் ஒன்றும் பேசாமல் இருக்க வஞ்சியாகவே “டெய்லி உங்க கூட பேசிட்டே இருப்பேன் இல்லையா? நேத்து எனக்கு சரியா தூக்கமே இல்ல, போன் வேற எடுக்கலனதும் கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு, ரொம்ப டென்ஷனா இருந்துச்சு, அப்பா இல்லாம போனப்போ கொஞ்ச நாள் இப்படி ஃபீல் பண்ணியிருக்கேன், என்னவோ எல்லாம் இருந்தும் ஒன்னுமே இல்லாத மாதிரி ஒரு உணர்வு, உங்களுக்கே தெரியும்ல, எவ்வளவு டயர்ட்னாலும் நான் பாத்திரம் சேர விடமாட்டேன், வீட்டையும் சுத்தம் பண்ணிடுவேன், இப்போ காலையில இருந்து ஒரு பாத்திரம் கூட தேய்க்கல” என்று பேசிக்கொண்டே போக

“வெயிட் வெயிட்” என்று நிறுத்தியவன்

“பாத்திரமெல்லாம் அப்புறம் பார்க்கலாம், சாப்பிட்டியா நீ? நைட்க்கு சமைக்க ஆரம்பிச்சியா?” என்று கேட்க

“இல்ல இனிமேதான், அது நீ இல்லனதும் எனக்கு சமைக்கவும் முடியல” என்று சோர்வாய் சொன்னாள், கண்களில் தெளிவே இல்லை.

‘இத்தனை நாள் எனக்கும் சேர்த்தா சமைச்சா இவ? நான் இல்லாம இரண்டரை வருஷம் பட்டினியா இருந்தா?’ என்று மனதில் ஒரு எண்ணம் விழுந்தாலும், அறிவு அவன் வாயை அடக்க சொன்னது. அவளின் அழுகை அவனைப் பாதிக்க

“ஒகே வஞ்சி! முதல்ல முகம் கழுவிட்டு வா போ” என்று சொல்ல, அவள் அப்படியே நகராமல் இருக்க

“சொன்னதை செய் டி” என்று அதட்டினான். அதில் அவள் முகம் கழுவி வர

“போய் பொட்டு வைச்சுட்டு வந்து எங்கிட்ட பேசு” என்றான் அடுத்து. அவன் சொன்னதை அவள் செய்யக் காரணம், அவனின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருக்கலாம் என்பதே!

அவள் பொட்டு வைத்து கூடவே வகிட்டில் குங்குமம் வைத்து வர
“என் இஞ்சி இப்போதான் அழகு” என்று சிரிப்புடன் சொன்னவன்

“சரி எங்கிட்ட பேசிட்டே சமைச்சிடு” என்றவன்

“இப்படி செஞ்சா என்ன? நீ என்ன செய்ய போற சொல்லு, நானும் உங்கூடவே சேர்ந்து சமைக்கிறேன்” என்றவன்

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் இரு” என்று சொல்லி கிச்சனில் என்ன பொருள் இருக்கிறதென பார்த்து வந்தவன்

“ஒன்னும் பெருசா இல்ல, கேரட் பீன்ஸ் வாங்கிட்டு வந்தேன், அதான் இருக்கு, அப்புறம் வெங்காயம்” என்று மீண்டும் வீடியோ கால் செய்து சொன்னவன் போனை கிச்சன் ஷெல்ஃபில் அவளைப் பார்க்கும்படி வைத்தான்.

“ரவா இருக்கா?” என்று வஞ்சி கேட்க

“இரு பார்க்கிறேன்” என்றவன் ரவா இருக்க அதன் தேதிப் பார்க்க, இன்னும் நாள் இருக்க

“ரவா இருக்கு” என்று சொல்ல

“ரவா கிச்சடி பண்ணுவோமா?” என்று கேட்க

“உங்கிட்ட எல்லா பொருளும் இருக்கா?” என்று கேட்டு, அவளும் இருக்கிறது என சொல்ல, இருவருமாக சேர்ந்து அரைமணி நேரத்தில் ரவா கிச்சடி செய்து முடிக்க,

“அப்படியே எங்கூட பேசிட்டே சாப்பிடு” என்று அவன் சொல்ல

“சாப்பிடும்போது நான் பேசமாட்டேன் இல்ல” என்று வஞ்சி சொல்ல

“அப்போ சாப்பிட்டுக் கூப்பிடு” என்று போனை கட் செய்ய போக

“நான் பேச மாட்டேன்தான் சொன்னேன், உன்னைப் பார்த்துட்டே சாப்பிடுவேன், போகாத” என்று வஞ்சி சொல்ல

“இஞ்சியீய்!” என்று காதல் நிறைந்த குரலில் அழைத்தவன்

“இவ்வளவு மிஸ் பண்ணிட்டு இரண்டு நாள் முன்னாடி கொஞ்சமும் அலட்டிக்காம இருந்தியே டி, உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்றான் கடுப்பாக.

பின்னே அவள் கொஞ்சம் அசராமல், ஒரு மாதம்தானே என்று சொல்லி பெரிதாய் அவனிடம் தன்னை வெளிப்படுத்தவில்லை, உண்மையில் அவளே இப்படி அவனுக்காக ஏங்கி நிற்போம் என்று நினைக்கவில்லை.

மனதிலோ மங்கைக்கு பெரும் மள்ளல் இருக்க, இரண்டரை வருடம் தனியே தானே இருந்தேன் என்ற எண்ணம்தான், சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்க, அப்போது எல்லாம் அவளைப் பொருத்தவரை இளந்திரையன் என்பவன் அவளின் வாழ்வில் இல்லாதவன், இப்போது வாழ்வென்பதே அவனாகிப் போக காதலாகினாள் பெண் கணவன் மீது!

✅ End of Episode 13
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Saraswathi Reader 4 weeks ago

So Sweet

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top