Episode 12

ஒரு காதல் 12

இளாவின் வருகையை வஞ்சி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை, இவ்வளவு நெருக்கமாய் இதுவரை நின்றதே இல்லை இருவரும், தடுமாறி நின்ற அன்று மட்டுமே அவனுடன் அவள் நெருங்கி நின்றது.

இன்றோ இளா அவளை அணைக்கக் கூட இல்லை, ஆனால் சூழ்ந்து நின்றிருந்தான், அவன் சுவாசம் இவள் மேல்படும் அளவு நெருங்கி இருந்தவன் அப்படி கேட்கவும் உள்ளுக்குள்ளே உணர்வலைகள்.

“இளா தள்ளி போ, வேலை இருக்கு” என்று சொல்ல, இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி அவளை நகரவிடாமல் நின்றவன்

“சொல்லு இஞ்சி, இதான் இஞ்சி இடுப்பா?” என்று கேட்டவனின் கைகள் ‘இஞ்சி இடுப்பழகி’ என்று தாளம் போட்டு இதழ்களோ பாடலை முணுமுணுக்க, காலையிலே அவன் அப்படி செய்யவும் அவளால் எப்படி எதற்கு எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதே புரியவில்லை. அவனுடன் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் புதிதாய் அவளுள் சில உணர்வுகளை புலர வைத்துக்கொண்டிருந்தான்.

“அங்க இஞ்சி இருக்கு, எடுத்துப் பார்த்து தெரிஞ்சிக்கோ” என்றதும்

“எனக்குத் தெரிஞ்சது இந்த இஞ்சிதான்” என்றவனின் கரங்கள் அவள் இடையில் தவழ, வஞ்சியின் கைகள் கப்போர்டை இறுகப்பற்ற

“இளா, ப்ளீஸ்” என்றாள் மெல்லிய குரலில். எதற்கு அந்த ப்ளீஸ் என்றும் பெண்ணுக்குப் புரியவில்லை. என்ன செய்வானோ என்ற படபடப்பு, தன்னால் அதனை ஏற்கமுடியுமோ என்ற பரிதவிப்பு, அவனைக் காயம் செய்துவிடாதே என்று உள்ளத்தின் கட்டளை வேறு!

இளந்திரையனுக்கோ வஞ்சி மட்டும் கண்ணிலும் கருத்திலும் இருக்க, அவளின் வார்த்தைகள் விளங்கவில்லை.

“வஞ்சி! இந்த blissful மார்னிங்கை beautiful மார்னிங் ஆக்கிடுவோமா?” என்றான் ஆவலாய், அதீத தேடலுடன் அவன் குரல்.

“ஆபிஸ்க்கு டைமாச்சு இளா” என்றாள்

“அப்போ சீக்கிரமா ஒரு கிஸ் தரவா?” என்று அவளிடம் அனுமதி வேண்டி நிற்க, அவனின் அந்த அணுகுமுறையில் காதல் வந்தததோ இல்லையோ அவன்மேல் மரியாதை வந்தது.

அதனால் அவளையும் மீறி, “ம்ம்” என்றுவிட்டாள்.

இளாவிற்குமே அப்போது அப்படியான எண்ணங்கள் இல்லை எனினும் வஞ்சி ஒத்துக்கொள்ளவும், அந்த காலை வேளையை காதல் வேளையாக மாற்றினான், அவனின் ஒற்றை முத்தத்தினால்!

அவனுக்குமே பெண்ணின் நெருக்கம் புதிது! இந்த தயக்கம் புதிது! எல்லாம் புதிதுதான்!

ஒற்றை முத்தம் கூட நிறுத்தி நிதானமாய் இல்லாமல், அவசரத்தில் ஆவலில் பட்டென்று கொடுத்து இளா விலகிட, வஞ்சி அவன் முகம் பார்க்கத் தயங்கி அறைக்குள் புகுந்து கதவை சாற்றிக்கொள்ள, அறைக்கதவின் வெளியே நின்ற இளந்திரையன்

“வஞ்சி! ஆர் யூ ஒகே?” என்றான்.

கதவின் மறுபக்கம் நின்றவள்,
“ம்ம்” என்று சொல்லவும் நிம்மதியானவன்

“எப்படி இருந்துச்சு ப்ரஸ்ட் கிஸ்?” என்று கேட்க, வஞ்சிக்கோ கடுப்பாய் வந்தது. அரை நொடி கூட நீடிக்காத முத்தமது, அதற்கு விமர்சனம் கேட்கிறானே என்று தோன்ற

“ஆமா, அரை நிமிஷம் முத்தம் அதுக்கு ரிவ்யூ வேற சொல்லனுமோ” என்று அவள் நொடித்துக்கொண்டாள்.

அதில் லேசாய் சிரிப்பு வர இளாவோ “அது நீ ஆபிஸ்க்கு டைம் ஆச்சுன்னு சொன்ன இல்ல, அதான் கொஞ்சம் அவசரமா கொடுத்துட்டேன், கூடவே டென்ஷன்” என்று சொன்னவன்

“வஞ்சி! ஒன்னு கேட்கவா?” என்று அனுமதி கேட்க, அவள்

“ம்ம்” என்று சொல்ல

“கொஞ்சம் நிறுத்தி நிதானமா இன்னொரு கிஸ்? ப்ளீஸ்?” என்று கேள்வியாய் நிறுத்த அவளிடம் பதிலில்லை. அதில் கொஞ்சமாய் வருத்தப்பட்டவன் கதவில் நன்றாய் சாய, அதுவோ அவனை உள்ளே இழுத்தது. வஞ்சி கதவை திறந்துவைத்திருக்க, சாய்ந்தவன் தடுமாறி உள்ளே நின்றான்.

“ஓகேன்னு சொன்னா என்னடி? கதவைத் திறந்து வச்சா எப்படி தெரியும்?” என்று அவன் கேட்க, அவளோ அவனை கிண்டலாய்ப் பார்த்துவைத்தவள்

“செகெண்ட் சான்ஸ் வேணுமா வேண்டாமா?” என்றவளின் கேள்விக்குப் பதில் சொல்லாதவன் வேண்டும் என்பதைப் போல் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டான்.

முதல் முத்தம் போல் அல்லாமல், நிறுத்தி நிதானமாய் ரசித்து ஒரு முத்தம்! மென்முத்தமாய் அது நீடிக்க, வஞ்சிக்குமே அவனின் நெருக்கம் மயக்கத்தை உண்டு செய்ய, மயங்கியே அவனிடம் நின்றாள்.

பின் மயங்கி நின்ற மங்கையின் கன்னம் தட்டியவன்,
“வஞ்சி, இப்போ நீ நகரலன்னா தர்ட் கிஸ், ஃபோர்த் கிஸ்னு போகும் பரவாயில்லையா?” என்று கேட்கவும் வெட்கச்சிரிப்புடன் அவனை வெளியே பிடித்துத் தள்ளினாள் வஞ்சி.

“வஞ்சி இந்த கிஸ் எப்படி இருந்துச்சு?” என்று கேட்க

“இளா! வாயை மூடு, ரொம்ப பேசுற” என்று கத்தினாலும் குரலில் கோபமில்லை. அவன் சிரிப்புடன் சோஃபாவில் உட்கார்ந்து அவனின் லேப்டாப்பை ஆன் செய்து வேலைப்பார்க்க, வஞ்சி அலுவலகத்திற்குத் தயாராகி வந்தவளால் அவன் முகம் பார்க்க முடியாமல் ஒரு வெட்கம். அவள் பாட்டிற்கு கிச்சனில் சென்று உணவை பேக் செய்து வைக்க

“ஏட்டி வஞ்சி! இன்னும் இந்த இஞ்சி இடுப்பைப் பத்தி சொல்லலையே?” என்று ஹாலில் உட்கார்ந்தே சிரிப்புடன் கேட்க

“போடா வெங்காயம்” என்று அவள் அங்கிருந்த வெங்காயத்தைத் தூக்கி அவன் மேல் அடிக்க

அதிலிருந்து தப்பியவன்,
“வெங்காயம் இல்லை வஞ்சி! இஞ்சி..இஞ்சீய்” என்று அவளை வெறுப்பேற்ற

“இளா ப்ளீஸ்” என்று அவள் பாவமாய்க் கெஞ்சிட, அதில் அமைதியானான். அவள் தயாராகி வந்து அவன் முன் நின்று

“சாதம் வச்சிக்கோ இளா, குழம்பு அந்த கிண்ணத்துல ஊத்தி வச்சிருக்கேன், நான் கிளம்புறேன், நீ சீக்கிரம் சாப்பிடு” என்று சொல்லியவளின் கையைப் பிடித்து இழுத்தவன்

“பிடிச்சதுதானே?” என்றான் மீண்டும்.

“பிடிக்கலைன்னா என்ன செய்யப்போற?” என்று அவனை முறைக்க

“பிடிக்கற மாதிரி கொடுப்பேன்” என்றான்.

“அப்போ பிடிச்சதுன்னா?”

“பிடிக்குதுதானே? அப்போ ஒன்ஸ் மோர்” என்று அவன் கண்ணடிக்க

“சரியான ஆளுதான் நீ” என்று கிண்டலாய் சொன்னவள் வாசல் பக்கம் போய் நின்று

“பிடிச்சிருக்கு” என்று சொல்லி ஓடிவிட, அன்று மாலை வந்தவளைப் பிடித்துக்கொண்டவன்

“அப்போ ஒன்ஸ் மோர்” என்று அவளைக் கேட்டு கேட்டு முத்தமிட்டான்.

அப்படியே நாட்கள் ஓட, கமலியின் திருமணத்திற்காக ஊருக்குச் சென்றார்கள். வஞ்சிக்கு வாசலில் நிற்கும்போதே பழைய நினைவுகள் என்ன முயன்று அகத்தில் ஆர்ப்பரிக்க, சௌந்தர்ராஜன் மனைவியை விட்டு இருவருக்கும் ஆரத்தி எடுக்க சொன்னார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் முடிந்திருந்தாலும் இதுவே இருவரும் வீட்டிற்கு ஒன்றாய் வருவது முதல்முறை.

மாதவியும் ஒன்றும் பேசவில்லை, மாறிவிட்டார் என்றில்லை. ஆனால் மகளின் திருமணம் மனத்தில் நிற்க பெரிதாய் வஞ்சியிடம் வம்பு வளர்க்கவில்லை. இளந்திரையனும் மேலே புதிதாய்க் கட்டியிருந்த அறைக்கு மனைவியுடன் வந்தவுடனே போய்விட, உண்மையில் புதிதாய் திருமணமாகி வந்தவுணர்வுதான் வஞ்சிக்கு. இரவில் அவன் வரும் வரை கமலியுடன் கதைப் பேசுபவள் இளா திருமண வேலை முடிந்துவரவும் அவனுடன் மாடியேறிடுவாள் மங்கை.

இருவரும் மாடியில் ஆகாயத்தைக் கூரையாக்கி, நிலவின் வெளிச்சத்தில் கதையளந்தபடி உறங்குவதை வாடிக்கையாக்கிவிட்டனர். வஞ்சிதான் அவ்வளவு பேசுவாள், இளா கேட்டுக்கொண்டு இருப்பான்.

“நான் கூட நீ பெரிய பொண்ணானதும் அமைதியாகிட்ட நினைச்சேன் டி, சின்ன வயசுல நீ வந்தா வீட்ல உன்னோட சத்தம்தான் அதிகம் கேட்கும், இப்பவும் அப்படியே இருக்க வாயாடி” என்று அவளின் கன்னம் கிள்ள

“அது அப்பா போன பின்னாடி கொஞ்சம் சைலண்ட் ஆகிட்டேன், அப்புறம்” என்று அவள் சொல்லவருவது புரிந்தவன்

“ஆமா, அன்னிக்குக் கொடுத்தேனே பதினைஞ்சாவது கிஸ் எப்படி இருந்துச்சு” என்று பேச்சை மாற்ற

“நீ பேச்சை மாத்துறேன்னு எனக்குத் தெரியுது” என்றாள் வஞ்சி சிரிப்புடன்.

“தெரியுதுல, அப்போ பதில் சொல்லு” என்று பதினாறாவது முத்தம் கொடுத்தான் அவன். கமலியின் திருமண நாளும் வந்தது. மகனின் திருமணத்தைப் பெரிதாய் நடத்தா குறையாய் மகளின் திருமணத்தில் ஈடுகட்டினர்.

பாட்டு சத்தம் பட்டையைக் கிளப்ப, கல்யாண களையில் இருந்தது அந்த மண்டபம். வெளியே ரேடியோ செட் கட்டியிருக்க, அதில்

“இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே…
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே
பஞ்சவர்ணம்” என்று கமலஹாசனின் குரல் பாடவும் தன்னியல்பாய் தத்தை மனம் இடையை சரிசெய்தது.

அந்த பாடலைக் கேட்கவும் வஞ்சிக்குத் தானாய் ஒரு குறுகுறுப்பு எழ, புடவையை சரிசெய்து மேடையில் நிற்க, ஏதோ வேலையாய் அங்கே உலாவிக் கொண்டிருந்த இளந்திரையனுக்குமே அப்பாடலைக் கேட்கவுமே மனைவியைத் தான் மனம் தேட, அவள் புடவையை இழுத்துவிடுவது தப்பாமல் அவன் கண்களுக்குத் தெரிய, நின்ற இடத்தில் இருந்தே மனைவியைப் பார்த்து கண்சிமிட்டினான் இளந்திரையன்.

அதுவரை இல்லாத உணர்வாய் அன்று காலை முதலே வஞ்சியின் பார்வை அடிக்கடி இளாவினைத் தொட்டு மீண்டது, அகத்தே ஈர்த்தவன் அன்று வேஷ்டி சட்டையில் புறமும் ஈர்த்தான் பெண்ணை. கணவனை முதன்முதலில் கண்களில் நிறைத்துக் கொண்டாள். அத்தனை வருடத்தில் மாமன் மகன் என்ற ஆர்வம் கொஞ்சமும் கொண்டு அவனைப் பார்த்ததில்லை வஞ்சுளவல்லி. கணவனாகிவிட்ட பின்பும் கூட அப்படி ஒரு பார்வை கிடையவே கிடையாது.

ஒருவழியாய் கமலி கழுத்தில் மாங்கல்யம் பூட்டி மனைவியாக்கிக் கொண்டான் ஸ்ரீனிவாசன். மாதவிக்கும் சௌந்தர் ராஜனுக்கும் கண்கள் கலங்கியது சந்தோஷத்தில், ஏன் வஞ்சிக்கும் கூட மனம் நிறைந்து போனது. இளந்திரையன் மட்டுமே முகத்தில் சந்தோஷம் மிகுதியில் நின்றான், அலட்டிக்கொள்ளவே இல்லை அவன்.

எல்லா சடங்கும் நடந்து ஒவ்வொருவராய் வாழ்த்து சொல்லி செல்ல, பாத்ரூம் போகலாம் என்று மணமகள் அறையினுள் வஞ்சி வர, அவள் எப்போது தனியே சிக்குவாள் என்று காத்திருந்த இளந்திரையனும் அறைக்குள் போனான். அவள் பாத்ரூம் போய்விட்டு வரவும் இவனைக் கண்டு

“என்ன இளா? கூப்பிட்டாங்களா?” என்றபடி அவள் கதவைத் திறக்கப் போக, அவளின் கைப்பிடித்துத் தடுத்தவன்

“என்ன காலையில இருந்து ஒரே சைட் அடிக்கிற என்னை நீ?” என்று அவளின் இருகைகளையும் பிடித்து அவளின் வளையல்களுடன் விளையாடியபடி அவன் கேட்க

“இளா, என்ன விளையாட்டு இந்த டைம்ல, நம்மைத் தேடுவாங்க, விடு என்னை” என்று அவள் கைகளை எடுக்க

“அது என்ன பாட்டு கேட்டதும் புடவையை அட்ஜஸ்ட் பண்ற நீ?” என்று அவன் மறக்காது கேட்க

“நான் சும்மாதான் பண்ணினேன், முதல்ல கதவைத் திற” என்று சொல்ல

அவனோ நெருங்கி நின்று அவளுக்கு முத்தமிடப் போக,
“லிப்ஸ்டிக் ஒட்டிக்கும்” என்றாள் பதட்டமாக.

பாவையின் பதட்டத்தில் அடக்கவே முடியாத சிரிப்பு அவனிடம்,

“நான் கன்னத்துலதான் டி கிஸ் பண்ண வந்தேன்” என்று அவன் சொல்ல, வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள் வஞ்சி.

“இஞ்சி! வெட்கப்படுறியா நீ” என்று கேட்டு இன்னும் அவளை வெட்கம் கொள்ள செய்தவன் நேரமாகிவிடும் என்று உணர்ந்து வேகமாய் கன்னத்தில் முத்தம் வைத்து அவளை விடுவித்தான்.

“இன்னிக்கு எப்படியும் அந்த இஞ்சி இடுப்பைக் கண்டுபிடிச்சிருவேன் நான்” என்று சொல்ல, வஞ்சிக்குள் வெட்கங்கள் மலர்ந்தன.

கமலி கல்யாணம் முடிந்து மூன்றே நாளில் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை வந்துவிட்டான் இளந்திரையன். அடுத்த நாளே புனே புறப்பட்டான் இளந்திரையன். புனே போய் சேர்ந்ததும் போன் செய்தவன் அடுத்து ஒரு அழைப்பும் செய்யவில்லை என்றதும் வஞ்சி தவித்துப் போனாள், தவிப்பெல்லாம் கொஞ்ச நேரத்திலேயே தகிப்பாய் மாறிவிட, கடைசியில் கொதித்துப் போனாள் வஞ்சுளவல்லி நாச்சியார்.

✅ End of Episode 12
How did you feel about this episode?
❤️ 6 👏 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

இஞ்சி இடுப்பழகி…

மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே…
Saraswathi Reader 4 weeks ago

Very nice to going

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top