Episode 7

ஒரு காதல் 7

“உங்களுக்குத் தேவைன்னா என்னைப் பிடிக்குமா?” என்று வஞ்சியின் வார்த்தைகள் கேட்கவும் குளிக்க பாத்ரூமினுள் நுழைந்த இளந்திரையன் கதவைத் திறந்து நின்றவாக்கில்

“என்ன சொன்ன இப்போ?” என்று கேட்டான்.

“உங்களுக்குத் தேவைன்றதாலதான் நீங்க இப்போ வந்திருக்கீங்கன்னு சொன்னேன்” என்றாள் அவன் முகம் பார்த்து.

“கமலி கல்யாணம் இல்லைன்னா இப்பவும் நீங்க என்னைத் தேடி வந்திருக்க மாட்டீங்க” என்றாள் அழுத்தமாக.

அதற்கு அவனும் மறுக்காமல்,
“எஸ்! வந்திருக்க மாட்டேன்தான், ஆனா எப்பவுமே வந்திருக்க மாட்டேன்னு கிடையாது, அதை விட என்னைக்கும் நான் உன்னை வேண்டாம்னு சொன்னதில்ல, நீதான் உறவு வேண்டாம்னா கட்டின தாலியைத் தூக்கி எறிஞ்ச”

“அப்பா சொன்னதுக்காகத்தான் இங்க வந்தேன், அதுவும் வீட்டு வாசல்ல நின்னப்போ கூட ரொம்ப கடுப்பாத்தான் இருந்துச்சு, உன்னை வேண்டாம்னு சொல்லி தாலியை எறிஞ்சவ வீட்டுக்கே வந்திருக்கியேன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன்” என்றவனை இடைமறித்தவள்

“சும்மா நான் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்லாதீங்க, வேண்டாம்னு நான் வார்த்தையால ஒரு தடவ தான் சொன்னேன், நீங்க கூட என்னைக் கல்யாணப் பண்ணிருக்கவே கூடாதுன்னு மாமா கிட்ட பேசினீங்க தானே?” என்ற வஞ்சியிடம்

“சொன்னேன்தான், அவர் இஷ்டப்படி நான் கல்யாணம் பண்ணினா என் இஷ்டப்படி படிக்க அனுப்ப மாட்டேன்னு பிடிவாதமா நின்னார், படிக்கனும்னு சொல்லிட்டு இருக்கேன், உன்னோட குடும்பம் நடத்தனும்னு சொல்லி என்னோட ஃபீலிங்க்ஸ் புரியாம பேசினார், அதான் கோவத்துல பேசினேன்”

“அப்போ எனக்கெல்லாம் ஃபீலிங்க்ஸே இல்லை இல்லையா? வார்த்தைக்கு வார்த்தை அம்மாவும் பையனும் என்னைக் கல்யாணம் பண்ணினது தப்புன்னு சொல்லும்போது என்னால வேறென்ன செய்ய முடியும்? உங்களோட கனவுகள் மதிக்கப்படனும்னு என்னோட உணர்வுகளை நீங்க உங்க வார்த்தையால காயப்படுத்துனீங்க இளா, அது புரியலையா உங்களுக்கு? இரண்டே நாள்ல என்னை நினைச்சிட்டே இரு, பிடிக்கனும் சொல்றீங்களே? மாமா கிட்ட சண்டை போடும்போது இந்த மனைவின்ற உணர்வு எங்க போச்சு உங்களுக்கு?” என்றாள் கலங்காமல்.

“இப்பவும் உங்களுக்குப் பிடிச்சுருக்குன்னுதான் பார்க்குறீங்க? என்னோட பிடித்தம்னு ஒன்னும் கிடையாது”

நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள். இளாவிற்கு அவள் சொல்வதின் உண்மை புரியச் செய்தாலும் அவன் அலட்டிக்கொள்ளவில்லை! அவன் குணம் அப்படி!

“இப்போ இவ்வளவு பேசுற நீ அன்னிக்கு என்னைப் பார்த்து இந்த கேள்வி கேட்டிருக்கனும், எங்கிட்ட சண்டைப் போட்டிருக்கனும், ஆனா நீ என்ன செஞ்ச? எனக்கும் செண்டிமென்ட்ஸ் இருக்கு இஞ்சி” என்றான் அவள் செயல் பொறுக்காதவனாக.

“என்ன பெரிய தேவைன்னு வந்திட்டேன்னு சொல்ற? எப்பவும் எனக்கு மனைவி தேவைதான்! இன்னிக்கு இல்லனாலும் கண்டிப்பா நான் வந்திருப்பேன்” என்றவன் பட்டென கதவை அடைத்துக்கொண்டான்.

‘இவன் வரவரைக்கும் நான் காத்திட்டு இருக்கனுமோ?’ என்று உள்ளம் எரிய வஞ்சி ஹாலில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவனிடம் ஒரு சாவியைக் கொடுத்து மறந்த மடத்தனத்தை எண்ணி நொந்தாள், இல்லாவிடில் தாலியை எடுத்திருக்கலாம் என்று எண்ணி குமைந்தாள். சோஃபாவில் சாய்ந்திருந்தவள் கண்கள் சொருக, திடீரென போன் சத்தம் கேட்டுப் பார்த்தால், அறையினுள் அவன் அலைப்பேசி சத்தமிட்டது.

அவன் இன்னும் குளியலில் இருக்க,
“இஞ்சி! சாப்பாடு டெலிவரியா இருக்கப்போகுது, கால் அட்டெண்ட் பண்ணு, நான் பே பண்ணிட்டேன்” என்று பாத்ரூமில் இருந்து கத்த, அவளும் எடுத்துப் பேச, உணவுதான் வந்திருக்க, அதை வாங்கி வந்து வீட்டில் வைத்தாள். உணவு வந்து பத்து நிமிடம் கழித்தே அவன் வர, இவளும் உண்ணாமல் உட்கார்ந்திருந்தாள். டீஷர்ட்டை மாட்டிக்கொண்டே வந்தவன்

“இன்னும் சாப்பிடலையா நீ?” என்றபடி உணவைப் பிரித்தான். இருவரும் அமைதியாய் உண்டனர். சாப்பிட்டதும் எல்லாம் ஓரங்கட்டியவள்

“எத்தனை தடவ குளிப்பீங்க நீங்க?” என்றாள் முறைப்பாக.

“அது..வெளியே போனேன்ல, வெயில தாங்கல, அதான் இரண்டு தடவ குளிச்சேன்” என்று அவன் சொல்ல

“அதான் காலையில குளிச்சிட்டீங்களே, வெயில் தாங்கமுடியலன்னா சும்மா இரண்டு கப் தண்ணியை ஊத்திட்டு வரவேண்டியதுதானே? அரை மணி நேரம் குளிக்கிறீங்க, தண்ணியை வேஸ்ட் பண்ணாதீங்க” என்றதும்

“அடியே! குளிக்கறதுன்னா இரண்டு கப் ஊத்துறதா? நீ சும்மா இருக்கப்போ சொல்லு குளிக்கறது எப்படின்னு சொல்லித் தரேன் நான்” என்றவனை அவள் முறைக்க, பிறகுதான் அவன் சொன்னதன் அர்த்தம் புரிய

“ஹேய்! நான் தியரியா சொன்னேன்” என்றவனுக்குச் சிரிப்பு வந்துவிட, வஞ்சி அதற்கும் சிரிக்கவில்லை. இளந்திரையனும் பேசாமல் அறைக்குள் போய்விட, வஞ்சி வீட்டினை சுத்தம் செய்தாள். இதற்கிடையில் அவனின் அம்மா அவனுக்கு அழைக்க, இளா கதவைத் திறக்காமல் உள்ளிருந்தபடியே பேசினான்.

“ஏன்டா அவ வீட்ல போய் இருக்கியாமா? இப்போதான் உன் அப்பா சொல்றார், அன்னிக்கு வேற ரூம் பார்க்க போறேன்னு சொன்ன?” என்ற மாதவிக்கு அவ்வளவு கோபம்.

“ஆமா, என் பொண்டாட்டி இருக்கும்போது நான் ஏன் தனியா போய் தங்கனும்?” என்ற மகனது கேள்வியில் இதயத்தில் பெரும் பேரதிர்ச்சி!

“என்ன உன் பொண்டாட்டியா? ஏன்டா அவளை பிடிச்சுக் கட்டலன்னு சொல்லிட்டே இருப்ப, இப்ப என்ன உன் பொண்டாட்டின்ற அவளை? தாலியைக் கழட்டி எறிஞ்சவ தானே அவ?” என்றார் ஆவேசத்துடன்.

மகனது வார்த்தைகள் அவருக்குத் தாங்கவே முடியவில்லை, இரண்டு வருடமாய் இப்படி இவன் பேசியதில்லையே, இரண்டே நாளில் அவன் மாறிவிட்டானா? என்று யோசித்தார்.

“டேய்! அவ உன்னை வேண்டாம், உன் உறவு வேண்டாம்னு சொன்னவ டா, எப்படிடா எல்லாத்தையும் அதுக்குள்ள மறந்திட்ட, கொஞ்சம் கூட ரோஷமில்ல உனக்கு? உங்கப்பா கூட உன்னைத் தனியாவே அனுப்பியிருக்கக் கூடாது நான், உன்னை நல்லா பேசியே கரைச்சிருப்பார் மனுஷன்” என்றார் பொறுக்காமல். அத்துடன் விடாமல்

“கமலி கல்யாணம் முடியவும் அவளை வெட்டிவிட்டுடு, உனக்கு அம்மா நல்ல பொண்ணா பார்க்கிறேன் டா, அம்மா பேச்சைக் கேளுடா” என்றதும் சுள்ளென்று ஏறியது அவனுக்கு.

“என்ன சும்மா வெட்டிவிடு வெட்டிவிடுன்னு பேசுறம்மா நீ? அவ என்னடான்னா உயிரோட இருக்கும்போதே தாலியைக் கழட்டுறா, நீ அவளை வெட்டிவிடுன்ற, அவ என்ன செடியா கொடியா வெட்டிவிட? நானும் பொறுமையா இருக்கேன், என்ன இப்போ என் பொண்டாட்டி என்னைப் பேசுவா உனக்கு என்ன? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இந்த ஜென்மத்துல அவ மட்டும்தான் என் பொண்டாட்டி” என்று கத்திவிட்டான், குரல் அவனையும் மீறி கோபமாய் வெளிவர அது வெளியே இருந்த வஞ்சிக்கும் கேட்டது.

“இரண்டு நாள்ல எப்படிடா மாறின? அவ வேண்டாம் தம்பி” என்று குரல் இறங்கி அவர் பேச

“போதும் நிறுத்து இந்த பேச்சை! வீட்ல ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிட்டு என்ன பேச்சு இதெல்லாம்? நானும் பொறுமையா போனா, பேசிட்டே இருப்பியா? முதல்ல ஒன்னு நல்லா கேட்டுக்கோம்மா என்னைக்கும் நான் அவளை வேண்டாம்னு சொன்னதில்லை, இனியும் சொல்லப்போறதில்லை, போனை வை முதல்ல” என்று கடுப்போடு அதனை அணைத்துப்போட்டவன் அப்படியே உறங்கியும் போனான்.

வஞ்சிக்கு ஒன்றும் பெரிதான மனமாற்றங்கள் நிகழவில்லை, என்னதான் கணவனாக இளந்திரையன் பேசினாலும் அந்த உணர்வு அவள் உள்ளத்தில் உயிர்க்கவில்லை.

மாலை ஐந்து மணி போல் அவன் எழுந்துவர, வஞ்சி வழக்கம்போல் தனது செடிகளுடன் பேசிக்கொண்டே தண்ணீர் விட்டாள். பால்கனியில் வந்து சுவரோரம் சாய்ந்து நின்ற இளா,

“இலைங்க கிட்ட பேசுற மாதிரி இளா கிட்டவும் பேசலாம்” என்றான். தூக்கி எழுந்து அப்படியே வந்திருந்தான், கண்கள் சிவந்து தலையெல்லாம் கலைந்து நின்றான்.

“இலைங்க எப்பவும் என் கூட இருக்கும்” என்று வஞ்சி பதில் பேசியவள் கொஞ்சம் யோசித்து,

“இங்க பாருங்க, முன்னாடி சொன்னதுதான் இப்பவும் எப்படியும் உங்கம்மாவால என்னை ஏத்துக்க முடியாது, அவங்களோட என்னால ஒட்டவும் முடியாது, வீணா உங்களுக்குத்தான் கஷ்டம். இருக்கறது ஒரு வாழ்க்கை, படிச்சவர்தானே நீங்க யோசிச்சு முடிவெடுங்க” என்று சொல்லி செடிகளில் நீர் விட, அவளருகே வந்து நின்றவன்

“ஒரு வாழ்க்கையில ஒரு கல்யாணம்தான் எனக்கு!” என்று அதையே பேச

“சும்மா அதையே பேசாதடா! லூசு மாதிரி!” என்று திட்டியவள் “என்னை வீணா பேசவைக்காத!” என்றாள் கை நீட்டி. நீட்டிய விரலைப் பிடித்தவன்

“என்ன பேசுவ? பேசு” என்று அவன் சொல்ல

“உனக்குத் தேவைன்றதாலதானே நீ வர, ஆனா எனக்கு நீ தேவை இல்லை, பதினைஞ்சு வயசுல இருந்து அப்பா இல்லாம வாழ பழகினேன், அப்புறம் அம்மா இல்லாம வாழ பழகினேன், இப்போ மூணு வருஷமா நீ இல்லாம வாழ பழகிட்டேன்” என்று விரக்தியாய் சிரித்தவள் அம்மா, அப்பாவின் ஞாபகங்களில் அப்படியே சரிந்து சுவரில் சாய்ந்தாள்.

“இதுல அப்பா, அம்மா கூட என்னோட இருந்திருக்காங்க, நீ எங்கேயுமே இல்லை, இனிமேலும் தேவையில்லை” என்று ஈரவிழிகளில் அவள் சொல்ல, அவளின் வார்த்தைகளும் வலிகளும் புரிந்து அவனை வருத்தினாலும் அதை வழக்கம்போல் துடைத்தவன் அவளுடன் உட்கார்ந்து

“இஞ்சிக்கு இளா தேவையில்லாம இருக்கலாம், ஆனா இளாவுக்கு இஞ்சி தேவை” என்றவன் மீது அப்படியொரு கோபம் பெருக, அருகே இருந்தவன் தோளில் வேகவேகமாய் அடித்தாள். அடிக்கும்போது அழுகை வேறு அவளுக்கு! இளந்திரையன் கொஞ்சம் அசையாமல் உட்கார்ந்திருக்க, அவன் கண்களில் சிரிப்பு வேறு!

“நீ வேண்டாம் எனக்கு” என்று சொல்லி வேறு அடித்தாள். பத்து நிமிடம் அவளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தவன் உட்கார்ந்தபடியே அவளின் கைகளை ஒரு கையால் பிடித்து மறுகையால் அவளை அணைக்க

“கையை எடு நீ” என்று கத்தினாள்.

“எவ்வளவு செல்ஃபிஷ் நீ? அன்னிக்கு உன்னோட அமெரிக்கா முக்கியம்னு என்னைப் பேசின, இப்போ உனக்கு நான் முக்கியம்னு உன் அம்மாவைப் பேசுற? இப்போ நீ வந்ததும் வஞ்சி உன் பின்னாடியே வந்திடுவேனா?” என்றாள் அவனின் குணம் பிடிக்காமல்.

“நான் செல்ஃபிஷ்தான் ஒத்துக்கிறேன், நீ நல்லப்பொண்ணு தானே? எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு, ஒன்னுப் புரிஞ்சிக்கோ வல்லி! வாழ்ந்து பிடிக்காதவங்கதான் விவாகரத்துக் கேட்பாங்க, நம்ம மாதிரி வாழவே ஆரம்பிக்காதவங்க இல்ல”

“இரண்டு வருஷ உன் நினைப்பே இல்லாம இருந்த எனக்கு, இரண்டு நாளா உன்னோட நினைவுதான், உனக்கு நான் வேணும்ன்ற ஸ்டேஜ்ல நீ இல்லைன்னு புரியுது, ஆரம்பிக்காமயே தோத்துட்டேன், ஆனா நீ எனக்கு வேணும்ன்ற ஸ்டேஜ்ல இருக்கேன் நான்” என்றவன் மெதுவாய் எழுந்து ஹாலில் இருந்த பாத்ரூமில் முகம் கழுவி வந்தான்.

இவளும் சப்பாத்திக்கு மாவு பிசைந்தபடி சோஃபாவில் வந்து உட்கார, அவள் பேசவே இல்லை. இவ்வளவு பேச்சிற்கும் அவள் பேசாமல் இருக்க, அவனுக்குக் கோபம் ஏற,

“எவ்வளவு பேசறேன் நான்? ஒருவார்த்தைப் பதில் சொல்றியா நீ?” என்றான் கடுப்பாக.

“தனியாவே இருந்து பழகிட்டேன் நான், இவ்வளவு பேச்செல்லாம் டக்குன்னு வராது” என்றவளிடம்

“நானும் தான் யூஎஸ்ல, புனேவுல எல்லாம் தனியா இருந்தேன்” என்று அவன் உடனே பதில் சொல்ல

“நீங்க ஒரு இடத்திலதான் தனியா இருந்திருக்கீங்க, நான் எங்க இருந்தாலும் தனியாதான் இருக்கனும், கஷ்டத்தைப் போக்க ஆள் இல்லன்னா கூட பரவாயில்லை, அதை சொல்லக் கூட ஆள் இல்லாம இருந்துட்டேன் நான், நீங்க தனியா இருந்தாலும் உலகத்துல ஒரு மூலையில அம்மா, அம்மா, தங்கச்சின்னு உறவுகள் இருக்காங்க, எனக்கு அப்படி யாருமில்ல” என்றவளின் மென்சோகம் அவனைத் தாக்க,

“சாரி வல்லி” என்றான் உணர்ந்து.

“எப்பவும் என்னைப் பத்தியே யோசிச்சுப் பழகிட்டேன், அப்பவும் சரி இப்பவும் சரி, என்னால என்னை மாத்த முடியாது, அப்படியே ஏத்துக்கோ, நீயும் எனக்காக மாற வேண்டாம், என் மனைவி எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்” என்றவன்

“எங்கப்பாவைப் பாரு எங்கம்மா பேச்சையெல்லாம் மாத்த ட்ரை பண்ணினா மனுஷனால முடியுமா சொல்லு? அதை அப்படியே ஏத்துப் பழகிட்டார். அவரைப் பார்த்து வளர்ந்ததால என்னவோ மனைவின்னா எப்படி இருந்தாலும் விடக்கூடாதுன்னு மனசுல பதிஞ்சுப்போச்சு” என்றதற்கும் அவள் பேசாமல் இருக்க,

“இஞ்சி! முதல்ல என்னை எப்படி சஸ்பெண்ட் செய்யலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு ஹஸ்பண்டா நினைச்சு மனசுல பதியவை டி” என்றவன் அதன்பின் பேசவில்லை. அவளைப் பிடித்த நிலையில் இளா, பிடிவாத நிலையில் இளாவின் இஞ்சி!

✅ End of Episode 7
How did you feel about this episode?
❤️ 7 👏 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 1 month ago

Very nice.

❤️ 1 more...
Radhi Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

புரிகிறது இஞ்சி மனது

பிடிவாதம் பிடித்து
பிடித்து கொள்ள பார்க்க
பிடிவாதம் கொண்டு 
பிரிந்து செல்ல வஞ்சி துடிக்க
பிரமாதம்.....
❤️ 1 more...
Saraswathi Reader 4 weeks ago

பிடித்த நிலையில் இளா

பிடிவாத நிலையில்  இஞ்சி  ...... அருமை
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top