Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 3

காளிதாசன் 3

சில மணி நேரங்களுக்கு முன் மாலில்…

தன்னைக் கடத்துவேன் என்று காளிதாஸன் பேச, “உங்களை  மதிச்சுப் பேசுறேன்றதுக்காக இப்படி பேச வேண்டாம் மிஸ்டர்.  ஹவ் சீப்?” என்று கார்த்தி முகம் சுழிக்க, அந்த செய்கை காளிதாஸனை நிதானம் கொள்ள வைத்தது.

“மேம்! ஐ அம் ஸாரி! இங்க பாருங்க. உங்ககிட்ட இப்படி பேசணும் நான் நினைக்கல. நீங்க அப்படி என்னைத் தள்ளிடாதீங்க. உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத்தான் வந்திருக்கேன். இது ரொம்ப சீரியஸ்” என்றான் காளிதாசன் கொஞ்சம் குரல் இறங்க.

“என்னால என்ன உதவி செய்ய முடியும்? எங்கப்பாவை அண்ணாவை மீறி, அவங்களுக்கு எதிரா நான் ஒன்னும் செய்யமாட்டேன்” என்று உறுதிபட சொன்னவளிடம்,

“விஷயத்தை சொல்றேன் தென் நீங்க டிசைட் பண்ணுங்க” என்ற  அவனின் குரலிலும் வார்த்தையிலும் தணிந்து மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“உங்கண்ணா நீங்க நினைக்கிற மாதிரி நல்லவர் கிடையாது” என்றவனின் பேச்சுக்குக் கனலாய் ஒரு பார்வையைப் பதிலாய்த் தந்தாள் கார்த்தி.

அவளின் அப்பாவிற்கு அடுத்து அவளின் அண்ணன்தான் எல்லாம்! அவனின் பேச்சுகளை அவள் மீறியதே இல்லை. தங்கை என்பதை விடவும் தன் மகள் போல பார்ப்பான். தம்பியைப் போல் மிகுதியான நெருக்கம் இல்லாவிடினும் தங்கைக்கும் தம்பிக்கும் என்னவென்றாலும் அவன்தான் முன் நிற்பான்.

கார்த்தியின் பார்வை புரிந்துதான் போனது காளிதாஸனுக்கு.

“எவிடன்ஸ் காட்டினா நம்புவீங்களா?’ என்றான் கொஞ்சம் எரிச்சலுடன்.

“நம்ப வைக்கிறதுக்குத்தான் ஆதாரம் தேவை, அதை விட பொய்யை உண்மைன்னு காட்ட எவிடன்ஸ் தேவைப்படலாம். நான் என் அண்ணாவை நம்புறேன். பார்த்து பத்து நிமிஷத்துல ஒருத்தர் சொல்றதையெல்லாம் நம்புற அளவு நான் முட்டாள் இல்லை” என்றாள் காட்டமாகவே.

அப்பா அரசியல்வாதி என்று தெரியும். அதற்காக சில வேலைகள் செய்வார்கள் என்று கூட தெரியும், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்பது போல் அவளின் எண்ணம்.! அரசியல் என்றால் அப்படித்தான் என்ற எண்ணம் சிறுவயது முதலே அவளுக்குண்டு. தேர்தல் நடக்கையில் அப்பாவுக்கு வாக்கு அளிப்பாள், இல்லையா அவர் சொல்பவருக்கு வாக்களிப்பாள். மற்றபடி அப்பா, அண்ணனின் அரசியல் ஆட்டம் அறியாத மகள்.

இப்போது இவன் பேசும் போது கூட ஏதோ பணவிவகாரம் போல என்றுதான் நினைத்தாள். அப்போதும் கூட இவனும் அரசியல் செய்பவன் தானே? என்ற நினைப்புதான். இவளும் கூட வருமான வரியில் இருக்கும் ஓட்டைகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வாள். அது வியாபார யுக்தி, அது போல் அரசியல் அவர்களுடைய தேர்வு. அதனால், அதில் தலையீட்டுக் கொள்ள மாட்டாள்.

“நீங்க சொன்ன மாதிரி உங்களை நான் ஜட்ஜ் பண்ண விரும்பல கார்த்தியாயினி. ஸோ, நீங்க அறிவுவாளியா இருந்தாலும் சரி, அரவேக்காடா இருந்தாலும் ஐ டோண்ட் மைண்ட்” என்று அவளைப் போலவே காட்டமாகப் பேசினான் காளிதாசன்.

“தாஸண்ணா!” என்று வாலிதான் அடக்கினான்.

“இதைக் காட்டுங்க” என்று அவனின் போனை நீட்டினான்.

“முதல்ல ஒன்னு க்ளீயர் பண்ணிடுறேன் கார்த்தி மேம், உங்களை இப்படி மீட் பண்றது உங்களுக்குப் பிடிக்கலன்னு புரியுது, அரசியல் விஷயங்கள் அப்பா, அண்ணாகிட்ட பேசாம உங்ககிட்ட என்ன பேச வேண்டி இருக்குன்றது உங்க எண்ணம். தட்ஸ் ரைட்! ஆனா, உங்க அண்ணாவைப் பத்தி பேசலாம்னு உங்கப்பாவைப் பிடிக்க நினைச்சா, உங்கண்ணாவை மீறி உங்கப்பா கிட்ட பேச முடியல. அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கல, போன் கால்ஸ் கூட அப்படித்தான்” என்றான் எரிச்சலுடன்.

அவன் சொல்வது உண்மைதான். அப்பாவின் அத்தனையிலும் அண்ணன்தான் இருப்பான். அப்பா வயதானவர் கண்ட நேரத்திற்கும் போன் வரும் என்பதால் இருவரின் எண்ணும் இணைந்துதான் இருக்கும்.

“ஓகே,  விஷயம் என்ன சொல்லுங்க.  நான் போகணும்” என்றாள் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி. வாலியிடம் இருந்து வாங்கிய போனில் வீடியோ ஒன்றை ஓட விட்டவன், “இதைப் பாருங்க” என்றான்.

ஒரு பெண் ஹாஸ்பிட்டல் மெத்தையில் இருந்தாள். ஐசியூ அறை போல் இருக்க, பார்க்கவே பரிதாபமானத் தோற்றம். ஆனால்,  எங்கேயோ பார்த்த நினைவும் கூட.

“யார்?” என்று அவனைப் பார்க்க,

“உங்க ஃபினான்ஸ்ல வேலைப் பார்க்கிற பூஜா” என்றான்.

லஷ்மி ஃபினான்ஸ்! அப்பா ஆரம்பித்தது, அரசியலுடன் அதையும் சேர்த்து பார்த்தார். பின் அரசியலில் தீவிரமாக மூழ்கி விட, செல்வாதான் இப்போது அதன் பொறுப்பு. பெண்பிள்ளை என்பதால் இவளை ஃபினான்சில் விடவில்லை. ராஜீவும் கூட அக்காவோடு லெதர் பிஸ்னஸ் பார்ப்பான். எப்போதாவது பணம் வேண்டுமென்றால் இவ்வளவு தொகை என்று அண்ணனிடம் சொன்னால் இவர்களுக்கு அனுப்பி விடுவான். மற்றபடி வரவு, செலவு எல்லாம் செல்வாவின் பொறுப்புதான்.

இவர்களது நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் என்று சொல்ல, எதாவது உதவி தேவையோ என்று யோசித்தாள் கார்த்தி. உதவி என்றால் கூட இவனே செய்யலாமே, இவனிடமும் பதவி இருக்கிறது. தோற்றம் பார்த்தாலும் வசதியானவனாகவே தெரிந்தான்.

விளக்கங்களின்றி எதுவும் விளங்காதென புரிந்தது அவளுக்கு.

“சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருக்காங்க இந்த பொண்ணு” என்றதும் அச்சோ என்று கார்த்தியின் கண்கள் பார்க்க,

“அதுக்குக் காரணம் உங்க அண்ணா, அந்த பொறுக்கி செல்வரத்னம்” என்றதும் அதிர்ந்து போனாள்.

“என்ன பேசுறீங்க, அண்ணாவை எப்படி தப்பா சொல்வீங்க நீங்க?” என்று கார்த்தி உணர்ச்சிவசப்பட,

“ரிலாக்ஸ் மேடம்! சொல்றதைக் கேளுங்க” என்று காளிதாஸன் பொறுமையாகப் பேச, அந்த பொறுமை கார்த்தியிடம் இல்லை.

‘என் அண்ணனைப் பற்றி என்ன பேசுகிறான் இவன்?’ என்று எதிரே இருந்தவன் எதிரியாகிப் போனான் அந்த கணத்தில்.

“இங்க பாருங்க, உங்களுக்கு எங்க ஃபேமிலி மேல என்ன வெஞ்சன்ஸ் தெரியல. அதுக்காக தேவையில்லாம  அண்ணாவைப் பத்தி தப்பா பேசாதீங்க” என்றாள் கோபத்துடன்.

“உங்க குடும்பத்து மேல வெஞ்சன்ஸ். ப்ச், அது இல்லை. இந்த பூஜா உங்க ஃபினான்ஸ் ஸ்டாஃப், பூஜா வாலியோட ப்ரண்ட் தங்கை. வாலி ப்ரண்ட் இறந்துட்டதால பூஜாதான் குடும்பத்தைப் பார்க்கிறாங்க. கிட்டத்தட்ட இரண்டு வருஷம் உங்ககிட்ட வேலையில இருக்காங்க, ஐ மீன் செல்வரத்னம்கிட்ட. இடையில அவங்க தங்கை படிக்கிறதுக்காக ஃபினான்ஸ்ல வீட்டுப் பேப்பர்ஸ் வச்சு பணம் வாங்கியிருக்காங்க” என்ற காளிதாஸனுக்கு அடுத்துப் பேச வாய் வரவில்லை.

அவன் வாலியைப் பார்க்க, வாலி தொடர்ந்தான், “உங்கண்ணா பூஜா கிட்ட லோனுக்குப் பதிலா வேற ஃபேவர்ஸ் கேட்டிருக்கான், உங்களுக்குப் புரியும் நினைக்கிறேன் மேம். பூஜா ஒத்துக்காததால தினம் தினம் ஹாரஸ் பண்ணியிருக்கான், வெளியே சொல்லக் கூடாதுன்னு மிரட்டல். எப்படி சொல்ல முடியும், எக்ஸ் மினிட்ஸ்டர், இப்போ எம்.எல்.ஏ உங்கப்பா. எவ்வளவு கெஞ்சியும் பூஜாவை வேலை செய்ய விடாம அந்த பொறுக்கி மிஸ்பிஹேவ் பண்ணியிருக்கான்”

“பூஜா அவனை அடிச்சு வெளியே சொல்லிடுவேன் மிரட்டினதுக்கு கம்பெனி பணத்தை அவ திருடிட்டான்னு சொல்லி போலீஸ் போவேன்னு ப்ளாக்மெயில் செஞ்சிருக்கான். இரண்டு நாள் முன்னாடி அவனோட ஆசைக்கு இணங்கலன்னா அவ குடும்பத்தையே இல்லாம ஆக்கிடுவேன் சொல்லவும் இவளுக்கு மானம் பெருசா இருக்க, இதோ இப்படி சாகத் துணிஞ்சிட்டா” என்றான் வாலி வேதனையுடனும், செல்வா பற்றிய பேச்சில் வெறுப்புடனும்.

அவன் உணர்ச்சி வசப்பட்டிருக்க, காளிதாசன் தொடர்ந்தான். “சரி வேலையை விட்டு நின்னுடலாம் நினைச்சா, அந்த பொண்ணோட வீட்டுப் பத்திரம் வச்சிட்டு போலி பேப்பர்ஸ் ரெடி பண்ணி வீடே இல்லாம செஞ்சிடுவேன் சொல்றான் உங்க அண்ணன்” என்று பல்லைக் கடித்தான்.

“இல்லை, இல்லை! அண்ணா அப்படி எல்லாம் கிடையாது” கார்த்தி அவசரமாய் மறுத்தாள். கற்பனையாய் கூட அண்ணன் களங்கமானவன் என்று நினைக்க முடியவில்லை. அந்தளவு ஆழ நம்பினாள் தன்னவர்களை.

கார்த்தியைப் பொருத்தவரை அண்ணன் அரசியலில் அடிதடி செய்தான் என்றால் கூட நம்புவாள். ஆனால்,  பெண்கள் விஷயத்தில், ஒழுக்க விஷயத்தில் நிச்சயம் அண்ணன் தவறியிருக்க மாட்டான் என்று திண்ணமாய் அவளின் எண்ணம் இருக்க, காளிதாசன் சொன்னதை எல்லாம் ஏற்கவே முடியவில்லை.

கார்த்தியாயினியைப் பொறுத்தவரையில் ஒழுக்கமும், நேர்மையும் மிகவும் முக்கியம்! அரசியலில் இருந்தாலும், அப்பா கறைபடியாதவர் என்று நம்புகின்றவள்.

கார்த்தியின் மறுப்பில் காளிதாசன் அதிருப்தியாய்ப் பார்க்க,

“வேற எதாவது தப்பு நடந்திருக்கும். அண்ணாவை எனக்குத் தெரியும், ஆபிஸ்ல வேற யாராச்சும் அண்ணா நேம் மிஸ்யூஸ் பண்ணியிருக்கலாம். நான் விசாரிக்கிறேன்” என சொன்னவளிடம் ஆடியோ பதிவை ஓட விட்டான் காளிதாசன்.

‘வாலிண்ணா! என்னால முடியல. அந்த செல்வரத்னம் என்னைத் தப்பா பார்க்கிறான், பேசுறான். இப்போ தப்பா நடக்கவும் ஆரம்பிச்சிட்டான், முன்னாடியே உங்ககிட்ட சொல்லியிருக்கணும், தப்பு பண்ணிட்டேன். இவனைப் பத்தி தெரியாம வீட்டை அடமானம் வச்சிட்டேன், இந்த வாரம் குன்னூர்ல இருக்க அவங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு….’ என்ற குரல் அழுகையுடன் சில நொடிகள் தேங்கி தயங்கி பின்,

‘அப்படி நான் மறுத்துட்டா, வீடு இல்லாம போயிடும் சொல்றான். அப்பாவும் இல்லாம, அண்ணாவும் இல்லாம நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்ணா. எப்படியாவது தங்கச்சியைப் படிக்க வைக்கணும்னு சகிச்சிட்டு வேலை செஞ்சா அவன் எல்லை மீறி போறான். அவனைப் பத்தி சொன்னாலும் யாரும் நம்ப மாட்றாங்க, நிறைய பொண்ணுங்க அவனால வேலையை விட்டு நின்னுருக்காங்க. சிலர் அவனுக்கு ஒத்துழைச்சிருக்காங்க. என்னை விட மாட்டேன் சொல்லி டார்ச்சர் கொடுக்கிறான். என்னால முடியலண்ணா.”

“அவனை எதிர்க்கவும் முடியல, பணம் இல்லையே எங்ககிட்ட, அவனை மீறினா என் மேல பொய் கேஸ் கொடுப்பேன்கிறான். போதும்ணா இந்த போராட்டம் தாங்கல, நான் செத்துப்போயிடுறேன். தங்கச்சியையும், அம்மாவையும் பார்த்துக்கோங்க. அவன் தங்கச்சியைக் கூட விட மாட்டான்ண்ணா, இரக்கமே இல்லாதவன். அவளை நல்லா பார்த்துக்கோங்க, என் கடைசி ஆசை ப்ளீஸ்!” என்று விசும்பலுடன் அந்த ஆடியோ முடிய, கேட்டிருந்த கார்த்தியின் மனநிலை சொல்லவே முடியவில்லை. தன் முன் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.

“இந்த குரல், வலி வருத்தம் எல்லாம் பொய்னு சொல்றீங்களா கார்த்தி?” என்று காளிதாஸன் கேட்க, பதில் சொல்ல முடியவில்லை.

இதில் கார்த்தியை யோசிக்க வைத்த ஒன்று அவர்களுக்குக் குன்னூரில் கெஸ்ட் அவுஸ் இல்லை என்பதே. அவளுக்குத் தெரியவில்லை, குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவளின் அண்ணன் அவனின் அக்கிரமங்களுக்கு அதனை வைத்திருக்கிறான் என்று அறியாது போனாள்.

கார்த்தி முகம் குழப்பத்தில்  இருக்க, காளிதாசன் பேசினான்.

“வாலி என்னோட பிசியா இருக்கறதால அவன் ப்ரண்ட் வீட்டை  அவ்வளவா பார்க்கல. அதை விட அவங்க வேலை பண்றாங்க, நல்லா இருக்காங்க நினைச்சிருக்கான். இந்த பொண்ணும் கூட  சாக நினைச்சுட்டு அப்போதான் இந்த மெசேஜ் பண்ணிருக்காங்க” என்று காளிதாஸ் சொல்ல, கலவரம் நிறைந்த கண்களுடன்,

“இப்போ எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் கார்த்தி.

“சீரியஸ் கண்டிஷன் இப்போ பெட்டெர்” என்றவனுக்கு தான் நினைத்த மாதிரி இந்த பெண் நல்லவள் என்ற எண்ணம் உறுதியானது. இவளிடம் பேசினால் தீர்வு கிடைக்கும் என்று நம்பியவனுக்கு, அவளைத் தீராத துயரத்தில், கடக்க முடியாத காட்டுப்பாதைக்குள் அனுப்பப் போகிறோம் என்ற ஞானம் இல்லாமல் போனது.

“இந்த ஒரு பொண்ணுக்கு நடந்ததுதான் எனக்குத் தெரிய  வந்திருக்கு” என்றவன் அழுத்தமான பார்வையுடன்.

“நமக்குத் தெரியாம இன்னும் நிறைய நடக்குது, உங்க அண்ணா நிறைய தப்பு செய்றான், உண்மையை சொல்லணும்னா தப்பு மட்டும்தான் செய்றான். அறம் அரசியலையும், அதிகாரத்தையும் மீற முடியல. லோன் கட்ட முடியாத ரொம்ப ஏழ்மையா இருக்க குடும்பத்து பொண்ணுங்க கிட்ட அவன் இப்படித்தான் நடக்கிறான். சிலரோட இடங்களையும் ஏமாத்தி அபகரிக்கிறான்”

“பக்கா பொறுக்கி” என்று பல்லைக் கடித்தான்,

“இனி அவன் செய்யக்கூடாது! விட மாட்டேன் நான். எனக்குத் தெரிஞ்சு ஒரு தப்பு நடக்கும் போது, தப்புன்றதை விட கேவலம் இதெல்லாம், அதைத் தடுக்க என்னால முடியும்ன்ற போது எப்படி சும்மா இருக்க முடியும்? ஒருவகையில நீங்க சொன்ன மாதிரி உங்கப்பா மேல எனக்கு வெஞ்சன்ஸ்தான். அழகிரின்னு உங்கப்பாகிட்ட சொல்லிப்பாருங்க, உங்கப்பா மாதிரி இல்லை, ரொம்ப நேர்மையானவர் என் அப்பா. அவரை ஆட்சி, அதிகாரம் இருக்குன்னு உங்கப்பா ஜெயில்ல தள்ளினார். அங்க அவரை அடிக்க வச்சு, அதனால இண்டர்னல் ப்ளீடீங்ல என்னோட அப்பா இறந்தார். இத்தனைக்கும் இரண்டு பேரும் ஒரே கட்சியில சேர்ந்து இருந்தவங்க” 

“என்னோட சுயநலமும் இதுல இருக்கறதா நீங்க நினைக்கலாம். எஸ், பட் ஐ டோண்ட் மைண்ட் இட்! எனக்காக பழிவாங்கணும்னா எப்பவோ எதாவது செஞ்சிருப்பேன், உங்கப்பா அளவு அதிகாரமில்லனாலும் என்னாலையும் கேம் ப்ளே பண்ண முடியும். ஆனா அதுக்கு வீட்டுப்பொண்ணை எல்லாம் யூஸ் செய்ய நினைச்சிருக்க மாட்டேன். இந்த என்னோட செயலுக்குக் காரணம் உங்கண்ணா” என்றான்.

காளிதாஸன் பேச பேச கார்த்திக்கு ஒன்று புரிந்தது. தன்னை ஒருவார்த்தை மரியாதைக் குறைவாகப் பேசவில்லை, நடத்தவில்லை. ஆனால், அப்பா, அண்ணனை மிகவும் தாழ்த்திப் பேசுகிறான். ஒருவேளை? என்று எண்ணம் போக, இல்லை இல்லை இவனின் அப்பா எதாவது தப்பு செய்திருப்பார், அப்பா அப்படி யாரையும் கொலை எல்லாம் செய்ய மாட்டார். அண்ணன், அவன் பெண்களிடம் இடைவெளியுடன் பழகுபவன், நான் இருக்கும் போது அண்ணியிடம் கூட நெருக்கம் காட்டாதவன் என்று தந்தையையும், தமையனையும் முழுமையாய் நம்பினாள் அந்த முட்டாள்ப்பெண்.

முட்டாள் என்பதைவிட கண்மூடித்தனமான பாசம் அவர்கள் மீது! வேலை வேலை என்றிருந்தாலும் ‘கனிம்மா’ என்று தன்னை வாஞ்சையுடன் அழைக்கும் அண்ணனையும், அப்பாவையும் கொஞ்சமும் சந்தேகிக்க முடியவில்லை மனத்தால். கார்த்தி இப்படி யோசிக்க, காளிதாசன் பேசினான்.

“உங்கப்பாவை மடக்கணும்னா அதுவும் செல்வத்தை மீறி, நீங்கதான் அதுக்குப் பதில். அடுத்த வீட்டு பொண்ணுன்றப்ப என்ன அலட்சியம்? அவங்க வீட்டு பொண்ணுக்கும் உண்மை தெரியட்டும்.”

“நான் பதில்னா எனக்கு புரியல” என்றாள்.

“உங்கப்பாவை உங்கண்ணனை மீறி பார்க்க ஒரே வழி நீங்க!  ஸீ கார்த்தி, எனக்கு உங்கண்ணா இது மாதிரி பண்ற எல்லா டீடெயில்ஸ் வேணும். அதை  விட வேற வழியில்லாம அவனுக்கு ஒத்துப்போற பொண்ணுங்களை வீடியோ வச்சு மறுபடியும் மிஸ் யூஸ் பண்றான் தட் ப்ளேடி ராஸ்கல்! இந்த எவிடன்ஸ் கேட்டா கொடுப்பானா? இல்லை மகனை விட்டுக் கொடுப்பாரா உங்கப்பா? ஆனா, நீங்கன்னு வரும் போது அந்தாள் இறங்கி வருவார், எனக்குத் தெரியும். அவரோட பலவீனம் நீங்க, உங்களைத்தான் அவர் ரொம்ப முக்கியமா நினைப்பார் உங்கண்ணனை விட”

“பூஜாவோட வீட்டு டாக்குமெண்ட்ஸ் வேணும், இன்னும் என்ன செய்றான்னோ அதையெல்லாம் இனி அவன் செய்யக்கூடாது” என்றான் அழுத்தமாக.

“எங்கண்ணாவை நான் பொறந்ததுல இருந்து பார்க்கிறேன், அவர் தப்பானவர் கிடையாது. பத்து நிமிஷத்துல நீங்க சொல்ற பொய்யை எல்லாம் நம்ப முடியாது என்னால. ஏன் நீங்க கேம் ப்ளே பண்ணக்கூடாதா?” என்றாள் அலட்சியமாக.

“ஓஹ், இந்த வீடியோ, ஆடியோ பார்த்து கூட உங்களுக்கு நம்பிக்கை வரல?” என்றான் ஒரு முறைப்புடன்.

“ஏன் வரணும்? அப்படியே இதெல்லாம் உண்மையா இருந்தாலும் வேற காரணம் இருக்கலாம். என் அண்ணாவை இதுல யாராவது ட்ராப் பண்ணலாம்” என்று சொன்ன பெண்ணை இவ்வளவு முட்டாளா நீ என்று அலட்சியப்பார்வைப் பார்த்தவன்,

“ஓகே! இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?” என்றான் ஒரு தீவிரத்துடன்.

“ம்ம்” என்று கார்த்தி தலையசைக்க,

“நான் சொன்னா நம்ப மாட்டீங்க, வேணும்னா நேர்ல வந்து தெரிஞ்சிக்கோங்க. இப்ப என்னோட நான் சொல்ற இடம் வந்தா, கண்டிப்பா உங்கப்பாவும் அண்ணாவும் தேடி வருவானுங்க. அதுலயும் உங்கப்பா கண்டிப்பா வருவார். அவங்க வாயால உண்மையை சொல்ல வைக்கிறேன், லைவ் டெலிகாஸ்ட் பாருங்க” என்ற சொல்ல கார்த்திக்கு ஒரு வேகம் என் குடும்பத்தினர் நேர்மையானவர்கள், இப்படியான இழி செயலை எல்லாம் உயிரே போனாலும் செய்யமாட்டார்கள் என்று நம்பினாள்.

அந்த நம்பிக்கையில், “ஓகே! நான் வரேன்” என்று அவள் சொல்ல, 

“என்னை நம்பி வரீங்களா?” என்று அவன் ஆச்சர்யம் கொள்ள,

“இவ்வளவு மோசமா என் ஃபேமிலியை யாரும் பேசினதில்லை. கண்டிப்பா அவங்க தப்பானவங்களா இருக்க மாட்டாங்க. நீங்க சொல்லுங்க என் அப்பா கிட்ட நான் உங்களோட இருக்கேன்னு, அவர் வரட்டும். பார்க்கிறேன் நீங்க என்ன ப்ரூவ் பண்றீங்கன்னு” என்றாள் தெளிவாக.

அக்னிப் ப்ரவேசம் என்று தெரிந்தும் தயாரானாள், கார்த்தியாயினி.

என்ன செய்து விடுவான் இவன் என்னை என்ற அலட்சியம், என்னை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் எல்லாம் சேர, அவனுடன் அந்த பண்ணை வீட்டிற்கு வந்தாள். அவளின் செல்லை ஸ்வீட்ச் ஆஃப் செய்து அவளின் காரில் போட்டுவிட, வீட்டினரால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனையும் விட காளிதாஸனிடம் இருந்த கண்ணியம் அவனை நம்பச் செய்தது, அறிவு ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அகம் என்னவோ அவனை நம்பி, அவன் செயலுக்குத் துணை நின்றது. 

“பயப்படாதீங்க! கண்டிப்பா உங்களை எப்படி அழைச்சிட்டுப் போறேனோ அப்படியே கொண்டு வந்து விட்டிடுவேன்” என்றான். அவளை உடைத்து உயிர் வாழும் ஆசையின்றி செய்யப் போகிறான் என்று தெரியவில்லை.

அதற்கு கார்த்தி ஒரு மெச்சுதலான பார்வையுடன், “அப்படி என்னைக் கடத்தணும்னு நினைச்சிருந்தா, எங்க வேணும்னாலும் நீங்க அதை செஞ்சிருக்கலாம். இப்படி இத்தனை சிசிடிவியில தெரியற மாதிரி செய்ய மாட்டீங்க. இதைப் பார்த்து கூட என்னோட அப்பா, அண்ணா என்னை ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க. இல்லைனாலும் நீங்கதான் மாட்டுவீங்க, எனிவேஸ்  நீங்க என்னை ஹர்ட் செய்ய மாட்டீங்கன்னு எனக்குத் தோணுது”

காளிதாஸனுக்கு ஒன்று மட்டும் விளங்கவே இல்லை. என்னைக் கணிக்கும் இந்த பெண்ணால் ஏன் இவளின் அப்பா, அண்ணனை கணிக்க முடியவில்லை என்று. அவனுக்குப் புரியவில்லை.

அவன்  அந்நியன்! யாரென தெரியாதவனை அலசி ஆராயத்தான் செய்யும் மனம். நல்லவனா, கெட்டவனா என்று அறிவு ஆராயும். ஆனால்,  அவர்கள் இவளின் குடும்பம். அதனையும் விட இவனைப் போல் அவர்கள் கிடையாது, வீட்டில் ஒரு வேஷம், வெளியே ஒரு வேஷம் என துவேஷம் நிறைந்த மனிதர்கள். 

அந்த பண்ணை வீட்டிற்கு வந்தவள் அப்பா, அண்ணாவின் வருகைக்குக் காத்திருக்க, அப்பாவும் அண்ணனும் வருவது அவள் இருந்த அறையின் டீவி திரையில் லைவ்வாக தெரிய, ஒரு ஆசுவாசம்.

என்னதான் தைரியமாய் வந்து விட்டாலும் கூட இவ்வளவு தூரம் இவனை நம்பி எப்படி வந்தாய் என்று அறிவு திட்டியது. ஆனால்,  காளிதாசன் சொன்னது போல் கடத்தி என்று அப்பா, அண்ணனிடம் சொன்னாலும் இவளை அழைத்துதான் வந்தான். இதோ இப்போது இருக்கும் அறைக்கதவுக் கூட திறந்தே இருக்க, அப்படி ஆபத்தென்றால் அப்பாவிடம் உடனே ஓடிவிடலாம் என்று நினைத்தாள் கார்த்தி.

கீழே ஹாலில் அவர்களின் உரையாடலைக் கேட்க ஆரம்பித்தவளுக்கு அப்பாவும் அண்ணனும் பேச பேச,

‘இல்லை இல்லை! இது என் அப்பா இல்லை, என் அப்பாவும் அண்ணனும் இப்படி இல்லை’ என்று கத்தத் தோன்றினாலும், நடப்பது நிஜம் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனம் நம்ப மறுத்தது. இவ்வளவு கீழானவர்களா என்று அவர்கள் பேச்சு உணர்த்த, பேச்சற்று மூச்சற்று போனாள் பெண்.

 

 

✅ End of Episode 3
How did you feel about this episode?
❤️ 2 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Mrs Beena loganathan Reader 4 days ago


அன்பும் பாசமும் அக்கறையும்
அள்ளித் தந்த 
அப்பாவின் மனதில்
அண்ணனின் அட்டூழியங்கள்
அவள் கண்ணிலும் காதிலும் அடைந்த போது
அதிர்ந்தது 
அவள் நெஞ்சம்
அலறியது உள்ளம்
அழுதது மனம்
ஆனாலும் அசையவில்லை அவள் நம்பிக்கை....

அன்பால் கட்டிய உறவுகள்
அவமானமாய் மாறினாலும்
அவள் மனம் காற்றாய்  அலைந்தாலும்
அழிந்துவிடவில்லை 
அவள் நம்பிக்கை…
❤️ 2 more...

Nice 😍

Srichitra Reader 4 days ago

Nice 

❤️ 1 more...
Kavi Natarajan Reader 23 hours ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top