Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 4

காளிதாசன் 4

ஹாலுக்குள் வேகமாய் நுழைந்த செல்வா காளிதாஸனை நெருங்கி கையை ஓங்கிக் கொண்டு, “டேய்! எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை தூக்குவ, எங்க இருக்கா அவ சொல்லு?” என்று சட்டையைப் பிடிக்க காளிதாஸன் அசையாமல் அழுத்தமாக நின்றான். அந்த பார்வை அவனின் அப்பா அழகிரியை நினைவூட்டியது ராஜரத்னத்திற்கு.

அழகிரி, மகாதேவன், ராஜரத்னம் எல்லாம் நண்பர்கள். அப்படித்தான் மற்ற இருவரும் நினைத்தார்கள். மூவரும் கட்சியில் தொண்டர்களாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறினார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை மகாதேவன் பயன்படுத்த, அழகிரியின் நோக்கம் அரசியல் அன்று!

அதனால் விளையும் மக்கள் சேவை! ஆனால், ராஜரத்னம் இவர்களைப் போல் அல்ல, புதிதாய் வாய்ப்புகளை உருவாக்கினார். அதுவும் தவறான வழியென்றாலும் கூட! அப்படியே கொஞ்சம் கொஞ்சம் மாவட்ட செயலாளர் அளவிற்கு ராஜரத்னம் உயர்ந்து விட, மகாதேவனையும், அழகிரியையும் ஓரங்கட்ட நினைத்தார். அழகிரிக்கு மக்களிடம் நல்ல பெயர். அவரோடு சேர்ந்த மகாதேவனுக்கும் அது கிடைத்தது.

எவ்வளவு உழைத்தாலும் மகாதேவனாலும், அழகிரியாலும் நேர்வழியில் முன்னேற முடியாமல் போக, அவர்கள் வழியை மாற்றவில்லை, இடத்தை மாற்றினார்கள். கட்சியில் ஊழல் ஊடுருவியிருக்க, ஓரளவிற்காவது மக்களுக்கு என்று செய்யும் வேறு கட்சியில் இணைந்துவிட, அங்கே அவர்களுக்கு நல்ல செல்வாக்கு. விலகிச் சென்று பார்க்கையில்தான் ராஜரத்னம் தாங்கள் நினைத்த அளவு நல்லவன் இல்லை என்பதே மகாதேவனுக்கும், அழகிரிக்கும் புரிந்தது. பணம், பதவிக்காக எதையும் செய்யும் அரக்கன் என்று கண்டுகொண்டனர்.

மகாதேவன் தன் கட்சியின் முன்னேற்றத்தைப் பார்க்க, அழகிரி இன்னும் மக்கள் பணி, போராட்டம் என்று இருந்தார்.  ராஜரத்னத்தின் மீதும் கூட புகார் கூறி, சில பல வழக்குகள் அவர்மேல் அழகிரியால் தொடரப்பட, ஏதோவொரு போராட்டத்தில், சிறைக்குச் செல்ல நேர்ந்த அழகிரியை அடித்தே கொள்ள வைத்தார்.

அங்கே அரசியலினால் அறம் பிழையானது!

அழகிரி இப்படித்தான் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு, நேர்ப்பார்வைப் பார்ப்பார். இன்று அதே பார்வையை அவர் மகனிடம் கண்டவருக்கு பழையப் பகையில் தன் மகளைப் பகடையாய்ப் பயன்படுத்திவிடுவானோ என்று அஞ்சினார்.

 ஆம், அச்சம்தான்! கொலையே செய்தாலும் அஞ்சாத மனிதருக்கு, மகள் என்றாள் உயிர். அவளுக்காக உயிரைக் கூட தருவார். அதனால் இன்று எத்தனை அதிகாரம் இருந்தாலும் கூட, மகளுக்கு சின்ன களங்கம் கூட வரக் கூடாதென நேரே காளிதாஸனைக் காண வந்து விட்டார். சொல்லப் போனால் அவரின் பலவீனம் ‘கார்த்தியாயினி’.

அண்ணன் வந்தவுடனே காளிதாஸனை அடிக்கப் போக, ‘எனக்குத் தெரியாதா அவங்கள?’ என்ற பாசம் மேலோங்கியது மங்கைக்கு. என்னைக் கடத்திட்டு வந்தா சும்மா விடுவாங்களா என்று ஒரு கர்வப்புன்னகை!

காளிதாஸனின் அழுத்தம் ராஜரத்னத்தை நிதானிக்க வைக்க,”செல்வா! என்ன செய்ற? என் பொண்ணு இவன் கிட்ட இருக்கா. பொறுமையா இரு” என்று சத்தம் போடவும் செல்வா காளிதாஸனை முறைத்தபடியே விலகினான்.

கார்த்தி, ‘கண்டிப்பா, அண்ணா மேல தப்பு இருக்காது. ஆனா, அந்த பொண்ணை யார் அப்படி செஞ்சிருந்தாலும் அப்பா கிட்ட சொல்லி பனிஷ் பண்ணனும்’ என்று உறுதி எடுத்தாள்.

காளிதாஸன் அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர, எதிரே இருந்த சோஃபாவில் இவர்கள் உட்கார்ந்தனர். ராஜரத்னம் அதற்கு மேல் பொறுக்கவில்லை.

“இங்க பாரு தாஸ், என் பொண்ணை முதல்ல எங்கிட்ட காட்டு. அதுக்கு அப்புறம் என்ன வேணும்னு நம்ம பேசிக்கலாம். அவளுக்கு அடுத்த வாரம் நிச்சயம் இருக்கு, இந்த சமயத்துல நீ இப்படி செஞ்சது நல்லதுக்கில்ல, ஏதோ அழகிரி பையன்னு விட்டு வச்சிருக்கேன் உன்னை” என்றதும் சத்தம் போட்டே சிரித்தான் காளிதாஸன்.

“வாட் எ காமெடி! நீங்க என்னை விட்டு வச்சிருக்கீங்களா? எங்கப்பாவை என்ன செஞ்சிங்கன்னு எனக்குத் தெரியாதா என்ன?” என்றான் ரௌத்திரமானப் பார்வையுடன்.

“என்ன செஞ்சாங்க? அவன் ஜெயிலுக்குப் போனான். ஜெயில்ல தகராறுல செத்தா நான் என்ன செய்றது? அதுக்காக என் பொண்ணைத் தூக்குவியா?” என்று ராஜரத்னமும் கத்த,

“ஷ்! எனக்கு நாய்ஸ்னா அலர்ஜி, சத்தம் போடாதீங்க” என்று அதட்டினான்.

“ஏன் உங்க பொண்ணு எங்கிட்ட இருந்தா பயப்படுறீங்க ரத்னம்? பொண்ணுங்க ஆண்கள்கிட்ட இருந்தா பாதுகாப்பில்லையா? உங்க பையன் மாதிரி நானும் இருப்பேன் நினைச்சீங்களா? அப்படி இருந்திருந்தா…” என்று நக்கலாய் அவன் செல்வாவைப் பார்க்க,

“ஏய்ய்ய்!” என்று செல்வா எழுந்து நின்று கர்ஜித்தான்.

“செல்வா, பொறுமையா இரு. கனிதான் முக்கியம் இப்போ, நீ பேசாத” என்று மகனை அதட்டியவர்,

“இங்க பாரு, உனக்கு என்னவேணுமோ நான் தரேன். பதவி, பணம் எதுனாலும் ஆனா என் பொண்ணுக்கு எதுவும் ஆகக் கூடாது, அவ பெயர் கெட்டுப் போகக் கூடாதுன்னுதான் உங்கிட்ட இவ்வளவு பொறுமையாப் பேசுறேன். இல்லைன்னா கமிஷனர் கிட்ட கால் பண்ணினா போதும், உன்னோட எல்லா ஆட்டமும் முடிஞ்சிடும்” என்று ராஜரத்னம் காளிதாஸை மிரட்டிப் பார்க்க,

“ஓ, ஐ சீ! எங்க உங்க கமிஷனருக்குக் கால் பண்ணுங்களேன் பார்ப்போம்” என்றான் நக்கலாக. அவனுக்குத் தெரியும் நிச்சயம் அவர்கள் வீட்டு பெண் என்பதால் மிகவும் கவனமாகவே அடியெடுத்து வைப்பார்கள் என்று. இல்லையென்றால் இத்தனை ரிஸ்க் அவனும் எடுத்திருக்க மாட்டான். அதனையும் விட நேர்மையானவர்கள்தான் நேர்வழி செல்வார்கள், இவர்களிடம் தவறு இருக்கப் போய்தானே தழைந்து வந்திருகிறார்கள் என்று நினைத்தான்.

அதே எண்ணம்தான் கார்த்திக்கும். என்னைக் காணவில்லையென்றால் இவர்கள் போலிஸில் அல்லவா சொல்லியிருக்க வேண்டும், இதில் ஆதாரங்கள் கூட எளிதாய் இருக்குமே, ஏன் இவ்வளவு நேரம்? இந்த காளிதாஸன் என்ன சொல்லி மிரட்டியிருப்பான் என்று பலவிதமாய் யோசித்த பாவை சட்டென யோசனையை நிறுத்தினாள்.

என்னவோ உறுத்தியது, ‘உங்க பையன் மாதிரி நானும் இருப்பேன் நினைச்சீங்களா? அப்படி இருந்திருந்தா..’ என்று காளிதாஸன் சொன்னதிற்கு அண்ணனும், அப்பாவும் ஏன் பதறுகிறார்கள். அண்ணன் நல்லவன் என்றால், அவனைப் போல் காளிதாஸன் என்றால் பதற்றம் எதற்கு? என்று நினைத்தாள்.

“எனக்கு என்ன வேணும்னாலும் அதை அடுத்தவங்க தரணும்னு எதிர்ப்பார்க்க மாட்டேன் ராஜரத்னம், அதையும் விட நீங்க ஒன்னைக் கொடுத்து, அது எனக்கு வேண்டாம். இது வேற..” என்றவன் பூஜாவின் ஆடியோவை போட்டுக் காட்ட, மகனை முறைத்தார்.

செல்வாவோ, ‘அவளை’ என்று பல்லைக் கடித்து, “டேய்! இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம்” என்றான் அலட்சியமாக.

அவளின் அப்பாவின் பேச்சில் புதைந்து போனாள் பெண்.

“இங்க பாரு தாஸ், உனக்கு என்ன இந்த பொண்ணை இனிமே இவன் தொந்தரவு செய்ய மாட்டான். அதுக்கு நான் உத்தரவாதம் தரேன், நீ கனியை அனுப்பி வை” என்று பேசவும் பேச்சற்ற நொடி கார்த்திக்கு.

மறுத்துப் பேசாத அண்ணன்! தடுத்துப் பேசாத தந்தை!

உச்சக்கட்ட அதிர்ச்சியில் பார்த்தாள் கார்த்தி. அண்ணன் செய்திருப்பான் என்று நினைக்கிறாரா அப்பா, மறுக்காமல் காளிதாஸனை சமாளிக்க நினைக்கிறார் என்றால், நினைக்கவே நெஞ்சம் கசந்தது.

“பெரிய உத்தமர், சின்ன உத்தமருக்கு உத்தரவாதம் தரார், குட்!” என்று எள்ளல் பார்வையுடன் காளிதாஸ் சொல்லவும்,

“ப்பா, என்ன பேச்சு இவன் கிட்ட? வாங்க, சாயந்தரத்துக்குள்ள கனி நம்ம வீட்டுல இருப்பா. இவனா, நானா பார்த்துடுறேன்” என்று செல்வா எழுந்து நின்று ஆக்ரோஷத்துடன் பேச,

“அமைதியா இருடா!” என்று அவனை விடவும் சத்தமாய்ப் பேசிய ரத்னம்,

“எல்லாம் உன்னாலதான்! நீ ஒழுங்கா இருந்திருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா?” என்று மகனிடம் பாய்ந்தார்.

“சும்மா என்னைப் பேசாதீங்க, என்னமோ நீங்க ஒழுங்கு மாதிரி” என்று அலட்சியமாய்ப் பேசினான் அண்ணங்காரன். கேட்டிருந்த கார்த்தியின் கண்களில் இருந்து நீர் வழிய, சோஃபாவில் உட்கார்ந்தவள் அப்படியே கீழே சரிய அப்படியொரு அழுகை. என்னவோ நெஞ்சடைத்த உணர்வு.

எல்லாமே வேஷமா?! எப்படி எப்படி? என்ற கேள்வி அவளுள்! நம்ப முடியவில்லை. ஆனால், கண்முன்னே நடப்பதை எப்படி நம்பாமல் இருக்க, அதுவும் அவர்களே ஒப்புக் கொடுக்கையில்.

அண்ணன்,! சீ! அவனா அண்ணன் என்ற நினைக்கையில் ஒரு பெரிய கேவல் வெடித்தது. தலையே சுற்றும் உணர்வு, எப்படி அந்த பெண் படுக்கையில் ஒரு பரிதாபமான நிலையில் கிடந்தாள்? அப்படி வாழவே வேண்டாம் என்று நினைக்க வேண்டும் என்றால், எப்படியான சித்ரவதை இவன் செய்திருக்க வேண்டும். அண்ணன் கீழானவன் என்றால், அப்பாவும்…

இப்படியானவர்கள் கூடவா இத்தனை ஆண்டும் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்க நினைக்க கதறல் கார்த்தியிடம்! தாளவே முடியவில்லை. இந்த நிகழ்வு கொடுத்த தாக்கத்தில் இருந்து மீளவே முடியவில்லை. அண்ணன் இப்படியிருந்தாலும் அப்பா அவனின் செயலைக் கண்டித்து, தண்டித்திருந்தால் கார்த்தி ஆறுதல்பட்டிருப்பாள்.

காளிதாஸன் சொன்னது அத்தனையும் உண்மை, அவன் அப்பாவைக் கொன்றது இவளின் அப்பா. அப்பா கொலைகாரன்! அண்ணன்… பெண்பித்தன்!

‘அய்யோ?!’ என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். செத்து விடலாம் என்று நினைத்தாள், ஆனால், நினைத்த கணம் மரணம் வருமா என்ன?

அப்பா என்றால் எல்லா பெண்களையும் ஒன்றாய்த்தானே நினைக்க வேண்டும். இவர்கள் வீட்டுப்பெண் என்பதால்தான் இந்த பாசம், பாதுகாப்பு எல்லாம் இல்லையேல் என்று அறிவு யோசித்த நொடி ப்ரளயம் பெண் மனத்தில். அது தந்த பாரம் தாங்காது அப்படியே மயங்கினாள் மங்கை.

✅ End of Episode 4
How did you feel about this episode?
❤️ 3 😢 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Vidhya s Reader 3 days ago

சொந்த அப்பாவும் அண்ணனும் இவ்ளோ மோசமானவங்கனு தெரிஞ்சா எவ்ளோ அதிர்ச்சியா இருக்கும்

😢 2 more...
Mrs Beena loganathan Reader 3 days ago

அப்பா கொலைகாரன்,
அண்ணன் பெண் பித்தன்—
அட்டூழியம் செய்தவர்களாய்
அரக்கர்களாகிப் போனார்களே!
அவர்கள் வீட்டுப் பிள்ளை என்றால்
அன்பும் பாசமும் அக்கறையும்,
அடுத்தவர் பெண் என்றால் மட்டும்
அடக்கி ஆளலாமா?
அவள் பெண் என்பதற்காக
அவமானம் செய்யலாமா?
அவள் தனிமை என்பதற்காக
அக்கிரமம் புரியலாமா?
அநியாயத்தின் எல்லை மீறி
அழ வைத்த அந்த நெஞ்சங்கள்,
அவள் கண்ணீரின் சாபத்தை
அறியாமல் போகுமா?
அதிர்ச்சியில் உள்ளம் உறைந்து,
அழுகையில் உயிர் துடிக்க,
அடுத்து என்னவோ என்ற
அச்சத்தில் கண்கள் கலங்க—
காதுமா 💔 காளிதாசன்❤️‍🩹
❤️ 2 more...
Srichitra Reader 3 days ago

Nice 

❤️ 1 more...
Kavi Natarajan Reader 23 hours ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top