Episode 2
“என்னத்த, இன்னும் காதுவைக் காணும்..? போன் பண்ணினாலும் எடுக்கல” என்று கயல்விழி கவலையுடன் சொல்ல,
“வந்துடுவா கயல். இந்த மேக் அப் போட்டா நேரமெடுக்கத்தானே செய்யுது” என்று விசாலாட்சி சமாதானம் செய்தார். சிறிது நேரத்தில் பரபரப்பாக வீட்டுக்குள் நுழைந்தான் ராஜீவ்.
“ம்மா, அக்கா வந்துட்டாளா?” என்றவனின் குரலில் டென்ஷன் கூடியிருந்தது.
“இல்லை ராஜா, ஏண்டா என்னாச்சு?” என்று விசாலாட்சியும் மகனின் குரலில் பதற்றமாகிக் கேட்க,
“அவ மால் போய்ட்டு உங்களுக்குப் பேசினாளா அண்ணி?” என்று ராஜீவ் கேட்க,
“பேசினா ராஜீவ், கொஞ்சம் டிரஸ் பர்சேஸ் பண்ணிட்டு அரைமணி நேரத்துல வரேன்னா, ஆனா அவ சொல்லி ஒன்றரை மணி நேரமாகுது. நானும் அத்தைக்கிட்ட அவளைக் காணுமேன்னுதான் பேசிட்டு இருந்தேன்” என்று கயல்விழி சொன்னாள்.
“ச்ச” என்றவன் தலையைப் பிடித்தபடி சோஃபாவில் உட்கார்ந்தான். அவர்களது லெதர் நிறுவனம், ‘ராயல்ஸ்’. அதில் அக்கா சொன்ன கணக்கு வழக்குகளைப் பார்க்கையில் அப்பா போன் செய்து,
“அக்கா வீட்ல இருக்காளான்னு நேர்ல போய் பார்த்துட்டு சொல்லு” என்றவரின் குரலில் என்னவோ அபாயம் இருப்பது போலவே தோன்ற, மறுபேச்சு பேசாமல் வீட்டிற்கு வந்தவனுக்கு அக்கா இல்லையென்பது பேரிடியாக இருந்தது. இதில் வரும் வழியெல்லாம் அக்காவிற்கு அழைத்துக் கொண்டே இருக்க, ‘ஸ்வீட்ச் ஆஃப்’ என்றே வர, ராஜீவுக்கு என்னவோ ஒரு ஆபத்து என்று தெரிந்து போனது.
ராஜீவின் பதற்றம் பார்த்து பெண்கள் இருவரும் பயம் கொள்ள, செல்வரத்தினமும், ராஜரத்தினமும் வீட்டிற்கு வந்து விட்டனர். வந்தவுடனே ராஜரத்னம் மனைவியிடம், “ஏன் விசாலி? எதுக்காக நீ பாப்பாவைத் தனியா அனுப்பின?” என்று சத்தம் போட்டார்.
“இப்ப என்னாச்சுன்னு சொல்லுங்க, எனக்குப் பயமா இருக்கு” என்று விசாலாட்சி கலக்கத்துடன் சொல்ல,
“ம்மா, நம்ம கனியைக் காணும்” என்று கத்தினான் செல்வரத்தினம்.
“என்ன காதுவைக் காணுமா? என்ன சொல்றீங்க செல்வா?” என்று கயல்விழி கணவனைப் பார்க்க,
“என் பொண்ணுக்கு என்னாச்சுங்க? செல்வாப்பா? என்னடா நடக்குது?” என்று விசாலாட்சி பதற,
“ம்மா, டென்ஷன் ஆகாத. அக்காவுக்கு ஒன்னுமில்ல, காது பத்திரமா வந்துடுவா” என்று ராஜீவ் அம்மாவை சோஃபாவில் அமரவைத்து ஆறுதல்படுத்தினான்.
ராஜீவ் அப்பாவிடம், “அப்பா, எப்படி உங்களுக்குக் காது காணும்னு தெரியும்?” என்று விசாரிக்க,
“எங்களுக்குத் தகவல் வந்துச்சு” என்றான் செல்வா.
“என்ன தகவல்? யார் சொன்னா?” என்று ராஜீவும், கயலும் கேட்க செல்வாவைக் கண்காட்டி அமர்த்திய ராஜரத்னம்,
“கனிம்மாவுக்குப் போன் செஞ்சேன், எடுக்கல ராஜீவ். அந்த மாலுக்கும் போய் பார்த்தான் செல்வா, அங்கேயும் காணும். அதான் உன்னைப் பார்க்க சொன்னேன்” என்றார் ராஜரத்னம்.
“ப்பா, காது சொல்லாம எல்லாம் எங்கேயும் போக மாட்டா, போன்ல சார்ஜ் இல்லைன்னாலும் மெசெஜ் போட்டுடுவா. என்னமோ பிரச்சனை அக்காவுக்கு. டைம் வேஸ்ட் பண்ணாம போலீஸ் போகலாம். நீங்க மினிஸ்டர்ட்ட பேசுங்க” என்றான் ராஜீவ்.
செல்வா உடனே, “அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் ராஜீவ், நீ வீட்டைப் பாரு. முதல்லயே நீ அவ கூட போயிருந்திருக்கலாம்” என்று தம்பியைக் குறை சொல்ல, அவனுக்குக் கோபம் வந்தது.
“நான் வரேன்னு சொன்னதுக்கு அவ வேண்டாம்னு சொல்லிட்டாளேண்ணா, நீங்க கூட அவ போனப்போ இருந்தீங்கதானே?” என்று அவனும் கத்த,
மகன்களின் சண்டையிலும் மகளைக் காணாத வருத்தத்திலும் விசாலாட்சி அழுகையில் கரைந்தார்.
“விசாலம், நீ முதல்ல அழறதை நிறுத்து. என் பொண்ணைத் தூக்கினவனை உயிரோட விடமாட்டேன் நான்” என்று ராஜரத்னம் ஆக்ரோஷத்துடன் பேச,
“மாமா, தூக்கிட்டான்னா என்ன சொல்றீங்க? நம்ம காதுவைக் கடத்திட்டாங்களா?” என்று கயல்விழி கேட்க,
ராஜீவ்வும், “என்ன சொல்றீங்கப்பா? காதுவைக் கடத்தினாங்களா? யாரு? உங்களுக்குத் தெரியுமா? சொல்லுங்க அவனைக் கொல்லாம விட மாட்டேன் நான்” என்று ஆவேசம் கொண்டு பேசினான்.
“ராஜா, நீ வீட்ல இரு. நாங்க பார்த்துக்கிறோம்” என்ற ராஜரத்னம் பெரிய மகனைப் பார்க்க, செல்வரத்னம் வெளியே சென்று ட்ரைவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு காரை எடுத்தான்.
மருமகளையும், சின்ன மகனையும் பார்த்த ராஜரத்னம், “அம்மாவைப் பார்த்துக்கோ ராஜா, இங்க பாரும்மா கயல், நம்ம வீட்டாளுங்க தவிர வேற யாருக்கும் வெளியே இந்த விஷயம் போக கூடாது. மாப்பிள்ளை வீட்ல இருந்து கூப்பிட்டாங்கன்னா அவ தூங்குறான்னு சொல்லு, இல்லையா உங்க வீட்ல இருக்கோம்னு சொல்லி சமாளிச்சிடும்மா” என்றவர் மனைவியிடம்,
“விசாலி, நீ அழுது பயந்துக்காத. வரும்போது நான் நம்ம பொண்ணோடதான் வருவேன், என்னை நம்பு” என்று வாக்குத் தந்தார்.
காரில் தந்தையும் மகனும் மட்டுமே.
“அப்பா, இந்த கனிக்கு அறிவே இல்லை. அந்த காளிப்பய கூப்பிட்டு பேசினா இவ பாட்டுக்குப் போய்டுவாளா? இப்போ பாருங்க எவ்வளவு பிரச்சனை? அவளை வச்சிட்டு நம்மை கார்னர் பண்றான்” என்ற செல்வாவின் குரலில் எரிச்சல் மிகுந்திருக்க,
“அவன் என்ன சொல்லி பாப்பாவைக் கூப்பிட்டானோ யாருக்குத் தெரியும்? என் பொண்ணு ஒன்னும் அப்படி முட்டாள்த்தனமா எல்லாம் செய்ய மாட்டா. இந்த தாஸ்தான் என்னவோ கேம் விளையாடியிருப்பான்” என்று ராஜரத்னம் கவலையாகச் சொன்னார்.
“அவன் யாருப்பா? அவனுக்குப் பயந்து பேச்சுவார்த்தைக்குப் போறேன்றீங்க. நம்ம கட்சிதான் ஆட்சியில இருக்கு, நம்ம நினைச்சா அவனை என்னவும் செய்யலாம்” என்று செல்வா கோபத்துடன் பேச,
“நம்ம கட்சி ஆட்சியில இருக்கு, நான் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. இது எதுவும் தெரியாம நம்ம வீட்டுப்பொண்ணைத் தூக்க அந்த தாஸ் ஒன்னும் முட்டாள் இல்லை செல்வா, எல்லாம் தெரிஞ்சும் செஞ்சு இருக்கான்னா எல்லாத்துக்கும் துணிஞ்சிருக்கான் அவன். என்ன நடந்தாலும் நம்ம வீட்டு மகாலஷ்மி எந்த பிரச்சனையுமில்லாம வீடு வரணும் அதான் முக்கியம்” என்றார் அழுத்தமாக.
“அப்பா, இப்படி நம்ம போய் பேசுறதைவிட ஒன்னு போலீஸை அனுப்பி அவன் இடத்துல எல்லாம் ரெய்ட் நடத்த சொல்லலாம், இல்லையா நம்ம சேகரை அனுப்பி அவனைப் போட சொல்லலாம்” என்றான் செல்வா ஆத்திரமாக.
பின்னே எத்தனை எள்ளலாய்ப் பேசினான் காளிதாஸன் அவனிடம்.
“ராஜரத்னம் உங்க பொண்ணு என் கஸ்டடியில இருக்காங்க, உங்க பொண்ணு வேணும்னா நான் சொல்ற இடத்துக்கு சொல்ற டைமுக்கு வரணும் நீங்க” என்றவன் போனை வைத்தும் விட்டான். கார்த்தியாயினியை ஒரு ரூமில் வைத்து வீடியோ எடுத்து அனுப்பியிருந்தான்.
கொஞ்சமும் பயமோ பதற்றமோ இல்லை அவன் குரலில். அவ்வளவு நிதானமாய்ப் பேச இங்கே அப்பாவிற்கும் மகனுக்கும்தான் பயம் வந்தது. அதே பதற்றத்துடன் தம்பியை அழைத்து தங்கை வந்து விட்டாளா என்று பார்க்க சொல்ல, அவள் வரவில்லை என்று தகவல் வரவும் அவள் சென்ற மாலின் சிசிடிவியில் பார்க்க, காளிதாஸனுடன் பேசியபடி வெளியே சென்ற தங்கைதான் தெரிந்தாள். இதனைப் பார்த்துவிட்டு மீண்டும் காளிதாஸன் அழைத்த எண்ணிற்கு அழைத்தான் செல்வரத்னம்.
“இங்க பாரு தாஸ், என் தங்கச்சியைக் கடத்திட்டு அவ்வளவு ஈசியா தப்பிச்சிடலாம் நினைச்சிடாத, சிசிடிவியில நீயும் என் தங்கையும் பேசுறது நல்லாத் தெரியுது. உன்னோட பேசிட்டு அப்புறம்தான் என் தங்கை காணும்னு கம்ப்ளயண்ட் பண்ணினா, உன்னோட அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிடும். புரிஞ்சிக்கோ, மரியாதையா என் தங்கச்சியை அனுப்பிவை” என்று செல்வரத்னம் மிரட்டலாய்ப் பேசினான்.
“யாரோட அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்குதுன்னு இன்னிக்குத் தெரிஞ்சிடும் செல்வா, சிசிடிவியில தெரிவோம்னு தெரிஞ்சே உன் தங்கச்சியைத் தூக்கியிருக்கேன்னா என்னோட கட்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கோ மேன். எனக்கு நேரா மோதிதான் பழக்கம்” என்று காளிதாஸன் சிரிப்புடன் சொல்ல,
“அசிங்கமா பொம்பளப்புள்ளையைக் கடத்திட்டு வெக்கமே இல்லாம பேசுறியாடா?” என்று செல்வா எகிற,
“மரியாதை செல்வா.. மரியாதை! இந்த வாடா போடா எல்லாம் பேசுற அளவு நம்ம நெருக்கமில்ல. அண்ட் ஐ டோண்ட் லைக் இட்” என்றான் எரிச்சலாக.
“ஏய்! போலிஸ்ட்ட சொன்னா உன்னோட மானம், மரியாதை எல்லாம் போயிடும், பரவாயில்லையா? ஒழுங்கா எங்க வீட்டுப்பொண்ணை விட்டுடு” என்று செல்வா கத்த,
“செல்வரத்னம் ஸார், நீங்க ஆளுங்கட்சியா இருக்கலாம், உன் அப்பா எம்.எல்.ஏவா இருக்கலாம், நீ கட்சியில பெரிய பிஸ்தாவா இருக்கலாம். இது எல்லாம் தெரிஞ்சும் நான் உன் தங்கச்சியைத் தூக்கியிருக்கேன்னா காரணம் இல்லாமையா? இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணி வரைக்குத்தான் டைம் உங்களுக்கு. அதுக்குள்ள உங்க தங்கச்சியை அழைச்சிட்டுப் போயிடு, நைட்டெல்லாம் அடுத்த வீட்டு பொண்ணை வச்சு பாதுகாக்க முடியாது, பிகாஸ் நான் ஒரு ஜென்டில்மேன்”
போன் ஸ்பீக்கரில் இருக்க கேட்டிருந்த ராஜரத்னம், “ஜெண்டில்மேன் செய்ற வேலையாடா இது? என் பொண்ணுக்கு எதாவது ஆச்சு உன்னை உயிரோட விடமாட்டேன் நான்” என்று அவர் கர்ஜிக்க, அதனைக் கேட்ட காளிதாஸனின் ரத்தம் கொதித்தது. என்ன மனிதர்கள் இவர்கள் என்று.
“அவ்வளவு பாசம் இருந்தா என்னை வந்து பாருங்க ராஜரத்னம். உங்க பொண்ணு மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிறேன் நானும்” என்றான் எகத்தாளமாக. அதை நினைத்து செல்வா கொதிக்க, ராஜரத்னம் நிதானமாய் இருந்தார்.
“அவனைக் கொன்னும் நம்ம பொண்ணு எங்கன்னு தெரியலன்னா என்ன செய்வ செல்வா? நம்ம ஆளுங்கட்சியா இருக்கலாம். ஆனா சென்ட்ரல் மினிஸ்டர் மகாதேவன் அவனுக்கு நெருக்கம், கூடவே அவங்க கட்சியோட கூட்டணியும் கூட. பாரு எவ்வளவு தைரியமா மகாதேவன் கெஸ்ட் ஹவுஸுக்கே கூப்பிடுறான். இல்லைன்னா இவ்வளவு தைரியமா அவன் இறங்கியிருக்க மாட்டான்”
“அவன் அழகிரியோட பையன், நிச்சயம் நம்ம பொண்ணுகிட்ட தப்பா நடக்க மாட்டான். அவன் கேட்கிறது செஞ்சுக்கொடுத்து சீக்கிரம் என் பொண்ணை அழைச்சிட்டு வந்துடனும்” என்றார் முடிவாக.
“அவன் கொடுத்த டைமுக்கு இன்னும் நாலு மணி நேரம் இருக்கே, அதுக்குள்ள நம்ம ஆளுங்களை அனுப்பி தேடினா கனி கிடைச்சிடுவாப்பா, நம்ம கமிஷனர்கிட்ட சொல்லி அன் அபிஷியலா தேட சொல்லுவோம். ஆட்சி, அதிகாரம் எல்லாம் கையில் இருந்தும் அவனுக்குப் பயப்படுறதா?” என்று செல்வா யோசனை சொல்ல,
“இத்தனையும் இருந்தும் அவன் பயப்படலன்னா என்னவோ அவன்கிட்ட இருக்கு செல்வா. அதைவிட என் பொண்ணு, என் மகாலஷ்மி எனக்கு முக்கியம். அவன் நல்லவன்றதுக்காக நம்ம வீட்டுப் பொண்ணை விட்டு வைக்க சொல்றியா, அதுவும் கடத்தல் வரைக்கும் யோசிக்காம இறங்கியிருக்கான்” என்ற ராஜரத்னத்திற்கு என்னவோ பெரிதாக வரப்போகிறது என்று மனம் சொன்னது.
அப்பா மகன் இருவரும் காளிதாஸன் சொன்னது போல், செங்கல்பட்டு தாண்டி இருந்த மகாதேவனின் பண்ணை வீட்டிற்கு சென்றனர். அங்கே அந்த பண்ணை வீட்டில் வெளியே எப்போது அண்ணனும் அப்பாவும் வருவார்கள் என்று கார்த்தி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள்.
ஆள் வரும் சத்தம் கேட்டு திரும்ப புன்னகையுடன் நின்றிருந்தான் காளிதாஸன்.
“லஞ்ச் டைம் ஆகிடுச்சு கார்த்தி மேடம், சாப்பாடு சொல்லவா இல்லை ஜூஸ்?” என்று கேட்க,
“எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்றாள் அவள். மனமோ ஆண்டவனிடம் இடைவிடாது வேண்டுதல் வைத்தது.
“சாப்பாட்டுல எதாவது கலந்துடுவேன் நினைக்கிறீங்களா? விஷமே கொடுத்தாலும் சாப்பிடுறதுதான் தமிழர் நாகரிகம், நஞ்சும் உண்பர் நனி நாகரீகர் கேள்விப்பட்டதில்லையோ? அப்படி செய்றவனா இருந்தா ஒன்னும் சொல்லாம உங்களை வர வழியில வைச்சே கிட் நாப் செஞ்சிருக்க முடியும்” என்றான் சுவரில் சாய்ந்தபடி.
“இப்பவும் நீங்க செஞ்சது கடத்தல்தான்” என்றாள் அழுத்தமாக, கண்கள் குற்றம் சாட்டின.
“நாட் அட் ஆல்! இவ்வளவு டீசண்டா யாருமே கிட் நாப் செஞ்சிருக்க மாட்டாங்க கார்த்தி மேடம், உங்கப்பாவுக்கு வேணும்னா இது கடத்தலா இருக்கலாம், உங்களுக்குத் தெரியுமே நான் உங்களை அழைச்சிட்டுதான் வந்தேன்னு” என்றான்.
அழைத்துதான் வந்தான். ஆனாலும்? என்ற இடறல் பெண்ணிடம்.
அவளின் பார்வை ஜன்னல் தாண்டி செல்வதைக் கண்டவன்,”யார் மேலயும் ரொம்ப நம்பிக்கை வைக்காதீங்க, உடைஞ்சிட்டா தாங்க மாட்டீங்க” என்றான்.
“அதை நீங்க சொல்லத்தேவையில்ல, அப்பா வரட்டும். அப்புறம் உங்களைப் பேசிக்கிறேன் நான். நம்பிக்கையில கொஞ்சம் கம்மின்னு எல்லாம் கிடையாது” என்றாள் கோபமாக.
“கரெக்ட்! ஆனா அதை தகுதியானவங்க மேல வைக்கணும்”
“அவங்க தகுதியானவங்கன்னு நான் ப்ரூவ் பண்றேன்” என்றாள் கார்த்தி உறுதியுடன்.
கார்த்தியின் உறுதி காளிதாஸனை உறுத்தியது.
“அதர்வைஸ்?” என்று காளிதாஸன் கேட்க,
“அப்படி ஒரு ஆப்ஷனே இல்லை. நம்பிக்கைன்றது சந்தேகமில்லாம இருக்கிறதுதான்” என்றாள் நம்பிக்கையாக.
இவளின் நம்பிக்கை உடையும் போது இந்த பெண் தாங்குவாளா என்று அவள் மீது இரக்கம் வந்தது.
*******************************
Read and Share your thoughts friendss.
கதையின் பதிவுகள் தினமும் காலை பதினொரு மணிக்குப் பதியப்படும்,
✅ End of Episode 2
Nice
அப்பா மேலயும் அண்ண மேலயும் கார்த்திக்கு ரொம்ப நம்பிக்கை
நம்பிய மங்கைக்கு
Nice ud sis