Episode 5
அங்கு கார்த்தி மயங்கியிருக்க, இன்னும் அவளின் பெற்றவனும் உடன்பிறந்தவனும் காளிதாசனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்
“ஷ்! சத்தம் கூடாது சொன்னேன் நான்” என்று கடுப்பாய் சொன்னவன்,
“உங்க பொண்ணு வரணும்னா முதல்ல பூஜா வீட்டு டாக்குமெண்ட்ஸ் வேணும் எனக்கு. இனிமே, அந்த பொண்ணை எந்த வகையிலும் இவன் டார்ச்சர் செய்யக் கூடாது. மீறி செஞ்சா கடத்தல்ல இறங்க தெரிஞ்ச எனக்கு கொலை செய்ய நேரமாகாது. உங்களுக்குத்தான் கூலிப்படை எல்லாம் தெரியுமா?” என்று காளிதாஸன் பேச, செல்வா துள்ளினான்.
“டேய்! என்ன பெரிய இவன் மாதிரி பேசுற? நான் நினைச்சா லாரி ஏத்தி உன்னை ஒரே செகண்ட்ல காலி பண்ணிடுவேன் டா. சும்மா மிரட்டிட்டு இருக்காத” என்றான் செல்வா.
“அதே லாரி நானும் ஏத்துவேன்” என்று பல்லைக் கடித்த காளிதாஸ், ராஜரத்னத்தைப் பார்த்து,
“இவன் இப்படி பேசினா செத்தாலும் உங்க பொண்ணு இருக்க இடம் சொல்ல மாட்டேன்” என்றான். குரலில் ஒரு தீவிரம்! முன்பு எப்படியோ அழகிரியின் மகன் நேர்வழி மட்டுமே செல்வான் என்று நம்பியிருந்த ரத்னம் இப்போது பயந்தார்.
எதிரி மாறும் போது எதிர்க்கும் வழிகளையும் எதிர்க்கொள்ளும் வழிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வெற்றி கிட்டாது என்பதை அறிந்தவன் காளிதாஸன். அது போலவே அவன் பெண்ணைக் கடத்துவது வரை இறங்கியிருக்க, செத்தாலும் இவன் சொல்ல மாட்டான் என்றே தோன்றியது. அரசியல்வாதி காணாமல் போய் அப்பாவாய் யோசித்தார் ராஜரத்னம்.
“செல்வா, வாயை மூடு. இல்லை வெளியே போடா” என்றார் மகனிடம்.
“நீ சொன்னதெல்லாம் செய்றேன். அந்த பொண்ணு இனி பணம் கூட கட்ட வேண்டாம், வீட்டு பத்திரம் கொடுத்திடு செல்வா” என்று மகனிடம் சொல்ல செல்வா இன்னும் கோபத்தில் இருந்தான்.
பூஜாவை எப்படியும் மிரட்டித் தன் வழிக்குக் கொண்டு வந்திடலாம் என்று நினைத்திருந்தான்.
சிலருக்குப் பணம்.! சிலருக்குப் பயம்!! பயம் காட்டும் பெண்களின் பின்புலம் எல்லாம் ஆராய்ந்து விடுவான். எங்கேயும் சிக்கியதில்லை. ஆனால், காலம் ஒன்று இருக்கிறதல்லவா? அது காளிதாஸன் வடிவில் சிக்க வைத்தது. இப்போதும் ‘எப்படி இந்த பய இதுல வந்தான்?’ என்ற யோசனையே.
காளிதாஸன் தனது வலக்கையில் இருந்த வாட்ச் பார்த்து விட்டு, “ஓகே, மணி இப்போ மூணு, ஆறு மணிக்கு எனக்கு டாக்குமெண்ட்ஸ் இருக்கணும். எல்லாமே இருக்கணும், எந்த பொண்ணையும் இனி இவன் இப்படி செய்யக் கூடாது ராஜரத்னம்” என்றான் மிரட்டலாக.
காளிதாஸனை நெருங்கிய ராஜரத்னம், “என் பொண்ணுக்காகத்தான் பொறுமையாப் போறேன், அவளுக்கு எதாவதுன்னா பதவியாவது மண்ணாவதுன்னு உன்னைக் கொன்னுடுவேன். எனக்கு என் பொண்ணைப் பார்க்கணும்” என்றார்.
“முடியாது!” என்று திண்ணமாய் மறுத்தவன்,
“ஆறு மணிக்கு வாங்க, உங்க பொண்ணு பத்திரமா இருப்பா. நான் அழகிரியோட மகன் அதை ஞாபகத்துல வைங்க. ஆனா, வேற எதாவது செய்யணும்னு நினைச்சா நானும் அதுக்கேத்த மாதிரி மாறிடுவேன்” என்றான் அழுத்தமாய்.
வாலியை அனுப்பி கார்த்தியைப் பார்க்க சொல்ல, அவள் மயங்கிய நிலைக் கண்டு பயந்த வாலி கத்த, மாடியறைக்கு ஓடினான் காளிதாசன்.
காளிதாஸ் கார்த்தியை நெருங்கி, அவளின் முகத்தை மடியில் வைத்து, “கார்த்தி! எழுந்திருங்க, ஒன்னுமில்ல. எழுந்திருங்க” என்று கன்னத்தை மெல்ல தட்ட அவளிடம் அசைவே இல்லை. தண்ணீரைத் தெளித்துக் கன்னத்தில் தட்ட, அவள் விழிக்கவே இல்லை.
“அண்ணா? ஏன் இப்படி?” என்று வாலி டென்ஷனாகப் பார்க்க, அவளை மெல்லத் தூக்கி அந்த சோஃபாவில் படுக்க வைத்தவன்,
“நித்தி! உடனே நீ உங்க பண்ணை விட்டுக்கு வா” என்று அவனின் தோழியை அழைத்தான். மினிஸ்டர் மகாதேவனின் மகள் நித்திலா.
“ஹே! பன்னியப்பயலே! பேஷண்ட் பார்த்திட்டு இருக்கேன் டா. என்னை எங்க வர சொல்ற, பண்ணை வீட்டுக்கு?” என்று கடுப்பானாள் நித்திலா.
“நித்தி! இங்க பேஷண்ட் பார்க்கத்தான் கூப்பிடுறேன், பீ சீரியஸ். யார்கிட்டவும் தண்டோரா போடாம வந்து சேரும்மா, ப்ளீஸ்” என்றவன் பின் குரலைத் தணித்து,
“ஒருத்தவங்க மயங்கிட்டாங்க, அதிர்ச்சின்னு நினைக்கிறேன். அதுக்கு என்ன செய்யணுமோ பார்த்து ப்ரீபேர்டா வா” என்றான்.
“யார் அவங்க, என்ன ஏஜ்? சுகர், பிபி எதாவது?” என்று நித்திலாவும் டாக்டராய் பேச,
“ஏஜ்ம் ட்வெண்டி செவன், சுகர் பிபி தெரியலையே” என்றான்.
“உனக்கு எவன் அந்த வயசுல ப்ரண்ட்?” என்று நித்திலா யோசிக்க,
“ஜாதகம் கொடுத்தாதான் வருவியா நீ?” என்று கடுப்பாய்ப் பேசினான் காளிதாஸன். என்னவோ கார்த்தியின் இந்த நிலை ஒரு பதற்றம் கொடுத்தது. தன்னால்தானோ என்ற உணர்வு.
“டேய் லபக்கு தாஸ், பேஷண்ட் ஆணா, பெண்ணா? ஏஜ்லாம் தெரியாம என்னன்னு நான் ப்ரீபேர்டா வர?” என்று நித்திலா கத்த,
“பொண்ணுதான்” என்றவன் அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி சீக்கிரம் வர சொன்னான்.
இவன் அங்கிருக்கும் திவானில் உட்கார்ந்துகொள்ள, வாலி அவனிடம், “ண்ணா, இப்படி செஞ்சிருக்க கூடாதோ தோணுது” என்றிட,
“நம்ம என்ன செய்றது வாலி? அவங்க வீட்டுப் பொண்ணுனாலும் நம்ம சக மனுஷியா நினைக்கிறோம். ஆனா அவனுங்க? பூஜா மாதிரி தற்கொலை முயற்சி செஞ்சு யாராவது இறந்திருந்தா கூட நமக்குத் தெரியாதே? வேற யாரை அவங்க வீட்ல தூக்க சொல்ற? அந்த செல்வா பொறுக்கியவா?இல்லை, அவன் மகன் அந்த ஸ்கூல் படிக்கிற பையனா? ராஜரத்னம் பொண்ணுன்றதால போலீஸ் போகல, இல்லைனா நம்ம இப்போ இப்படி இங்க இருக்க மாட்டோம். இது நமக்கு பாதுகாப்பும் கூட!” என்றான் அவனின் குற்றவுணர்ச்சி மறைந்து.
“ஆனாலும், இவங்க?” என்று வாலி இழுக்க,
“இதுதான் நம்ம… வாலி. எதிரி வீட்டுப்பொண்ணா இருந்தாலும் இரக்கப்படுறோம். ஆனா, ஒன்னு தெரிஞ்சிக்கோ வாலி வாழ்க்கையில வழிமுறையை விட நெறிமுறை முக்கியம். நம்ம செய்ற செயல் நல்லதுன்னா நன்மை தரும்னா இது மாதிரி போறது தப்பில்லை. கூடவே அவங்களுக்கு எல்லாம் சொன்னோம் தானே?” என்றான் தெளிவாக.
“ஒரு வாரமா ட்ரை பண்ணினோம். எவ்வளவு அலட்சியப்படுத்தினான்? இன்னிக்கு இவங்கனதும் எப்படி அப்பனும், மகனும் அலறிட்டு வரானுங்க பார்த்தியா?” என்றவன் மயங்கி இருந்த கார்த்தியைப் பார்த்தபடி,
“இவங்க ரொம்ப நம்பினாங்க. ஸோ, அந்த அதிர்ச்சியா இருக்கும். இவங்க மேல தப்பில்லை. இவனுங்க நடிப்பு அப்படி, இவங்களுக்குக் கஷ்டமா இருக்கும் தெரியும், மயக்கம் வர அளவு நானே நினைக்கல” என்ற காளிதாஸுக்கு மகாதேவனிடம் இருந்து அழைப்பு.
“சொல்லுங்க மாமா” என்று இவன் உற்சாகமாய் பேச,
“மாப்ள! எங்க இருக்க நீ?” என்றார் ஆராயும் வகையில்.
“பண்ணை வீட்ல” என்றதும்,
“யார் அந்த பொண்ணு?” என்று கேட்க, ‘நித்தி’ என்று பல்லைக் கடித்தான்.
“அவளைப் பேசாத, நீ பிரச்சனையை இழுத்து விட்டுக்க கூடாதுன்னு சொன்னா அவ. என்ன விஷயம்?” என்று கேட்க, மறைக்காமல் எல்லாவற்றையும் சுருக்கமாய் சொல்ல,
“நான் எதாவது பண்ணியிருப்பேன்ல” என்றார்.
“நீங்க என்ன செஞ்சாலும் அவங்க பொண்ணைத் தூக்கினா வர பயம் இருக்காது. இங்க இருக்க போலிஸ் உங்க பேச்சுக் கேட்பாங்களா?” என்றவன், “உங்க பண்ணை வீட்ல நடக்கறதால உங்க பதவிக்குப் பிரச்சனை வராது மாமா” என்று சொல்ல,
“டேய்! டேய்! உனக்காக யோசிச்சுப் பேசினா என்னை சொல்லுவியா? பதவியை விட நீ முக்கியம்டா” என்றார் மகாதேவன். அவர் அறிவுரை சொல்லி வைக்க, நித்திலா அங்கு வந்தாள்.
“முதல்ல, அவங்களைப் பாரு” என்றவன்,
“டாக்டர் வேலையை மட்டும் செய் நித்தி” என்றான் அதட்டலாக.
“அவ செய்றது இருக்கட்டும், நீ என்ன செய்ற?” என்று கேட்டபடி பின்னால் வந்த சிவகாமியைப் பார்த்து வாலி, காளிதாஸன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
“அத்தை என்னோட ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க. உனக்கு சர்ப்ரைஸ் பண்றேன் சொல்லி என்னோடவே வந்துட்டாங்க. நான் என்ன செய்ய?” என்றாள் நித்தி. பேசினாலும் கார்த்தியைக் கவனிக்க மறக்கவில்லை.
“ஏன் கண்ணா! யார் இந்த பொண்ணு?” என்றதற்கு மீண்டும் காளிதாசன் விளக்கம் சொல்ல, அவனைப் பளாரென்று கன்னத்தில் அறை விட்டார் அவனின் அன்னை சிவகாமி.
“நீ இப்படி செஞ்சிருக்க கூடாது கண்ணா” என்று மகனைப் பார்த்துக் கடுமையான கோபத்துடன் சொல்ல, காளிதாஸன் அழுத்தமாய் நின்றான்.
✅ End of Episode 5
Very nice
பாவம் எங்க ஹீரோ அம்ம
தவறுக்கு தகுந்த போல் தண்டனை தர