Episode 7
“கார்த்தி மேடம்!”
“கார்த்தி!” என்று அவன் அழைக்க, எதிலும் கவனம் பதியவில்லை. முட்டியில் முகம் புதைத்து மௌனமாய் ஒரு அழுகை.
இன்று தந்தையாலும், தமையனாலும் கூனிக்குறுகிப் போனாள், அவர்களின் செயல் அப்படியொரு அருவெறுப்பைத் தர, எல்லாவற்றையும் போட்டுடைக்கும் வேகம். தன்னையே அழிக்கும் அளவு தணல் ஒன்று கனன்றது!
“கார்த்தியாயினி!” என்று அவன் இன்னும் சத்தமாய் அழைக்க, அவனைப் பார்த்தவளின் விழியில் கண்ணீர்த் தேங்கி நிற்க,
“ஏன் அழறீங்க?” என்றதற்குப் பாவையிடம் பதில் இல்லை.
“நான் உங்களைப் பத்திரமா உங்கப்பாவோட அனுப்பிடுவேன், ட்ரஸ்ட் மீ!” என்றான்.
“இல்லை, வேண்டாம்!” என்று கத்தினாள். என்னவோ காலையில் தான் கண்ட பெண் இல்லை இவள் என்று மனம் சொன்னது காளிதாஸனுக்கு. அப்படித்தான் இருந்தாள் கார்த்தியும்.
“ஓகே! ரிலாக்ஸ். என்ன செய்யணும் சொல்லுங்க” என்றான் தணிவாகவே.
“என்னை நீங்களே வீட்ல விட்டுடுங்க. அவங்களோட போக மாட்டேன்” என்றாள்.
“சரி, நானே விட்டுடுறேன்” என்றவன்,
“எப்படியும் வீட்டுக்குப் போனா, அவங்களை நீங்கப் பார்க்கணும் கார்த்தி” என்றான்.
அவன் சொன்ன நிதர்சனம் புரிய, அய்யோ அம்மாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் தாங்கவே மாட்டார்கள் என்று நினைக்க நினைக்க அழுகை வெடித்தது. அதனையும் விட அண்ணி?!
கயல்விழி, கார்த்திக்கு சகோதரி இல்லாத குறைத் தீர்க்க வந்தவள். கணவனை அதிகமாய் நம்புவாளே? என்று அம்மா அண்ணியைப் பற்றி எண்ண எண்ண, அந்த எண்ணம் அவளைத் தின்னத் தொடங்க, தலையே சுற்றுவது போல் இருந்தது. தலையை அவள் பிடித்துக் கொள்ள, கீழே நித்திலாவையும், சிவகாமியையும் வழியனுப்ப சென்றிருந்த வாலியை அழைத்தவன் ஜூஸ் எடுத்து வர சொன்னான்.
கார்த்தி மறுக்க, “எனக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா குடிங்க இதை. அப்பா அண்ணா சரியில்லன்னு நினைச்சா நாட்டுல எத்தனையோ பேர் அப்படி இருக்காங்க. அதுக்கெல்லாம் நம்மை தண்டிச்சிக்க முடியாது. உங்க வீட்டுக்குப் போகற வரைக்கும் நீங்க மயங்காம இருக்கணும். அதுக்காச்சும் குடிங்க” என்றவன் அவனும் அவள் முன்னே ஜூஸை ஊற்றி குடித்தான்.
கார்த்திக்கு உணவெல்லாம் நினைவிலேயே இல்லை. உயிர் மட்டும் இருக்க, உயிர்ப்பற்ற ஒரு நிலை. ஆனால், காளிதாஸனின் சொல்லுக்காக ஜூசைப் பருகினாள்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, எதையும் யோசிக்காதீங்க” என்று சொல்லி காளிதாஸன் வெளியேறி விட்டான்.
செல்வா, அவன் அப்பாவைக் கத்திக் கொண்டிருந்தான்.
“இங்க பாருங்க கண்டவன் மிரட்டுறான்னு எல்லாம் என்னால எதையும் செய்ய முடியாது” என்று.
“டேய்! அவன் என் பொண்ணை வச்சு ஆட்டங்காட்டுறான். நீயும் என்னை வெறுப்பேத்திப் பார்க்குறியா? கூத்தடிக்கிறவன் ஏன் டா குடும்ப பொண்ணுங்களைத் தொடுற? பணமா இல்லை, நீ செஞ்சு வச்ச வேலையாலதான் இவ்வளவும். உன்னோட அவசரப்புத்தியால வந்த வினை. என் பொண்ணு எங்கிட்ட வரட்டும், அவங்க அப்பன் போன இடத்துக்கே அவனை அனுப்பி வைக்கிறேன்” என்று சபதமெடுத்தான் ராஜரத்னம்.
காளிதாஸன் சொன்ன நேரத்திற்கெல்லாம் அப்பா, மகன் இருவரும் மீண்டும் கெஸ்ட் அவுஸ் சென்று, அவன் கேட்டது அனைத்தையும் ஒப்படைத்தனர். பூஜா அவர்களிடம் வாங்கியிருந்த லோன் பத்திரம் கிழித்துப் போடப்பட, ஏற்கெனவே வாலி தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் பூஜா லோனை செலுத்தியதாகவும், வீடு அவர்களுக்கே உரியது என்றும் செல்வாவிடம் கையெழுத்து வாங்கினான்.
செல்வாவின் அலைப்பேசி, லேப்டாப் என்று எல்லாவற்றையும் எடுத்து வர சொல்லியிருக்க, எல்லா குப்பைகளையும் அழித்து, மீண்டும் அதனை ரெகவரி செய்ய முடியாதபடி செய்தான் வாலி.
“இது இல்லாம நீ வேற போன் வச்சிருக்கன்னு எனக்குத் தெரியும் செல்வா. ஐ அம் not fool, ஆனா இதுதான் கடைசி!” என்று செல்வரத்னத்தை காளிதாஸ் எச்சரிக்க,
“எல்லாம் செஞ்சாச்சு, என் பொண்ணை அனுப்பு” என்று ராஜரத்னம் கேட்க,
“நீங்க வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி அவங்க அங்க இருப்பாங்க” என்றான்.
“அப்பா, பாருங்க இவன் கேம் விளையாடுறான். இங்க எல்லா எவிடன்ஸ் அழிச்சிட்டு கார்த்தியை வச்சு இன்னும் நம்மைப் பழிவாங்கப் பார்க்கிறான்.” என்று செல்வா கத்த,
“ஸ்டாப் இட் you bloody scoundrel! உன் தங்கச்சி உனக்கு முன்னாடி இருப்பாங்க. தட்ஸ் இட்! அப்படி இல்லைன்னா என்னை வந்து கேளு. நான் என் வீட்லதான் இருப்பேன்” என்றான் காளிதாஸன் கணீரென்ற கட்டளைக் குரலில்.
“செல்வா, அவன் சொல்றான் தானே? வா போகலாம். இல்லைன்னா, இருக்கு இவனுக்கு” என்று காளிதாஸை குரோதத்துடன் பார்த்தபடி ராஜரத்னம் சென்றார்.
அவர்கள் போகவும், அவனே அவளை அழைத்துச் சென்று வீடு இருக்கும் தெருவில் விட்டான். வேகமாகவே சென்றான், அவர்களுக்கு முன் போக வேண்டும் என்று.
இறங்கும் முன் கார்த்தியிடம் அவளின் கார் சாவி கொடுத்தவன், “உங்க கார் கீ, அதுல உங்க போன் இருக்கு. அப்புறம் எடுத்துக்கோங்க” என்ற காளிதாஸ்,
“எனக்குப் புரியுது, இது ரொம்ப பெரிய ஷாக். ஆனா, உங்க வீட்ல உள்ளவங்களை நீங்கதான் பார்க்கணும். இப்படி இருந்தா பயந்துடுவாங்க” என்றவனுக்கு அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை.
“தேங்க்ஸ், என்னை நம்பி வந்ததுக்கு. அண்ட் டேக் கேர்” என்று சொல்லி அவன் போய் விட, கார்த்திக்கு அந்த பத்தடி தூரம் கடப்பதற்குள் உயிர் போனது. வாசலில் அவளின் அம்மா இருக்க, அவரைப் பார்த்தவள் கதறி விட்டாள்.
கடத்தியிருப்பதால் மகள் பயந்து விட்டாள் என்று விசாலாட்சி நினைத்தவர், அவருக்குமே மகளைக் காணவில்லை என்ற பதற்றம் நீங்க கண்ணீர் பெருக, கயல்விழிதான் பேசினாள்.
“ராஜீவ்! முதல்ல மாமாவுக்குப் போன் செஞ்சு காது வந்துட்டா சொல்லு” என்றாள்.
அவளின் அழுகைக் கண்டு பயந்துதான் போனார்கள் வீட்டினர். அதுவும் பெண்ணைக் கடத்தியிருக்க கற்பனைகள் தாறுமாறாய் ஓட,
கயல்விழியும் கூட பயத்துடன் “காது, என்னாச்சுடா? உங்கிட்ட எதாவது தப்பா நடந்தாங்களா?” என்று அவளும் தயங்கி தயங்கிக் கேட்க அப்பாவிடம் பேசிவிட்டு வந்த ராஜீவ் காதில் இது விழ,
“அக்கா! பயப்படாத, எதுவானாலும் சொல்லு. யார் உன்னைக் கடத்தினா? அவனை உயிரோட விட மாட்டேன்” என்று சத்தம் போட அதில் சுயம் பெற்றாள் கார்த்தி.
அழுகையை அடக்கியவளுக்கு அடக்க முடியாத ஒரு ஆத்திரம். ரௌத்திரம்! இருந்தும் அதை மனத்தில் வைத்தவள்,
“ம்மா, அது உங்களைப் பார்த்த சந்தோஷத்துல அழுதுட்டேன்” என்றவளை ராஜீவ் சந்தேகமாய்ப் பார்த்தான்.
“காது, உண்மையை சொல்லு” என்று அவன் அதட்ட, உண்மையை சொன்னால் தாங்குவீர்களா என்று நினைத்த நொடி, ராஜீவும் அப்படியோ என்று மின்னலாய்த் தாக்கிய எண்ணத்தில் இடிந்து போனாள் அந்த வீட்டின் இளவரசி.
தம்பி அப்படி இல்லை என்று நினைத்தாலும் கூட மொத்தமாய் நம்பிக்கையற்ற அந்த நிமிடத்தில் வீட்டின் ஆண்களை நம்பவே தோன்றவில்லை.
“என்ன உண்மை? ஏதோ பணம் வேணும் கடத்தினாங்க. அப்பா கொடுத்துட்டார் போல, என்னை விட்டுட்டாங்க” என்று தம்பியிடம் எரிந்து விழுந்தாள்.
“ம்மா, என்னைக் கொஞ்சம் தனியா விடு” என்று அம்மாவிடமும் கத்த, அவர் கலக்கமாய் மகளைப் பார்க்க கயல்விழியைப் பார்த்தவள்,
“அண்ணி! எனக்கு ஒன்னுமில்ல. எப்படி போனேன்னு அப்படியேதான் வந்திருக்கேன். ஒரு பயம், அவ்வளவுதான். அதான் அழுதுட்டேன், எனக்கு ரெஸ்ட் வேணும். பணம் மட்டும்தான் அவங்க மோடீவ், நான் இல்லை. கண்டபடி நினைச்சு என்னை டென்ஷன் செய்யாம கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க” என்றவள் அறைக்குள் போய் அடைந்து கொண்டாள்.
கார்த்தி வீடு வந்த அரைமணி நேரத்தில் ராஜரத்னம் வர, “என்ன சொன்னா கனிம்மா? எப்படி இருக்கா?” என்று பதறினார்.
கயல்விழி பொறுமையாக எல்லாம் சொல்ல, அப்பாவிற்கு ஒரு ஆசுவாசம். மகளிடம் தன்னைப் பற்றிய பிம்பம் உடையவில்லை என. செல்வரத்னம் அதனை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை.
அறைக்குள் நுழைந்த கார்த்தி பாத்ரூம் சென்றுவிட்டு மெத்தையில் அப்படியே விழுந்தாள். அப்பா, அண்ணனை நினைக்க நினைக்க கொல்ல வேண்டும் என்ற வெறியே வந்தது. தொலைக்காட்சியில் இது போல் செய்திகள் வந்தால்,
“இவனுங்க எல்லாத்தையும் துடிதுடிச்சுக் கொல்லணும்ணா” என்று எத்தனை முறை அண்ணனிடமே சொல்லியிருக்கிறாள். அவனின் செயலை நினைக்க நினைக்க, போராட்டம் மனத்தில். ராஜரத்னம் மகளைக் கண்ணாரக் காண தவித்தார்.
“கனிம்மா!” என்று அறையின் முன் நின்று அழைக்க,
“மாமா, அவ டயர்டா இருக்கு சொன்னா. அப்புறம் அவளே வருவா இருங்க” என்று கயல்விழி சமாதானம் சொல்ல,
“இல்லைம்மா கயல், எனக்கு என் பொண்ணைப் பார்த்தாதான் மனசு ஆறும்” என்று சொல்லி மீண்டும் மீண்டும் கதவைத் தட்ட, எரிச்சல் தாளாமல் கதவைத் திறந்தாள்.
‘கனிம்மா’ என்று தலையை வருட வந்த தந்தையை நாசுக்காக விலக்கியவள்,
“நான் நல்லா இருக்கேன், தூக்கம் வருது” என்று சொல்லி கதவடைத்தாள் மகள்.
மகள் நன்றாக இருக்கிறாள் என்று கண்ணாரக் கண்ட மனிதர் அவளைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று உத்தரவிட்டு வேலையைப் பார்க்க போனார்.
அன்று இரவு உணவு உண்ணவில்லை கார்த்தி. அடுத்த நாள் முழுவதுமே பட்டினிக் கிடந்தவள் இரவு கோவிலுக்குச் சென்று விட்டு அம்மா வந்த போதும்,
“நான் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்மா” என்று பொய் சொன்னாள்.
அடுத்த நாள் வழக்கம்போல் தம்பியுடன் லெதர் ஃபாக்டரி சென்றவள் அவனுடனும் பெரிதாய்ப் பேசவில்லை. அப்பாவும், அண்ணனும் இருக்கும் போது அறையை விட்டு வெளிவராமல் இருந்துகொண்டாள். மீறி பார்த்தாலும் அப்பா, அண்ணன் என்ற அழைப்பின்றி பொதுவாய் இரண்டு வார்த்தைகளுடன் பேச்சை முடித்தாள். இதில் நவீன் வேறு அவளை டின்னருக்கு அழைத்திருக்க, அவனுமே கசந்தான்.
அப்பா பார்த்த மாப்பிள்ளை என்று திருமணத்திற்கு ஒத்துக் கொண்டவளுக்கு, அவன் அப்பாவின் தேர்வு என்பதாலேயே இப்போது பிடிக்காமல் போனது.
ஜீவனுள்ள ஜடமானாள் பெண்! வாழ்க்கையில் நாம் பார்க்கும் சில மனிதர்கள், கடக்கும் சில நொடிகள், சில நிமிடங்கள் வாழ்க்கையையே மாற்றி விடும். அப்படியான மனிதனாக காளிதாஸன் ஆகிப் போனான். அவனுடனான சந்திப்பு நிகழ்ந்திருக்கவே வேண்டாம் என்று துடித்தாள். உண்மை இத்தனை வலி தரும் என்று நினைத்தே பார்த்ததில்லை அவள்.
யாரிடமும் பகிரவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல் ஒரு இறுக்கமான மனநிலையுடன் சுற்றினாள். மொத்தமாய் தன்னிலை இழந்தாள் கார்த்தி.
இப்படியே இரண்டு நாள் செல்ல, வெளியே உண்டேன் என்று சொல்லி சொல்லி பட்டினி கிடந்து மயங்கி விழுந்தாள். மனஅழுத்தம், பசி எல்லாம் சேர மருத்துவமனை வாசம் கார்த்திக்கு.
✅ End of Episode 7
💬 1 Reply
அன்பென்று நம்பி
அடைக்கலமாய் இருக்க
அவள் அறியாமல்
அகத்துக்குள் விஷமாய் இருந்ததை
அதிர்ச்சியாய் உணர.....
அப்பா செய்த தவறும்
அண்ணன் செய்த துரோகமும்
அவள் இதயத்தில்
அன்பின் மீதான நம்பிக்கையையே
அழித்துப் போட.....
அன்பு வேண்டாம்
அந்த உறவுகளும் வேண்டாம்
என
அவள் மனம்
அழுது கொண்டிருக்க.....
அவள் மூடிய இதயத்தின்
அடுத்த அத்தியாயமாக
அன்பின் உண்மையை
அறிமுகப்படுத்த
அவன் வருவானா.....
Log in
or
Register
to reply