Episode 4

ஒரு காதல் 4

இளந்திரையன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது கார்த்திக்கேயன் இல்லை. மணி அப்போதே பத்தரை ஆகியிருக்க, வஞ்சி அண்ணனை வீட்டிற்குப் போக சொல்லியிருக்க, அவனோ

“அவன் வந்தா எனக்குப் போன் பண்ணு வல்லிம்மா, எதாவது கலாட்டா பண்ணினா சொல்லு” என்று சொல்லிவிட்டுத்தான் போனான்.

இளந்திரையன் கார்த்தி இல்லையென்றதும் தனது டீஷர்ட்டைக் கழட்டி சோஃபாவின் மீது போட்டவன் அப்படியே அதில் படுத்துக் கொண்டான். அவன் ஒன்றும் பேசாமல் அமைதியாய் கண்மூடிக் கிடக்க, வஞ்சிக்குத் தாளவே முடியவில்லை.

“நான் உங்க கிட்ட பேசணும்” என்றதும் விழிகளைத் திறந்தவனின் முன்னே வஞ்சி நின்றிருக்க,

கைகளைத் தலைக்குக் கொடுத்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு,
“சொல்லு” என்றான்.

“என்னமோ என்னைப் பிடிச்சுக் கட்டிக்கிட்ட மாதிரி பண்றீங்க?”

“பிடிச்சு நடந்துச்சோ பிடிக்காம நடந்துச்சோ ஆனா நடந்த கல்யாணம் நிஜம், அது மாறாது”

“என்ன பேச்சு இது? பிடிக்காத விஷயத்தை ஏன் பிடிச்சு வைக்க நினைக்கிறீங்க?”

“அது எப்படிடி? உன் அம்மாவோட ஆசைன்னதும் நான் தாலி வாங்கும்போது அமைதியாய் வாங்கின, அப்போ உன்னோட தேவைக்கு நான் தாலி கட்டனும், வேண்டாம்னா ஒதுங்கிப் போய்டனும் அப்படித்தானே?” என்றான் கோபத்துடன்.

“என்னமோ வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் பிடிக்காத கல்யாணம்னு சொல்றியே? உனக்கு மட்டும் ரொம்ப பிடிச்சு நடந்துச்சா நம்ம கல்யாணம்? பிடிக்கும் பிடிக்காதுன்றது யோசிக்கிற நிலைமையிலா நாம இருந்தோம்?” என்றவன் எழுந்து அவளை இழுத்து சோஃபாவில் உட்காரவைத்து நேருக்கு நேராய்க் கேட்டான்.

அவள் அம்மா உயிருக்குப் போராடிய அந்த தருணங்கள் கண்முன் வந்து போக, இன்றும் தாங்கவே முடியவில்லை. வஞ்சியின் அப்பா அவளுக்குப் பதினைந்து வயதான போது ராணுவத்தில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் எய்திவிட, வஞ்சிக்கு அம்மா மட்டுமே எல்லாம் ஆகிப்போனார். வெளியே சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் அப்பாவின் மரணத்தில் இருந்து அவள் மீளவே இல்லை, எப்போதாவது வரும் அப்பா இனி எப்போதும் வரமாட்டார் என்ற நினைவு நெஞ்சினை அறுக்க, இனி அம்மாவிற்குத் நான் தான் எல்லாம் என்ற எண்ணம் வேரூன்றிப் போக நன்றாய்ப் படித்தாள்.

வஞ்சி சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க, அம்மாவுடன் இருக்க வேண்டும் என அவள் பிரியப்பட ஹாஸ்டல் எல்லாம் சேர்க்காமல் ஜெயா மகளுடனே கல்லூரி பக்கத்திலேயே ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது அவளின் அம்மா ஜெயாவிற்கு அடிக்கடி உடல் நலம் குன்ற, அவர் அசட்டையாய் இருக்க, இவள் மாமாவிடம் சொல்லி வற்புறுத்தி மருத்துவமனை சென்று பரிசோதிக்க அவருக்கு புற்று நோய்.

உடைந்துதான் போனாள் பெண். ஆனாலும் ஒரு நம்பிக்கை அம்மா தன்னுடன் இருப்பார் என்று. சௌந்தர்ராஜன் தங்கைக்காக பல மருத்துவமனை ஏறி இறங்கி நிறைய செய்தும் ஒன்றும் பலனில்லை. தங்கையின் புகுந்த வீட்டினர் ஒன்றும் பெரிதாய் உதவி இல்லை, கூடவே செலவுகளும் அதிகரிக்க சௌந்தர்ராஜன் தான் எல்லாவற்றிற்கும் துணை நின்றார்.

அப்படியே ஒருவருடம் ஓடிவிட குணப்படுத்தும் நிலையெல்லாம் அம்மா கடந்துவிட்டார் என்ற நிதர்சனம் புரிந்தது.

தங்கையின் கடைசி நாட்கள் என்று புரிந்து சௌந்தர்ராஜன் தங்கையுடனே இருந்தார், மாதவியும் கமலியும் கூட வந்து பார்த்துவிட்டுப் போயிருக்க, இளந்திரையன் படித்து முடித்து ஒருவருடமாக சென்னையில் வேலையில் இருந்தான். அவனும் ஒருவிடுமுறை தினத்தில் அத்தையைப் பார்க்க வந்தான்.

மரணத் தருவாயில் இருந்த ஜெயா அண்ணனிடம்,
“எனக்குப் பயமா இருக்குண்ணா, நீங்க வல்லியை நல்லா பார்த்துப்பீங்கன்னு தெரியும், இருந்தாலும் அவளைத் தனியா விட்டுப் போக என்னால நினைக்க முடியலண்ணா, நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல, அவளை நம்ம இளாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா அண்ணா? அவளுக்குக் கல்யாணமாகிடுச்சுன்னா நான் அவ உங்க மருமகன்ற நிம்மதியில செத்துடுவேன்” என்று கண்கள் கலங்கி கேட்கவும் அதுவரையில் அப்படியொரு எண்ணமே இல்லாமல் இருந்த சௌந்தர்ராஜனுக்கும் தங்கையின் நிம்மதியே முக்கியமாகப்பட்டது. வஞ்சியிடம் கேட்க அவளுக்கு அம்மாவின் நிம்மதி முக்கியமாகப்பட, எல்லாவற்றிற்கும் தலையாட்டினாள்.

அடுத்த நாளே இளந்திரையனை அழைத்தார், ஜெயா அவனிடமும் அதையே கேட்க அவன் அப்பாவைப் பார்த்தான்.

மகனைத் தனியே அழைத்தவர்
“அத்தைக்காக டா தம்பி” என்று பாவமாய்க் கேட்க, கண்ணீருடன் தன்னையே பார்க்கும் அத்தையின் ஆசையை நிராகரிக்க மனமேயில்லை, ஒத்துக்கொள்ளவும் மனமில்லை. குழப்பத்தில் இருந்தான்.

“இளா..! இளா..!” என்று மிகவும் அமைதியான குரலில் அழைத்த ஜெயாவிற்குப் பேசவே முடியவில்லை. கடைசி ஆசையைக் கண்களில் தேக்கித் தன்னைப் பார்க்க எல்லாம் ஒரே இரத்தம்தானே! உள்ளம் தவித்தது!பிடிக்கும் பிடிக்காது என்ற யோசனைப் போக,

‘எல்லாரும் பிடிச்சா கட்டிக்கிறானுங்க’ என்று நினைத்தவன் சம்மதம் சொல்ல, அன்றே அப்போதே திருமணம் என்றார் சௌந்தர்ராஜன்.

“அப்பா, அம்மாவுக்கு சொல்ல வேண்டாமா?” என்ற மகனிடம்

“உன் அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ ஒத்துக்க மாட்டா இளா, அப்பாவுக்காக இதை செய்டா” என்றார் அவரும் கண்ணீருடன் மகன் கரம் பற்றியபடி.

அதுவரை அவனின் அப்பா அழுது இளந்திரையன் பார்த்ததேயில்லை, அவர் அம்மா இறந்த போதும் கூட கண்கள் கலங்கினாரே தவிர இப்படி உடைந்து நிற்கவில்லை.

அதன்பிறகு அன்றே நல்ல நேரத்தில் இளந்திரையன் வஞ்சுளவல்லியின் கழுத்தில் தாலி கட்டித் தன் மனைவியாக்கிக் கொண்டான். இப்படி பழைய நினைவுகள் மறக்காமல் தன்னை மறுக வைக்க, மங்கை கண்ணீரில் மூழ்கிவிட, இளந்திரையன் தண்ணீர் எடுத்துவந்து அவள் முன்பு நீட்டி

“அழாம குடி” என்று சொல்லவும்

“என்ன என்ன ரொம்ப நல்ல புருஷன் மாதிரி பண்றீங்க?” என்றாள் அழுகையுடன்.

“நான் நல்ல புருஷனோ கெட்ட புருஷனோ ஆனா நான் மட்டும்தான் உன்னோட புருஷன், ஓகே? வேற நினைப்பே உனக்கு வரக்கூடாது” என்றான் அழுத்தமாக.

அவள் அவனைக் கோபமாய்ப் பார்க்க
“என்னடி பார்வை? தண்ணீயைக் குடி” என்று சொல்ல, வஞ்சிக்குத் தொண்டை வலியெடுக்க அவளும் தண்ணீரைக் குடித்தாள்.

“எதுனாலும் காலையில பேசலாம், இப்போ லேட்டாச்சு, எனக்குத் தூக்கம் வருது” என்று சொல்ல

‘எவ்வளவு திமிர் இவனுக்கு? வாழ்க்கைப் பற்றி பேசும்போது தூக்கம் வருகிறது என்கிறான்’ என்று முறைத்தவள் கோபத்துடன் போய் கதவை அடைத்தாள். இரண்டு நாள் பார்த்து பார்த்து கவனித்தவள் இன்று கோபத்தில் அவனுக்கு உறங்க ஏற்பாடு செய்யாமல் தூங்கிவிட, இளந்திரையன் கார்ப்பெட்டில் படுத்தவன் சோஃபாவில் கால் நீட்டிக்கொண்டு உறங்கிப்போனான்.

இரவெல்லாம் அழுது வெகு நேரம் கழித்து உறங்கியதால் தாமதமாகவே எழுந்தாள் வஞ்சுளவல்லி. சோஃபாவைப் பார்க்க அவனின் கால் மட்டும் தெரிய அவள் நேராக நடக்க, பார்த்தால் தரையில் படுத்திருக்க, இவள் கால் அவனின் தலையில் பட்டுவிட, அதில் இளந்திரையன் விழித்துவிட்டான்.

“சாரி பார்க்கல” என்று வஞ்சி அவனை இடித்ததற்கு மன்னிப்புக்கேட்க, அவனோ வஞ்சியை முறைத்தபடி எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்தான், அவன் வரவும் அவள் கிச்சனில் நிற்பது கண்டவன்,

“எனக்கு பூஸ்ட் வேண்டாம், காஃபி போடு” என்று சொல்லி சோஃபாவில் இருந்த தனது டீஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு போனில் ஏதோ விடியோ பார்த்தான். வஞ்சுளவல்லி ஒன்றும் பேசாமல் அவனிடம் காஃபியைக் கொண்டு வந்து நீட்ட, அதனை வாங்கிக் குடித்தவன்

“ஆமா, இப்படி கவனிக்கிறியே என்னை ஏன்? எதற்கு? வை?” என்று அவளிடம் கேட்டவன் பின் அவனாகவே

“நம்ம கண்டுக்காத பொண்டாட்டி நம்மளை இப்படி கவனிக்குறாளேன்னு இரண்டு நாளா ஒரே யோசனை, நேத்து நைட் நீயும் உன் அண்ணனும் பேசின பின்னாடிதான் புரிஞ்சது இந்த கவனிப்பெல்லாம் மனைவியா நீ செய்றதில்ல, மாமன் மகன்றதால செய்றதுன்னு” என்றதும் வஞ்சி நீ என்னவோ பேசு என்று நகர பார்க்க

“ஆனா நான் இங்க தங்க காரணம் தெரியுமா?” என்று அவள் முன் வந்து நின்றவன்

“உனக்கும் எனக்கும் கல்யாணம்னு ஒன்னு ஆகிடுச்சுன்ற ஒரே காரணம்தான் என்னை இங்க தங்க வச்சது, இல்லன்னா நான் எந்த பொண்ணு கூடவும் தங்க மாட்டேன்” என்றான் தீவிரமாக.

அதே குரலில்,
“நான் சின்ன வயசுல நினைச்சிருக்கேன், என்னடா இந்த லேடீஸ்லாம் தாலி போட்டாக்க கல்யாணம் ஆனவங்கன்னு தெரியுது, இந்த ஆண்களுக்கு அடையாளமே இல்லையேனு, உன்னைக் கட்டின பின்னாடிதான் புரிஞ்சது, அதுவும் நீ தாலியை வேண்டாம்னு போன அப்போதான் தெளிவா புரிஞ்சது, ஆண்களோட மனசுல கல்யாணம்ன்ற எண்ணம் பதிஞ்சிடும், உன்னை மாதிரி தாலியைக் கழட்டிட்டாலே கல்யாணம்ன்ற உறவு இல்லைன்னு ஆகிடாதுன்னு எனக்குத் தெளிவா புரிஞ்சது” என்றான் அழுத்தமாக.

அவனது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவன்,
“அப்புறம் தாலியெல்லாம் கழுத்துல போடுற பொருள்னு நினைச்சேன், டப்பாவுல போட்டிருக்க?” என்றதும் அதிர்ச்சியாய் அவள் விழிகள் அவனை நோக்க, அவன் கையில் மாங்கல்யம் இருந்தது.

“அதைக் கொடுங்க எங்கிட்ட” என்று வல்லி கையை நீட்ட

“என்ன இஞ்சி உன் மாமா கொண்டு வந்து கொடுத்தார் போல, எனக்குத் தெரிஞ்சு சண்டைப் போட்டு தாலியைத் தூக்கி எறிஞ்ச நீயெல்லாம் இதைப் பத்திரமா வச்சுக்க வாய்ப்பே இல்ல, எல்லாம் என் நைனா வேலையாத்தான் இருக்கும்”

“ப்ளீஸ், எங்கிட்ட கொடுங்க” என்று அவள் கெஞ்சினாள்.

“அட்ரா! அட்ரா! அது எப்படி நேத்து நான் வேண்டாம்னு டைவர்ஸ் கேட்ட, இப்போ என்ன இதைக் கேட்கிற? உனக்குத் தேவைன்னா நீ இதை இப்படி விட்டிருக்க மாட்ட” என்றான் நக்கலாய்.

அவன் சொல்வதும் உண்மைதானே? அவனே வேண்டாம் எனும்போது இது மட்டும் எதற்கு? என்று அவள் அமைதியாக நிற்க, அந்த அமைதியும் அவனை ஆவேசம் கொள்ளச் செய்ய

“முதல்ல என் தங்கச்சி பாவம்னு தாலி கட்ட சொன்ன எங்கப்பாவுக்குப் போன் பண்றேன், டப்பாவுல போட்டு வைக்கவா தகப்பா என்னைத் தாலி கட்ட சொன்னன்னு கேட்கிறேன்” என்றான் கோபமாக.

மாமா அவளின் அம்மாவுக்காகத் தானே, அவரின் நிம்மதியான மரணத்திற்காகத்தானே மனைவியிடம் கூட சொல்லாமல் அவசரமாய்த் திருமணம் செய்துவைத்தார், அவருக்குத் தன்னால் இனியும் அவப்பெயர் வேண்டாம் என்று நினைத்தவள்,

“நான் டைவர்ஸ் பத்தி பேசல, முதல்ல தாலியைத் தாங்க” என்று அவன் கையில் இருந்த தாலியை வாங்கப்போக, அவன் கொடுக்காமல் போக்குக் காட்டினான்.

“நேத்து அண்ணனும் தங்கச்சியும் என்னமா பேசினீங்க? இன்னிக்கு என்ன பல்டியடிக்கிற? எங்கப்பா மேல ரொம்ப மரியாதை இருக்க மாதிரி நடிக்காதடி, அப்படி இருந்திருந்தா அவர் செஞ்சு வச்ச கல்யாணத்தை வேண்டாம்னு அவர் முன்னாடியே தாலியை உதறிட்டு வந்து இங்க இப்படி நிப்பியா? அவர்கிட்டவே நியாயத்தைக் கேட்கிறேன்” என்றவன் போனை எடுக்க

“ஏன் இப்படி பண்றீங்க நீங்க?” என்றவள் அவனின் இருகைகளையும் மாறி மாறி பார்க்க, அதற்குள் அவனின் அலைப்பேசி சத்தமிட

“கமலி மாப்பிள்ளை” என்றவன் அழைப்பை ஏற்றுப் பேச, இன்னொரு கையில் இருந்த தாலியை அவனிடமிருந்து அவள் எடுக்க நினைக்க, வலக்கையினால் போன் பேசியவன் இன்னொரு கையால் அவளை அணைத்து நகரவிடாமல் நிற்க, அவள் அவனின் திடீர் அணைப்பில் அதிர்ந்து விலகப்பார்க்க, அதில் அவன் நிலைத்தடுமாறி அப்படியே பேலன்ஸ் தவறி பின்னால் கார்ப்பெட்டில் சாய்ந்துவிட, வஞ்சியும் அவனுடன் சரிந்தாள்.

அப்போதும் வஞ்சி விடாமல் அவனின் இடக்கையில் இருந்த தாலியை எடுக்கப் பார்க்க, அவன் இறுக்கமாய்ப் பிடித்திருந்தான்.

“கண்டிப்பா வரோம் ஸ்ரீ” என்று தங்கைக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையான ஸ்ரீனிவாஸிடம் சொல்லி வைத்தவன்

“நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம், ஸ்ரீனிவாஸ் வீட்டில நம்மைப் பார்க்கணும் சொல்றாங்க, ரெடியாகு” என்று சொல்லி அவள் முகம் பார்க்க

‘நீ சொன்னா நான் கேட்கனுமா?’ என்று அவள் பார்க்க

அதுவரை போனில் கவனமாய் இருந்தவனின் கவனமெல்லாம் இப்போது மனைவியின் மீது! அவளின் அருகாமை! அவளின் மென்மை! முதன்முதலாய் உணர்கிறான்.

இளந்திரையனோ,
“இப்படி இருந்தா என்ன என்னவோ தோணுதுடி, முதல்ல எழுந்திருடி இஞ்சி” என்றவன் வார்த்தை என்னவோ கொஞ்சி வர, வஞ்சி அவன் பேச்சில் திகைத்தவள் அவனின் பிடி விலகவும் வேகமாய் எழுந்து நிற்க

“சீக்கிரம் கிளம்பு இஞ்சி” என்றவன் பால்கனியில் போய் நின்றுகொண்டான்.

✅ End of Episode 4
How did you feel about this episode?
❤️ 8 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Radhi Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

மிஞ்ஜி நின்றவள்

இஞ்சி என்ற அழைப்பில் 
வஞ்சி கோவம் கொள்ள
அஞ்சி நிற்காமல் 
கொஞ்சி நிற்கும் கணவன்.....
❤️ 1 more...
rachel kumar Reader 1 month ago

Super ♥️♥️♥️♥️

❤️ 1 more...
Saraswathi Reader 4 weeks ago

வஞ்சி , இஞ்சி , கொஞ்சி  ஆஹா எதுகை அழகாக இருக்கு

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top