Episode 11

ஒரு காதல் 11

வஞ்சி ஊருக்குப் போகிறேன் என்றதும் இளந்திரையனுக்குக் கோபம் கூட, அவன் வேகமாய் எழ, இடக்கையினால் அவனைப் பிடித்து இழுத்தவள்

“சும்மா சொன்னேன் உட்காரு இளா” என்றதும் அவன் விடாது முறைக்க

“பிரியாணி வாங்கிக் கொடுத்தேன்றதுக்காக நீ முறைக்கிறதையெல்லாம் ஏத்துக்க முடியாது” என்று முறுக்கிக் கொள்ள

“ரொம்ப பண்ற வஞ்சி நீ” என்று செல்லமாய் அலுத்துக்கொண்டான். உண்டுமுடித்தவன் பாத்திரங்களை எல்லாம் எடுத்து கிச்சனில் வைத்தவன் ஸோஃபாவில் இருந்த குஷனை எடுத்துக் கொண்டு அந்த பால்கனியில் அவளருகே வந்து படுத்துக்கொண்டான்.

வஞ்சி உண்டு முடித்து கிச்சனில் பாத்திரங்களைக் கழுவிப் போட்டு அவளும் அவனைப் போல் இன்னொரு குஷன் எடுத்து வந்து அவனருகே போட்டவள், கூடவே பெட்ஷீட்டையும் எடுத்து வந்தாள்.

“வெறும் தரையில படுக்காத, கொஞ்ச நேரத்துல ரொம்ப ஜில்லுன்னு ஆகிடும்” என்றவள் ஒரு பெட்ஷீட்டைக் கீழே விரித்தாள். இன்னொன்றை அவள் மேல் போர்த்திக் கொண்டவள் அவனருகே படுத்துக் கொள்ள அது புதுவித அனுபவமாய் இருந்தது.

“என்னால நம்பவே முடியல, நீயும் மாமாவும் வந்தப்போ கூட எனக்குப் பெருசா ஒன்னுமே தோணல, அதான் பிரிஞ்சிடலாம்னு பேச கார்த்தி அண்ணாவை வர சொன்னேன்” என்று சொல்லி அவன் முகம் பார்க்க

அவனோ அவளை நெருங்கிப் படுத்தான், இடையே கொஞ்சம் இடைவெளி, இன்னும் நெருங்கினால் ஒட்டி உரசும் நிலைதான்.

“எதுக்கு இவ்வளவு கிட்ட வர?” என்றதும்

“இல்ல ஒரு சூப்பர் வாசம் வருது, அதான் உன் மேலையான்னு செக் பண்றேன்” என்று சொல்லி அவளை நெருங்கியவனை முறைத்தவள்

“நல்லா பிரியாணி சாப்பிட்டு என் மேல பிரியாணி வாசம்தான், அது இந்த பக்கம் இருக்கே நித்யமல்லி அதோட வாசம்” என்றதும்

“ஓஹோ” என்றவன் பின் குறும்பாய் சிரித்து

“எனக்குப் பிரியாணி வாசனைக் கூட பிடிக்கும், ஸ்மெல் பண்ணிக்கவா” என்று அவளைப் பார்க்க

“பேசிட்டு இருக்கேன் இளா நான்” என்று வஞ்சி கடுப்பில் சொல்ல

“நம்ம பேசிட்டு மட்டும்தான் இருப்போம்” என்றவன்

“இப்படி ஜாலியா என்னோட பேசாம கமலிக் கூட பேசுறாளாம்” என்று மனைவியை நொடித்துக்கொண்டான்.

அதற்கு அவளோ,
“எனக்கு டவுட்டா இருக்கு உன் மேல, உனக்கு நிஜமாவே கமலி மேல பாசம் இருக்கா?” என்றவளை முறைத்தவன்

“எப்பவும் அம்மாவுக்குக் கூட தெரியாம, அவ என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்திருக்கேன், அண்ணனா எல்லாம் செஞ்சிருக்கேன் நான் அவளுக்கு” என்றான் வேகமாக.

“இருந்தாலும் எங்க மாமா மாதிரி வராது” என்றவளின் கன்னத்தை வலிக்குமாறு பிடித்துக் கிள்ளியவன், அவள் கத்தியதைக் கண்டுகொள்ளாது,

“உன் மாமா மாதிரி எல்லாம் நான் இருக்க வேண்டாம், உன் மாமா அவரோட இஷ்டத்துக்கு அத்தைக்கு எல்லாம் செஞ்சு எங்கம்மாவை டென்ஷன் செய்வார்” என்றதும் அவள் புரியாமல் பார்க்க

“எங்கப்பா அத்தைக்கு எது செய்யணும்னாலும் அவர் இஷ்டப்படி செஞ்சிடுவார், எனக்குத் தெரிஞ்சு எல்லாமே அவர் இஷ்டம்தான், நம்ம கல்யாணம் கூட எடுத்துக்கோயேன், அம்மாவை எதுக்கும் கலந்து பேசமாட்டார், அம்மா அவங்க முக்கியத்துவம் குறையுறதா நினைச்சு அதை நிலை நிறுத்திக்க சவுண்ட் சரோஜாவா மாறிட்டாங்க”

“அப்படியா? மாமாவும் அப்போ உன்னை மாதிரிதானா? தன்னோட இஷ்டம்தான்னு” என்று வஞ்சி சொல்ல

“அது எப்படி டி? அவரோட நல்லவிதமா கம்பேர் செய்ய மாட்டேங்கிற, ஆனா இப்படி நெகட்டிவா பேசணும்னா ஈசியா கம்பேர் செஞ்சிடுற?” என்றவன்

“எஸ்! நான் அப்பா மாதிரிதான் அந்த விஷயத்துல, என்னோட லைஃப் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கனும்னு நினைக்கிறதோ, பிடிச்சமாதிரி அமைச்சிக்கறதோ என்ன தப்பு? அதுல தப்புமில்லை” என்றான் அழுத்தமாக.

வஞ்சியோ “அதுக்குப் பெயர் சுய நலம்” என்றாள் முகம் சுழித்து.

“ஸோ வாட்? இப்போ சில பேர் சேவை பண்றாங்க, அது அவங்க இஷ்டப்படி செய்றாங்க, அதுல நிறைய பேர் நன்மை அடைஞ்சதால அது பொது நலமாகிடுச்சு. அப்படிதான் உலகத்தில எல்லாருமே அவங்களுக்கு விருப்பமானதைதான் செய்றாங்க ஒருவகையில. இருக்கற ஒரு லைஃப்ல என்னைப் பத்தி யோசிக்கவே எனக்கு முடியல” என்று அலுத்துக்கொண்டவன்

“பாரு, பக்கத்துல கட்டின பொண்டாட்டி வச்சிட்டு நான் மூணு வருஷமா ஒரு முத்தம் கூட கொடுக்கல, என்னோட நலமே இங்க நட்டாத்துல நிக்குது, இதுல எங்க நான் அடுத்தவங்களை யோசிக்கிறது?” என்றதும் வஞ்சி அமைதியாகிவிட இளாவும் வீசிய காற்றில் மல்லிவாசம் மனத்தினுள் நிறைத்து அந்த நிசப்த நொடிகளை அனுபவித்தான்.

அவனாகவே,
“இந்த ஸ்ரீ கூடவெல்லாம் கமலி பேசமாட்டாளா? உன்னைப் போய் துணைக்குக் கூப்பிடுறா” என்று கேட்க

“அதுக்கும் உங்கம்மாதான் காரணம், அவர் கூட போன்ல பேசினா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு நேரம் பேசினா தப்பா நினைப்பாங்கன்னு சொல்லித் திட்டினாங்களாம், அவர் நைட்லதானே ஃப்ரீ அப்போ பேச அவங்க விடுறதில்லையாம், ஒன்லி சேட்டிங்” என்று வஞ்சி சொல்ல

“எல்லாமே உங்கிட்ட சொல்லிடுறா இல்ல அவ” என்றான் சந்தோஷமாய்.

“கமலி கல்யாணம் முடிஞ்சதும் நான் புனே போகணும் வஞ்சி” என்றதும்

“ஓஹ்” என்று சொல்லி அவள் கேட்டுக்கொள்ள,

‘கொஞ்சமும் ஃபீல் ஆகுறாளா பாரு’ என்று அவள் முகத்தையே உற்றுப்பார்த்தவன் அவள் பேசாமல் இருக்கவும்

“அங்க போய் ட்ரான்ஸ்பர் கேட்கனும், எப்படியும் திரும்ப வர ஒரு மாசம் ஆகிடும்” என்றான்.

“ம்ம், சரி” என்று கேட்டுக்கொண்டாள்.

“ஏட்டி வஞ்சி! உனக்கு நம்ம கல்யாணம் பெருசா எல்லாம் நடக்கலையேன்னு ஃபீலிங் எதாவது இருக்கா?” என்று இளந்திரையன் அவளிடம் கேட்டான்.

“ஏன் உனக்கு ஃபீலிங்கா இருக்கா?” என்றாள் வஞ்சி அவனிடம்

“ம்ம், இருக்குத்தான். என் ப்ரண்ட்ஸ் இரண்டு பேருக்கு மேரேஜ் நடந்துச்சு, அப்போ தோணிச்சு, பட் இப்போ நல்லா வாழ்ந்தா போதும்டா சாமின்னு இருக்கு” என்றதும் வஞ்சிக்கு அவன் சொல்லிய பாவனையில் சிரிப்பு வர

“ஏன் இவ்வளவு பயத்தோட சொல்ற?”

“அதில்ல, அந்த வயசுல அப்படி தோணிச்சு, இப்போ இப்படி தோணுது. கல்யாணத்தை விட கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கனும்னு ஒரு புரிதல் இருக்கு” என்றவன்

“நான் கேட்ட கேள்விக்குப் பதிலே வரலையே?” என்று அவள் முகம் பார்க்க

“அப்படியெல்லாம் நான் நினைச்சதே இல்லை, அம்மாவுக்குக் கல்யாணத்தால சந்தோஷம், அதான் எனக்கு முக்கியமா இருந்துச்சு. சொல்லப்போனா அந்த விஷயத்துல நான் ரொம்ப சுய நலமா இருந்துட்டேன், உன்னைப் பத்தி கொஞ்சமும் யோசிக்கல, ஐ அம் ஸாரி” என்று சொல்லி அவனின் கையைப் பிடித்துக்கொள்ள, பிடித்த கையில் இன்னும் அழுத்தம் கூட்டி அவனின் கரங்களுக்குள் அவள் கையைப் பொத்தி வைத்தவன்,

“இதுக்கு ஸாரி எல்லாம் வேண்டாம்” என்றான் ஆறுதலாக.

வஞ்சி அடுத்த நாள் காலையில் எழுந்தவள் உணவு செய்துவிட்டு காஃபி போட்டு அவனை எழுப்ப

“மனைவி கையால காலையில காஃபி, bliss டி” என்று சொல்லி காஃபிக்குக் கை நீட்ட

“ப்ரஷ் பண்ணு ஃப்ரஸ்ட்” என்று சொல்லி அவள் காஃபியை எடுத்துப் போக, பல் துலக்கியவன்,

“காஃபியைக் கொடுடி” என்று சொல்லி பருகி, அவள் புடவைக் கட்டியிருக்க கப் போர்ட் பக்கமாய் அவள் என்னமோ எடுக்கத் திரும்ப, இளந்திரையனின் விழிகளுக்கு விருந்தாய் அவளின் இடை வெளி தெரிய

“ஏன் வஞ்சி இந்த இஞ்சி இடுப்புன்னு சொல்லுவாங்களே, அது இதானா?” என்று கேட்டவன் அவளின் பின்னால் வந்து நின்றான், மொத்தமாய் மங்கையை சூழ்ந்தவண்ணம்.

✅ End of Episode 11
How did you feel about this episode?
❤️ 7 👏 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Radhi Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

ஊடலை விட்டு 

உடல்கள் உரச 

உணர்வுகள் வர 
உறவு பலப்படட்டும்......
Saraswathi Reader 4 weeks ago

என்னவென்று சொல்வதம்மா

வஞ்சியவள் பேரழகை
இஞ்சி இடுப்பழகி
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top