‘கிடாவெட்டு’ ஊரின் முக்கியமான நிகழ்வு, அதுவும் வழக்கமாக குலதெய்வ கோவிலில் நடைபெறும் கிடாவெட்டில் அந்த குடும்பத்து உறுப்பினர்கள், பங்காளிகள் மட்டுமே இருப்பர். இப்படி பெரிய கோவில் கிடாவெட்டில் ஊரில் அனேகம் பேர் திரண்டுவிடுவார்கள், அந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவர்களின் உறவுகள், நண்பர்கள் என்று அனைவருக்கும் அழைப்பு போய்விடும். உறவுகள் பேசி, உண்டு, கூடி, சண்டையிட்டு என்று உணவோடு உணர்வாய் ஒரு விழா.
மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல், சேவலை பலி கொடுப்பதில் ஆரம்பித்தது மதுரை விரன் கோவில் கிடாவெட்டு.
“இந்தா வேட்டு போட்டானுவோ, கிடாவெட்டு ஆரம்பிச்சிடுச்சு” என்று பேரனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அஞ்சம்மா.
“எப்படியாத்தா? வீட்ல இருந்திட்டே சொல்றீங்க?”
“அது வேட்டு சத்தம் கேட்டுச்சுல்ல பகத்து, அதை
வச்சு உங்காத்தா சொல்றாங்க” என்றார் சித்ரா.
“வேட்டா…?” என்றபடி பகத் அம்மாவை பார்த்தான். வசுந்த்ரா மகனுக்குப் பதில் சொல்லும் முன் அஞ்சம்மாள் முந்திக்கொண்டார்.
“பாரு, கிடாவெட்டு கூட என் பேரனுக்குப் பெரிய விஷயமாத்தான் இருக்கு, அடிக்கடி ஊருக்கு வந்து போயி இருந்தாதானே எல்லாம் தெரியும். முந்தா நாள் நம்ம தேனு பேரனை அண்ணன்னு சொல்றான், நம்ம வீரமணி வந்தான் அவனை அங்கிள்னு சொல்றான்… கொஞ்சனாச்சும் உறவு தெரிஞ்சாதானே?” என்று அஞ்சம்மா மருமகளைக் குத்தினார்.
“வேட்டுன்னா வெடி போடுறது, கிடாவெட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போடுவாங்கடா பகத்து, அதை வச்சு ஊர்ல எல்லாருக்கும் தெரியும்” சித்ரா சொல்ல, வசுந்த்ரா சித்ராவிடம்,
“அக்கா, பூ கட்டிட்டேன். பிரிட்ஜல வைக்கவா?” என்று கேட்டார்.
“பதில் சொல்றாளா பாரு” என்று அஞ்சம்மா முணுமுணுக்க, வசுந்த்ரா ஒன்றும் பேசாமல் பூவை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
இவர்கள் எல்லாம் வெளித்திண்ணையில் பேச்சுவார்த்தை நடத்த, எல்லாம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் கண்ணில் புலப்பட்டது. காலையில் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கும்போதே, சித்ரஞ்சன் வசுந்த்ரா வந்த செய்தி லட்சுமணன் வீட்டினருக்கு தெரிந்தது. சசிகலாதான் அடிக்கடி எட்டிப்பார்த்தார். யாரும் வீட்டிலில்லா நேரம் வசுந்த்ராவிடம்,
“எப்படி இருக்க வசு?” என்று நலம் விசாரித்தார்.
“நான் நல்லாயிருக்கேன் அண்ணி, அப்பா, அண்ணன், சக்தியெல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேட்க,
“எல்லாம் நல்லாயிருக்காங்க. நீ வீட்டுக்குள்ள போ, உன் வூட்டு சனம் பார்த்தா பேசுவோ” என்றார்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” என்று வசுந்த்ரா சொல்ல, “உங்கப்பாரு நான் உங்கிட்ட பேசுறதைப் பார்த்தா அவ்வளவுதான் வசு, நான் அப்புறம் வரேண்டி” என்று ஓடிவிட்டார். இப்போது வசுந்த்ரா எட்டிப்பார்க்க யாரும் வீட்டின் வெளியே தெரியவில்லை.
சித்ரஞ்சன் வெளிவேலையாக சென்றிருந்தவன் வீட்டுக்குள் வர, மகனிடம் அஞ்சம்மாள் குற்றம் சொல்ல,
“அதுக்கென்னம்மா? ஊருக்கு வரப்போ சொல்லிக்கொடு. எனக்கு வேலை அங்கயிருக்கு, இங்க என்ன செய்ய முடியும்?” என்று அம்மாவை சமாளிக்க, அவரோ
“உனக்கு வேலையிருக்குன்னு எனக்குத் தெரியாதாடா? உன் பொண்டாட்டி அவளும் ஒட்டமாட்டா, பேரனையுமில்ல அனுப்ப மாட்டேங்கிறா.” என்று குறை சொன்னார்.
“அவனுக்கு ஸ்கூல் இருக்கேம்மா, இல்லைனாலும் அவனை அனுப்பிட்டா வசு அங்க தனியா இருப்பாம்மா” சித்ரஞ்சன் வசுந்த்ராவை விட்டுக்கொடுக்காது பேசினான்.
அஞ்சம்மா மகனை முறைத்து, “அதான் கல்யாணமானதுமே உன்னை பிரிச்சுக் கூட்டிட்டுபோய்ட்டாளே, அவ மவன்’னதும் மட்டும் பொத்தி பொத்தி வளர்க்கிறா.” என்று அஞ்சம்மா விடாது பேச, திலகர் மனைவியை அடக்கினார். அப்பா வரவும் சித்ரஞ்சன் உட்கார்ந்திருந்தவன் எழுந்து நிற்க,
திலகர் மகனை பார்த்துவிட்டு மனைவியை, “உனக்கு வேற வேலையே இல்லையா?” என்று அதட்ட, அஞ்சம்மா கணவனை முறைத்தார். திலகர் லட்சுமணன் வீட்டினரை என்னதான் பேசினாலும், வசுந்த்ராவை சித்ரஞ்சன் திருமணம் செய்துவந்த நாள்தொட்டு அவளைப் பேசியதில்லை. அதற்குமுன்னும் கூட பெண்பிள்ளையைப் பேசமாட்டார். அந்த வீட்டின் ஆண்கள்தான் அவருக்கு ஆகாதவர்கள்.
அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்ள, சித்ரஞ்சன் நழுவி மாடியில் அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்தான். வசுந்த்ராவின் பார்வை ஜன்னல்வழியே அவர்கள் வீட்டைத்தான் பார்த்தது.
சித்ரஞ்சன் மனைவியின் ஏக்கமான பார்வை பார்த்து எப்படியாவது நாளை மாமனார் வீட்டில் நடந்த உண்மையை, தன் தவறை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
வசுந்த்ராவை உரசியபடி நின்றவன், “என்னடி புதுசா காம்பவுண்ட் சுவர் எல்லாம் அந்தப்பக்கம் எழுப்பியிருக்காங்க, பெயிண்ட் அடிச்சிருக்காங்க போல.” என்று பேச்சுக்கொடுக்க வசுந்த்ரா பேசாமல் வீட்டையே பார்த்தாள்.
“பரவாயில்லை இந்த கலர் நல்லாயிருக்கு, முன்னாடி அந்த கொட்டாயி பக்கத்துலதானே வசு நீ துணி காயப்போடுவ, இப்போ இடத்தை மாத்திட்டாங்க போல..” என்றதும் வசுந்த்ரா அப்படியே திரும்பி நின்று கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
ஜன்னலில் வசுந்த்ரா சாய்ந்திருக்க, இருபக்கமும் கைவைத்து அணைக்கட்டியிருந்தான் சித்ரஞ்சன்.
“துணி காய வைக்கும்போது கூட பார்த்தீங்களா?”
“என்னடி கேள்வி இது? உன் கொலுசு சத்தம் திண்ணையைத் தாண்டினாலே எட்டிப்பார்ப்பேன்” என்றதும் வசுந்த்ரா,
“திருட்டுத்தனமா பார்த்துட்டு என்ன கடமையை செஞ்ச மாதிரி பெருமையா ஒரு பதில்.” என்று முறைத்தாள்.
“அந்த வயசுல எனக்கு அதான் கடமை, ஒளிஞ்சு நின்னா பார்த்தேன். இங்கயிருந்து பார்த்தா இப்பவே உங்க வீட்டுக்கு வெளியே நல்லா தெரியுது, இப்போ இந்த தகரக்கொட்டாய்(கொட்டகை) போட்டதும் அந்த பக்கம் மறையுது. இல்லன்னா நீ வயல்’ல நடந்து போறது வரைக்கும் கூட தெரியும்..”
“அப்போ இந்த ஜன்னல்’ல தெரிஞ்ச என்னோட நிலா, சூரியன் எல்லாம் நீதான் வசு.” என்றான் வசுந்த்ராவின் கன்னத்தை வருடி.
வசுந்த்ராவுக்கு சித்ரஞ்சனின் பிரியம் பிடிக்கும், அதுவும் இத்தனை வருட வாழ்க்கையில் அவன் சொல் கூட அவளை காயப்படுத்தியதில்லை. மாமியார் பேசினாலும் இவன் பேசவிடமாட்டான். இப்படி ஒரு அன்பை வைத்துக்கொண்டு அவன் தேர்ந்தெடுத்த வழியை நினைக்கும்போது, அதனால் தான் எதிர்கொண்ட, எதிர்கொள்கிற வலியை நினைக்கும்போதுதான் ஒரு தீரா ஆத்திரம் வரும்.
அவளுக்கு இந்த எண்ணம் வருகின்ற பெரும்பான்மை நேரம் சித்ரஞ்சன் அருகே இருந்தால் அவனை வார்த்தையால் குத்திக்கிழிக்காது விடமாட்டாள். ஆனாலும் இத்தனை வருட வாழ்க்கை பொறுமையை, சண்டைகள் சலிப்பைக் கொடுத்திருக்க இந்த முறை அவனை பேசவில்லை.
“அப்போ இப்போ?” என்று கிண்டலாகக் கேட்க,
“ஜன்னல் நிலா இப்போ என் கைக்குள்ள..” என்று நெற்றியில் முட்டியவன் அப்படியே அந்த அணைப்பை முத்தமாக்கியிருக்கலாம்.
எங்கே சுதந்திரவிலாசத்தின் கொழுப்பு விட்டால்தானே? அதைவிட அவனுக்கு அவனை நியாயப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
வசுந்த்ரா முகம் புன்னகையில் பூத்திருக்க, அந்த புன்னகைப் பூவை பூந்தோட்டமாக்காமல்,
“இப்பவும் நான் செஞ்சது தப்புன்னுதான் சொல்லுவியா வசு? நான் அன்னிக்கு வேற எதுவும் செஞ்சிருக்க முடியாதுதானே?” என்று அவன் நியாயம் கேட்க, இந்த பேச்சுத்தான் வசுந்த்ராவுக்குக் கோபம் தரும்.
“இத்தனை வருஷமாகியும் இந்த எண்ணம் மாறலன்னா நானோ, என் காதலோ உங்களை மாத்தலன்னு அர்த்தம் ரஞ்சன். நீங்க செஞ்சது தப்புன்னு என்கிட்ட ஒத்துக்க வேண்டாம், அதை நீங்க மனசார உணர்ந்தா கூட எனக்குப் போதும்” வசுந்த்ரா உணர்வுப்பூர்வமாக சொல்ல சித்ரஞ்சன் மனம் முன்பாதியில் துள்ளி பின்பாதியில் வாடியது.
“அப்போ நீ என்னை லவ் பண்றதானே வசு..?”
அத்தனை ஆவலாக, பரபரப்பாக கணவன் குரல் வர வசுந்த்ரா நிதானமாக,
“உங்களுக்கு அதே இருபத்து மூணு வயசு பையன்னு நினைப்பா? இன்னமும் இப்படி கேட்கிறீங்க? லவ், காதல் என்னமோ உங்க இஷ்டத்துக்குப் பெயர் வச்சிக்கோங்க, எனக்கு உங்க மேல ஒரு மரியாதை, அன்பிருக்கு. உங்க ரசனை மேல, உங்க உணர்வுகள் மேல, உறவுகள் மேல கூட அந்த மரியாதையிருக்கு. எப்பவும் உங்களுக்குத் துணையா இருக்கணும், உங்களோட இருக்கணும், நீங்களும் எனக்காக நிக்கணும்னு நினைக்கிறதுதான் காதல்னா, எனக்கு உங்க மேல இப்போ நீங்க புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு காதல் இருக்குப் போதுமா?” என்று வசுந்த்ரா கணவனின் இருகைகளையும் பிடித்து, தன் கையால் பிடித்தபடி கண்ணைப் பார்த்து மனத்தில் உள்ளதை சொன்னாள்.
சித்ரஞ்சனுக்கு மனைவிக்குத் தன்னை பிடிக்குமென்று தெரியும், வசுந்த்ராவும் கணவனை அக்கறையாகப் பார்த்துக்கொள்வாள். ஆனாலும் வார்த்தையாக அன்பை சொல்லியதில்லை, அவளுக்கும் ஒரு பிடிவாதம், கோபம் சொல்லத்தோன்றாது. இன்று ஏதோ சித்ரஞ்சனுக்கு ஒரு வசந்தமான நாள் போல, வசுந்த்ரா அமைதியாகப் பதில் சொல்லியிருக்கிறாள்.
வசுந்த்ரா கணவனிடம் மனதை சொல்லிவிட்டு கீழே சென்றவள்,
“அத்த, உங்களை சாப்பிட வர சொன்னாங்க” என்று மீண்டும் அறைக்கு வந்து சொன்னாள்.
“அத விடு, இங்க வா” என்று மனைவி கையைப் பிடித்தவன் “அது என்ன எனக்குப் புரிஞ்சிக்க முடியாதளவு லவ்வுன்னு சொன்னியே, ஏன் எனக்குப் புரியாது?” என்று கேட்க,
“புரிஞ்சிருந்தா அடிக்கடி இப்படி கேட்க மாட்டீங்க, அப்புறம் அப்படியொரு மடத்தனைத்தைப் பண்ணியிருக்க மாட்டீங்க, அதை பண்ணினதும் இல்லாம இத்தன வருஷமும் நான் செஞ்சது சரின்னு வாதாட மாட்டீங்க. என்ன செய்றது இதுக்குத்தான் பிரிட்டிஷ் படிங்கடானு சொன்னா கேட்டாதானே? ஸோ சேட்” என்று வசுந்த்ரா கணவனை கேலி பேசினாள்.
“கான்வெண்ட் படிப்பு’ல அதான் என் பொண்டாட்டிக்குப் பேச்சு ஜாஸ்தி” என்று சித்ரஞ்சனும் பதில் சொன்னானே தவிர, அவன் தவறை ஒப்புக்கொள்ளவே இல்லை.
“வசு” என்று சித்ரா குரல் கொடுக்க,
“ப்ச், சீக்கிரம் வாங்க, இப்போ சாப்பிட்டாதான் நைட் சாப்பிட சரியாயிருக்கும். அக்கா கூப்பிடுறாங்க” என்று வசுந்த்ரா கணவனிடம் சொல்ல, இருவரும் உண்ண சென்றனர்.
****************
Very nice