Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 4

சக்திக்கு வாயிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது, கொஞ்ச நேரம் முன்புதான் லாலாவோடு நன்றாக உண்டுவந்தான். அந்த வாசமும் சுவையும் நீங்காது இருக்க, சரோவிடம் பேசும்போது சரளமான பேச்சில் அதையும் சொல்லிவிட்டான். கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவன், மீண்டும் கையை முகர்ந்து பார்க்க தக்காளி சோறு வாசம் மூக்கைத் துளைத்தது. இவன் என்ன பேசலாம் என யோசிக்க, சரோவோ,

“கோவில்ல அவன் ப்ரண்ட்ஸ் எல்லாரும் சாப்பிட்டாச்சு, மறுபடியும் ஒரு கேரியர் கட்டிட்டு போறான், எங்கம்மாவும் அப்படியே வச்சிக்கொடுக்குது. உனக்குக் கொடுக்க தக்காளி சாதமே இல்ல தெரியுமா சக்தி?” என்று வருத்தமாக சொன்னாள். பின் சட்டென்று

“ஆமா, தக்காளி சோறு நல்லாயிருக்குனு எப்படி சொன்ன?” என்று கேட்டாள்.

‘போலிஸ்காரன் பொண்டாட்டி ஆகுற தகுதி மொத்தமும் இருக்குடி உனக்கு’ என்று சீராட்டிய சக்தி மனமோ ‘இன்னிக்கு எத்தனை உருட்டோ?’ என்று நினைக்காது இல்லை.

“அது உங்க வீட்டு மண்டாபிடி சாப்பாடு டேஸ்ட்டா இருக்குனு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க” என்றான் கிண்டலாக.

“எங்க வீட்டைப் பத்தி நல்ல விஷயம் எல்லாம் காதுல கேட்குது போல” சரோஜினி ராகமிழுக்க,

“என்ன பண்றது? எங்களுக்குப் பெருந்தன்மை இருக்கு, மாமனார் வீட்டை விட்டுக்கொடுக்க முடியுமா?” என்றதும் சரோஜினி மனது இறக்கை விரித்தது.

அவளுக்குப் பிடித்த சக்தியுடன் திருமணம், அவள் காதல் கை கூடப்போகும் நாளுக்காக ஆவலாகக் காத்திருந்தாள். நிச்சயம் இரு குடும்பமும் படையெடுக்கும் என்று தெரிந்தாலும், அவள் சித்தப்பா சித்ரஞ்சனிடமிருந்து வந்த தைரியமா தெரியவில்லை.
சக்தி மீதான நம்பிக்கையா தெரியவில்லை. ஆனால் சரோஜினிக்கு சக்தி மட்டுமே!

சரோஜினி அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டு கனாவில் மிதக்க,

“சரோ… சரோசா…” என்று அவன் அழைக்கவும் கடுப்பானாள்.

“சரோஜினீயீயி!!” என்று அழுத்தி சொன்னாள்.

“சரிங்க சரோஜினி! உங்களுக்குக் கல்யாணத்தை நினைச்சு கொஞ்சமும் பயமில்லையா? எதாவது ப்ளான் வச்சிருக்கியா? எப்போ சொல்ல போறோம்?” என்று கேட்டான் சக்தி. அவனுக்கு இப்போது திருமணம் குறித்த எண்ணமில்லை, இப்போதிருந்து
பலவாறு யோசித்தால் மட்டுமே இவர்கள் திருமணம் சாத்தியம் என்று தெரியும்.

சக்திவேல் அவன் வீட்டை யோசித்தான். அவன் தாத்தா லட்சுமணன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் வசுந்தரா சித்ரஞ்சனை மணந்தது இன்றும் கூட அவருக்கு வருத்தம்.

வீட்டின் ஒரே மகன்! தாத்தா, அப்பா, அம்மா என்று எல்லாருக்கும் செல்லம். அவனை சுற்றியே அவர்களின் உலகம்!

சக்திவேலின் ஆசைகளுக்கு என்றுமே அவன் வீட்டில் மதிப்பு உண்டு. ஆனால் அந்த சுதந்திரம் எல்லாம் சுதந்திர விலாஸத்து பெண் மீது காதல் என்றால் மொத்தமாக போய்விடும். உண்மையை சொல்ல வேண்டுமானால் பாகிஸ்தான் பெண்ணை விரும்பினால் கூட லட்சுமணன் திருமணம் செய்து வைப்பார். ஆனால் அவர்களின் பக்கத்து வீடு என்பது ஜப்பானுக்குக் கொரியா போல, இந்தியாவுக்குப் பாகிஸ்தான் போல, அமெரிக்காவுக்குக் க்யூபா போல.

அவன் அத்தையை அவனுக்கு மிகவும் பிடிக்கும், சின்ன வயதில் சக்தியைக் கவனித்தது எல்லாம் வசுந்தரா. ஆனால் அவரோடு நன்றாகப் பேசி பலவருடம் ஆகிவிட்டது. லட்சுமணன் ரோஷக்காரர், மகளை மொத்தமாக விலக்கிவிட்டார்.

சரோஜினி யோசிக்க, சக்தி
“சரோ! ஒருவேளை நம்ம இரண்டு பேர் வீட்லையும் ஒத்துக்கலன்னா?” என்று கேட்டான்.

“கட்டினா உங்க பேரனைத்தான் கட்டுவேனு உங்க வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருப்பேன், சத்யாகிரகம் பண்ணுவேன். நீயும் நானும் இருக்க போட்டோ எவிடன்ஸ் காட்டுவேன்” என்று சரோஜினி பேசிக்கொண்டே போக,

“உண்ணாவிரதம், சத்யாகிரகம். என்னடி இதெல்லாம்? திலகர் பேத்தினு காட்டுற பார்த்தியா?” என்று சக்தி கிண்டலாகக் கேட்டான். கூடவே,

“ஏட்டி! எவ்வளவு திமிர் இருந்தா போலீஸ்காரன் எனக்கெதிராவே எவிடன்ஸ் இருக்குனு சொல்லுவ?” என்று கேட்டான்.

“பின்ன, போலிஸா தைரியமா பொண்ணைத் தூக்கிட்டு போகாம, ஒத்துக்கலன்னா என்ன செய்வனு கேட்டா?” என்று சரோஜினியும் எதிர்க்கேள்வி கேட்டாள்.

“உங்க சித்தப்பன் புத்தி போகுதா பாரு” என்று சக்தி அதற்கும் பேச,

“உங்க அத்தைக்குப் பிடிச்சதாலதானே போனாங்க. சும்மா எங்க சித்தப்பாவையே பேசாத சக்தி” என்றாள் கடுப்பாக.

அத்தைக்குப் பிடித்து தானே போனார்கள் என்று சக்தியும் நினைத்தான். அவன் மட்டுமில்லை, எல்லாரும் அப்படித்தான் நினைத்தார்கள். வசுந்த்ரா சித்ரஞ்சனை விரும்பி மணந்தாள் என்று. ஆனால் வசுந்த்ரா சித்ரஞ்சனை காதலிக்கவே இல்லை என்ற உண்மை யாருக்கும் தெரியாது!!

தெரிந்தால்??

அது தெரியும்போது என்ன நடக்குமென்று என்று யாருக்கும் அப்போது தெரியவில்லை.

ஏன் அவர்கள் கதையைப் பேசி சண்டையிட வேண்டும் என்று நினைத்த சக்தி.

“சரி விடுடி, நான் சும்மாதான் கேட்டேன். அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான்.

“சக்தி! உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன், சித்தப்பா சித்தி எல்லாரும் கிடாவெட்டுக்கு ஊருக்கு வராங்க.”

“அதுக்கு?” என்று சக்தி அலட்சியமாகக் கேட்க ,

“உங்க அத்தை மாமா வராங்க சக்தி” சரோஜினி அழுத்தமாக சொல்லவும்,

“காது கேட்குதுடி, என்ன இப்போ மாப்பிள்ளைக்கு விருந்து வச்சு சீராட்டுனுமா?” என்றான் எரிச்சலாக.

“போடா, உன்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன். சித்தப்பா வந்தா அவரை வச்சு நம்ம விஷயம் பேசலாம்னு முன்னாடியே சொன்னேன்ல?”

“அடியே! என் காதலுக்கு எவனும் தூது போக தேவையில்லை. காதலிக்க தெரிஞ்ச எனக்கு கல்யாணத்தை நடத்திக்க தெரியும்”

“தெரிஞ்சா சரி, நீதானே ஒத்துக்கலன்னா என்ன செய்றது கேட்ட? அவர் பெரியவர், நான் கேட்டா சித்தப்பா ஹெல்ப் பண்ணுவார்னு சொன்னேன். ரொம்ப ரொம்ப திமிர்டா உனக்கு? கவர்மெண்ட் காசுல, அந்த கொழுப்பு”

“அது நான் வந்து பொண்ணு கேட்கும்போதும் தைரியமா உண்மையை சொல்லுவியா இல்லை பேக் அடிச்சிருவீயானு தெரிஞ்சிக்க கேட்டேண்டி, சுதந்திர விலாசுத்துக்கே வயித்தெரிச்சல் போல இருக்கே, என்னமோ உங்கப்பன் வீட்டு காசுல உட்கார்ந்து நான் தின்னுற மாதிரி பேசுற?” சக்திவேல் சீண்டலாக சொல்லவும்,

“சக்தி, ரொம்ப பேசுற நீ. உண்மையில நாந்தான் சண்டை போடணும், பூவையும் கொடுத்து உங்கம்மாவை பூசையும் செய்ய வச்சிட்டு இப்போ என்னை பேசிட்டு இருக்க நீ?” என்றாள் சரோஜினி.

‘அய்யயோ!’ என்று மனதில் அலறிய சக்தி,

“சரோஜினி! எனக்குத் தூக்கம் வருதுடி, காலையில் டியுட்டிக்குக் கிளம்பணும், நான் போகவாடி தங்கம்?” என்று மென்மையாகக் கேட்க, அவன் பேச்சை மாற்றியது புரிந்தாலும் சரோஜினிக்குப் பெரிதாகக் கோபம் வரவில்லை. சக்தியை ரசிக்கத்தான் செய்தது பிரியம் கொண்ட மனது.

“சரி, குட் நைட்” சரோஜினி சண்டை வளர்க்காது சொல்ல,

“சரி சரி போய் தூங்கு, காலையில் வேலைக்குப் போகணும்ல” என்று மிடுக்காக சொன்னாலும் சரோஜினியை நினைத்து சக்தியின் புன்னகை விரிந்தது. இருவரும் உறங்க சென்றுவிட, அடுத்த நாள் காலையில் அம்மாவின் சத்தத்தில் விழித்தான் சக்திவேல்.

“என்னம்மா?” என்று பதறியெழுந்தான். மாடிக்கே வந்து மகனை எழுப்பியிருந்தார்.

“டேய், எந்திரிச்சு வாடா. அங்க உங்க தாத்தா சண்டை போட்டுட்டு இருக்கார்” என்று சசிகலா சொல்ல,

“இந்த பெருசுங்களோட..” என்று சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் சக்தி.

“போம்மா, நான் வரேன்” என்றபடி எழுந்தவன் வெளியே வந்து பார்க்க, அவன் இருக்கும் அறையின் வெளியே மொட்டை மாடிதான். அங்கு நின்று பார்த்தால் பின்பக்கம் முழுக்க வயல்வெளிதான். ஊரில் உள்ள பாதி பேருக்கு அங்கேதான் வயல்கள். ‘கொள்ளகாடு’ என்பார்கள்.

கொள்ளையாய் அத்தனை காடுகள் என்பதால் வந்த பெயராக இருக்கலாம். கொள்ளக்காட்டில் இருப்பதால் ஊரின் இரைச்சல் அங்கே அதிகமிருக்காது, வயல்வெளிக்கு நடுவே வீடுகள் என்பதால் குளுமையாகவும் இருக்கும். சிலர் அங்கேயே வீடும் கட்டியிருக்க, தண்ணீர் பாய்ச்ச, நிலங்களைப் பார்க்க என்று அவர்களுக்கு வசதி.

திலகரும் லட்சுமணனும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியை கையில் பிடித்தபடி சண்டைப்போட்டனர். அப்பாக்கள் எல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டார்கள் போல, இல்லை அணி திரண்டிருக்கும் என்று சக்திக்குத் தெரியும்.

“இந்த லாலா எங்க?” என்று யோசித்தவன் நண்பனுக்கு அழைக்க,

“சொல்லுடா” என்றான் லாலா.

“டேய்! எங்கடா போய்த் தொலஞ்ச, நம்ம வீட்டு பெருசுங்க ரெண்டும் வயல்ல சண்டை போடுறாங்க டா”

“ஓஹ், அது நடக்குறதுதானே?”

“நடக்குறதா? நாயே நீ வீட்ல இல்லையா? அதான் தெனாவெட்டா பேசுறியா?” சக்தி காலையிலே பஞ்சாயத்தா என்று எரிச்சலில் பேசினான்.

“டேய், பகத்க்கு ஸ்கூல் லீவ் விட்டாங்கடா. அவன் ஊருக்கு வர ஆசைப்பட்டான்னு சித்தப்பா அவனை பஸ் ஏத்தி விட்டார், அவனை அழைக்க பஸ் ஸ்டாண்ட் வந்திருக்கேன். நீ பஞ்சாயத்தை முடிச்சிட்டு நைட் சொல்லு. பஸ் வந்தாச்சு, நான் அப்புறம் பேசுறேன்” என்று லாலாவும் அவசரமாக வைத்தான்.

✅ End of Episode 4
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 4 days ago

Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top