Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 12

தூரம் 12

ஜன்னலோரம் நின்றிருந்த வசுந்த்ராவை நெருங்கி நின்றான் சித்ரஞ்சன். வசுந்த்ரா திரும்பாமலே நிற்க,

“வசு” என்றபடி மெல்ல அவள் தோளைத் தீண்டியிருக்கும் அவன் கரம். அவ்வளவுதான்!

கணவனின் கன்னம் சிவக்க வைத்தாள் வசுந்த்ரா.

“என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? கட்டிலும் கயிறும் என்னை கட்டுப்படுத்தும் நினைச்சியா?” என்று கத்தினாள். அவள் கத்தினாலும் அவள் குரல் அத்தனை சத்தமாக இல்லை. அழுதழுது தொண்டை அடைத்திருந்தது.

காலையில் நடந்த திருமணத்துக்குப் பின் இப்போதுதான் கணவனும் மனைவியுமாக ஒரே அறையில் இருந்தனர். அதுவரை வசுந்த்ரா தனியாக இருந்தாள், வீட்டுக்கு யார் யாரோ வந்தார்கள். கருத்துச் சொன்னார்கள், கலைந்து போனார்கள். வசுந்த்ராவுக்கு இப்போது தாங்கமுடியவில்லை. உண்மையில் அவளது அப்பாவும் மற்ற உறவுகளும் வரவில்லை என்றால், சித்ரஞ்சன் கட்டிய தாலியை அவனிடம் விட்டெறிந்து சென்றிருப்பாள்.

சில நிமிடங்கள் அவன் செயல் கொடுத்த அதிர்ச்சியில் நிற்க, அதற்குள்ளாகவே செய்தி பரவி எல்லாரும் கூடி, இதோ அன்னியமாக இருந்த வீட்டில் அவளிருக்க, அவள் வீடு அன்னியமாகப் போய்விட்டது. காலைப்பொழுதினை அந்த வீட்டில் தொடங்கியவள் இதோ இரவினில் இங்கிருந்தாள். அவள் வீடு அருகே இருந்தும் தூரமாய் ஒரு உணர்வு.

சித்ரஞ்சனுக்கு அவன் செயல் தவறு என்று தெரியும், ஆனாலும் அதனை தெரிந்தே செய்தான். அவன் எண்ணம் வேறாக இருந்தது, காலையில் அந்த வீட்டு பெண்ணாக இருந்தவள் இப்போது ‘என் மனைவி’ என்ற எண்ணம். அவன் அப்பா விட்ட அறையில் கன்னத்தில் தடமிருக்க, அதெல்லாம் அவனுக்கு அப்போது வலிக்கவில்லை. இப்போது கூட ‘வசுந்த்ரா என்னோட இருக்கா’ என்று குஷியாக இருந்தான்.

வசு எவ்வளவு நேரம் நிற்கிறாள் என்று தெரியாமல் அவளை உட்கார சொல்லவே அவன் நெருங்கியது. அதற்கே வசுந்த்ரா கொந்தளித்திருக்க, இப்படி வசுந்த்ரா என்றுமே நடந்ததில்லை. யாரை பற்றியும் கவலையற்றவனுக்கு வசுந்த்ராவின் வருத்தம் வருத்தம் தந்தது. அவன் செயல் வசுந்த்ராவைக் காயப்படுத்தியிருக்கிறது என்ற குறைந்தபட்ச எண்ணமிருக்க, அடி வாங்கியவன் அமைதியாக நின்றான்.

‘இன்னொரு கன்னம் வேணுமா எடுத்துக்கோ’ என்று இரட்சகனாய் நின்றிருக்க, வசுந்த்ராவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சித்ரஞ்சன் மேல் அது நாள் வரை இருந்த மரியாதை எல்லாம் காணாமல் போனது.

அவளது ஆத்திரம் தீர வழியின்றி நின்றிருந்தவள், “அறிவிருக்காடா உனக்கு?” என்று இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தாள்.

“சாரி வசு, தப்புதான்” என்று சொல்ல,

“யாருக்கு வேணும் உன் சாரி? இவ்வளவு பேசுறவ ஏன் இன்னும் உன் வீட்ல இருக்கேன் பார்க்கிறியா? நீ செஞ்ச காரியத்துக்கு எங்கப்பா உன்னை வெட்டிப்போட்டுடுவார்னுதான் அமைதியா இருக்கேன். நீ தாலி கட்டிட்ட, என்னை லவ் பண்ற எல்லாம் காரணமில்ல, எங்கப்பா உன்னால ஜெயிலுக்குப் போக கூடாதுனு அமைதியா இருக்கேன்.” என்றவளுக்கு அழுகை வந்தது.

அதுவும் கோவிலில் நடந்த சண்டையை நினைத்தவளுக்கு நடுங்கியது. எவ்வளவு வார்த்தைகள், பேச்சுகள்..!

“நீ தாலி கட்டிட்டா நான் உன்னோட மனைவியாகிடுவேனா? என்னை ஜஸ்ட் இந்த கயிறு கன்ட்ரோல் பண்ணும் நினைச்சியா? இல்லை கல்யாணமாகிடுச்சு, ஒரு குழந்தையைக் கொடுத்தா அமைதியா இருப்பா நினைச்சியா? பக்கத்துல வந்த உன்னை கொன்னுடுவேன் டா” என்று மிரட்டியவள் மேஜையில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அறையில் இருந்த கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

சித்ரஞ்சனுக்கு இப்போது காதல் கை கூடியதா? இவளுக்கு என்னை பிடிக்காதா என்ற பயம் தொடங்கியது. அருகே சென்று அவளை கோபப்படுத்த விரும்பாதவன் தரையில் படுத்துவிட்டான். அடுத்த நாள் காலையில் வசுந்த்ரா எழுந்தவள் மாடியில் இருந்த கழிவறையைப் பயன்படுத்திவிட்டு மீண்டும் அறைக்கு வந்தாள். தரையில் கைகள் இரண்டையும் தலைக்குக் கொடுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சித்ரஞ்சன். அவன் இரு கன்னத்திலும் விரல் தடங்கள் அழுத்தமாய்ப் பதிந்திருந்தன.

வசுந்த்ராவுக்கு இரக்கமெல்லாம் ஒன்றும்வரவில்லை. “முட்டாள்” என்றே தோன்றியது. இவன் எதையுமே யோசிக்கமாட்டானா? இல்லை என்னை என்ன நினைத்தான்? இப்போது நான் நினைத்தால் கூட போகமாட்டேனா? இதன் பெயர்தான் காதலா?

அதுவரை உறக்கத்தோடு உறங்கிய ஆத்திரம் இப்போதும் மீண்டும் எழ, தலையணையைத் தூக்கி சித்ரஞ்சன் மேல் எறிய, வாங்கிய அடியெல்லாம் இப்போது எரிச்சல் கூட கன்னத்தில் கை வைக்க முடியவில்லை. மெல்ல எழுந்தமர, வசுந்த்ரா அவன் கட்டிலில் அவன் முன் இருந்தாள்.

கண்களில் ஒரு பரவசம். வசுந்த்ராவைப் பார்க்கவுமே புன்னகை பூ பூத்தது. அந்த பார்வையே வசுந்த்ராவை கோபப்படுத்த,

“எனக்கு இங்க இருக்க பிடிக்கல” என்றாள்.

“வசு” என்று சித்ரஞ்சன் எழுந்து நின்று அவளை பார்த்து,

“இதானே வசு நம்ம வீடு, வேறெங்க போறது?” என்றதும்,

“நம்ம வீடா? நேத்துவரைக்கும் அந்த வீடு என் வீடா இருந்தது. நீங்கதான் பெரிய காதல் மன்னன் ஆச்சே, என்னை கூட கேட்காம கல்யாணம் பண்ணிட்டீங்க. என் வீட்ல என் அப்பா, அண்ணா எல்லாம் என்னை வேண்டாம்னு போய்ட்டாங்க. நீ மட்டும் உன் குடும்பத்தோட இருப்பியா? நான் இங்க இருக்க மாட்டேன். அப்படி இருக்கணும்னு சொன்னா நான் பாட்டுக்கு எங்காச்சும் கிளம்பி போயிடுவேன்.” என்று வசுந்த்ரா சொல்ல சித்ரஞ்சன் அதிர்ச்சியாக பார்த்தான்.

அவன் பார்த்த வசு இப்படி பேச மாட்டாள். ஆகாத குடும்பம் என்றாலும் பார்க்கும்போது சினேகத்தோடு கடக்கும் பெண், மனைவியானதும் இப்படி பேச, சித்ரஞ்சன் வாழ்க்கையை நினைத்து அஞ்சினான்.

அவனை பொருத்தவரை தாலி கட்டினால் கல்யாணம். எனக்குப் பிடித்த பெண், அவளும் என்னை பிடிக்காது என்று சொல்லவில்லையே என்ற நினைப்பு. திருமணத்திற்குப் பின் ஒரு புது வசுந்த்ராவைப் பார்த்தான், ஆனால் பிரிய மனத்துக்கு அதுவும் பிடித்தது.

“கொஞ்ச நாள் டைம் கொடு வசு, நான் ட்ரான்ஸ்பர் கேட்கிறேன். இங்கயே இருந்துட்டு வீட்டுக்கு வரலன்னா நல்லா இருக்காது” சித்ரஞ்சன் தணிவாக சொல்ல,

“முடியாது” என்று முடித்தாள் வசுந்த்ரா.

சித்ரஞ்சனுக்கு அப்போது ஒரு தெளிவு பிறந்தது. காதலிப்பது எளிது, கல்யாணம் செய்து அந்த காதலோடு வாழ்வது கடினம் என்று. சித்ரஞ்சன் எப்படியும் இரு வீட்டிலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், திருமணம் முடிந்தால் அப்பா வீட்டில் சேர்க்க மாட்டார், வேறெங்காவது செல்ல வேண்டும் என்று அவன் வேலை பார்க்கும் ஊரில் நண்பனை வாடகைக்கு வீடு பார்க்க சொல்லியிருந்தான். இங்கிருந்து ஒரு மணி நேர பயணம்தான். அப்பா அடித்தாலும் ஏற்றுக்கொண்டதில் சந்தோஷமிருந்தாலும் வசுந்த்ராவின் பேச்சைத்தான் கேட்டான்.

கல்யாணமாகிவிட்டது, வசு என் கைக்குள் இருப்பாள் என்றவனின் கனவுகளை பச்சைத்தண்ணீரை படக்கென்று முகத்தில் ஊற்றியது போல் கலைத்தாள் வசுந்த்ரா.

அருகிலிருந்தும் தூரமாய் இருப்பதன் அர்த்தத்தை மனைவி உணர்த்தினாள்.

இத்தனை வருடங்களுக்குப் பின்னும் சித்ரஞ்சனுக்கு அந்த எண்ணம் வரும். வசுந்த்ராவுக்கு எனக்கு அவளைப் பிடித்தது போல் பிடிக்குமா? என்ற கேள்வி அடிக்கடி இன்ஸுரன்ஸ் அழைப்புகள் போல் அகத்தை தொந்தரவு செய்யும்.

***********

சித்ரஞ்சன் சண்டையிட்டு சென்றவன் மாலை ஐந்து மணிக்குத்தான் மீண்டும் அறைக்குள் வந்தான். லாலா அழைத்தான் என்று கீழே சென்றவன், அப்பாவிடம் பேசிவிட்டு மதிய உணவு உண்டவன் வெளியே சென்றுவிட்டான். இப்போது அறைக்குள் நுழையவும் வழக்கம் போல் ஜன்னலருகே அவன் நிலா.

அந்த நாள் நினைவுகள் சோர்வாய் அவனை தாக்கின, பக்கம் சென்றவனுக்கு அவள் அறைந்தது ஞாபகம் வந்தது. திருமணமான மறு நாள் கன்னமிரண்டும் சிவந்து தடித்திருந்த மகனை பார்த்த அஞ்சம்மா கணவரை திட்டிக்கொண்டே இருந்தார். யாரும் வசுந்த்ரா அடித்திருக்கக் கூடுமென்று நினைக்கவில்லை. நேற்று திலகர் விட்ட அடிகள் என்று நினைத்தனர்.

இப்போது போய் அப்படி நிற்க முடியாது என்று பெருமூச்சோடு திரும்ப, அவன் அருகே வந்து நிற்கவும் அவன் மூச்சுக்காற்றின் தீண்டலில் வசுந்த்ரா மெல்ல திரும்பினாள்.

மனைவி பார்க்கவும், “நைட் ஊருக்குப் போகணும் வசு, பேக் பண்ணிக்கோ. பகத் ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்னு சொல்றான். நீ பேசிக்க” என்றவன் குளிக்க போனான்.

வசுந்த்ரா பதில் பேசவில்லை.

‘உண்மையை சொன்னா கோவம் வருது. போடி’ன்னா போற, நான் பேசமாட்டேன். ’ என்று உறுதியாக இருந்தாள்.

காதல் என்பதற்குப் பொதுவான விதிகள் கிடையாது. ஆனால் இருவருக்குமிடையே காதல் என்ற பதம் வருகையில் அதன் அர்த்தம் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த காதல் நிலைத்து நிறைவைத் தரும்! சித்ரஞ்சன், வசுந்த்ரா விஷயத்தின் சிக்கல் அதுவே.

பகத் வராமல் போக, சித்ரஞ்சன் வசுந்த்ரா மட்டுமே சென்னை புறப்பட்டனர். சித்ரஞ்சனும் சென்னை சென்றதும் பேசவில்லை. எப்போதும் வசுந்த்ராவோடு சண்டையிட்டாலும் முதலில் பேசுபவனுக்கு இந்த முறை எப்படி சக்திக்காக என்னை பேசலாம் என்ற குடைச்சல்.

‘பெருசா என்னை லவ் பண்றேன்றா, எனக்குப் புரியாது’ன்றா. ஆனா அன்னிக்கு செஞ்சது இன்னிக்கு வர சொல்லிக் காட்டுறா. லவ் பண்ணினா இப்படித்தான் சொல்லி சொல்லி காட்டுவாங்களா?’ என்று சித்ரஞ்சனும் கடுப்போடு சுற்றினான்.

சித்ரஞ்சனால் பேசாமல் இருக்கவும் முடியவில்லை. பேசவும் பிடிக்கவில்லை, பேசினால் சண்டையாகிறதே என்று பேசாமல் இருந்தவனுக்கு பேச ஒரு காரணம் கிட்டியது. சித்ரஞ்சனுக்கு டிஎஸ்பியில் இருந்து ஏடி.எஸ்.பியாக பதவி உயர்வு கிடைத்தது.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவன் உணவை முடித்த பின் செல்லாமல் நடுவீட்டில் நடைபயின்றான். வசுந்த்ரா டீவி பார்த்துக்கொண்டிருக்க, இவன் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அப்போதும் வசுந்த்ரா பேசவில்லை.

‘பார்க்கிறாளா பாரு’ என்று பொறுமியவன் வேண்டுமென்றே முன்னே நின்றான்.

வசுந்த்ரா பொறுமையாக இருந்தவள் ஒரு கட்டத்தில் அவனை பிடித்து இழுத்துவிட பார்க்க, வாய்ப்புகளைப் பற்றிக்கொள்வதில் வசுந்த்ராவின் கணவனை யாராலும் மிஞ்ச முடியாது. அவள் லேசாக பிடித்ததுக்கே ஜம்மென்று வசுவின் மேல் விழுந்தான்.

“ஆ…ரஞ்சன் எரும மாடே” என்று வசுந்த்ரா கத்தி அவனை தள்ள, அவனோ வசதியாக சோபாவில் சாய்ந்தவன் காக்கி சட்டையின் இரு பட்டன்களை அவிழ்க்க, வசுந்த்ரா திகைப்போடு பார்த்தாள். அந்த திகைப்பில் சித்ரஞ்சனுக்குச் சிரிப்பு வர புன்னகையோடு,

“இப்படி பார்க்காதடி எனக்கு வெட்கமா இருக்கு” என்று சொல்ல, வசுந்த்ரா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“எதுக்கு இப்போ ஷோ காட்டுறீங்க?” என்றவளின் கையில், பனியனுக்குள் வைத்திருந்த வெள்ளை கவர் ஒன்றை நீட்டினான்.

“எங்க வைக்கிறான் பார் கவரை?” என்றபடி வசுந்த்ரா முறைக்க,

“வாங்கி பார்த்துட்டு பேசு வசு” என்றான்.

அசட்டையாக அதனை திறந்து பார்த்தவள் விழிகள் ஒரே நொடியில் உற்சாகத்தில் மின்னின.

“ஹேய் ரஞ்சன்! ஏடிஎஸ்பி!!” ஆச்சரியத்துக்கும் சந்தோஷத்துக்கும் முகமிருக்குமென்றால் அந்த நொடியில் வசுந்த்ரா அப்படியிருந்தாள்.

பதவியுயர்வு கிட்டியபோது கூட கிடைக்காத அந்த போதை வசுந்த்ராவின் மகிழ்ச்சியைப் பார்த்ததும் கிட்டியது. அவன் உழைப்பில் கிடைத்த வெற்றி! ஆனால் அவனை விட அவள் மகிழ்ந்தாள். அவள் மகிழ்ச்சியே பிரதானமாக இருந்தது.

“வந்ததும் இவ்வளவு பெரிய விஷயம் சொல்லாம சோறைப் பார்த்ததும் உட்கார்ந்தாச்சு” என்று கடிந்தவள் சித்ரஞ்சனின் கையைப் பிடித்து வாழ்த்து சொன்னாள். வசுந்த்ரா வாழ்த்தவும் சித்ரஞ்சன் மனைவியைக் கட்டிக்கொண்டான். வசுந்த்ரா மறுக்கவோ, திட்டவோ இல்லை.

சித்ரஞ்சனின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. அதுவரை அவனோடு சண்டையிட்டிருந்தாலும் இப்போது அதனை கிளறவில்லை. வசுந்த்ராவுக்கு எப்போதும் அந்த தெளிவுண்டு. சித்ரஞ்சன் தவறானவனில்லை என்று தெரியும், அப்படியிருந்தால் அன்றே வேண்டாம் என்று போயிருப்பாள்.

அவனை, அவன் செயலின் காரணத்தை புரிந்ததால் மட்டுமே அவர்களின் திருமணம் நிலைத்து நீடித்திருக்கிறது. இப்போது வரை அது சித்ரஞ்சனுக்குப் புரியவில்லை என்ற வருத்தம் வசுந்த்ராவுக்கு இருந்தாலும், எதார்த்தங்களை ஏற்று வாழும் பெண்.

சித்ரஞ்சன் மனைவியைக் கட்டியிருந்தவன் லேசாக இமையுயர்த்தி மனைவியைப் பார்த்தான். அவனுக்கு இத்தனை நாள் பேசாமல் இருந்ததில் உண்டான இடைவெளியை குறைக்க விருப்பம். வசுந்த்ரா வெடுக்கென்று சொல்லிவிட்டால் தாங்க முடியாது. ஏற்கெனவே சக்தி விஷயத்தில் இன்னும் சமாதானமாகவில்லை. யோசனையோடு விலகியவனின் சட்டை காலரைப் பிடித்திழுத்த வசுந்த்ரா கணவனின் கன்னத்தை சிவக்க வைத்தாள்.

உண்மையில் சித்ரஞ்சனால் வசுந்த்ராவை கணிக்கவே முடியவில்லை. சண்டையிருக்கிறது, எப்படி பேசுவாள் என்று ஏக்கம் பிடித்திருந்தவனை முத்தமிட்டு ஆச்சரியம்கொள்ள வைத்தாள்.

“தேங்க்ஸ் வசு” என்று சித்ரஞ்சன் சொல்ல,

“எனக்கெதுக்கு தேங்க்ஸ்?” என்று வசு கேட்க,

“நீதானே என்னை எப்பவும் பார்த்துக்கிற, நீ இல்லன்னா நான் என் வேலையில ஒழுங்கா இருக்க முடியாது.” என்றதற்கு வசுந்த்ரா புன்னகையுடன் பார்த்தாள்.

“சும்மாவே டி.எஸ்.பியை கையில பிடிக்க முடியாது, இனிமே ஏ.டி.எஸ்பி வேற”

“கட்டிப்பிடிச்சிட்டு இருக்கும்போதே கையில பிடிக்க முடியலன்னு சொல்ற” சித்ரஞ்சன் மனைவியை இன்னும் இறுக்கமாக நெருக்கமாக இழுத்துக் கேட்டான். வசுந்த்ரா இழுப்பில் நெருக்கமாக சாய, சித்ரஞ்சன் முத்தமிட்டு அந்த பொழுதுகளை களவாடினான்.

வசுந்த்ராவின் அலைப்பேசியில் அலாரம் சத்தம் கேட்கவும்தான் சித்ரஞ்சன் விலகினான்.

“பக்த்’தை அழைக்க போகணும், விடுங்க” என்று எழுந்தவள் மீண்டும் கணவனை அணைத்து,

“கங்கிராட்ஸ் ரஞ்சன்” என்றாள். சித்ரஞ்சன் சிறகின்றி பறந்தான்.

“நான் ட்ராப் பண்றேன் வசு” என்றதும் வசுந்த்ரா சல்வார் அணிந்து வர, சித்ரஞ்சன் மனைவியோடு சேர்ந்து மகனை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டான். மகனிடமும் அவனுக்கு பதவி உயர்வு கிடைத்தது சொல்ல,

“அப்பா! சூப்பர். அப்போ எனக்கு நான் கேட்ட அந்த ஷூ வாங்கித்தரணும்” என்றான் பகத் உற்சாகமாக.

“அப்பா ஹார்ட் வர்க் பண்ணினதுக்கு உனக்கு ஏன் டா ஷூ? நீ அம்மாவுக்குப் ப்ராமிஸ் பண்ணின மாதிரி டென் ரேங்’குள்ள இந்த டைம் எடு. அம்மா ஷூ வாங்கித் தரேன்” என்றாள் வசுந்த்ரா.

“அப்பா” என்று பகத் இழுக்க,

“அப்பா உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன், வீக்கெண்ட் படத்துக்குப் போகலாம். ஓகேவா? மத்தபடி அம்மா சொன்னதுதான்” என்றான் சித்ரஞ்சனும் கண்டிப்பாக.

மகனுக்கும் மனைவிக்கும் ஐஸ்கீர்ம் வாங்கிக்கொடுத்து வீட்டில் விட்டான் சித்ரஞ்சன்.

********************************

அன்று காலை முதலே சக்தி உற்சாகமாக இருந்தான். மாவட்ட க்ரைம் ப்ராஞ்சில் சம்பள உயர்வோடு அவனுக்குப் பணி கிடைத்திருந்தது. தஞ்சாவூர் பல்கலைகழகத்தில் நடந்த ஒரு கொலைவழக்கை விசாரித்து, போதைப்பொருள் கடத்தலை கண்டுபிடித்ததற்காக அவனுக்கு இந்த பதவி உயர்வு.

முன்பு பதவியை துஷ்ப்ரோயகம் செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துவிட்டு புதிதாக அந்த இடத்திற்கு ஏ.டி.எஸ்.பி வருகிறார் என்பதால் சக்தி விரைவாக கிளம்பினான். ஆனாலும் கொஞ்சம் தாமதாகிவிட்டது.

“என்னண்ணே, ஏடிஎஸ்பி வந்துட்டாரா?” என்று கேட்க,

“அவர் வந்து அரை மணி நேரமாச்சு தம்பி” என்றார் ஏட்டு.

“பார்டா, ஏடிஎஸ்பி ரொம்ப பொறுப்போ” என்றபடி வேக எட்டுகள் வைத்து, அவரிடம் ரிப்போர்ட் செய்ய போனான் சக்திவேல்.

“மே ஐ கமின் சர்” என்று கதவை தட்ட,

“எஸ், கமின்” என்று கம்பீரக் குரலில் உள்ளே நுழைந்தவன் நிச்சயம் சித்ரஞ்சனை எதிர்ப்பார்க்கவில்லை.

சித்ரஞ்சன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் நிமிர்ந்து சக்தியைப் பார்த்தான்.

“இதான் வர டைம்’மா?” என்று சித்ரஞ்சன் கேட்க,

“பின்ன உங்களை மாதிரி ஓட தெரியல” என்றான். அது குத்தல் பேச்சு என்று இருவருக்குமே தெரிய,

“மிஸ்டர். சக்தி! மைண்ட் யுவர் வர்ட்ஸ் அண்ட் நவ் கெட் அவுட்” என்றான் சித்ரஞ்சன் கோபமாக. மற்ற இடங்களில் என்றால் சித்ரஞ்சன் கடுமையாக சொல்லியிருக்க மாட்டான், வேலை செய்யும் இடத்தில் கூட இவனுக்கு என்ன இவ்வளவு? இவனால நானும் வசுவும் சண்டைப்போட்டுட்டு இருக்கோம். சின்ன பையன் என்னை பேசுவானா என்ற வயதின் ஈகோ.

சித்ரஞ்சன் எடுத்தெறிந்து பேசிவிட, சக்திக்குக் கோபம் வந்தது. அவன் மீது தவறென்று தெரியும், வேறு அதிகாரியாக இருந்தால் சக்தி இப்படி நடந்திருக்க மாட்டான். சித்ரஞ்சன் என்பதினால் அப்படியொரு பேச்சு. அந்த கோபத்தை தணிக்க நண்பனிடம் பேச, அந்த கோபம் தணியாமல் சித்ரஞ்சன் மீது திரும்பியது.

‘என்ன வேலை செஞ்சிருக்கார் பார் இந்த ஆளு” என்று சக்தி பல்லைக் கடித்தான்.

✅ End of Episode 12
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 2 weeks ago

Very nice.

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top