Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 5

சக்தி டீஷர்ட்டை மாட்டிக்கொண்டு வேகவேகமாக படிகளில் இறங்கி, வீட்டின் பின்பக்கமிருந்த வயல்வெளிக்குச் சென்றான்.

“தாத்தா! என்னாச்சு?” என்று சக்தி லட்சுமணனை இழுக்க,

“டேய், விடுடா. இவனுக்கு என்ன திமிர் இருந்தா எங்கப்பாவை பேசுவான். பயந்தாங்கொள்ளி பய” என்று அவர் கத்த,

“யார்டா பயந்தாங்கொள்ளி? நீதான் டா நாமுருதா பய… “ என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார் திலகர்.

“தாத்தா, சண்டை போடாத” என்று சரோஜினி வந்து திலகரின் கையைப் பிடிக்க,

“நீ எதுக்கு இங்க வந்த, உள்ள போ” என்று கத்தினார்.

“நீ வா வாஞ்சிப்பா, இவர்கிட்ட என்ன பேச்சு?” என்று அஞ்சம்மா கணவனை அழைக்க,

“இவன் நம்மவூட்டு வரப்ப வெட்டுவான், பகல்லயே இவ்வளவு சுரண்டுறவன் ராவைக்கு நமக்குத் தெரியாம எவ்வளவு வெட்டுவான். சும்மா விட சொல்றியா?” என்று மனைவியிடம் கேட்டார்.

“ஏன் தாத்தா?” என்று சக்தி மெல்லிய குரலில் தாத்தாவிடம் கேட்க, “டேய், எனக்கெதுக்குடா அவன் இடம்? ஏதோ யோசனையில கை தவறி கொஞ்சமா அவன் பக்கம் வெட்டிட்டேன், கண்ணாடி கூட போடலடா.” என்று லட்சுமணன் பாவமாகச் சொல்ல, தாத்தா அப்படியெல்லாம் வேண்டுமென்றே வெட்டமாட்டார் என்று சக்திக்குத் தெரியும்.

“அதான் தெரியாம நடந்து போச்சுனு சொல்றார்ல, அப்புறம் ஏன் கத்துறீங்க?” என்று சக்தி திலகரிடம் கேட்க,

“எப்படிடா தெரியாம நடக்கும்? இவன் வேணும்னு செஞ்சிருப்பான்? அப்பவே துரைக்குக் கூஜா தூக்கினவன் ஆச்சே” என்றார் திலகர்.

“தாத்தா! பேசாம இரேன். அதான் தெரியாம வெட்டியாச்சு சொல்றாங்க இல்ல” என்று சரோஜினியும் சமாதானம் செய்ய,

“நீ சும்மா இரு, நீ ஒருத்தனைக் கட்டிட்டு போயிடுவ. என் பேரனுங்களுக்கு உள்ளதை கண்ட பயலுக்கு நான் விட்டுக்கொடுக்கணுமா?” என்று சரோஜினியைப் பேசிவிட,

“என்னமோ பண்ணிக்கட்டும் போ, உன் வீட்டுக்காரர் வாங்கிகட்டிக்காம விடமாட்டார் ஆத்தா. எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகிடும்” என்று அவள் போக பார்க்க,

“ஹே இந்தாருடி, பூவை பறிக்காமலயே அவன் அம்மா உன்னை என்ன பேச்சு பேசினா, இப்போ நம்ம வூட்டு நிலத்தை வெட்டினா சும்மா விட சொல்றியா?” என்று அஞ்சம்மா மெல்ல பேத்தியின், கையைப் பிடித்துக் கொண்டு கிசுகிசுத்தார்.

“எப்படியும் உன் புருஷன் பேரனுங்களுக்குத்தானே எல்லா சொத்தையும் எழுதி வைக்க போறார், எனக்கு ஒன்னுமில்லல.
எனக்கு என் புருஷன் வூட்டு நிலமிருக்கு, நான் அதை காவந்து பண்ணிக்கிறேன். நீயும் உன் புருஷனும் எப்படியோ போங்க” என்று சொல்லி சரோஜினி வீட்டுக்குள் நுழைந்தாள்.

உள்ள வந்த மகளிடம், “இந்தாடி உனக்குப் பிடிச்ச புளிசோறும் உருளைக்கிழங்கும். எவ்வளவு வேணுமோ வச்சிக்கோ, எப்படியும் மதியானத்துக்கு நம்ம கறி எடுக்கப்போறோம். நீ அந்திக்கு வந்து சாப்பிடலாம்” என்றார் சித்ரா.

“அட சூப்பர்! தேங்க்ஸ்மா” என்று புன்னகையோடு சரோஜினி சொல்ல, புடவையில் தயாராக நின்ற மகளைப் பார்த்து,

“ம்ம், இன்னும் எத்தன நாள் என் கையால சோறு கட்டித்தர முடியும்? சீக்கிரம் இன்னொரு வீட்டுக்குப் போய்டுவ, நீயே உன்னைப் பார்த்து, உன் புருசனைப் பார்த்து, மாமியா மாமனார், நாத்தனார், கொழுந்தன்ன்னு இருந்தா அவங்களையும் பார்க்கணும்..” என்று புலம்பினார்.

“அட, நீ எட்டிப்பார்த்தா இருக்க தூரத்துலதான்மா நான் கட்டிட்டு போவேன். நீ கவலைப்படாத” என்று மகள் சொன்னது சித்ராவுக்கு அந்த காலை நேர பரபரப்பில் சரியாக விளங்கவில்லை.

“என்னடி உன் ஆத்தாவும் தாத்தாவும் வருவாங்களா?”

“வந்தா வராங்க இல்லாட்டி போறாங்கம்மா, எல்லா சொத்தும் அவரு பேரனுங்களுக்காம், அதான் எப்படியோ போங்கன்னு வந்துட்டேன்” என்று மகள் சொல்ல அவளின் ஜாக்கெட்டை சரி செய்த சித்ரா,

“அதான் நல்லது, நீ சரியாவே சண்டை போட்டாலும் பார்க்கிறவங்க இந்த பொண்ணு பாரேன், இப்படி சண்டைக்கு நிக்குதுனு உன்னை சொல்லிடுவாங்க. இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணு அப்படியெல்லாம் பேச்சு வாங்கக் கூடாது, அதுக்குத்தான் அம்மா உன்னை அடக்கி வைக்கிறேன்” என்றதும்,

“சரிம்மா” என்று தலையை ஆட்டி, தனக்குத் தேவையானதை பையில் வைத்து வாசலுக்குப் போனாள் சரோஜினி.

சித்ரா சமையல்கட்டிலிருந்து, “பூ கட்டி டேபிள்ல வச்சுருக்கேன், மறக்காம தலையில வச்சுட்டு போடி” என்றார்.

“இப்போ என்ன? ஆமாடா, தெரிஞ்சுதான் வெட்டினேன். என்ன இப்போ? புடுங்கிடுவியா நீ?” என்று லட்சுமணனும் பொறுத்துப் பார்த்தவர் பொங்கிவிட்டார்.

“இருடா, என் மவனும் என் பேரனும் வரட்டும். உன்னை என்ன பண்றேன் பாரு” என்று திலகரும் கத்தினார்.

“எனக்கு யாரும் வேண்டாம்டா, எங்க தாத்தா ரெண்டு பேரை ஒத்த ஆள வெட்டினவர், எனக்கு எவனும் வேண்டாம். உனக்கு நெஞ்சுல தைரியமிருந்தா வாடா..” என்று லட்சுமணன் வெட்டியை மடித்துக் கட்டி முன்னே செல்ல, அவரின் கையைப் பிடித்து நிறுத்திய சக்தி முன்னே சென்றான்.

“தாத்தா! வயசான காலத்துல இதெல்லாம் தேவையா? சும்மா இருங்க, என்ன இப்போ எங்க தாத்தா வெட்டினது தப்புதான், நீங்க உங்க பங்கை சரி பண்ணிக்கோங்க. இல்லையா பஞ்சாயத்துல பேசுங்க” என்று திலகரிடம் சொல்ல,

“நீ பெரிய இன்ஸ்பெக்டர்னா உன் பேச்சை நான் கேட்கணுமா?” என்று அவனையும் பேச, சக்திக்கு காலை பொழுதே தலைவலியானது. திலகருக்கு அந்த காலை வெயிலில் வியர்த்துக் கொட்ட, கணவரின் உடல் நிலை கருதிய அஞ்சம்மாள்,

“நம்ம அப்புறம் பேசிப்போம், வாங்க” என்று கணவனை மல்லுக்கட்டி இழுத்துப்போனார். பூ விஷயத்தில் சக்தி சரோஜினிக்கு சாதகமாகப் பேசியதில் அஞ்சம்மாவுக்கு அவன்மேல் ஒரு நல்லெண்ணம். கணவரை இழுத்தவர் சக்தியிடம் கண்காட்டி லட்சுமணனையும் இழுத்துப் போக சொன்னார்.

வீட்டுக்குச் சென்ற லட்சுமணனுக்கு, காலை வெயிலில் அவ்வளவு நேரம் நின்று வரப்பு வெட்டியது, நீர் பாய்ச்சியது போதாக்குறைக்குப் பக்கத்து வீட்டோடு சண்டையிட்டது எல்லாம் சேர தலைசுற்றியது. பேரனிடம் சொல்ல,

“ம்மா, தாத்தாவுக்கு நீராரம் கொண்டு வா. எலுமிச்சை பழம் பிழிஞ்சுப் போட்டு வா” என்று கத்தியவன் லட்சுமணனை அவரின் சாய்வு நாற்காலியில் உட்கார வைத்து, மின்விசிறியைப் போட்டான். ஜன்னல்களை எல்லாம் நன்றாக திறந்துவிட, சசிகலா திட்டிக்கொண்டே நீராகாரம் கலந்தார்.

“பெரிய சண்டியராட்டம் போறது, அப்புறம் வந்து இங்க சாயுறது” என்று மாமனாரைப் பேச,

“அப்படி சண்டியராட்டம் போனதாலதான் நீ இங்க உட்கார்ந்து ஆண்டுட்டு இருக்க” என்ற குரலில் அவர் பதறிப் பார்த்தால், சக்தி அம்மாவை முறைத்து நின்றான்.

“டேய்!” என்று அவர் மகன் தோளில் அடிக்க,

“தாத்தாவை பேச உனக்கு இதான் நேரமா? அந்த வீட்டு பெருசு சொன்னதையே திரும்ப சொல்லுது, அப்போ நம்ம தாத்தா என்ன செய்ய முடியும். தள்ளுமா நான் பிழியுறேன்” என்று அம்மாவை விலக சொல்லி, வேகமாக எலுமிச்சை சாறும் உப்பும் கலந்து தாத்தாவுக்கு நீராகாரம் கொடுத்தான் சக்தி.

“தாத்தா, குடிச்சிட்டு கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு. சாப்பிட்டு ரெஸ்ட் எடு, வெயிலா இருக்கு, வெளியே போகாத” என்று அனுசரணையாகச் சொல்லி செல்லும் பேரனை வாஞ்சையுடன் பார்த்தார் லட்சுமணன்.

இந்த சண்டைகள் அடிக்கடி இப்படி நடக்குமென்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளாது அடுத்த வேலையைப் பார்த்தனர். மாலைநேரம் சக்தி வேலை விட்டு வர, சரோஜினி ஊரிலிருந்து வந்த தன் சித்தப்பா மகன் பகத் சிங்’குக்கு ஊரை சுற்றிக் காட்டினாள். சரோஜினி வண்டியில் சுற்றுவது கண்டு சக்தி அவள் வண்டிக்குக் குறுக்கே வண்டியை நிறுத்த,

“ஐ, சக்தி மாமா” என்று உற்சாகமாக அழைத்தான் பகத் சிங். சித்ரஞ்சன் வசுந்த்ராவின் மகன்.

“டேய் மாப்ள, எப்போ வந்த? எப்படியிருக்க?” என்று சக்தி அவனிடம் பேச, சரோஜினி காக்கி சட்டையிலிருந்த தன் காதலனை கண்களவு செய்தாள். சக்தி ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாது கவனமாகத் தவிர்த்தான். அப்படி அவன் தவிர்த்தும் கூட இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்பது வாஞ்சிநாதன் கண்ணில் பட்டுவிட்டது. வீட்டுக்கு வந்ததும் சரோஜினியைப் பிடித்துக் கத்த,

அவள், “நான் பேசலப்பா, தம்பி பேசினான்.” என்று பொறுமையாக சொல்லியும் அவர் கேட்கவில்லை.

பார்த்திருந்த பகத்சிங் “பெரியப்பா, அவங்க எனக்கு மாமாதானே? நாந்தான் பேசினேன். அக்காவை பேசாதீங்க” என்று சொல்ல,

“நீ சின்ன பையன் வாய மூடு பகத்” என்று வாஞ்சிநாதன் அவனை அதட்டினார்.

“இவன் பேசினா நீ அழைச்சிட்டு வராம அங்கயே நிக்கிற, அறிவில்லை” என்று மகளை வாஞ்சிநாதன் அதட்ட, சரோஜினிக்குக் கண்களில் நீர் திரண்டது.

“விடுடா” என்று அஞ்சம்மா பேத்திக்காகப் பேச,

“பெரியப்பா! எதுக்கு அக்காவைத் திட்டுறீங்க? அவங்க நமக்கும் சொந்தம்தானே?” என்று பகத் சொல்ல,

திலகர் உடனே, “என்னது சொந்தமா? அந்த வீட்டு மனுஷங்க கூட பேச்சே வச்சுக்க கூடாதுடா பகத்” என்று பேரனுக்கு உத்தரவிட்டார்.

கொஞ்சமும் யோசிக்காது பட்டென்று, “அதுவும் எனக்குத் தாத்தா வீடுதானே?” என்று பகத் கேட்க, திலகர் பேரனை முறைத்தார்.

“என்னடா? எனக்கே உறவு சொல்லித் தரியா? எங்கயிருந்து வந்தான் அவன்? தாத்தானாமில்ல.. இங்க பாரு ஊருக்குள்ள போனா உன்னை திலகர் பேரனுதான் சொல்லுவானுங்க, சுதந்திர விலாஸுத்து வாரிசுனுதான் சொல்லுவாங்க. வீட்ல இளையவனு செல்லம் கொடுத்தா எதிர்த்தா பேசுற? ஒழுங்கா உன் அண்ணனைப் பார்த்து எப்படி நடக்கணும்னு கத்துக்க…” என்று சொன்னவர் பெருமையாக லாலா லஜபதி ராயைப் பார்க்க, அவன் என்றைக்குத் தனக்கு ‘பூசை’என்று தெரியாமல் வெளியே தாத்தாவை சிரித்த முகத்தோடு பார்த்தான்.

சக்தி வீட்டிலோ இரவு சரோஜினி சக்திக்காக உணவு கொடுத்த ‘ஹாட்பாக்’ஸை ஆராய்ச்சியாகப் பார்த்தார் சசிகலா. சக்தி வந்ததும் அவனிடம் விசாரணை செய்ய,

சக்தியோ, “குளிச்சிட்டு வரேன்மா” என்று ஓடினான்.

*********************

இந்த கதையை யார் மீண்டும் வாசிக்கிறீங்க? முதல் வாசிப்பு யாருக்கு? ஆகஸ்ட் மாதம் இந்த கதை தொடர்ந்து வரும். ‘நாம் கேட்ட காலங்கள்’ முடியும் வரை நம்ம தளத்தில் ஒரு கதை மட்டுமே வாசிக்க கிடைக்கும். கூடவே trying other things, so busy in that. Hope you understand and support me

✅ End of Episode 5
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 4 weeks ago

Very nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top