Episode 3

ஒரு காதல் 3

இளந்திரையன் லேப்டாப்பில் வேலை செய்ய, வல்லி

“நான் காலையில இட்லி செஞ்சிட்டேன் ஹாட்பாக்ஸ்ல இருக்கு, சட்னி இருக்கு, கிச்சன் டேபிள்ல பொடி இருக்கு அங்கேயே நல்லெண்ணெய்யும் இருக்கு, மதியம் சாம்பார், உருளைக்கிழங்கு இருக்கு, சாதம் நானே வச்சிடவா? இப்ப வச்சா ஆறிடும்னுதான் வைக்கல” என்று அவனிடம் பேச இளந்திரையனுக்கு ஆச்சரியம்தான்.

என்னவோ தினமும் குடும்பம் நடத்தும் மனைவி போல் அவள் பேசுவதும் இவன் கேட்பதும் அவனுக்கே அவன் நிலைக்கண்டு சிரிப்புதான். அந்த சிரிப்பு அவன் பேச்சிலும் தெரிந்தது.

“ஓய் இஞ்சி! போதும் போதும், நானே சோறு வச்சிக்கிறேன், அரிசி எங்க இருக்குன்னு சொல்லிட்டுப் போ” என்றான் சிரிப்புடன். அவன் இஞ்சி என்றதில் வஞ்சிக்குக் கோபம் வர

“அப்படி கூப்பிடாதீங்க” என்றாள் முறைப்புடன்.

“கூப்பிட்டா என்ன பண்ணுவ? உங்க மாமா கிட்ட போய் சொல்லுவியா? சொல்லிக்கோ” என்றவன் வேலையில் மூழ்க, வஞ்சுளவல்லிக்கு அவன் செயல் எதுவும் பிடிக்கவில்லை, பிடிபடவில்லை.

அவளின் அப்பா அவளை எப்போதும் ‘வஞ்சிமா’ என்றுதான் அழைப்பார் அதைத் தாண்டி வேறு சொல்லி அவர் அழைத்ததே இல்லை. அவரின் ஊர் நாச்சியார் கோவில். அங்குள்ள தாயாரின் பெயர் ‘வஞ்சுளவல்லி நாச்சியார்’. மாமா வஞ்சி என்று அழைப்பது கண்ட பத்துவயது இளந்திரையன்,

“ஓய் இஞ்சி!” என்று அவனை விட இளையவளான வஞ்சியை வம்பிழுப்பான். இளந்திரையனை அவன் அப்பாவிடம் போய் மாட்டிவிட, அவர் மகனைப் பிடித்துத் திட்டுவார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இளந்திரையன் வஞ்சியிடம் அதிகம் பேச்சுவைத்துக்கொள்ளவில்லை, அவன் ஒன்பதாம் வகுப்பிலே ஹாஸ்டலில் சேர்ந்துவிட அப்படியே வருடங்கள் ஓடியது. எப்போதாவது அவன் வீட்டிற்கு அத்தையும் அத்தை மகளும் வந்தாலும் கூட ‘வாங்க அத்தை’ என்பதுடன் ஒதுங்கிவிடுவான்.

வஞ்சியிடம் பேசவே மாட்டான். வஞ்சுளவல்லி அவனை விடவும் பத்தாவதில் அதிக மதிப்பெண் எடுத்துவிட அவ்வளவுதான், சௌந்தர்ராஜன் மகனை அவளுடன் ஒப்பிட்டுப் பேச , வல்லி வில்லியாகிப் போனாள். வல்லியும் இவன் பேசவில்லை என்றெல்லாம் நினைக்கமாட்டாள். அவளுக்கும் கமலிக்கும்தான் எப்போதும் ஒத்துப்போகும்.

அவனுக்குத் தேவையான அரிசியை அளந்து வைத்தவள்,
“அரிசி வச்சிட்டேன், ரைஸ் குக்கர் இருக்கு, அதுல வைக்கத் தெரியுமா?
என்றதும் தலையை உயர்த்திப் பார்த்தவன்

“புனேவுல நானே தான் சமைச்சுப்பேன், ஸோ நோ ப்ராப்ளம்” என்றான்.

“பால் ஃபிரிட்ஜில இருக்கு, காஃபி, பூஸ்ட் பவுடர் எல்லாம் கப் போர்ட்ல இருக்கு”

“நானே தேடிக்கிறேன் டி, எல்லாத்தையும் ஒன்னா சொன்னா மறந்திடுவேன், தெரியலன்னா உன்னைக் கேட்கிறேன், உன் நம்பர் சொல்லு” என்று கேட்டவன் அவள் சொல்லவும் அவள் எண்ணை ‘இஞ்சி’ என்று பதிந்தவன், அவளுக்கு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு

“என் நம்பர், சேவ் பண்ணிக்கோ” என்றான். தலையசைத்தவள்

“இந்தாங்க இது வீட்டு சாவி, எங்காவது வெளியே போனா தேவைப்படும், எங்கிட்ட இன்னொன்னு இருக்கு” என்றவள்

“நான் கிளம்புறேன்” என்றதும்

“எப்படி போவ?” என்றான். அவன் தெரிந்த கொள்ளலாமே என்றுதான் சும்மா கேட்க,

“இத்தனை நாள் எப்படி போனேன்னோ அப்படித்தான்” என்று சொல்ல வாய் வந்தது. இவ்வளவு நாள் இல்லாத அக்கறை என்ன இப்போது? என்ற வினா எழ, நீயும் அவனைப் பற்றி அக்கறை இல்லாமல் தானே இருந்தாய்? என்று மனம் கேட்டது.

‘என் கணவன், என் மனைவி’ என்ற பிணைப்பு வந்துவிட்டால் தானாய் ஒரு பிடித்தம் வரும். ஆனால் அவர்களுக்குள் அப்படியொரு எண்ணம் வருமுன்னே எல்லாம் முடிந்து போனது. உறவிலும் அவசரம்! பிரிவிலும் அவசரம்!

வஞ்சிக்கு இனி இதையெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறான் அவன் என்ற எரிச்சல்.

“டிரெயின்ல” என்றவள் பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

போகும் வழியில் தன் பெரியப்பாவின் மகனான கார்த்திக்கேயனை அழைத்தாள். நலம் விசாரித்தவள்

“அண்ணா! கமலிக்குக் கல்யாணம் , மாமா பத்திரிக்கைக் கொண்டு வந்தாங்க” என்று சொல்லவும்,

“அதான் சொல்லிட்டியே வல்லி, மாமா கிளம்பியாச்சா?” என்றான் சாதாரணமாக.

“அது மாமா கிளம்பிட்டார், அவர் இருக்கார்” என்றாள்.

“அவர்னா? மாமா கூட அந்த இளா தானே வந்தான் அவனா?”

“அவர்தான்” என்றவள் அவன் தங்கிய கதையை சொல்லவும்,

“உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? அவனை எதுக்கு உன்னோட தங்கவிட்ட? அவன் வேண்டாம்னு வந்ததெல்லாம் மறந்துட்டியா? உன் மாமாவுக்காகன்னு உன் வாழ்க்கையை அழிச்சுக்காத வல்லி” என்று கார்த்தி கோபமாய்ப் பேச,

“ண்ணா! ஏன் இப்படி கத்துறீங்க? மாமா எவ்வளவு செஞ்சிருக்கார் எனக்கு, எப்படி அவர் சொல்லும்போது தங்காதேன்னு என்னால சொல்ல முடியும்?” என்றவள்

“இப்ப உங்களை நான் கூப்பிட்டதே அவர் கிட்ட டிவோர்ஸ் வாங்குறதைப் பத்திப் பேசத்தான் அண்ணா, அப்பாவுக்காக அவரும் மாமாவுக்காக நானும் வாழ்றதெல்லாம் வேஸ்ட்னு எனக்கு நல்லாவே தெரியும்ணா, நீங்க சொன்ன மாதிரி லீகலா பிரிஞ்சிடுறோம். இன்னிக்கு வீட்டுக்கு வரீங்களா?” என்று கேட்க,

“ஏழு மணிக்கு வரேன் வல்லி, இப்பவே எல்லாம் ஆரம்பிச்சாதான் சீக்கிரம் உனக்கு வேற நல்ல வாழ்க்கை அமையும், டிவோர்ஸ் வாங்கிட்டு தனியா இருக்க மாட்ட தானேம்மா?” என்றான் கொஞ்சம் கவலையாக

“கண்டிப்பா இருக்க மாட்டேன் அண்ணா” என்றாள் உறுதியாக. அடுத்து அலுவலக வேலையில் மூழ்கிப்போனவள் ஆறு மணிக்கு வீட்டுக்குப் போனாள்.

கதவுத் திறந்திருக்க, இளா பால்கனியில் நின்றிருந்தான். கதவை மூடிவிட்டு இவள் உள்ளே வரவும் கையசைத்தவன் போனில் யாரிடமோ பேச, வஞ்சுளவல்லி அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இளா அவள் அறைக்குள் போகவும் கிச்சன் சென்றவன், அவளுக்குக் காஃபி போட்டு வைத்தான். வஞ்சி குளித்து உடை மாற்றி வெளியே வரவும் காஃபியின் மனம் அவளை யோசிக்க வைக்க

இளந்திரையன் அவளைப் பார்த்து, “டீபாய் மேல உனக்குக் காஃபி இருக்கு” என்றான்.

“நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க?” என்று வஞ்சி கேட்க,

“நீ கூடத்தான் எனக்கு எல்லாம் பண்ற, பார்க்க டயர்டா இருந்த அதான், ஃப்ர்ஸ்ட் குடி இஞ்சி” என்று சொன்னவன்,

“எனக்கு ஃபில்டர் காஃபியெல்லாம் நல்லா போட வராது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றான் பின்குறிப்பாக. அவன் இவ்வளவு பேசவும், அதுவும் இத்தனை நாள் இல்லாமல் இது என்ன புது அக்கறை என்ற கடுப்பில், பொங்கிவிட்டாள் வஞ்சி,

“நான் டெய்லி இப்படித்தான் டயர்டா வருவேன்” என்று எரிச்சலில் சொல்ல

“சரி, டெய்லி காஃபி போட்டுத் தரேன்” என்றான் இலகுவாக. அது இன்னும் அவளை எரிச்சல்படுத்தியது.

செடிகள் எல்லாம் எப்படி இருக்கிறதென பார்த்தவள், வீட்டைப் பெருக்கி விட்டு அவளது துணிகள மடிக்கையில் கார்த்திக்கேயன் வந்து காலிங் பெல் அழுத்த,

“நீ இரு, நான் பார்க்கிறேன்” என்று இளந்திரையன் எழுந்து போய் கதவைத் திறந்தான். கார்த்திக்கேயனைக் கண்டு ஒரு நொடி நின்றவன் பின் இயல்பாக,

“வாங்க” என்று சொல்லி அறைக்குள் போய்விட்டான். அண்ணனும் தங்கையும் பேசட்டும் என்று நினைத்தவன் உடைமாற்றி விட்டு வெளியே வந்து வஞ்சியிடம்,

“நான் வெளியே போய்ட்டு வரேன்” என்றதும் வஞ்சியின் பார்வை அண்ணனைத் தொட, கார்த்தியோ

“உங்கிட்ட தான் இளா பேச வந்திருக்கேன்” என்றான். அதில் இளந்திரையன் வஞ்சியைப் பார்த்தான், அவள் அவனைப் பார்க்காமல் அண்ணனைப் பார்த்தாள்.

“எங்கிட்ட என்ன பேசப்போறீங்க?” என்றவன் சோஃபாவில் கார்த்திக்கேயனின் அருகே உட்கார்ந்துவிட, வஞ்சி அப்படியே நின்றாள்.

“அது அடுத்து என்ன முடிவு பண்ணியிருக்க நீ?” என்று கார்த்தி கேட்டான்.

“என்ன முடிவுன்னா? புரியற மாதிரி சொல்லுங்க” என்றான் இளந்திரையன்.

“உன் லைஃப் பத்தி, வல்லி பத்தி” என்றதும் வஞ்சியின் மீது இளந்திரையன் பார்வை அழுத்தமாய் விழுந்தது. அண்ணன் தங்கைப் பார்வைக் கண்டவனுக்கு இவர்கள் இருவரும் முன்பே இது பற்றி பேசியிருக்கிறார்கள் என்பது புரிய ‘செகண்ட் இன்னிங்க்ஸா?’ என்று மனத்தினுள் நினைத்தவன் கைகளைப் பின்னுக்குக் கொடுத்து இன்னும் இலகுவாய் உட்கார்ந்தான்.

“என் லைஃப், இவ லைஃப் பத்தியெல்லாம் நாங்களே முடிவு பண்ணிப்போம். நீங்க எதுக்கு இதை கேட்கிறீங்க?” என்றான் புருவம் உயர்த்தி.

“நான் கேட்காம யார் கேட்பா? அவளுக்கு நான் அண்ணன்” என்றான் கார்த்திக்கேயன் குரல் உயர்த்தி.

“இருந்துட்டுப் போங்க” என்றவன் வல்லியிடம் திரும்பி

“நம்ம வாழ்க்கைப் பத்தி நம்மதான் முடிவு செய்யணும், உனக்கு எங்கிட்ட கேட்கனுமா நீ கேளு, இவரை ஏன் கேட்க விடுற?” என்றான் அதட்டலாக.

“இளா, அவளை ஏன் அதட்டுற? அவளுக்காகத்தான் நான் பேசுறேன்”

“என் அண்ணன் எனக்காகப் பேசுறார், அதுல என்ன தப்பு?” என்ற வஞ்சியிடம்

“என்னால அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றான் திமிராய்.

“டேய்! என்ன ரொம்ப பேசுற? அவளைப் பேசு பேசுன்ற, என்னமோ ரொம்ப நல்ல புருஷன் மாதிரி சீன் போடுற நீ, இப்படி பேசித்தானே அவளை வீட்டை விட்டு விரட்டின” என்று கார்த்திப் பேசவும்

“நான் விரட்டினேனா?” என்றவனின் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாத கார்த்தி

“இங்க பார் இளா, முடிஞ்சிப்போனதைப் பேச வேண்டாம், உங்க இரண்டு பேருக்கும் ஒத்துவரலன்றதுதான் உண்மை. பிரச்சனை நடந்த பின்னாடியும் இரண்டு பேரும் அதை சரி பண்ண நினைக்கல, இந்த இரண்டரை வருஷமா பிரிஞ்சு தான் இருக்கீங்க, பிடிக்காத வாழ்க்கையை ஏன் இரண்டு பேரும் வாழனும், ஸோ டிவோர்ஸ்தான் நல்லது” என்றதும் இளந்திரையனின் அகத்தினுள் ஆழிப்பேரலைகள்.

அவனுக்குப் பிடித்தெல்லாம் அவன் திருமணம் நடக்கவில்லைதான், என்றாலும் கூட அவனைப் பொருத்தவரை அது மட்டும்தான் திருமணம்.
இந்த இரண்டு ஆண்டு பிரிவு கூட அவளால் விளைந்ததுதான், அதுவே அவன் எண்ணமாய் இருக்க, அவளின் செயல் அவனைக் காயம் செய்திருக்க, காயம் ஆற அவன் காலமெடுக்க இவளோ உறவே வேண்டாம் என்கிறாள்.

மனைவியாய் அவளை நினைத்ததில்லைதான். மனைவியான பின்னும் அவள் அவன் அகத்தில் ஆழப்பதியவில்லைதான், ஆனால் அவனைப் பொருத்தவரையில் திருமணம் பிடித்து நடந்ததோ இல்லையோ அவனது திருமணம் நிஜம்!

அதனையும் விட வல்லியின் முகம் பார்க்க அவளோ அவனைப் போல் இல்லாமல் மிகவும் தெளிவாய் நின்றிருக்க, அவனது உள்ளம் கொதித்தது. இந்த முடிவை அவள் முன்பே எடுத்து இருக்கிறாள் என்பதும் புரிய,

கார்த்திக்கேயனைப் பார்த்தவன்,
“என்னால டிவோர்ஸ் கொடுக்க முடியாது” என்றதும் வஞ்சிக்குக் கோபம் வந்துவிட

“ஏன்? ஏன் கொடுக்க முடியாது? உங்க தங்கச்சி கல்யாணம் நல்லபடியா நடக்கனும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி கௌரவமா இருக்கனும்ன்றதுக்காகத்தானே இப்ப கூட நீங்களா உங்க ஈகோ விட்டு இங்க வந்து இருக்கீங்க?”

“இரண்டு வருஷமா இருக்கேனா செத்தேனான்னு கூட அக்கறை இல்லாம இருந்துட்டு இப்ப என்ன ரொம்ப பேசுறீங்க?”

“அதைக் கேள்வி நானும் உங்கிட்ட கேட்கலாம்” என்றான் இளந்திரையன்.

மனைவியிடம் பதில் சொன்னவன் பின் அவளை நேராய்ப் பார்த்து “ரொம்ப ஆர்வமா டைவர்ஸ் கேட்கிற? அதுக்கு அப்புறம் என்ன ப்ளான்?” என்றான் நக்கலாக.

வஞ்சி ஒரு நொடி என்ன சொல்ல என்று தெரியாமல் நிற்க, கார்த்தியோ

“டிவோர்ஸ்க்கு அப்புறம் அவளுக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளைப் பார்த்துக் கட்டி வைப்பேன்” என்றதும் அதுவரையில் ஓரளவு நிதானத்தில் இருந்த இளந்திரையன் அந்த வார்த்தையில் ஆவேசம் கொண்டு சோஃபாவை விட்டு வேகமாய் எழுந்தவன்

“என்ன சொன்ன? இன்னொரு கல்யாணமா? அது நான் இருக்கவரைக்கும் நடக்காது. பிடிச்சாலும் பிடிக்கலனாலும் இவ தான் என்னோட மனைவி” என்றதும் கார்த்தி கோபமாய்

“என்ன ரொம்ப உரிமையா பேசுற இப்போ? இத்தனை நாள் எங்க போச்சு இந்த உரிமை உறவெல்லாம்?” என்று கேட்க

“அதுக்கெல்லாம் உனக்கு நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை” என்றான் பட்டென்று. பின் மனைவியிடம் திரும்பி,

“அது எப்படி எப்படி உனக்குத் தேவைன்னா நான் உன்னைக் கட்டிக்கனும், வேண்டாம்னா வெட்டிவிடனுமா? இதுல என்னோட வாழ்க்கைன்னு ஒன்னு இருக்குன்னு யோசிக்க மாட்ட? எல்லாம் எங்கப்பாவை சொல்லணும்” என்றவன் வஞ்சியை நெருங்கி நின்று

“இங்க பார் உனக்கு எங்கிட்ட பேசணும்னா நடுவுல எவனும் வரக்கூடாது” என்று கை நீட்டி மிரட்டியவன் கார்த்திக்கேயனை முறைத்துவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

✅ End of Episode 3
How did you feel about this episode?
❤️ 4 🔥 2 👏 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Radhi Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

தந்தைக்காக இவர்கள் திருமணம்....

தனித்து இருந்தாலும்
திருமணத்தை அவன் தவிர்க்கவில்லை....
தனித்து வாழ 
துடிக்கும் வள்ளி.....
Saraswathi Reader 4 weeks ago

Super

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top