Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 15

தூரம் 15

அன்று சக்தி எஸ்.பி அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. எஸ்.பியும் ஏடி.எஸ்.பியும் ஒன்றாக பேசியபடி வர, உண்மை தெரிந்த பின் சித்ரஞ்சனை பார்க்க சக்திக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. இன்று பார்க்கவும் சக்திக்கு சரியான கோபம். இதில் வசுந்த்ராவும் மகனோடு கணவன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.

அவனுக்குக் கொடுத்த வேலையை முடித்தவன் சித்ரஞ்சன் அறைக்கதவைத் தட்ட,

“கம் இன்” என்று குரல் கொடுத்தான் சித்ரஞ்சன். உள்ளே நுழைய பார்த்தால் அரிச்சந்திரன் இருந்தான். சுதந்திர விலாசத்தின் பங்காளி அவன். சித்ரஞ்சனுக்கு பங்காளி வீட்டு அண்ணன் மகன்.

“டேய் போலிஸ் நீ இங்க என்ன பண்றடா?” அரி புன்னகையோடு சக்தியை விசாரிக்க,

“கோர்ட்ல கொட்டாவி விட்டுட்டு இல்லாம இங்க என்ன பண்றீங்கன்னு நான்தான் அத்தான் உங்களை கேட்கணும். போலிஸ்னு சொல்லிட்டு இங்க என்ன பண்றன்னு கேட்டா..” சக்தி கிண்டலாகக் கேட்டான்.

“அடிங்க! இங்க போஸ்டிங் மாத்திட்டாங்கன்னு சொல்லாம என்ன பேசுறான் பாருங்க சித்தப்பா” என்று சித்ரஞ்சனிடம் சொன்ன அரி,

“உட்காரேன் சக்தி.” என்றான். சக்தி சித்ரஞ்சனை பார்க்க,

“உட்கார் சக்தி” என்று சித்ரஞ்சனும் சொல்ல சக்தி உட்காரவில்லை.

அரி உட்கார்ந்திருந்த நாற்காலியின் அருகே நின்றவன் ஓரவிழியால் சித்ரஞ்சனை பார்த்தபடி,

“எனக்கு ஒரு டவுட் அத்தான். BNS செக்சன் 78 (354D – IPC) எதுக்கு?” என்றதும் அரியும் சித்ரஞ்சனும் புரியாமல் சக்தியைப் பார்த்தனர்.

“BNS 78 அஹ் எல்லாம் பெண்களுக்கு எதிரான வயலன்ஸ்தான் டா. ஸ்டாக்கிங், அப்யூஸ்.. ஏன் கேக்குற?”

“இந்த கட்டாயப்படுத்துறதெல்லாம் அதுல வருமா?”

“கண்டிப்பா. போர்ஸ் பண்றதுதானே? இப்போ ஏன் கேக்கிற”

“ஒருத்தனை தூக்கி உள்ள வைக்கணும். அதான் தெளிவுப்படுத்திக்கலாம்னு” என்றதும் அரிச்சந்திரன்,

“யார்டா?”

“உங்களுக்குத் தெரியாது அத்தான். லவ் பண்ணாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்றான், அதான் என்ன செய்யலாம்னு யோசிச்சேன்”

“உள்ள தூக்கி வச்சுட்டு சொல்லுடா சக்தி, உள்ளயே தள்ளிடறேன்” அரிச்சந்திரன் பொறுப்பாக பதில் சொல்ல சித்ரஞ்சனுக்கு சந்தேகம்.

‘என்ன இவன் என்னை சொல்ற மாதிரி இருக்கே’ என்று சக்தியைப் பார்த்தான்.

“அத விடுங்க, நீங்க என்ன இங்க?”

“எஸ்.பி’ய வேற விஷயமா பார்க்க வந்தேன். சித்தப்பாவை பார்க்கவும் பேசிட்டு போகலாம்னு வந்தேண்டா” என்ற அரிச்சந்திரன்,

“சரி சித்தப்பா நான் கிளம்புறேன்” என்று சொல்லி சக்தியிடமும் விடைபெற்று சென்றான்.

சக்தி அரியை வழியனுப்பியவன் மீண்டும் கதவை தட்டாமல் உள்ளே வந்தான். ஆழ்ந்த யோசனையில் இருந்த சித்ரஞ்சன் கதவைத் திறக்கும் சத்தத்தில் சக்தியைப் பார்க்க,

“என்ன டவுட்டா பார்க்கிறீங்க ஏடிஎஸ்.பி. டவுட்டே வேண்டாம். உங்களை பத்திதான் பேசினேன்” என்றதும் சித்ரஞ்சன் முகத்தில் அதிர்ச்சி.

“இப்போ எஸ்.பி’ கூப்பிட்டிருக்கார். வந்து உங்களை பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

சித்ரஞ்சனுக்குப் புரியவில்லை. யார் சொல்லியிருப்பார்கள்? வசுந்த்ரா நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாள் என்று தெரியும். லாலா தானே அன்று அறை முன் நின்றான். அவனாக இருக்குமோ? இல்லையே அவன் இவனோடு பேசி பார்த்ததில்லையே. லாலா சரோஜினியிடம் சொல்லி சரோ இவனிடம் சொல்லியிருப்பாளா?

சரோவுக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் என்னை கேட்காமல் இருக்க மாட்டாளே. ‘இவன் புத்திசாலின்னு தெரியும் அவளோ க்ளவரா இவன்?’ என்று சித்ரஞ்சனை யோசிக்க வைத்தான் சக்திவேல்.

சித்ரஞ்சனுக்கு ஆகாத வீட்டோடு காதல் வருவதெல்லாம் கூட இயல்பான விஷயம். வரலாற்று பரீட்சையில் வரலாறான லாலா-சக்தியின் நட்பின் கதை பாவம் சித்தப்பா அறியவில்லை.

சக்திக்கும் சரோவுக்கும் சண்டை என்றறிருந்த லாலா தங்கையை சமாதானம் செய்ய பார்த்தான்.

“என்னடி பிரச்சன உனக்கு? சக்தி பாவம். பேசாம என் ப்ரண்டை இம்சை பண்றியாம்”

“அவன் பாவம்னா நான் யாருடா?” என்று அண்ணனிடம் சரோஜினி கத்தினாள்.

“ஆத்தாடி! காதல் வந்தா நம்ம யாருனு கூட மறந்திடுமா? உன் நிலைமை கவலைக்கிடம்தான் டா சக்தி” என்றதும்,

“லாலா! வெறுப்பேத்தாம போ. ஆனா கேடிடா அண்ணா நீ. எங்க முன்னாடி சண்டை போடுற மாதிரி போட்டுட்டு, அதுவும் உன்னை அவன் அடிச்சான்னு நான் போய் அவனை கேட்டேன். நீங்க எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்கீங்க..” என்றாள் எரிச்சலான குரலில்.

“சரி சொல்லு எப்படி அவனோட ப்ரண்ட் ஆன?” எப்படி இப்படி ஒரு நட்பு என்று கேட்க லாலா லாலாலா பி.ஜி.எம்’மோடு, அவனுக்கு சக்தியோடு நட்பு உண்டான கதையை சொல்ல சப்பென்றானது சரோஜினிக்கு.

“அடச்ச! இதானா? நான் கூட இரண்டு பேரும் இந்த சீன் போடுறதுக்கு பெரிய கதையிருக்கும் நினைச்சா. ஆன்சர் தெரியாத உனக்கு அவன் ஆன்சர் சொன்னதும் அப்படியே ஆரூயிர் நண்பனாகிட்டானா?” என்று கிண்டல் செய்ய,

“ஹேய்! என்ன ஓவரா பேசுற? நம்ம ரெண்டு வீட்டுக்கும் சண்டை. அவனோட நானும் பேசுறதில்லை. நானா இருந்தா கூட தப்பா ஆன்சர் சொல்லியிருப்பேன், சக்தி அப்படியில்லை. ஆமா நீ சுத்துறியே உன் ப்ரண்ட்ஸ் அவளுங்களுக்கெல்லாம் அர பாட்டில் ரத்தம் குடித்தியா? உயிர்த்தோழி’ன்னு உருட்டுறதில்லை. எங்க ப்ரண்ட்ஷிப் பார்த்தா எளக்காரமா உனக்கு?” என்று திட்டியவன்,

“அப்போ உனக்கு சக்தி வேண்டாமா?” என்று சரோஜினியிடம் கேட்டான்.

“வேண்டாம் போடா. உன் ப்ரண்ட்க்குதான் பொண்ணுங்க க்யூவுல நிக்கிறாங்க சொன்னியே.”

“அவனுக்குப் பொண்ணு கிடைக்கும்தான், இருந்தாலும் கூடப்பொறந்துட்ட. அவனை விட்டா உனக்கு வேற ஒருத்தன் கிடைக்க மாட்டானே டி. அதான் யோசிக்கிறேன்” என்றதும் கையில் கிடைத்த பாட்டிலை தூக்கி லாலா மேல் வீசிட, குனிந்து தப்பித்தான் லாலா.

“லாலா! இங்க வா” என்று திலகர் குரல் கொடுக்க,

“பாதகத்தி! உன்னை அப்புறம் பேசிக்கிறேன்.” என்று தங்கையை முறைத்தபடி சென்றான் லாலா.

எஸ்.பி கேட்ட வழக்கில் தன் பங்கு விசாரணையைப் பற்றி அவரிடம் விளக்கி விட்டு, மாமன் அறையைத் தட்டினான் சக்திவேல்.

சித்ரஞ்சன் உள்ளே வர சொல்லவும் சக்தி அவரிடம்,

“டைம் என்ன சர்?” என்று கேட்டான்.

அவன் கையில் கட்டியிருந்த கைகடிகாரம் பார்த்த சித்ரஞ்சன் “உன் கையில என்ன டைம் இருக்கோ அதேதான் இங்கயும்” என்றான்.

“அப்ப சரி. என் ட்யூட்டி டைம் ஓவர். இப்போ நீங்க எனக்கு ஹையர் ஆபிஸர் இல்லை. என் அத்தையோட வீட்டுக்காரர், பெர்சனலா பேசலாமா?” என்று கேட்க,

‘அத்தையோட வீட்டுக்காரர்’ என்றதிலே சித்ரஞ்சன் குளிர்ந்து போனான். தானாகவே முகத்தில் புன்னகை அரும்ப,

“இப்போவாச்சும் ஒத்துக்கிட்டியே சந்தோஷம். உட்காரு சக்தி” என்றான்.

“நான் ஒத்துக்கிறது இருக்கட்டும். என்ன சொல்லி எங்கத்தையைக் கல்யாணம் பண்ணீங்க? இத்தன வருஷம் உங்கள பேசினாலும் என் அத்த மேலதான் கோவம். வீட்ல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே, தாத்தா ஒத்துக்கலனாலும் அப்பா எதாவது பண்ணியிருப்பார். இந்த அத்த ஏன் அவசரப்பட்டுச்சு? அப்படியென்னதான் உன் சித்தப்பா ஸ்பெஷல்னு சரோவ கூட பேசியிருக்கேன். ஆனா எங்கத்த மேல தப்பில்லை. கட்டாயப்படுத்தி அவங்களை கல்யாணம் பண்ணியிருக்கீங்க.”

சக்தி கோபத்தைக் கட்டுப்படுத்தி பேசினான். சித்ரஞ்சனுக்கு இப்படி சிறியவர்கள் கூட தன் செயலை பேசும்போது மிகுந்த வருத்தமாக இருந்தது. அப்போது அந்த நேரத்தில் நியாயமாகத் தோன்றியது, சித்ரஞ்சனுக்குத் தெரியவில்லை, சில விஷயங்கள் எல்லாம் எந்த நேரத்திலும் அநியாயமே!

அதுவும் இத்தனை தெளிவாக சக்தி தன் மீதான குற்றத்தை சொல்ல, இவனுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியும் உள்ளே குடைந்தது. ஆனாலும் கேட்கவில்லை. என்றாவது ஒரு நாள் தெரியத்தானே போகிறது என்ற எண்ணம்.

மகள் காதலித்தால் திருமணமாகிவிட்டது என்று ஏற்கும் மனநிலையில் நிச்சயம் வசுந்த்ரா வீட்டினர் கிடையாது. அத்தனை சுதந்திரம் கொடுத்து வளர்த்த பின் இப்படி செய்ததே அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்க, எப்படி ஏற்பார்கள்? காதலை சொல்லாத கோபம் அவர்களிடம்.

சித்ரஞ்சனுக்கும் மனைவியை தான் என்னதான் நன்றாக பார்த்தாலும் அவள் குடும்பம் ஒதுக்கியது வேதனை. அதுவும் அவன் காதலால், அவன் தவறால் அவள் தண்டனை அனுபவிக்கிறாள்.

ஆரம்பத்தில் வசுந்த்ராவோடு திருமணம் முடிந்துவிட்டது என்ற உரிமை கொடுத்த உவகை நிறைய இருந்தது. நாட்கள் கடக்க வசுந்த்ராவோடு வாழ முடியாமல் போகுமோ என்ற அச்சம், தன் அன்பை வசுந்த்ராவுக்குப் புரிய வைக்க அத்தனை முயற்சிகள் என்று போராட்டமே, எப்படியோ ஆறு மாதங்கள் வரை தேவைக்குக் கூட பேசாத வசுந்த்ரா, பின் மனம் வைத்து கொஞ்சம் பேச, சித்ரஞ்சன் கொஞ்சி பேசி என்று கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு புரிதல். அவர்கள் அன்யோன்யமாக வாழ நினைக்கவே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பிறகு அது நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பேராவல்.

வசுந்த்ரா சித்ரஞ்சனை புரிந்து பிரியம் காட்டினாலும் ஆரம்ப காலம் அடிக்கடி வந்து அவளை கோபம் கொள்ளச் செய்யும். வார்த்தைகள் வெடிக்கும்! சித்ரஞ்சனும் சில நேரம் சீறி, பின் காதல் மீகி மீறி என்று தினம் தினம் தக்காளி விலை போல் தாறுமாறாகவே சென்றது அவர்கள் வாழ்வு.

என்னவொன்று எத்தனை சண்டையிட்டாலும் பேசினாலும் வசுந்த்ராவும் சித்ரஞ்சனும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததுமில்லை, விட்டிருந்ததுமில்லை.

மனைவியோடு இணக்கமாக வாழ்வதே சித்ரஞ்சனுக்கு சாதனையாக இருக்க, மாமனார் வீட்டோடு சேர எல்லாம் அப்போது எண்ணமில்லை. அவர்களோடு சேர நினைத்து அங்கேயும் ஒதுக்கி, இங்கு அப்பாவும் ஒதுக்கிவிட்டால் தங்களுக்கு யாருமில்லாமல் போய்விடுமே என்ற பயம்.

அதைவிட லட்சுமணன் மீது நிறைய பயம். முன்பு பெண் கேட்கவே பயந்தவனுக்கு, இப்போது உங்கள் பெண்ணின் விருப்பமின்றி திருமணம் செய்தேன் என்று எப்படி சொல்ல முடியும்?

தனக்காக இத்தனை செய்யும் மனைவிக்கு, தான் இதை கூட செய்யாவிட்டால் எப்படி என்ற பிரியமே சித்ரஞ்சனை மாமனாரிடம் பேசத் தூண்டியது. தூண்டுதலோடு இருந்தவன் சக்தி சரோஜினி விஷயம் தெரியவும் துவண்டுவிட்டான். இவன் அமைதி உடன்படிக்கை போடலாம் என்று நினைத்தால், அவன் வீட்டுப்பெண் அடுத்த போருக்கு அல்லவா வேலை பார்த்துவிட்டாள்.

“சக்தி! நான் செஞ்சது தப்புதான்” என்று சித்ரஞ்சன் ஒத்துக்கொண்டாலும் சக்தி இரங்கவில்லை.

“ஹலோ மாமா! நீங்க செஞ்சது தப்புதான். என்ன ஒத்துக்கிட்டா மட்டும் இல்லைன்னு ஆகிடுமா? இல்லை நான் நீங்க செஞ்சது தப்பா சரியான்னு கேட்டேனா?” என்றான் எரிச்சலாக.

‘என் பொண்டாட்டி மாதிரி ஆமான்னு சொன்னாலும் பேசுறான், இல்லைனு சொன்னாலும் பேசுறான். நான் பேசாமயே இருக்கேன்’ என்று சித்ரஞ்சன் பேசாமல் இருக்க,

“உங்கள சொல்லி என்ன பண்றது? எங்கத்தைக்கு எங்க போச்சு அறிவு?” என்று சக்தி வார்த்தைகளை கோபத்தில் கோர்த்தான்.

பேசாமல் இருக்க வேண்டும் என்ற முடிவில் பேசாமல் இருக்க, சித்ரஞ்சன் மனைவியை சொன்னதும் பொங்கிவிட்டான்.

“வசுவை பேசாத” என்றவனின் குரல் உயர்ந்திருக்க,

“எங்கத்தையை நான் பேசுவேன்” என்று சக்தி பதில் சொன்னான்.

“என் பொண்டாட்டியை நீ பேசக்கூடாது! அவ மேல எந்த தப்புமில்லை” என்ற சித்ரஞ்சன் சக்தியை முறைத்தான்.

“உங்களை கல்யாணம் பண்ணினதே தப்புதான்” என்று சக்தி சொல்ல,

‘அடப்பாவி பயலே!’ என்றுதான் சித்ரஞ்சன் பார்த்தான்.

“எங்க தாத்தா ஒரே பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி எவ்வளவு கனவு கண்டிருப்பார். எங்கப்பா தங்கச்சிக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சிருப்பார். எங்கத்த கல்யாணம் பண்ணும் புது டிரஸ் போடலாம், ஸ்கூல் லீவ் போடலாம்னு எவ்வளவு ஆசையோட இருந்திருப்பேன். எல்லாத்தையும் கெடுத்துட்டு..” சக்தி ஆரம்பத்தில் சொல்லவும் குற்றவுணர்ச்சியில் கேட்ட சித்ரஞ்சன் கடைசியில் சிரித்துவிட்டான்.

“கொஞ்சம் கூட பீல் பண்ணாம சிரிக்கிறீங்க? எங்கத்தயை சொல்லணும்.” சக்தி கடுப்போடு சொன்னான்.

“உங்களுக்கு இருக்கு கச்சேரி! நான் எங்க தாத்தா, அப்பா மாதிரி எல்லாம் டீசண்ட் கிடையாது” என்று சக்தி சொல்லவும், சண்டை என்றால் வேட்டியை மடித்துக்கொண்டு அரிவாளோடு சண்டைக்கு நிற்கும் அவன் மாமனார் லட்சுமணன் மனக்கண்ணில் தோன்றினார்.

‘டீசன்சின்னா என்னனு இவன் டிக்ஷனரில பார்த்ததே இல்ல போல’ சித்ரஞ்சன் மருமகனை மனத்தில் திட்டினான்.

“சக்தி! ப்ளீஸ். நானே உங்க தாத்தா கிட்ட வந்து பேசுறேன்.” என்று சித்ரஞ்சன் பொறுமையாக சொல்ல,

“பார்க்கிறேன் அந்த அதிசயம் என்னைக்கு நடக்குதுனு” சக்தி நக்கலடித்தான்.

எப்படியோ அத்தை மேல் தவறில்லை என்று தெரிந்தால் போதுமென்ற எண்ணம்.

“விருப்பம்ன்றது ரெண்டு பக்கமிருந்தாதான் அது காதல். கட்டாயப்படுத்தினா அது காதலாகாது! கட்டாயம்தான்! என்ன காரணமோ அத்த இதுவரைக்கும் உங்களோட இருக்கு. அதனால உங்ககிட்ட பொறுமையா பேசுறேன். எங்கத்த நிஜமா உங்களோட சந்தோஷமா இருக்காங்களா?” சக்தி சந்தேகமாகக் கேட்க சித்ரஞ்சனுக்கு சுருக்கென்றது.

கட்டாயமாக எப்படி காதல் வரும்? மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா என்ற கேள்வியே அவன் காதல் மீது அடிக்கடி கேள்வி கேட்க வைக்கும். அவளுக்கும் என்னை மிகவும் பிடிக்குமா என்ற எண்ணம் சோதிக்கும். சித்ரஞ்சனின் கசங்கிய முகம் பார்த்த சக்தி,

“அப்படியொன்னும் எங்கத்த தைரியமில்லாம இருக்காது. நீங்க ஒழுங்கா இல்லைன்னா போடான்னு பொளந்திடும். எதுக்கும் கேட்டேன்” என்றான்.

சக்தி அப்படியே அறையை விட்டு கிளம்ப நினைத்தவன் மீண்டும் சித்ரஞ்சன் பக்கம் திரும்பி,

“இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கலயே” என்றவன், அவன் கேட்கும் முன்பே,

“லாலா சொன்னான்” என்றதும் சித்ரஞ்சன் அதுவரை கூட இயல்பாக கேட்டவன், சட்டென்று இருக்கையை விட்டு எழுந்துவிட்டான்.

“லாலா?” என்று அதிர்ச்சியில் அவன் சக்தியைப் பார்க்க

“உங்க அண்ணன் மகன் லாலாதான். என்னோட பெஸ்ட் ப்ரண்ட் மாமா” என்றதும்,

“டேய்! என்னடா சொல்ற? எப்படி?” என்ற சித்ரஞ்சனுக்கு நம்பவே முடியவில்லை.

“இதென்னா பெரிய வம்பாயிருக்கு? சரோவ லவ் பண்ணினா எப்படின்னு கேட்குறீங்க? லாலாவோட ப்ரண்ட் ஆன எப்படினு கேட்குறீங்க? இவருக்கு மட்டும் சரியா பேசாத அத்தை மேல லவ் வருமாம், நியாயமா மாமா?” என்று நியாயம் கேட்டவன்,

“எத வேணும்னாலும் விட்டுடுவேன். ஆனா கட்டாயப்படுத்தித் தாலி கட்டிட்டு அத காதல்னு சொல்லி, உங்க அண்ணன் பசங்க ரெண்டும் எங்க சித்தப்பா பெரிய காதல் மன்னனு சொல்லும் பாருங்க. இனிமே அப்படி சொல்லட்டும் வச்சிக்கிறேன்” என்ற சக்தி சித்ரஞ்சனின் பதிலை எதிர்ப்பார்க்காமல் சென்றுவிட்டான்.

✅ End of Episode 15
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 2 weeks ago

Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top