Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 17

தூரம் 17

சக்தி எதையும் சொல்ல வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. சரோஜினி அடிவாங்கி இருக்கிறாள், அதுவும் தன்னை காதலிப்பதால் என்பதே சக்திவேலை தூண்டிவிட போதுமானதாக இருந்தது. சக்தி நல்ல பிள்ளைதான், ஆனால் யாராவது சீண்டிவிட்டால் அவன் பதிலுக்கு எதையாவது செய்துவிடுவான். யோசிக்கவே மாட்டான்.

அப்படித்தான் சித்ரஞ்சன் வசுந்த்ரா விஷயம் அவனுக்குத் தெரிந்தும் கூட வீட்டிலோ ஏன் சரோஜினியிடம் கூட பகிரவில்லை. சித்ரஞ்சனே தாத்தாவிடம் பேசுகிறேன் என்று சொன்ன பின், அவன் சொல்வது சரியல்ல என்றே அமைதியானான்.

‘என் காதல் தவறு, என்னை காதலிப்பது தவறென்றால் உங்கள் மகன் செய்தது என்ன ?’ என்ற எண்ணம் சட்டென தாக்க, எல்லாம் சொல்லிவிட்டான்.

வாஞ்சிநாதனுக்கும் சக்தியின் வீட்டுக்கும் எந்த பகையும் கிடையாது. திலகருக்கும் லட்சுமணனுக்கும் ஆகவில்லை, அதையே வாஞ்சிநாதன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். சித்ரஞ்சன் போலவோ இல்லை அவர் பிள்ளைகள் போலவோ அது பெரியவர்கள் சமாச்சாரம் என்று போக தெரியவில்லை.

சின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களோடு முட்டிக்கொண்டு விட்டு இப்போது எப்படி சம்மந்தம் பேச முடியும்? மகள் காதல் என்று வந்து நிற்கவும், அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் வாஞ்சிநாதனுக்கு. அதைவிட அவர் நிச்சயம் சக்தியை எதிர்ப்பார்க்கவில்லை. அவனை பிடிக்காது! லட்சுமணன் பேரன் என்ற காரணம், பெரிதாக ஒன்றுமில்லை.

சக்தி கத்திவிட்டு செல்ல, வாஞ்சிநாதன் மகளை கண்டிக்க திலகர் தடுத்துவிட்டார். இத்தனை வருடத்தில் எத்தனையோ சண்டைகள், நாய் குரைக்கிறது, ரேடியோ சத்தம் அதிகம், வரப்பு வெட்டியது, வாழைமரம் வெட்டியது, தேங்காய் காணும், ரோஜா பூ காணும் என்று வெரைட்டி வெரைட்டியாக வெட்டி சண்டைகள் நடந்திருக்கின்றன. ஊர்ப்புறங்களில் அக்கம்பக்கத்து வீடுகளில் என்பது மிகவும் சகஜம்.

என்றுமே சக்தி இப்படி சொல்லியதில்லை. அதனாலயே திலகர் மகனையும் மருமகளையும் கேள்வி கேட்டார்.

“என்னப்பா? அந்த சின்ன பய சொல்லிட்டு போறானு இவங்களை கேக்கிறீங்க?” என்று வாஞ்சிநாதன் அப்பாவை கேட்க,

திலகர் மனத்தில் உள்ளதை அப்படியே சொன்னார்.

“நீ சும்மா இருடா! இத்தன வருஷம் ஒரு நாளும் அந்த பய இப்படி சொன்னதில்ல. இன்னிக்கு சொல்றானா சேதி இல்லாமயா இருக்கும். சொல்லும்மா” என்று மருமகளைப் பார்த்தார்.

வசுந்த்ராவுக்கு அவர்களின் விஷயம் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றெல்லாம் எண்ணமில்லை. அதையும் விட ‘அடுத்தவர் மனத்தில் என்னைப் பற்றி இருக்கும் எண்ணங்களை மாற்றுவது என் வேலையில்லை’ என்ற தெளிவு வசுவுக்கு நிறைய உண்டு. இப்போது மாற்றி சொன்னாலும் எத்தனை பேர் நம்புவார்கள், வீட்டில் கூட நம்ப மாட்டார்கள் என்று தெரியும்.

அப்பாவிற்கும் அண்ணனிற்கும் மட்டும் தெரிந்தால் போதும். அவளுக்கு சித்ரஞ்சன் மீது விருப்பமிருந்திருந்தால் அவர்களிடம் நிச்சயம் சொல்லியிருப்பாள். அவர்களை ஏமாற்றவில்லை என்று அவர்கள் புரிந்துகொண்டால் போதும்.

சித்ரஞ்சனின் செயல் இப்போதும் தவறுதான்! வசுந்த்ரா அதை எப்போதும் மறுக்க மாட்டாள். மற்றபடி அவன் ஏன் அப்படி செய்தான் என்று அவளுக்குத் தெரியும், இத்தனை வருடம் அது புரிந்ததால் மட்டுமே வாழ முடிகிறது, அதனால் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லை. உண்மை சொல்லமுடியாது நிற்க, சித்ரஞ்சன் சொல்வான் என்று லாலா நினைக்கவே இல்லை.

‘சித்தப்பா சாப்டர் காலி!’

லாலா சித்தப்பாவை இரக்கமாக பார்த்தான்.

வசுந்த்ராவும் கணவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள். அவன் சொல்லக் கூடும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. அதுவும் அவன் அப்பாவிடம்!

திலகருக்கு மகன் சொன்னதை கேட்கவும் அவ்வளவு ஆத்திரம்.

“என்ன தைரியம் டா உனக்கு? ஒரு பொண்ணு விருப்பமில்லாம எப்படிடா இப்படி செஞ்ச? இதான் உனக்கு சொல்லிக் கொடுத்தோமா? நீயெல்லாம் எப்படிடா இந்த வேலைக்குப் போன..? ஒரு பொண்ணு மனசை புரிஞ்சிக்காம, இன்னொரு வீட்டுப்பொண்ணுக்கு இப்படி செய்ய எப்படி மனசு வந்தது?” என்றவருக்குக் கோபம் கண்ணை மறைக்கவில்லை. கண்கள் சரியாக வேலை செய்ய, சரமாரியாக மகனை அடித்தார். அஞ்சம்மாவும் வாஞ்சிநாதனும் திலகரைத் தடுக்க பார்க்க, அவர்களை எல்லாம் தள்ளினார்.

வசுந்த்ரா அதிர்ச்சியில் நின்றவள்,

“மாமா! என்ன பண்றீங்க? விடுங்க அவரை” என்று கணவனை இழுத்தவள் மாமனார் கையில் இருந்த வாரை பிடுங்கி எறிந்தாள்.

“நீ ஏன்மா தடுக்கிற? இவன் அப்படி செஞ்சா நீ ஏன் இத்தன வருஷம் சொல்லாம இருந்த? என்ன சொல்லி மிரட்டினான் இவன்?” என்று திலகர் மருமகளை கேட்டார். லட்சுமணன் மகள் என்று ஆதங்கமிருந்தாலும், இத்தனை வருடம் நேராக வசுந்த்ராவை திலகர் பேசியதில்லை. வசுந்த்ரா காதலித்து வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே சித்ரஞ்சனை திருமணம் செய்ததாக நினைத்தார்.

‘எது நான் மிரட்டினேனா?’ என்று சித்ரஞ்சன் அப்பாவைப் பார்க்க, வசுந்த்ராவோ,

“மிரட்டலாம் இல்லை மாமா. இவருக்கு என்னை பிடிக்கும்னு வீட்ல சொல்ல பயம், தாலி கட்டினா நான் மறுக்க மாட்டேன் நினைச்சிட்டார்” என்றதும் திலகர்,

“தாலி என்ன பெரிய பீரங்கியா? இந்த பய மூஞ்சில வீசிட்டு போக வேண்டிதானேம்மா.” என்றார் ஆதங்கமாக.

“நம்ம ரெண்டு வீட்டுக்கும் சும்மாவே சண்டை. இவர் இப்படி செஞ்சார்னு தெரிஞ்சா எங்கப்பா கோவத்துல எதாவது செஞ்சிருவாரோன்னு பயத்துல சொல்லல மாமா” என்று வசுந்த்ரா சொல்லவும்,

“அவன் என்ன வெட்டுறது? இவன் செஞ்சதை அன்னிக்கு நீ சொல்லியிருந்தா நானே இந்த பயலை வெட்டியிருப்பேன்” என்றார் திலகர் குறையாத ஆத்திரத்துடன்.

லாலாவோ, ‘இந்த சக்திக்கு அறிவே இல்லை, அநியாயமா சித்தப்பாவ மாட்டிவிட்டான். பாவம் இந்த தாத்தா ஆன்சர் தப்பா எழுதினாலே சும்மா விடமாட்டார், சித்தப்பா செஞ்ச சம்பவத்துக்கு என்ன ஆகப்போறாரோ’ என்று அனுதாபத்தோடு சித்தப்பாவை பார்த்தான்.

சரோஜினி ஒன்றும் புரியாமல் நின்றாள். அவளுக்கு அப்பா அடித்ததெல்லாம் ஒன்னும் பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் சித்தப்பாவின் காதல் விஷயம்!! அவள் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

சித்தியை நினைத்து கவலையாக இருக்க, அதே நேரம் சித்தி சித்தப்பாவை விட்டுக்கொடுக்காது பேசுவது ஆச்சரியமாக இருந்தது. அவர்களிடம் இப்போது காதல் இல்லை என்று சொன்னால் நிச்சயம் நம்ப முடியாது.

எல்லாம் விட பெரிய புதிர் இந்த சக்திக்கு எப்படி இது தெரிந்தது என்பதுதான். அதுவும் இவள் வீட்டு விஷயம் எப்படி அவன் தெரிந்து வைத்திருக்கிறான்? யோசனையோடு பக்கத்தில் நின்ற அண்ணனை பார்க்க, அவனோ சித்தப்பாவை பாவமாக பார்த்தான். திலகர் திட்டுவதை நிறுத்தவில்லை.

“லாலா, சக்திக்கு எப்படி சித்தப்பா விஷயம் தெரியும்? நமக்குக் கூட தெரியல” என்று சரோ மெல்ல முணுமுணுக்க,

“நமக்கில்லை சரோ. உனக்கு!” என்றான் லாலாவும் மெல்லிய குரலில்.

“அடப்பாவி எட்டப்பா! அப்போ சித்தப்பாவை மாட்டிவிட்டது நீதானா?”

“ஹேய் நான் ஒன்னும் மாட்டிவிடல, அது பேச்சுவாக்குல சக்திட்ட சொல்லிட்டேன். அவன் என்னடான்னா இப்படி சித்தப்பாவை மாட்டிவிட்டான்” என்று லாலாவும் வருத்தமாகப் பேச,

“நடிக்காதடா. நீயே சக்திட்ட சொல்லிட்டு சித்தப்பாவை அடி வாங்க வச்சிட்டு இப்போ ஒரு ரியாக்ஷன் கொடுத்து நிக்கிறியே, அதாண்டா தாங்க முடியல. ஆனாலும் சித்தப்பா இப்படி பண்ணிருப்பார்னு நான் நினைக்கல” மெதுவாக சொன்னாள் சரோஜினி.

“பேசாம இருடி” என்று சித்ரா மகளை அதட்டியவர்,

“போய் பகத் கூட இரு, அவன் முழிச்சிருப்பான்.” என்று மகளை அறைக்குப் போக சொன்னார். பகத் எழுப்ப ஆளின்றி பள்ளி செல்ல தேவையின்றி விடுமுறை தினம் போல் நன்றாக உறங்கினான். பகத் நன்றாக உறங்குவதைப் பார்த்த சரோஜினி, திரைச்சீலைகளை இழுத்துப் போர்த்திவிட்டு கதவை வெளிப்பக்கம் சாற்றிவிட்டு மீண்டும் நடுவீட்டுக்கு வந்தாள்.

அவள் வரும்போது பஞ்சாயத்தின் பாகம் இரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

“உன்னை இந்த புள்ள கட்டிட்டு வந்த அன்னிக்கு நீ இப்படி செஞ்சிட்டனு கோவமிருந்தாலும், என் பையனை நம்பி இந்த பொண்ணு வந்திருக்கு. இவ அப்பன் ஒத்துக்கமாட்டான்னு புள்ளைங்க இப்படி செஞ்சிடுச்சு நினைச்சேனேடா? ஆனா ஒரு பொண்ணோட விருப்பமில்லாம… உன்னை” என்று அதுவரை இடைவெளி விட்டிருந்த கோபம் இப்போது இரட்டிப்பானது.

மீண்டும் மகனை அடிக்க கை ஓங்கிக்கொண்டு எழ,

“மாமா! போதும் நிறுத்துங்க” என்று வசுந்த்ரா கத்தினார்.

“சக்தி சொல்ற மாதிரி நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம்னு சொல்லிட்டு வீட்ல சுதந்திரமில்லாம பண்ணீட்டீங்க. மனசுல இருக்கிறத பெத்தவங்க கிட்ட சொல்ல முடியும்ன்ற சுதந்திரத்தை நீங்க உங்க மகனுக்குக் கொடுக்கல, கொடுத்திருந்தா ஏன் இவர் அப்படி செய்ய போறார்? இவர் செஞ்சதுல எனக்கு இப்பவும் கோவம்தான், அதுக்காக வளர்ந்த பசங்க முன்னாடி அடிப்பீங்களா நீங்க? உங்க மேல மரியாதையும் பயமும் இருக்கிறதாலதான் இவர் அடிவாங்கிட்டு நிக்குறார்.” என்றதும் சித்ரஞ்சன் மனைவியின் கைப்பற்றி பேசாதே என்று கண்காட்ட, வசுந்த்ரா முறைத்தாள்.

“என்ன நான் சுதந்திரம் கொடுக்கலயா?” என்று திலகர் மருமகளை கேட்க,

“ஆமா கொடுக்கல. இப்போ கூட சரோஜினி மனசுல இருக்கிறதை சொல்றா, நீங்க யாரும் அதை காது கொடுத்து கேட்கல. எங்க தாத்தா வெள்ளைக்காரன் கிட்ட வேலை பார்த்தார்தான். அதுக்கு இப்போ என்ன செய்ய முடியும்? நீங்க நாட்டுக்காக நிறைய இழந்திருக்கீங்க, அதுக்காக எனக்கு உங்க மேல மரியாதையிருக்கு. அதையே காரணமா சொல்லி சின்ன பசங்களை கூட விளையாட விடல. எங்கப்பா மேலயும் தப்பிருக்கு. எங்க விஷயம் விடுங்க மாமா. நீங்க சரோஜினிக்குப் பிடிச்ச மாதிரி அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. அது போதும்!” என்றாள் வசுந்த்ரா.

“சுதந்திரம் கொடுக்கிறேன் சொல்லிட்டு இவங்க மனசுக்குப் பிடிச்சு ஒன்னை செஞ்சா, உனக்கு சுதந்திரம் கொடுத்த மீறிட்ட சொல்லி பிடிச்சு வைக்குறீங்க. சுதந்திரமெல்லாம் யாரும் கொடுக்கிறதில்ல மாமா. இவ அப்பா அடிச்சார்னு தெரிஞ்சதும் எதையும் யோசிக்காம வந்து உங்களை கேட்டானே சக்தி அவனை விட நல்ல பையன் உங்களுக்குக் கிடைப்பானா?” என்றள் பெருமூச்சோடு கணவன் பக்கம் திரும்பினாள்.

“வாங்க” என்று அவர்கள் அறைக்குச் செல்ல பார்க்க, சித்ரஞ்சனோ,

“நீ வா” என்று மனைவி கையைப் பிடித்தான்.

“எங்க?”

“உங்க வீட்டுக்கு” என்றதும் எல்லாரும் சித்ரஞ்சனை அதிர்வாய்ப் பார்த்தாலும் ஒன்றும் பேசவில்லை. திலகருக்கும் மகன் செய்த தவறில் வருத்தமிருக்க, அங்கு போக ஒன்றும் சொல்லவில்லை.

“அப்புறம் பேசிக்கலாம் ரஞ்சன்” என்று வசுந்த்ரா முணுமுணுக்க, அவன் கேட்கவில்லை.

“அடுத்த ஷிப்ட் அடி வாங்க சித்தப்பா அதுக்குள்ள ரெடியாகிட்டார் பாரேன்.” என்று லாலா தங்கையிடம் சொல்ல,

“அவரை மாட்டிவிட்டு பேசுறான் பாரு பேச்சு. அவ்வளவுதான் சும்மாவே அவங்க பேசுவாங்க, இன்னிக்கு சித்தப்பா காலி” சரோஜினி அண்ணனைத் திட்ட,

“என்னது நான் மாட்டிவிட்டேனா? சக்திதான்” என்றான் லாலா.

அங்கு சக்தி வீட்டில்…

“என்னங்க இங்க வாங்க.” என்று சசிகலா தண்ணீர் பிடிக்க சென்ற மகனை காணாது கணவனை அழைக்க,

“பக்கத்து வீட்ல சண்டை போ..” என்றதுமே பாஸ்கர் முறைத்தார்.

“பக்கத்து வீட்டு சண்டையை கவனிக்காத சொன்னா கேட்க மாட்டியா சசி?” என்று திட்ட,

“அய்யோ, பக்கத்து வீட்ல நம்ம பய சண்டை போடுறான்” என்றதும் பாஸ்கர் புருவம் சுருக்கினார்.

சக்தி தானாக சண்டைக்குப் போக மாட்டானே என்றபடி அவர் வெளியே வர நினைக்க, சக்தி வீட்டுக்குள் நுழைந்தான்.

“என்னாச்சு சக்தி?” என்று பாஸ்கர் மகனை கேட்க,

“என் பேரனை பேசுறானா அவன்?” என்று மருமகள் பேச்சைக் கேட்டு லட்சுமணனும் திண்ணைக்கு வர, சக்தி மூவரையும் பார்த்தவன் சட்டென்று உடைத்துவிட்டான்.

“நான் சரோஜினியை லவ் பண்றேன்” என்றதும்,

“கொப்பந்தன்னானே!” என்று அதிர்ச்சியில் மகனை பார்த்தார் சசிகலா.

லட்சுமணன் பேரனை முறைத்தார்.

“இப்போ எதுக்கு சக்தி அங்க போன?” என்று அவர் விசாரணையைத் துவங்க,

“சரோ என்னை லவ் பண்றேனு சொல்லவும் அவங்கப்பா அடிச்சிட்டார். அதை கேட்கத்தான் போனேன்” என்றதும் பாஸ்கர் பார்வை மகனை அளவிட, சசிகலாவோ,

“அவளை அடிச்சா நீ ஏண்டா போற. இங்க மட்டும் அந்த வீட்டோடு சம்மந்தம் பண்ண யாரும் காத்துக்கிட்டு இல்ல” என்றார் கோபமாக.

சக்தி கெஞ்சலாகத் தன் தாத்தாவைப் பார்த்தான்.

“உங்ககிட்ட பொறுமையா சொல்லணும்னு நினைச்சிட்டுத்தான் இருந்தேன். இன்னிக்கு அவ அடிவாங்கியிருந்ததும் கோவம் வந்துடுச்சு தாத்தா” என்றான்.

லட்சுமணன் இதனை எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென்று என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க, வாசலில் “மாமா” என்ற குரல்.

சக்தி எட்டிப்பார்க்க அவனை தொடர்ந்து எல்லாரும் பார்க்க, சித்ரஞ்சன் வசுந்த்ராவின் கையைப் பிடித்து நின்றான். லாலாவும் சரோஜினியும் அவர்கள் திண்ணையில் நின்றபடி சித்தப்பா என்ன செய்கிறார் என்று வேடிக்கைப் பார்த்தனர்.

“அய்யயோ! கோவத்துல இவரை கோர்த்துவிட்டு வந்துட்டேனே” என்று சக்திக்கு அப்போதுதான் நடந்தது உரைத்தது. அதுவரை சகலம் சரோஜினி என்றிருந்தான்.

சித்ரஞ்சனின் கன்னம் லேசாய் சிவந்து தலை முடி கலைந்து என்று அவன் நின்ற கோலமே பிரச்சனை என்று புரிந்தது.

“எங்க வந்த நீ?” என்று பாஸ்கரன் வேட்டியை மடித்துக் கட்டினார்.

வேடிக்கைப் பார்த்த சரோ, “இந்த சித்தப்பா இப்படி பண்றதுக்கு அன்னிக்கே இதை பண்ணியிருக்கலாம்” என்றதும்

லாலா உடனே, “ஆனாலும் இப்பவும் சித்தப்பா அதை ஒத்துக்கிட்டு போய் சொல்றார்ல. தப்பு செய்யும்போது இருக்க தைரியம் அதை ஒத்துக்கும்போது வராது. நம்ம தாத்தா கிட்ட அடிவாங்கியும் மறுபடியும் சக்தி தாத்தா கிட்ட போய் நிக்கிறார்னு சித்தப்பா செம ஸ்ட்ராங் பாடி” என்றான்.

“டேய் சித்தப்பா மேல பாசமிருக்க மாதிரி நடிக்காதடா. கட்டப்பனும் எட்டப்பனுமா சேர்ந்து சித்தப்பாவை காட்டிக்கொடுத்துட்டு இப்போ சிம்பதி சீன் போடுற” சரோஜினி அண்ணன் கையை நறுக்கென்று கிள்ளினாள்.

“அதெல்லாம் தெரியாம நடந்தது.” என்று லாலா தோளைக் குலுக்கினான்.

“ஆனாலும் சரோஜினின்னு உனக்குத் தாத்தா பெயர் வச்சதுக்கு நேத்து சக்தியை லவ் பண்றேன்னு டக்குன்னு சொல்லிட்டியே டி. நம்ம வீட்ல எல்லாருக்கும் தைரியம்தான், சித்தப்பா அப்பவே கல்யாணம் பண்ணினார். நீ உன் லவ் மேட்டர் சொல்லிட்ட..” என்று தங்கையைப் பாராட்ட,

“என்னை கலாய்ச்சது போதும். உனக்கும் லாலா லஜபதி ராய்’ பெயரை வச்சிருக்கார். நீயும் அந்த பெயரைக் காப்பாத்த எதாவது செய்.” என்றாள் சரோஜினி.

“அம்மாடி! நான் மட்டும் லவ் பண்ணினா டிரைக்டா சுடுகாட்டுல போய் படுத்திருவேன். அதுக்கெல்லாம் எனக்குத் தெம்பில்லை சரோ”

“யோசனை மஞ்சவாடிதான்! வேலைக்குப் போய்வியா லவ் பண்ணுன்னா சொன்னேன். முதல்ல உனக்கு லவ் பண்ண தெம்பு வேண்டாம் ஆள் வேணும்டா அண்ணா. வேலைக்குப் போய் உருப்புடு, அப்புறம் காதல் பண்ணலாம்” என்று சரோ வம்பிழுக்க, வேலையை சொன்னதும் லாலாவின் முகம் சுருங்கியது.

சித்ரஞ்சன் குரல் கேட்கவும் அண்ணன் தங்கை கவனம் அவ்விடம் போனது.

“அத்தான் ப்ளீஸ்! நான் உங்க கிட்ட பேசணும்” என்று சித்ரஞ்சன் சொல்ல, தங்கையை முறைத்த பாஸ்கரன்,

“இப்போதான் உனக்குப் பேச நேரம் வந்ததா? உன்கிட்ட பேச எங்களுக்கு நேரமில்லை.” என்று கோபமாகப் பேசினார்.

“என் பிரச்சனையை இன்னும் முடிக்கல, அதுக்குள்ள இந்த மாமா மாமியார் வீட்டு விருந்துக்கு வந்துட்டார்” என்று முணுமுணுத்த சக்தி,

“அப்பா! கொஞ்சம் அவங்க சொல்றதைக் கேளுங்க” என்று அப்பாவின் அருகே நிற்க, லட்சுமணன்,

“சக்தி!” என்று அதட்டினார்.

“தாத்தா! ஒரே ஒரு நிமிஷம். இது எனக்காக சொல்லல, உங்களுக்காக நம்ம அத்தைக்காக சொல்றேன்” என்றான்.

“மாமா! வசுந்த்ரா என்னை காதலிச்சு உங்ககிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டான்னு தானே உங்களுக்கு இவ மேல கோவம். எங்க புள்ள மேல சத்தியமா சொல்றேன். வசு என்னை காதலிக்கல, நாந்தான் காதலிச்சேன். இவ விருப்பமில்லாம கோவில்ல சாமி கும்பிட வந்தவளை கட்டாயப்படுத்தித் தாலி கட்டினது நாந்தான்.” என்று சொல்ல லட்சுமணனும் பாஸ்கரனும் அதிர்ந்து பார்த்தனர். வசுந்த்ராவின் விழிகள் கலங்கி இருந்தன.

பொறுமைசாலியான பாஸ்கரனுக்கே கோபம் வர, “ராஸ்கல்” என்று சித்ரஞ்சனை அடிக்க பாய சக்தியும் சசிகலாவும் அவரைப் பிடித்து நிறுத்தினர்.

“நீங்க என்னை பேசுங்க, அடிங்க மாமா. ஆனால் வசு மேல தப்பில்லை” என்றவன் அதுவரை பிடித்திருந்த வசுந்த்ராவின் கையை விட்டான்.

“இவன் அப்படி செஞ்சா நீ சொல்றதுக்கென்ன வசு?” என்று பாஸ்கர் தங்கையைக் கேட்க,

“வீட்டுள்ளாற போய் பேசலாம்ங்க. வா வசு” என்று சசிகலா வசுந்த்ராவின் கையைப் பிடிக்க வசு அப்பாவைப் பார்த்தாள்.

“உன் வீட்டுக்குள்ள வரதுக்கு நீ என்னை அவரை பார்க்கிற, வா” என்று சசிகலா இழுத்துப்போனார். பாஸ்கரும் தங்கை பின் போக, சக்தி லட்சுமணனிடம் பேசினான். தனக்குத் தெரிந்ததை சொன்னான்.

“இந்த பய இப்படி செஞ்சா இவளுக்கு எங்கடா போச்சு அறிவு. அன்னிக்கு சொல்லியிருந்தா இவனை வெட்டி வீசிருப்பேன்ல. என்ன தைரியமிருந்தா என் புள்ளைக்கு அவ விருப்பமில்லாம தாலி கட்டிருப்பான்..” என்று அவர் பேச சக்தி சமாதானம் செய்ய, சித்ரஞ்சன் தன் வீடு வந்தவன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

சித்ரஞ்சன் மனம் பல வருடங்களுக்குப் பிறகு லேசானது.

✅ End of Episode 17
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 2 weeks ago

பாவம் சித்தரஞ்சன். ஒரே நேரத்தில் எல்லாரிடமும் பேச்சு.

😂 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top