Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 19

தூரம் 19

சித்ரஞ்சன், வசுந்த்ரா, லாலா மூவரும் சுதந்திர விலாசத்துக்குள் நுழைந்தனர்.

“சாப்பிட வா சித்து” என்று சித்ரா அழைக்க,

“என்ன சீராடி முடிஞ்சாச்சா” என்று மருமகளிடம் கேட்டார் அஞ்சம்மாள்.

சித்ரஞ்சன் அம்மாவை முறைக்க, வசுந்த்ரா உடனே,

“எங்க வீடு பக்கத்துல தானேத்த இருக்கு, எப்போ வேணுமோ அப்ப எல்லாம் போய் சீராடிப்பேன்” என்றதும் திலகர் மருமகளிடம்,

“என்னம்மா என்ன சொன்னாங்க உன் வீட்ல?” என்று விசாரித்தார்.

“சித்தப்பாவை பாராட்டியிருப்பாங்க தாத்தா” என்று லாலா இயல்பாக சொல்ல, திலகர் அவனை முறைத்தார். உடனே,

“சாப்பிட்டு படிக்க போறேன் தாத்தா” என்றதும் வாஞ்சிநாதன் மகனை வருத்தம் கலந்த அதிருப்தியோடு பார்த்தார்.

அரசு தேர்வுகள் அன்று போல் இன்று இல்லை என்று தெரியும். மகனும் முயற்சி செய்கிறான், ஒன்றும் அமையவில்லை என்ற வருத்தம் அவருக்கு. இதில் மகளின் காதல் வேறு. இதற்கெல்லாம் என்ன முடிவெடுப்பது என்று தெரியாத நிலையில் தம்பியின் செயல் தெரிய, ஒன்றும் புரியவில்லை வாஞ்சிநாதனுக்கு.

“வருத்தப்பட்டாங்க மாமா.” என்ற வசுந்த்ராவுக்கும் எல்லாம் சொல்ல விருப்பமில்லை. மருமகளின் முகம் பார்த்த திலகரும்,

“எல்லாம் இந்த ராஸ்கல் செஞ்சதால..” என்று சித்ரஞ்சனை முறைத்தார்.

“பகத் எங்க?” திலகர் பேரனை காணாது கேட்க,

“அவன் இன்னிக்கு அங்க தங்குறேன் சொல்லிட்டான் மாமா. அதான் அங்க விட்டு வந்துட்டோம்” என்றாள் வசுந்த்ரா.

“சரிம்மா, நீ போய் சாப்பிடு” என்றதும்,

“வீட்ல சாப்பிட்டேன் மாமா” வசுந்த்ரா சொல்ல,

“சரிம்மா” என்ற திலகர் வசுந்த்ரா அவர்கள் அறைக்குச் செல்ல படியேறினாள். திலகர் மனைவியிடம்,

“ஏதோ மருமக புண்ணியத்துல உன் மகன் செஞ்ச வேலைக்கு அவ அப்பன் விட்டு வச்சிருக்கான். சும்மா அந்த புள்ளையைப் பேசிட்டு இருக்காத, உன் புள்ள மேல ஆசைப்பட்டு இந்த புள்ள கட்டிக்கல. வசுந்த்ராவுக்கு அவங்க வீட்டுக்குப் போகணும்னு தோணுச்சுன்னா போகும். யாரும் கேட்கக் கூடாது” என்றார்.

மாடிவரை திலகர் சத்தம் கேட்கத்தான் செய்தது. அந்த விஷயத்தில் எல்லாம் திலகர் மருமகளை இதுவரை ஒன்றும் பேசியதில்லை. இரவு உணவு உண்டுகொண்டிருந்த சரோஜினியும் இந்த பேச்சைக் கவனிக்க, பேத்தியைப் பார்த்தபடி மகனிடம்,

“நீயும் உன் பொண்டாட்டியும் அவன் வீட்டோட பேசுங்க, பழகுங்க. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். அதுக்காக மத்தவங்க யாரும் அவங்களோட பேச்சு வச்சுக்க நினைச்சா அவ்வளவுதான்!” என்றார் கட்டளையாக.

“சரோ! இது உனக்குத்தான்” என்று லாலா தங்கையிடம் மெல்ல சொல்ல,

“லாலா! நான் திலகர் பேத்திடா. முடியாதுன்னா அப்படியே விட்டுடுவேனா? உண்ணாவிரதம் இருப்பேன். உள்ளிருப்புப் போராட்டம் பண்ணுவேன்” என்றவளுக்கு சக்தி மீதான வருத்தம் இன்னும் நீங்கவில்லை. தனக்காக அவன் வந்து நின்றது அப்பாவிடம் அடிவாங்கி, அழுத அக்கணத்தில் அலாதி ஆசுவாசம் கொடுத்தது உண்ஂமை.

அதே உணர்வு இப்போதில்லை. லாலா விஷயத்தில் சக்தி பேசியது, நடந்தது எதுவும் பிடிக்கவில்லை. சரோஜினிக்கு சக்தியிடம் எப்போதும் பெரிய எதிர்ப்பார்ப்பிருந்ததில்லை. அவன் எஸ்.ஐ தேர்வுகளுக்குப் படித்த சமயத்திலிருந்தே இருவருக்கும் காதலிருக்க, அவன் வேலைக்காக எடுத்த பயிற்சி, முயற்சி எல்லாம் அறிந்தவள். அதனால் அவன் வேலைக்கு நடுவே கொஞ்ச நேரம் பேசினாலே நிறைந்துவிடுவாள்.

அந்த நிறைவுக்குக் காரணம் சக்திக்குத் ‘தான்’ முக்கியம் என்ற எண்ணம் பெண்ணுக்குக் கொடுத்த வண்ணங்கள். வீட்டில் ஒற்றைப்பெண் என்ற கவனிப்பிருந்தாலும் சுதந்திர விலாசத்தின் கட்டுப்பாடுகள் சரோஜினிக்கு அதிகம். அதிலும் ஆணாய் அண்ணனுக்குக் கிடைக்கும் சலுகைகள், சிறு சிறு சுதந்திரங்கள் கூட தனக்கில்லை என்ற வருத்தமுண்டு.

சக்தி அந்த வகையில் அவளை மரியாதையாக, சமமாக நடத்துவான். அதையும் விட அவனின் கண்ணியம் மிக மிக பிடிக்கும். எல்லாம் பிடித்தாலும் லாலா விஷயத்தை சொல்லாதிருந்தது இன்னும் சரோஜினியால் ஏற்கமுடியவில்லை. அதற்குள் சித்தப்பா விஷயம் வெளியாகியிருக்க, அவர்கள் விஷயத்தை வீட்டிலோ சக்தியிடமோ பேச அவகாசமில்லை.

“சாப்பிடும்போதாச்சும் நான் நிம்மதியா சாப்பிடுறேன் டி. நீயும் தாத்தா மாதிரி உப்பெடுத்தா சால்ட் சத்தியாகிரஹா எப்போ? சைமன் கமிஷன் எப்போன்னு என்னை வெறுப்பேத்தாத” என்றான் இட்லியை விழுங்கியபடி.

“நீ நல்லாதானே படிக்கிற லாலா. இந்த டைம் பாஸ் ஆகிடுவ..” என்று அண்ணனின் வாடிய முகம் கண்டு சரோஜினி ஆறுதலாகப் பேச,

“அப்படி இந்த டைம் பாஸ் ஆகிட்டா உன் வாய்ல ஒரு கிண்ணம் உப்ப்.. ச்சை சக்கர போடுறேன்” என்றான் லாலாவும் சிரிப்போடு.

“சக்தி கிட்ட பேசினியா?” லாலா மெல்ல தங்கையிடம் கேட்க,

“இதை போய் அவன்கிட்ட கேளு” என்றாள் சரோஜினி.

“அவனே அவன்கிட்ட எப்படி பேசுவான்?” என்றதும் லாலாவின் தோளில் குத்தினாள் சரோஜினி.

லாலா சிரித்தவன், “இன்னுமா உங்க சண்டை முடியல..” என்று கேட்டவன்,

“நாளைக்குப் போர் அடிக்கிறப்ப சொல்றேன். உன் காதல் கதையை சொல்லு” என்றான்.

“என்ன? என் லவ் ஸ்டோரி உனக்குப் போர் அடிச்சா கேட்கிற கதையா?” என்றாள் கோபமாக.

“பேசாம சாப்பிடுங்க” என்று சித்ரா அதட்டவும் இருவரும் உண்டு எழுந்தனர்.

அவர்கள் எழவும் சித்ரஞ்சன் உடைமாற்றி வந்தமர்ந்தான். வசுந்த்ரா கீழே இறங்கவில்லை. சித்ரா சித்ரஞ்சனுக்குப் பரிமாறிவிட்டு செல்ல, அவன் உண்டு முடித்து அறைக்குச் சென்றான்.

வசுந்த்ரா கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள். சித்ரஞ்சன் சட்டையைக் கழட்டி விட்டு மனைவிக்கு அருகில் முதுகுக் காட்டி படுத்தான். முதுகில் அங்காங்கே சிவப்பாய்த் தடங்கள்.

“என்ன வீரத்தழும்பைக் காட்டிட்டு இருக்கீங்க?” வசு நக்கலாகக் கேட்டவள், எழுந்து மேஜையில் இருந்த மருந்துப்பெட்டியில் ஆயின்மெண்ட் எடுத்து கணவனுக்குப் பூசி விட்டாள்.

“அம்மாஆஅ வலிக்குதுடி” என்று மருந்து பட்ட எரிச்சலில் சித்ரஞ்சன் கத்த,

“இப்போ கத்துறீங்க, அப்ப பெரிய இவன் மாதிரி அசையாம அடிவாங்கிட்டு நின்னீங்க? தள்ளி கூட நிக்கல.”

“தப்பு செஞ்சேன், அடி வாங்கினேன். அப்போ எனக்கு உன்னை உங்கப்பா கிட்ட பேச்சு வாங்க வச்சது, நீ நம்ம கல்யாணம் ஆன அன்னிக்கு அழுததெல்லாம் நினைப்பு வந்துடுச்சு.. அதை விட இந்த வலி அப்போ பெருசா தெரியல. இந்த அடியை அன்னிக்கே வாங்கிட்டு எங்கப்பா கிட்ட உன்னைத்தான் கட்டுவேன் சொல்லியிருக்கலாம், இல்லை உங்கப்பா கிட்ட சொல்லியிருக்கலாம்” சித்ரஞ்சன் புலம்ப வசுந்த்ரா கணவனின் தோளில் அடித்தாள்.

“அப்படியென்ன அடி வாங்கியும் என்னைக் கட்டணும்? திருந்தவே மாட்டீங்க இல்ல” என்று முறைப்பாகக் கேட்க, சித்ரஞ்சன் மனைவி முகம் பார்த்தபடி திரும்பிப் படுக்க எத்தனிக்க,

“மருந்து போயிடும். அப்படியே இருங்க” என்று அதட்டியவள் அவன் முகம் பார்க்கும்படி உட்கார்ந்தாள்.

“என்னை சும்மா பேசிட்டே இருக்க, அடுத்த ஜென்மத்துல நான் பொண்ணா பொறந்து நீ என் பின்னாடி சுத்தணும். அப்போ தெரியும் என் கஷ்டம்” என்றதும் வசுந்த்ரா உடனே,

“அடுத்த ஜென்மத்திலயும் திருந்துற ஐடியா இல்லையா?”

“நோ சான்ஸ்” என்றான் மனதார. அத்தனை நாள் அழுத்திய குற்றவுணர்வு குறைந்திருந்தது. அவன் செய்த தவறு அப்படியே இருந்தாலும், அதை ஒத்துக்கொண்டாலும் வசுந்த்ராவை வீட்டில் ஏற்காத வருத்தம் அவனுக்கும் உண்டுதானே. இப்போது அது நிறைவேறியிருக்க மனத்தில் உள்ளதை எல்லாம் பேசினான்.

“நானும் எங்கண்ணனும் சின்ன வயசுல இருந்தே எங்கப்பா என்ன சொல்றாரோ அதைக் கேட்டுத்தான் வசு வளர்ந்தோம். என்னை விட எங்கண்ணன் வயசில ரொம்ப பெரியவன், அவன் அப்பா பேச்சுக் கேட்டு படிச்சு ஏ.ஓ(அக்ரீ ஆபிஸர்) ஆகிட்டான். அப்போ அப்பா சொல்றபடி கேட்டா நல்லா இருக்கலாம்னுதான் எனக்கும் ஐடியா. அவரும் நாங்க நல்லாயிருக்கணும்னுதான் நினைச்சார்”

“சுதந்திரப் போராட்டத்துல எங்க தாத்தா எல்லா சொத்தையும் இழந்துட்டார். சுதந்திரம் கிடைச்சது, எங்க வீட்ல ஒன்னுமில்ல, எங்கப்பா ரொம்ப கஷ்டப்பட்டார். அவரால பெருசா படிக்க முடியல. உங்க வீடு அவருக்குப் போட்டியா இருந்தது. உங்க தாத்தா, அப்பா பார்த்து அவருக்கும் நம்ம பசங்களை அப்படி வளர்க்கணும்னு நினைச்சிட்டார். அண்ணா வேலைக்குப் போனதும் அவருக்கு நிறைய மரியாதை, அவரால எங்கப்பாவுக்கும்.”

“எதாவது நான் வால்தனம் பண்ணினாலும் அடி விழும், எங்கண்ணன் மாதிரி நான் எப்படி இருக்க முடியும்? எங்களுக்கு வயசு வித்தியாசம் உண்டுல்ல.. சரோ சொல்ற மாதிரி எனக்கும் எங்காச்சும் ஓடி போயிடணும் தோணும். ஆனா வீட்டை விட்டா வேற உலகமில்ல. அப்படியிருக்க உங்க வீடு வேற மாதிரி இருக்கும், நீ போடுற சத்தத்துல எனக்கு அலாரம் தேவைப்பட்டதே இல்ல. பாஸ்கர் அத்தானும் நீயும் செம க்ளோஸ்.. நம்ம அண்ணன் அப்படியில்லையே தோணும். கொஞ்ச நாள் அண்ணனைப் பார்த்த நான் அப்புறம் தங்கச்சியைப் பார்க்க ஆரம்பிச்சேன். காலேஜ் போறப்ப எல்லா பசங்களும் பொண்ணுங்களைப் பார்க்கிறதுதானே?”

“நீ உங்கப்பாவோட ஹீரோ ஹோண்டா ஓட்டுவ இல்ல.. எங்க வீட்ல அண்ணாதான் அப்போ பைக் வச்சிருந்தான், அதுவும் அப்பா என்னை ஓட்ட விட மாட்டார். நீ படிச்சு வேலைக்குப் போய் வாங்கினாதான் அதோட அருமை தெரியும் சொன்னார். இந்த பொண்ணு எவ்வளவு ஸ்டைலா பைக் ஓட்டுது பாரேனு உன்னைப் பார்த்து பொறாமையா இருக்கும். நீயும் சக்தியும் சேர்ந்து செடிக்குத் தண்ணி ஊத்துவீங்க, அவனோட பாண்டி விளையாடுவ. பசங்களோட கிரிக்கெட் விளையாடுவ..எங்கப்பா நான் பசங்களோட விளையாடினா படிக்க மாட்டேன். கெட்டுப்போய்டுவேன்ன்னு விட மாட்டார்.”

“எங்கப்பாவுக்குப் பிடிக்காதுனு எதையும் செய்யாத அளவு நான் நல்ல பிள்ளை இல்லை. காலேஜ் கட் அடிச்சிருக்கேன், சினிமாவுக்குப் போயிருக்கேன். ப்ரண்ட்ஸ் பைக் வாங்கி ஓட்டியிருக்கேன். செய்யாத சொல்றப்ப நேர்மையா செய்யணும்னு எண்ணம் போய் தெரியாம செஞ்சிடலாம்னு ஒரு எண்ணம் வந்துடுமில்லையா?அப்படித்தான் நான் இருந்தேன்”

“பொறாமையாத்தான் உன்னைப் பார்க்க ஆரம்பிச்சேன். சிலரைப் பார்த்தா இவங்களை மாதிரி இருக்கணும்னு தோணும். அது முடியாதப்ப இவங்களோட இருந்தா போதும்னு தோணும். அப்புறம் உன்னை பார்க்க பிடிச்சது, எதாவது சாக்கு வச்சு பேசவும் செய்வேன். நீ ஒரு ரெண்டு நிமிசம் பேசிட்டா அதையே பெருசா நினைச்சு ரெண்டு மாசம் ஓட்டிடுவேன்”

சித்ரஞ்சன் முகத்தில் ரசனையாக ஒரு புன்னகை. வசுந்த்ரா கணவன் பேச்சில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தாள்.

“நான் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டது ஒன்னு வேலை, இன்னொன்னு நீ! வேலையிருந்தா நமக்கு ஒரு செக்யூரிட்டி, பிடிச்ச பொண்ணைக் கட்டினா வாழ்க்கை நல்லாயிருக்கும் நினைச்சேன். ஆனாலும் எங்கப்பாவையும் உங்கப்பாவையும் பார்த்து பயம்.”

“அதுக்கு அப்புறம்தான் உனக்கே தெரியுமே..” என்றவன் சில நிமிடங்கள் அமைதியாகிவிட்டான்.

“இத்தனை வருஷத்துல இதெல்லாம் நீங்க சொன்னதில்ல” வசுந்த்ரா சொல்ல,

“எனக்கும் இதெல்லாம் மனசு விட்டுப் பேசணும்னு ஆசைதான் வசு, ஆனா எங்க போனாலும் கடைசியில நம்ம கல்யாணம் விஷயம் பேசி ரெண்டு பேரும் சண்டை போடுவோம். என்னை நானே எனக்கு வேற வழியில்லனு சொல்லி சமாதானம் செஞ்சிட்டு இருந்தேன். இன்னிக்கு நீ உங்க வீட்டோட பேசவும் ஒரு நிம்மதி. முன்னாடியே இதை செஞ்சிருக்கலாம்னு கஷ்டமாவும் இருக்கு, சாரி” என்று கைப்பிடித்தான்.

“அது சரி, மாமனார் வீட்டுக்குக் கூப்பிட்டாதான் சார் வருவீங்களோ? என்னை அப்படியே விட்டுப்போய்ட்டீங்க.” என்று வசுந்த்ரா கோபமாகக் கையை உருவிக்கொள்ள,

“ஏய்” என்று மீண்டும் சித்ரஞ்சன் கையைப் பிடித்தான்.

“ஏன் உங்கப்பா கிட்ட அடிவாங்கிட்டு நின்னீங்க, எங்கப்பா ரெண்டு அடி அடிச்சா வாங்கிட்டு நிற்க வேண்டிதானே.?”

“அடிச்சா வாங்கியிருப்பேன். அதான் அவர் அடிக்கலையே. ரொம்ப வருசம் கழிச்சுப் பேசுறீங்க, நான் எதுக்குன்னுதான் வந்துட்டேன். அவங்களை ஃபேஸ் பண்ண கஷ்டமா இருந்தது.”

“அப்படியே விட்டுட்டு போய்ட்டீங்க. அப்புறம் என்னத்துக்கு எட்டி பார்த்தீங்க?”

“அடிப்பாவி! நான் எட்டிப்பார்த்தத பார்த்தியா?”

“பார்த்தேன்” என்றபடி வசுந்த்ராவும் படுக்கையில் சாய்ந்தாள்.

“பார்த்தும் பேசல” சித்ரஞ்சன் கடுப்பாக சொல்ல,

“அப்படியே சின்னப்பையன் பேச்சு வராது. வசுந்த்ரான்னு கத்தி கூப்பிட என்ன?” என்று திட்ட,

“அது முன்ன பின்ன நீ உங்க வீட்டுக்குப் போய் நான் கூப்பிட்டு பழக்கமில்லல”

“சக்தி மட்டும் டெய்லி வந்து சரோவ கூப்பிட்டானா?”

“சும்மா அவன் பேரை சொல்லி என்னை வெறுப்பேத்தாதடி” என்ற சித்ரஞ்சன் சிறிது நேரம் கழித்து,

“உண்மையில சரோவைப் பார்த்து பொறாமையா இருந்தது தெரியுமா? சின்னப்பொண்ணு எவ்வளவு தைரியமா வீட்ல விஷயத்தை சொல்லிட்டா. ச்ச பாவம் பிள்ளையை எங்கண்ணன் அடிச்சிட்டான்.. சக்தியும் சூப்பர்தான் பொசுக்குனு பொண்ணு கையைப் பிடிச்சு எங்கண்ணனைப் பேசிட்டுப் போய்ட்டான்.” என்றான் பெருமையாக.

வசுந்த்ராவுக்குக் கணவனை இத்தனை வருடத்தில் மிக மிக நன்றாகத் தெரியும். வெளியே வேலையில் எத்தனை தைரியமாக இருந்தாலும் வீட்டைப் பொருத்தவரை அவன் இன்னும் திலகரின் சொல் பேச்சு தட்டாத மகனாக இருக்கவே நினைப்பான். அது சிறு வயது முதலே அவன் பழக்கம்.

“எனக்கு வலி மாத்திரை கொடு வசு, ரொம்ப எரியுது” என்று சித்ரஞ்சன் கேட்க,

“உங்கப்பா என்ன லூசாங்க? லவ் பண்றத தைரியமா சொன்னவளையும் அடிக்கிறாங்க. சொல்லாத உங்களையும் அடிக்கிறார்.” என்று மாமனாரைத் திட்டியபடி கணவனுக்கு மாத்திரைக் கொடுத்தாள்.

சித்ரஞ்சன் மாத்திரைப் போட்டு அமைதியாக உறங்கினான்.

******************************

அடுத்த நாள் சித்ராவின் சொந்தத்தில் ஒரு விசேஷமிருக்க அவர் அங்கே சென்றிருந்தார். அஞ்சம்மா, சரோஜினி, வசுந்த்ரா மட்டுமே வீட்டிலிருந்தனர். திலகர் வயலுக்குப் போயிருந்தார். காலை ஒன்பது மணி போல் வசுந்த்ரா அண்ணியிடம் அவர்களின் குல தெய்வ கோவிலின் சாவியைக் கேட்டாள்.

“ரொம்ப வருசமாகிடுச்சு அண்ணி. போகணும் போல இருக்கு சாவி தரீங்களா?” என்று காம்பவுண்ட் சுவரின் இந்தப்பக்கம் நின்று கேட்டாள்.

“அதுக்கென்ன எடுத்தாரேன் இரு” என்று சசிகலா உள்ளே சென்று சாவியை எடுத்து வந்தார்.

“வீட்ல யாருமில்லையா அண்ணி?”

“சக்திக்கு நைட் டியுட்டி இன்னும் வரல, உங்கண்ணன் காலேஜ் போயிட்டார். மாமா டவுனுக்குப் போயிருக்கார்.” என்ற சசிகலா,

“ரொம்ப வருஷம் கழிச்சுப் போற வசு, உன் வீட்டுக்காரரையும் அழைச்சிட்டுப் போகலாமில்ல?” என்றார்.

“அவர் டியுட்டிக்குப் போய்ட்டார் அண்ணி. நேரமிருந்தா வரேன்னு சொல்லிட்டுத்தான் போனார்.” என்ற வசுந்த்ரா கிளம்பி மாமியாரிடம் சொல்ல,

“சித்தி! நான் இன்னிக்கு லீவ்தானே? வீட்ல போரடிக்குது, நானும் வரட்டுமா?” என்று சரோஜினி கேட்க,

“வாயேன்” என்றாள் வசுந்த்ரா.

“ஏண்டி போரடிக்குதா? இந்தா உளுந்து உடைச்சிட்டு இருக்கேன் நான், புளி குத்தாம கிடக்கு. நீ ஊர் சுத்த போறியா?” என்று அஞ்சம்மா பேத்தியைப் பேச,

“வந்து உனக்கு உளுந்து உடைச்சி தரேன்த்தா. கோவிலுக்குப் போகும்போது பேசாத” என்ற சரோஜினியும் சுடிதார் அணிந்து வந்தாள்.

சரோஜினி ஸ்கூட்டி ஓட்ட இருவரும் அதில் சென்றனர். வசுந்த்ராவுக்கு வெகு வருடங்கள் கழித்து கோவிலைப் பார்த்ததில் ஒரு நிறைவு. இந்த கோவிலில்தான் அவள் திருமணம் நடந்தது. எதிர்ப்பாராத, பிடிக்காத நிகழ்வுதான்! அவர்கள் குலதெய்வத்தை வணங்கி விட்டு அமைதியாக கோவிலில் உட்கார்ந்துவிட்டனர்.

“அப்பா பயங்கரமா இருக்கே உங்க கோவில்” என்று சரோஜினி கோவில் வெளிப்பக்கமிருந்த அந்த நீண்ட அருவாளைப் பார்த்து சொன்னாள்.

“முன்னாடி பழசு இருந்தது, இப்போ கும்பாபிஷேகம் பண்ணி மாத்திட்டாங்க போல” வசுந்த்ரா சொல்ல, வெளியே வண்டி சத்தம்.

சக்திவேல்தான் வந்தான். வீட்டுக்குச் சென்று காலை உணவை முடித்தவனிடம் பேச்சுவாக்கில் சசிகலா வசுந்த்ரா கோவில் சென்றதை சொன்னார். இவனும் வாசலுக்கு வந்து கை கழுவ, அஞ்சம்மா ரோட்டில் சென்ற யாரிடமோ புலம்பிக் கொண்டிருந்தார்.

“என்னமோ அவளுக்கு வழி தெரியாத மாதிரி எம்மூட்டு பேத்தித் துணைக்குப் போறா” என்றதும் சக்தி பார்வை சரோஜினியின் வீட்டை அளந்தது. அவள் வண்டியைக் காணும் என்றதும் அவனுக்கும் அவளிடம் பேச தோன்ற உடனே கிளம்பிவிட்டான்.

“என்னடா? சாமியைப் பார்க்க வந்தியா?” என்று கோவில் பிரகாரத்தினுள் நுழைந்த சக்தியிடம் கேட்டாள் வசுந்த்ரா.

“சரோஜினியைப் பார்க்க வந்தேன்” என்றான்.

✅ End of Episode 19
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 week ago

Open aga உண்மை பேசுகிறார் சக்தி.   Very nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top