Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 23

தூரம் 23

திலகர் சம்மதம் சொல்லவும் சரோஜினி முகம் பிரகாசமாக, வசுந்த்ராவுக்கும் சந்தோஷம். சித்ரஞ்சன் பதில் பேசாமல் நிற்க,

“என்னடா சொன்னது புரிஞ்சதா? அவனுக்குப் பேரன் மேல அக்கறை இருந்தா வந்து பொண்ணு கேட்கட்டும். வந்தா நான் சம்மதிக்கிறேன்” என்ற திலகர் எழுந்து போய்விட்டார்.

சரோஜினி வேகமாக அம்மாவிடம் இதனை பகிரப்போக,
“எங்கப்பா எப்படி நேக்கா எஸ்கேப் ஆகிட்டார் பார்த்தியா?” என்று சித்ரஞ்சன் மனைவியைப் பார்த்தான்.

“மாமா ஒத்துக்கிட்டதே பெருசு. என்ன எஸ்கேப் ஆகிட்டார்?” வசுந்த்ரா புருவங்கள் சுருங்க கேட்க,

“உங்கப்பா இப்போ சம்மதிக்கணும், இல்லைனான் நான் ஒத்துக்கிட்டேன் அவர் ஒத்துக்கலன்னு சொல்லிடுவார். பாஸ்கர் அத்தான் கிட்ட பேசு வசு” என்று சித்ரஞ்சன் சொல்ல,

“அண்ணி அப்பா சொல்லணும் சொல்றாங்க.” என்றாள் வசுந்த்ரா.

“மாமா ஒத்துக்கிட்டாங்க இல்ல, அப்பா எப்படியும் சக்திக்காக சம்மதிச்சிடுவார். ஒன்னும் பிரச்சனையில்லை” என்ற வசுந்த்ரா,

“எங்கப்பா கிட்ட காலையில என்ன பேசுனீங்க? சக்தி விஷயமா?” என்று குறுகுறுவென்ற பார்வையோடு கேட்க,

“சும்மா பேசினேன். சக்தி விஷயம் பேசுற அளவெல்லாம் நானும் மாமனாரும் ராசியாகலயே” என்ற சித்ரஞ்சன்,

“நான் டியுட்டிக்குக் கிளம்புறேன் வசு” என்று மாடியேறினான்.

லாலா அவன் அறையில் அரைத் தூக்கத்தில் படித்துக்கொண்டிருந்தான்.

“டேய் லாலா!” என்று உற்சாகமாக அண்ணனை அழைத்த சரோஜினி,

“நம்ம தாத்தா என் லவ்வுக்கு ஓகே சொல்லிட்டார். சக்தி தாத்தா வந்து பேசினா எனக்கு சம்மதம்னு சொல்லிட்டார் தெரியுமா?” என்று புன்னகை நிறைந்த முகத்தோடு சொல்ல,

“சூப்பர்டி! எனக்கு டீரிட்” என்று லாலா கேட்க,

“சக்தி தாத்தாவும் ஒத்துக்கட்டும் உனக்கு என்ன வேணுமோ வாங்கித் தரேன்” என்றாள் சரோஜினி.

“அதெல்லாம் அவர் ஒத்துப்பார்டி. நம்ம தாத்தா மாதிரி ஸ்டீரிக்ட் கிடையாது, நீ கவலைப்படாத” என்று லாலா சொல்ல,

“தேங்க்ஸ்டா” என்றாள் சரோஜினி. வீட்டினரை எதிர்த்துதான் திருமணம் என்ற எண்ணத்திலிருந்தவளுக்குத் தாத்தாவின் சம்மதம் அத்தனை சந்தோஷம் கொடுத்திருந்தது.

“சரி சரி நான் ஸ்கூலுக்குக் கிளம்புறேன்” என்று சரோஜினி சென்றதும் லாலாவின் விழிகள் புத்தகத்தை வெறித்தன. வாழ்க்கையில் எல்லாரும் அடுத்த கட்டம் நோக்கி செல்ல, தான் மட்டும் தேங்கி தேய்வது போல் ஒரு எண்ணம். எப்படியாவது இந்த முறை தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்று நினைத்தவன் முகம் கழுவிவிட்டு மீண்டும் படிப்பில் ஆழ்ந்தான்.

சக்திவேலின் வீட்டில் அவன் வேலைக்குக் கிளம்பியதும் பாஸ்கரன் மனைவியிடம்,

“ஏன் சசி அவன் டல்லா இருக்கான்?” என்று போகும் மகனைப் பார்த்துக் கேட்டார்.

“ரெண்டு நாளா உங்க மகன் மூஞ்சி அப்படித்தான் இருக்கு” என்ற சசிகலா மதிய உணவுக்குக் காய்கறி வெட்டினார்.

“எப்படி இந்த சக்தி லவ் பண்ணினான்?” பாஸ்கரன் மனைவியிடம் கேட்க,

“என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனான் பாருங்க” என்றபடி வெங்காயத்தை நறுக்கியவர்,

“நீங்க என்ன இன்னும் காலேஜ் கிளம்பாம இருக்கீங்க?” என்று கணவனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.

“சக்தி பத்தி பேசலாம்னுதான். நமக்கு அவன் சந்தோஷம்தானே முக்கியம், அப்பா கிட்ட பேசணும் சசி. அவன் டல்லாயிருக்கிறது பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருக்கு”

பாஸ்கரன் மகன் மீதான பாசத்தில் பேச, சசிகலா உடனே,

“ரொம்ப கவலைப்படாதீங்க, உங்க மகன் ரெண்டு நாள் அப்படி முகத்தை வச்சுட்டு சுத்துவான் அப்புறம் அடம்பண்ண ஆரம்பிச்சிடுவான். நான் பொண்ணு பிடிக்கலன்னு சும்மா சொன்னேன், நல்ல புள்ள என்ன செய்யணும்? என்னை சமாதானம் செய்யாம அவன் கோச்சுக்கிட்டு போறான். அப்படியென்ன பிடிவாதம் கொஞ்சம் கூட இறங்கிப்போறதோ விட்டுக்கொடுக்கிறதோ கிடையாது. அவன் இஷ்டத்துக்கெல்லாம் நம்ம போகக் கூடாது” என்றார் மகனைத் தெரிந்தவராக.

“எல்லாம் ஒரே புள்ளன்னு நீதான் செல்லம் கொடுத்த, இப்போ பிடிவாதம் பிடிக்கிறான்” பாஸ்கரன் மனைவியைக் குற்றம் சொல்ல,

“ஆமா! நான் மட்டும்தான் செல்லம் கொடுத்தேன், நீங்க உங்கப்பா எல்லாம் அவனை திட்டிட்டே இருந்தீங்க பாருங்க. இப்போ கூட மகன் முகம் வாடினதும் வீட்ல உட்கார்ந்துட்டு என்னை சொல்ல வந்துட்டாரு வாத்தியாரு” என்று திட்டியபடி சசிகலா எழுந்து சமையல்கட்டுக்குள் சென்றார்.

“பக்கத்து வீட்டுப் பொண்ணையே விரும்பிட்டு இத்தனை நாளா நம்ம கிட்ட சொல்லாம இருந்திருக்கான். கொஞ்சம் கூட உங்களுக்குக் கோவமேயில்லையா? எனக்கு அவன் அன்னிக்கு சரோஜினி கையைப் பிடிச்சிட்டு நிக்குறத பார்த்ததும் ஒன்னுமே ஓடல. எப்ப பாரு சண்டைப்போடுவான் எங்கயிருந்ததுதான் வந்துச்சோ இந்த லவ்வு எல்லாம்” என்ற மனைவியின் பேச்சில் சிரித்த பாஸ்கரன்,

“அவன் சரோஜினியை லவ் பண்றேன் சொன்னப்போ எனக்கும் ஷாக்தான்! ஆனா பசங்க என்னைக்கு லவ் பண்ணினா அப்பா அம்மா கிட்ட சொல்லியிருக்காங்க? காலேஜ்ல எவ்வளவு பார்க்கிறேன் நான்? நம்ம பையன் அந்த பொண்ணுக்கு ஒன்னுன்னா உடனே போய் நின்னான்ல உண்மையாவே அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப் போல.. நீ நான் வேலைக்குப் போனதும் பொறுமையா அப்பா கிட்ட பேசி, அவர் என்ன நினைக்கிறார்னு எனக்குப் போன் பண்ணி சொல்லுடி” என்றார்.

“அதானே பார்த்தேன், அப்பனும் பிள்ளையும் இந்த விஷயத்துல ஒன்னு. அவன் உங்ககிட்ட கேட்க வேண்டியதை என்கிட்ட கேட்டுட்டு உங்ககிட்ட அமைதியான புள்ளையா நடப்பான். நீங்களும் மாமா கிட்ட நேர கேட்காம என்னை கேட்க சொல்றீங்க” என்று முறைக்க,

“அப்பா வசு விஷயத்துல ரொம்ப வருத்தப்பட்டார், இப்போ சக்திக்காக ஒத்துப்பார்னாலும் எனக்குக் கேட்க தயக்கமா இருக்குடி. நீன்னா டக்குனு கேட்டுடுவ” என்று சமாதானம் செய்தவர் வேலைக்குக் கிளம்ப ஆயத்தமானார்.

“சக்தி விஷயமிருக்கட்டும், வசுந்த்ரா விஷயம் யோசிச்சீங்களா?” என்று சசிகலா கேட்க, சார்ஜிலிருந்த போனை எடுத்தவர் அப்படியே நின்றார்.

“வசுக்கு என்ன?” என்று புரியாது பார்க்க,

“சித்து தம்பி நம்ம வீட்டுக்கு வரவே இல்லை. முறைப்படி நம்ம கூப்பிடணும்தானே?” என்றதும் பாஸ்கரன்,

“அந்த ராஸ்கல் செஞ்சதுக்கு முறை வேற” என்றார் முறைப்பாக.

“நம்ம வசுவுக்காகப் பார்க்க வேண்டாமா?”

“அவளை யார் என்ன சொன்னா? அவ வீடு வந்துட்டு போக வேண்டிதானே? பகத் கூட தெனமும் வரான் தானே? நான் பார்த்து வளர்ந்த பய இன்னிக்கு ஏடிஎஸ்.பி ஆகிட்டா நான் போய் அவனை கூப்பிடணுமா? அவனா வர வேண்டிதானே?”

“வந்தவனை அடிக்க போய்ட்டு வரலன்னா? தம்பிக்கும் தயக்கமா இருக்கும்ல, வசுவுக்குக் கல்யாணம் பிடிக்காம நடந்தாலும் இத்தன வருசம் பிடிச்சுத்தானே வாழ்றா. முறையா நம்ம கூப்பிட்டு மாப்பிள்ளைக்கு விருந்து வைக்கணும்தானே? அத்தை இருந்தா செஞ்சிருப்பாங்கன்னு வசு நினைக்கக் கூடாதில்ல. நீங்க இப்படி கோவப்பட்டு எதுவும் செய்யக் கூடாதுன்னுதான் வசு அன்னிக்கு ஒன்னும் சொல்லாம இருந்திட்டா. நீங்க மாமா கிட்ட பேசுறீங்களா இல்லை நான் பேசவா?” என்றார்.

“இப்போ என்ன மாப்பிள்ளை சாரை கூப்பிடணும், அதானே? அந்திக்கு வந்ததும் கூப்பிடுறேன்” என்று பாஸ்கர் கிளம்பிச் சென்றார்.

அவர் சொன்னது போலவே அந்த வாரம் சித்ரஞ்சனுக்கு விடுமுறையாக இருந்த நாளில் மாமனார் வீட்டில் விருந்து நடைப்பெற்றது. லட்சுமணனிடம் சித்ரஞ்சன் பேசினாலும் அவர் முறைத்தார் தவிர அவனிடம் பேசவில்லை. பாஸ்கர்,

“வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்க,

“எப்பவும் போல பெயர் சொல்லியே கூப்பிடுங்க அத்தான்” என்று சித்ரஞ்சன் சொல்ல, அவன் பக்கம் நின்ற சக்திவேல்,

“மாமா! அப்படியெல்லாம் சொன்னீங்க ப்ரோபஸர் வாடா போடான்னு சொல்லிடுவார்.”

“சொன்னா சொல்லட்டும்டா, என்னை விட உங்கப்பா பெரியவர்தான். என் ப்ரோபஸர் வேற”

“ப்ரோபஸர் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க, வேற லெவல் மாமா நீங்க” என்று வம்பிழுத்தான்.

“நானே முதல் முறையா இன்னிக்குத்தான் டா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். ஏற்கெனவே வெறுப்பா இருக்க உன் தாத்தாவை ஏத்தி விட்டுறாதடா” என்றான் கெஞ்சலாக.

“சக்தி! போய் மாமாவுக்கு சேர் எடுத்துப்போடு. என்ன சும்மா பேசிட்டு நிக்குற” என்று பாஸ்கரன் மகனை அதட்ட,

“ஓகேப்பா” என்றவன், “உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் எங்கப்பான்னா பயம்தான்” என்று மெல்ல சொன்னவன் அவனுக்கு நாற்காலி எடுத்துப்போட, மாமனுக்கு மதிய விருந்து அமர்க்களப்பட்டது.

“பகத்’தை ஏன் ஸ்கூலுக்கு அனுப்பின?” என்று பாஸ்கரன் தங்கையைத் திட்ட,

“அந்திக்கு வந்து சாப்பிட்டுப்பான்ண்ணா. இன்னும் கொஞ்ச நாள்தானே அப்புறம் ஸ்கூல் லீவ்தான், அதுக்குள்ள ஏன் லீவ போடணும்” என்றாள் வசுந்த்ரா.

நாட்டுகோழி குழம்பு, ஆட்டுக்கறி குழம்பு, வறுவல், கெண்டை மீன் வறுவல், குழம்பு, வெள்ளரிப்பச்சடி, அப்பளம், பாயசம், வடை என்று அத்தனை செய்திருந்தார் சசிகலா.

“எதுக்கு அண்ணி இவ்வளவு? தனியா கஷ்டப்பட்டு செய்யணுமா? நான் முன்னாடியே வரேன்னாலும் கேட்கல” என்று வசுந்த்ரா வருந்த,

“உனக்கு செய்றதுல என்ன கஷ்டம் வசு. உங்கண்ணன் இத்தன வருஷமும் உனக்கு ஒரு சீர் செய்ய முடியாம எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் தெரியுமா? பேசவும் வீம்பு. உனக்கு விருந்து வச்சிட்டு உன்னையே வேலை வாங்குவேனா என்ன? அப்படியொன்னும் தனியா கஷ்டப்படல, உனக்கு விருந்தன்னதும் அப்பாவும் புள்ளையும் லீவ் போட்டாங்க. வெங்காயம், பூண்டு உரிச்சு அரிஞ்சு எல்லா வேலையும் அவங்கதான் செஞ்சாங்க. நான் எல்லாம் தாளிச்சுக் கொட்டுறதுதான்” என்றார் சசிகலா.

அவர்கள் வீட்டில் சமையலறை பொதுவானது, பேதமில்லாதது. அதனால் வசுந்த்ராவும் புன்னகைக்க, உணவு முடிந்ததும் தொலைக்காட்சி முன் பாஸ்கரனும் சித்ரஞ்சனும் உட்கார்ந்திருந்தனர்.

“சாரி அத்தான்” என்று சித்ரஞ்சன் மீண்டும் ஆரம்பிக்க,

“இந்த சாரியை, உன் காரணத்தை நீ முன்னாடியே சொல்லியிருந்தா யாருக்கும் இவ்வளவு கஷ்டமிருந்திருக்காது ரஞ்சன்” என்றார் பாஸ்கர் அழுத்தமாக.

சித்ரஞ்சன் முகம் வாடி வருத்தம் காட்டியது. இத்தனை வருடமும் வசுந்த்ரா என்னோடு இருந்தால் போதுமென்ற சுய நலம். பாஸ்கரனுக்கே சித்ரஞ்சனின் வருத்தம் பார்த்து விருந்துக்கு வந்தவனை பேசக்கூடாது என்று முடிவு செய்தவர்,

“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போகுது ரஞ்சன்?” என்று விசாரிக்க,

அதற்குப் பதில் சொன்ன சித்ரஞ்சன், “அத்தான்! அப்பா சக்தி சரோ கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார். நீங்க வந்து பேசினா ஒத்துப்பாங்க. சரோ நல்லப்பொண்ணு யோசிச்சு சொல்லுங்க” என்றதும்,

“அப்பா கிட்ட பேசணும் ரஞ்சன். அவர் சம்மதம் சொல்லிட்டா நாங்களும் வந்து பேசுறோம்” என்றார் பாஸ்கரன்.

ஆனால் லட்சுமணனிடம் வீம்பு கொண்டு சக்தியும் மீண்டும் கேட்கவில்லை. சசிகலா கேட்டபோது,

“உங்க இஷ்டம்” என்றாரே தவிர அவரின் விருப்பம் சொல்லவில்லை.

விருந்து முடிந்து மாலை தேநீர் முடியவும் சித்ரஞ்சனும் வசுந்த்ராவும் வீட்டுக்கு வந்தனர். சித்ரஞ்சனுக்கு அவசர வேலை வர அணிந்திருந்த சட்டையைக் கழட்டிவிட்டு காக்கி உடை மாற்ற போனான்.

இளஊதா நிற சாப்ட் சில்க் புடவை அணிந்திருந்தாள் வசுந்த்ரா. கணவன் காக்கி சட்டையைக் கையில் எடுக்கும் முன், அவன் பின்னே போனவள் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

சித்ரஞ்சனுக்கு ஒரு நொடி மூச்சுத்திணறி சீரானது.

“வசு” என்றிட வசுந்த்ரா பேசவில்லை. இறுக்கியணைத்தவள் முதுகில் முகம் புதைத்து அமைதியாக அந்த நொடிகளை அனுபவித்து நின்றாள்.

“என்னடி?” என்றபடி சித்ரஞ்சனும் மெல்ல திரும்பி மனைவியை அணைத்துக்கொண்டான். அவளின் ஸ்பரிசமும் மூச்சுக்காற்றும் அவனை தீண்ட விரும்பி நின்றான்.

“அப்பா என்கிட்ட பழைய மாதிரி பேசினார். அண்ணாவும் இப்போ நல்லா பேசினான். இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்ற வசுந்த்ராவின் குரல் நெகிழ்ச்சியாக ஒலித்தது.

சித்ரஞ்சனுக்கும் மனைவியின் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது. அவளின் சந்தோஷத்தருணத்தைக் கூட என்னிடம் பகிர்கிறாள் என்ற ஒரு திருப்தி.

ஒத்திசைவாக வாழ்ந்தாலும் சித்ரஞ்சன் மனம் அவன் கட்டாயத் திருமணத்தால் சில நேரம் மனைவிக்கு என் மீது என்னளவு காதல் இல்லையோ என்று ஏங்கும், அதற்கு ஏற்றார்போல் வசுந்த்ராவும் பேசிவிடுவாள். பிரியமிருந்தாலும் வார்த்தையால் அவள் பெரிதாகக் காட்டியதில்லை. இவனுக்குப் புரியாதா என்ற கோபம் அவளுக்கு.

சில நேரம் அருகே இருந்தும் தூரமாய் ஒரு உணர்வு தோன்றும். இப்போதெல்லாம் அப்படியில்லை. முன்பை விட ஒரு நெருக்கம், ஒரு ஆசுவாசம், பரவசமின்றி பக்குவமாக ஒரு பிரியத்தின் பரிமாற்றம் இருவருக்குள்ளும். உண்மை மறைத்த குற்றவுணர்ச்சியின் கனமும் உண்மை சொன்னபின் மறைந்திருக்க, வசுந்த்ராவோடு எந்த மனக்கசப்புமில்லாத நாட்கள் அவனுக்கு.

இதில் இன்று மனைவியாக வந்தணைக்க, அவள் சூடியிருந்த நித்தியமல்லியின் வாசனை கிறங்கடித்தது. ஒற்றை விரலால் பூவினை தள்ளிவிட்டவன் வசுந்த்ராவின் நெற்றியில் முத்தமிட, வசுந்த்ராவின் விழிகள் விரிந்து கனிந்து மூடின.

“டியுட்டிக்கு டைமாச்சு கிளம்பவா?” என்று இறுக்கமான அணைப்போடு சித்ரஞ்சன் கேட்க, அவன் பேச்சும் செயலும் எதிரெதிராய் இருக்க வசுந்த்ரா பார்வையில் கிண்டல்.

“மாமனார் வீட்டுக்கு விருந்துக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கோம். அப்போ இன்னிக்கு ராத்திரி”

“ராத்திரிக்கு என்ன?”

வசுந்த்ரா மெல்ல கேட்க,

“முத ராத்திரி… ச்ச அது நமக்கு ரொம்ப மோசம்…” என்றிட

“ஓஹ் உங்களுக்கு முத ராத்திரி கேட்குதா ரஞ்சன்? என்று கேட்ட வசுந்த்ரா,

“பக்த்க்கு எக்ஸாம் நடக்குது, நமக்கு விடிய விடிய சிவராத்திரிதான். அவன் டவுட் எல்லாம் க்ளீயர் ஆனதான் தூங்குவானே” என்று சிரித்தாள்.

“எக்ஸாமா? அப்போ நான் ஆபிஸ்லயே இருந்துப்பேன். அவன் கேட்கிற டவுட்ஸ் எல்லாம் சொல்லி எனக்கு முடியாதும்மா. அவனுக்கு லீவ் வரட்டும் உங்க வீட்டுக்கு அனுப்பிட்டு உன்னை கவனிச்சுக்கிறேன்.” என்ற சித்ரஞ்சன் காக்கி உடைக்கு மாறியவன் வசுந்த்ராவை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

“நீ எனக்கு வெறும் காதலி, மனைவி மட்டும் இல்ல வசு.. நீதான் எனக்கு எல்லாமே. என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டு அழகான வாழ்க்கைக் கொடுத்ததுக்குத் தேங்க்ஸ்” என்றான் உணர்வுபூர்வமாக.

வசுந்த்ரா காதலில் கணவனையும் நிறைத்து அவளும் நிறைந்து நின்றாள்.

***********

அன்று சக்திக்கு விடுமுறை மதிய உணவு முடிந்து உண்டு உறங்கியவன், மாலை நேரம் அவன் வீட்டுக்கும் சரோஜினி வீட்டுக்கும் நடுவே இருக்கும் காம்பவுண்ட் சுவரில் ஏறி, சரோஜினி வீட்டுப்பக்கம் கால் போட்டு உட்கார்ந்தான்.

சரோஜினி அவித்த வேர்க்கடலையை மென்றபடி வாசலில் உட்கார்ந்திருக்க,

“சரோஓஓஓ” என்று அழைப்பில் அவள் மெல்ல நிமிர்ந்து பார்க்க, சக்தி இவர்கள் பக்கம் காம்பவுண்டில் உட்கார்ந்து கண்சிமிட்டினான்.

“ஹேய் சக்தி என்ன பண்ற?” என்றபடி சரோஜினி வேகமாக அவன் பக்கம் போக, சரோஜினி நெருங்கிவரவும்,

“அட கல்லயா” என்றபடி அவள் வைத்திருந்த தட்டிலிருந்து வேர்க்கடலையை எடுத்து கூட்டினை உடைத்து வாயில் போட்டான்.

“வீட்ல எல்லாரும் இருக்காங்க. கொஞ்சம் அமைதியா இரேன் சக்தி, எங்கப்பா பார்த்தா திட்டுவார்” சரோஜினி நகரப்போக அவள் கையைப் பிடித்தவன்,

“சும்மா நில்லு சரோ. உன் கூட பேசி ரொம்ப நாளாச்சு. போன்லயும் பேச மாட்டேங்கிற” என்று குறைப்பட்டான்.

“சக்தி! இப்போதான் எங்க தாத்தா ஓகே சொல்லியிருக்கார், இப்படி நின்னு பேசிட்டு இருக்கறது பார்த்தா கோவப்படுவார்” என்று சரோஜினி வீட்டிலிருந்து யாராவது வருகிறார்களா என்று பார்க்க,

“நம்ம விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சாச்சு, நீயேன் பயப்படுற. அப்படியென்ன கல்யாணத்துக்கு அவசரம்? இவங்க என்னைக்கு வேணுமோ முடிவெடுக்கட்டும் நம்ம அதுவரைக்கும் ஜாலியா லவ் பண்ணிப்போம்” என்று கண்ணடிக்க, சரோஜினிக்கு சக்தியின் பாவனையில் குளிராய் ஒரு வெட்கம் உள்ளே.

“சரோஜினி!” என்ற வாஞ்சிநாதனின் அதட்டலில் இருவரும் திண்ணைப்பக்கம் பார்க்க, வாஞ்சிநாதன் வாசலில் கோபமாக நின்றார். சக்தி இவர் வீட்டுப்பக்கம் கால் போட்டு ஜம்மென்று உட்கார்ந்தபடி கடலை சாப்பிட, பக்கத்தில் பேசிக்கொண்டிருந்த மகளைப் பார்த்துக் கோபம்.

“ஹாய் மாமா!” என்று அவரை அழைக்க,

“சரோ உள்ள போ” என்று மகளிடம் சொன்னார்.

“ஏன் மாமா நான் சும்மாதானே பேசிட்டு இருக்கேன். அதெல்லாம் சரோ வரமாட்டா..” என்று அவரிடம் பேசும்போதே சித்ரா வெளியே வந்து இவன் பேச்சில் திகைக்க,

“அத்த! இவ வெறும் கல்லரசி மட்டும் கொடுத்துட்டு வெல்லம் கொடுக்கல, கொஞ்சம் வெல்லம் எடுத்தாங்களே. அந்தியில சாப்பிட்டா செரிக்காது” என்றான்.

“வேணும்னே பண்றான்” என்று வாஞ்சிநாதன் வீட்டுக்குள் சென்று வசுந்த்ராவை அழைத்தார்.

“உன் அண்ணன் மகன் எப்படி உட்கார்ந்திருக்கான் பாரும்மா, போறவங்க வரவங்க என்ன நினைப்பாங்க?” என்று கேட்க, வசுந்த்ரா வெளியே வந்தாள். சசிகலாவும் மகனை காணாமல் வெளியே வந்து,

“டேய் ஒழுங்கா இறங்குடா” என்று கத்த,

“நான் சும்மா உட்கார்ந்திருக்கேன், அதுக்கேன்மா கத்துற?” என்று அம்மாவை முறைத்தான் சக்தி.

“சக்தி! பொழுதுபோகாம வம்பிழுத்துட்டு இருக்கியாடா?” வசுந்த்ராவும் திட்ட,

“நான் எங்க வீட்டு காம்ப்வுண்ட் சுவர்ல உட்கார்ந்திருக்கேன். உனக்கு என்னத்த பிரச்சனை?” என்றான்.

“கால் இந்த பக்கம் வருது”

“பார்டர் பிரச்சனை பண்ணாத அத்த. இது உன் வீடும்தானே? உன் வீட்டுக்கு வரதுக்கு அண்ணன் மகனுக்கு உரிமையில்லையா?”

வசுந்த்ரா என்ன சொல்வது என்று திகைத்துப் பார்த்தவள்,

“டேய் இன்ஸ்பெக்டர்தானே நீ? சின்னக்குழந்தையாட்டம் அடம் பிடிக்காம இறங்கி வீட்டுள்ளாற போடா.” என்ற அத்தையின் பேச்சையெல்லாம் காதில் வாங்கவில்லை அவன்.

“அப்பா எங்க அண்ணி?” என்று வசுந்த்ரா கேட்க,

“அவர் பேட்டைக்குப் போயிருக்கார் வசு” என்றார் சசிகலா.

“இவன் நம்ம சொன்னா கேட்க மாட்டான். வேணும்னு செய்றான் அப்பா வந்தா தானா இறங்கிடுவான், நீங்க கத்தி டென்ஷன் ஆகாம உள்ள போங்கண்ணி” வசுந்த்ரா அண்ணன் மகனை முறைத்தபடி உள்ளே போனவள்,

“சரோ நீ உள்ள வரியா? இல்லையா?” என்று அவளை கேட்க,

“வரேன் சித்தி” என்று சரோஜினி உடனே சொல்ல சக்திவேல் முறைத்தான்.

“டூ மினிட்ஸ் வரேன்” என்று சித்தியிடம் சொன்னவள்,

“ஏன் சக்தி இப்படி பண்ற?” என்றாள் ஆயாசமாக.

“பின்ன என்னடி? எல்லாரும் என்னை வெறுப்பேத்துறாங்க. எனக்கு செய்யத் தெரியாதா?” என்றதும் அவன் கையில் இருந்த தட்டை பிடுங்கியவள்,

“அப்போ வெறுப்பேத்த இப்படி செய்றியா?” என்றாள் கோபமாக.

“ஹேய் சரோ! நான் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தேன், நீ வரவும் பேசினேன். இவங்களா டென்ஷனானா நான் என்னடி செய்றது? எப்படியும் நம்ம கட்டிக்கப்போறவங்கதானே? இவங்க கண் முன்னாடிதானே பேசுறோம்?” என்று வீராப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தவன் லட்சுமணனின் வண்டி சத்தம் கேட்கவும் அவன் வீட்டுக் கேட்டைப் பார்க்க, இந்த பக்கம் திலகரும் பேத்தி சக்தியிடம் பேசிக்கொண்டு நிற்பதைப் பார்த்தவர் முறைத்தபடி சுதந்திர விலாசத்துக்குள் நுழைந்தார்.

இரு தாத்தாவும் பேரப்பிள்ளைகளை முறைத்தபடி செல்ல,

“உண்மையில டென்ஷன் ஆகிட்டாங்களோ?” என்று சக்தி கேட்க,

“இவ்வளவு நேரம் எங்க எல்லார்கிட்டயும் பேசின இல்ல, போய் உன் தாத்தா கிட்ட பேசு” என்ற சரோஜினியும் தாத்தா போகவும் பின்னாடியே வீட்டுக்குள் நுழைந்தாள்.

‘சுதந்திரமா லவ் பண்ற பொண்ணு கிட்ட பேசினது குத்தம்மா?’ என்று சத்தமாகக் கேட்டான் சக்தி. அது இருவீட்டினருக்கும் நன்றாகக் கேட்டது.

✅ End of Episode 23
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 5 days ago

Very nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top