மாலை மதுரவீரன் கோவில் லைட் செட் போட்டு அலங்கார விளக்குகள் மின்னின, ஒலிப்பெருக்கிகளில் இளவட்டங்கள் பாடல்களை ஒலிக்கவிட, அந்த பகுதியெல்லாம் மனிதர் கூட்டம். சக்தி உற்சாகமாக தயாரானான், என்னதான் காவல்துறைப்பணியில் இருந்தாலும், சராசரி இளைஞனாக இந்த கொண்டாட்டங்களை எல்லாம் ரசிப்பான். அவன் வேலை செய்யும் ஊரில் மட்டுமே அவன் காவல்துறை வேலையை செய்வான், மற்றபடி ஊரில் அந்த அதிகாரம், பந்தா எதையும் காட்டாதவன்.
சக்திவேலையும் சரோஜினியையும் ஒன்றாய்ப் பார்த்துவிட்டு வாஞ்சிநாதன் மகளைக் கத்திய அன்று சரோ சக்திக்குப் போன் செய்ய, அது சண்டையில் முடிந்தது.
“எதாவது முக்கியமான விஷயமா டி?” என்று சக்தி கேட்க,
“ஆமா, இன்னிக்கு நீ பகத்’கூட பேசினதை அப்பா பார்த்துட்டார்” என்று சரோஜினி பரபரப்பாக சொல்ல,
“ச்ச, அதுக்கென்னடி?” என்றான் எரிச்சலாக.
“அதுக்கென்னவா? நானும் இருந்தேன்ல, ஏன் உன்னோட பேச விட்டேன்னு ஒரே திட்டு எனக்கு” என்று சரோஜினி வருத்தமாக சொல்ல,
“இது ஒரு விஷயம்னு சொல்ல கூப்பிட்டியா? மனுஷன் டென்ஷன் புரியாம, பொறுப்பா நடந்துக்க சரோ” என்று போனை வைத்துவிட்டான். அவனுக்கு அது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எப்போதும் அண்ணனையும் தம்பியையும் தாங்கும் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு, காதல் கொடுக்கிற கவனிப்பு தேவையானதாக இருந்தது.
அப்பா அப்படி திட்டியிருக்க, சக்தியிடம் பேசினால் மனத்துக்கு ஆறுதலாக இருக்கும் என்று அவள் நினைத்திருக்க, இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு அவரின் வேலை டென்ஷன். அதை அப்படியே சரோஜினியிடம் காட்டியிருக்க, கிடாவெட்டில் அவளோடு சமாதானமாக வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருந்தான்.
வந்ததும் காவல்காரன் கண்ணில் காதலி விழுந்துவிட, கண்களவுதான்!
அவன் வானில் காதல் நிலவுதான்!!
அவன் நிலா ஊதா நிற சில்க் காட்டன் புடவையில் உலா போக, சக்திக்குள் இருக்கும் வாலிபனை, காதலனை தட்டியெழுப்பியிருந்தாள். லத்தியோடு சுற்றுபவனுக்குள் இருக்கும் ரசனைகள் வெளிவர, ராஜதுரை பக்கம் உட்கார்ந்துகொண்டு,
“அண்ணே அந்த பாட்டை போடு, இந்த பாட்டை போடு” என்று இஷ்டத்துக்கு விளையாடி, சரோஜினியின் முக பாவனைகளை ரசித்துக்கொண்டிருந்தான். உறவினான அரிச்சந்திரன் வரவும் வழக்கு விஷயமாகப் பேசியவன் பின் விருந்து பரிமாற உதவிக்குப் போக, சித்ரஞ்சனை எதிர்ப்பார்க்கவில்லை. கூடவே அருகிலிருந்தவர்கள் கிண்டல் வேறு சக்தியைக் கோபப்படுத்தியது. சித்ரஞ்சனை மரியாதையாகக் கவனித்தான் ராஜதுரை.
“தாரா எப்படியிருக்கா மாப்பிள்ளை? பெரியப்பா எப்படியிருக்கார்” என்று ராஜதுரையின் மனைவி, மனைவியின் தாத்தா என்று சித்ரஞ்சன் விசாரித்தான்.
ராஜதுரையும், “எல்லாரும் நல்லாயிருக்கோம் மாமா” என்றவன் அடுத்த பக்கம் போய்விட்டான். பந்தியில் எல்லாரையும் கவனித்தவன் ஓரமாக நின்றிருந்த சக்தியிடம் வந்தான்.
“ஏன்டா மாமன் மச்சான்’னா கிண்டல் பண்ணுவாங்கதானே, சின்ன புள்ளையாட்டம் இப்படி வந்து நிக்கிற” என்று தம்பியின் தோளில் கைப்போட்டு துரை கேட்க,
“அண்ணே! மைதிலி வச்சு இப்படி பேசினா உனக்குக் கோவம் வராதா? அவளாச்சும் பரவாயில்ல லேட்டஸ்ட் டிக்கெட், அத்த அந்தாளை கட்டிட்டு போய் பதினைஞ்சு வருஷமாச்சு இன்னும் என்னமோ புதுசா பேசுற மாதிரி எல்லாரும் வேணும்னே கிண்டலா நாலு கேள்வி கேட்கிறாங்க, அந்த சிடுமூஞ்சி சித்ரஞ்சனும் வேணுமான்னு கேட்டா வேணும்னு சொல்லாம அப்படியே பார்க்கிறார். எப்படித்தான் அந்தாளை நம்பி எங்கத்த போச்சோ” என்றான் சக்தி கோபம் குறையாது.
“விடுடா, இப்போ பேசி என்னாவாகப்போகுது? எத்தன வருஷம் ஆகியிருந்தாலும் இவனுங்களுக்கு நம்மை பார்க்கிறப்ப இப்படி பேசினா ஒரு குளுகுளுப்பு. விட்டுத்தள்ளுடா”
“நீ வா, வந்து உன் ஆளுக்குப் பாட்டு போடு” என்று ராஜதுரை அவனை சமாதானம் செய்தவன்,
“டேய் அண்ணன்கிட்ட சொல்லமாட்டியா? யார்டா அந்த புள்ள?” என்று ராஜதுரை ஆர்வமாகக் கேட்க
“ம்ம், சரோஜினிதான்” என்றான்.
“என்ன எந்த சரோஜினி?”
“கொல்லக்காட்டுல கீழத்தெருவுல இருக்காளே திலகர் பேத்தி அந்த சரோஜினி” என்று சக்தி அழுத்தி சொல்ல, ராஜதுரை அதிர்ச்சியில் விழித்தான்.
“டேய் விளையாடாத! அந்த பிள்ளைக்கும் உங்கூட்டுக்கும் ஆகாதேடா”
“அப்போ நீயும் தாரகை அத்தாச்சியும் மட்டும் எப்படியிருந்தீங்களாம்?”
“சக்தி! விளையாடாம உண்மையைப் பேசுடா? நிஜமா சரோஜினியைவா விரும்புற?”
“அண்ணே, ஒரு திருத்தம். அவளும் என்னை விரும்புறா”
“எப்படிடா?”
“தியேட்டர்ல கல் எறிஞ்ச உன்னை எப்படி தாரகை அத்தாச்சி கட்டிகிடுச்சு? அப்படித்தான்” என்று சிரிப்பை அடக்கி சக்தி சொல்ல, ராஜதுரைக்கு ஒன்றுமே புரியவில்லை. இவன் விளையாடுகிறானோ என்று பார்க்க, சக்தி அப்படி விளையாட்டாக ஒரு பெண்ணை பற்றி சொல்லமாட்டான் என்றும் தோன்றியது.
“டேய் துரை! அங்க என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு, இங்க பந்தியைப் பாருங்கடா” என்று துரையின் சித்தப்பா குரல் கொடுக்க, துரை தம்பியை யோசனையாகப் பார்த்தபடி பந்தி வேலையைக் கவனித்தான்.
அன்று கிடாவெட்டு மகிழ்வானதாக முடிய, அடுத்த நாள் எப்படியாவது மனைவிக்காக மாமனாரிடம் பேசிவிட வேண்டும் என்று சித்ரஞ்சன் நினைத்திருந்தான்.
காலையில் பரபரப்பாக எழுந்தவனுக்குத் தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் ஒரு சின்ன வேலை. அதனை முடித்து ஊருக்குப் போனதும் பேசிவிட்டு அன்றிரவே அவர்கள் சென்னை செல்லவேண்டும். சித்ரஞ்சன் வந்த வேலையை முடித்து ஒரு உணவகத்தில் டீ குடிக்கலாம் என்று நுழைந்தான்.
நுழைந்தவன் பார்வை அங்கே பார்த்த காட்சியில் அப்படியே ஸ்தம்பித்தது.
“சரோஜினி!!!” என்று அவனையும் மீறி சத்தம் வர,
“சக்தி, சித்தப்பா” என்ற சரோ இருக்கையிலிருந்து எழுந்துகொள்ள, சக்திவேல் அலட்டிக்கொள்ளவில்லை.
“உங்க சித்தப்பாவுக்கு என்ன?” என்றவனும் சித்ரஞ்சனை பார்த்துவிட்டான். என்றாவது தெரியாத்தானே போகிறது என்ற இயல்பான எண்ணவோட்டத்தில் சக்தி இருக்க, சரோவோ பதறினாள்.
“உட்காரு சரோ” என்று அவள் கையைப் பற்றி இழுத்து இருக்கையில் உட்கார வைத்தான் சக்தி.
“சரோ! என்ன இதெல்லாம்? நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சா என்னவாகும்?” என்று சித்ரஞ்சன் பதறிப்போய் கேட்டான். ஏற்கெனவே அவன் காதலால் குடும்பங்கள் பிரிந்திருக்க, மீண்டுமா என்று பயந்தான். எப்படியாவது மனைவியை அவள் வீட்டோடு இணைக்க வேண்டும் என்று நினைக்க, இவர்கள் செயலில் அவனுக்கு ஜென்மத்திற்கும் மாமியார் வீடு இல்லாமல் போய்விடும் போல என்று கோபம் கொண்டான்.
“உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என்னவாகும்? நீங்கதான் சொல்லணும்” என்று சித்ரஞ்சனிடம் சக்தி சொல்ல,
“சக்தி, எந்த மோட்டீவ்ல நீ இதெல்லாம் பண்ற?” என்று சித்ரஞ்சன் சித்தப்பனாக, காவல்துறை அதிகாரியாக பதறினான். தன் செயலுக்குப் பழிவாங்க இதெல்லாம் செய்கிறானோ என்று பயம். அவனுக்குத்தான் லாலாவின் நட்பு, சரோவின் காதலும் தெரியாதே.
“சித்தப்பா ப்ளீஸ், சக்தி மேல தப்பில்லை. நாந்தான் சக்திகிட்ட ப்ரோபோஸ் பண்ணினேன், இவர் ரொம்ப நல்ல டைப் சித்தப்பா. நானே உங்ககிட்ட இன்னிக்கு சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன், நீங்கதான் சித்தப்பா எப்படியாச்சும் தாத்தாகிட்ட பேசி” என்று சரோஜினி சொல்லும்போதே,
“அப்படியே பேசி கிழிச்சிடுவார்” என்ற சக்திவேலை சித்ரஞ்சன் முறைத்தான்.
“என்ன முறைக்கிறீங்க மாமா? நான் ஒன்னும் இவளை இழுத்துட்டு எல்லாம் ஓடமாட்டேன், உங்கப்பா கிட்ட வந்து முறையா பொண்ணு கேட்பேன். எனக்கு அந்த தைரியம் இருக்கு. மாம்ஸ் நான் வேற ஒரு சின்ன சின்சியர் இன்ஸ்பெக்டர், கடமைக்கு நடுவுல காதலிக்க நேரமில்லை, கிடைச்ச நேரத்தில் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம கிளம்புறீங்களா?” என்றான் சக்தி. சித்ரஞ்சனின் கடுகடு முகம் பார்த்து இவனுக்குக் குளுகுளுவென்றிருந்தது.
“சக்தி” என்று சரோஜினி அவன் கையைப் பிடித்து அழுத்த,
“ஹேய்! என்னடி தப்பா சொல்லிட்டேன்? அவரும் லவ் பேர்ட்தானே, புரிஞ்சிப்பார்.” என்றபடி உட்கார்ந்துவிட, சித்ரஞ்சன் டீ குடிக்காமல் அப்படியே வெளியே போய்விட்டான். சக்திக்கு திலகர் வீட்டில் யார் மீதும் பெரிய பகை கிடையாது, லாலா அவனின் உயிர் நண்பன், சரோஜினி இன்னுயிர் காதலி!
ஆனால் சித்ரஞ்சன் மீது மட்டும் நிறைய கோபம், வன்மம் உண்டு. காதலிப்பதை தவறென்று சொல்லமாட்டான், ஒருமுறையாவது முறையாக காதலிப்பதை ஏன் தங்கள் வீட்டில் சொல்லவில்லை? சொல்லி தாத்தா எதிர்த்து அதனால் திருமணம் செய்திருந்தால் கூட பரவாயில்லை. எல்லாம் அத்தையை சொல்ல வேண்டும் என்று மனத்தில் குமைந்தவனுக்கு, அத்தை மீது தவறில்லை என்று தெரிந்தால்???
“ச்ச, இந்த கடையில டீ, வடையெல்லாம் நல்லாயிருக்கும். உங்க சித்தப்பா மிஸ் பண்ணிட்டார்டி. போகும்போது பார்சல் கட்டிட்டுப்போ” என்று சக்தி தீவிரமான குரலில் சொல்ல,
“சக்தி!! நானே சித்தப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சுன்னு பயத்தில இருக்கேன், உனக்கு நக்கலா?” என்று அவனை திட்ட, சக்தியோ சிரிப்போடு சரோஜினியைப் பார்த்தான்.
சித்ரஞ்சனை பொருட்டாக நினைக்காதவனால் அவனை எளிதாக சமாளிக்க முடிந்தது, ஆனால் சக்தியால் இதே மன நிலையோடு லாலாவை எதிர்க்கொள்ள முடியவில்லை.
Very nice.