Episode 11
அடுத்த நாள் விடியல் ராமிற்கு மிகவும் அழகாய் விடிந்தது. அவன் கண்விழித்ததே அவன் காதல் மனைவியின் முகத்தில்தானே? சாதனாவுடன் ஒன்றாய் வாழ்ந்தபோதும், அவன் கண்விழிக்கும்போது சாதனாவின் முகம் பார்க்கையில் மனத்தில் ஒரு புத்துணர்வு தோன்றும்.
உறங்கி விழிக்கையில் விழிப்பாய், துணையாய் உன்னருகே நான் இருக்கிறேன் என்பது போல் இருக்கும் அவனுக்கு.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது அப்படி ஒரு நாள். அதுவும் இத்தனை வருட பாரமெல்லாம் இறக்கி வைத்த, உள்ளமது தெள்ளமுதாய் தெளிந்து இருக்க, முழுமையாக அவளிடம் அவனைப் பற்றி சொல்லியபின் அகத்தில் ஒரு அளப்பரிய ஆசுவாசம்!
ராம் பார்வையால் மனைவியின் ரம்மியத்தை ரசித்திருக்க, அவள் விழித்தாள்.
பரசுராமைப் பார்த்தவள் சோர்வாக அவனருகே நெருங்கி அவனை அணைத்து மீண்டும் கண்மூடினாள்.
“என்ன டயர்டா இருக்கா?”
“தூக்கமா வருது” என்று தூக்கக் கலக்கத்தில் பேசினாள் சாதனா.
“இன்னும் மூணு நாள்ல நம்ம சென்னை போகணும் சது, இப்போ எழுந்தா கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்” ராம் அழைக்க
“நீங்க ப்ரஸ்ட் ரெடியாகுங்க, நான் அரை மணி நேரம் தூங்குறேன்” என்று சாதனா சொல்லிவிட, ராம் குளித்துத் தயாராகி சாதனாவை எழுப்பினான்.
ப்ளாக் காங்க்ரா டீ மணக்க, அந்த வாசத்தில் சாதனா எழுந்து உட்கார்ந்தாள். முகம் கழுவி பல் துலக்கி வந்து கணவனைப் பார்த்த சாதனாவிற்கு சிரிப்பு வந்தது.
“என்ன சது சிரிக்கிற?”
“என்ன டிரஸ் இது?” விரல் நீட்டி அவன் சட்டையைப் பார்த்தாள்.
மனைவியைப் புரியாது பார்த்தவன் “இதுக்கு என்ன? நீட்டா இருக்குதானே?” என்று கேட்க
“இருக்கு இருக்கு! ஆனா இதை ஏன் இன்னிக்குப் போட்டிருக்கீங்க?” என்று மீண்டும் சிரித்தாள்.
“ராம், ராம்!” என்று காதலாய் கணவனை அழைத்து
“நீங்க ஒன்னும் கம்பெனி மீட்டீங் போல, ஹைக் போக போறோம்” என்று சாதனா சொல்ல, கண்களை சுருக்கி மனைவியைப் பார்த்த ராம்
“சுத்திப் பார்க்கத்தானே என்ன போட்டா என்ன சது? போட்டோவுக்கெல்லாம் நல்லா இருக்குமே” என்றதும் ராமை இழுத்து அணைத்த சாதனா அவன் இடையில் கைப்போட்டு முகம் தூக்கி அவன் முகம் பார்த்தாள்.
“மை லவ்லி ஹஸ்பண்ட்! நம்ம ஹைக் பண்ணலாம்னு நினைக்கிறேன் இன்னிக்கு. நம்ம ஒன்னும் சும்மா சுத்திப்பார்க்க வரல. கசோல் ரொம்ப அழகு, ஹைக் பண்ணினா நிறையா பார்க்கலாம். சோ ஒரு டீஷர்ட், ட்ராக், ஷூ போடுங்க. அதான் ஈசி இல்லைன்னா நடக்கக் கூட முடியாது”
“ஹே, எனக்கு money hike தான் தெரியும். mountain hikes லாம் பண்ணதில்ல” ராம் மறுத்தான்.
“எனக்காக வாங்க ராம், யூ வில் எஞ்சாய்!” என்று சொல்லி அவனை உடை மாற்ற வைத்த சாதனா டீயைப் பருகினாள். சாதனா ஒரு க்ராப் டாப், லெக்கீங் அணிய ராம் அவளை முறைத்தான்.
“என்னை வெறுப்பேத்த தானே இதை போடுற நீ?” என்று கடுப்பாக கேட்க சாதனா சிரித்தாள்.
“இதான் ஈசியா இருக்கும் ராம், மைசூர் சில்க் கட்டிட்டா மலையேற முடியும்?” என்று அவனிடம் கேட்க
“அதெல்லாம் கிடையாது, நீ என்னை பொசசிவ் என்ன வேணுமோ சொல்லிக்கோ. ப்ளீஸ் எனக்காக வேற டிரஸ் போடு சது. கொஞ்சம் பெரிய டீஷர்ட் போடேன், நீ சொன்னதும் நான் மாத்தினேன்ல” என்றான் ராம்.
“ஊர்ல நான் ஃபார்மலா தானே டிரஸ் பண்றேன். அங்க நான் நினைச்சா கூட அப்படி பண்ண முடியாது. இதெல்லாம் நான் காலேஜ் டேய்ஸ்ல போட்டது, ஹைக்கிங்கு சுடியெல்லாம் செட் ஆகாது” என்று சாதனா விளக்கினாள்.
சாதனா விளக்கம் சொல்ல, ராமிற்கு அவன் செய்வது அதிகம் என்று தோன்றியது. சாதனா இப்படி அவளை விளக்குவது அவள் குற்றம் செய்தது போல் காட்ட,
“க்யூட்டா இருக்க சது, கூடவே ஹாட்டா அதான்” என்று ராம் குறும்பாகக் கண்ணடித்தவன்
“என்ன ஹிந்திக்காரனெல்லாம் உன்னை சைட் அடிப்பான், அதான் கடுப்பா இருக்கும்”
“அப்போ தமிழ்க்காரன் சைட் அடிச்ச ஓகேவா?” என்று கேட்க ராம் முறைத்தான்.
“இங்க என்னை விட எல்லோரும் சூப்பரா இருப்பாங்க, உங்களுக்கு நாந்தான் சூப்பர் ஃபிகரா தெரியறேன் போல. இன்னிக்கு ஹைக்’ல பாருங்க எல்லோரும் எப்படி ஃபிட் அண்ட் அழகா இருக்காங்கனு.”
“சரி சரி, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதையே போட்டுக்கோ சது” என்று ராம் ஒத்துக்கொண்டான்.
“அப்படியா? அப்புறம் அங்க வந்து ஷால் போடு சொல்லக்கூடாது! இடுப்பைப் பிடிக்கக் கூடாது” என்று சாதனா கண்டிஷன் போட
“ஆப்ஷன் ஒன்னு ஒகே, இரண்டெல்லாம் முடியாது. நம்ம ஹனிமூன் ட்ரிப் இது” ராம் ஆர்வமாக சொன்னதும் சாதனா
“உங்க டிரஸ் பார்த்தே தெரிஞ்சது ஹனிமூன் டிரிப்” என்று கிண்டலடித்தாள்.
“அதான் மாத்திட்டேன்ல” என்றதும் இருவரும் அந்த ரிசார்ட்டில் காலை உணவை முடித்து மலையேற்றம் சென்றனர்.
காலை நேர பரபரப்பு இன்னும் அந்த மலை ப்ரதேசத்தில் துவங்கவில்லை. பனி அடர்ந்த காற்று ஈரமாய் தேகம் தழுவிச் சென்றது. ராமும் சதுவும் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து நடந்தே சென்றனர்.
நடக்கும்போது சாதனாவின் கையைப் பிடித்தே நடந்தான் ராம். அவன் எப்போதும் சிரித்த முகம், இன்றும் இன்னும் கூடுதல் சிரிப்பு. அதுவும் அவன் புன்னகை இதழில் இட்டு நிரப்பியதாக மட்டுமில்லாது விழிகளில் விரவி ஜீவனுடன் இருந்தது.
வெகு தூரம் நடந்த பின், ஒரு காட்டுப்பாதை வர அதற்குள் ராம் களைத்துவிட்டான்.
“ஹேய் சது, என்ன இது? எவ்வளவு நேரம்?” என்று கேட்க,
“இன்னும் கொஞ்ச தூரம் போனாதானே நல்ல சைட் கிடைக்கும்” சாதனா நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சொன்னாள்.
ராம் அவன் கைக்குட்டை வைத்து அவள் நெற்றியைத் துடைத்தவன் “எனக்கு நீதான் பெஸ்ட் சைட்!” என்றான் காதலை கண்ணுக்குள் தேக்கி வைத்து.
“ப்பாஅ!!!!!!!!!!! ராம்! ஐ அம் ஆல்ரெடி இம்ப்ரெஸ்ட். இதெல்லாம் கல்யாணம் முன்னாடி ட்ரை பண்ணியிருக்கலாம். இப்ப தேவையே இல்லை” என்றதும்
“நான் நிஜத்தைத்தான் சொல்றேன், இம்ப்ரஸ் பண்ணனும்னு எல்லாம் சொல்லல” என்று பெருமூச்சுவிட்டவன் அங்கிருந்த சிறிய பாறையில் உட்கார்ந்தான்.
“இந்த இடமே அழகா இருக்கே சது, இன்னும் என்ன அழகா நீ பார்க்கனும்?” என்று சுற்றியிருந்த பச்சை நிறத்தில் நிறைந்த மரங்களைக் காட்டிக் கேட்டான் ராம்.
“வாங்க, நான் காட்டுறேன்” என்றவள் அவன் கையோடு கைகோர்த்தபடி ஒரு பாதையில் அழைத்துப்போனாள். நடக்க நடக்க, அதுவொரு காட்டுப்பாதை, எங்கோ ஒரு நதியின் சத்தம் கேட்டது.
“இங்க நான் முன்னாடி வந்திருக்கேன், சூப்பரா இருக்கும் ராம்” என்று அவனுடன் பேசியபடி ஒரு இடம் வந்தாள் சாதனா.
சுற்றிலும் மரங்கள் இருக்க, ஒரு பெரிய மரம் வேரோடு சரிந்து நதியின் மேல் பாலமாக இருந்தது. அருகே சின்ன சின்ன பாறைகள், கூழாங்கற்கள். மேகம் மலையைத் தொட்டுச் சென்றது. வியர்த்தாலும் காற்றில் ஈரம் இருந்தது.
சீக்கிரமே எழுந்து வந்ததால், நிறைய கூட்டமில்லை. அதையும் விட அந்த பகுதி தனித்திருந்தது. சாதனா மெல்ல அந்த மரத்தின் மீது ஏறப்போக, ராம் அவள் கையைப் பிடித்தான்.
“இங்க இருந்தே பார்க்கலாமே சது, ஏன் அது மேல ஏறுற, வழுக்கி விழுந்துட்டா கீழ பாரு, தண்ணீப்போகுது, பாறையா இருக்கு” என்று தண்ணீரில் மூழ்கியிருந்த பாறைகளைக் காட்டினான். அந்த தண்ணீர் அத்தனை பரிசுத்தமாய் இருந்தது.
“வாங்க ராம்!” என்று அவனை இழுத்ததில் சாதனாவின் கையை இறுகப்பற்றினான்.
“என்னை இளைக்க வைக்காம விடமாட்ட நீ?” என்று திட்டியவன் மனைவியின் கையைப் பிடித்து, அவளுடன் நடந்தான். புதிய அனுபவம் அந்த வேளையில், அழகிய காலையில்!
மேகங்கள் நெடிய மரங்களை உரசிச் செல்ல, சுற்றிலும் பசுமை!! கீழே நீர் வரத்து இருக்க, ஜில்லென்ற உணர்வு. நீர் சலசலவென ஓடும் இசை சத்தமான சங்கீதமாகக் கேட்டது.
“பார்த்தீங்களா தண்ணீ எப்படி க்ளீயரா இருக்குன்னு” என்று கீழே ஓடிய நீரை உற்சாகமாய் சுட்டிக்காட்டினாள். சாதனாவுடன் சரிந்தபடி அந்த மரத்தில் ஆன பாலத்தில் உட்கார்ந்தான் ராம்.
“மகாபலிபுரத்தில மலையேறினா டயர்ட் ஆகிடுவேன்னு கடல்ல காலை நனைச்சவன் நான், என்னை நீ இவ்வளவு தூரம் நடக்க விட்டு இந்த மலையேறி மரம் மேல உட்கார வைக்க என் எனர்ஜியெல்லாம் போச்சு” என்று சொல்லி மனைவியின் தோளில் சாய்ந்தான். இருவரின் கால்களும் காற்றோடு உரசி செல்லும் வகையில் உட்கார்ந்திருந்தனர்.
“ராம்? எப்படி நீங்க இவ்வளவு பாசிட்டிவ்வா இருக்கீங்க? உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா இவ்வளவு தெளிவா இருப்பாங்களா தெரியல எனக்கு” சாதனா மெல்ல கேட்க, ராம் அவள் தோளில் சாய்ந்தபடியே பேசினான்.
“ஃபேக் இட் டில் யூ மேக் இட்!(fake it till you make it) அப்படித்தான் சது நான், எனக்கு ரொம்ப மோசமா என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப் பாரேன், அம்மா மாதிரி அப்பாவும் என்னை ரோட்ல விட்டிருந்தா? இல்லை இந்தும்மா என்னை கொடுமை பண்ணியிருந்தா, அப்பாவோட நிராகரிப்பு எனக்கு வலினாலும், அவர் என்னைக் காயப்படுத்தல. என்னை நல்லா படிக்க வைச்சார், கேட்டதை வாங்கிக்கொடுத்தார். சொல்லப்போனா உண்மையில நான் நல்ல நிலையில்தான் இருந்தேன். எல்லாமே சூழ் நிலைனு அது மேல நான் பழியைப் போட விரும்பல, எல்லாமே மன நிலை! அதுதான் உண்மை!”
“நான் கவலைப்பட்டு உருப்படலனாலும் என்னைப் பத்தி நாலு நாள் பேசுவாங்க, இதே என் சோகத்தை எல்லார்கிட்டவும் சொன்னாலும் நாலு நாள் ஆறுதல்பட்டுப் போயிடுவாங்க. என்னைக்கும் என்னோட சோகமோ சந்தோஷமோ முழுசா நாந்தான் அனுபவிக்கணும். அழுது வடிஞ்சா மட்டும் என்னாகிடப்போகுது? அதெல்லாம் எனக்குள்ள இருக்கட்டும்னு விட்டுட்டேன்” என்ற ராமின் புரிதல் நிச்சயம் சாதனாவுக்கு வியப்புதான். இப்போது முப்பது வயதில் இது ஆச்சர்யமில்லை, ஆனால், அவனை பத்தொன்பது வயதிலிருந்து சாதனாவுக்குத் தெரியும். அப்போதே இவனுக்கு இத்தனை பக்குவம் இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யமானதாக இருந்தது.
“மாமா மேல உங்களுக்கு வருத்தமே இல்லையா? அவர்கிட்ட மனசு விட்டுப் பேசியிருக்கலாமே ராம்?” ஆதங்கமாகக் கேட்டாள் சாதனா.
“என்ன பேச முடியும் சது? எனக்கு முன்னாடி விட நம்ம கல்யாண அப்புறம் அவரை என்னால இன்னும் ஆழமா புரிஞ்சிக்க முடிஞ்சது. அவர் மேல அன்பு இருக்கிறதாலதான் விலகி இருக்கேன் சது, எதாவது பேசி இருக்குற உறவும் போயிடமோன்னு மனசுல எனக்கு பயமிருக்கு.”
கால்கள் உரசிக்கொண்டிருக்க, கையையும் சேர்த்துப் பிடித்தான் பரசுராம். சாதனாவின் கையை வருடி, “போதும் சது, இப்போ நம்மளைப் பத்தி மட்டும் பேசுவோம்” என்றான் ராம்.
“பேசுவோமே” என்று சிரித்தாள் சாதனா.
“யூ ஆர் மை ஹோம் சது! இப்ப எனக்கு அது மட்டும்தான். நீ என்னோட உலகத்துல இருக்கனும்னு ஆசைப்பட்டேன், இப்போ என்னோட உலகமே நீதான்னு புரிஞ்சிக்கிட்டேன். கல்யாணமான இந்த ஆறு மாசத்த விட இந்த ஆறு நாள் எனக்கு ரொம்ப அழகானது! இப்படியே இருக்கணும், இது நிலைக்கணும்னு மட்டும்தான் என்னோட ஆசை!” என்றான் வானத்தை பார்த்தபடி
இருவரின் கால்களும் உரசிக்கொள்ள, கைகள் கோர்த்த அந்த பொழுதில் சாதனா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். ராமின் சந்தோஷமாகத் தான் இருப்பதில் பெருமையாக உணர்ந்தாள்.
ராம், “இது போதும் சது எனக்கு” என்றான் உணர்ப்பூர்வமாக
“எது போதும்?”
“நீ, நான், இந்த அமைதி!”
“எனக்கு இது போதாது, நீங்க, நான், நம்ம பசங்க, அவங்க சத்தம் எல்லாம் வேணும்” என்று கனவோடு சொன்னாள் சாதனா.
“கண்டிப்பா! நம்ம பசங்களோட ஒரு நாள் இங்க வருவோம்” என்ற ராமின் மனதிலும் கனவுகளின் வண்ணத்தைத் தீற்றினாள் சாதனா.
“வாலு பசங்களா இருப்பாங்க இல்லையா சது? அவங்க மாமானுங்க மாதிரி!” சிரிப்புடன் சொன்ன ராமின் முகத்தையே ரசித்துப் பார்த்தாள் சாதனா. என்றும் அவன் புன்னகை வாடாததுதான்! ஆனால், இன்று அதில் ஒரு வசந்தம் கண்டாள்! பூரணம் உணர்ந்தாள்!
ராம் சாதனா இருவரும் கசோலில் அவர்கள் அறையில் இருந்தார்கள். காலையில் மலையேறிய பின் உணவை முடித்து ஊர் சுற்றினார்கள். ராம் வெகு வருடமாக மனத்தில் இருந்த பாரத்தை இறக்கியதில் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். கூடவே சாதனாவின் அன்பு, அவனைப் பரிவாகப் பார்க்கும் பார்வை, காதலாய் கை கோர்க்கும் ஸ்பரிசம் எல்லாம் புதிதாக இருந்தது.
இம்சித்த இடைவெளிகள் நீங்கி, இதமான உணர்வினை இதயம் உணர்ந்தது. ராமின் மனைவியாக சாதனா முழுமையாக உணர்ந்தாள். திருமணமான பின்னும் வராத நெருக்கத்தை, இந்த பிரிவும் அதன் பின் வந்த பொழுதும் இருவருக்கும் கொடுத்திருந்தது.
நொடியும் விலகாது இணைந்தே இருவரும் அனுபவித்தனர்.
“இதை சாப்பிட்டுப் பாருங்க ராம்” பிங்க் சாஸ் பாஸ்தாவை வாங்கி ராமிடம் ஊட்ட,
“ப்ளீஸ் சது!! எனக்கு இதெல்லாம் பிடிக்கல, எனக்கு நல்ல தயிர் சாதம் வேணும்.” என்று பாவமாக மனைவியினைப் பார்க்க,
அவளோ, “தயிர் சாதம்! தயிர்சாதம்!” என்று கணவனைத் திட்டினாள்.
“எங்க எங்க?” என்று அவன் பரபரக்க சாதனாவுக்கு அவனின் அந்த அப்பாவித்தனம் பிடித்தது.
சட்டென ஒரு சிரிப்பு. கன்னத்தில் கைவைத்து, தலைசாய்த்து கணவனைப் பார்த்த பார்வையில் காதல் கொட்டிக் கிடந்தது. கூடவே அவனின் அப்பாவித்தனத்தை ரசித்துப் பார்த்தாள்.
சாதனா அப்படியெல்லாம் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எத்தனை நாள் தவமிருந்திருப்பான், தவித்திருப்பான்?? அந்த காத்திருப்பெல்லாம் இன்று உயிர்ப்பெற்றிருக்க உற்சாகம் கரை புரண்டு ஓடியது ராமிற்கு.
“வீட்ல அதையேதான் சாப்பிடுறோம், கொஞ்சம் வெரைட்டியா ட்ரை பண்ணுங்க ராம்” என்று சாதனா சொல்ல, அவன் பாவமாகப் பார்த்தான்.
“உன்னைப் பிடிக்கும்னு இட்லி சாப்பிட்டு ப்ரூவ் பண்றேன் சது, இட்டாலியன் ஃபுட்லாம் சாப்பிட சொல்லாத ப்ளிஸ்” என்று கெஞ்சலாகப் பார்க்க, அவனுக்குப் பருப்பு சாதம் வரவைத்தாள்.
அந்த ரிசார்ட்டை சுற்றி இருந்த ஆப்பிள் தோட்டம் பார்த்தனர். சிறிது தூரம் நடந்தனர். மீண்டும் இரவு வர, பால்கனியில் நின்று அந்த குட்டி ஹிமாலியன் கிராமத்தை ரசித்தாள் சாதனா.
“இந்த இடம் ரொம்ப அழகுல ராம்?” மெல்லிய பனி சூழ்ந்திருக்க, முழு அந்தகாரம் அந்த நேரம். க்ராப் டாப், ஜீன்ஸ் அணிந்திருந்த சாதனாவின் பார்வை அந்த கருவானத்தில் இருக்க, ராம் வேகமாக அவள் ஷால் எடுத்தவன் அவளை நெருங்கினான்.
“இங்க யார் இருக்கா?” என்று திட்டியபடி அவள் திரும்ப,
“ஹே! அதுக்கில்லை.” என்றவன் அந்த ஷாலைப் போர்வை போல், அவனுக்கும் மனைவிக்கும் சேர்த்துப் போர்த்தினான். இப்போது ராமனின் சீதையாக ராமுக்குள் அடங்கி இருந்தாள் சாதனா.
ராமின் அணைப்பில் இமைகள் படபடக்க, இருளைப் பார்த்து சாதனா நிற்க, அவனின் வெளிச்சம் கை சேர்ந்த பூரிப்பில் பூரண நிலாவைப் பார்த்திருந்தான் ராம்.
“சென்னைக்குப் போனா இந்த ஷால் எல்லாம் தேவைப்படாது, ஊசியாய் குத்துற பனியை எஞ்சாய் பண்ணுங்க ராம்” அவன் கையுடன் கையைப் பின்னி சாதனா சொல்ல
“ஷால் எதுக்குன்னு கேட்ட இல்லை? ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்” என்றான் காதோரம் குனிந்து.
“இன்னிக்கும் தூக்கமா?” மெல்ல சாதனா கேட்ட நொடி, ராமின் தயக்கங்கள் தகர்ந்தன. முழுமையான மயக்கம்!
அவளை மென்மையான அணைத்திருந்த கரங்களில் அழுத்தம், பெண்ணால் அவனுக்குள் மென்மழை! ராமால் அவளுக்குள் பனி அலை!
சிறுக சிறுக முத்தங்களால் முகம் நிறைத்தான் ராம்! சாதனாவின் உறக்கத்தைக் கலைத்தான், மயக்கத்தை பரிசளித்தான்.
ராமின் வெளிச்சத்தை வெள்ளி நிலவை கைகளில் பொக்கிஷமாக அள்ளிக்கொண்டான். மென்மையாக ஒரு மெய் தொட்டுப் பயிறல்!!
இச்சைக்காதலை மொத்தமாக மோகம் கொண்டு மனைவியிடம் கொட்டினான்! சாதனாவை அவன் இத்தனை ஆண்டு எப்படி தேடினான் என்பதை உயிரால் உணர்த்தினான். அவளின் ஒற்றை அணைப்புக்காக ஏங்கியவனை அணைத்தே கிடந்தாள் சாதனா.
கசோலில் இருந்த அடுத்த இரண்டு நாட்களும் ராம் சாதனாவை விட்டு விலகவே இல்லை. கைவிட்டுப் போனதாய் கலங்கி நின்றவனுக்குக் கைகெட்டும் தூரத்தில் மனைவி இருக்க, அவள் கரமும் இவன் கரமும் இணைந்தே இருந்தன. ராமை சாதனாவுக்கும் பிடிக்க ஆரம்பித்தது, நிறைய பேசினான் ராம், அவன் பேச்சினைக் கேட்க ஆளில்லாத குறை தீர, அவனை ஆளவே ஒருத்தி வந்திருக்க, சின்ன சின்ன விஷயமானாலும் சாதனாவிடம் பேசினான்.
ராமிடம் மாற்றம் கண்டாள் சாதனா. கணவனாக நெருங்கியிருக்கிறான், நிறைய பேசுகிறான் எல்லாம் மீறி ஒரு உற்சாகத் துள்ளல். கண்கள் சிரித்துக் கொண்டே இருந்தன.
‘நான் என்றால் இவனுக்கு இவ்வளவு பிரியமா?’ என்று மனம் மகிழ, அதை கேட்கவும் செய்தாள்.
“ராம், நம்ம கல்யாண ஆனப்போ கூட இவ்வளவு சந்தோஷமா இல்லை. காதல் கை கூடின சந்தோஷத்தைப் பார்க்கவே இல்லையே?” என்று பால்கனியில் உட்கார்ந்திருந்தவன் முன் கை கட்டி சாதனா பேச, அவளை இழுத்து மடியில் அமர்த்தியவன்,
“அது சந்தோஷம்தான் எனக்கு. ஆனாலும், என்னை நான் எனக்குள்ள தேடிட்டே இருப்பேன் சது, படிச்சிருக்கேன், வேலை இருக்கு, நல்ல ப்ரண்ட்ஸ் இருக்காங்க, நல்ல குடும்பம் எல்லாம் இருந்தும் எனக்கு ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்தேன். பொய்யா சிரிச்சு, நல்லா இருக்க மாதிரியே நடிப்பேன். actually என்னோட vulnerability(காயப்படத்தக்க பக்கங்கள்) அஹ் யார்கிட்டயேயும் காட்டினதில்லை. என்னோட அழுகை, தனிமை, சோகம் எல்லாம் என்னோட!” என்றான் உணர்ச்சிவசத்துடன். கண்களில் மெல்ல சோகம் எட்டிப்பார்த்தாலும் முகத்தில் புன்னகை மாறவே இல்லை. பளிச்சென்ற புன்னகை!
“இனிமே எல்லாம் என்னோட” என்றாள் சாதனா அவனை அணைத்து.
“இல்லை, என் சோகமெல்லாம் போச்சு. உன்னோட எனக்கு சந்தோஷம்தான்” என்றான் நெகிழ்ந்த குரலில். எப்போதும் போல் ஆறுதலுக்காக கரங்கள் மனைவியை இறுக்கமாக அணைத்திருந்தன.
“உன்னோட இருக்கும்போது நான் எனக்கு உண்மையா இருக்கேன் சது, உங்கிட்ட காட்டுற இந்த சிரிப்பு அழுகை எல்லாமே உண்மை. என்னைப் பொருத்தவரைக்கும் அன்புன்றது உண்மை!! வேற யார்கிட்டயும் என்னால உண்மையா இந்த வாழ்க்கையில இருக்க முடியல. என்னோட சோகம் சொன்னா எங்கிட்ட அவங்க உண்மையா இருக்க மாட்டாங்கன்னு ஒரு பயம்! ராம்க்கு என்ன அவன் சந்தோஷமா இருக்கான்னுதான் எல்லோருக்கும் தோணும். அப்படித்தான் நடிச்சேன், ஆனா உன் முன்னாடி என்னால அழ முடியுது. தேங்க்ஸ், என்னோட கண்ணீரைத் துடைக்கிறதுக்கு” என்றான் ராம்.
சாதனா அவளின் ஸ்டோலை வைத்து கன்னம் துடைக்க, ராமின் பேச்சில் தன் செயலை நிறுத்தி,
“இதுக்கெல்லாம் தேங்க்க்ஸா, ஏன் இவ்வளவு எமோஷன்ஸ் ராம்?” என்று கவலையுடன் கேட்டாள். இன்னும் மனத்தில் எதையாவது வைத்து வருந்துகிறானோ என்று சரியாக கணவனைக் கணித்தாள் சாதனா.
“ஹே! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இவ்வளவு நாள் பேச ஆள் இல்லை, நீ இருக்கிறதால பேசிடுறேன்”
“நீங்களும் மாதவனும் பத்துவருஷமா ப்ரண்ட்ஸ்ல, அவனுக்கு எதுவும் தெரியாதா?”
“அவனுக்கு எனக்கு ஏதோ பிரச்சனை தெரியும். எனக்கு எங்கப்பா கூட பெருசா பேச்சு இல்லைனு தெரியும், ஆனா என்னன்னு அவன் கேட்டதில்லை, நானும் சொல்ல விரும்பினதில்லை. நம்மளைப் பத்தி தெரிஞ்சுட்டு புரிஞ்சிக்கிற ப்ரண்ட்ஸ் ஒரு வரம்னா, தெரியாம கூட நம்மை புரிஞ்சிக்கிற ப்ரண்ட்ஸ் கிடைச்சா லக்கி! ஒரு நண்பனா என்னை அவன் எப்பவும் சந்தோஷமா வைச்சுக்கனும்னு நினைப்பான்!” என்று மாதவனைப் பற்றி பெருமையாக சொல்ல
சாதனா உடனே, “எனக்கு எப்பவும் அவங்களாம் உங்களோட க்ளோஸ், நான் அந்தளவு இல்லைனு ஒரு ஃபீல் உண்டு. இப்ப அது இல்லை” என்றாள் குறும்பாக.
“ஏன்?”
“இரண்டு நாளாச்சு அவனுங்க கூட நீங்க பேசி” என்றதும் “என்ன?” என்று தலையில் கைவைத்தான்.
“போனையே நான் எடுக்கலையே?” என்ற ராம் எழ பார்க்க, அவனை எழ விடாமல் செய்தவள்,
“உங்க போன் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சு, அதனால உங்க நிலவரம் எப்படினு கேட்க எனக்குத்தான் போன் பண்ணான் மாதவன், செல்வா கூட கூப்பிட்டான்” என்றதும்
“யூ ஆர் மை ஹோம் சது! நீ கூட இருந்தா எனக்கு எதுவும் தேவையா இருக்க மாட்டேங்கிது” என்றான் ராம் உளமாற.
✅ End of Episode 11
Very nice.