Episode 10

இடைவெளி 10

இருவர் மனமும் அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தது.

தன்னைப் பெற்றவரைப் பார்த்து, அவரின் குணத்தை வெறுத்து முழுமையாக அவரை மனத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான் பரசுராம். அவரை வேண்டாம் என்று நினைத்தாலும், அவரை பிடிக்காது போனாலும் மனம் இத்தனை நாள் சுமந்த பாரத்திற்கு ஆறுதல் தேடியது.

சாதனா ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே போனவன் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசாது இழுத்து அணைத்தான். அந்த  நொடி அவனுக்கு மிக மிக தேவையானதாக இருந்தது அந்த அணைப்பு.

‘நீ தனி இல்லை’ என்று சொல்லும்விதமாய் ஒரு அணைப்புக்காக ஏங்கினான். ‘நான் இருக்கிறேன்’ என்று தேற்றும் ஒரு அணைப்பு. தேகமெல்லாம் தாண்டி மோகமெல்லாம் இல்லாது முழுக்க முழுக்க பேரன்பின் பிரதிபலிப்பாக அகம் மட்டுமே உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு அழுத்தமான அணைப்பு!! அவனை பொத்தி வைத்துக்கொள்ளும் வகையில் ஒரு அணைப்பு.

மனத்தில் சுமந்தவைகளை மனைவியிடம் பகிரும் முன் அவனுக்கு தைரியம் தேவைப்பட்டது. பேசும் முன், தன்னைத் தானே தேற்றிக்கொள்ள வேண்டி அவன் மனைவியை அணைத்து அதையே அவளிடமும் எதிர்ப்பார்த்தான். ஆனால்,  அவன் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதவள் அவனை ஏமாற்றத்துக்கு ஆளாக்கினாள்.

சாதனா சட்டென்று ராமிடம் அப்படியொரு அணைப்பை எதிர்ப்பார்க்கவே இல்லை. அதைவிட உடல்சோர்வு அவளிடம் அன்று அதிகமாக இருக்க, அவளின் அனுமதி கூட வேண்டாது அவன் அத்துமீற, கோபம், எரிச்சல் எல்லாம் தாண்டி ஏமாற்றம் அவளிடம்.

“ராம், லீவ் மீ!” என்று அவனை பட்டென்று உதறினாள். சாதனா அப்படி உதறவும் ராமிற்கு ஆத்திரம் அதிகமானது.

உலகில் தனித்து இருப்பது கொடுமை! அதுவும் பெற்றவர் இருந்தும் தனிமையை அதன் கொடுமையை அனுபவித்தவன் பரசுராம். எவ்வளவுதான் சுயமாய் தன்னைத் தானே தேற்றிகொண்டாலும், சுயத்தின் காயங்களின் ஆழம் அதிகமே!!!

அம்மாவை வெறுத்து வந்தவன், அகிலமே அகம்  நிறைந்தவள் என சாதனாவையே தன் சகலமாக நினைத்தவனுக்கு அவளின் விலகல் பிடிக்கவில்லை. அதைவிட இவளுக்கும் நான் வேண்டாமா என்ற சுய பச்சாதபம். எனக்கென யாருமே இல்லையா என்ற குரல் ஆழமாய் அதீத இரைச்சலோடு இதயத்தில் ஒலிக்க, எல்லா வலியும் வலிமைப்பெற்று கோபமாக உருமாறியது.

கோபம் நிதானத்தை நீர்க்க வைத்தது. வார்த்தைகளை சிதற வைத்தது. உறவில் விரிசல் விழ வைத்தது.

மீண்டும் சாதனாவை இழுத்தவன் அவளை அணைக்கப் போக, சாதனாவிற்கு ராமின் இத்தகையை அணுகுமுறை பிடிக்கவே இல்லை. அதுவும் முதல்முறையாக அவன் அணைக்க, அதுவும் இவ்வளவு அவசரமாக அவன் செயல், கொஞ்சமும் பிடித்தமில்லை சாதனாவிற்கு.

அவளுக்குப் பரசுராமைப் பிடிக்கும். திருமணத்தை சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டாள். ஆனாலும்,  ஒரு நெருக்கம் இன்னும் வரவில்லை, ராம் சாதனாவை நன்றாகப் பார்த்துக்கொண்டான், சாதனாவும் சந்தோஷமாக இருந்தாள். இருந்தும் அவனும் அவளை நெருங்கவில்லை, இவளும் நெருங்கவில்லை. நான்கு மாதங்களே ஆகியிருக்க, பேச்சிலும் செயலிலும் ஒரு இடைவெளி இருவருக்குள்ளும் இருந்தது.

இன்று அதனை ராம் அவசரத்தில் கடக்க நினைக்க, சாதனாவிற்கு அவன் மன நிலை குறித்துக் கொஞ்சமும் குறிப்பு இல்லை. எப்போதும் ராமிடம் ஒரு நிதானம், ஒரு அமைதி, ஒரு அழகியல் இருக்கும் அவன் செயல்களில். அதுவும் சாதனாவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பான், மனைவி ஆகிவிட்ட பின் எல்லாம் அவள் விருப்பப்படி செய்தான்.

அதனால் அன்பை விட ராம் மீது சாதனாவுக்கு மதிப்பும் மரியாதையும் நிறைய நிறைய இருந்தது. இப்பொழுது ராம் அவள் விருப்பத்தையும் மீறி அணைக்க, அது சாதனாவை கோபம் கொள்ள வைத்தது.

“ராம், லிஸன். இன்னிக்கு வேண்டாம். எனக்கு முடியல” என்றாள்.

“எனக்கு உன்னைக் கட்டிக்கனும் சாதனா, ஐ பேட்லி நீட் யூ” என்று ராம் சொல்ல, சாதனாவிற்கு கோபம் வந்தது.

“வேண்டாம் சொல்றேன்ல, அப்படி என்ன அவசரம்” என்று எரிச்சல் மிகுதியில் கேட்டவள் கோபமாக அறைக்குள் நுழையப் பார்க்க, அவளின் கையை அழுத்தி பிடித்துத் தடுத்து நிறுத்திய ராம்,

“ப்ளீஸ், ஜஸ்ட் எ ஹக்” என்று சொல்லி மீண்டும் அவளை அணைக்க  முயல, சாதனாவிற்கு அவன் அணைப்பு தரும் அழுத்தம் வலித்தது. அவனை வேகமாகத் தள்ளியவள்

“பிஹேவ் யுவர்செல்ஃப்” என்று அதட்டினாள்.

ஏற்கனவே தாயினால் தளர்ந்து இருந்தவனை இன்னும் தகிக்கச் செய்தது தலைவியின் வார்த்தைகள்.

சாதனாவின் முகத்தைப் பற்றியவன், “ஓஹ், கட்டின புருஷன் கட்டிப் பிடிக்க பெர்மிஷன் கிடையாது, ஆனா லவ்வர் கிஸ் பண்ண கூட உடனே பெர்மிஷன் கிடைக்கும். என்னைப் பிடிக்கலன்னா ஏண்டி கல்யாணம் பண்ணின?” என்று எரிச்சலாகக் கேட்க, அந்த வார்த்தைகள் சாதனாவின் மனத்தில் ராமை மிகவும் கீழே இறக்கியது. கண்கள் கலங்கிவிட, தன்னை அவன் அவமதிப்பாகப் பேசியதும், அதைவிட ராம் இப்படி பேசுவானா என்ற அதிர்ச்சியும் அவளை அப்படியே நிற்க வைத்தது.

சாதனா அப்படி கண்கள் கலங்கி, அசையாது நிற்க, அந்த சில  நிமிடங்கள் அமைதியில் சிந்தை தெளிந்தது ராமிற்கு.

“சாதனா!” என்று அவள் தோளைத் தொட, சாதனா பார்வையால் பரசுராமனை எரித்தாள்.

பேசாது தன்னைப் பார்த்து நின்ற மனைவியின் முகம் பார்த்த ராமிற்கு, அகத்தில் ஆழிப்பேரலை சுழன்றது. இவளுக்கும் என்னைப் பிடிக்காது போய்விடுமோ என்ற பயம் பெரிதாக இருந்தது. அந்த பயத்துடன் சாதனாவை மீண்டும் அழைக்க

“சொல்லுங்க பரசுராம்! என்ன?” என்ற அவள் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம்.

“சது, நான் கோவத்துல பேசிட்டேன். வேற டென்ஷன் மா” என்று விளக்கம் சொல்ல, விளக்கங்களைக் கேட்கும் நிலையில் அவள் இல்லை.

ராம் இப்படி பேசுவானா? என்ற எண்ணமே தீயாய் எரிந்தது. அழுகையை அடக்கினாள்.

“உன்னை ரொம்ப  நல்லவன் நினைச்சேன் ராம், ஆனா உன் மனசுல இவ்வளவு அழுக்கு இருக்கும்னு நான் நினைக்கல” என்று சாதனா சொல்லவும் உடைந்து போனான் ராம். கூடவே அந்த பிரதீப்பின் மீதும் ஆத்திரம் வந்தது. எதை யாரிடம் சொல்ல வேண்டும் என்ற அறிவில்லையே அவனுக்கு. அதைக் கேட்டு தன்னை பேசும் கணவன் மீது இன்னும் கோபம் வந்தது.

தான் காதலிக்கும் பெண்ணை, தன் நண்பனும் காதலிக்க, அவன் காதலியை முத்தமிட்டது முதற்கொண்டு பெருமையாய் இவனிடம் பகிர்ந்து இருக்க,  அவன் சுமந்த வலிகள் வருடங்கள் ஆனாலும்,  வடுக்களை இருக்க, இன்றையை உணர்ச்சிப்பெருக்கில

அவையெல்லாம் வார்த்தையாக்கி வாழ்க்கையை சிக்கல் ஆக்கியது.

“சது! அது நீ என்னை வேண்டாம் சொன்ன கோபத்துல, நான் உன்னை தப்பா பேசல. ப்ளீஸ் நீ தப்பா நினைக்காத” என்று கெஞ்ச

“என்ன தப்பா பேசலையா? என்னை தப்பா பேச என்ன இருக்கு? நான் உன்னை ஏமாத்தினேனா என்ன? நான் ஒருத்தனைக் காதலிச்சேன்னு தெரிஞ்சுதான் என்னைக் கல்யாணம் பண்ணின? இதுல என்ன தப்பு? இன்னிக்கு எனக்கு முடியலனு மறுக்க கூட எனக்கு உரிமையில்லையா? அவ்வளவு திமிரா உனக்கு?” என்று கத்தியவள்

கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட, அதைத் துடைக்காது, “உன்னோட நான் இருக்கவே மாட்டேன், ஐ ஹேட் யூ!” என்றவள் தன் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பப் பார்த்தாள்.

ராமின் இதயம் நொறுங்கிய நொடிகள் அவை! அம்மா, அப்பா எல்லாம் அவனை நிராகரித்தபோது ஏற்பட்ட வலியை விட இப்போது இந்த நொடி கொடியதாய் இருந்தது. வாழ்வு முழுக்க இருளோ என்ற ஐயத்தில் அச்சத்தில் உடல் நடுங்கியது.

“சது! கோவத்துல பேசினதுக்கு எல்லாம் கோச்சுப்பியா? கோவம் வந்தா அடிம்மா, ப்ளீஸ் விட்டுப்போகாத” என்று கெஞ்சினான். சாதனா இரங்கிடவில்லை.

“இப்படி என்னை மரியாதை இல்லாம நினைக்கிற ஒருத்தன் கூட என்னால இருக்க முடியாது” என்றவள் கதவு பக்கம் போனாள்.

“சது, நான் பேசினது ரொம்ப தப்பு. அதுக்காக வீட்டை விட்டுப்போகாத. ப்ளீஸ்மா” என்று அவள் கையைப் பிடித்துத் தடுக்க, அன்று இருவருக்குமே உணர்வுகள் சீராக இல்லாது போக, நிமிடங்கள் சிக்கலானது.

ராமின் கையை வேகமாகத் தட்டிவிட்ட சாதனா, “என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்த, அப்புறம் நான் வேற முடிவு எடுக்க வேண்டி இருக்கும். அப்புறம் என்னாச்சுன்னு என் தம்பிங்க கேட்டா உண்மையை சொல்லு, உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுவாங்க” என்று சொல்லும்போதே அவள் குரல் அடைத்தது.

ராமிற்கு அவன் வாழ்வே அவனை விட்டுப் போகும் நிலைமை.

அன்று அவனை விட்டு சென்றவளை இரண்டு மாதங்கள் கழித்துப் பார்த்து, இப்போது மீண்டும் சினேகித்து சேர்ந்திருக்கிறான், சாதனா மட்டும் அவனை வேண்டாம் என்று விலகியிருந்தால் நிச்சயம் உடைந்து போய் இருப்பான்.

அதை நினைத்ததும் இன்றும் அவன் கண்கள் கலங்கின, சாதனாவின் தோளைச் சுற்றி கையைப்போட்டவன்

“எல்லாத்துக்கு என்னை மன்னிச்சிடு சது! அன்னிக்கு எனக்குள்ள இருந்த சாத்தான் பேசிடுச்சு” என்றதும் மறுப்பாக தலையைசைத்த சாதனா அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அன்னிக்கு உங்க சிட்டிவேஷன் இப்போ புரியுது ராம், காலேஜ் டேய்ஸ்ல இருந்து எனக்கு நீங்கன்னா எப்பவும் மரியாதை உண்டு,  அதனாலதான் உங்க வார்த்தைகளை ஏற்க முடியல. நிச்சயமா அப்ப உங்களோட இருந்திருந்தா என்னால இவ்வளவு சிக்கிரம் அதை விட்டிருக்க முடியாது. சில நேரம் உறவுகள் பிரியாம இருக்கனும்னா இடைவெளிகள் அவசியம் இல்லையா?” என்று கேட்க

“ஆனால்,  இடைவெளிகள்தான் பிரிவை உண்டாக்குது சது” என்றான்.

“அப்படி இல்லை ராம், அன்னிக்கு இருந்த கோவம் இட் வாஸ் அட் பீக்! எனக்கு அப்போ உங்களோட இருக்கவோ பார்க்கவோ பிடிக்கல, ஆனா இப்போ அந்த கோவமில்லை, ஒரு அமைதி இருக்கு. சில விஷயங்களை உடனே பேசிடாம கொஞ்சம் பொறுமையா அந்த ஃபீலிங்க்ஸ் குறைஞ்ச அப்புறம் பேசும்போது கிடைக்குற தெளிவே வேற” என்று சாதனா சொல்ல”அக்சுவலி நீ என்னை ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்னு நினைச்சதுதான் பிரச்சனை.” என்று ராம் சிரித்தபடி சொல்ல

“நீங்க ஓகே வா ராம்?” என்று கவலையுடன் சாதனா கேட்டாள்.

“ஹே!! ஐ அம் ஓகே! அழகான ஹிமாச்சல், அழகான மனைவி. சூப்பரான பெட், இதைவிட வேற என்ன வேணும்?” என்று கேட்டவன்

“ரொம்ப டயர்டா இருக்கு சது, மெண்டலி நான் ரொம்ப ப்ரஷர்ல இருந்தேன். இப்போ உங்கிட்ட எல்லாம் சொன்னதும் ஐ ஃபீல் குட்! இப்போ நான் தூங்குறேன்” என்றான். தலையணையை சரி செய்து அதில் தலைவைத்தவன்

“சது, என்னோட ப்ளாஷ்பேக் கேட்டு உனக்கு என் மேல இந்த பியார், ப்ரேமா எல்லாம் இல்லைதானே?” என்று கேட்க, அவன் அருகே நெருங்கி படுத்தவள்,

“எனக்கு ரொம்ப எக்ஸ்பிரஸ் பண்ணத் தெரியாதுனு உங்களுக்குத் தெரியும்தானே ராம், வாய் விட்டு சொல்லிட்டேன். வேற என்ன செய்யணும்?” என்று கேட்டாள் சாதனா.”இல்லை சது! என்னோட சின்ன வயசு trauma அதுக்காக என்னோட பிஹேவியரை என்னால நியாயப்படுத்த முடியாதுல. உங்கிட்ட அப்போ நடந்தது தப்பு இல்லையா? என்னால அதை ஓவர்கம் பண்ண முடியல, அதுவும் உன்னோட கண்ல அன்னிக்குக் கண்ணீரைப் பார்த்துட்டு, அது இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குது!” என்று வருந்தி சொன்னான். ராமின் குரல் கரகரப்பில் அவன் அதை நினைத்து மறுகுகிறான் என்று புரிய,

“ராம்! அதெல்லாம் முடிஞ்சு போச்சு. ஃபர்கெட் தட்! இனிமே அதை பேசாம இருங்க, அதிகமாவே பேசிட்டோம். இனிமே சந்தோஷமா இருக்கலாம். இப்போ எதையும் நினைக்காம அமைதியா தூங்குங்க.” என்று அவன் கையைப் பிடித்துகொள்ள. ராம் வெகு வருடங்கள் கழித்து தன் வாழ்க்கைத் துணை அருகே இருக்க, வாழ்க்கையில் துணை கிடைத்த நிம்மதியில் நித்திரையில் ஆழ்ந்தான்.

 

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 days ago

Very nice.

Mrs Beena loganathan Reader 13 hours ago

பிரிதல் இடைவெளி தர

புரிதல் இணக்கம் தந்து
பக்க துணையாக இறுக 
பற்றிக் கொண்டது இதயம்...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top