Episode 10

ஒரு காதல் 10

“நான் எப்பவும் இந்த வீட்லதான் இருப்பேன், என்னைக்கும் நீங்க என்னை வேலையை விட சொல்லக் கூடாது” என்று வஞ்சி முதல் நிபந்தனையை சொல்ல, சொன்ன கணமே

“ஓகே டன்!” என்றுவிட்டான் இளந்திரையன்.

“அப்புறம் இனி எப்பவுமே நான் தாலியைக் கழட்டின விஷயத்தை சொல்லி என்னைக் குத்திக் காட்டக் கூடாது, விளையாட்டா கூட சொல்லக் கூடாது” என்றாள் தீவிரமாக. இளந்திரையனும் பொறுமையாகவே

“கண்டிப்பா!” என்றான் உறுதிபட. அத்துடன் விடாமல்

“நானும் ஒன்னு சொல்லிக்கிறேன், நீயும் என்னை இரண்டு வருஷம் நீ என்னைப் பார்க்கலன்னு எப்பவும் பழசைப் பேசக் கூடாது” என்று தனக்கு வேண்டியதையும் சொல்லிவிட, வஞ்சிக்கு அவனின் சாமர்த்தியம் கண்டு கொஞ்சமாய் சிரிப்புதான்,

“அடுத்து…” என்றவள் கொஞ்சம் நிறுத்தி அவன் முகம் பார்க்க,

“என்ன பார்க்குற சொல்லு” என்று அவன் சொல்லவும்

“அது என்னை இஞ்சின்னு கூப்பிடக் கூடாது” என்றாள் முகத்தை சுருக்கி

“அப்படி சொன்னா எனக்குப் பிடிக்கல” என்றதும் இளந்திரையனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“ஹாஹா…அய்யோ அய்யோ” என்று அவன் விடாது சிரிக்க, அவள் முறைக்க

“இஞ்சி! நான் என்னமோன்னு நினைச்சேன் டி, ஆனா இந்த கண்டிஷன் இருக்கே, அது மட்டும் முடியாதுடி” என்றவன் மீது பக்கத்தில் இருந்த பேப்பரை விட்டு அவள் அடிக்க

“என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ இஞ்சி, மூணாவது கண்டிஷன் மட்டும் முடியாது” என்று இன்னும் அவன் சிரிக்க வஞ்சி அமைதியாகிவிட்டாள்.

“எப்படி எல்லா கண்டிஷனுக்கும் உடனே ஒத்துக்கிட்டீங்க” என்று கேட்க

“நான் நீ என்னோட வாழனும்னுறதையே கண்டிஷனா சொல்லும்போது நீ வாழ்றதுக்காக சில கண்டிஷன் சொன்னா தப்பில்லையே, உனக்கு என் மேல ஒன்னும் பெருசா ஃபீலிங்க்ஸ் இல்லன்னு தெரியும், இருந்தும் நீ வாழ ஒரு முயற்சி எடுக்கிற” என்றதும் முதன்முறையாய் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பெண்.

“என்ன ரொம்ப பார்க்கிற?” என்றான் இளந்திரையன்.

“இல்ல என்னோட வீட்ல இருக்கனும்னு சொன்னேனே, ஒன்னுமே தப்பா தோணலையா என்ன?” என்றாள்.

“இதுல என்ன இருக்கு? நம்ம கணவன் மனைவின்றப்ப எது உன்னோடதோ அது என்னோடது, எல்லாமே இங்க நம்மளதுதான், இதே நீ மாமியார் வீட்ல வந்து இருக்கனும்னு சொல்லியிருந்தா நான் ஒத்துட்டு இருந்திருக்க மாட்டேன்தான், இது அப்படியில்ல, உன்னோட உழைப்பு, எனக்கு அதுல பெருமைதான்” என்றவனை இன்னும் வியப்போடு அவள் பார்க்க

“என்ன ஹான்னு பார்க்கிற?” என்று செல்லமாய் அவளின் கன்னம் தட்ட

“இல்ல, மாமா நான் வீடு வாங்கினது சொன்னப்போ நீங்க சந்தோஷப்படலையே?” என்று அவள் இழுக்க

“அதான் சொன்னேனே, அவர் சொல்றவிதம் வேற, என்னை உன்னோட கம்பேர் செஞ்சு பேசுவார், கடுப்பாகும். அதுமட்டுமில்லாம மனைவியா நினைச்சாலும் அந்த உணர்வு அப்போ வரல எனக்கு, இப்போ ஐ ஃபீல் இட்” என்றான் உள்ளார்ந்து உணர்ந்து.

“அப்போ இனிமே மாமா என்னைப் பத்திப் பேசினா புகழ்ந்தா கோவம் வராதா?” என்று அவளும் அவனைப் பார்த்தவண்ணம் திரும்பிப்படுக்க

“அதெல்லாம் கண்டிப்பா வரும், அது அவருக்கு ஏத்த மாதிரி நான் பதில் கொடுப்பேன், எனக்கும் எங்கப்பாவுக்குமானது இஞ்சி அது! அவர் என்னைக் கடுப்பேத்தினா நானும் அவரைக் கடுப்பேத்த நாலு எக்ஸ்ட்ரா பிட் போடுவேன், நீ எப்பவும் அதை மைண்ட்ல ஏத்தாத” என்றான் மிகவும் எளிதாக.

“இஞ்சி! கண்டிஷன்ஸ்லாம் ஓவரா?” என்று இளா கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்க

“இஞ்சி சொல்லாத, எங்க ஊர் சாமி பெயர் நீ இப்படி கிண்டலடிப்பியா? சின்ன வயசுல கிண்டல் பண்ணின சரி, எரும மாதிரி வளர்ந்துட்டு இன்னும் இப்படி பேசுற” என்று கடுப்பில் பேச

“ஒகே இஞ்சி” என்று விடாமல் வம்பிழுக்க, அவனருகே மெத்தை மீது படுத்திருந்தவள் அவனருகே நெருங்கி அப்படியே அவனின் தோளில் நெஞ்சிலும் மாறி மாறி அடிக்க

அவள் கரம்பற்றியவன் கன்னத்தை வருட, கூச்சத்தில் தவித்தவள்
“இளா, ப்ளீஸ்! க..கமலி கல்யாணத்துக்கு அப்புறம்….எல்லாமே நம்ம விஷயத்துல அவசரமா நடந்துடுச்சு” என்று அவனின் செயல்களுக்குத் தடை சொல்ல

“என்ன வேணும்னாலும் சொல்லுடி ஏத்துப்பேன், ஆனா எல்லாம் அவசரமா நடந்துச்சுன்னு மட்டும் சொல்லாத, கல்யாணமாகி மூணு வருஷம் அப்புறம் இப்போதான் உன் கையே பிடிக்கிறேன்” என்றவன் அவளை விட்டு விலகிப் படுக்க

“தப்பா நினைச்சிட்டியா?” என்ற வஞ்சுளவல்லியின் கேள்விக்கு

“அதெல்லாம் இல்லடி, தூங்கு” என்றான்.

அடுத்த நாள் வேலை முடிந்து வந்தவள், “இளா, கமலி ஒன்னு கேட்டா” என்று ஆரம்பிக்க

“இவ்வளவு வாங்கினது அவளுக்குப் பத்தலையா?” என்று எரிச்சலாய் அவன் கேட்க

“ஷ்! அது இல்ல, அவ என்னையும் ஊருக்குக் கூப்பிடுறா, நானும் போகவா?” என்றதும் அவன் கண்கள் சுருக்கி அவளைக் கடுப்புடன் பார்த்து

“நீ எதுக்கு?”

“அவ கல்யாணமாகி போய்டுவா இல்ல, அவளை நான் மிஸ் பண்ணுவேன் இளா, இப்போதான் இப்படி சேர்ந்து இருக்கலாம்” என்று வஞ்சி ஆசை ஆசையாய் சொல்ல

இளந்திரையன் மனைவியைக் கோபமாய் முறைத்தான்.

“பாவம் அவ ஆசையா கேட்கிறா, எனக்கும் ஆசையாதான் இருக்கு” என்றதும் இன்னும் கோபம் கொண்டவன்

“உனக்கு எங்கூட இருக்கனும்ன்ற ஆசையைத் தவிர எல்லா ஆசையும் இருக்கும்” என்றவன்

“அந்த கமலியை சொல்லணும், நாளைக்கு கல்யாணமாகிப் போகப் போறா, இன்னமும் அறிவில்லாம சுத்துது” என்று கமலியைப் பேச, வஞ்சியும் கோபம் கொண்டவள்

“அவளை ஏன் பேசுறீங்க நீங்க? அவதான் எப்பவும் ஒரே மாதிரி என் மேல் அக்கறையாய் இருந்திருக்கா” என்றதும் இளாவிற்கு அவனைக் குத்திக்காட்டுவது போல் இருக்க

“நான் இல்லை அப்படித்தானே?”

“ஆமா! அப்படித்தான்!” என்று அழுத்தி சொல்ல மீண்டும் இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டது.

“என்னைப் பழசைப் பேசாதன்னு நீதான் அதை மறக்கல, இப்ப என்னடி உனக்கு அவ கூட போகணும்னா போய்க்கோ, என்னமோ இரண்டு பேரும் அப்படியே இணைப்பிரியாம குடும்பம் நடத்திட்டோம் பாரு நான் ஃபீல் செய்ய, ச்ச” என்று தலையில் அடித்துக் கொண்டவன் குளிக்கப் போய்விட்டான்.

மாதவி அவளிடம்

“இங்க பாரு வல்லி ஊர்ல உங்கம்மாவுக்கு சமைக்கிற மாதிரி என் புள்ளைக்கு சமைக்காத, என் மகனுக்கு நல்லா சமைச்சுப் போடு” என்றார் அதிகாரமாக.

“சரிங்கத்த” என்றவள் இரவிற்கு அவர்களுக்கு உணவு செய்தாள். இட்லி செய்து சட்னி வைக்க அவள் வெங்காயம் உரிக்க, கமலி அவளை ஒட்டிக்கொண்டு நின்றவள்

“என்ன அத்தாச்சி? என் கூட ஊருக்கு வர சொன்னேன் இல்லையா?” என்று ஆசையாய்க் கேட்க

இளந்திரையனின் மீது வஞ்சியின் பார்வை போனது, அவனோ அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான். வஞ்சிக்குக் காலையில் இருந்த ஆசை இப்போது இல்லை, இளந்திரையனிடம் சண்டைப் போட்டது என்னவோ சஞ்சலமாய் இருக்க, அதற்கும் அவன் மேல் கோபம் கிளம்பியது.

‘என் ஆசையை ஸ்பாயில் பண்ணிட்டான்’ என்று அவனைத் திட்டினாள் மனத்தினுள்.

“உன்னைத்தானே கேட்கிறேன்” என்ற கமலியின் முகம் பார்த்தவள்

“அது ஆபிஸ்ல லீவ் கிடைக்காது கமலி, நெக்ஸ்ட் வீக் எப்படியும் வந்துடுவேன் தானே?”

“என் கூடத்தான் இருக்கனும், இப்போ அம்மா அப்பா கூட பழைய ரூம்ல தூங்குறாங்க, நான் தனியாதான் இருக்கேன், நீ என்னோட ரூம்ல தங்கிக்கோ நம்ம நைட்டெல்லாம் தூங்காம முன்னாடி மாதிரி ஜாலியா பேசலாம்” என்றாள் தோழமையுடன்.

“வரேன் டி ஆத்தா படுத்தாத” என்று சிரிப்புடன் வஞ்சி சொல்ல, கமலியும் சந்தோஷமாய் அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் சென்று பத்து நிமிடத்திற்கெல்லாம் காலிங் பெல் சத்தம் கேட்க பார்த்தால் கார்த்திக்கேயன் நின்றிருந்தான்.

“அண்ணா வாங்க வாங்க” என்று சந்தோஷமாய் வஞ்சி அவனை வரவேற்க

“எப்படி வல்லி இருக்க?” என்று கேட்டவாறே அவன் சோஃபாவில் உட்கார, அவனுடன் பேசினாள்.

மீண்டும் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க

“அதுக்குள்ள வர முடியாதே” என்று யோசித்தபடியே அவள் கதவுப்பக்கம் போக, கார்த்தியும் வாசலில் பார்வை வைத்தான்.

ஸ்வீக்கியில் இருந்து உணவு வந்திருக்க
“நான் எதுவும் ஆர்டர் செய்யலையே” என்று வஞ்சி சொல்ல

“இல்ல மேம், இந்த அட்ரஸ்தான் இப்போ கூட ஸார் கிட்ட கேட்டுத்தான் வந்தேன்” என்றதும் ‘யார் பெயரென்ன’ என்று விசாரிக்க இளந்திரையன்தான் ஆர்டர் செய்திருந்தான்.

‘ஹோ! என் சாப்பாடு சாப்பிட மாட்டானோ?’ என்று கடுப்பில் அவள் வாங்கி வைக்க, கார்த்தியிடம்

“அவருக்கு சாப்பிட ஆர்டர் பண்ணியிருக்கார் போல” என்றவள்

“உனக்கு இட்லி எடுத்துட்டு வரவாண்ணா?” என்று கேட்க

“இல்லம்மா, ஒரு காஃபி தா, அப்புறம் சண்மு சமைச்சது வேஸ்டா போச்சுன்னு என்னைத் திட்டுவா” என்று சொல்ல வஞ்சி அண்ணனுக்குக் காஃபி எடுத்து வந்தாள். கார்த்தி காஃபியைப் பருக, இளந்திரையனிடமிருந்து வஞ்சிக்குப் போன்.

“சாப்பாடு வந்தாச்சா?” என்று எடுத்தவுடன் அவன் கேட்க

“வந்தாச்சு”

“சரி நீ சீக்கிரம் சாப்பிடு, சூடு ஆறிடும்” என்று இளந்திரையன் சொல்லி வைத்துவிட்டான்.

‘எனக்காக வாங்கினானா?’ என்ற எண்ணம் ஏகத்திற்கும் உச்சி முதல் பாதம் வரை உவகையினை தெளித்து சென்றது.

“என்னாச்சு வல்லி?” என்றான் ஆவல் நிரம்பிய குரலில்.

“அ..அது எனக்காக ஆர்டர் பண்ணினாராம் அண்ணா” என்று அவள் கொஞ்சம் தயங்கியே சொல்ல

சிறிது நேரம் மௌனமாய் இருந்த கார்த்திக்கேயன்,

“பரவாயில்லையே உன் மேல அக்கறையாய் இருக்கான் இளா” என்று மெச்சுதலாகச் சொல்ல, அண்ணனின் பேச்சில் இன்னும் தித்தித்தவள்

“அதெல்லாம் இப்போ நிறைய அண்ணா, நான் ஆபிஸ் விட்டு வரும்போது காஃபி போட்டு வச்சிருப்பார்” என்றாள் உடனடியாக.

“அப்போ இளாவை உனக்குப் பிடிச்சிருக்குத்தானே?” என்று தங்கை மனம் அறிய கேட்க

“பிடிச்சிருக்கு” என்றாள் மனத்தினுள் அவனை எனக்குப் பிடிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன்.

“சரி உன் வீட்டுக்காரன் உனக்காக என்னவோ ஆர்டர் பண்ணியிருக்கான் நீ சாப்பிடு முதல்ல” என்று சொல்ல

அப்படியே இருவரும் பேச, இளந்திரையன் வந்துவிட்டான்.
வஞ்சி கதவைத் திறக்கவும் அவள் பார்வையைப் பார்த்தவன் கார்த்திக்கேயனைப் பார்த்துவிட்டு அமைதியாய் உள்ளே நுழைய

“வாங்க மாப்பிள்ளை” என்றான் கார்த்தி. அதில் இளாவின் பார்வை வஞ்சியைப் பார்க்க, அவள் அவனைப் பார்க்காமல் இருக்க, இளாவிற்கு கார்த்தியின் அழைப்பே அவனின் மாற்றத்தை சொல்லிவிட

“வாங்க மச்சான்” என்று சொல்லி அவனும் அருகே உட்கார

“அப்புறம் நான் கிளம்புறேன் வஞ்சி, உன் வீட்டுக்காரருக்கு வேற நடுவுல யார் வந்தாலும் பிடிக்காது” என்று சொல்லி இளாவை வம்பிழுக்க

“ஏன் இப்படி?” என்று இளாவும் புன்னகையுடன் கேட்க

“என்ன மாப்ள? தங்கச்சிக்கு மட்டும் பிரியாணியெல்லாம் வந்திருக்க, மச்சானுக்கு ஒன்னுமில்லையா?” என்று கார்த்தி கேட்க

“அடுத்தவாரம் கமலி கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்ல விருந்து இருக்கு, கண்டிப்பா வந்திடுங்க, மச்சானைக் கவனிச்சிடலாம்” என்று இளா சிரிக்க

“அப்ப கூட இப்ப ஒன்னும் செய்ய மாட்ட இல்ல நீ?” என்று கார்த்தி விடாது வம்பிழுத்தான்.

“நீங்கதான் கிளம்புறேன்னு டீசண்டா சொன்னீங்களே மச்சான்”

“அடப்பாவி! இன்னும் கிளம்பலையான்னு டீசண்டா கேட்கிறடா நீ?” என்று சொல்லி கார்த்தி பின் சீரியசாய்

“இளா, கமலி கல்யாணம் முடியவும் ஒரு நாள் இரண்டு பேரும் ஒன்னா வீட்டுக்கு வரணும் சரியா?” என்றவன்

“அன்னிக்குப் பேசினதெல்லாம் அவ மேல உள்ள அக்கறையாலதான், அம்மா அப்பா இல்லாத பொண்ணு, நல்லா பார்த்துக்கோ டா” என்று கார்த்தி சொல்ல

“நான் இருக்கேன்” என்றான் உடனே.

வஞ்சி எல்லாம் பார்த்தவள் அமைதியாய் இருந்தாள், கார்த்தி அவளிடம் சொல்லிவிட்டு கிளம்ப, இளந்திரையன் டீபாயைப் பார்க்க இன்னும் பிரியாணி பிரிக்கப்படாமல் இருக்க

“வஞ்சி! உனக்காகத்தான் ஆர்டர் பண்ணினேன், சாப்பிடு முதல்ல” என்று சொல்ல

“உங்களுக்கு என்ன சாப்பிடறதுக்கு” என்று கேட்க

“அதான் இட்லி இருக்கே” என்று சொல்ல, இரண்டு தட்டு எடுத்து வந்தவள் இரண்டிலும் பிரியாணியை வைக்க

“ஏய் நான் மதியம் சாப்பிட்டேன் டி, எனக்கு வைக்காத” என்று இளந்திரையன் மறுக்க

“என் கூட சேர்ந்து சாப்பிடனும்” என்று கட்டளையாய் சொன்னவள் பால்கனியில் போய் உட்கார்ந்து கொண்டாள். இளந்திரையன் அவள் பின்னால் போனவன் இட்லி, சட்னி, தண்ணீர் எல்லாம் எடுத்தவன் பால்கனியில் வைத்து அவளைப் பார்க்க, அவளோ வானில் தெரிந்த நிலவைப் பார்த்தாள்.

“எனக்கு நைட்ல ரொம்ப வேண்டாம் வஞ்சி, நீ எடுத்துக்கோ” என்று சொல்லி அவளின் தட்டில் அவன் லெக்பீசை வைக்கப் போக

“வேண்டாம்” என்றவள் பிடிவாதமாய் இருக்க

“எங்க வச்சிருந்த இவ்வளவு பிடிவாதம்” என்று திட்டியவன்

“சரி இவ்வளவு சொல்றதால கஷ்டப்பட்டு இந்த லெக் பீசை தத்து எடுக்கிறேன் நான்” என்றவன் மிகவும் கஷ்டப்பட்டு இரண்டே நிமிடத்தில் காலி செய்ய, அவனை புன்னகையுடன் பார்க்க அவள் பார்வையில் கொஞ்சம் கிண்டல் தெரிய

“பாவமா இருந்துச்சு டி, அதான் டக்குன்னு சாப்பிட்டேன்” என்றவன் அவன் தட்டில் இருந்த சாதத்தை எடுத்து அவள் தட்டில் வைத்துவிட்டு இட்லி சட்னியுடன் உண்டான்.

“என்ன சட்னிடி இது, செமையா இருக்கு”

“அது வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி வச்சு வதக்காம அப்படியே பச்சையாய் அரைச்சேன், அதான் நல்லா காரமாய் இருக்கும்”

“இஞ்சி வச்சியா?” என்று அவன் இழுக்க, வழக்கம் போல் வஞ்சி முறைக்க

“பிரியாணி எப்படி இருக்கு?” என்றவனின் கேள்விக்கு

“நல்லா இருக்கு, அப்போ கத்தின, ஒருவார்த்தைப் பேசல, இப்போ என்ன பிரியாணி கொடுத்து சமாதானமோ?” என்றாள் மங்கை அவன் மனமறிய.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, ஊருக்குப் போறதுன்னா போயேன்”

“கமலி பாவமில்ல”

“ஒன்னும் கெட்டுப்போகலை, பிரியாணியை சாப்பிட்டு முடி, பத்து மணி பஸ் இருக்கும் ஜம்முன்னு போயிடு” என்றான் கடுப்பாக. அவன் சொன்னதைக் கேட்டவள்

“அப்போ சாப்பிட்டு கிளம்பவா?” என்று கேட்டு வைக்க, இன்னும் இளந்திரையனுக்குக் கோபம் கூடியது.

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 5 😂 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Radhi Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்

நெஞ்சம் நெஞ்சம் மோதிக்கொள்வோம்
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top