Episode 5

ஒரு காதல் 5

வஞ்சி அவன் விட்டால் போதுமென அறைக்குள் புகுந்துகொண்டவள் குளித்து ஒரு காலர் நெக் சுடிதாரை அணிந்துகொண்டாள். பிறகு சார்ஜில் இருந்த தன் போனை எடுத்துப் பார்க்க கார்த்திக்கேயன் பலமுறை போன் செய்திருந்தான். நேற்று இளா வந்துவிட்டான் ஒன்னும் பிரச்சனையில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியதுடன் சரி. அதனால் அண்ணனுக்கு அழைத்தவள் அவனிடம் பேசினாள்.

வஞ்சி அவனுக்கு முன்பாகவே உண்டு தட்டைக் கழுவி முடித்து சாமியின் முன் நின்றவள் குங்குமத்தை எடுத்துத் தன் நெற்றி வகிட்டில் வைத்துக்கொண்டாள்.

உண்டு முடித்த இளந்திரையன் இவள் செயலைப் பார்த்துக்கொண்டே தட்டைக் கழுவிப்போட்டவன், இவளருகே வந்து

“ஓஹோ! அடையாளம்! என்று கிண்டலாய் சொன்னவன்

“இதெல்லாம் வைக்கிறது அடுத்தவங்களுக்காகவா இல்லை உன்னோட மனசுக்காகவா?” என்று கேள்வி கேட்டவன் அவள் பதில் பேசாமல் இருக்கவும்

“ஆனா பாரு எனக்கு இந்த அடையாளமெல்லாம் தேவையில்ல, மனசுல ஒருதடவ பதிஞ்சிடுச்சு எனக்குக் கல்யாணமாகிடுச்சுன்னு, சாகற வரைக்கும் போகாது” என்றவனிடம்

“நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம்னு சொன்ன ஞாபகம் எனக்கு, இப்போ போறோமா இல்லையா?” என்று அவன் வார்த்தைகளைக் கொண்டு மடக்கினாள் மங்கை.

‘எனக்கேவா?’ என்று சவாலாய் அவளைப் பார்த்தவன்,

“பார்டா! நான் தாலி கட்டின மனைவி… நோ நோ …நான் கட்டின தாலியைக் கழட்டிக் கொடுத்த மனைவி என் பேச்சைக் கேட்கிறா” என்றவனின் நக்கல் நங்கையை சுட

“ஆமா, எனக்கும் புருஷன் பேச்சைக் கேட்கனும்னு ஆசை வந்துடுச்சு” என்று அவனைப் போல் நக்கலாய்ப் பேசிட, இளந்திரையன் அவளின் பதிலில் ஆச்சரியம் அடைந்தான்.

அவளோ வீட்டின் வெளியே நின்றிருந்தாள். உடனே அவனும் வெளியேற, அவள் வீட்டைப் பூட்ட

“கேப் புக் பண்ணப்போறேன், என்ன லேண்ட்மார்க் போட இந்த அட்ரஸுக்கு” என்று சொல்லி கேட்க அவள் சொல்லவும் அவன் வண்டி புக் செய்து விட்டு லிஃப்டில் நுழைய இவளும் அவனுடன் போனாள்.

இருவரும் கேப்காகக் காத்திருக்க, இளந்திரையன் வஞ்சியிடம்
“அப்பா நம்ம இரண்டு பேரும் வேலை வேற இடம் அதனால தனியா இருக்கோம்னு சொல்லி வச்சிருக்காராம், ஸோ அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோ” என்றவன் பின் அவனாகவே

“அதெல்லாம் நீ பிண்ணிடுவ இஞ்சி, குங்குமம் கூட பக்காவா இருக்கே” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன்

“ஆஹா! என்னடா புதுசா ஒரு சேஞ்ச் தெரியுதேன்னு பார்த்தேன் சேலைக் கட்டினா தாலி தெரியும், ஸோ சுடி அதுவும் காலர் சுடி” என்று அவன் வம்பு செய்ய, வஞ்சி பேசுவதற்குள் கேப் வந்துவிட உள்ளம் புகைந்தபடியே அவனுடன் போனாள் வஞ்சுளவல்லி.

ஸ்ரீனிவாசனின் வீட்டில் அவர்களுக்கு நல்ல உபசரிப்பு.
வீட்டிற்கு வந்தவுடன் இளந்திரையன் மனைவியிடம்

“இஞ்சி! எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லி சென்றுவிட

உடையை மாற்றலாம் என்று நினைத்தவள் அறைக்குள் புகுந்து முகம் கழுவ, நெற்றியில் இருந்த குங்குமம் வழிந்தோட, கண்கள் கலங்க அதனைத் துடைத்தவள் அப்படியே மெத்தையில் உட்கார்ந்து கொண்டாள்.

குங்குமம் பார்க்கவும் இளந்திரையனின் பேச்சுகள் காதில் ரீங்காரமிட, உள்ளமெல்லாம் அவன் சொல்லும் ‘தாலியைக் கழட்டிய மனைவி’ என்ற வார்த்தை அவளை வதைக்கவே செய்தது.

இளந்திரையன் வஞ்சிக்குத் திருமணமான பத்தே நாளில் வஞ்சியின் அம்மா இயற்கை எய்திவிட, ஊரில் சென்று அவரின் இறுதி சடங்கை செய்ய முடிவெடுத்த சௌந்தர்ராஜன் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். தங்கையின் புகுந்த வீட்டிலே எல்லா சடங்கும் நடக்க, அதுவரை வஞ்சியின் கழுத்தில் மின்னிய புது மஞ்சள் கயிறு யாரின் கவனத்தையும் கவரவில்லை. அவள் அன்று காலர் நெக் சுடிதார் அணிந்திருக்க, இறுதி சடங்கு முடித்து பெண்கள் எல்லாம் குளித்திருக்க வஞ்சிக்குத் திருமணம் ஆனதெல்லாம் அகத்தினில் பதியவே இல்லை.

அம்மாவிற்காக! அதுமட்டுமே அகம் நிறை உணர்வாய் இருக்க, இன்று அம்மா இல்லை என்பதனை தாங்கவே முடியவில்லை. கைக்கு அகப்பட்ட நைட்டியை மாற்றியவள் அறையில் அப்படியே முடங்கி உட்கார்ந்துவிட்டாள். நைட்டியைத் தாண்டி வெளியே அவளின் மாங்கல்யம் தெரிய, கமலிதான் முதலில் பார்த்தவள்

“என்ன அத்தாச்சி தாலி?” என்று அதிர்ச்சியில் கத்திவிட, அப்படியே அச்செய்திக் காட்டுத்தீயாய்ப் பரவ, சௌந்தர்ராஜன் வந்து விஷயம் சொல்லவும் வஞ்சியின் பெரியப்பா வீட்டினர் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை, தாய்க்கு அடுத்து தாய்மாமன்தான், அதுவும் அவரின் மகன் என்பதால் அவர்கள் அதனை எளிதாய் எடுக்க, மாதவிக்குத் தாளவே முடியவில்லை.

“நான் என்ன செத்தா போயிட்டேன்? யாரைக் கேட்டு என் புள்ளைக்கு இவளைக் கட்டி வச்சீங்க?” என்று கத்திக் கூச்சலிட்டு சண்டையிட்டார்.

இளந்திரையனையும் திட்டித் தீர்த்தார், அவரால் நம்பவே முடியவில்லை, தன் மகன் தன்னிடம் சொல்லாமல் திருமணம் முடிந்து வந்ததை ஏற்கவே மாட்டாமல் மறுகினார். அவனோ மூன்றாம் நாள் பால் தெளிக்கவுமே வேலையிருக்க சென்னை சென்றுவிட்டான். வஞ்சியை பதினாறாம் நாள் காரியம் முடியவும் சென்னைக்கு அழைத்துப்போய்விட்டார் சௌந்தர்ராஜன்.

கடைசி செமஸ்டரில் அவளின் கல்லூரியில் ஒரே மாதத்தில் பாடம் நடத்தி முடித்துவிட விடுமுறைதான். சௌந்தர்ராஜன் வந்து அவளை ஊருக்கு அழைத்துப் போய்விட்டார். இதற்கிடையே இளந்திரையன் சென்னை செல்லவுமே அவனுக்குப் புனேவில் வேலை மாற்றலாகிவிட வாரத்தில் ஒரு நாள் வஞ்சியிடம் பேசுவான், அதுவும் அவன் அப்பா சொல்லிவிட்டிருந்தார்.

“முன்னாடி மாதிரி இருக்காத, வல்லி கிட்ட அடிக்கடி பேசுடா, இனிமே நம்மதான் அவளுக்கு” என்று சொல்லி இருந்தார்.

ஆனாலும் இளந்திரையனுக்குக் கணவனாய்ப் பேச வரவில்லை, திருமணம் ஆகிவிட்டது என்பது அழுத்தமாய் அகத்தினில் பதிந்து போனது, இருந்தும் கணவன் என்ற நிலைக்குள் அவன் மன நிலை போகவில்லை.

மாமன் மகனாய் அவளிடம் படித்தாயா? உண்டாயா? என்று நான்கு கேள்வி கேட்பான், வஞ்சியாலும் அவனுடன் ஒட்ட முடியவில்லை. அவன் கணவனாக உரிமையாக எதாவது பேசியிருந்தால், ஆறுதல் சொல்லியிருந்தால் அகத்தினில் அவனுக்கென ஒரு இடம் இருந்திருக்கும். அதுவெல்லாம் இளந்திரையனுக்கு வரவில்லை.

மாதவியின் குத்தல் பேச்சையும் வல்லி பொறுத்து இருந்தாள். ஆனால் சில நாட்கள் கழித்து அவள் அவரின் மருமகளாய் இருப்பது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று புரிந்தது.

“யாருமில்லாத அனாதையைக் கட்டி வச்சிருக்காரே இந்த மனுஷனை சொல்லணும்”

“போற மகராசி அப்படியே போக கூடாதா? என் பையன் வாழ்க்கையைக் கெடுத்துட்டுப் போய்ட்டா”

“என் பையனை ஏமாத்தி கண்ணீர் விட்டே காரியம் சாதிச்சிட்டா உன் அம்மா, நோகாம உன்னை எங்க தலையில கட்டிட்டா” என்று ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவிதமாகப் பேசுவார்.

சௌந்தர்ராஜன் எதாவது திட்டிவிட்டால்

“நிம்மதியா மருமகளைக் கேள்வி கேட்க முடியல, உடனே இவர் வந்துடுவார், இதே நான் பார்த்துக் கட்டி வச்ச பொண்ணுன்னா என்னை மதிப்பா”

இப்படி வஞ்சி வாழ்க்கையில் அதுவரை வாங்காத வார்த்தைகளை வசவுகளை எல்லாம் நான்கு மாதத்தில் கேட்டிருக்க வாழ்க்கையின் மீது ஒரு விரக்தி வந்திருந்தது. கமலி மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருப்பாளோ? அடுத்த மாதம் செமெஸ்டர் இருக்க, அப்போதுதான் இளந்திரையன் ஊர் வந்து சேர்ந்தான்.

திருமணம் நடந்த காரணத்தினால் தானே இவ்வளவு பேச்சுகளை நான் கேட்கிறேன் என்ற கசந்த உணர்வு அவளினுள் ஆழப்பதிந்து போனது. தாயற்று, தந்தையற்று நிற்கும் அவள் உண்மையில் பற்றற்ற நிலைக்குத்தான் தள்ளப்பட்டாள். எட்டு மாதங்கள் கழித்து கணவன் வருகிறான், ஆனால் அவளிடம் எதிர்ப்பார்ப்பு என்ற ஒன்றே இல்லை.

“ஏன் டா இப்படி இவளை கட்டிக்கிட்டேன்னு கேட்டா, நான் என்ன பிடிச்சா கட்டிக்கிட்டேன்றான்” என்று அவள் காதுபட சொல்ல, அது உண்மைதான். இளந்திரையனை அவர் பேச அவனோ இருக்கும் எரிச்சலில்

“என்னமோ நான் அவளைப் பிடிச்சுக் கட்டின மாதிரி என்னைப் பேசுற, போய் உன் வீட்டுக்காரை கேளும்மா” என்று கத்திவிடுவான்.

ஊர் வந்தவனை கூட மனைவியுடன் தங்கவிடவில்லை மாதவி, அவர்கள் வீட்டில் இரு அறை மட்டுமே இருக்க, ஒன்றில் அப்பாவும் மகனும் தங்கிக்கொள்ள, பெண்கள் மூவரும் ஒரு அறை. மாதவி நினைத்திருந்தால் அவர்களை ஒரு அறையில் தங்க வைத்திருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை. சௌந்தர்ராஜன் கடைசிப் பரீட்சை எழுதட்டும் அதன்பின் இளாவுடன் வஞ்சியை அனுப்பிவிடலாம் என்று மனத்தில் எண்ணம் வைத்திருக்க, இளாவோ வேறு எண்ணத்தில் இருந்தான்.

✅ End of Episode 5
How did you feel about this episode?
❤️ 4 🔥 1 👏 2 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Radhi Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

இளா பிடிக்காமல் பந்தத்தில் 

இணைந்திருந்தாலும்
இணையை பிரிய எண்ணியத்தில்லை....
Saraswathi Reader 4 weeks ago

Nice

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top