Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 13

தூரம் 13

சித்ரஞ்சனுக்குப் பதவி உயர்வு கிடைத்த அன்று அவன் வீடு வர தாமதமானது. வசுந்த்ராவும் மகனும் முன்பே உறங்கியிருக்க, அவனிடம் இருக்கும் சாவி கொண்டு திறந்து வந்தான்.

சித்ரஞ்சன் உடைமாற்றி குளித்து வர, வசுந்த்ரா விழித்துவிட்டாள். உறக்கமும் விழிப்புமாக இருந்தவள் விழிகள் களைப்பை அப்பட்டமாக காட்டின.

“தூங்கு வசு”

“சாப்பிட்டீங்களா?”

“இல்லை.” என்றதும் வசுந்த்ரா எழுந்தாள்.

“நீ தூங்கு, நான் சாப்பிட்டுக்கிறேன்” என்று சித்ரஞ்சன் உடைமாற்றி அறையை விட்டு வெளியே போனான். வசுந்த்ராவுக்கு உறக்கம் களைந்துவிட கணவனுக்கு உணவு எடுத்து வைத்தாள்.

இட்லியை பிட்டு, “வேணுமா?” என்றபடி வசுந்த்ராவுக்கு ஊட்ட, மறுப்பாக தலையசைத்து நாற்காலியை இழுத்துப்போட்டு அவன் பக்கம் உட்கார்ந்தாள்.

சித்ரஞ்சன் இட்லியும் சட்னியும் சுபமென்று உண்டு உறங்கியிருக்கலாம். இல்லை வசுந்த்ராவிடம் பேசாமல் இருந்திருக்கலாம்.

எங்கே??

“ஆமா, எப்போ ஊருக்குப் போறோம்?”

“வீடு பார்க்கணுமே வசு, நான் இந்த வாரம் டியுட்டில ஜாய்ன் பண்ணிட்டு வீடு பார்த்து உங்களை கூப்பிட்டுக்கிறேன்” என்றதும் வசுந்த்ரா உடனே,

“ஏன் நம்ம வீட்டுக்கு என்ன? நம்ம வீட்ல இருந்து போய்ட்டு வரலாம்தானே?” என்றாள். வசுந்த்ரா இப்படி சொல்ல சித்தம் என்று முடித்திருக்கலாம் சித்தப்பா.

அதைவிட்டுவிட்டு, “உனக்கு ஓகேவா? நீ கிடாவெட்டு, திருவிழான்னு எதுக்குக் கூப்பிட்டாலும் வர மாட்டியே வசு.” என்று சித்ரஞ்சன் கேட்க,

“அப்போ சொன்னேன். இப்போ எப்படியும் சக்தி நம்ம வீட்டு மாப்பிள்ளையாகிடுவான், இன்னும் ஏன் நான் கோவத்தைப் பிடிச்சிட்டு இருக்கணும். பகத்’க்கும் சந்தோஷமா இருக்கும்”

“வசு, வீணா கனவு காணாத. அண்ணா, அப்பா எல்லாம் கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாங்க.”

“ஏன் அவங்களாம் ஒத்துக்கிட்டுத்தான் சர் என்னை கல்யாணம் பண்ணினீங்களோ?” என்றதும் சித்ரஞ்சனுக்குக் கோபம் வந்தது.

“என் மேல உனக்குக் கோவம் இருக்கட்டும். ஆனா சரோ நம்ம பொண்ணு வசு”

“புரியல, சரோ நம்ம பொண்ணுன்னா அப்போ சக்தி யாரு?”

“வசு, நான் அந்த அர்த்தத்தில சொல்லல, சக்தி..” என்ற சித்ரஞ்சனை வசுந்த்ரா பேச விடவில்லை.

“உங்க அண்ணன் பசங்கள நான் வேறயா பார்க்கல. உங்களால என் அண்ணன் பையனை அப்படி பார்க்க முடியல இல்லை. வீட்ல சண்டையிருந்தாலும் அண்ணா உங்களுக்கு ப்ரோபஸரா இருந்தப்போ நல்லவிதமா நடந்தான், போஸ்டிங் வாங்கினப்ப என் ஸ்டூடண்ட்’ன்னு சந்தோஷப்பட்டான். அவன் பையனை நீங்க இப்படி பேசுறீங்க. வெரி குட்!” என்று நக்கலாக சொன்ன வசுந்த்ரா,

“சக்திக்குக் காதலிக்கிற ஆசை மட்டுமில்ல, அதுக்கு தைரியமுமிருக்கு. இல்லைன்னா உங்ககிட்ட அப்படி பேசியிருக்க மாட்டான். எல்லாத்தையும் மன்னிச்சிட்டு இருக்கேன்றதால சாருக்கு மனசுல ஹீரோ’ன்னு நினைப்பா? போலிஸ் செய்ற வேலையா செஞ்சீங்க, பொறுக்கி” என்று வசுந்த்ரா பொங்கிவிட்டாள்.

பொறுக்கி என்றதும் சித்தப்பாவுக்குப் பொறுக்கவில்லை. எரிமலை எழுந்துவிட,

வசுந்த்ராவோ, “என்ன சாப்பாட்டுல எழற பழக்கம். இப்போ இட்லி மிச்சம் வச்சா காலையில இட்லி உப்புமாதான். இந்த சீன்லாம் என்கிட்ட வேண்டாம்” என்று திட்டினாள்.

“அம்மாடி! நான் காலையில உப்புமாவே சாப்பிட்டுக்கிறேன். உன் அண்ணன் மகனை பேசினது தப்புதான்!” என்று கும்பிடு போட்டு போனான் சித்ரஞ்சன்.

‘அவனுக்கு கல்யாணம் நடக்குதோ இல்லையோ இப்படியே போனா எனக்கு டைவர்ஸ்தான்’ என்ற சித்ரஞ்சனுக்கு உறக்கம் வரவில்லை. மீண்டும் ஒரு சண்டை. மீண்டும் மீண்டும் சண்டையா என்று சலித்தது இருவருக்கும். வசுந்த்ராவும் பழையதை பேசாதே என்று மனதை அடக்கிவைத்தாலும் சித்ரஞ்சனின் பேச்சு அதனை தூண்டிவிடுவதாகவே இருந்தது.

*************

சக்தி பேசிவிட்டு செல்லவும் சித்ரஞ்சன் இதையெல்லாம் நினைத்து பெருமூச்சுவிட்டான். சக்தியின் கோப்புகளைப் பார்த்தவனுக்கு நிச்சயம் சந்தோஷமாக இருந்தது. ஒரு தற்கொலை வழக்கினை, கொலை என்று கண்டு அதில் பெரிய ஆட்கள் தலையீடு இருந்தும் சாமர்த்தியமாக அந்த வழக்கை முடித்திருக்கிறான். அதனால்தான் இதற்கு முன் இங்கு இருந்த எஸ்.பி, ஏடி.எஸ்.பி எல்லாம் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

ஊருக்கு வந்து இன்னும் மனைவியிடம் பேசவில்லை. வசுந்த்ராவும் பேசவில்லை என்று வருத்தமிருந்தாலும், மனைவியிடம் அவன் மான ரோஷம் பார்ப்பதில்லை.

“சொல்லுங்க” என்று சித்ரஞ்சனின் அழைப்பு ஏற்று வசுந்த்ரா சொல்ல,

“வசு, டியுட்டில ஜாயின் பண்ணிட்டேன்”

“ஓகே”

“நம்ம சக்தியும் இங்கதான் இருக்கான்.”

“நம்ம சக்தியா?”

“நம்ம சக்திதான்..” சித்ரஞ்சன் அழுத்தி சொன்னான்.

“அப்புறம்?”

“ப்ரியலண்ட் பாய். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் தான் போல..” சித்ரஞ்சன் சாதாரணமாக சொல்லிவிட,

“ம்ம், ஊருக்குப் போனதும் சுதந்திர விலாசம் வாசம் ரொம்ப வீசுதே…” வசுந்த்ரா நக்கலாக சொன்னாள்.

“அம்மாடி! ப்ளீஸ்! நான் கேசுவலாதான் சொன்னேன். சக்திக்கு நல்ல ரெகார்ட் இருக்கு.”

“அதுக்கு?”

“இங்க பாரு வசு, சக்திக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? இங்க வந்ததும் அவன் ரெகார்ட் பார்த்ததும் நம்ம பையன்னாச்சேன்னு ஒரு சந்தோஷம், அதை உங்கூட ஷேர் பண்ணினா தப்பா?”

“நிஜமா சந்தோஷப்பட்டா சந்தோஷம்தான்.”

இப்படி பேசினால் என்ன பதில் சொல்வான்? சித்ரஞ்சனுக்கு எப்படியோ தன் ஆசையை, காதலை காப்பாற்றிய மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நிச்சயம் அன்று திலகரிடமோ லட்சுமணனிடமோ பேசும் தைரியம் அவனுக்கில்லை. அவனுக்கு எளிதாக அணுக முடிந்தது வசுந்த்ராவைத்தான். வசுந்த்ராவின் குத்தல் பேச்சு, வருத்தம் எல்லாம் அவனை பாதிக்கத்தான் செய்கின்றன. முழுதாக சந்தோஷப்பட முடியவில்லை.

உடனிருப்பது காதலா? இல்லை உள்ளம் உணர்தல் காதலா? உடனிருப்பது காதலென்றால் சித்ரஞ்சன் ஜெய்த்துவிட்டான். உள்ளம் உணர்தல் காதலென்றால் வசுந்த்ராவினுடையதே காதல்! அவன் அப்படித்தான் என்ற உணர்தலோடு வாழ்கிறாள்.

அன்றைய அவன் செயலில் இன்றளவும் கோபமிருந்தாலும், அதை தாண்டி அவனை பார்க்க ஒரு மனமிருந்தது, அந்த மனத்தில் இன்று காதல் நிறைய இருக்கிறது! மன்னித்து அனுசரித்து அரவணைக்கின்ற காதல்! அது அவள் காதல்!

சித்ரஞ்சன் பதில் பேசாமல் இருந்தான். அவனுக்கும் நல்லவிதமாக திருமணம் முடிந்திருக்கலாமே என்ற ஏக்கமில்லாமலில்லை.

“என்ன பிஸீயா இருக்கீங்களா இல்லை யோசனையா?”

“ம்ம், உன்னை எப்படி கரெக்ட் பண்றதுனு யோசிக்கிறேன்” என்றதும்,

“டூ லேட்” என்ற வசுந்த்ராவின் முகத்தில் புன்னகை. வசுந்த்ராவால் சித்ரஞ்சனை இப்போது நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. அவன் செயலுக்கு வருந்துகிறான் என்று தெரியும், என்ன காட்டிக்கொள்ள மாட்டான். அதுவும் சரோஜினி விஷயம் தெரிந்ததிலிருந்து அவன் எப்போதும் கவலையோடே சுற்றுகிறான்.

சித்ரஞ்சனுக்கு வருத்தமிருந்தது, தன்னால் தன் மனைவி எல்லா உறவுகளையும் இழந்து நிற்கிறாள். அப்போது சாதனையாக மட்டுமே தெரிந்தது, இப்போதெல்லாம் வேதனை தந்தது. கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கலாம் என்று நினைக்காது இருக்க முடியவில்லை. அதுவும் சக்தி எல்லாம் கொஞ்சம் கூட அசராமல் தன்னிடம் பேசியது அப்போது கோபம் தந்தாலும், இப்போது நினைத்தால் பொறாமையாக இருந்தது. காதலே தவறென்று சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறை அவன்.

காதலை சொல்லி வசுந்த்ராவை காத்திருந்து திருமணம் முடித்திருந்தால், இன்று இப்படி வருந்த தேவையில்லை என்று காலம் கடந்து யோசித்தான்.

“ரஞ்சன் என்ன பேச்சை காணும்?” வசுந்த்ரா போனில் கத்த, எஸ்.பி அழைப்பதாக சித்ரஞ்சனை வந்தழைத்தனர்.

“எஸ்.பி கூப்பிடுறார் வசும்மா. அப்புறம் பேசுறேன்” என்று சித்ரஞ்சன் எஸ்.பி’யை சந்திக்க போனான்.

இங்கே சக்திவேலை சித்ரஞ்சன் சிலாகித்து மனைவியிடம் பேசியிருக்க, சக்தியோ நண்பனுக்கு அழைத்து,

“டேய் உன் சித்தப்பா மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்கார்? ஒரு பத்து நிமிஷம் லேட்டா போய்ட்டேன். என்னை திட்டிட்டார் மச்சான்” என்றான் கடுப்பாக.

“என்னது உன்னை திட்டினாரா?”

“அவர்தான் ஏடி.எஸ்.பி”

“ஓஹ், நீ அவருக்கு ரிப்போர்ட் பண்ணுமா?”

“ம்ம், கெட் அவுட்டாம் கெட் அவுட்! பெர்சனல் வெஞ்சன்ஸ் காட்டுறார்டா”

சரோஜினியாக இருந்தால் ‘நீ என்ன பேசின சக்தி?’ என்று கேட்டிருப்பாள். லாலா நட்பென்றால் கற்பென்று இருப்பவன். அவனெல்லாம் சாட்சாத் சசிகுமார் கட்சி. நண்பன் குத்தினால் சொல்லாதவர்கள், நண்பனை குத்தினால் சும்மா இருப்பானா?

“நீ ஏன் மாப்ள பீல் பண்ற? அவர் செஞ்சதுக்கு அவரெல்லாம் ஏடிஎஸ்பியா இருக்கக் கூடாது.” என்று பேச்சுவாக்கில் சொல்லிவிட்டான்.

“என்னடா சொல்ற? என்ன செஞ்சார்?” சக்தி நெற்றியை நீவியபடி கேட்க லாலா சித்தி சித்தப்பா பேசியதை போட்டுடைத்தான். சக்திக்கு சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை.

“சக்தி!!” அதிர்ச்சியில் இருந்த நண்பனை லாலா சத்தமாக அழைக்க,

“லாலா, அரைகுறையா கேட்டு உளறாதடா. அத்த எப்படி பிடிக்காதவரை கட்டிக்கும்? நிஜமா உன் சித்தப்பனுக்கு அவ்வளவு தைரியமா? இல்லை எங்கத்த பயந்ததா? சான்ஸே இல்ல. எங்கத்தை ஏண்டா சொல்லாம இருந்திருக்கும்? எங்க தாத்தா கிட்ட சொல்லியிருந்தா உன் சித்தப்பா தலை உருண்டிருக்கும். நானே மண்டையை உடைச்சிருப்பேன்” சக்தி கோபத்தில் பொரிந்து தள்ள, லாலா ‘அய்யயோ’ என்று நினைத்தான்.

“சக்தி! நீ டென்ஷன் ஆகாத” என்று சமாதானம் செய்ய, சக்திக்கு இன்னும் கேட்டதை ஏற்கமுடியவில்லை.

“ஒருவேளை உங்க தாத்தா கோவத்துல எதாவது பண்ணிடுவார்னு சித்தி சொல்லாம இருந்திருக்கலாம்டா. இப்பவாச்சும் ஏதோ ரெண்டு பேரும் லவ் பண்ணியிருக்காங்கன்னு உங்க வீட்ல அப்படியே ஒதுக்கிட்டாங்க, இல்லைன்னா பெரிய பிரச்சனை ஆகியிருக்கும்”

“ஆனா என்னடா? செய்றதை செஞ்சுட்டு உன் சித்தப்பனுக்கு என்ன அதப்பு? அந்த ஆள் செஞ்ச வேலைக்கு சல்யூட் வேற அடிச்சி வச்சிருக்கேன்.” சக்தியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

லாலாவின் காது வலிக்கும் அளவு சக்தி பேசினான்.

“ஏண்டா இப்போதான் உனக்கு சொல்லத் தோணுச்சா? என்ன உன் சித்தப்பனை காப்பாத்தறியா?”

“ஏன் மாப்ள அப்படி நினைச்சிருந்தா நான் சொல்லியிருப்பேனா? இது நானே அவங்களுக்குத் தெரியாம கேட்ட விஷயம். என்ன காரணமா இருந்தாலும் சித்தி சித்தப்பாவை விட்டுக்கொடுக்காம இத்தன வருஷமா வாழ்றாங்க. இப்பவும் அவங்க சொல்லல, அதான் நான் சொல்லாம இருந்தேன். இப்போ அவர் என்னமோ ஒழுங்கு மாதிரி உன்னை பேசிட்டாரே அதான் சொல்லிட்டேன். இல்லைனாலும் என்னால உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது டா.” என்று லாலா சொல்ல, சக்தி தலையில் கை வைத்தான்.

“லாலாஆஆஆஅ!” என்று பாசமாய் விளித்தான் சக்தி.

“என்னடா? குழையுற”

“இப்போ நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாம மறைச்சிட்டா நீ என்ன பண்ணுவ?”

“சொல்லணும்னா நீயே சொல்லியிருப்ப மாப்ள” என்று லாலா புரிதலோடு சொல்ல, சக்திக்கு ஆறுதலாக ஆனந்தமாக இருந்தது.

“மச்சான்! இவ்வளவு நல்லவனா இருக்கியே டா? உனக்கு எப்படிடா அப்படி ஒரு சித்தப்பு, ரொம்ப தப்பு” என்று சக்தி புலம்ப

“நீ இப்போ ஊரை சுத்தாம என்ன விஷயம் சொல்ல வந்த சொல்லு?”

“அது நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அந்த பொண்ணும் என்னை லவ் பண்றா”

“அடப்பாவி! என்கூட தானே டா காலேஜ்ல சுத்தின, எப்போடா லவ் பண்ணின? டேய் யார்டா அந்த புள்ள?”

“அது.. நாங்க நேர்லயே வரோம்.”

“என்னடா எங்க சித்தப்பா மாதிரி எதாவது பண்ண போறியா? என்னை சாட்சி கையெழுத்துப் போட கூப்பிடுறியா?” லாலா கிண்டலாகக் கேட்க,

“மச்சான், நீ நம்ம குமாரண்ணன் கடைக்கு வந்துடுடா. நான் அவளோட வரேன்” என்றான் சக்தி.

“யாருனு சொல்ல மாட்டேங்கிறடா” என்று லாலா அலுத்துக்கொண்டான்.

“மச்சான் பார்க்கிறப்ப ஷாக் ஆவியா சர்ப்ப்ரைஸ் ஆவியா டென்ஷன் ஆவியா தெரியல. லாலா! லாலா லஜபதி ராய்’ மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கணும் டா. புரிஞ்சதா?” சக்தி நண்பனை தயார்ப்படுத்தியவன் சரோஜினியிடம்,

“என்னோட பெஸ்ட் ப்ரண்ட் ஒருத்தன் இருக்கான், உனக்கு இன்ட்ரோ கொடுக்கணும்.” என்றதும் அவளும் சக்தி சொன்ன நேரத்துக்கு அவனை சந்திக்க போனாள்.

லாலா சக்தியோடு டீ குடித்தவன், “ஏண்டா மாப்ள, இன்னும் உன் ஆளை காணும். யார்டா அது?” என்று ஆவலாகக் கேட்டவன் சரோஜினி கடைப்பக்கம் வரவும்,

“அய்யயோ இந்த குந்தாணி எங்கடா இங்க வரா, உன்னையும் என்னையும் சேர்த்து பார்த்தா அவ்வளவுதான். திலகர் என்னை தள்ளி வச்சிடுவார்.” லாலா புலம்பினான்.

“அப்படி பார்த்தா உன் சித்தப்பனை எல்லாம் இந்தியாவுக்குள்ளேயே சேர்க்க கூடாது” என்ற சக்தி,

“மச்சான், உன் அன்பு தங்கை சரோஜினிதான் என் ஆசை காதலி” என்று சொல்ல, லாலா அப்படியே பேச்சற்று சில கணங்கள் நின்றான். சரோஜினி அண்ணன் நிற்பதை பார்த்தவள் போகலாமா வேண்டாமா என்று யோசிக்க சக்தியும் அருகே நிற்கவும் யோசனையோடு சென்றாள்.

“நீ எங்க இங்க?” என்று அவனை பார்க்க, சக்தியோ,

“இதான் லாலா! என்னோட பெஸ்ட் ப்ரண்ட்” என்று லாலாவின் தோளில் கை போட, லாலா சக்தியை முறைத்து கையை உதறி தள்ளி நின்றான்.

சரோஜினியோ எதுவும் புரியாமல் விழித்தாள். அவள் அதிர்ச்சியில் நிற்க, சக்தியோ அதனை கவனிக்காது லாலாவை சமாதானம் செய்தான்.

“ஏண்டா மாப்ள உனக்கு ஊருல வேற பொண்ணே கிடைக்கலயா? இந்த குந்தாணிதான் கிடைச்சாளா?” என்று லாலா கேட்க, சரோஜினி அண்ணனை முறைத்தாள். சக்திவேலோ லாலா என்ன சொல்வானோ என்று அவ்வளவு நேரம் பாரம் சுமந்தவன் வாய்விட்டு சிரிக்க, சரோஜினிக்கு சொல்லாமலே புரிந்தது, இவர்கள் இருவரும் நண்பர்களென்று.

சக்தி சிரிக்க லாலா சரோஜினி இருவரும் அவனை முறைத்தனர்.

“டேய் சிரிக்காதடா! உன் அழகுக்கும் அறிவுக்கும் எவ்வளவு பொண்ணுங்க கிடைப்பாங்க. இவ சரியான வாயாடிடா. எந்த அப்பாவி கட்டிக்க போறானோன்னு கவலைப்பட்டா கடைசியில் என் நண்பன் உனக்கா இந்த நிலைமை?” லாலா பொங்கினான்.

“விடுடா, நம்ம சரோதானே?” என்று சக்தி லாலாவிடம் புன்னகையோடு சொல்ல, சரோஜினியின் மனம் சக்திக்கு சத்தியமாக அந்த நேரம் விளங்கவில்லை.

நண்பன் என்ன நினைப்பான் என்று கவலையில் இருந்தவனுக்கு, இப்போது பெரிய ஆசுவாசம் கிட்ட சரோஜினியோ,

“அப்படியொன்னும் நீ கஷ்டப்பட்டு என்னை காதலிக்க வேண்டாம்” என்று கோபமாக சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

நட்பு நங்கூரமிட்டிருக்க காதல் காத்து வாங்கியது.

✅ End of Episode 13
How did you feel about this episode?
❤️ 1 😂 1 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 2 weeks ago

Very nice.

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top