Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 20

தூரம் 20

“டேய்!” என்று வசுந்த்ரா முறைக்க,

“நிஜமா அத்த!” என்ற சக்தியின் பார்வை மொத்தமும் சரோஜினியிடம் குவிந்தது.

“கொஞ்ச நேரம் வா சரோ உன்னோட பேசணும். ஹலோ சின்ன மாமியார் கொஞ்சம் பெர்மிஷன் தரீங்களா?” என்று வசுந்த்ராவை வேறு வம்பு செய்தான்.

“போய் பேசிட்டு வா சரோ” என்று வசுந்த்ராவும் சொல்ல,

“என் செல்ல அத்த” என்று கொஞ்சலாகச் சொல்லிவிட்டு சக்தி சென்றான். கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புதிதாய்க் கோவில் எழுப்பப்பட்டிருக்க, பழைய கோவில் இன்னும் இடிக்கப்படாது பக்கத்திலேயே இருந்தது. பழைய கோவிலின் சுற்றுப்புறத்திலிருந்த சிறிய சிமெண்ட் சுவரில் உட்கார்ந்த சக்தி,

“என்னடி உன் பிரச்சனை?” என்றான் எடுத்ததுமே.

சக்தியும் நேற்று குறுஞ்செய்தி அனுப்பினான். சரோஜினியிடம் பதிலில்லை. உண்மையில் சரோவுக்கு ஏதோ இழந்த உணர்வு. என்ன செய்து அதனை ஈடுகட்ட என்று தெரியவில்லை. மனதே சரியில்லை, அதனால்தான் வசுந்த்ரா கோவில் செல்கிறேன் என்றதும் உடன் வந்தாள்.

“வீட்லயும் என்னை லவ் பண்றேனு சொல்லிட்ட, நானும் வந்து பேசிட்டேன். அப்புறம் ஏன் எனக்கு ரிப்ளை பண்ண மாட்டேங்கிற, வேலையெல்லாம் விட்டு உன் பின்னாடி சுத்தணுமா நான்?” என்றான் கோபமாக.

“நான் ஒன்னும் உன்னை சுத்த சொல்லல” சரோஜினியும் கோபமாகவே சொன்னாள்.

“என்ன பண்றது மனசு கேட்கலயே.. சும்மா இருந்தவனை லவ் பண்றேன் சொல்லி இப்போ டென்ஷன் பண்ற. அப்படியென்ன பெரிய விஷயம் நான் மறைச்சிட்டேன். உன்கிட்ட சொல்லாத மாதிரி அவன்கிட்டயும் சொல்லல, அவன் அதை சீரியசாவே எடுக்கல.. நீ அதுக்காகவா இன்னும் என்கிட்ட பேசாம இருக்க?” என்றான் ஆயாசமாக.

“இதான் சக்தி பிரச்சனை. நீ என்னை சீரியசா எடுக்க மாட்டேங்கிற. நான் பண்றது சில்லியாவே இருக்கட்டுமே, ஏன் அப்படி இருக்கேனு யோசிக்காம லாலா கூட கம்பேர் பண்ற..அதான் எனக்குப் பிடிக்கல” என்றாள் சரோஜினியும் வருத்தத்தோடு.

“அப்பா அடிச்சிட்டார் சொன்னதும் நீ எனக்காக வந்த பார்த்தியா? அப்ப உன்னை ரொம்பப் பிடிச்சது சக்தி. ஆனாலும் எனக்கு உன் மேல கோவம் போகல.. சக்திக்கு நாந்தானே முக்கியமா இருக்கணும்னு தோணுது. அவன் உன் ப்ரண்டா இருந்தாலும் என் அண்ணனா இருந்தாலும் கூட நான்தான் ஃப்ரஸ்ட்டா இருக்கணும்னு நினைக்கிறேன். அவன் பேசும்போது நீ அமைதியா இருந்ததானே? அது எனக்கு ஹர்ட் ஆச்சுனு சொன்னப்பவும் என்னை திட்டின.. ஆனா எனக்காக வந்து வீட்ல சண்டை போட்ட. எனக்குக் குழப்பமா இருக்கு”

“என்ன குழப்பம் உனக்கு? நான் வேணுமா வேண்டாமா?” என்று சக்தியும் எரிச்சலாகக் கேட்டான். இரவெல்லாம் கண்விழித்து சரோவைப்பார்க்க வந்தவனுக்கு அவள் பேச்சு கோபம் கொடுக்க, தூக்கமின்மை கோபத்தைத் தூக்கலாகவே கொடுத்து தூபமிட்டது.

சரோஜினியும் யோசிக்கவில்லை.

“ஆமா” என்றாள் உடனே. சக்தி சரோஜினியை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“எங்க வீட்ல லாலாவுக்கு இருக்க ஃபீரிடம் எனக்குக் கிடையாது சக்தி. அது உனக்கும் நல்லா தெரியும். எனக்கு எங்கண்ணனை பிடிக்கும்தான், அவனுக்கும் அப்படித்தான்! அவனும் நானும் மாறி மாறி கலாய்ச்சிப்போம், அதெல்லாம் எங்களுக்குள்ள. ஆனா உன் முன்னாடி அவன் என்னை பேசினப்போ அந்த தடிமாடு மேலயும் எனக்குக் கோவம், உன் மேலயும் எனக்குக் கோவம்.”

“ஹே! அவன் உடனே உன்னை சமாதானப்படுத்த தானே வந்தான்.”

“டேய் பரதேசி! இதான் என் பிரச்சனை. உன் ப்ரண்ட் உனக்கு உசத்திதாண்டா. அதுக்காக நான் சொல்றதைக் கேட்க கூட மாட்டியா? போலீஸ்தானே நீ? வக்கீலாட்டம் டிபெண்ட் பண்ண வர” என்றாள் சரோஜினி கடுப்பாக. இருகைகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கோபத்தைக் கட்டுப்படுத்தினாள்.

சக்தி ஒரு நிமிடம் சரோஜினியின் ஆவேசத்தில் திகைத்தான். அதன்பின் எதையோ நினைத்தவனுக்குச் சிரிப்பு வர முயன்று அடக்கினான்.

“எதுக்கு சிரிக்கிற?”

“நீ முழுசா சொல்லி முடி. நான் அப்புறம் சொல்றேன்”

“ஒழுங்கா சொல்லிடுடா” என்று சரோஜினி பல்லைக் கடிக்க,

“இல்ல இதுவரைக்கும் எப்படி அஞ்சம்மா பேத்தி இவ்வளவு அமைதியா இருக்கானு நானும் யோசிச்சிருக்கேன். இன்னிக்கு டவுட் க்ளீயர்.” என்று சக்திவேல் சத்தியம் பேச சரோஜினி அவனை நக்கலாகப் பார்த்தாள்.

“நான் அஞ்சம்மா பேத்தினு இன்னிக்குத்தான் தெரியுதா உனக்கு? அஞ்சம்மா பேரனோட மட்டும் ப்ரண்ட்ஷிப் வச்சுக்கத் தெரியுது” என்றபடி அவன் உட்கார்ந்திருந்த திட்டில் அருகே அமர்ந்தாள்.

“நம்ம சென்னையில இருந்தப்போ வெளியே போகும்போதெல்லாம் நீ என்னை ரொம்ப மரியாதையா நடத்துவ. எனக்கு அந்த சக்தியை ரொம்பப் பிடிக்கும். பட் உன் ப்ரண்ட் என்னை பேசுறப்ப பேசாம இருக்க? ஏன்? எனக்கு ஹர்ட் ஆகாதா? ஒருத்தரைப் பத்தி காமெடி பண்றப்ப அவங்களை ஹர்ட் பண்ணக்கூடாது. நக்கல், நய்யாண்டி எல்லாம் உனக்கும் அவனுக்கும்தான் வருமா?

“அஞ்சு வருஷமா நம்ம ரெண்டு பேரும் க்ளோஸ். கேட்டா நீயும் அவனும் அஞ்சாங்க்ளாஸ்’ல இருந்து க்ளோஸ்னு சொல்லுவீங்க. இதுல உங்கம்மா முக்கியமா நான் முக்கியமான்னு நான் பஞ்சாயத்து வைப்பேன்’னு சொல்ற.. என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க நீ? அம்மா மகனை பிரிக்கற பொண்ணு மாதிரி தெரியுதா உனக்கு? இவ்வளவு பேசிட்டு ஹீரோ மாதிரி வந்து எங்க வீட்ல பேசுற. அப்போ எனக்குக் குழப்பமா தானே இருக்கும்?”

“நீ ஒரே பையன் சக்தி, உனக்கு என் பீலிங்க்ஸ் புரியாது. உங்க வீட்ல நீதான் உன் தாத்தா, அப்பா, அம்மான்னு எல்லாருக்கும் முக்கியம். எங்க வீட்ல அப்படியில்லை, நாங்க மூணு பேர். இதுல பகத்’த விடு, அவன் சின்னப்பையன். சில விஷயத்துல எங்கண்ணனை பேசுவாங்க, சில விஷயத்துல என்னை பேசுவாங்க. அந்த எரும மாடு நைட் பத்து மணி வரைக்கும் ப்ரண்ட்ஸோட அரட்டை அடிக்கும்.”

“அதையெல்லாம் எங்கம்மா விட்டுடுவாங்க, சில நேரம் நீ இன்னொரு வீட்டுக்குப் போறவனு அதையே பேசுவாங்க. இப்படி எனக்குன்னு ஒரு முக்கியத்துவம் நான் எதிர்ப்பார்ப்பேன், அதில்லாம போற நேரம் எனக்குக் கஷ்டமா இருக்கும். இத்தனை வருஷத்துல நான் எந்த விஷயத்துக்காவது இவ்வளவு சண்டை போட்டிருக்கேனா யோசிச்சுப் பாரு சக்தி. அன்னிக்கு நீ பேசினப்போ எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? நீயும் என்னை செகண்டரியா நடத்தினா என்னால தாங்க முடியாது சக்தி” சரோஜினியின் குரல் கம்மியிருந்தது.

சக்தி அதுவரை ‘என்னடா இவ?’ என்ற உணர்வில் சரோஜினியின் பேச்சைக் கேட்டவனுக்கும் இப்போது மனம் குத்தியது.

“இதுல வேற லாலாவோட தங்கச்சின்னுதான் என்னோட பழகினேன் சொல்ற. அப்போ என்னோட பாசம், நான் உனக்கு ஸ்பெஷல் இல்லையா? என் காதலை நான் லாலாவோட தங்கச்சின்னு அக்செப்ட் பண்ணினியா?”

“அடியே! லாலா தங்கச்சின்னு பழகினேன், பேசினேன். அதுக்காக எல்லாம் லவ் பண்ணுவேனா?” என்று சக்தி அவசரமாகப் பதில் சொன்னான்.

“இப்படி நீ அன்னிக்குப் பதில் சொல்லல, நீ உண்மை சொன்னா எனக்குக் கசக்கும் சொன்ன” என்று சரோஜினி சொல்ல,

“ஏட்டி! இந்த வல்லாரை கீரை சாப்பிடுவியா நீ? நீ இப்படி லிஸ்ட் போட்டு சொல்றதெல்லாம் நான் சொன்னேன்னா எனக்கே ஞாபகமில்லடி. ஏதோ கோவத்துல பேசியிருப்பேன், நானெல்லாம் அப்பவே மறந்திருவேன்.” என்றான் சக்திவேல் சோகமாக.

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க சித்ரஞ்சன் கிடைத்த நேரத்தில் மனைவியின் குலதெய்வ கோவிலுக்கு வந்துவிட்டான். சக்தியும் சரோஜினியும் அவர்கள் பேச்சில் வந்தவனை கவனிக்கவில்லை. சித்ரஞ்சன் நேராக புதிய கோவிலுக்குச் சென்றான்.

வசுந்த்ரா கண்கள் கணவனை கண்டதும் பிரகாசிக்க,

“பிஸியா இருக்கேன் சொன்னீங்க” என்று கேட்டாள்.

“டூ அவர்ஸ்’ல வந்துடுறேன் சொல்லிட்டு வந்தேன் வசு. ரொம்ப வருஷம் கழிச்சு நீ போகணும்னு ஆசைப்பட்ட, நான் வராம இருந்தா எனக்குக் கஷ்டமா இருக்கும்ல” என்று சித்ரஞ்சன் சொல்ல,

“பின்னே இருக்காதா? உங்க பேவரைட் இடமாச்சே” என்றாள் வசுந்த்ரா கிண்டலாக.

“நான் சாமி கும்பிட வந்திருக்கேன்” என்றபடி சித்ரஞ்சன் முன்னே நடக்க, வசுந்த்ராவும் சிரித்தபடி அவன் பின் போனாள்.

சரோஜினி மனத்தில் உள்ளதை எல்லாம் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள். கண்கள் லேசாக கலங்கியிருக்க எதிரே தெரிந்த வயல்வெளிகளில் அவள் பார்வை நிலைத்திருந்தது.

சக்திக்கு சரோஜினி பேசியதும் தன் தவறு புரிந்தது. அவள் சொல்வது போல் இத்தனை வருடத்தில் எதற்குமே இத்தனை நாட்கள் பேசாமல் இருந்ததில்லை, சண்டையிட்டதில்லை.

சக்திக்கே சில நேரம் ஆச்சரியமாக இருக்கும்.

“ஏன் சரோ என் மாமனார் உன்னை எங்காச்சும் ஆர்டர் கொடுத்து செஞ்சாரா? நீ என்னடி நான் மீட் பண்ண வரன்னு சொல்லிட்டு வராம இருந்தாலும் சண்டை போட மாட்டேங்கிற. லேட்டா வந்தாலும் சண்டை போட மாட்டேங்கிற.. இப்படியே இருடி என் தங்கமே!” என்பான் கிண்டலாக.

வெளியே விளையாட்டாகப் பேசினாலும் உள்ளுக்குள் உவகைத் துள்ளும். பூரிப்பாக இருக்கும், இவள் என்னை இத்தனை நேசிக்கிறாளே என்று கொண்டாட்டம் கொள்ளும் மனம்.

சரோஜினியைப் பொருத்தவரையில் இருக்கும் நேரம் அவனோடு சண்டைப்போட்டு என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம். அதற்காக சண்டையிடாமல் இருந்ததில்லை. இது போன்ற விஷயத்தில் போட மாட்டாள்.

அப்படியிருந்த சரோஜினி லாலா விஷயத்தில், அவன் நினைத்ததை விட அதிகமாக எதிர்வினையாற்றவும் சக்தியும் கோபம் கொண்டான்.

“சரோ…சரோசாஆஆ” என்று மெல்ல அழைத்தான் சக்திவேல்.

“சரோஜினி வாஞ்சிநாதன்” சரோஜினி அழுத்தமாக சொல்ல,

“ஆஹ்ன்! வாஞ்சிநாதன்கிட்ட நல்லா வாங்கி கட்டிட்டும் பேச்சை பாரு” சக்தி கடுப்பாக சொன்னான்.

“உன்னை லவ் பண்றேனு சொன்னதாலதான் எங்கப்பா அடிச்சார். இல்லைனா என்னையெல்லாம் ரொம்ப வருஷமா அடிச்சதே இல்ல”

“இன்னும் கூட உங்கப்பா ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்.” என்றான் விளையாட்டாக.

சரோஜினி முறைக்க, “சும்மா சொன்னேன், இனிமே உன் மேல கை வச்சா மாமனார் எல்லாம் பார்க்க மாட்டேன். மாமியார் வீட்டுக்கு அனுப்பிடுவேன்” என்றதும் சரோஜினியின் விழிகள் வியப்பில் விரிந்தன.

அவள் பாவனை சக்தியைக் கவர்ந்தது.

“சாரி சரோ” என்றான். சரோஜினி பதில் பேசவில்லை.

“லாலாவும் நானும் பேசினது உன்னை ஹர்ட் பண்ணினதுக்கு சாரி. நாங்க பசங்களுக்குள்ள பேசுற மாதிரி கேஸுவலா பேசினோம், அண்ட் அது லாலாவைத் தவிர யாரா இருந்திருந்தாலும் நான் பேசட்டும்னு அமைதியா இருந்திருக்க மாட்டேன். அது கூட அவன் உன் அண்ணன்’றதலாதான். உங்கப்பா உன்னை அடிச்சார் தெரிஞ்சதும் அவனோட சண்டை போட்டு பேசுறதில்லை தெரியுமா?” என்றதும் சரோஜினி கண்கள் மின்ன,

“நிஜமாவா?” என்றாள். சக்தி உடனே அதிருப்தியான பார்வையோடு,

“ஏண்டி உனக்கு அதுல அவ்வளவு சந்தோஷமா?” என்றதும் மீண்டும் சரோஜினிக்குக் கோபம் வர, சக்திவேலின் காலை மிதித்தாள்.

“அம்மாஆ” என்று அவன் கத்த,

“நீ உன் பாசமான ப்ரண்ட் கூட பேசாம இருக்கன்னு சந்தோஷமில்ல, எனக்காக பேசாம இருக்க சொன்ன பார்த்தியா அதுக்காக” என்றாள் சரோஜினி.

“இன்னொரு விஷயமுமிருக்கு. எனக்கு எப்பவும் சரோஜினி வித்தியாசமா தெரிவா, உண்மையை சொல்லணும்னா நம்ம விஷயம் சொன்னப்போ லாலா என்ன நினைப்பானோ நினைச்சு நான் நிறைய டென்ஷன் ஆகியிருக்கேன் தவிர உன்னை நினைச்சு ஆனதில்ல. சரோ என்னை புரிஞ்சிப்பா நினைச்சா நீ சட்டுனு கோவப்பட்டு சண்டைப்போட்டு போனதும் என்னால அக்செப்ட் பண்ண முடியல. என் தப்புதான், நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு நானே முடிவு பண்ணியிருக்கக் கூடாதில்ல”

“சாரி சரோ! உன்னை ஹர்ட் பண்ணிட்டேன். இனிமே யாரும் என் முன்னாடி உன்னை பேச முடியாது, கூடாது! அது லாலாவா இருந்தாலும் சரிதான்.” என்று சக்தி வாக்குக் கொடுத்தான்.

“கண்ணைத் தொட சரோ. நாந்தான் தப்புனு ஒத்துக்கிட்டேன்ல, நீ சொல்ற மாதிரி நான் ஒரே பையன். உங்கண்ணன்காரனைப் பார்த்துட்டு எனக்கும் தங்கச்சி வேணும்னு எங்கம்மா கிட்ட அடம்பிடிச்சு மாவரைக்கும்போது முதுகுல தோசைப்போட்டாச்சு.” என்றதும் ஓரவிழியால் சக்தியைப் பார்த்த சரோஜினிக்கும் லேசாய்ப் புன்னகை எட்டிப்பார்த்தது. சக்தி கவனமெல்லாம் அவள் மீதுதானே? அந்த கொஞ்சம் குறுஞ்சிரிப்பையும் கண்டுகொண்டவன்,

“ஹேய் சரோ! நீ சிரிச்சா ரொம்ப அழகுடி. கொஞ்சம் என்னைப் பார்த்து நல்லாதான் சிரியேன்” என்று சொல்ல, சரோஜினி அவன் சொன்னதைக் கேட்கவில்லை.

“எனக்கு சண்டை போடக் கூட ஆளில்லை. எங்கத்த இருந்தவரைக்கும் அவங்க கூட விளையாடுவேன், அதையும் உன் சித்தப்பா கெடுத்துட்டார். ஸ்கூல் போனாதான் ஜாலியா இருக்கும். இங்க பக்கத்து வீட்டோட கூட விளையாட முடியாது. எனக்கெல்லாம் அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பின்னு இருக்கவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். இப்பவே சொல்லிட்டேன் நமக்குக் குறைஞ்சது ரெண்டு பசங்க வேணும். ஒத்த புள்ளைக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்” என்று அவன் கடந்த கால ஏக்கம், வருங்கால கனவை எல்லாம் சொல்ல,

“கோவில்ல உட்கார்ந்துட்டு என்ன பேசுற?” சரோஜினி பல்லைக் கடித்தாள்.

“குலதெய்வம் கோவில்ல என் குலம் வளரணும்னு சொல்றேன். கோவில் வந்து குழந்த வரணும்னு யாரும் கேட்கிறதில்லையா?” என்று அதற்கும் பதில் சொன்னான்.

“சரி அத விடு. லாலாவோட தங்கச்சின்னுதான் உன்னோட பேசினேன் சரோ. உன் மேல அக்கறைப்பட்டதுக்குக் காரணமும் அதுதான்! ஆனா அதுக்காக உன் லவ் நான் ஒத்துக்கல, எனக்கு உன்னைப் பிடிச்சது. பிடிக்குது! ப்ரண்ட்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன், என் வாழ்க்கையை எல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டேன் புரிஞ்சதா?” என்று சக்தி கேட்க, சரோஜினிக்கு அவன் பதில்கள் அத்தனையும், அந்த நேரம் மிகவும் அத்தியாவசியமானதாக இருந்தன.

அவளின் காதலை அவன் மதிக்கிறான், அவளை மதிக்கிறான் என்பது தேவையாக இருந்தது. வார்த்தையால் தெளிவு வேண்டியிருந்தது. அவன் வார்த்தைகளை அள்ளி, சுவைத்து ஆராய்ந்து ஆசுவாசம் கொண்டு அவள் அனுபவித்தாள்.

“பேசு சரோ” என்று சக்தி அவளின் கைப்பற்றிக்கொள்ள, சரோஜினியின் கண்களில் ஆச்சரியம்.

“என்னடி கைதானே பிடிச்சேன்? கட்டிப்பிடிச்ச மாதிரி பார்க்கிற” என்று முணுமுணுத்தான்.

“நீ கைப்பிடிக்கிறதே ஆச்சரியம்தானே? உன் தலைவர் டி.ஆரை பாலோ பண்ணுவ இல்ல” சரோஜினியின் கண்களும் அவள் உள்ளம் போல் கனிந்து ஆசுவாசத்தை அப்படியே வெளிக்காட்டின.

“சரோ” என்று குரல் கொடுத்தபடி வசுந்த்ரா வெளியே வர, சட்டென கையை உருவிக்கொண்டாள் சரோஜினி. வசுந்த்ராவும் சித்ரஞ்சனும் கோவில் கேட்டைப் பூட்டிவிட்டு வர,

சித்ரஞ்சனைப் பார்த்து, “நீங்க எப்போ வந்தீங்க?” என்றான் சக்தி.

“நான் முன்னாடியே வந்துட்டேன். நீ சின்சியரா பேசிட்டு இருந்த, அதான் டிஸ்டர்ப் பண்ணல.”

“இவர் வந்தது கூட தெரியாதளவுக்கு என்னடா பேச்சு?” வசுந்த்ரா சக்தியை அதட்ட,

“சகலம் சரோஜினின்னு இருந்தேன்னு என்னை பாராட்டாம பேசுறியா அத்த?” என்ற சக்தி,

சித்ரஞ்சனிடம், “என்ன மாம்ஸ் மலரும் நினைவுகளா?” என கிண்டலாகக் கேட்டான்.

“இவன் ரொம்ப பேசுறான் சரோ, கொஞ்சம் கண்டிச்சு வை” என்ற சித்ரஞ்சன்,

“கிளம்பலாமா? சாப்பிட்டு நான் டியுட்டிக்குப் போகணும்” என்றவன் முன்னே வண்டியிருந்த இடத்துக்கு நடந்தான்.

“ஒன்னும் பேசாம போற சரோ. எதாவது சொல்லிட்டுப் போடி” என்று சக்தி மெல்லிய குரலில் சரோஜினியிடம் சொல்ல,

“இப்போ சொல்லணும்னு தோணல.” என்றாள் வேண்டுமென்றே.

“போடி” என்றவனும் வேகமாக முன்னே நடந்தான். அவன் வண்டியைக் கிளப்ப, சரோஜினியும் ஸ்கூட்டி பக்கம் போனாள். சித்ரஞ்சன் அவளிடம்,

“சரோ நீ ஸ்கூட்டில போ. நான் சித்தியோட வரேன்” என்றதும் சக்தி கடுப்பாகப் பார்த்தான். வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு அவன் வீடு செல்ல, அவன் வீடு சென்ற இரண்டாம் நிமிடம் சித்ரஞ்சனும் வசுந்த்ராவும் வந்தனர். அவர்களைப் பார்த்த சக்தி கடுப்பில் லாலாவுக்குப் போன் அடித்தான்.

“டேய்! எனக்கு வயிறு எரியுதுடா” என்று கத்த,

“என்ன? டேய் நானே காலையில லைப்ரரி போய்ட்டு வந்து இப்போதான் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு படுத்தேன். உனக்குப் பொறுக்கலயா?” என்று திட்ட,

“உன் சித்தப்பா என்னை ரொம்ப வெறுப்பேத்துறார்டா.”

“என்னடா செஞ்சாரு?” என்று கேட்டான்.

“நீ வீட்டை விட்டு வெளியே வந்து பாருடா எரும” சக்தி கத்தியதில் லாலாவும் திண்ணைக்கு வந்து பார்க்க வண்டியின் பின்பக்கமிருந்து சித்ரஞ்சன் இறங்க, வசுந்த்ரா வண்டியை ஓட்டி வந்திருந்தாள்.

✅ End of Episode 20
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top