Episode 1

ஒரு காதல் 1

அலாரம் சத்தம் கேட்கவும் அரக்கப் பறக்க எழுந்து பார்த்தார் சௌந்தர்ராஜன். எதிரே பார்க்க அவரின் மகன் இளந்திரையன் இன்னும் உறக்கத்தில் இருக்க, தோளில் இருந்த துண்டினால் அவனை பட்டென்று ஒரு அடி போட, அவன்

“ப்ச்” என முனகியபடி திரும்பிப் படுக்க பார்க்க, அந்த ஸ்லீப்பர் கோச்சில் எங்கே மகன் விழுந்துடுவானோ என்று கவலைக் கொண்டவர்

“டேய் டேய் அடுத்த ஸ்டேஷன்ல டிரெயின் நின்னுடும்டா, நம்ம இறங்கனும், சொகுசா தூங்குறியே டா” என்று திட்ட, அதில் கண்விழித்தவன் மெதுவே எழுந்தான்.

எக்மோர் வந்துவிட அப்பாவும் மகனும் இறங்கிவிட,

சௌந்தர்ராஜன் உடனே
“அந்த பக்கம் போனா பஸ் வரும், வா ரோட்டைக் க்ராஸ் பண்ணுவோம்” என்று சொல்ல, அவனோ

“ப்பா, காலையில பஸ்ல இடிப்பட்டுப் போகனுமா, நான் கேப் புக் பண்றேன் இருங்க” என்று சத்தம் போட்டான்.

இளந்திரையன் அப்படித்தான்! அவன் நினைத்தால் செய்துவிடுவான். அடுத்தவரைப் பற்றியெல்லாம் யோசிக்க மாட்டான், கூடாதென்றில்லை. அப்படியொரு நினைவே வராது. நான், எனது என்பதுதான் அவன்!

போகும் வழியெல்லாம் சௌந்தர்ராஜன்,

“என்ன இருந்தாலும் வல்லிக்குத் திறமை ஜாஸ்தி டா, பாரேன் இரண்டரை வருஷத்துல ஒரு ப்ளாட் வாங்கிட்டா, அதுவும் மெட்ராஸ்ல வாங்குறது சல்லிசா போச்சா என்ன?” என்று தங்கை மகளின் புகழ் பாட

“ப்பா, நான் கூட நம்ம வீட்டு மேல இரண்டு ரூம் கட்டியிருக்கேன்” என்று அவன் அவனின் பெருமையைப் பேச

“ம்ம், நல்லா கட்டின போ. நான் இடம் வாங்கி வீடு கட்டினேன். இரண்டே ரூம் கட்டிட்டுப் பெருமைப் பீத்தல் வேண்டிக்கிடக்கோ?” என்று அவர் மகனை இடித்துரைக்க, அவனோ கண்டுகொள்ளாமல் இருக்க

சௌந்தர ராஜன் விடவில்லை.

“இங்க பாரு அங்க போய் வல்லிக்கிட்ட மூஞ்சிக் காட்டாத, உங்கம்மா பேச்சை எதுவும் கேட்காத சொல்லிட்டேன், அவ இந்த கல்யாணத்துக்கு வரது ரொம்ப முக்கியம் சொல்லிட்டேன்”

“நான் ஊருக்கு வந்த நாளா இதே பேச்சுத்தான் உங்களுக்கு. நான் அவளைக் கூப்பிடுவேன், வான்னு எல்லாம் கெஞ்ச முடியாது சரியா?” என்று இளந்திரையன் எரிந்துவிழுந்தான்.

“அவ கிட்ட கெஞ்சினாலும் தப்பில்ல, நல்லா படிச்சு சுயமா வேலைக்குப் போய் இன்னிக்கு வீடு வாங்கி இந்த மெட்ராஸ்ல தனியா இருக்காடா அவ, நானெல்லாம் மெட்ராஸ் வந்த புதுசுல ஒன்னுமே தெரியாது எனக்கு. எல்லாத்துக்கும் வியாசர்பாடியில எங்க மாமா இருந்தார் அவர்கிட்டத்தான் ஓடுவேன்”

“என்ன அவளா படிச்சா? அவளுக்கு ஃபீஸ் நீங்க கட்டினீங்க தானே?” என்று அவன் எள்ளலாகக் கேட்க

“ஆமா கட்டினேன் தான், என்ன இப்போ? அவ நல்லா படிச்சு கவர்மெண்ட்ல சீட் வாங்கினா நீ ஆயிரத்துக்கும் குறைச்சு மார்க் எடுத்து நான் காசைக் கொட்டித்தானே டா படிச்ச” என்று அவனைப் பேச, அந்த வல்லி அவனுக்கு வில்லியாகத்தான் தெரிந்தாள்.

“இது மாதிரியே அவ முன்னாடி பேசுங்க, நல்லா மதிப்பா அவ என்னை” என்று இளந்திரையன் எரிந்து விழ

“அவ அப்படியெல்லாம் கிடையாது” என்றவர் வெளியே வேடிக்கைப் பார்த்தார். அரை மணி நேர பயணத்தில் அவர்கள் வல்லியின் குடியிருப்புப் பகுதிக்கு வந்திருக்க, அவரே வல்லிக்கு அழைத்தார்

“வல்லி! நான் மாமா பேசுறேன், நீ தங்கியிருக்க இடத்துக்குக் கீழ இருக்கேன் டா, எந்த மாடின்னு நான் மறந்துட்டேன்” என்று அவர் கேட்க, வல்லி இரண்டாம் மாடி எனவும் மகனைப் பார்த்தார். அவனோ அந்த மிகப்பெரிய அபார்ட்மெண்டைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இரண்டு வருஷத்துல இவ்வளவு பணம் ஏது அவளுக்கு?’ என்று யோசனை இளந்திரையனுக்கு.

இந்த இரண்டரை வருடங்களில் அவளைப் பற்றிய முதல் யோசனை இதுவாகத்தான் இருந்தது இளந்திரையனுக்கு. இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் எப்படி இருந்தாள், இவ்வளவு பெரிய மாநகரில் மங்கையின் பத்திரமென்ன பாதுகாப்பு என்ன என்று கூட அவனுக்கு யோசனை உதிக்கவில்லை.

அந்த யோசனையுடன் ஒரு உறுத்தல் வேறு உள்ளத்தினில். அவசியம் அவளின் வீட்டிற்குப் போகவேண்டுமா என்ற எண்ணம் எழ, அப்படியே அசையாமல் நின்றான். அவனின் அம்மாவே அவள் இந்த திருமணத்திற்கு வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார், உண்மையில் அவனின் அப்பா மட்டுமே அவள் வரவேண்டும் என மனத்தார நினைப்பவர்.
மற்றபடி எல்லாருக்கும் அவள் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம், சூழ்னிலை..அதனால் சுய நலம்!!

“என்னடா பராக்குப் பார்த்துட்டு நிக்கிற? வா இரண்டாவது மாடி. பி ஃப்ளாட்டாம்” என்று சொல்லி முன்னே நடக்க

“ஏன் இதுக்கு முன்னாடி வந்ததில்லையா நீங்க?”

“வந்திருக்கேன் டா, மறந்துட்டேன்” என்றவர் படியேற போக

“லிஃப்ட் இருக்குப்பா , இங்க வாங்க” என்று சொல்ல இருவரும் வல்லியின் வீட்டின் முன் நின்றனர். அவன் காலிங் பெல்லை அழுத்தி விட்டு கொஞ்சம் தள்ளி அப்பாவின் பக்கமாய் நிற்க, கதவைத் திறந்த வல்லி கண்டது அவளின் தாய்மாமா சௌந்தர் ராஜனைத்தான்.

உடனே வல்லியின் வதனம் மலர்ந்து மலர்ச்சியைக் காட்ட,
“வாங்க மாமா” என்றாள்.

“எப்படி இருக்க வல்லி?” என்று கேட்டவாறே மகன் பக்கம் அவர் பார்க்கவும்தான் வல்லியின் விழியும் அப்பக்கம் நகர, நகர்ந்து நின்றவன் நங்கை விழியில் விழுந்தான்.

“வாங்க” என்றாள் பொதுவாக. அப்பாவும் மகனும் உள்ளே வர, அங்கிருந்த சோஃபாவில் இளந்திரையனும் சௌந்தர் ராஜனும் உட்கார்ந்தனர். சௌந்தர்ராஜன் வல்லியிடம் பேசிக்கொண்டிருக்க, இளந்திரையன் அமைதியாக இருந்தான்.

வல்லி மாமாவிடம்,
“மாமா இங்க ஒரு பாத்ரூம், உள்ளே பெட்ரூம்ல ஒன்னு இருக்கு, நீங்க குளிச்சி ரெடியாகுங்க, நான் கடைக்குப் போய்ட்டு வரேன்” என்றாள். அவள் இருந்தால் இளந்திரையன் சுதந்திரமாய் இருக்க மாட்டானோ என்ற எண்ணம் அவளுக்கு.

அவள் சொல்லிவிட்டு போய்விட,

“குளிச்சிட்டு கிளம்புடா” என்று சொல்லி சௌந்தர்ராஜன் வெளியே இருந்த பாத்ரூமினுள் புகுந்துகொண்டார்.

இளந்திரையன் இப்போது கொஞ்சம் சுதந்திரமாய் தன் விழிகளை உலவ விட்டான். சின்ன வீடுதான், ஆனால் நகரின் மத்தியில் இருக்க மதிப்பு அதிகம். அதனையும் விட மிகவும் க்ளாசி என்பார்களே அப்படி வைத்திருந்தாள் வீட்டினை.

வல்லி கடைக்குச் சென்றுவிட்டு வர, சௌந்தர ராஜன் கதவைத் திறக்கவும் புன்னகையுடன் உள்ளே நுழைந்தவள்,

“என்ன மாமா அதுக்குள்ள குளிச்சிட்டீங்க போல?” என்றாள்.

“நானெல்லாம் செத்த நாழிக்குள்ள குளிச்சிருவேனேம்மா, அவன் இருக்கானே பாரு காவேரித் தண்ணீ மொத்தமும் இவனை மாதிரி ஆளுங்களாத்தான் காலி ஆகுது” என்றவர் பின் தங்கை மகளின் முகம் பார்த்து

“அவனும் என்னோட வருவான்னு நான் சொல்லாம இருந்துட்டேனே கோவமா வல்லி?” என்று கேட்க

“அதெல்லாம் இல்ல மாமா” என்றவள் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

பத்து நிமிடத்தில் நறுமணம் கமழும் ஃபில்டர் காஃபியை மாமனிடம் கொடுத்தவள், டீபாயின் மீது இளந்திரையனுக்கான கப்பை வைத்தாள்.

வல்லி சமையலில் இறங்கிட, அரைமணி நேரம் நல்ல குளியல் போட்டு இளந்திரையன் வெளியே வந்தான்.

“இந்தா டா உனக்குக் குடிக்க இருக்கு குடி” என்று சொல்லி டீபாயை அப்பா காட்டவும்

கொஞ்சம் தயக்கத்துடன் மூடியிருந்த கோப்பையைத் திறந்தான், திறந்ததுதான் தெரியும், இதயம் வரை இட்டு நிரப்பியது பூஸ்டின் மனம். அவனுக்குப் பூஸ்ட் என்றால் அவ்வளவு இஷ்டம். இரண்டு ஆண்டுகள் கழித்து அவன் ஊருக்குப்போன போது அவன் அம்மா கூட அவனுக்காக இதனை செய்யவில்லை. ஆனால் இவள்??

“மாமா, சாப்பிட வாங்க” என்றழைத்தவள், கொஞ்சம் தயங்கி

“நீங்களும் வாங்க” என்று அவனையும் அழைக்க, ஏற்கெனவே அவளின் செயலில் சிந்தை நிரம்பியிருந்தவன் மறுக்காது உணவுண்டான்.

அப்பாவும் மகனும் காலை உணவை வல்லியின் வீட்டில் முடித்துவிட, சௌந்தர்ராஜன் மகனிடம்,
“டேய் அந்த பத்திரிக்கையை எடுத்து வல்லிக்கிட்ட கொடு” என்றவர்

வல்லியிடம்,
“அம்மாடி! இது நம்ம வீட்டு கல்யாணம், உனக்குப் பத்திரிக்கையை சும்மா காட்டுறதுக்குத்தான் தர சொல்றேன், தனியாவெல்லாம் வைக்கல, நீதான் முன்ன நின்னு நடத்தி வைக்கனும்” என்று சொன்னார்.

அத்துடன் நிற்காது,
“எந்த மறுப்பும் சொல்லக்கூடாது! நீ வர அவ்வளவுதான்!” என்றவர்

“எங்களுக்காக நீ எதுவும் சமைச்சிட்டு இருக்க வேண்டாம், நாங்க ராவைக்கும் சாப்பிட்டு வந்திடுவோம் வல்லி” என்றவர் தோளில் துண்டைப்போட்டுக் கொண்டு கிளம்பிவிட, இளந்திரையனுக்கு மங்கையின் செயல்களில் என்னவோ ஒரு உணர்வு மனத்தினுள். நிச்சயம் இந்த வீட்டிற்கு வரும்போது இருந்த மனநிலை இல்லை இப்போது. ஆனால் அப்போது பேச அவகாசமில்லை என்பதால் கிளம்பிப் போய்விட்டான்.

வல்லி டீபாயின் மீதிருந்த பத்திரிக்கையை எடுத்துப் பார்க்க, நடுப்பக்கத்தில் வலப்புறத்தில் மணமகள் வீட்டினர் பக்கத்தில் சௌந்தர்ராஜன்-மாதவி என்று அவளின் மாமா அத்தையின் பெயர் இருக்க, அதன் கீழே

‘இளந்திரையன் B.E – வஞ்சுளவல்லி நாச்சியார் B.E என்று கணவனின் பெயருடன் தன் பெயர் இருக்க கண்டு அவளினுள் சொல்லவே முடியா உணர்வுகள்.

அடுத்து என்ன என்ன என்று அகத்தின் இடைவிடா இரைச்சல்!

ஆனால் என்னதான் இடையூறுகள் இதயத்தில் இருந்தாலும் அவள் எப்போதும் போல அலுவலகம் சென்று வந்தாள். சௌந்தர ராஜனும் இளந்திரையனும் இரவு பத்து மணி போல் வீட்டிற்கு வர, அவர்களுக்கு அவள் ஹாலில் படுக்கைத் தயார் செய்தாள்.

அவன் போன் பேசிவிட்டு படுக்க வர பார்த்தால், அவளது அறையில் இருந்த ஒற்றை மெத்தை ஹாலில் அவனுக்காக இடம்பெயர்ந்திருக்க, அவனின் இதயத்திலும் ஒரு இடப்பெயர்வு, இனம் காணா உணர்வு.

இவள் ஏன் எனக்காகப் பார்க்கிறாள் என்ற உணர்வு அவனை உறங்கவிடவில்லை, சொகுசாய் அவன் உறங்கட்டும் என்று வஞ்சுளவல்லி தந்த மெத்தை அவனது உறக்கம் பறித்ததுதான் மிச்சம்.

✅ End of Episode 1
How did you feel about this episode?
❤️ 8 more...

You must Log in or Register to react here

💬 8 Replies
Srichitra Reader 1 month ago

Nice. Super story.

❤️ 1 more...
Pavithra Narayanan 1 month ago

Thank you ma 😊

❤️ 1 more...
Sindhu Narayanan Reader 1 month ago
இளந்திரையன் situation song..

மெத்தை வாங்கினேன் 

தூக்கத்தை  வாங்கலை...😴😴😟😟😐😐
😂 3 more...
Pavithra Narayanan 1 month ago

Vango vangoo chechi 🤗🤗

❤️ 2 more...
Radhi Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

ஒரு காதல் ஒரு நேசம்...

ஒருவருக்கு ஒருவர் பார்வை பரிமாறியும்
ஒரு வார்த்தை பேச இருந்தும்
ஒன்றும் பேசா மௌனம்
ஓராயிரம் கேள்விகள் கேட்குது....
❤️ 1 more...
Meenakshi subbhuraman Reader 1 month ago

ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா

❤️ 1 more...
Kavi Natarajan Reader 3 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top