Episode 6

ஒரு காதல் 6

இளாவுக்கு அமெரிக்காவில் சென்று எம்.எஸ் படிக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய லட்சியமாய் இருந்தது. படித்து முடித்து அப்பாவிடம் சொல்ல, அவரோ முதலில் வேலைக்குப் போ என்றுவிட, அவனும் வேலைக்குப் போய் கொண்டே GRE, TOEFL போன்ற தேர்வுகளுக்குப் படித்தான். அதற்கான எல்லா செலவும் அவனின் சுயசாம்பாத்யமே.

இப்போது அதில் தேர்ச்சிப் பெற்றுவிட, லோன் ஏற்பாடு செய்யவே ஊருக்கு வந்திருந்தான்.

வஞ்சியிடம் வந்த அன்று நலம் விசாரித்தவன், “ஃபைனல் செம் நல்லா பண்ணு” என்று மட்டும் சொல்லியிருந்தான்.

தனக்கும் மனைவிக்கும் தனிமை இல்லையே என்ற எண்ணம் வராத அளவிற்கு அவனுக்குத் தன் இலட்சியத்தின் மீதுதான் எண்ணம் திண்ணமாய் இருக்க, அடுத்த நாளே சௌந்தர்ராஜனிடம் அதுபற்றி பேசினான். அவன் அறையில் பேச்சுவார்த்தையைத் துவங்க, ஒரே வார்த்தையில் சௌந்தர்ராஜன்

“முடியாது” என்றுவிட்டார்.

“அப்பா! உங்க கிட்ட நான் மொத்த பணமா கேட்டேன், இல்லையே? லோனுக்காக எதாவது நிலப்பத்திரம்தானே கேட்கிறேன், முப்பது லட்சம் லோன்ப்பா, இது ஒன்னும் ஈசியா கிடைக்கல, ஒருவருஷமா நான் படிச்சுதான் அங்க இருக்க யுனிவர்சிட்டியில சீட் கிடைச்சிருக்குப்பா, நீங்கதானே வேலைக்குப் போ அப்புறம் பார்க்கலாம்னு சொன்னீங்க” என்று இளந்திரையன் ஆரம்பத்தில் அமைதியாகவே பேசினான்.

அடுத்த மாதம் வல்லி படிப்பை முடித்துவிட இவன் ஒரு பக்கம், அவள் ஒரு பக்கம் இருந்தால் வாழ்க்கை என்னவாகும் என்று யோசித்தார். அதனையும்விட இளந்திரையன் வெளி நாடு போய் மாறிவிட்டால் தங்கை மகளின் நிலை என்னவாகும் என்ற கவலை.

இரண்டு ஆண்டுகள் என்றால் சாதாரணமில்லையே? பழக்கம் மாறி பாதை மாறிப்போனால்?? படிக்க போகுமிடத்தில் வஞ்சுளவல்லியையும் அனுப்ப இயலாது, இதில் மனைவி வேறு மருமகளை குத்திப் பேச, அவர்களுக்குள் எப்போது ஒரு பிணைப்பு வருவது?

“இனிமே படிச்சு என்ன செய்ய போற நீ? அதான் வேலைப் பார்க்கிற, சம்பாதிக்கிறதானேடா?” என்று சௌந்தர் ராஜனின் மகனின் ஆசை தெரியாமல் பேச, அது அவனை மிகவும் காயம் செய்தது.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, எனக்கு லோனுக்கு ஏற்பாடு பண்ணனும், நம்ம நிலப்பத்திரம் தாங்க, நான் படிச்சு அந்த லோனை அடைச்சுக்கிறேன்” என்றான் விடாப்பிடியாக.

“ஏன்பா நீ கஷ்டப்படுற? இனிமே படிச்சு, அதுக்கு லோன் வாங்கி அதை அடைச்சு…இதெல்லாம் ஆகுற கதையா சொல்லு?” என்று மகனின் மனதை மாற்ற அவர் பேச, அவன் நினைத்தால் நினைத்ததுதானே?!

“ப்பா! உங்க முடிவுதான் என்ன?” என்றான் கடுப்பாக.

“என்னால நிலப்பத்திரம் தரமுடியாது, நீ அமெரிக்காவுக்கெல்லாம் போக வேண்டாம், அடுத்த மாசம் வல்லி படிப்பை முடிச்சிடுவா, அவளையும் உன்னோட அழைச்சிக்கோ, அவளோட குடும்பம் நடத்துற வழியைப் பாரு” என்று அவர் சொன்னதுதான் வினையாகிப் போனது. அவனும் ஒரு மணி நேரம் பேசிப்பார்க்க, இருந்த எரிச்சலில் கோவம் மிகுந்துவிட குரல் உயர்த்திப் பேச, அது பக்கத்து அறைக்கும் நன்றாகவே கேட்டது.

இவருக்காக கொஞ்சமும் யோசிக்காமல் நான் திருமணமே செய்திருக்க, என் மனத்தின் ஆசைக்குக் கொஞ்சமும் மதிப்பில்லையா? என்ற எண்ணம் இளந்திரையனுக்குத் தலைதூக்க

“உங்களுக்காகக் கொஞ்சமும் யோசிக்காம நான் அவளைக் கல்யாணம் பண்ணினா, நீங்க என்னோட ஆசையை மதிக்க மாட்டீங்களா?” என்றதும் பக்கத்து அறையில் இவன் பேசியது தெளிவாய் விழ, வஞ்சியின் நெஞ்சம் எப்போதும் போல் காயம்பட்டது. இந்த முறை கொஞ்சம் ஆழமாகவே!

“சாகப்போற அத்தையோட ஆசையை நிறைவேத்தினீங்க, என்னோட கனவு, லட்சியம் எல்லாம் நிறைவேத்த மாட்டீங்களா?”

“உங்களுக்காக உங்க வார்த்தையை மதிச்சு வல்லியை நான் கட்டிக்கிட்டேன், இப்பவும் அவளைப் பத்தி யோசிக்கிறீங்க? என்னை, என் மனசை நினைக்க மாட்டீங்களா?” என்றான் அவ்வளவு கோபத்துடன்.

“டேய்! மெல்ல பேசு!” என்று அவர் மகனை அதட்ட, அதுவரையில் கொல்லைப்பக்கம் வேலையில் இருந்த மாதவியும் வந்துவிட, அவர் மகனின் பேச்சை மட்டும் கடைசியில் கேட்டிருக்க

“நல்லா கேளுடா உங்கப்பாவை, உன் வாழ்க்கையை இப்படி ஆக்கிட்டாரே?” என்று அவர் மேலும் பேச

“நீ குறுக்கப் பேசாதே” என்று சௌந்தர்ராஜன் மனைவியை அடக்க

“ஏன்? தங்கைச்சிப் பொண்ணுக்காக நீங்க இவ்வளவு துடிக்கும்போது எங்கம்மா எனக்காகப் பேசக் கூடாதா?” என்றான் இளந்திரையன். அப்பாவின் பேச்சு வஞ்சுளவல்லி என்பவளை அவனின் முன்னேற்றத்தின் தடையாய் நினைக்க வைக்க, அவள் என்னுடன் இருப்பதற்காக எனது லட்சியத்தைத் தடை செய்வாரா இவர் என்ற கோபம் கனன்றது.

“என்னையே எதிர்த்துப் பேசுறியா டா நீ? என்னால உனக்குப் பத்து பைசா தர முடியாது” என்று சௌந்தர் ராஜனும் எரிந்து விழ

“ஏன்? உங்க தங்கச்சிக்கு கொட்டி அழிச்சது பத்தாதுன்னு அவ பொண்ணுக்கும் செய்றீங்க, என் பையனுக்கு செய்ய மாட்டீங்களா?” என்றதும்

“அடியே! அவன் முப்பது லட்சத்துக்குக் கடன் வாங்கப்போறான் பேங்க்ல, அதைக் கட்டலன்னா எல்லாமே போயிடும், இருக்கற நிலத்தை அடமானம் வச்சுட்டு என்ன செய்ய சொல்ற, அதான் படிக்க வச்சிருக்கேன், வேலையில இருக்கான், அது போதாதா இவனுக்கு? அப்படியென்ன அமெரிக்கா ஆசை உன் புள்ளைக்கு? ஒழுங்கா என் மருமக கூட குடும்பம் நடத்த சொல்லு இவனை” என்று மனைவியிடம் அவர் கோபம் காட்ட

“பார்த்தியாடா இளா? இவர் சொன்னாருன்னுட்டு அந்த அனாதைக் கழுதையை நீ கட்டியிருக்க? எப்பவும் அவருக்குத் தங்கச்சி குடும்பம்தான் முக்கியம், இதே நல்ல இடமா பார்த்துக் கட்டியிருந்தா உனக்கு அவங்களாச்சும் உதவியா இருந்திருப்பாங்க, இவ்வளவு சீக்கிரம் கட்டிவச்சு உன்னையும் வெளி நாடு அனுப்பாம எப்படி பேசுறார்ப்பா இவர்” என்று இத்தனை மாதம் மகனிடம் பேச நினைத்ததை எல்லாம் மாதவி பேசினார்.

இதையெல்லாம் கேட்டிருந்த வஞ்சுளவல்லிக்குத் தாளவில்லை.

“செத்துப்போன மகராசி மகளை உன் தலையில கட்டிட்டு பாரு உன்னோட நிம்மதிதான் போச்சுடா இளா” என்று மாதவி இன்னும் புலம்ப

“போதும் மாதவி! பேச்சை நிறுத்து” என்று அதட்டல் போட

இளந்திரையனோ “உங்க பேச்சை அன்னிக்கு நான் கேட்டிருக்கக் கூடாதுன்னு இப்ப நீங்க நினைக்க வைக்கிறீங்க, அவளுக்காக என்னோட வாழ்க்கையை நான் அழிச்சிக்கனுமா?” என்றான் அவ்வளவு ஆவேசமாக.

அதுவரையில் பக்கத்து அறையில் இருந்த வஞ்சுளவல்லி இந்த அறைக்குள் நுழைய,
“ஏய்! அங்கேயே நில்லுடி, எல்லாம் உன்னாலதான்” என்று மாதவி வஞ்சியை அதட்ட

“மாதவி” என்று சௌந்தர்ராஜன் பல்லைக் கடிக்க,

“இவளுக்குத் தாலி கட்டின நேரம் அப்பாவும் பிள்ளையும் இப்படி சண்டைப்போட்டுக்கிறாங்க” என்று மாதவி விடாது பேச

“வாயை மூடுடி!” என்றவர் மனைவியை அடிக்க கை ஓங்கிவிட, இளந்திரையன்

“அப்பா! என்ன பண்றீங்க நீங்க?” என்று முன்னால் வந்து அம்மாவை மறைத்து நின்றான்.

தன்னைக் கொண்டும், தன் தாயைக் கொண்டும் இத்தனை பேச்சுகள் மனதே வெறுத்தே விட்டது. அறைக்குள் சென்றவளை மாதவி இன்னும் பேச, இளந்திரையன் அம்மாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சுயின்றி இருக்க, சௌந்தர்ராஜன் மாதவியை கை ஓங்க, எல்லாம் சேர்ந்து என்னால் இவர்களுக்கு எந்த தொந்தரவும் வேண்டாம். இந்த உறவால்தானே இவ்வளவு காயம்? அந்த உறவே வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

“அவளுக்காக என்னோட வாழ்க்கையை நான் அழிச்சிக்கனுமா?” என்ற இளந்திரையனின் பேச்சு அகத்தினைத் துண்டாக்கிச் சென்றிருக்க, இத்தனை நாளும் இவன் நம்மைப் பிடிக்காமல்தான் இருந்திருக்கிறான் என்ற எண்ணம் உள்ளத்தினைக் கிழித்தது.

இளந்திரையனின் முன் வந்தவள் வேகமாய் சிந்தை வலிக்க,

“எனக்கு நீங்க வேண்டாம், இந்த உறவு வேண்டாம்” என்று சொல்லி யாருமே எதிர்ப்பார்க்காவண்ணம் தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அவன் முன் வைத்தாள்.

சௌந்தர்ராஜன் அதிர்ந்து போய்விட்டார்,
“வல்லி! என்ன காரியம் பண்ற நீ?” என்று அவர் ஓய்ந்து போய் அப்படியே மெத்தையில் உட்கார்ந்துவிட

“என்னை மன்னிச்சிடுங்க மாமா, நான் போறேன்” என்றவள் அறையை விட்டு வெளியேறிட

மாதவி அப்போதும் நிறுத்தாமல் “பார்த்தீங்களா உங்க தங்கச்சிப் பொண்ணு பண்ணின காரியத்தை, என் புள்ளை உயிரோட இருக்கும்போதே தாலியைக் கழட்டுறான்னு என்ன நெஞ்சழுத்தம் இருக்கும் இவளுக்கு? ஏய் நில்லுடி நீ வேண்டாம்னா எங்களுக்கு நிம்மதிடி, பிடிச்ச சனியைத் தொலையுதேன்னு இருப்போம்” என்று அவர் பேச

கமலியோ, “வல்லி என்ன பண்ணிட்ட நீ?” என்றாள் கோபமாக. ஆனால் இவர்கள் இவ்வளவு பேச இளந்திரையன் ஒன்றுமே பேசவில்லை. அவளின் செயலில், அதன் தாக்கத்தில் இருந்து மீளவே முடியவில்லை அவனால்.
சௌந்தர்ராஜன் மகனைப் பார்த்தார். அவனோ அசையாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருந்தான். வஞ்சியின் செயல் அவனைக் காயமுற செய்திருந்தது.ஒரே நொடியில் உறவையே இப்படி உதறிவிட்டாளே என்ற கோபம் அவருக்கும், அவர் பார்த்து செய்துவைத்த திருமணம் இல்லையா? சௌந்தர்ராஜன் கலங்கியிருந்தவர் அவரும் வீட்டை விட்டு சென்ற வல்லியைத் தடுக்கவில்லை.

இப்படி பழையதை எல்லாம் நினைத்து அழுகையில் கரைந்தவள் உடையை மாற்றிவிட்டு, இளா வருவதற்குள் அந்த தாலியைத் தேடிவிடலாம் என்று நினைத்தாள்.

தீடீரென தன் பின்னால் கேட்ட,
“ஏட்டி இஞ்சி! என்ன பண்ற நீ?” என்ற குரலில் பதறியவள் அப்படியே தடுமாறி மெத்தையில் விழுந்தாள். சுவரில் சாய்ந்து ஒரு காலை ஊன்றி, இன்னொரு காலை மடக்கி தீவிரமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் இளந்திரையன்.

“என்னோட துணியெல்லாம் வெளியே தூக்கிப் போட்டிருக்க, துவச்சுத் தர போறியா?” என்றதும் வஞ்சி அவன் முகம் பார்க்காமல் திரும்ப

“லுக் அட் மீ!” என்று ஆணையாகச் சொல்லி அவளருகே வந்து முகம் பற்றியவன்

“உனக்குத்தான் தாலி செண்டிமெண்ட்லாம் கிடையாதே, அப்படி இருந்திருந்தா இன்னிக்கு இது என் கையில இருந்திருக்காது, இப்ப எங்க அப்பா கொடுத்த பின்னாடியும் கூட டப்பாவுல போட்டுவச்சவதானே டி நீ?” என்றான் கோபமாக.

“தாலியை எங்கிட்ட கொடுங்க இளா” என்றாள் பாவமாக.

“முடியாது! எவ்வளவு திமிர் இருந்தா தாலியைக் கழட்டியிருப்ப நீ?” என்று அவன் அதிலேயே நிற்க, வெடித்து சிதறினாள் வஞ்சி.

“என்ன சும்மா சும்மா தாலியைக் கழட்டின, தாலியைக் கழட்டினனு அதையே சொல்ற நீ?” என்று கத்தி தனது முகத்தைப் பிடித்த இளாவின் கையை ஆவேசமாய்த் தட்டிவிட்டவள்

“நான் ஒன்னும் எனக்காகத் தாலியைக் கழட்டல, நீதானே சொன்ன அவளுக்காக என்னோட வாழ்க்கையை அழிச்சக்கனுமான்னு, என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம்னுதான் தாலியைக் …” என பேசமுடியாமல் தேம்பியவள்

அழுகை இழையோடிய குரலில் “என் அம்மாவுக்காக நீ ஏன் உன் லைஃப் ஸ்பாயில் செய்யணும்? எங்களால யாருக்கும் கஷ்டம் வேண்டாம். அவங்களுக்கு நிம்மதியான மரணம் கிடைக்க நீங்கதானே காரணம், அந்த நன்றியுணர்ச்சி எனக்கு எப்பவுமே இருக்கு, அதனாலதான் நான் உனக்கு வேண்டாம்னு வந்துட்டேன்” என்றவள் மெத்தையில் அப்படியே சாய்ந்து அழத்தொடங்கினாள்.

இதையெல்லாம் கேட்டபின் இளந்திரையன் தன்னைக் கொஞ்சமேனும் புரிந்து நடப்பான் என நினைக்க, அவனோ

“ஹாஹா! ஏன் டி இந்த தியாகத்தலைவின்னு சொல்வாங்களே அது நீதானா?” என்று சிரிக்க, வஞ்சிக்கு அவ்வளவு கோபம் வந்தது

“என்..எனக்காக என்னை விட்டு வந்தியா?” என்றவன் இன்னும் சிரிக்க

வஞ்சிக் கோபமாய் அவன் மீது தலையணைத் தூக்கி வீசிட, அதை தட்டிவிட்டவன் அவளருகே வர

“ச்சீ! மனுஷனா நீ எல்லாம்? இப்பவும் சிரிக்கிற? அடுத்தவங்க உணர்வை மதிக்கனும்னுற எண்ணமே உனக்கும் இல்லை…உன்னோட அம்மாவுக்கும் இல்லை…” என்று கத்தினாள்.

“அப்படி மதிச்சு நீ என்ன கிழிச்ச? இப்படி கெட்ட பெயர் வாங்கிட்டு வந்து அழற?” என்றவன் அவளருகே மெத்தையில் உட்கார்ந்து

“முதல்ல நம்ம நல்லாயிருக்கனும், அப்புறம் அடுத்தவங்களுக்கு நல்லது செய்யணும்? ஆனா உன்னை நினைச்சா எனக்கு நிஜமா சிரிப்புத்தாண்டி வருது, என்னைப் பாரு உன்னை விடாம எப்படி இம்சைப் பண்றேன், நீயும்தான் இருக்கியே எனக்காக என்னை விட்டுட்டாளாம்” என்று கிண்டலாய்ப் பேசினான்.

“நீதானே என்னைப் பிடிக்கலன்னு மாமா கிட்ட அப்படி கத்தின?” என்று அவள் கத்த, காதில் விரல் விட்டு குடைந்தவன்

“மெதுவா! மெதுவா இஞ்சி! உங்கிட்ட உன்னைப் பிடிக்கலன்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா? எனக்குத் தெரியும் நம்ம இரண்டு பேருமே பிடிச்சுக் கல்யாணம் செய்யல, ஆனா பிடிக்காதுன்னு உன் முகத்துக்கு நேரா சொல்லியிருக்கேனா?” என்றான் அவள் முகம் பார்த்து அழுத்தமாக, விளையாட்டுத்தனமற்ற ஒரு விளக்கம் தரும் பேச்சு. அதில் தணிந்தவளும் கொஞ்சம் சத்தம் குறைத்து

“எங்கிட்ட சொல்றதும் என்னைப் பத்தி சொல்றதும் இரண்டும் ஒன்னுதான், பிடிக்காதவங்களை பிடிச்சு வச்சு என்ன செய்யப் போறேன் நான், அதுமாதிரி ஒரு சூழ்னிலையில எனக்கு உதவிப் பண்ணினவங்களுக்கு நான் தொந்தரவுன்றப்போ ஒட்டுண்ணியா அவங்களுக்குத் தொல்லைக் கொடுக்கிற பழக்கம் எனக்கில்லை” என்றாள் அழுத்தமாக.

“இல்லை! இரண்டும் ஒன்னு இல்லை! நான் எங்கப்பா கிட்ட என்ன பேசினேன்னு தெரியுமா உனக்கு?” என்றதற்கு

“என்னைப் பிடிக்கலனு பேசின” என்றாள் பட்டென்று.

“இஞ்சி! அதுக்கு முன்னாடி நான் என்ன பேசினேன் தெரியுமா?” என்றவன் அன்றையை நிகழ்வை சொல்லி

“என்னோட உழைப்பை மதிக்காம என்னை யூஎஸ் அனுப்ப மாட்டேன்னு சொல்லி உன்னோட வாழ சொன்னார், அவர் உன்னை வச்சு என்னை லாக் பண்ண பார்த்தார், நானும் அதையே பண்ணினேன். அப்படியாவது அவர் இறங்குவார்னு நினைச்சேன்”

“உனக்காக யோசிக்கிற மனுஷன் எனக்காக யோசிக்கலையேன்ற கோபத்துல பேசினேன், அவ்வளவுதான்! என்னோட அத்தை அவங்க! எங்க வீட்டுப்பொண்ணு! அவங்களுக்காகத்தான் செஞ்சேன். ஸோ உன்னை மாதிரி நான் தியாகத்தலைவன் எல்லாம் இல்லை, எனக்காக நீ என்னை விட்ட மாதிரி உனக்காக எல்லாம் உன்னை விட மாட்டேன், நான் நல்லவன் எல்லாம் இல்லை! பிடிக்குதோ பிடிக்கலையோ உனக்கு நான்! எனக்கு நீ! அதுல எப்பவுமே எந்த மாற்றமும் கிடையாது ஓகே!” என்றான் தீர்மானமாக.

“பிடிக்காம எப்படி வாழ்றது? கட்டாயத்துக்காக எல்லாம் வாழ முடியாது”

“அப்போ பிடிச்சு வாழு! சிம்பிள்!” என்றான் அவனும் சுவரில் சாய்ந்து கால்களை நீட்டியபடி. அவன் பதிலில் அவள் முறைக்க,

“இங்க பாரு கல்யாணம் எப்படி எதுக்காக வேணும்னாலும் நடந்திருக்கலாம், அன்னிக்குப் ப்ரச்சனை எனக்கும் என் அப்பாவுக்கும், அதை உன் மண்டையில ஏத்திக்கிட்டது உன்னோட தப்பு” என்றதும்

“ஓஹ்! என் தப்பா? சும்மா வார்த்தைக்கு வார்த்தை மனைவின்னு சொல்றீங்களே என்னை உங்கம்மா எப்படி பேசினாங்க? ஒரு வார்த்தை அவங்களைக் கேட்டீங்களா? அதைக் கேட்டும் எனக்குக் கோவமே வரக்கூடாதா?” என்றாள் இன்னும் அந்த கோபம் தீராமல்.

“அந்த கோபம் தப்பில்லை! காட்டின விதம் தப்பு!” என்றவன் அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து

“ஆமா, பிடிக்கலன்னு சொல்ற, பிடிக்காத எனக்காக ஏன் யோசிச்சு எங்கிருந்தாலும் வாழ்கன்னு தாலியைக் கழட்டின? கொஞ்சுண்டு என்னைப் பிடிக்குமோ?” என்றான் கேள்வியாக…கொஞ்சம் கேலியாகவும்.

“தெரியல” என்றாள் உண்மையாக.

“தெரிஞ்சுக்குறியா?” என்றவனின் சுவாசமும் வாசமும் அவள் தேகம் தீண்டிட, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள். அவளின் தயக்கம் புரிந்தவன்

“ஹேய் இஞ்சி! பிசிக்கலி மட்டுமில்லை மெண்டலி ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்கலாம்” என்றதும் அவள் மௌனமாகிவிட, அந்த பேச்சை விட்டவன்

“சமைச்சியா?” என்றான்.

“இல்ல”

“ஓகே நான் ஆர்டர் பண்றேன்” என்றவன் ஆர்டர் செய்துவிட்டு அவளைப் பார்க்க அசையாமல் அவள் உட்கார்ந்திருக்க

“இங்க பார், சும்மா பிடிக்கும் பிடிக்காது எல்லாம் யோசிக்காத, பொறக்கும்போது அம்மா, அப்பா, அத்தை , மாமாவெல்லாம் நமக்குத் தெரியாது, இந்த உறவுன்னு தெரிஞ்சதும் பாசம்தானா வருதுதானே? அப்படி நினைச்சிக்கோ, ப்ர்ஸ்ட் என்னை நினைக்க ஆரம்பி, அப்புறம் பிடிக்கும்” என்றவனை நோக்கித் திரும்பியவள்

“நீங்க அப்படி நினைக்கிறீங்களா?”

“ஹாஹ! நான் ஸ்டேஜ் 2” என்று சொல்லித் துண்டை எடுத்தவன் குளிக்கப்போக,

‘ஸ்டேஜ் 2 வா, நினைக்கனும், பிடிக்கனும்னா, இவனுக்கு என்னைப் பிடிக்குமா?’ என்று போனவனையே பார்த்திருந்தாள் வஞ்சி.

✅ End of Episode 6
How did you feel about this episode?
❤️ 5 👏 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

பிடித்தவர்களுக்காக 

பிரியும் மனைவி 
பிடித்தம் இல்லையென்றாலும் பிடிவாதமாய் இருக்கும் 
புருஷன்...
பிரமாதம்
❤️ 1 more...
Saraswathi Reader 4 weeks ago

Stage 2 , அழகா இருக்கு சொன்ன விதம்

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top