Episode 5
ஜனார்த்தனின் வார்த்தைகள் மலரின் மனதை வதைத்தன, பெருந்தவறோ நான் செய்தது என்ற எண்ணம் முதல்முறையாகத் தோன்றியது. அதுவரையில் அவள் வரை மட்டுமே யோசித்தாள், என்னைப் பேசிவிட்டான் ஜனா என்பதிலே மனம் நிலைத்து களைத்துப் போயிருக்க, இப்போது அமிழ்தாவின் விஷயத்தில் பெருங்கொடுமை ஒன்றை தான் கணவனுக்குச் செய்துவிட்டோம் என்ற உணர்வு உள்ளத்தில் ஓங்கியெழுந்தது.
ஜனாவின் விழிகள் மொழிந்த வலியினில் இவளின் அகம் அவனுக்காகத் துடிக்க, குற்றவுணர்வு வளர்ந்து கிளர்ந்து அவளைத் தளரச் செய்ய, நின்ற இடத்திலேயே உட்கார்ந்தவள் அமிழ்தாவைப் பற்றி கூட நினைக்காது அழுதாள். காலில் முகம் புதைத்து யார் முகமும் பார்க்காத ஒரு அழுகை.
அக்கா அழுவது கண்டு கிருஷ்ணப்ரியா சமாதானம் செய்ய போக, அவளைத் தடுத்துவிட்டார் முரளிதரன்.
சுதந்திர மலருக்கு தாங்கவோ தாளவோ முடியாத ஒரு நிலை, ஜனாவைப் பார்க்காத வரையில் அவளிடம் ஒரு பிடிவாதம்! பெருங்கோபம்! நேற்று பார்த்தபோதும் அவன் அவளிடம் நடந்த விதம் இன்னும் கோபத்தைத் தூண்டித்தான் விட்டது. ஆனால் இன்று அவன் அமிழ்தாவைக் காண தவித்த தவிப்பினில் இவள் மனம் உள்ளே துவள, அதுவரை இருந்த முட்டாள்தனமான பிடிவாதமும், முரட்டுத்தனமான தைரியமும் காணாமல் போயின.
அக்கணம் எதுவும் செய்யவோ நினைக்கவோ தோன்றவில்லை, அவளின் ஜனாவை அவள் பழிவாங்கிவிட்டாள், அதுதான் மெய்!
காதல் தந்தவன் காயம் தர, இவளும் இப்போது அதையே தான் அவனுக்கு செய்திருக்கிறாள். காயங்கள், அதுவும் தீராதவை! மாற்றவே முடியாதவை!
சிறிது நேரம் மகளை அழவிட்ட முரளிதரன்,
“சுதந்திரா போதும் அழாத, உன்னைப் பார்த்து அமிழ்தா ஆரம்பிப்பா” என்று சொல்ல, மகளின் அருகே உட்கார்ந்த சாரதா,
“அழாத மலர்” என்றதும், அழுகை நிற்கா குரலில்,
“மா, நான் தப்புப் பண்ணிட்டேன்மா” என்றாள்.
“மலர் தப்பு பண்ணிட்ட விடு, ஆனா சரி பண்ணிக்கலாம்” என்றவர்,
“நீ முதல்ல எழுந்து முகம் கழுவிட்டு அமிழ்தாவைப் பாரு, நம்ம அப்புறம் பேசலாம், அழாம எழுந்திரு முதல்ல” என்று சொல்ல, மலரும் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து முகம் கழுவிப் போனாள். பாத்ரூமினுள் சென்றவளுக்கு அந்த தனிமையில் இன்னும் அழுகைப் பெருகியது. தலைசுற்றுவது போல் இருக்க, முகத்தில் வேகவேகமாகத் தண்ணீர் அடித்தாள்.
இதே போன்ற சூழலில் அவள் ஒரு நாள் சிக்கியிருக்கிறாள், அன்றும் ஜனாதான் அதற்குக் காரணம். ஆனால் இப்போது தவறென்பது இவள் மீதல்லவா, அதை உணராமல் இருந்த போது இல்லா வலி இப்போது உணர்கையில் ரணமாக வலித்தது.
இங்கு மலரோ என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அங்கு சௌந்தர்யா தன் கணவருடன் மலரின் வீட்டிற்குத்தான் வந்து கொண்டிருந்தார்.
அவருக்கு எதாவது செய்து மகனையும் மருமகளையும் ஒன்று சேர்க்க வேண்டும், அவரைக் கேட்காமல் செய்த திருமணம், அடுத்த ஏன் என்று அவருக்குத் தெரியாத ஒரு பிரிவு, மலர் இவனுடன் வாழாமல் பிரிந்துவிட்டாள் என்று தெரியும். மகன் இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேறொரு நினைப்பின்றி மலரை நினைக்கிறான் என்பது அவருக்குப் புரிய, மகனிடம் பல முறை சொல்லி விட்டார், மலரிடம் பேசு என்று, அவன் கேட்கவில்லை. இப்போதும் அவன் நேரம் கேட்க அவர் மனம் கேட்கவில்லை.
மகனிடம் பேசியவர் அதைத் தன் கணவர் ஜகனிடம் சொல்ல, அடுத்த நாள் இருவருமே திருப்பதி கிளம்பிவிட்டனர், மகனுக்காக வேண்டிக்கொள்ள. அதை முடித்து வீட்டிற்குப் போனவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் மலரிடம் பேச அவள் வீட்டிற்குப் போனார்கள்.
வாசல் மணி சத்தம் கேட்டு கிருஷ்ணா கதவினைத் திறந்தவள்,
“வாங்க ஆன்ட்டி, வாங்க அங்கிள்” என்று வரவேற்க, அவர்களின் வருகையை முரளியோ சாரதாவோ எதிர்ப்பார்க்கவில்லை. இருந்தாலும் வரவேற்று உட்கார சொல்ல, சங்கடமான அமைதி. முரளியும் சாரதாவும் ஜனாவோ வர்ணவியோ சொல்லி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைத்தனர்.
ஜனா வீடு போய் சேரவில்லை என்பது யாருக்கும் தெரியாமல் போக, வர்ணவியை பிரசன்னா வீட்டில் விடும் முன் இவர்கள் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தனர். பிரசன்னாவும் அவளிடம்,
“அத்தை மாமா வீட்டுக்கு வந்த அப்புறம் இந்த விசயத்தை பொறுமையா சொல்லு, ஜனாகிட்ட போன்ல பேசின மாதிரி அவங்களையும் டென்ஷன் பண்ணாத, இந்த ஜனாவை வேற இன்னும் காணும்” என்று சொல்லிச் சென்றிருந்தான். அதனால் அவள் அப்பா அம்மாவிற்காக காத்திருக்க, வீட்டில் இருந்த தன் மகள் சாத்வியிடம் அவர்கள் எங்கே என்று கேட்க,
“தாத்தா சௌமிம்மா அவங்க ப்ரண்ட் வீட்டுக்குப் போறேன் சொல்ல சொன்னாங்க ம்மா” என்று சொல்லியிருந்தாள்.
அந்த சங்கட அமைதியை சௌந்தர்யா கலைத்தார்.
“எப்படி இருக்கீங்க அண்ணா?” என்று முரளியிடம் அவர் கேட்க,
“நல்லாயிருக்கோம்மா” என்றவர் தயக்கத்துடன்,
“அமிழ்தா பத்தி சொல்லக் கூடாதுன்னு இல்ல, மலர் ரொம்ப கலாட்டா பண்ணிட்டா, ஃபாரீன்ல இருக்கும்போது எதாவது பண்ணிக்குவாளோன்னு ஒரு பயம், அதான் சொல்லாம இருந்துட்டோம்” என்றார்.
இப்போது தப்பு செய்துவிட்டேன் என்கிற மலர் தான், இத்தனை நாளாக,
“நீங்க என்னைப் பத்தியோ அமிழ்தா பத்தியோ ஜனா கிட்ட இல்ல அவன் வீட்ல சொன்னீங்க நான் என்ன செய்வேன் எனக்கே தெரியாது, என் இஷ்டப்படி வாழ விடலன்னா எனக்கு சாகறதைத் தவிர வேற வழியில்லை” என்று மிரட்டினாள்.
ஜகனும் சௌந்தர்யாவும் ‘யார் அமிழ்தா?’ என்று ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அதற்குள் கிருஷ்ணா அக்காவின் அறைக்குள் சென்றவள்,
“அக்கா வர்ணவிக்கா அப்பா அம்மா வந்திருக்காங்க” என்றதும் மலருக்குப் பெரிய பயம், நேற்று தனியாக சென்றதால் தைரியமாக எல்லாரையும் எதிர்கொண்டாள், இப்போது வர்ணவியும் ஜனாவும் பேசியதே ஆறாமல் இருக்க, மிகுந்த தயக்கம் அவளிடம். அவள் தோளில் உறங்கிய மகளை விடாது அப்படியே அவள் வெளியே வர,
“மலர், வா வா” என்று சௌந்தர்யா அழைக்க, அவள் தோளில் உறங்கிய குழந்தை யாரென அவர்கள் பார்க்க,
ஜகன் அதற்குள்,
“முரளி அமிழ்தான்னு சொன்னீங்களே அது யாரு?” என்றதும்தான் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது புரிந்தது.
“வர்ணவி, ஜனா எதுவும் உங்க கிட்ட சொல்லலையா ஜகன்?” என்று முரளி கேட்க,
“இல்லையே, ஏன்? என்ன விஷயம்? நாங்க இரண்டு பேரும் காலையில திருப்பதி போனோம், வீட்டுக்குப் போய்ட்டு அப்படியே இங்க வரோம், வீட்ல வர்ணவி இல்லையே” என்றார் ஜகன்.
மலர் அருகே வர, சாரதா உடனே சௌந்தர்யாவைப் பார்த்து,
“இதுதான் அமிழ்தா, உங்க பேத்தி” என்றார் பட்டென. அவர் சொன்ன கணம் முதல் ஒரு நிமிடம் கனமானதொரு அமைதி. சௌந்தர்யாவிற்கும் ஜகனுக்கும் எதிர்ப்பார்க்கவே முடியாத ஒரு அதிர்வு.
சௌந்தர்யா கோபத்துடன் மலரைப் பார்த்து,
“ஏன் மலர் இவ்வளவு பெரிய விஷயம் எங்ககிட்ட சொல்லாம இருந்த? நீ யூஎஸ் போகும்போதே கன்சீவா இருந்திருக்க அப்படிதானே? ஏன் அண்ணா அவதான் சொல்லாம இருந்துட்டா, நீங்க சொல்லியிருக்கலாமே?” என்று மலரைப் பெற்றவர்களைப் பார்க்க,
“எங்களுக்கே இவ சொல்லாம இருந்தாம்மா, அங்க போன பின்னாடிதான் எங்களுக்கே தெரியும்” என்று முரளிதரன் சொன்னதும், கோபம் அடங்காத சௌந்தர்யா,
“அப்போ எங்ககிட்ட சொல்லியிருக்கணும்தானே அண்ணா?” என்று அப்பாவிடம் சௌந்தர்யா கோபமாகப் பேசியது பொறுக்காத சுதந்திர மலர்,
“ஏன் ஆன்ட்டி இப்போ கேள்வி கேட்கிறீங்களே இத்தனை நாளா உங்களுக்கு எங்க வீட்டுக்கு வழி தெரியாமதானே இருந்துச்சு?” என்றாள். அதில் கோபம் என்பதனை விட வருத்தம் அதிகமாக இருக்க,
“மலர்!” என்று சாரதா மகளைக் கண்டித்தார்.
“விடுங்கம்மா, மலர் சொல்றது சரிதானே சௌந்தர்யா?” என்று ஜகன் மலரின் பக்கம் நின்று பேசினார். இவ்வளவு பெரிய விஷயம் மலர் சொல்லவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை.
“என்ன சரி? அப்போ வருவுக்கும் ஜனாவுக்கும் தெரியுமா?” என்று சௌந்தர்யா பொதுவாய்க் கேட்க, முரளிதரன் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கையில் ஜகனிற்குப் பிரசன்னாவிடமிருந்து அழைப்பு.
“மாமா, ஜனாவுக்கு ஆக்ஸீடெண்ட் ஆகிடுச்சு, ‘நலம்’ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க உடனே வாங்க” என்று சொல்லிவைத்துவிட, ஜகன் இந்த விஷயம் சொன்னதும் அதுவரை இருந்த துணிச்சல் எல்லாம் மலரிடம் கரைந்து போக, காயம் எல்லாம் மறந்து போக, காதல் பிரவாகம் எடுக்க ஜனாவும் அவனின் மீதான காதல் மட்டுமே பெருகியெழ, அப்படியே கண்களில் நீரோடு அவள் நிற்க,
ஜகனும் சௌந்தர்யாவும் கிளம்ப,
“ஆன்ட்டி நானும் வரேன்” என்றாள் சுதந்திர மலர். அவள் மட்டுமல்லாமல் அவளுடன் அமிழ்தா, முரளிதரன், சாரதா என்று எல்லாரும் சென்றனர். கிருஷ்ணாவும் வடிவும் மட்டுமே வீட்டில்.
மலரின் அழுகையில் அமிழ்தா விழித்து,
“மா, வை க்ரை?” என்று சோகமாக கேட்க, பேத்தியின் மழலையை முதன் முதலில் கேட்டும் உவகை கூட இல்லாது பதட்டத்துடன் பயணித்தனர் சௌந்தர்யாவும் ஜகனும். ஜகன் டென்ஷனாக இருக்க முரளியே ‘நான் டிரைவ் பண்றேன்’ என்று சொல்லி காரை ஓட்டினார்.
“பேபி, ப்ளீஸ் அம்மா இஸ் நாட் க்ரையிங்” என்ற மலருக்கு என்ன முயன்றும் அழுகை அடங்கவில்லை.
சௌந்தர்யாவிற்கு இவளை என்ன செய்யலாம் என்று கோபம் வந்தது, அவளை மட்டுமில்லை மகனையும். இவ்வளவு காதல் வைத்து யாராவது பிரிந்து இருப்பார்களா என்று அவருக்கு எரிச்சல். அப்படியென்ன ஈகோ? என்று கோபம்கொண்டார்.
“மலர், இப்படி அழுது நீ என் பேத்தியை பயமுறுத்தாத, ஜனாவுக்கு ஒன்னுமாகாது” என்று அவருக்கும் அவளுக்கும் சேர்த்தே ஆறுதல் சொல்லிக்கொண்டார்.
மருத்துவமனை சென்று பார்க்க, ஜனா அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தான். அங்கு பிரசன்னாவும் வர்ணவியும் மட்டுமே இருந்தனர். மலரையோ இல்லை அவள் குடும்பத்தையோ யாரும் அங்கே எதிர்ப்பார்க்கவில்லை. பிரசன்னாவின் பார்வை தன் நண்பனின் மகளைத் தான் சுற்றிவந்தது. குட்டி வர்ணவி போலவே இருந்த அமிழ்தா அம்மாவின் தோளில் சாய்ந்தவண்ணம் எல்லாரையும் பார்த்து பார்த்து விழிகளை மூடினாள்.
ஜனாவிற்கு உள்ளே சிகிச்சை நடக்க, மலரைப் பார்த்த வர்ணவிக்கு சினேகம் எல்லாம் தோன்றவில்லை, மாறாக ஒரு வெறுப்புதான் தோன்றியது.
“ஏம்மா இவ ஏன் இங்க வந்தா? இவளால் தான் அண்ணாவுக்கு இப்படி ஆச்சு தெரியுமா? இவளைப் பார்க்கப் போய்ட்டு இப்படி ஆக்ஸீடெண்ட் ஆகி கிடக்குறான்” என்றாள் அழுகையுடன்.
“வரு, எல்லாம் தெரியும் நீ அமைதியா இருடா” சௌந்தர்யா மகளை அடக்க பார்க்க, எப்போதும் வர்ணவி இப்படி பேசவே மாட்டாள், ஆனால் தன்னை முட்டாள் ஆக்கியிருக்கிறாளே தன் தோழி என்ற நினைப்பு, இவ்வளவு பெரிய விஷயம் என்னிடம் என் அண்ணனிடம் சொல்லாமல் இருந்திருக்கிறாளே என்ற வருத்தம் அது மட்டும் தீராமல் அவளை வருத்தியிருக்க,
“நான் இருக்க மாட்டேன்மா, இவளை எவ்வளவு நம்பினேன், இத்தன வருஷம் இவ எனக்கு உண்மையாவே இல்லை, பிரசன்னாவுக்கு இவளைப் பிடிக்காதுன்னு தெரிஞ்சா கூட இவ ப்ரண்ட்ஷிப் வேணும்னு நான் மாமா கூட எவ்வளவு சண்டைப் போட்டிருக்கேன், ஆனா இவ என் ப்ரண்ட்ஷிப்பையும் மதிக்கல, என் அண்ணாவோட காதலையும் மதிக்கல” என்று கத்த,
பிரசன்னா மனைவியிடம்,
“ஹாஸ்பிட்டல்ல கத்தாத வர்ணவி” என்று அதட்ட, அவள் இன்று யார் பேச்சும் கேட்கும் நிலையில் இல்லை.
மலர் சுற்றியுள்ள எதையும் கருத்தில் கொள்ளவில்லை. கன்னமெல்லாம் கண்ணீர்த்துளிகள்! அதன் தடங்கள்!
அந்த அழுகை கூட வர்ணவிக்குப் பிடிக்கவில்லை. ‘என்ன திமிராகப் பேசிவிட்டு இப்போது அழுகையைப் பார்?’ என்று நினைத்தவள்
“இப்போ ஏன் நீ அழுது சீன் போடுற டி? அண்ணா மேல உண்மையில உனக்கு அக்கறை இருந்துச்சுன்னா நீ அவனை விட்டுப் போவியா? இல்ல இவ்வளவு பெரிய விஷயம் சொல்லாம இருப்பியா?” என்று திட்டினாள். அதில் இன்னும் மலருக்கு அழுகை கூட,
“இப்போ ஏன் வந்த நீ? உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல, உன்னாலதான் என் அண்ணா இப்படி கிடக்குறான், போடி முதல்ல” என்று கத்த, மலருக்கும் சுர்ரென்று ஏறியது.
“எதுக்கு இப்போ நீ கத்துற? ஆமா நான் விட்டுப் போனேன்தான், அதனால உன் லைஃப்ல என்ன ஆச்சு, நீ குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா இருக்க தானே? அண்ணன் அண்ணன் குதிக்கிறியே, என்ன பண்ணின அவனுக்காக?” என்று மலர் திருப்பிக் கேட்க வர்ணவி பேச வர, கை நீட்டி அவளைத் தடுத்தவள்,
“இங்க பார், ஜனா என்னோட ஹஸ்பண்ட், என்னைக் கேள்வி கேட்கிற உரிமையெல்லாம் உனக்குக் கிடையாது, அவர் என்னைக் கேள்வி கேட்கட்டும், நீ அவர் தங்கையா இரு, எனக்கு நாத்தனாரா கேள்வி கேட்கிற வேலை வேண்டாம். இது எங்க வாழ்க்கை, அதுல நீ இல்ல, யாரும் தலையீட வேண்டாம்” என்றாள் அழுத்தமாக.
கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் அவளை வித்யாசமாகப் பார்க்க, பிரசன்னா மட்டும்,
‘அன்னிக்கு இந்த ஜனாவும் இதையே தான் சொன்னான், அதே பேச்சு’ என்று நினைத்தான். வர்ணவியின் கையைப் பிடித்த பிரசன்னா அவளை தன்னருகே உட்கார வைத்து,
“அடிச்சா பார்த்தியா உன் ப்ரண்ட் அந்தர் பல்டி, அன்னிக்கு இவளைப் பார்த்துட்டு உன் அண்ணாவும் இதையே தான் சொன்னான், ஸோ நீ ஷட் அப் பண்ணிட்டு இருக்கிற” என்றான் கட்டளையாக.
இரவு ஒன்பது மணி போல, ஜனா கண்விழிக்க யார் அனுமதியும் மலர் எதிர்ப்பார்க்கவில்லை, காதல் மட்டுமே உந்தித்தள்ள வேகமாக உள்ளே போனாள். மலர் ஜனாவைப் பார்க்க தலையில் ஒரு கட்டு, வலக்கையில் அவள் வீட்டில் குத்திக் கொண்டது காயம் ஆகியிருக்கும்போல, அங்கு ஒரு கட்டு, இடக்கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. ஜனாவோ புன்னகையுடன் அவளைப் பார்த்தவன்,
“ஏய் ராங்கி! எனக்கு ஆக்ஸீடெண்ட் ஆனதும் மைசூர்ல இருந்து வந்துட்டியா?” என்று உற்சாகமாகக் கேட்கவும்,
“ஜனா!” என்ற மலருக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன உளருறீங்க ஜனா? என்னை டென்ஷன் பண்ணாதீங்க?” என்று மலர் அழுகையுடன் சொல்ல,
“என்ன மலரே நீ! சின்ன ஆக்ஸிடெண்ட், அவ்வளவுதான்! வை டென்ஷன்? ஆமா நீ வந்திருக்க, வரு சொன்னாளா? அம்மா அப்பா எல்லாம் எங்க, உன்னை எப்படி விட்டாங்க உள்ள?” என்று அவன் சரளமாக மிக மிக சாதாரணமாகப் பேச மலருக்குத் தலைசுற்றியது.
“ஜனா, நான் மைசூர்ல இருந்தது நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி” என்று அவள் சொல்ல,
“என்ன நமக்குக் கல்யாணமாகிடுச்சா?” என்றான் அதிர்ச்சியாக, அவனது அதிர்ச்சி மலரையும் தொற்றிக்கொண்டது.
✅ End of Episode 5
Nice
பழச மறந்துட்டானா?
Yes
குழந்தையை நீ மறைத்தாய்