Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 15

காதல் 15

அந்தவார இறுதியில் சுதந்திர மலர் வழக்கம்போல் நூலகம் போனவள், ஜனாவிற்காகக் காத்திருந்தாள். அவன் தந்த ‘சிறு இசையை’ அவனிடம் மீண்டும் சேர்ப்பிக்க. ஜனாவும் தவறாமல் வந்தவன் மலரைப் பார்த்துப் புன்னகைத்தவாறே,

“என்ன வாராவாரம் இங்க வருவ போல?” என்று கேட்டபடியே அவளருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். அது ஆங்கில நாவல்கள் இருக்கும் பகுதி. கூட்டம் குறைவாக இருக்க, இவர்கள் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தனர்.

“இப்போ காலேஜ்ல பெருசா எந்த வொர்க்கும் இல்ல, அதனால வந்தேன்”

“ஏன் லைப்ரரி? பீச், தியேட்டர்னு போகலாம் தானே?”

“போகலாம், ஆனா என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் ரொம்ப தூரம், வருதான் பக்கத்துல இருக்கா, எனக்கும் அவளுக்கும் ஆசைதான். ஆனா உங்க வீட்லதான் எப்பவும் அவளுக்கு செக்யூரிட்டி இருக்கே. நாங்க வெளியே போகணும்னா பெர்மிஷன் வாங்கவே ஆறு மாசம் ஆகிடும்” என்று புலம்ப,

“அதை விடுங்க மேடம்? புக் கொடுத்தேனே படிச்சு முடிச்சீங்களா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் கொடுத்த அன்னிக்கே முடிச்சிட்டேன், உங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லி கொடுக்கலாம்னு வரு கிட்ட கொடுக்கல, தேங்க்யூ” என்று சொல்லி புத்தகத்தை நீட்ட,

“படிச்சிட்டு பிடிச்சதான்னு சொல்லவே இல்லையே சுதந்திரா?” என்று கேட்க,

“ரொம்ப நல்லா இருந்தது, நான் இதுவரைக்கும் இவங்க புக் படிச்சதே இல்லை, எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒரு சிறு இசைதான், மூக்கம்மா ஆச்சி மாதிரிதான் எங்கத்தாவும் நிறைய கதை சொல்லுவாங்க” என்றவளின் பேச்சுக்குத் தலையசைத்தான் ஜனா.

“எஸ், எனக்கும் அந்த கதை ரொம்பப் பிடிக்கும். மனுஷங்களோட குறையை கூட அழகா, எல்லாத்திலேயும் நல்லதைப் பார்க்கிற ஒரு எழுத்து வண்ணதாசனுடையது அண்ட் அவங்க வட்டார வழக்கு ரொம்ப எளிமையா இருக்கும், அவரோட கவிதைகள் இன்னும் நல்லா இருக்கும்”

“நான் கவிதையெல்லாம் படிச்சதே இல்லை”

“அட, கவிதைப் படிக்க மாட்டியா சுதந்திர மலர்?”

“உன் பெயர் ரொம்ப அழகு! ஹைக்கூ கவிதை மாதிரி. வர்ணவி உன்னோட பெயரை முதல்தடவை சொல்லும்போதே கவனிச்சேன், யார் வச்சா இப்படி ஒரு பெயர்?”

“எங்கப்பாதான், சுதந்திர தினத்தன்னைக்குத்தான் நான் பிறந்தேன், அதனால எனக்கு இந்த பெயர், என் தங்கச்சி கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்குப் பொறந்தா, ஸோ அவ கிருஷ்ணப்ரியா” என்று சொல்லி மலர் சிரிக்க,

“ஹாஹா, நல்ல ஹிஸ்டரிதான் போ, குடியரசுத் தினத்தில பொறக்கல, அப்புறம் குடியரசின்னு வச்சிருப்பாங்க. நான் மலர்னு கூப்பிடவா? ரொம்ப பெருசா இருக்கு உன் பெயர்?” என்று ஜனா அனுமதி கேட்டான்.

“ஏன் மலரோட சுதந்திரத்தைக் கட் பண்றீங்க?” என்று மலர் அவனைப் பார்த்துக் குறும்பாய்க் கேட்க,

“மலரோட சுதந்திரம் மலர் கிட்டதான் இருக்கு, யாராலையும் அதை பறிச்சிக்க முடியாது” என்று அவன் வாதிட்டான்.

“ஓகே ஒகே, நான் என் சப்ஜெக்ட் புக்ஸ் கொஞ்சம் பார்க்கணும், கிளம்புறேன் பை” என்று சொல்லி கிளம்பிட ஜனாவும் அவளுக்கு விடைகொடுத்தான்.

அடுத்த இரண்டு வாரங்கள் மலருக்கு இண்டர்னல்ஸ் இருக்க, அவள் நூலகம் போகவில்லை. அதன்பின் மலர் ஒரு மாலைப்பொழுதில் போக, ஜனாவும் அப்பொழுதுதான் நூலகம் விட்டு வெளியே வந்தான். இவளைப் பார்த்து,

“என்ன மலர்? இன்னும் அரைமணி நேரத்துல க்ளோசிங் டைம், இப்போ வந்திருக்க?” என்று விசாரிக்க,

“ஒரு புக் வாங்கி ஒரு மாசம் மேல ஆச்சு, இன்னும் ரீடர்ன் பண்ணல, அதான்” என்று சொல்லி உள்ளே போனாள். அவள் வெளியே வரவும் அவளிடம் பாதாம் கீர் ஒன்றை நீட்டினான் ஜனா.

“இல்ல வேண்டாம்” என்று மலர் மறுக்க,

“ஓஹ், புக்ஸ் மட்டும்தான் மத்தவங்க கொடுத்தா வாங்கிப்பீங்களா? இல்ல நான் தெரியாதவன்னு வாங்க மாட்டேங்கிறியா மலர்?” என்று அவன் கிண்டல் செய்தான்.

“இல்ல அதெல்லாம் ஒன்னுமில்ல, நீங்க வருவோட அண்ணான்றதால நான் பேசவே செய்றேன். எனக்குப் பாதாம் மில்க் பிடிக்காது”

“பாதாம் மில்க் நல்லா இருக்கும் மலர் இங்க, சும்மா டேஸ்ட் பண்ணி பாரு, எதையும் நம்ம சோதிச்சுப் பார்க்காம பிடிக்கும் பிடிக்காதுன்னு முடிவு பண்ணக் கூடாது” என்று சொல்லி நீட்ட, மலர் கொஞ்சமாய் வாயில் ஊற்றிப் பார்க்க, உண்மையில் தேன்சுவையாய் இருக்க,

“நல்லா இருக்கு” என்றாள் கொஞ்சும் சிரிப்போடு.

“அப்போ குடிச்சிடு” என்று அவனும் சிரிப்போடு சொல்ல, அவளும் மறுக்காது பருக, ஜனாவும் அவன் கையில் உள்ளதைப் பருகியவன்,

“அது என்ன வருவோட அண்ணன்றதால பேசுறேன்னு சொல்ற? அப்போ இந்த ஜனா உனக்குப் ப்ரண்டே இல்லையா?” என்று அவன் கொஞ்சம் கடுப்போடு பேசினான்.

சுதந்திர மலர் அவனை நேர்ப்பார்வைப் பார்த்து,
“என்னை விடுங்க, வரு இப்போ தெரியாத ஒரு ஆள்கிட்ட பேசினா நீங்க சும்மா இருப்பீங்களா? இல்லை உங்க தங்கையைப் பேசத்தான் விடுவீங்களா? உங்க வீட்ல இருந்து இருபது நிமிஷம் இங்க வர, அதுக்கே தனியா விடாம கூட துணைக்கு நீங்க வரீங்க, அப்படி இருக்கப்ப நான் மட்டும் எப்படி எல்லார்கிட்டவும் பேசுவேன்னு நினைக்கிறீங்க, இப்பவும் சொல்றேன் நீங்க வருவோட அண்ணாவா இல்லைன்னா நான் பேசவே மாட்டேன்” என்றாள்.

“அப்போ அன்னிக்குப் ப்ரண்ட்ஸ்னு சொன்னியே?”

“ப்ரண்ட்லியா இருக்கறது வேற, ப்ரண்டா இருக்கறது வேற, இரண்டு தடவ பார்த்த உடனே ப்ரண்ட் ஆகிட முடியுமா?” என்று மலர் வாதிட,

“அம்மாடி! சரியான வாய் உனக்கு, நல்லா பேசுற நீ” என்று அவன் திட்டுவது போல் பாராட்டினான்.

“தேங்க்யூ” என்று மலரும் அதனை ஏற்றுக்கொள்ள ஜனா மலரிடம்,

“தானாகத் தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று”
என்றான் வானில் மெல்லிய வெளிச்சமாய் வெண்மேகத்துடன் கொஞ்சம் கொஞ்சமாய் உதயமாகிய வெண்ணிலவைப் பார்த்தவாறே.

“அட நீங்க கவிதையெல்லாம் சொல்லுவீங்களா? செம! சிம்பிளா இருந்தாலும் ரொம்ப நிஜம், நீங்க சொல்லித்தான் எனக்குத் தோணுது நான் நிலா எப்போ கடைசியாப் பார்த்தேன்னு கூட தெரியல” என்று அவள் பேசிக்கொண்டே போக,

“இவ்வளவு நல்ல கவிதை என்னோடதுன்னு சொல்ல ஆசைதான், ஆனா இது வண்ணதாசன் எழுதின ‘நிலா பார்த்தல்’. இன்னும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு கூட இருக்கு”

“நேரடி வானத்தில்
தெரிவதை விடவும்
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்” என்றவன் அடுத்த கவிதையினை ரசித்து சொன்னான்.

“நீங்க சொல்றதைக் கேட்ட அப்புறம் எனக்கே இதைப் படிக்கணும் போல இருக்கு, நீங்க பி.ஆர்க் தானே படிச்சீங்க, எப்படி புக்ஸ் மேல இவ்வளவு இன்ட்ரஸ்ட்?”

“படிப்புன்றது வேலைக்கு, வாசிப்புன்றது வாழ்க்கைக்கு. எங்கம்மா நிறைய படிப்பாங்க. அவங்க கிட்ட இருந்து வந்திருக்கும் போல இந்த பழக்கம். உனக்கு அடுத்த தடவ வரப்ப கல்யாண்ஜியோட கவிதைப் புக் தரேன்” என்று சொல்பவனிடம் தானாய் ஒரு நெருக்கம் உருவாகியது. நமக்குப் பிடித்ததை செய்கிறவர்கள் தானாய் நமக்குப் பிடித்தவர்களாகிப்போகின்றனர்.

“நீங்க யாருக்கும் புக்ஸ் தர மாட்டீங்கன்னு வரு சொன்னா…எனக்குத் தரிங்க?” என்று வெகு நாளாய் கேட்க நினைத்ததைக் கேட்டாள் சுதந்திர மலர்.

“யாருக்கும் தர மாட்டேன்தான், ஆனா யாருக்குத் தரனுமோ அவங்களுக்குத் தருவேன். புக்ஸை நீ என்னை விட நல்லா பார்த்துக்கிற” என்றான் பாராட்டாக.

“அப்பா! என்னம்மா பேசுறீங்க நீங்க? பேசாம நீங்க ஏன் எழுத கூடாது?” என்றாள் அவனை வியந்து ரசித்தவளாக.

“பேசுறதெல்லாம் எழுதிட முடியாது. எழுத்துன்றது ஒரு உணர்வு, எனக்கு அப்படியொரு எண்ணம் எப்பவும் இருந்தது இல்லை. ஆனா நிறைய எழுத்தை வாசிக்கனும். எழுத்து ஒரு அழகான டைம் ட்ராவல், எல்லா காலத்துக்கும் நம்மை அழைச்சிட்டுப் போய்டும். கொஞ்சம் மோசமான போதையும் கூட, நம்மை அழவச்சு சிரிக்க வச்சு மொத்தமா ஆட்டிவச்சிடும். கொஞ்சம் உஷாராவும் இருக்கணும்”

“இருந்த இடத்தில இருந்திட்டே எல்லா ஊருக்கும் காலத்துக்கும் எழுத்து நம்மைக் கொண்டு போய்டும், நீயும் நிறைய படி. நம்ம வாழ்ற காலத்தை விட அதிக காலம் வாழ்ந்த உணர்வை இந்த வாசிப்பு தரும் உனக்கு. உனக்கு இயல்பாவே இந்த ஆர்வம் இருக்கு, வருக்கெல்லாம் கொஞ்சமும் கிடையாது”

“எழுத்து மட்டும் விசாலமா இருந்தா போதாது, எண்ணமும் இருக்கணும். வர்ணவிக்கு அது பிடிக்கலன்னா அவளை விட்டுடனும். அவளோட எண்ணங்களை மதிக்கணுமில்லையா?”

“உன் ப்ரண்டைக் கொஞ்சமும் விட்டுக்கொடுக்க மாட்டியா நீ?”

“ப்ரண்ட் கிட்ட விட்டுக்கொடுக்கலாம், ப்ரண்டை விட்டுக்கொடுக்க முடியாது. செட் தோசை நீங்க இப்படி பேசலாமா?” என்று மலர் வம்பிழுக்க,

“என்ன செட் தோசையா?”

“பின்ன இல்லையா? நீங்களும் உங்க வாசுவும் ரொம்ப க்ளோசாமே, வரு சொல்லி இருக்கா” என்றதும் வாசுவின் நினைவில் உள்ளம் கனிந்தது ஜனாவுக்கு.

“எஸ், உண்மைதான். உறவைத் தாண்டி எனக்கும் அவனுக்கும் ஒரு பாண்டிங் உண்டு. அவன் இருந்தா நான் இங்க வரவே மாட்டேன், அவன் கூடவே சுத்துவேன்”

அப்படியே அவர்களின் பேச்சு நீண்டது. அந்த அந்திப்பொழுதில், மேக உலாவில், சத்தமற்ற கொன்றை மர நிழலில் சந்தமில்லா கவிதை சொல்பவனின் மீது உண்மையில் மனதோரமாய் மையல் ஒன்று எழவே செய்தது மலருக்கு. அவன் எழுத்தை ரசிக்க, அவள் அவனை ரசித்தாள். வர்ணவியின் அண்ணன் என்றான பின் அவளிடம் ஜனாவைப் பற்றி ஒருவார்த்தைப் பேசுவதில்லை மலர்.

ஜனாவின் மீதான ரகசிய ரசனைகள் அவளகம் அறிந்த ரகசியமாகவே இருந்தது. அதற்காக காதல் என்றெல்லாம் நிச்சயம் இல்லை. காதல் ஒரு ‘உரிமைக்கோறல்’.

அது அவன் சொல்வது போல் நிலாவினை ரசிக்கும் கவிஞனைப்போல் ஒரு உன்னத உறவு. நிலவு யாருக்கும் சொந்தமில்லை. அதே நேரம் எல்லாருக்கும் சொந்தம், உரிமையுடன் உறைவிடம் எடுத்துப் போக முடியாது, ஆனால் உரிமையாய், ஆவலாய் ரசித்து கடந்துவிடலாம். அப்படியான நிலைதான் மலருக்கு. ஆனால் ஜனாவின் மனது அப்படி நினைக்கவில்லை என்பது அடுத்த ஆண்டே தெரிந்து போனது.

இந்த இடைப்பட்ட ஒரு வருடத்தில் ஜனாவும் மலருக்குமிடையே காகிதங்கள் உலா போக, ஒத்த ரசனையில் ஒரு நட்புணர்வு இருவரிடமும் மலர்ந்து மணம் வீசியது. வர்ணவிக்கும் மலருக்கும் சண்டையென்றால் சமாதானம் செய்யும் அளவிற்கு ஜனா வந்திருந்தான். ஆனால் அதை மலர் கொஞ்சமும் விரும்பவில்லை.

அப்படிதான் ஒரு நாள் மலரின் கல்லூரியில் இண்டஸ்ட்ரீயல் விசிட்காக கொடைக்கானல் சென்றிருக்க, இரண்டாம் நாள் அதிகாலை மூன்று மணி போல் அவர்கள் கல்லூரி வந்திருக்க, பெற்றோரோ இல்லை பெற்றோர் அனுமதிப்பவரோ வந்தால் மட்டுமே மாணவிகளை கல்லூரியில் அனுப்புவார்கள். இல்லையெனில் கல்லூரி பேருந்தில் போக வேண்டும். அதுவும் எல்லா வழித்தடங்களிலும் போகாது. வர்ணவி வீட்டில் ஆள் வரும் என்பதால், தோழியைத் தன்னுடன் வருமாறு அவள் சொல்லி இருக்க அதற்கான அனுமதியும் முன்பே பெற்றிருக்க, இருவரும் ஜனார்த்தனுக்காகக் காத்திருக்க, அவன் வந்ததும் இருவரும் அவனுடன் போக, காரில் ஏறியதும் வர்ணவி,

“டேய் கொஞ்சம் சீக்கிரம் வந்தா என்னவாம்? எவ்வளவு நேரம் தூக்கத்தில வெயிட் பண்றது?” என்று தூக்க கலக்கத்தில் சிடுசிடுத்தாள்.

“பேசுவடி பிசாசே, காலையில உனக்காக என் தூக்கம் விட்டு எழுந்து வந்தேன் இல்ல, இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ டி நீ, அதான் காலேஜ் பஸ் நம்ம ஏரியாவுக்கு வருமில்ல, அதுல ஏறி வரதுக்கு என்ன? எல்லாத்துக்கும் நாங்க வேணும்” என்று அவனும் திட்ட,

“என்னைத் திட்டுறியா நீ? அப்பா கிட்ட போய் சொல்றேன் இரு, இனிமே நீ எதுக்கும் என்னை அழைக்க வரவேண்டாம்” என்று அழுகையுடன் பேசினாள். அதுவரை அண்ணன் தங்கை பேச்சு என்று அமைதியாய் இருந்த மலர்,

“ஷ், வரு இதுக்குப் போய் அழுவியா நீ?” என்று தோழியை சமாதானம் செய்ய,

“இப்படி எல்லாரும் இவளுக்கு செல்லம் கொடுக்கிறதாலதான் இப்படி இருக்கா இவ, என் மச்சான் என்னடான்னா சீக்கிரம் போடான்னு அலாரத்துக்குப் பதிலா அமெரிக்காவுல இருந்திட்டு என்னை எழுப்பிவிடுறான்” என்று திட்டினான்.

“அவளைக் குறை சொல்லி என்ன ஆகப்போகுது ஜனா, நாங்க எல்லாம் என்ன தானாவா வளர்ந்திருக்கோம்? தனியா வர அளவுக்கு இவளுக்கு நீங்க தைரியம் கொடுத்திருக்கணும்” என்று பட்டென்று பேசிவிட,

“என் தங்கச்சிட்ட பேசும்போது நீ பேசாத மலர்” என்று ஜனாவும் கோபத்துடன் பேச,

“என் ப்ரண்டைப் பேசினா நான் பேசுவேன், அதுவும் அவ மேல தப்பில்லன்னா கண்டிப்பா நான் பேசுவேன்” என்று மலரும் சரிக்கு சரியாகப்பேசினாள். வர்ணவியோ,

“எப்பா இரண்டு பேரும் வாயை மூடுறீங்களா? நீ என்னைத் திட்டவும் வேண்டாம் நீ எனக்கு சப்போர்ட் செய்யவும் வேண்டாம், தூங்க விடுங்கப்பா ப்ளீஸ்” என்று அவள் கண்கள் சொருகக் கேட்க, அந்த அதிகாலை மிதமான பனிக்கு இதமாய்க் கண்கள் இழுக்க, வர்ணவி உறங்கினாள்.

ஜனா மெதுவாகவே காரை செலுத்தியவன் ஒரு காஃபி கடையின் முன் நிறுத்தினான். மலரின் பக்கம் சென்று கதவைத் திறந்தவன்,

“காஃபி குடிக்கலாம் வா” என்று அவளை அழைக்க, இவன் அழைத்தான் நான் போக வேண்டுமா என்று நினைத்தவள் கோபத்துடன் அசையாமல் இருந்தாள்.

‘என்ன பிடிவாதம் இவளுக்கு?’ என்று ஜனாவிற்கும் கோபம் ஏறியது.

 

STAY TUNED WITH ME ON INSTAGRAM

INSTAGRAM ID

அரங்கேற்ற வேளை – ஒலிப்புத்தகம். கேட்டு மகிழுங்கள்!

 

 

✅ End of Episode 15
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

Mrs Beena loganathan Reader 2 months ago

எரியும் கோபமும் மெல்ல அணையும்

எளிதில் வந்த சோகமும் விலகும்
எஞ்சுவது நம்முள் இருக்கும் எதார்த்தமான புரிதலே

எப்போதும்....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top