Episode 4

“ஏய் வரு, இப்போ என்னாச்சு நீ அழாம சொல்றியா இல்ல உன் ப்ரண்ட் கிட்ட போய் கேட்கவா?” என்று பிரசன்னா அதட்ட,

“நீங்க ஒன்னும் கேட்க வேண்டாம், அவளுக்கும் எனக்கும் இனி எதுவும் இல்ல” என்றாள் அழுகையுடன். தன் போனை எடுத்து ஜனாவிற்கு அழைத்து,

“அண்ணா, எங்க இருந்தாலும் தாத்தா வீட்டுக்கு உடனே வா” என்றாள் அழுகுரலில். ஜனா,

“என்ன வரு ஆச்சு, ஏன் அழற?” என்று பதறி பதட்டமாகக் கேட்க,

“நீ வாடா” என்று கத்த, அவன் உடனே பிரசன்னாவிற்கு அழைக்க, பிரசன்னாவும் அதையே சொன்னான். அவன் வர்ணவியை இப்படி பார்த்ததே இல்லை, வர்ணவி கணவனிடம் எல்லாம் சொல்லிவிடுவாள், ஒளிவு மறைவே அவனிடம் கிடையாது. பிடிக்காத விஷயம் செய்தாலும் பிரசன்னாவிடம் எதையும் மறைக்கவே மாட்டாள். அதனால் அவள் போக்கிலே விட்டவன், அவள் பேச்சை எதிர்ப்பார்க்காது அவர்கள் தாத்தா வீட்டிற்கே வண்டியை விட்டான். அங்கு இவர்கள் மட்டுமே.

வர்ணவியின் அழுகை மட்டும் தீரவில்லை. பிரசன்னா அவள் அருகே உட்கார்ந்து,

“அவ எதாவது உன்னைத் திட்டினாளா?” என்றான் கோபத்துடன்.

“அண்ணா எங்க வரான் கேளுங்க” என்று அவள் அதையே பேச, அவனுக்கு இந்த சமாதானம் போன்ற சமாச்சாரம் எல்லாம் வராது, அவனை ராஜாவாகத் தான் ஜெயப்பிரகாஷ் வளர்த்தார். அவன் சொல்தான் எப்போதும்! எங்கேயும்! ஜனார்த்தன், வர்ணவி எல்லாம் கூட அவன் சொல் கேட்டுதான் நடப்பார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் ஜனார்த்தன் வந்துவிட, அவனைப் பார்த்ததுமே அதுவரை இருந்த அழுகை பெரியதாகி ஒரு பெரிய கேவல். அவளுக்கு அண்ணா என்றால் அவ்வளவு இஷ்டம், ஜனா பிரசன்னாவைப் போல் இல்லாமல் தங்கையைத் தோள் சாய்த்து,

“என்னாச்சு பாப்பா சொல்லுடா, நான் எவ்வளவு டென்ஷனா வந்தேன் தெரியுமா?” என்று பரிவாகப் பேச, அவளுக்கு மலர் தன்னிடம் குழந்தைப் பற்றி சொல்லாமல் மறைத்த வலியை விடவும் அண்ணன் எப்படி அதை தாங்குவான், அண்ணனுக்கு மலர் செய்ததை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. அழுகையுடனே அவள் மலரிடம் பேசியது எல்லாம் சொன்னவள் அண்ணனின் முகம் பார்க்க, ஜனாவின் முகத்தில் பேரதிர்ச்சி.

சுதந்திர மலர் தன்னை விட்டுச் சென்றதே அவனுக்குப் பெரிய அடி, தீரா வலி, அதிலிருந்தே அவன் இன்னும் மீளாமல் இருக்க, குழந்தை இருக்கிறது என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம், அதைப் போய் என்னிடம் மறைத்துவிட்டாளே என்று அவ்வளவு வேகம், கோபம்.

பிரசன்னாவிற்கு இதயமே நின்று துடித்தது. அவனால் நம்பவே முடியவில்லை.

“வர்ணவி, நிஜமா சொல்றியா, உளறாத” என்று அவளை அதட்ட,

“இதுல உளற என்ன இருக்கு மாமா? அவ யூஎஸ் போகறதுக்கு முன்னாடி கன்சீவா இருந்திருக்கா, அவ வேணும்னுதான் அண்ணா கிட்ட சொல்லாம இருந்திருக்கா, நான் இவன் குழந்தையைப் பார்த்தேன் சொல்றேன்” என்றாள் எரிச்சலுடன்.

ஜனாவிற்குப் பேச்சே வரவில்லை, வர்ணவியும் பிரசன்னாவும் ஜனாவின் முகம் பார்க்க, இறுகிப் போயிருந்தான், உள்ளுக்குள் பேரிரைச்சல்! நான் எவ்வளவு தவறு வேண்டுமானாலும் செய்திருக்கட்டும், ஆனால் இவ்வளவு பெரிய விஷயம் என்னிடம் மறைப்பாளா? கொஞ்சம் கூடவா என் காதலை அவள் உணரவில்லை என்று எண்ணங்கள் போக, உடைந்து கொண்டிருந்தான் ஜனார்த்தன்.

வீட்டிற்குப் போன மலருக்கு மனம் பிசைந்தது. வர்ணவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வலியைத் தந்தன.

‘நீ உன்னிஷ்டப்படி செய்ற எல்லாம் சரின்னு நினைக்காத மலர்’ என்ற வார்த்தைகள் அவளினுள் ஒலித்துக் கொண்டே வலித்துக் கொண்டே இருந்தன.

ஆம், எல்லாம் அவளின் இஷ்டம்தான். காதல், திருமணம், பிரிவு என்று எல்லாம் அவள் விருப்பப்படிதான் நிகழ்ந்தன. ஆனால் பிடித்தவையெல்லாம் நடந்தும், நடத்திக் கொண்டு இருந்தாலும் மனத்தில் ஒரு வெற்றிடம்தான், துளி கூட அவளின் செயல்களினால் அவளுக்கு மகிழ்ச்சி கிடையாது. விரும்பி செய்தவை எல்லாம் தப்பும் தவறுமாகிட அதனை மாற்றவே எண்ணமில்லை.

எப்படியும் ஜனா வருவான் என்று தெரியும், இனியும் அவனைப் பார்த்து ஓடி ஒளிய அவள் விரும்பவில்லை, என்னவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம்.

அவள் அறையில் உட்கார்ந்து இருக்க, பொழுது சாய்ந்துவிட விளக்கேற்றிய சாரதா, தன்னருகே நின்ற பேத்தியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட, அமிழ்தாவோ,

“அம்முச்சி, அம்மாவுக்குக் குங்குங்” என்று கொஞ்சிப் பேச, மகள் மீது நிறைய வருத்தம் இருந்தாலும் பேத்தி மீது அவருக்குப் பாசம் அதிகம்தான், அவளின் மழலை மொழி மனத்தினைத் தாலாட்ட அமிழ்தாவைத் தூக்கிக் கொண்டவர் மகளிடம் போனார்.

சாரதா மகளுக்குக் குங்குமம் வைக்கப் போக, அமிழ்தாவோ,

“நானு நானு” என்று சாரதாவிடம் கேட்க, அவர் தன் கையில் இருந்த குங்குமத்தைத் தர, மெத்தையில் இருந்த அம்மாவின் அருகே போன அமிழ்தா,

“அம்மா குங்குங்” என்று மிழற்றிக் கொண்டு தலை சாய்த்து வெட்கத்துடன் அம்மாவின் நெற்றியில் வைத்தாள். மலர் தன் மனதுடன் போராடியவள் ஒன்றும் புரியாமல் மகளைப் பார்க்க,

“அமிழ்துக்கு குங்குமம் வச்சிவிட்டேன் மலர், அவ உடனே உனக்கும் வைக்கனும்னு என்னை அழைச்சிட்டு வந்துட்டா” என்றதும் புன்னகையுடன் மகளை அணைத்துக் கொண்டாள் சுதந்திர மலர்.

அம்மாவின் மேல் நன்றாக சாய்ந்த அமிழ்தா,
“ம்மா, ஜூ ஜூ” என்று கண்ணை மூடினாள், அவள் சோர்வாகத் தெரிய,

“மா, நான் இவளைத் தூங்க வைக்கிறேன், கதவை சாத்திட்டுப் போயிடுங்க” என்றதற்கு,

“ஏன் டி பொழுது சாஞ்சதும் தூங்க வைக்கிற, நைட் தூங்க மாட்டா டி”

“இல்லம்மா ரொம்ப டயர்டா இருக்கா, இப்ப தூங்கலன்னா அழுவா” என்றதும் சாரதா தலையசைத்தவர் வெளியே சென்றுவிட்டார். அவரிடம் வந்ததுமே கிருஷ்ணா சொல்லிவிட்டாள்.

“அம்மா, இந்த வர்ணவி அக்கா ரொம்ப பேசிட்டாங்க அக்காவை” என்று. மலரிடம் அது பற்றி பேச சாரதா நினைத்தாலும், அவளின் வாடிய முகம் அதற்கு விடவில்லை.

அங்கு ஜெயப்பிரகாசத்தின் வீட்டில், ஜனா அசையாமல் உட்கார்ந்திருக்க, அதைக் கண்டு வர்ணவியும் பிரசன்னாவும் பயந்து போனார்கள், பிரசன்னா மெதுவாக,

“டேய் மச்சான்!” என்று குரல் கொடுக்க, தன்னுணர்வில் இருந்து களைந்த ஜனா தன் முன் இருந்த தங்கையையும் பிரசன்னாவையும் பார்த்தான்.

“குழந்தை பெயர் என்ன?” என்றவனின் குரல் கரகரத்து இருக்க, அண்ணாவின் சோகம் வர்ணவியைத் தாக்க,

“அமிழ்தாண்ணா” என்றாள். பிரசன்னா நண்பனின் முகம் பார்த்தவன்,

“டேய் ஜனா, இப்போ ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று கேட்டதுமே, வேகமாக எழுந்தவன்,

“அதான், நான் ஏன் உட்காரனும்? பார்க்கிறேன் அவளா நானா?” என்றவன் கோபத்துடன் காரை எடுக்கப் போக, பிரசன்னா

“மச்சான் கோபத்துல வண்டி ஓட்டாத” என்று பின்னாடியே ஓடி வர,

“பிரசன்னா என்னைத் தனியா விடுடா, ப்ளீஸ்” என்று கத்த, போகும் நண்பனைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

பிரசன்னாவோ ஜனா போனதும் வர்ணவியிடம்,

“ஏன் டி உனக்குக் கொஞ்சமும் அறிவில்ல? இத்தன நாளா அவளோட பேசிட்டுதான இருந்த? நம்ம சாத்வி பர்த்டே விஷயம் கூட அவளுக்கு சொல்லி இருக்க, அவளுக்குக் குழந்தை இருக்குன்னு கூட உன்னால கண்டுபிடிக்க முடியலையா?” என்று திட்டினான்.

“என்னை ஏன் திட்டுற? அவ யூ.எஸ் போய் கொஞ்ச நாள் எங்கிட்ட பேசவே இல்லை, கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சுதான் பேசினா, அப்பவும் அண்ணா பத்தி பேச ஆரம்பிச்சா இதுதான் அவ கிட்ட பேசுறது கடைசின்னு மிரட்டினா, என்னை என்ன செய்ய சொல்ற மாமா?” என்றாள் வருத்தமாக, அவளுக்குமே அண்ணனின் வாழ்க்கையில் தான் அக்கறைக் காட்டவில்லை என்ற வேதனை.

ஜனார்த்தனுக்கோ காரில் போகும்போதே கைகள் அவனின் கட்டுப்பாட்டில் இல்லை, எப்படியோ பத்திரமாக மலரின் வீட்டிற்குச் சென்றுவிட்டான், வாசலில் நின்று வேகமாக பெல்லை அழுத்த, பின் ஹோல் வழியே யாரென பார்த்தார் வடிவு.

ஜனா என்றதும் அவர் கதவைத் திறக்க, புயல் போல் உள்ளே நுழைந்தவன்,

“ஏய் மலர்! எங்க இருக்க? வாடி” என்று கத்த, ஹாலில் இருந்த முரளிதரன் அவனைப் பார்த்து,

“ஏன் ஜனா கத்துறீங்க? முதல்ல வந்து உட்காருங்க” என்று சொல்ல, அவரை கோபமாகப் பார்த்தவன்,

“உங்க பொண்ணுக்குத் தான் அறிவில்ல, உங்களுக்குமா இல்ல?” என்றான் மரியாதை எல்லாம் நினைக்காதவனாக.

“ஏன் உங்களுக்கு நிறைய இருந்துச்சா? இத்தன வருஷம் என் வீடு இதே இடத்துலதான் இருக்கு, காதலிக்கும்போது எங்க விருப்பம் கேட்கல, கல்யாணத்துக்கு எங்க விருப்பம் கேட்கல, இப்ப மட்டும் என்னை எந்த தைரியத்துல கேள்வி கேட்குறீங்க ஜனார்த்தன்?” என்று ஜனாவின் மீதான கோபத்தை அவர் வார்த்தைகளில் காட்டினார்.

“என் பொண்ணை என்னை விட நல்லா பார்த்துப்பேன்னு நாலு வருஷம் முன்னாடி நீங்க சொன்னீங்க, ஆனா என் பொண்ணைக் கஷ்டப்படுத்தினது தவிர வேற என்ன பண்ணின நீ?” என்ற முரளியிடம்,

“அங்கிள், நான் இங்க உங்க பொண்ணு பத்தி பேச வரல, என் பொண்ணு பத்தி கேட்கிறேன்” என்றான், அது முரளியின் கோபத்தை இன்னும் தூண்டிவிட்டது. ‘என் பெண் என்றால் இவனுக்கு இளக்காரமா?’ என.

அவரைக் கண்டுகொள்ளாத ஜனாவோ,

“மலர்! மலர்” என்று கத்தியபடி திறந்திருந்த அறையினைப் பார்க்க அவள் இல்லை, அவனின் சத்தம் கேட்டு சாரதா, கிருஷ்ணப்ரியா என எல்லாரும் வந்து நிற்க, மூடியிருந்த அறையினுள் இருந்த மலரும் வந்தாள்.

அவளைக் கண்டதும் எப்போதும் மலரும் காதல் இல்லாது, ரௌத்திரனாக நின்றான் ஜனார்த்தன்.

“ஏய் எவ்வளவு திமிர் டி உனக்கு? என்ன தைரியம் இருந்தா என் குழந்தையை எங்கிட்ட இருந்து பிரிப்ப?” என்று அவளின் கையை முரட்டுத்தனமாகப் பற்ற, பார்த்திருந்த வடிவு உடனே,

“ஏப்பா, ஜனா என்ன பண்ற நீ, அவ கையை விடு” என்று அருகே போய் நின்று அதட்ட, அவரை முறைத்தவன் விரல் நீட்டி எச்சரித்தான். அம்மாவிடம் அவன் கை நீட்டியதும் முரளி உடனே மகள் அருகே வந்தவர்,

“ஜனா நீ பண்றது தப்பு” என்று சொல்ல,

“தப்பு சரியெல்லாம் எனக்கு மட்டும்தானா அங்கிள், இதோ இவளுக்கு இல்லையா?” என்றான் ஆத்திரமாக.

மலரோ அதுவரை அமைதியாக அழுத்தமாக நின்றவள் ஜனாவை விட்டால் அப்பாவை எதாவது பேசிடுவான் என்ற பயம் எழுந்தது, கோபம் வந்தால் கண்டபடி பேசுவது அவர்கள் குடும்ப வழக்கமாயிற்றே!

“ஜனா அப்பாவை எதுவும் நீ பேசக் கூடாது, அப்பா நான் பேசிக்கிறேன்” என்று ஜனாவிடமும் அப்பாவிடமும் சொல்ல,

“வெல் டன்! உனக்கு உன் அப்பாவைப் பேசக் கூடாது, உன் அப்பாவுக்கு உன்னைப் பேசக் கூடாது, ஆனா என்னையும் என் பொண்ணையும் மட்டும் பிரிச்சு வைப்ப இல்ல, எப்படி நீ இப்படி மாறின? சேடிஸ்டா நீ? உன்னைக் காதலிச்சது நினைச்சாலே எரியுதுடி எனக்கு” என்றான் பல்லைக் கடித்தபடி.

அவன் பேச்சில் கண்கலங்கி, முகம் கசங்கி நின்ற மகளைப் பார்க்க முரளிக்கும் சாரதாவிற்கும் நெஞ்சம் கலங்கியது. இதற்குதானே இந்த காதல் வேண்டாம் என்று அவ்வளவு பிடிவாதமாக நின்றார் முரளிதரன்.

ஆனால் அதே பிடிவாதம்தான் அவர் மகளிடம், ஒற்றைக் காலில் நின்று இவர்கள் ஒத்துக்கொள்ளாவிடினும் அவனைக் கரம் பிடிக்க வைத்தது. பிடித்தலுக்கும் பிடிவாதம், பிரிவதற்கும் பிடிவாதம்!

எல்லாரும் நினைப்பது போல சுதந்திர மலருக்கு ஜனாவிடம் குழந்தையைப் பற்றி சொல்லக் கூடாதென்று இல்லை, அவள் சொல்லதான் போனாள், ஆனால் சொல்லவிடாமல் சொற்களால் கொன்றவன் அவன்தானே?

அவ்வளவு ஆசை, காதல், வெட்கம் எல்லாம் சங்கமிக்க தாங்க முடியாத சந்தோஷத்துடன் தொடங்கியவளை தாள முடியாமல் நோகடித்தவன் அவன்தானே?

ஜனாவின் கத்தலில் அப்போதுதான் உறக்கம் தழுவிய அவன் மகள் எழுந்து அழத் துவங்கினாள், கண்ணைக் கசக்கிக் கொண்டே மெத்தையில் இருந்து மெதுவே குதித்தவள், அம்மாவைக் காணாது அழுதபடி வர, அந்த அறையின் வாயிலில் மலர் நின்றிருக்க, அவள் பின்னே வந்த அமிழ்தா புதியவனைக் கண்டுவிட்டு, அம்மாவின் சுடிதார் டாப்ஸைப் பிடித்துக் கொண்டு ஒளிய,

ஜனாவின் நெஞ்சினில் நிசப்தம்!

அதுவரை இருந்த இரைச்சல் எல்லாம் குறைய, விழிகள் முழுவதும் வலியுடன் மலரின் பின் நின்ற மகளை எட்டிப் பார்த்தான். ஜனாவின் விழிகளும் அதிலுள்ள வலியும் மலரைத் தாக்கியது. இப்போதும் அவன் மீது நிறைய நிறைய, அவனை அடிக்கும் அளவு ஆத்திரம் இருக்கிறதுதான், அதற்குக் கொஞ்சமும் குறையாத, மெய்யாய் சொல்ல வேண்டுமெனில் அவனைப் பிரிந்த பின்தான் அவனின் மீதான பிடித்தம் அதிமாகி மீகி அவன் மீது பித்தானாள் மலர். அந்த காதல் அவளை அப்படி பேச வைக்க, மகளின் அழுகை அவளைக் கலைக்க, பின்னால் திரும்பி அமிழ்தாவைத் தூக்கியவள்,

“ஒன்னுமில்ல பேபி” என்று தட்டிக் கொடுத்தாள். ஜனாவின் பார்வையின் பரிதவிப்பை ஒரு அப்பாவாக உணர்ந்த முரளிதரன்,

“சுதந்திரா, அமிழ்தாவை ஜனா கிட்ட கொடு” என்று சொல்ல, அதிர்ச்சியாக அப்பாவைப் பார்த்தாள் சுதந்திர மலர்.

“சொன்னதை செய்” என்றார் ஆணையாக.

காதல் அவனிடம் கொடு என்று சொல்ல, அவனின் மீதான கோபம் அதற்குவிடவில்லை. இன்று மகளைத் தேடி வந்தவன் என்னைத் தேடவில்லையே என்ற ஆத்திரம்.

“பா, அவ போக மாட்டா” என்று மலர் மறுத்தாள்.

“சுதந்திரா, அவ போகமாட்டாளான்னு நான் உன்னைக் கேட்டேனா? குழந்தையை ஜனா கிட்ட கொடுன்னு சொன்னேன், அப்பா பேச்சைக் கேளு” என்றார் அதட்டலாக.

மலர் மௌனமாக மகளை அவனிடம் நீட்ட, அமிழ்தா போகவில்லை, அம்மாவின் பக்கமே சாய ஜனா அகத்தில் அடிவாங்கினான்.

“அப்பா கிட்ட போன்னு சொல்லி போக சொல்லு சுதந்திரா” என்றார் முரளி.

ஆழ மூச்செடுத்த மலர், முகத்தில் புன்னகையை வரவழைத்தபடி மகளின் கன்னம் பிடித்தவள்,

“பேபி, அப்பா கிட்ட போங்க, அம்மாவுக்குத் தாத்தா மாதிரி உனக்கு அப்பா” என்று மகளுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லி, மீண்டும் குழந்தையை ஜனாவின் முகம் பார்க்காது நீட்ட, ஜனாவின் கரங்கள் மகளைத் தழுவ தவிக்க, பாவம் அமிழ்தா மீண்டும் அம்மாவிடமே ஒட்டிக்கொண்டாள். தூக்கம் தடைபட எழுந்ததால் அவள் அம்மாவின் தோளில் முகம் புதைத்து சிணுங்க, ஜனாவைப் பார்த்த எல்லாருக்கும் பாவமாக இருந்தது.

சாரதா உடனே,

“அது பாப்பா தூக்கத்துல இருந்து எழுந்தா இல்ல, அதான் ஜனா” என்று அவனை ஆறுதல்படுத்த சொல்ல, ஜனாவின் கோபம் மீண்டும் ஆழியாய் எழ, மனைவியைப் பார்த்தவன்,

“என்னைப் பழி வாங்க வேற வழியே இல்லையா உனக்கு?” என்றவன் கோபத்தைத் தாங்க முடியாது ஷோ கேஸில் இருந்த பீங்கானைத் தூக்கி சுவரில் அடித்தான்.

“ஜனா!” என்று எல்லாரும் கத்த, குழந்தை வீறிட்டு அழ, வடிவு உடனே கொள்ளுப்பேத்தியை மலரிடம் இருந்து வாங்கியவர்,

“ஒன்னுமில்ல ராசாத்தி, அழக்கூடாது” என்று வெளியே தூக்கிப் போனார். மகளின் அழுகை கூட கூட, இங்கு ஜனாவின் கோபம் ஏறியது.

மலரை பார்த்தவனின் பார்வையில் அதீத கோபம் தெரிய, அவளை நோக்கி கையை ஓங்கியவன் அது முடியாமல் போக, சுவரில் தன் கையைக் குத்திக் கொண்டான்.

“ஜனா, என்னதிது? பொறுமையா இருங்க” என்ற முரளியின் கையைத் தட்டிவிட்டவன்,

“பொறுமையா இருந்ததாலதான் என் பொண்ணுக்கே என்னை அடையாளம் தெரியாம செஞ்சுட்டா உங்க பொண்ணு, உங்க பொண்ணு செஞ்சதை விட இது பெரிய வலி இல்ல அங்கிள்” என்றவன் விருட்டென யாரையும் பார்க்காது வெளியே போனான்.

தங்கை மகளையே தாங்குபவன் ஜனா, தன் மகளுக்குத் தன்னை அடையாளம் கூட தெரியவில்லை என்பது அவ்வளவு வேதனைத் தர, கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது அவனுக்கு. மலரின் மீது இருந்த காதல் எல்லாம் குறைந்து மறைந்து வெறும் காயங்கள் மட்டுமே மிச்சம் அவனிடம். அவள் மீதான கோபம் கண்ணை மறைக்க, வாகனத்தின் மீதான கவனம் குறைய, விபத்தில் சிக்கினான் ஜனா.

‘காயங்கள் காதல் நியாயம்!’

✅ End of Episode 4
How did you feel about this episode?
❤️ 3 😢 2 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 2 weeks ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 week ago

காதலாக கைபிடித்து

கோவமாக விட்டு பிரிந்து
கணவனை தள்ளி வைத்து 
குழந்தையை மறைத்து....
கலவரம் வெடித்தது
காலம் காத்திருக்கு 
கணவன் மனைவியை
சுழற்றி அடிக்க....

Kavi Natarajan Reader 2 days ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top