Episode 7
“கேடியோட அம்மான்னு சொல்லுடா” என்ற சௌந்தர்யாவைப் பார்த்து ஜனா அசடு வழிய, அவர் மகனின் வலக்கையில் இடித்துவிட,
மா, வலிக்குது” என்று கத்தினான்.
“டேய் எங்கிட்ட ஏன் ட்ராமா?” என்று அவர் நக்கல் செய்ய,
“அம்மா, அடிப்பட்டது எல்லாம் உண்மை, அம்னீசியா மட்டும்தான் பொய்” என்று சொல்ல, அதுவரை புன்னகையில் இருந்த அவர் முகம் வாடிப்போக,
“என்ன ஜனா சொல்ற, நிஜமா ஆக்ஸிடெண்டா? இதுக்குதான் அந்த பழைய கார் மாத்துன்னு எல்லாரும் சொல்றோம், கேட்கிறியா டா நீ?” என்று திட்டினார்.
“மா, பெருசா ஒன்னுமில்ல, அது கார் மேல தப்பு இல்ல, என்னோட தப்பு, நானே டென்ஷன்ல போய் மரத்துல விட்டேன்” என்றதும் அவர் கண்கள் கலங்கியது.
“என்னதான் டா ஆச்சு, ஒழுங்கா சொல்லு” என்று அதட்டவும் அம்மாவிடம் எல்லாம் சொல்ல,
தலையில் தட்டிக்கொண்டவர்,
“நிஜமா ஜனா, எனக்கு என்ன சொல்றது தெரியல, மலர் ஏன் இப்படி இருக்கா? நீ ஏன் இப்படி இருக்க? ஒன்னும் புரியல எனக்கு, அவ அமிழ்தா பத்தி சொல்லாம இருந்த விஷயம் தப்புன்னா, அவ உன்னை விட்டுப் போன பின்னாடி நீ அவளைத் தேடி போயிருக்கனும்டா” என்றார் அழுத்தமாக.
“அவ தான்மா விட்டுப் போனா என்னை” என்றான் வருத்தமாக.
“அவ போனா அவளை அப்படியே விட்டுடுவியா?”
“அதுக்காக அவ குழந்தை இருக்க விஷயம் சொல்லாம இருப்பாளா?”
“ஏன் டா இவ்வளவு கோவம் இருக்கவன் போடி சொல்லி போகாம ஏன் இந்த நாடகம்?” என்று சௌந்தர்யா மகனை மடக்க,
“நீதானேம்மா சொல்ற போக விட்டது தப்புன்னு, அதான்” என்று அவன் முறுக்கிக் கொள்ள,
“ஏன் டா இவ்வளவு கடுப்பா பேசுறவன் எப்படி டா அவ கிட்ட அவ்வளவு சாதாரணமா பேசுற, நடிகர் திலகம் டா நீ மகனே” என்று அவனுக்கு நெட்டி முறித்தார்.
“அது மட்டுமா எப்படி டா அடிப்பட்ட கையோடு அடுத்து இந்த அம்னீசியா ட்ராமா எல்லாம்? பெரிய அறிவாளிதான் டா, ஐ அம் ப்ர்வுட் ஆஃப் யூ மை சன்” என்று சௌந்தர்யா கிண்டல் என்றாலும் கூட பெருமையாக சொல்லி சிரிக்க,
“அய்யே போம்மா எதுவும் நான் ப்ளான் பண்ணல, அப்படியே மலரை அடிக்கலாம்ன்ற அளவு கோவம். அங்க இருந்தா அவளைக் கண்டிப்பா அடிச்சிருப்பேன். ஏற்கெனவே என் பொண்ணு என்னைப் பார்த்து பயந்துட்டு வரல, இன்னும் அதையும் ஏன் செய்யணும்னு ரொம்ப கோவமா கிளம்புனேன், அப்படியே காரை மோதிட்டேன். எப்படியோ நானே மேனேஜ் பண்ணி இங்க வந்து அட்மிட் ஆகிட்டு பிரசன்னாவுக்குக் கால் பண்ணினேன்”
“அவன் யார்கிட்டயும் சொல்லாம இங்க வந்தான், அப்புறம் அவன்தான் இந்த ஐடியா எல்லாம் கொடுத்தான்”
“அவன் எப்போ டா இப்படி மாறினான்?”
“மா, அவனைப் பேசாதீங்க. அவன் தான் உனக்கு மலர் வேண்டாம்னா இப்படியே சண்டை போடு, அவளும் குழந்தையும் வேணும்னா நான் சொல்றதை மட்டும் செய்னு சொன்னான், டாக்டர் டிரிட்மெண்ட் எல்லாம் பண்ணினதும் நம்ம தாமோதர் அங்கிள்தானே ஹாஸ்பிட்டல் சேர்மேன் அவர்கிட்ட பேசி இப்படி எல்லாம் செட் அப் பண்ணினான், ஸோ பீ ப்ரவுட் ஆஃப் யூர் மருமகன்” என்று அவன் பல்லைக் காட்ட,
“அதானே பார்த்தேன் உனக்கு இவ்வளவு அறிவு கிடையாதேன்னு” என்ற அவரின் நக்கல் பேச்சில் அவன் அம்மாவை முறைத்தான்.
“நிஜமா உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் அறிவு கிடையாதுடா” என்றார் மீண்டும் அழுத்தமாக.
“ஹி ஹி, திஸ் இஸ் மச் பெட்டர்” என்று அவன் சிரிக்க,
“ஜோடியா சொன்னதும் பெருமையைப் பாரு எருமைக்கு” என்று திட்டினார்.
“அதை விடு இன்னும் எத்தனை நாள் இந்த ட்ராமா? மலர் கண்டுபிடிச்சுடுவாளே?” என்றவரிடம்,
“அதை ஏன்மா கேட்கிற? நாலஞ்சு தடவைக் கேட்டுட்டா, நார்மலா பேசுறாளா இல்லை சந்தேகப்படுறாளேன்னு தெரியல, உன் மருமக எங்கிட்ட போட்டு வாங்க ட்ரை பண்றா, ஆனா ஐயா பெர்மான்ஸ்ல கில்லி” என்று சிரித்தவனின் கன்னத்தில் தட்டியவர்,
“ரொம்ப பெர்ஃபார்ம் பண்ணாதடா, உன்னோட ஓவர் ஆக்டிங்ல தான் நான் கண்டுபிடிச்சேன்” என்றார்.
“ஹி ஹி தேங்க்ஸ் ஃபார் யூர் சஜஷன் ம்மா, மலர் கண்டுபிடிக்கறதுக்குள்ள அவளை திரும்ப என்னை விட்டுப் போக விடாம செய்யணும்” என்றான் கவலையாக.
“டேய் நீயும் உன் பொண்டாட்டியும் என்னடா அந்நியன் மாதிரி நடந்துகிறீங்க? இவ்வளவு நேரம் கோவமா பேசின இப்போ இப்படி. அவ என்னடான்னா உன்னைக் கண்டுக்காம இருந்துட்டு என் புருஷன் நான் பார்ப்பேன் அப்படி இப்படின்னு எங்க கிட்ட சவுண்ட் விடுறா” என்று நேற்று நடந்ததை சொல்லவும் ஜனாவின் முகம் கனிவாக காதலாக மலர்ந்தது. பேரன்பு சில நேரம் பெருங்கோபங்களை கணக்கில் கொள்ளாது, அப்படியான நிலைதான் ஜனாவுக்கு.
“என்னடா பூத்து பூத்து சிரிக்கிற?” என்று அவர் கிண்டல் செய்ய,
“மா, என் பொண்டாட்டி பேசினதை நேர்ல கேட்க முடியாம போச்சே” என்று வருத்தம் போல சொல்ல,
“ஓ அப்படியா! போன் போட்டு அவளைத் திருப்பி பேச சொல்லவா டா மை சன்?”
“மா, என் மச்சான் என் வாழ்க்கையில ஒளியேத்தி வைக்க ஒரு உருப்படியான ப்ளான் போட்டிருக்கான். அதைக் கெடுத்து விடாத” என்று அலறினான்.
“டேய் அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன், நீ மலர் குழந்தைன்னு சந்தோஷமா இருக்கனும் அவ்வளவுதான் அம்மாவோட ஆசை” என்ற அம்மாவைப் பார்த்து புன்னகை செய்தவன்
“அவ மேல நிறைய கோவம் இருக்கும்மா, ஆனா அவளை விட்டுட்டு இருக்கவும் முடியல, அது இன்னும் கஷ்டமா இருக்கு எனக்கு. அண்ட் அமிழ்தா விஷயம் ரொம்ப வலிக்குதும்மா” என்றவனின் கண்ணீர் அவரை உலுக்கியது.
“அடடா! ஜனா விடுடா, இப்போ சண்டை போடுறதை விட, நீங்க மூணு பேரும் ஒன்னா இருக்கறதுதான் முக்கியம். கொஞ்ச நாள் ஒன்னா இருந்தா போதும் அமிழ்தா உன்னோட ஒட்டிப்பா, மலரும் உன்னை மாதிரிதான் உன்னை விட்டுப்போக மாட்டேன் சொல்லி இருக்காதானே? கவலைப்படாம உன்னோட பெர்ஃபாமன்ஸ் கண்டினியூ பண்ணு. சில நேரம் வேகத்தை விட விவேகம் முக்கியம், அந்த வகையில நம்ம பிரசன்னாவுக்குத் தேங்க்ஸ் சொல்லணும். அவனோட ஐடியாவால தான் நீ இப்போ மலரோட சகஜமா பேசுற, இல்லன்னா அடிப்பட்டதும் இல்லாம இன்னும் மலர் கூட சண்டைதான் போட்டிருப்ப”
“அவ தப்பாவே இருக்கட்டும், பரவாயில்லை. தப்பு சரின்றது மட்டுமே வாழ்க்கை இல்ல, தப்பை சரி செய்றது கூட வாழ்க்கைதான். உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என்றார்.
இங்கு வீட்டுக்கு வந்த மலரை அவள் அப்பா அம்மாவின் பார்வை வட்டமிட, குளித்து விட்டு மீண்டும் மருத்துவமனை கிளம்பத் தயாராக வந்த அவளைப் பார்த்த முரளிதரன்,
“ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டியா சுதந்திரா?” என்று அவளிடம் கேட்டார்.
அப்பாவின் கேள்வி எங்கே ஆரம்பித்து எங்கே முடியும் என்று மலருக்குத் தெரியும். அதனால் அவளாகவே,
“என்ன கேட்கணுமோ கேளுங்கப்பா” என்று சொல்லிவிட,
“இல்ல இன்னிக்கு உணர்ச்சிவசப்பட்டு ஜனா கூட இருக்கனும்னு நினைக்கிற, நாலு வருஷம் முன்னாடியும் இப்படிதான் இருந்த, இப்ப ஜனாவோட ஹாஸ்பிட்டல்ல மட்டும் இருப்பியா இல்ல அந்த வீட்டு மருமகளா ஜனாவோட மனைவியா போக போறியா?” என்றார் கட் அண்ட் ரைட்டாக.
நேற்று அவள் செய்கைக்கு நிச்சயம் இந்த கேள்வியெல்லாம் வரும் என்று அவளுக்குத் தெரிந்தது. அப்பாவின் பேச்சு சுருக்கென்றதுதான், அவரை மீறி திருமணம் செய்த வருத்தம் அவருக்கு இன்னமும் தீரவில்லை என்று அவளுக்குத் தெரிந்தது.
“கண்டிப்பா நாலு வருஷம் முன்னாடி இருந்த சுதந்திரா நான் இல்லதான்ப்பா, அப்போ நான் உங்க பொண்ணாவும் ஜனாவோட மனைவியாவும் இருந்தேன், இப்போ அமிழ்தாவோட அம்மா நான். நேத்து சௌந்தர்யா அத்தை கிட்ட சொன்னதுதான்ப்பா எப்பவும் அவரை விட்டுப் போக மாட்டேன்” என்றாள் தெளிவாக.
அவளின் தெளிவான பேச்சில் முரளிக்கும் சாரதாவிற்கும் புன்னகை அரும்பியது. அவள் சௌந்தர்யாவை அத்தை என்றதிலேயே அவளின் அகவோட்டம் அப்பட்டமாகத் தெரிய, பெற்றவர்களுக்கு நிறைவுதான்.
இருந்தாலும் முரளிதரன் விடாது,
“இப்போ தெளிவா பேசுறடா சுதாம்மா, ஆனா ஜனாவுக்குப் பழசு எல்லாம் ஞாபகம் வந்த பின்னாடி நீங்க சண்டை போட மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்று கேட்க, உடனே அவரின் அம்மா வடிவு,
“டேய் முரளி, என்னடா என் பேத்தியை இவ்வளவு கேள்வி கேட்கிற, வேளைன்னு வந்துட்டா எதுவும் நில்லுன்னு சொன்னாலும் நிக்காது, இப்ப நேரம் கூடி வந்திருக்கு” என்றார்.
“அம்மா உன் பேத்தியைக் கெடுக்கிறதே நீதான்” என்று திட்ட, மலரோ,
“அப்பா! சண்டைப் போட்டாலும் ஜனாவை விட்டுப் போக மாட்டேன்ப்பா” என்ற மகளை முரளிதரன் முறைத்தார்.
பின்னே சண்டைப் போட மாட்டேன் என்று வாய் வருகிறதா பார் என்று அவளைப் பார்க்க,
சாரதாவோ,
“விடுங்க பாவம் அவ, முதல்ல அவளை ஹாஸ்பிட்டல்ல விட்டு வாங்க, மலர் வந்து சாப்பிடு டி” என்று சொல்லி மகளை சாப்பிட வைத்து அவளை மருத்துவமனைக்கு அனுப்பினார், அவளின் கூடவே அமிழ்தாவும்.
பதினொரு மணி போல் அவளும் குழந்தையும் போக, சௌந்தர்யா போனைப் பார்க்க, ஜனா நல்ல உறக்கத்தில் இருந்தான்.
அமிழ்தா இப்போதும் மலரை விட்டு நீங்காமல் இருக்க, அதைப் பார்த்த சௌந்தர்யா,
“ஏன் மலர் இவ எங்ககிட்ட வர மாட்டேங்கிறா?” என்று வருத்தப்பட,
“அது இவ வர்ணவி மாதிரி அத்தை, கொஞ்சம் ஷை டைப், பழகினா தான் வருவா” என்றவள் அமிழ்தாவைத் தூக்கி சௌந்தர்யாவின் மடியில் உட்கார வைத்து,
“பேபி, இவங்க உன்னோட பாட்டி, எனக்கு வடிவு அப்பத்தா இருக்காங்க இல்ல, அது மாதிரி, என்னோட அம்மா சாரு அம்மச்சி, அப்பாவோட அம்மா இவங்க” என்று சொல்லிக் கொடுக்க, அமிழ்தா தன்னை மடியில் வைத்திருந்த சௌந்தர்யாவை ஓரவிழியில் பார்க்க, அவர் பேத்தியின் செயலில் அவளைக் கன்னம் கிள்ளி முத்தமிட்டார்.
அவர் முத்தமிடவும் உடனே அவள் மலரிடம் தாவ,
“அமிழ்து, அம்மா சொன்னா கேட்கணும் என்றாள்.
“ஓகே ம்மா” என்று தலையசைத்த அமிழ்தா சௌந்தர்யாவைப் பார்த்து வெட்கத்துடன் சிரிக்க,
“அமிழ்து குட்டிக்கு என்ன பிடிக்கும்? நம்ம ப்ரண்ட்ஸ் ஆகிடலாமா?” என்று கை நீட்ட
“அப்பத்தா கேட்கிறாங்க இல்ல, கிவ் ஹேண்ட்ஸ்” என்று சொன்னதும் அமிழ்தாவும் அப்படியே செய்தாள்.
“அத்தை, இவ வர்ணவிதான், பேசினா தான் பேசுவா, நீங்க பேசிட்டே இருங்க செட் ஆகிடுவா, அம்மா கிட்ட கூட போக மாட்டா இவ, அவங்களும் பின்னாடியே சுத்தி சுத்திதான் இப்போ கொஞ்சம் போறா, எங்க அப்பத்தா தான் இவளுக்கு சரி” என்று சொன்னாள்.
“சரி, நான் ஒரு காஃபி குடிச்சிட்டு இவளோட அப்படியே ஒரு ரவுண்ட் போய்ட்டு வரேன், எப்படி இவ என்னோட ப்ரண்ட் ஆகாம இருக்க பார்க்கிறேன்” என்று அவளைத் தூக்க, அமிழ்தா அம்மாவைப் பார்க்க,
“பேபி அப்பத்தாவோட போய்ட்டு வா” என்று சொன்னாள். சௌந்தர்யா பேத்தியுடன் போய்விட, ஜனாவின் அருகே உட்கார்ந்து கொண்டாள் சுதந்திர மலர்.
கொஞ்ச நேரம் கழித்து கண்விழித்த ஜனாவின் பார்வையில் மலர், உடனே ஒரு உற்சாகம் அவனிடம்.
“எப்போ வந்த?”
“அரை மணி நேரம் ஆச்சு” என்றதும்,
“எழுப்பியிருக்கலாம்தானே?” என்றதற்கு,
“நீ நல்லா தூங்கிட்டு இருந்த ஜனா, அத்தையும் அமிழ்தாவும் கேண்டின் போயிருக்காங்க, இவ்வளவு நேரம் அவங்க கூட பேசிட்டு இருந்தேன்” என்றவளின் முகத்தில் ஒரு தெளிவு.
சண்டை போடாமல் இருக்க முடியும் என்று சங்கல்பம் எல்லாம் எடுக்க முடியுமா அவளுக்குத் தெரியாது. இவனுக்கு என்றாவது நினைவு வருமா என்றும் தெரியவில்லை, அப்படி வந்தால் அப்போது பார்த்துக்கலாம் என்று ஒரு முடிவுடன் இருந்தாள். இப்போது இந்த நிமிடம் இவன்,நான், அவ்வளவுதான்!
“தலை ரொம்ப வலிக்குதா ஜனா?” என்று அவள் கேட்க,
“ம்ம், வலிக்குது” என்றதும் அவள் மெதுவாக விரல்களால் வருடிவிட,
“மலரே! மைசூர்ல இருந்து எப்போ வந்த? எப்போ கல்யாணம் ஆச்சு? பாப்பா எப்போ பொறந்தா? எனக்கு ஒன்னுமே தெரியல டி ராங்கி” என்றான் சோகமாக.
வார்த்தைகள் உண்மை பாதி, பொய்மை மீதி என்றாலும் அவன் உணர்வு மொத்தமும் உண்மைதான்! குழந்தையைப் பற்றித் தெரியாத ஏக்கம் எவ்வளவு முயன்றும் அவன் குரலில் மறையவில்லை.
“ஜனா, உங்கிட்ட ஒன்னே ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, உனக்கு அடிப்பட்டதால நமக்குள்ள ஒன்னுமே மாறல, நீ நான் நம்ம காதல் எல்லாமே அப்படியே தான் இருக்கு. கூடவே அமிழ்தா அவ்வளவுதான். ஸோ பழசை யோசிக்காத, ஹெல்த் ஸ்பாயில் பண்ணாத” என்று அக்கறையாகச் சொல்ல, உள்ளே அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
இவ்வளவு காதல் இருப்பவள் என்னை விட்டு ஏன் போனாள்? என்ற தீரா கேள்வி வேள்வியாக அவனுள் எரிய, அவனையும் மீறி ‘அப்புறம் ஏன் என்னை’ என்று ஆரம்பித்தவனுக்கு அம்மாவும் பிரசன்னாவும் சொன்னது நினைவில் வந்தது.
அதனால் விவேகமாய்,
“அப்புறம் ஏன் என்னை அவாய்ட் பண்ற?” என்று பேச்சை மாற்றினான். மலர் அவன் வார்த்தைகளுக்கு இடைவெளி விட்டதெல்லாம் கவனிக்கவில்லை.
“என்ன உன்னை அவாய்ட் பண்றேன்?” என்று கேட்டவள்,
“ஓஹ்! கிஸ் கொடுக்காம போன கோபமா? இப்படி ஒழுங்கா கார் ஓட்டாம ஹாஸ்பிட்டல்ல வந்து அடிப்பட்டு கிடக்குற? என்னால எப்படி சந்தோஷமா கிஸ் கொடுக்க முடியும்?” என்று அவள் முணுமுணுப்பாகப் பேச,
“ஏய் ராங்கி! நான் நல்லா ஆன அப்புறம் வீட்டுக்குப் போனதும் உன்னோட கிஸ்ஸை கொடுக்கிற” என்றான் அழுத்தமாக.
அடுத்த மூன்று நாளில் அவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட, மலருக்கு மிகுதியான பதற்றம். இப்போது மருமகளாக ஜனாவின் வீட்டிற்குப் போக வேண்டுமே என்ற பயம் அவளுக்கு அன்று காலை முதலே இருக்க, சௌந்தர்யா ஜனார்த்தனைக் காண வந்த முரளியிடமும் சாரதாவிடமும் சொல்லிவிட்டார்.
“அண்ணா, நான் கண்டிப்பா இன்னொரு அம்மாவா இருப்பேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், எனக்கு சமாளிக்க முடியாத அளவு இரண்டு பசங்க இருக்காங்க, ஆனா நல்ல மாமியாரா இருப்பேன். நீங்க இவளை என்னை நம்பி அனுப்பி வைக்கலாம்” என்றதும் மலர் அவரை குறுகுறுவென பார்த்தாள். ஜனாவின் அறைக்கே வெளியே இந்த பேச்சுகள் நடக்க, ஜனா மட்டுமே உள்ளே இருந்தான், அமிழ்தாவுடன்.
“என்ன என்னைப் பார்க்கிற? காலையில இருந்து உன் கை நடுங்குறது நான் பார்த்தேன் மலர்” என்று அவர் சொல்ல, மலர் பேசும் நிலையில் இல்லை.
“சரிம்மா, நீங்க எல்லாம் பார்த்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும், உன்னை நம்பி மட்டும்தான் அனுப்பி வைக்கிறேன்” என்றார் முரளிதரன்.
ஜனா ஹாஸ்பிட்டல் விட்டுப் போகும்வரை முரளியும் சாரதாவும் மகளுடனே இருந்தனர். பிரசன்னா கார் எடுத்து வர, ஜனா முன்னே உட்கார, சௌந்தர்யா, அமிழ்தா, மலர் மூவரும் பின்னே உட்கார்ந்து கொண்டனர்.
வீட்டிற்குப் போனதும், சௌந்தர்யா வர்ணவியை ஆரத்தி எடுக்க சொல்ல, அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஆரத்தி எடுத்தவள், சுதந்திர மலரை முறைக்கத் தவறவில்லை. ரங்க நாயகியும் ஜெயப்பிரகாசமும் அறையை விட்டு வெளியே வரவில்லை, அவர்களுக்கு மலரை சுத்தமாகப் பிடிக்காது, அவர்களை விட அவள் எல்லா வகையிலும் குறைவு என்ற எண்ணம்.
மலரும் வருகிறாள் என்று ஜகன் சொல்ல, அவருக்கும் ஜெயப்பிரகாசத்திற்கும் வாக்குவாதம்தான், பிரசன்னா இடையில் புகுந்து பேசி அவர்களை சரிகட்டி வைத்தான்.
சௌந்தர்யா அவர்கள் வந்து வார்த்தை விடுவதற்கு வராமல் இருப்பதே மேல் என்று நினைத்துக்கொண்டார். அமிழ்தாவைப் பார்த்த வர்ணவி அம்மாவிடம்,
“மா, அவளை என்னோட ப்ரண்ட் ஆக்கிவிடு” என்று கேட்க,
“அதை உன் ப்ரண்ட் கிட்ட கேளுடி, ஏன் இன்னும் முகம் தூக்கி வைக்கிற, உன் அண்ணா பார்த்தா சந்தேகப்படுவான்” என்று ஜனாவின் அம்மா என்று நிரூபித்தார்.
பிரசன்னாவையும் அவரையும் தவிர எல்லாரும் ஜனாவின் நாடகத்தை உண்மை என்றே நம்பினர்.
“மா!” என்று அவள் இழுக்க,
சௌந்தர்யா, “அமிழ்து பேபி இவங்கதான் உன் அத்தை” என்றதும் அம்மாவை உடனே பார்த்த அமிழ்தா,
“அப்பத்து, ஷி இஸ் அம்மா ப்ரண்ட்” என்றாள் அமிழ்தா.
“எஸ் பேபி, அவ உன் அம்மாவுக்குப் ப்ரண்ட், அப்பாவுக்கு சிஸ்டர், உங்க கிருஷ்ணா சித்தி இருக்காளே அவளை மாதிரிதான்” என்றதும் அமிழ்தா உடனே,
“கித்தி” என்று அம்மாவின் தங்கை போல அப்பாவின் தங்கையும் என்று நினைத்து சொல்ல, மலர் அமிழ்தாவைத் தூக்கி வைத்து விளக்கம் சொல்லி, அவளை வர்ணவியின் கையில் கொடுத்தாள்.
சௌந்தர்யா மகனை ‘ரெஸ்ட் எடுக்க போ’ என்றதும் ஜனா படியேற, ஜனாவுடன் மலர் அவர்கள் அறைக்குப் போனாள்.
முதல் முறை மனைவியாக அவனுடன் அவன் அறையில் இருக்கிறாள். அச்சம் அகப்புறம் அவளை அலைக்கழிக்க, ஜனா நன்றாக தலையணையில் தலை சாய்த்து உட்கார்ந்திருக்க, இவள் அவனருகே விரல் தொடும் தூரத்தில் இருந்தாள்.
“ஜனா நான் கீழ போகவா? அமிழ்தா தனியா இருப்பா” என்று அவனிடம் இருந்து தப்பிக்க பார்க்க,
“மலர் மேடம், நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்துட்டேன், சொன்னது ஞாபகம் இருக்குதானே?” என்று அவன் அவள் கையை விடாது பிடித்துக் கொண்டு கேட்க, தனல் மேல் நிற்கும் நிலையில் தத்தை.
எப்படியோ சமாளித்தவள்,
“எனக்கு இப்போ உனக்குக் கொடுக்க இஷ்டமில்ல” என்றதும் ஜனா சிரித்துவிட்டான்.
என்ன சிரிக்கிறான் என்று மலரின் பார்வை பார்க்க,
“அப்போ வாங்க இஷ்டம்னு சொல்ற” என்றவனை அவள் அகல விரித்த விழிகளுடன் பார்க்க, நொடி நேரத்தில் அவளை இழுத்து தேவையாய், தேடலாய் ஒரு முத்தம் பதித்தான்.
நீண்ட நேரம் அவளின் இதழை விடவே இல்லை அவன். இத்தனை வருட ஏக்கம், தவிப்பு, தனிமை எல்லாம் ஒன்றாய் சங்கமிக்க அவனால் மலரை விடவே முடியவில்லை.
உண்மையில் விருப்பமில்லாத மலரை கூட விரும்ப வைக்க கூட முத்தம் அது! மலரைக் கரைய வைத்தான். அவனால் மலரை என்னவும் செய்ய முடியும். காதலிக்க, காயப்படுத்த, இப்படி கரைய எல்லாம் செய்யும் அவன் காதல்.
சுதந்திர மலருக்கு இன்பமா, துன்பமா, வேண்டுமா வேண்டாமா என்ற ஆராய்ச்சிகள் ஓடினாலும் அவனை விட்டு விலக மனமில்லை. சில நிமிடங்களில் அவளை விட்டவன்,
“ஹ்ப்பா இப்போதான் சுதந்திரமா கிஸ் பண்ண முடியுது” என்று கண்ணடித்தான். மலரின் முகம் சிவந்திருக்க, அகத்திலோ பெரும் இறுக்கம்.
“மிஸஸ். மலரே என்ன ஒரே யோசனை?”
“ஒன்னுமில்ல” என்றவளை குறுகுறுவென பார்த்தவன்,
“நான் நல்லாகிட்டேன்னு தான் டாக்டர் சொன்னாங்களே, வை டென்ஷன்?”
“நீ டென்ஷன் ஆனா எனக்கு என்னமோ பயமா இருக்கு, சொல்லு என்னாச்சு? நான் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னைக் கஷ்டப்படுத்தினேனா?”என்றான்.
‘அய்யோ அவன் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்கப் போறான்’ என்று உள்மனம் சொன்னது. ஆம், மலருக்கு அவன் மீது இப்போது கொஞ்சமும் சந்தேகம் இல்லை, அவனை பரிசோதித்த டாக்டரிடம் அவள் துருவி துருவிக் கேள்வி கேட்க, அவர் இவளைப் பிடித்துக் கத்திவிட்டார்.
அவர் அவள் கணவனுக்கு மேல் நடிக்க, அதனால் அந்த அம்னீசியா எல்லாம் உண்மை என்றே மலர் நம்பியிருந்தாள். உடனே அவன் பேச்சை மாற்ற வேண்டி,
“ம்ம், இது எத்தனையாவது கிஸ்னு எண்ணிட்டு இருக்கேன்” என்று அவள் திடீரென சொல்ல,
“ஹாஹா ஹாஹா” என்று சிரித்தவன்,
“எண்ணினா அது முத்தமில்ல டி வெறும் சத்தம்” என்றவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் அவ்வளவு சத்தமாகச் சிரிக்க மலர் அவனின் வாயை மூட, அவன் வாய் மூடிய கைக்கும் அவன் முத்தமிட, சரியாக அந்த நேரம் வர்ணவி வந்து அறைக்கதவைத் திறந்தாள்.
‘ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்பது?
தடுமாற்றம் தாக்குது’
✅ End of Episode 7
Nice
நடந்ததை மறந்து