Episode 10

காதல் 10

ஜனா சிறிது நேரம் அவளை அணைத்திருந்தவன், கைகளில் வலிபெருகிட, கையை எடுத்துவிட்டு, அவள் முன் போய் நின்றவன்,

“கை வலிக்குது பேபி, அதனால நீயே கட்டிக்கோ. நான் ஒட்டிக்கிறேன்” என்றான்.

“அப்படியென்ன வலிக்கிற கையோட கட்டிக்கணும்னு ஆசை உனக்கு? போய்த் தூங்கு ஜனா” என்று அவள் சொல்ல, அவளை ஒட்டி நின்று,

“தூங்குறதா? என் பொண்ணு இன்னும் எங்கிட்ட ஒட்ட மாட்டேங்கிறா, என்னை ஒட்டிட்டு இருந்த நீ இப்படி வெளியே நிக்கிற. அப்புறம் எப்படி எனக்குத் தூக்கம் வரும்?”

“இத்தனை நாள் எப்படி தூங்கின? அப்படியே போய் இப்பவும் தூங்கு” என்று அவள் சலிப்பாகப் பேசினாள்.

“ஹ்ம்ம், இத்தனை நாள் என்னை விட்டு நீ ஜாலியா யூஎஸ் போய்ட்ட, நான் தனியாதானே தூங்கியிருப்பேன், அதனால் நீ வந்து என்னோட தூங்கு மலர், ஏன் இந்த நேரம் வெளியே நிக்கிற?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியாமல்,

“என்னவோ தூக்கம் வரல” என்று சோர்வாய் மலர் சொல்ல,

ஜனாவோ, “ஆஹான், உன்னைத் தூங்கவிடாம இருக்கணும்னுதான் ஆசை , ஆனால் முடியாதே” என்றதும் அவள் முறைத்தாள்.

“அட முறைக்கிறதைப் பாரேன்” என்று வம்பிழுத்தவன்,

“ஓவரா பண்ணாதடி ராங்கி. நான் தூங்கிட்டுதான் இருந்தேன் திடீர்னு முழிப்பு வந்துடுச்சு. தலை வலியா இருக்கு மலர், நீ கொஞ்சம் தலையைப் பிடிச்சு விடேன்” என்று அவன் சொன்னதும்போதும் மலர் உடனே மாறிப்போனாள். அவன் மேல் காதலாகி,

“அறிவிருக்கா உனக்கு? அதை சொல்லாம இடிச்சிட்டு வந்து நிக்கிற, எரும ஏன் உனக்கு அடிக்கடி வலி வருது?” என்றவளின் முகத்தில் ஒரு பதற்றம் தெரிய,

“அடிப்பட்டா வலிக்கத்தானே டி செய்யும் லூசுப்பொண்டாட்டி” என்றவனை கவலையுடன் பார்த்தாள்.

“ரொம்ப வலிச்சா நாளைக்கு டாக்டர் கிட்ட போகலாம் ஜனா” என்றதும்,

“அதெல்லாம் ஒன்னுமில்லடி ரொம்ப வலிச்சா சொல்றேன் நான், இப்போ வந்து தலையைப் பிடிச்சுவிடுவியா இல்லையா?” என்று கடுப்பில் பேசினான்.

“சாரி சாரி” என்றவள் அவனைப் படுக்க சொல்லி அவள் மடிமீது அவன் தலையை வைத்திருக்க, மலர் மெல்லமாகப் பிடித்துவிட, மௌனமான நேரங்களாக கழிந்தன அவை.

அடுத்த நாள் காலையில் மலர் முதலில் எழுந்துவிட்டாள். ஜனா இன்னமும் அவள் மடிமீது இருக்க, இரவெல்லாம் உட்கார்ந்தபடியே உறங்கி இருந்ததில் அவளுக்கு முதுகெல்லாம் வலிக்க,

“ஜனா கொஞ்சம் நகருங்க, நான் எழுந்திருக்கணும்” என்று அமிழ்தாவுக்குக் கேட்கா குரலில் மெல்லமாய்ப் பேசினாள்.

ஜனா மலரின் பேச்சில் விழித்தவன், இன்னும் நன்றாக மடியில் சாய்ந்தவன்,
“கொஞ்ச நேரம் இரு, அப்புறம் போகலாம்” என்று சொல்லி அவளை விடாமல் இருந்தான்.

“ஜனா நான் நைட்டெல்லாம் உட்கார்ந்தே தூங்கியிருக்கேன், முதுகு வலிக்குதும்மா” என்று அவள் பாவமாக சொல்ல,

“அச்சோ, ஏன் டி உனக்கு இந்த வேலை?” என்றவன் அவள் மடியில் இருந்து தள்ளி அவளையும் இழுத்து அருகே படுக்க வைத்துக் கொண்டான்.

“ஜனா அமிழ்தா எழுந்திரிக்கறதுக்குள்ள நான் ரெடியாகிட்டு வரணும், என்னை விடும்மா” என்று கெஞ்சிப் பார்க்க, அவனுக்குச் சில வருடமாய் கிடைத்திடாத வாய்ப்பு இது. எத்தனை பொழுதுகள் புலரும்போது மலர் அருகே இருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து ஏங்கியிருப்பான், கனவெல்லாம் நிஜமாகி இருக்க, அந்த காலைப்பொழுதுக்கும் குளிருக்கும் மலரின் மென்மைக்கும் அவளை விடவே முடியவில்லை. மலர் அவஸ்தையில் தவிக்க, வெளியே சாத்வீயின் குரல் கேட்டது. உடனே ஜனார்த்தன் மலரை விட்டுவிட்டு,

“சாத்வீ கூப்பிடுறா என்னன்னு பாரு” என்று சொல்ல, மலரும் எழுந்து போய்க் கதவைத் திறக்க, சாத்வீயோடு வர்ணவியும் நின்றிருந்தாள். மலரின் அருகே வந்த சாத்வீ,

“சாரி அத்த, பாப்பா பாவம்ல, நீங்க ரொம்ப தூரம் யூஎஸ்ல இருந்தீங்களாம். அம்மா சொன்னாங்க குட்டிப்பாப்பா யாரையும் பார்க்கல. அப்பா குட்டிப்பாப்பாவை நான்தான் பார்க்கணும் சொன்னாங்க. அப்பாவும் சாரி சொல்ல சொன்னாங்க” என்ற சாத்வீ இரண்டு காதுகளையும் தோப்புக்கரணம் போடுவது போல் பிடித்துக் கொண்டு பாவமாகப் பார்த்தாள். இரவே வர்ணவியும் பிரசன்னாவும் சாத்விக்குப் புரியும்படி எடுத்து சொல்லி இருக்க, அவள் காலையிலேயே அம்மாவை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.

குழந்தை இப்படி சொல்லவும், உடனே சாத்வீயைத் தூக்கிய மலர்,
“எனக்குத் தெரியுமே சாத்வீ குட் கேர்ள்னு, உன் அப்பாவும் அமிழ்தா அப்பாவும் ப்ரண்ட்ஸ், உன் அம்மாவும் நானும் ப்ரண்ட்ஸ் அப்போ நீயும் பாப்பா கூட ப்ரண்ட் ஆகிடு சாத்வீகுட்டி” என்று முத்தமிட,

“நானும்” என்று சொல்லி சாத்வீயும் முத்தமிட்டாள்.

வர்ணவி “ஸ்கூலுக்கு டைம் ஆகிடும் சோ சீக்கிரம் ரெடியாகு போ” என்று சொல்ல சாத்வீ சிட்டாகப் பறந்து போக, வர்ணவியைப் பார்த்த சுதந்திரா,

“ஏன் டி குழந்தை தானே? அவ பெருசானா புரிஞ்சிப்பா, அதுக்குப் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து அவளுக்கு லெக்சர் எடுத்தீங்களா?” என்று கேட்டதற்குப் பதில் சொல்லாத வர்ணவி சுதந்திராவையே உற்றுப் பார்த்தாள்.

“அய்யே ஓவரா பண்ணாதடி வரு, உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுது. நமக்குள்ள ஏன் இந்த வெட்டி வீராப்பெல்லாம்? நமக்கு இந்த ரோஷம் மண்ணாங்கட்டியெல்லாம் கிடையாதுடி, பேசிடு டார்லிங்” என்றதும் வர்ணவி அவளைக் கட்டிக்கொண்டு,

“ஒரே வீட்ல இருந்துகிட்ட உங்கிட்ட பேசாம இருக்கறது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? நீ ஏன் என்னை ஏமாத்தின?” என்று மெல்லமாகக் கேட்டாள்.

“அது நீ ஜனாவோட தங்கச்சியா இல்லாம என்னோட ப்ரண்டா மட்டும் இருந்திருந்தா நான் உங்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பேன், ப்ளீஸ் புரிஞ்சிக்கோ வரு, என்னோட டிப்ரெஷன்ல இருந்தேன் நான்” என்று மலர் மெதுவாக சொல்ல, வர்ணவியும் கோபம் மறைந்து மலரைக் கட்டிக்கொண்டாள். அதையெல்லாம் மெத்தையில் உட்கார்ந்துபடி பார்த்த ஜனா,

“என்னடி பண்றீங்க இரண்டு பேரும்? ஏய் குட்டிப்பிசாசே என் பொண்டாட்டியை விடுடி” என்று செல்லமாக அதட்டினான்.

“அவ ஃப்ரஸ்ட் எனக்குதான் ப்ரண்ட், அப்புறம்தான் உனக்கு பொண்டாட்டி” என்றபடி வர்ணவி மலருக்கு முத்தமிட்டாள்.

“கழுதைங்களா! ரொம்ப பண்றீங்க சொல்லிட்டேன்” என்று அவன் தலையணையை எடுத்து அறைக்கு வெளியே அவர்களை நோக்கி வீசினான். அவர்கள் நகர்ந்து விட, ஜனா கொஞ்சம் வேகமாகவே வீசியிருக்க, அது கீழே நின்றிருந்த பிரசன்னாவின் மீது விழுந்திருக்க, அவன் மேலே பார்த்து முறைத்தான்.

மலர் உடனே,
“ஹேய் அவன் நான் போட்டேன் நினைச்சிக்கப் போறான், ஒழுங்கா உண்மையை சொல்லு” என்று வர்ணவியிடம் சொல்ல,

“மாமா, அண்ணா தான் தூக்கிப் போட்டான், முறைக்காம போ” என்று மேலே இருந்து கத்தினாள் வர்ணவி.

“கத்தாதடி, கீழ வா உனக்கு இருக்கு” என்று அவனும் கத்தினான்.

மலர் முகமெல்லாம் மலர்ச்சி தழும்ப, அறைக்குள் வர அது அவளை அழகாய்க் காட்ட, ஜனாவின் அகப்பார்வையில் அது அகப்பட, அவன் விழிகளில் அவள் எப்போதும் அழகியே!

மெத்தையில் இருந்து எழுந்து நின்றவன் அவள் உள்ளே வர, இடக்கையினால் இழுத்து அணைக்க, மலருக்கு வர்ணவி பேசியது ஒரு புத்துணர்வைத் தந்திருக்க, அகத்தில் அலைப்புறுதல்கள் இல்லை. அந்த நொடி அவள் சந்தோஷமாகவே இருக்க, அப்படியே அவன் நெஞ்சமதில் சாய்ந்தாள்.

“என்னடி பண்றீங்க இரண்டு பேரும், இனிமே உங்க இரண்டு பேரையும் இந்த வீடு எப்படி சமாளிக்க போகுது தெரியலையே” என்று விளையாட்டாக புலம்பியவன்,

“சரி நீ சொல்லு, உனக்கு நான் ஃப்ரஸ்டா வர்ணவி ஃப்ரஸ்டா?” என்று அவன் எப்போதும் கேட்கும் கேள்வியைக் கேட்க,

“அறிவிருக்கா டா டால்டா தலையா உனக்கு? நமக்கே ஒரு பாப்பா வந்துட்டா இன்னமும் அவ கூட போட்டி போடுற” என்றபடி மலர் அவனின் தலையைக் கலைத்துவிட்டாள்.

“பின்ன அவதான் ஃப்ரஸ்ட்னு சொல்றா, நீ அமைதியா இருக்க” என்று ஜனா கேட்கவும்,

“அவ உன்னைக் கடுப்பேத்த சொன்னா டா வெண்ண” என்றதும்,

“எப்பா எப்படியெல்லாம் நல்ல வார்த்தைப் பேசுறடி நீ, உங்கூட சேர்ந்து நானும் நல்லா பேசுறேன். பிரசன்னா என்னை முறைக்கிறான்”

“அப்போ எங்கூட சேராத, போ” என்றவள் அவனைத் தள்ளிவிட்டு மகளிடம் போக, அமிழ்தா அப்படி இப்படி அசைந்து தூக்கத்திலேயே அம்மாவைத் தூக்கு என்று சொல்ல

“ஜனா நீ ரெஸ்ட் எடு, நான் இவளைக் கீழ அழைச்சிட்டுப் போய் பால் கொடுக்கிறேன், உனக்குக் காஃபி எடுத்துட்டு வரவா?” என்று கேட்டாள்.

“இல்ல வேண்டாம், நான் தூங்குறேன்” என்று சொல்லி அவன் மீண்டும் மெத்தையில் படுத்துக்கொண்டான்.

மலர் மகளைக் கையில் வைத்துக்கொண்டே பல் துலக்கியவள், அமிழ்தாவையும் பல் தேய்க்க வைத்து கீழே அழைத்துப் போனாள். அமிழ்தா படிக்கட்டுகளைப் பார்க்கவும்,

“மா, நானே நானே” என்று அவளிடமிருந்து இறங்கி துறுதுறுவென்று படிகளில் ஓடினாள். கடைசி படி வரும்போது வந்த வேகத்தில் தடுமாறி விழப்போக, பிரசன்னா பார்த்தவன் உடனே குழந்தையைத் தூக்கியவன் மலரை முறைத்தான். வர்ணவி அங்குதான் சாத்வீக்கு ஷூ சாக்ஸ் போட்டுக்கொண்டிருந்தவள் இதைப் பார்த்துவிட்டு சிரிக்க, ஜகன் பேத்தியிடம்,

“ஏன் அம்முக்குட்டி ஓடி வரீங்க?” என்றபடி பிரசன்னாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார்.

“சௌ, அமிழ்தாவுக்குப் பால் எடுத்துட்டு வா” என்று குரல் கொடுக்க,

“நான் கொடுக்கிறேன் மாமா” என்று சொல்லி மலர் கிச்சனுக்குள் போனாள்.

“வாங்க மருமகளே” என்று புன்னகையுடன் சௌந்தர்யா வரவேற்க,

“சாரி அத்தை, லேட்டாச்சு” என்று பாவமாக முகத்தை வைத்து சொல்ல

“அப்படியே உன் ஹெச்.ஓடி கிட்ட முகத்தை வைக்கிற மாதிரியே வைக்கிறியே, தூங்கினா என்ன? சின்னக்குழந்தை இருக்கு, தூங்க லேட் ஆகும்தான். இதுக்கெல்லாம் சாரி வேண்டாம்” என்றார்.

“இந்தா உனக்குக் காஃபி, அமிழ்தாவை நான் பால் குடிக்க வைக்கிறேன்” என்று சொல்லி சௌந்தர்யா காய்ச்சியப் பாலை ஆற்றினார்.

“அத்தை இன்னொரு உண்மை சொல்லவா?” என்றதும் சிரித்தபடியே அவர் தலையசைக்க,

“நான் ஜனா ஃப்ரஸ்ட் லவ் சொல்லும்போது எதை நினைச்சு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? ஒன்னு எப்பவும் வரு கூடவே இருக்கலாம், இன்னொன்னு உங்களோட இந்த காஃபி குடிக்கலாம்” என்று சிரித்தபடி காஃபியை உறிஞ்ச,

“இன்னமும் காலேஜ் பொண்ணு மாதிரியே பேசுற டி நீ” என்றவர் பேத்திக்குப் பாலை ஆற்றி எடுத்துப் போனார்.

பிரசன்னா மகளைப் பள்ளிக்கு அழைத்து செல்ல வர்ணவி அப்பாவுக்கு உணவு எடுத்துவைக்க, சௌந்தர்யா மாமனார் மாமியாருக்குச் சாப்பாடு எடுத்துப் போனார். அமிழ்தா தாத்தாவுடன் டைனிங் டேபிளில் உட்கார முயன்று, உயரம் பற்றாமல் நின்றுகொண்டே அவரிடம் ரைம்ஸ் சொல்ல, வர்ணவியிடம் சொல்லிவிட்டு ஜனாவைப் பார்க்க மேலே போனாள் சுதந்திரா.

ஜனா நல்ல உறக்கத்தில் இருக்க, அவனருகே போய் நின்றவள், அவனை எழுப்பி

“ஜனா, எனக்கு ஆபிஸ் வொர்க் நிறைய இருக்கு, லீவ் முடிஞ்சுப்போச்சு, வீட்டுக்குப் போய் என் லேப்டாப் எடுக்கனும், போய்ட்டு வரேன்” என்று சொல்ல,

அவன் தூக்கத்திலேயே, “ம்ம்” என்று முனகினான்.

“என்ன ம்ம்? உன் பொண்ணை வீட்ல விட்டுட்டுப் போறேன், முடிஞ்சா அவளோட ப்ரண்ட் ஆகிக்கோ, நான் இருந்தா என்னை விட்டு இருக்கறது கஷ்டம், இல்லாத டைம் அவ கூட க்ளோஸ் ஆகிக்கோ, சோம்பேறியா தூங்காம எழுந்திரு” என்று போர்வையை இழுத்துவிட,

“ஹேய் ராங்கி! குளிருதுடி” என்றவன் அவள் யோசிக்கும் முன் அவளை இழுத்து தன் மேல் போர்வையாய்ப் போர்த்த, மலருக்கு ஒன்றுமே புரியவில்லை.

“விடு ஜனா” என்று அவனை விட்டு விலகியவள் போர்வையைப் போர்த்திவிட,

“நோ தூக்கம்! இன்னிக்கு என் பொண்ணோட நான் ப்ரண்ட் ஆகுறேன் பாரு” என்றவன் பாத்ரூமினுள் நுழைய, மலர் கெஸ்ட் ரூம் பாத்ரூமில் குளித்து உடைமாற்றியவள் கீழே இறங்கி சௌந்தர்யாவிடம் தன் வீட்டுக்குப் போய் லேப்டாப் எடுத்துவருகிறேன் என்று சொன்னாள்.

“அமிழ்தா டீவி அப்புறம் பார்க்கலாம், வா பேபி சாப்பிடலாம்” என்று ஜகனுடன் உட்கார்ந்து டீவி பார்த்த குழந்தையை அழைக்க,

“அவளுக்கு முன்னாடியே சாப்பிட கொடுத்துட்டேன், நீ முதல்ல சாப்பிட்டு போ” என்று அவளை மல்லுக்கட்டி சாப்பிட வைத்தார். வர்ணவி உடனே,

“மம்மி, ரொம்ப கவனிக்காத உன் மருமகளை” என்றாள்.

“ஏன் டி என் மாமியார் என்னைக் கவனிக்கறாங்க, உனக்கு ஏன் எரியுது?” என்று மலர் முறைத்தாள்.

“மா, உன் மருமகளை அப்புறம் கவனிக்கலாம், எனக்கு சாப்பாடு ஊட்டிவிடு” என்றபடி ஜனார்த்தன் வந்து உட்கார,

“அடியே அண்ணி, என் அண்ணனுக்கு ஊட்டிவிட்டு அப்புறம் சாப்பிடு டி” என்று வர்ணவி வம்பு செய்ய, சௌந்தர்யா உடனே,

“ப்ச், அவ சாப்பிட்டுட்டு இருக்கா டி, இருடா ஜனா நான் வரேன்” என்று சௌந்தர்யா மகனுக்கு இட்லியை ஊட்டிவிட்டார்.

“மா, உன் மருமக முன்னாடி அண்ணாவுக்கு ஊட்டாத, அப்புறம் சண்டைப் போடுவாம்மா அவ” என்று கலாய்க்க,

“ஹேய், எனக்கு சோறா உன் அண்ணாவான்னா சோறுதான் டி முக்கியம், எனக்கும் எங்க அத்தைக்கும் காலையில சண்டை மூட்ட பார்க்காத” என்று மலர் திட்டியவள் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றாள்.

ஜனா உண்டு முடிக்கவும், மகளிடம் போனவன்

“நம்ம இரண்டு பேரும் விளையாடலாமா பேபி” என்று கேட்க,

“ஐ, ஜாலி, எஸ் வீ வில் ப்ளே டாடி” என்று சொல்லிக் குதிக்க, ஜகன் அலுவலகம் சென்றுவிட, எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க, ஜனாவும் அமிழ்தாவும் மாறிமாறி விளையாடினர். ஒளிந்து பிடித்து விளையாட, ஜனா பெண்ணுக்குத் தெரியுமாறே ஒளிந்து விளையாட, அமிழ்தாவும் குஷியாகி அப்பாவைப் பிடித்தாள். ஒரு கட்டத்தில் ஜனாவுக்குப் போன் வர, குழந்தை எங்கே போனாள் என்று கவனிக்கத் தவறிவிட்டான். ஒரு நிமிடம்தான், பேசி முடித்து குழந்தை எங்கே என்று எல்லா இடங்களிலும் தேட அமிழ்தாவைக் காணவில்லை.

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 5 days ago

Nice 

Mrs Beena loganathan Reader 5 days ago
உள்ளம் துடிக்குது உருக
உண்மை தடுக்குது மருக
உறவு ஏங்குது அணைக்க
உணர்வு தயங்குது சேர்க்க..
உடன் மகள் இருக்க
உள்ளம் மகிழ்வில் துள்ள

உண்மை வெளி வரும் வேளை வந்து விட்டது போல 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top