Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 27

தூரம் 27(நிறைவு)

திருமணமான மூன்றாவது நாள் பெண்வீட்டில் மாப்பிள்ளைக்கு விருந்து ஏற்பாடானது. மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருந்தனர்.

“வாளிக்குள்ள தலையை விட்டு என்ன தேடுறீங்க?” என்று வசுந்த்ரா சித்ரஞ்சனைக் கேட்க,

“சக்தி! கோழி கழுத்து வேணும்னு கேட்டான். அதான் தேடுறேன்” என்றதும் வசுந்த்ராவுக்குச் சிரிப்பு வந்தது.

“என்னடி சிரிப்பு?” சித்ரஞ்சன் கரண்டியை வைத்து கிண்டியபடி கடுப்பாகக் கேட்க,

“எவ்வளவு தேடுனாலும் ஆட்டுக்கறி குழம்புல கோழி கழுத்துக் கிடைக்காது ரஞ்சன்” என்று வசுந்த்ரா சொல்ல, ஒரு நொடி விழித்த சித்ரஞ்சனுக்கும் சிரிப்பு வர இருவரும் சிரித்துவிட்டனர்.

“டேய் லாலா” என்று கத்தி அழைத்த சக்தி அவன் அருகே வரவும்,

“உன் சித்தப்பா என்னடா விருந்துக்கு வந்த மாப்பிள்ளையை ஒழுங்கா கவனிக்காம அங்க சிரிச்சிட்டு இருக்கார்?” என்று கேட்க,

“என்ன உன்னை கவனிக்கலையா?” லாலாவும் அதிர்ச்சிபோல் கேட்டான்.

“அநியாயம் பண்ணாதீங்கடா.” என்று சரோஜினி சொல்ல,

“இவளுக்குப் பொறாமைடா மாப்ள..” என்ற லாலா,

“என்னடா உன்னை ஒழுங்கா பார்த்துக்கிறாளா?” என்று விசாரிக்க சரோஜினி சக்தியை முறைத்தாள்.

“அதெல்லாம் சரோவுக்கு என்னை நல்லா பார்க்கிறதுதான் வேலை” என்றிட சரோஜினிக்குப் புரையேறியது.

லாலா உடனே, “ஹேய் பாத்து சரோ” என்று தங்கையின் தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தான்.

“லாலா லாலாலா” என்று சக்தி ராகமிழுக்க லாலா முறைத்தான்.

“என்ன ஒரு பாசம்” என்று சீண்ட,

“ரொம்பப் பண்ணாதடா, இரு சித்தப்பாவைக் கூப்பிடுறேன்” என்று சொல்லி அவன் நகர,

“என்ன சரோ, மெதுவா சாப்பிடு” என்றான் சக்தி.

“சாப்பிடும்போது என்ன பேசுற?” என்று சரோஜினி அவன் கையைக் கிள்ள,

“நான் எதார்த்தமா பேசுறதை நீ எக்குத்தப்பா எடுத்துக்கிட்டா நானா பொறுப்பு?” என்று கண்சிமிட்டிய கணவனைப் பார்த்து புன்னகைத்துத் தோற்றாள் சரோஜினி.

வழக்கம்போல் இரு தாத்தாக்களும் வீட்டு வாசலில் நின்றனர் தவிர, மற்றவர் வீட்டுக்குப் போகவில்லை. விருந்து என்றதும் உணவு கேரியரில் பயணப்பட்டாலும் உண்டாலும் வீட்டு பக்கம் போகவில்லை. சரோஜினி சக்திவேல் வீட்டில் இயல்பாகப் பொருந்திவிட்டாள். சசிகலா அவளை நன்றாகப் பார்த்துக்கொண்டார்.

திருமணமாகி ஆறு மாதங்கள் வேகமாக ஓடிவிட்டன.

அன்று காலை பரபரப்பில் மாமியாரும் மருமகளும் உணவு சமைத்தனர், சரோஜினிக்கு அன்று உடல் நலமில்லை என்று விடுமுறை எடுத்துவிட்டாள்.

“நீ போய் உட்காருடி சரோ. நான் தோசை ஊத்திக்கிறேன்” என்று சசிகலா சொன்னபோதும் சரோஜினி கேட்கவில்லை. சரோஜினி தோசை ஊற்ற, சசிகலா வெளியே இருந்த அடுப்பில் கணவனுக்குக் கொடுக்க மதியத்திற்குக் குழம்பு வைத்தார்.

சரோஜினி தோசை ஊற்றிவிட்டு வேக விட்டு நிற்க, சக்தி அவளிடம் டம்ளரை நீட்டினான். உள்ளே சாத்துக்குடி பழச்சாறு.

“டயர்டா இருப்ப குடிச்சிட்டு செய்.” என்றவன்,

“எனக்குத் தோச வேண்டாம் சரோ, நான் எஸ்பி ஆபிஸ் போகணும். லேட்டாச்சுன்னா உன் சிடுமூஞ்சி சித்தப்பா என்னை நிக்க வச்சு கேள்வி கேட்பார். அங்க போய் சாப்பிட்டுக்கிறேன், நீ ரெஸ்ட் எடு. எதாவது வேணும்னா சொல்லு வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி சக்தி போக சரோஜினி தோசையைக் காயவிட்டு காதலில் கவிந்து நின்றாள்.

“என்ன இது கருகின வாசனை?” என்று சசிகலா பின்கட்டிலிருந்து வந்தவர் கேட்க, அவர் குரலில் கலைந்த சரோஜினி,

“சாரி அத்த” என்று தோசையை எடுக்க போக,

“அதென்ன ஜூஸா? இதான் இந்த பய இவ்வளவு நேரம் செஞ்சானா? நீ போய் உட்கார்ந்து குடி சரோ” என்ற சசிகலா தோசையை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு

“தோசை போதும். உங்க மாமா பழையது குடிச்சிக்கிறேன் சொல்லிட்டார்” என்றார்.

பேசும்போதே கல்லூரிக்குத் தயாராகி வந்த பாஸ்கரன் டைனிங் டேபிள் மேல் காய வைத்திருந்த அவர் கேரியர் டப்பாவை எடுத்து உணவை தேவையான அளவு எடுத்து வைத்துக்கொண்டார். அதையெல்லாம் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சரோஜினி. ஆண்கள் எல்லாரும் வேலையாக வெளியே சென்றுவிட மாமியாரும் மருமகளும் ஒன்றாய் உண்டனர்.

“புள்ளையை ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க அத்த” என்று சரோஜினி சொல்ல,

“உன் புருஷன் ஜூஸ் போட்டுக்கொடுத்ததுமே பாராட்டுறியா டி?” என்று சிரித்தார் சசிகலா.

“பின்ன அதெல்லாம் பெரிய விஷயமில்லையா? நமக்கு ஆசையிருந்தாலும் அவங்க இதெல்லாம் செய்யணும்னு நினைச்சாலும் அவங்க செய்யணுமில்ல. சக்தி நிஜமா இப்படி இருப்பான் நான் நினைக்கவே இல்லை” சரோஜினி ஆச்சரியமாக சொன்னாள்.

“அப்புறம் என்னத்தடி லவ் பண்ணுனீங்க?”

“ஆமா லவ் பண்ணினோம். போங்கத்த! பார்க்கிறதே பெருசு, அதுல உங்க மவன் வேற எப்பவும் லேட்டாதான் வருவான்” என்றவள்,

“சக்தி தண்ணி தூக்குவான், முன்வாசலைப் பெருக்குவான் பார்த்திருக்கேன். ஆனா வீட்ல உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான்னு எல்லாம் எதிர்ப்பார்க்கல அத்த, மாமா அவர் இன்னும் சூப்பர். அவர் கேரியரை அவரே பேக் பண்ணிடுறார், உங்களுக்கு டீ போட்டுத் தரார், அவர் வேலையை அவரே பார்த்துக்கிறார்.” புகுந்த வீட்டினை பெருமையாக சொன்ன மருமகளை புன்னகையோடு பார்த்த சசிகலா,

“அவன் செய்யாம வேற யார் செய்றது? வசுந்த்ரா இருக்கும்போது அவ ஒத்தாசையா இருப்பா. அப்போ கூட என் மாமனார் பையனுக்கு என்ன வேலை கொடுத்தாலும் பொண்ணுக்கும் கொடுப்பார். எனக்கும் முதல்ல ஆச்சரியமா இருக்கும், அப்புறம் அடுத்த வீட்ல என்ன பேசுவாங்கனு கவலையா இருக்கும். ஆம்பிளைங்கள விட பொம்பளைங்கதான் அப்படி பேசுவாளுங்க, எல்லாம் அவளுங்க புருஷனுங்க அப்படி ஒத்தாசையா இல்லைனு வர பொச்சரிப்பு.” என்றதும் சரோஜினி சிரித்தாள்.

“என்னடி சிரிக்குற? உண்மைதான். நான் ராவைக்கு எல்லா வேலையும் செஞ்சுட்டுத் தூங்கி காலையில பால் கறக்கணும். முன்னாடி இவரும் கறப்பார், இவர் வேலையில பிசியா இருக்கவும் மாடு எல்லாம் இவரோட ஒட்டுறதில்ல, இந்த சக்தி பயலுக்கு மாடு பார்க்கிற அளவு பொறுமை கிடையாது. தார் குச்சியை எடுத்துடுவான், அதான் நானே பார்க்கிறது. காலையில என் புருஷன் டீ தண்ணி போட்டுக் கொடுத்தார்னா அது எனக்கு சந்தோஷமா இருக்கும். நமக்குத் தூக்கக் கலக்கத்துல எந்திரிச்சு நமக்குனு செய்ய கஷ்டமா இருக்கும். தெம்பா டீ குடிச்சா அப்புறம் எல்லா வேலையும் சுறுசுறுப்பா செஞ்சிடலாம்.”

“ஆம்பிள புள்ளைன்னு அவனுக்குச் செல்லமெல்லாம் நான் கொடுக்க மாட்டேன், அடம்பிடிப்பான். போடானு விட்டுடுவேன், அவன் வேலையை அவன் செஞ்சு இப்போ பழகிட்டான்.”

சசிகலா சாதாரணமாக சொன்னாலும் சரோஜினிக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. அவள் வீட்டில் அப்பா வேலைக்குப் போவதால் வீட்டில் எதுவும் செய்ய மாட்டார், அதனை விட அவள் ஆத்தாவும் அம்மாவும் அதனை எதிர்ப்பார்க்க மாட்டார்கள். அதுவும் சமையல் கட்டுக்குள் உண்ணவும் உணவெடுக்கவும் வருவார்கள், அது கூட லாலா மட்டுமே. தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் அம்மாதான் உணவை வைப்பார்.

இவளுமே அப்பா வெளியே வேலை செய்கிறார், அம்மா வீட்டில் செய்கிறார் என்று நினைப்பாள். விடுமுறை தினத்தில் தன்னால் முடிந்ததை செய்வாள். அப்போதெல்லாம் மலைப்பாக இருக்கும். அப்பாவின் வேலை காலை தொடங்கி மாலை நிறைவடைய, அம்மாவின் வேலை மட்டும் ஓய்வே இல்லாமல் ஓட வேண்டியிருக்கிறதே என்று தோன்றும்.

இங்கு வந்த பின் இங்கும் ஓயாத வேலைகள்தான், மாடு கன்று, வயல்வேலைகள் என்று எல்லாமிருந்தாலும் சசிகலாவிற்குத் துணையாக கணவனும் மகனும் வேலைகளில் பங்கெடுப்பர், லட்சுமணனும் மருமகளுக்குத் தன்னால் முடிந்த உதவிகளை செய்துகொடுப்பார். சரோஜினிக்கு சக்தியோடு அவன் வீட்டையும் மிகவும் பிடித்தது, இயல்பாக ஒன்றிப்போனாள். சசிகலா மனத்தில் பட்டதைப் பேசினாலும் மருமகள் மீது மிகுந்த அன்பாக இருந்தார்.

மாலை சக்தி வீட்டுக்கு வந்தவன் பார்வை பூந்தோட்டத்தை நோட்டமிட, சட்டென்று அவன் கண்கள் கூர்மையடைந்து வேகமாக ரோஜா செடி இருந்த இடம் நோக்கிச் சென்றான்.

“அம்மாஆ!” என்று கத்தி அழைக்க சசிகலா வெளியே வந்தார்.

“காலையில இங்க ஒரு சிவப்பு ரோஜா பூத்திருந்திச்சே எங்க?” என்று கேட்கும்போதே சரோஜினியும் வெளியில் வந்தாள். அவள் வரும்போதே கண்கள் மனைவி தலையில் ஒற்றை பக்கம் அழகாய் வைத்திருந்த ரோஜாப்பூவைக் கண்டுகொண்டன.

“ஓஹ், நீ வச்சிருக்கியா?” என்று சக்தி கேட்க,

“இத விசாரிக்கத்தான் என்னைக் கூப்பிட்டியா? என் வூட்டுப்பூவை வேற யாரு பறிக்க வருவா? நீதான் டா திருட்டுப்பய” என்று மகனைப் பேசிவிட்டு அவர் செல்ல சரோஜினி கணவனை கிண்டலாகப் பார்த்தாள்.

“சரோசா தலையில ரோசாப்பூ” மனைவியின் இடையைக் கிள்ளி அவளைத் துள்ளச் செய்தவன், துள்ளலாக அறைக்குள் சென்றான்.

“வாசல்ல வச்சு என்ன பண்ற?” என்று திட்டியபடி சரோஜினி பின்னால் போக, சக்தி சட்டையைக் கழட்டினான்.

“என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?” சரோஜினி கேட்டபடி மெத்தையில் சாய்ந்தாள்.

“இதான் பண்ணேன்” என்றபடி மீண்டும் அவள் இடையைக் கிள்ளிவிட, மெத்தையில் துள்ளியவள் அவனைப் பிடித்துத் தள்ளினாள்.

“மறுபடியும் போகணும், ஏழு மணிக்கு மேல வேலையிருக்கு” என்றவன் சரோஜினியின் முகம் பார்த்து,

“ஏன் டல்லாயிருக்க?” என்று கேட்க,

“சக்தி! நமக்கு எப்ப குழந்தை வரும்?” என்றவளின் குரலில் கலக்கமிருந்தது.

“ஹேய் சரோஜினி! என்னடி? இதுக்குப் போயா டல்லாயிருக்க?” என்றவன் மனைவியை உரசிக்கொண்டு உட்கார்ந்தான்.

“நம்ம கூட கல்யாணம் ஆனவங்க எல்லாம் ப்ரக்னெண்டா இருக்காங்க? எங்காத்தா கூட என்னை ரெண்டு மூணுமாசமா கேட்குது. எனக்கும் ஆசையாயிருக்கு” என்று சரோஜினி சோர்வாய் சொல்லி கணவன் தோள் சாய்ந்தாள்.

“எங்கம்மா எதாவது சொன்னாங்களா?”

“ச்ச ச்ச அத்த ஒன்னும் கேட்கல”

“அப்புறம் என்ன மாமியார் கூட கேட்கல, எங்கம்மா கேட்டா கூட தப்புதான் சரோ. ஆறு மாசம்தான் டி ஆகுது இப்பவே ஏன் குழந்தை வேணும்னு நினைக்கிற?”

“அப்போ உனக்கு ஆசையாயில்லையா?”

சரோஜினி தாங்கலாகக் கேட்க,

“என் அருமை பொண்டாட்டியே! அஞ்சு வருசமா பார்க்காம பார்த்து பேசாம பேசி இருந்த நம்ம இப்போதான் இப்படி ஒட்டி உரசிட்டு இருக்கோம். நீ என் பக்கத்துல இருக்க, பக்கத்து வீட்ல இருந்ததுக்கும் இதுக்கும் எவ்வளவு வித்தியாசம்? என் வைப்’னு வெளியே சொல்றேன். சரோ என் கூட இவ்வளவு பக்கமா இருக்கா, இதெல்லாம் புதுசா இருக்கு, பிடிச்சிருக்கு. குழந்தையெல்லாம் பொறுமையா வரட்டும் சரோ. சும்மா அதெல்லாம் நினைச்சு கவலைப்படக் கூடாது” என்றான் ஆதுரமாக.

சரோஜினிக்குக் காதலன் சக்தியை விட கணவன் சக்தியை நிறையைப் பிடித்தது. பழைய பேச்சு இருந்தாலும் மிகுந்த அக்கறையாக இருந்தான், எதுவானாலும் மனைவியை முன்னிறுத்தினான். முன்பும் அவனுக்கு அக்கறையிருந்தாலும் அதனை காட்ட, அவகாசமோ வாய்ப்போ இல்லையே இப்போது உரிமையும் இருக்க மனைவியைத் தாங்கினான் என்று சொல்லமுடியாவிட்டாலும், தேவையான நேரம் துணை நின்றான்.

சரோஜினி அவன் சொன்ன வார்த்தைகளை உணர்ந்து உள்வாங்க, சக்தி அவள் தலையில் இருந்து ரோஜாப்பூவினை முகர்ந்து பார்த்தவன்,

“நான் காலையில வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டுதான் பார்த்தேன். ஆசையா உனக்கு அந்தியில கொடுக்கலாம்னு நினைச்சா நீயே பார்த்துட்டியா?” என்று கேட்க,

“நான் எங்க பார்த்தேன் அத்தைக் கொடுத்தாங்க” என்றதும்,

“எங்கம்மாவுக்கு விவஸ்தையே கிடையாது. நான் கொடுத்திருந்தா சீனே வேற..இப்ப மட்டும் என்ன?” என்றபடி சரோஜினியின் கன்னத்தை செல்லமாகக் கடிக்க, வெளியே சசிகலாவின் சத்தம்.

டீஷர்ட்டை வேகமாக எடுத்துப் போட்டவன்,

“என்னமா?” என்று வெளியே போக,

“சரோ தாத்தாவும் உன் தாத்தாவும் சண்டை போடுறாங்க டா” என்று சசிகலா சொல்ல வயல்பக்கம் சத்தம் கேட்க, சக்தி அங்கே சென்றான்.

“இந்த லாலா பய இருந்தாலாச்சும் அவனை கூப்பிடலாம்” என்று நண்பனை தேடினான். லாலா சென்னையில் உள்ள ஒரு அகாடெமியில் வேலைப் பார்க்கிறான்.

“என்ன சண்டை?” என்று அம்மாவிடம் கேட்க,

“உன் மாமனார் வீட்டு மாடு இங்க நம்ம வயில்ல உள்ள உளுந்து செடியைத் தின்னுடுச்சு. அதான் ஒரே சத்தம்”

“இந்த பெருசுங்களோட” என்று கோபமாக வேட்டியை மடித்துக் கட்டியவன்,

“என்னாச்சு தாத்தா?” என்று தாத்தாவிடம் கேட்க,

“இவன் வேணும்னே மாட்டை நம்ம வயல்ல மேய விடுறான்” என்று திலகரை லட்சுமணன் குற்றம் சாட்ட,

“டேய் சக்தி, வேணும்னு விடுவாங்களா? மாடு கயிற அவுத்துகிட்டு வந்துடுச்சுடா” என்றார் திலகர்.

“அதான் சொல்றாரே” என்று தாத்தாவைப் பார்த்தான் சக்தி.

“என்ன சொன்னான்? இவ்வளவு நேரம் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினான்? மாடுக்குத்தான் அறிவில்ல இவனுக்கு இல்லை. மாட்டைக் கட்டிப்போட்டு இந்த பய எங்க போனான்? மாடு மேய்க்க கூட துப்பில்லாதவன்” என்று லட்சுமணன் பேச,

“டேய் கிழட்டுப்பயலே என்னடா ரொம்ப பேசுற?” என்று திலகரும் கத்த,

“தாத்தா! பொறுமையா இரு. மாடு அவுத்துட்டு வரதுக்கு என்ன பண்ணுவாங்க” என்று சக்தி சமாதானம் செய்ய,

“உன் மாமியார் வீட்டுக்கு வக்காலத்து வாங்குறியா?” என்று பேரனை குற்றம் சொன்னார் லட்சுமணன்.

“மாமாஆஆ” என்று சக்தி போட்ட சத்தத்தில், அவனோடு வீடு வந்த சித்ரஞ்சனும் வர அவனும் அப்பாவிடம்,

“அப்பா ப்ளீஸ் பா, வாங்கப்பா.” என்று கெஞ்ச,

“என்னடா உன் மாமியார் வீட்டுக்கு நீ வக்காலத்து வாங்குறியா?” என்று மகனிடம் எகிறினார் திலகர்.

“மாமா, நீங்க அந்த மாட்டை ஓட்டிட்டுப் போங்க. இவங்க தொண்ட தண்ணி வத்துற வரைக்கும் சத்தம் போட்டு தானா வருவாங்க.” என்று சக்தியும் கத்திவிட்டு செல்ல, சித்ரஞ்சனும் மாட்டைப் பிடித்துக் கட்டினான்.

சக்தியும் சித்ரஞ்சனும் சென்றுவிட, துண்டை உதறிவிட்டு லட்சுமணன் பேரனையும் மருமகனையும் முறைத்து செல்ல, திலகரும் சண்டை போட்ட ஆள் போய்விட அவரும் வீட்டுக்குப்போனார். வீட்டினர் இவர்களை இதுதான் வாடிக்கை என்பது போல் வேடிக்கைப் பார்த்தனர். சக்தியும் சித்ரஞ்சனும் காம்ப்வுண்ட் சுவரில் இருபக்கமும் நின்று வழக்கு விஷயமாகப் பேச,

“டேய் வீட்ல வந்தும் கேஸ் விஷயம் பேசணுமா?” என்று திட்டிக்கொண்டே வந்தாள் வசுந்த்ரா.

“எது நான் பேசுறேன்? ஏதோ சின்ன மாமனாரா போய்ட்டாரேனு மதிச்சுப் பேசினா நீ என்னைப்பேசு த்த.” என்று சக்தியும் வசுந்தராவும் வாய்ப்பேச, சித்ரஞ்சன் இதனை புன்னகையோடு பார்த்து நின்றான்.

“இந்தியாவையும் பாகிஸ்தானையும் சண்டை போடவிட்டு பிரிட்டிஷ் மாதிரி உன் வீட்டுக்காரர் சிரிச்சுட்டு நிக்குறதைப் பாரு” என்று சக்திவேல் சொல்ல,

“எங்க தாத்தாவோட பேசி பேசி எப்படி பேசுற சக்தி?” என்று சரோஜினி இதனை கேட்டவள் சிரித்துவிட,

“சுதந்திர விலாசத்தோட மாப்பிள்ளைனு நிரூபிச்சிட்ட டா சக்தி” என்று வசுந்த்ராவும் சிரித்தாள்.

சரோஜினியும் வசுந்த்ராவும் சிரிக்க, அவர்களின் சிரிப்பை பார்வையால் பருகி நின்றனர் சக்திவேலும் சித்ரஞ்சனும்.

இனி அன்பின் நெருக்கம் அருகருகே.

நிறைவு!

2024, மார்ச் மாதம் 20ல தொடங்கி மே 8, 2024 முடித்த கதை இது.

இந்த கதை முதல்முறை வாசிக்கிறவங்க யார் யார் இருக்கீங்க?

இது போன்ற கிராமத்து இயல்பான கதை பிடிச்சவங்க சொல்லுங்க. வாசிக்கிறவங்களுக்கும் சரி, எழுதின எனக்கும் சரி இதமான மன நிலை கொடுத்த கதை. உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க friends.

இந்த கதையில் உங்களுக்குப் பிடிச்சவங்க யார்?

✅ End of Episode 27
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Sathya Velusamy Reader 1 day ago

அருமை..... நமக்கெல்லாம் சித்து மேல கொஞ்சம் பாசம் ஜாஸ்தி ஆயிடுச்சு😂😂😂

❤️ 2 more...
Pavithra Narayanan 15 hours ago

எனக்கும்😁😁😁

Srichitra Reader 24 hours ago

Very nice story.  எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.  சித்தரஞ்சன்,வசுந்தரா, சசிகலா,சக்தி, லாலா இவர்களை ரொம்ப பிடிக்கும்.

❤️ 1 more...
Roja Saradha Mary Reader 23 hours ago

சக்தி எல்லோரையும் அரவணைக்கும் but ஜாலியான கேரக்டர்.  நாவல் முடிந்தாலும் மீண்டும் படித்து படித்து ரசித்துக் கொள்வோம்.  வாழ்த்துக்கள்!

❤️ 1 more...
Pavithra Narayanan 15 hours ago

😍😍😍 நன்றி 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top