Episode 15
“ம்ம், என்ன தீடீர்னு?” என்று அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க,
“ஸாரி, இஷ்டம்னா சொல்லுங்க. சும்மாதான் கேட்டேன்” என்று கார்த்தி அவன் முகம் கண்டு விட்டு சொல்ல,
“கேட்டாச்சு இல்லை, சொல்லிடுறேன்” என்றவன்,
“நான் காலேஜ் படிச்சப்போ என் ஜூனியரரை லவ் பண்ணினேன். அப்புறம் படிச்சு முடிக்கும் போது எங்களுக்கள்ள சண்டை, பிரிஞ்சிட்டோம். அவ மேரேஜ் பண்ணிட்டா” என்று அவன் காதல் கதையை விளக்கி சொல்ல, கார்த்திக்கு அதுவரை அவன் கொடுத்த காதல் கணம் எல்லாம் காணாமல் போய் அந்த கணம் ஒரு கடும்புனல் (வெள்ளம்) அவள் மனத்தில். சொல்லி விட்டு அவன் சென்று விட அவன் சொன்னதுதான் கார்த்தியின் உள்ளமெல்லாம் ஓடியது.
அடுத்த நாள் காளிதாஸன், கார்த்தியாயினி திருமணம். முதல் நாள் மதிய உணவிற்கு அவன் மகாதேவனின் இல்லம் வந்து விட்டான். மதிய உணவு முடித்த பின் கிளம்பும் முன் கார்த்தியிடம் அவன் சொல்லிக் கொள்ள, அவன் கையைப் பிடித்து எல்லோரும் பார்க்க அறைக்குள் இழுத்து வந்தாள் கார்த்தியாயினி.
“ஹே! கார்த்தி! என்னாச்சு?” என்று அவன் கேட்க, அவனை முறைத்தபடி இழுத்தவள் அறைக்குள் சென்றதும் அவன் தோளில் வேகவேகமாக அடித்தாள்.
“பொய்! பொய்! அத்தனையும் பொய்!! ரொம்ப மோசம் நீங்க, பொய் சொல்ல மாட்டீங்க நினைச்சேன்” என்று விடாமல் இருகையாலும் அடிக்க, அவனுக்குப் பெரிதாக வலிக்கவில்லை. அவளின் பேச்சிலும், செய்கையிலும் நன்றாய் வாய்விட்டு சிரித்தான்.
“ஹாஹா! நித்தி சொன்னாளா?” என்று கேட்டு இன்னும் அவன் சத்தம் போட்டு சிரிக்க, கார்த்தி அவனை கோபமாகப் பிடித்துத் தள்ளினாள். அதில் கொஞ்சமாய்த் தடுமாறி அவன் மெத்தையில் உட்கார்ந்து இன்னும் கார்த்தியின் முகத்தைப் பார்த்து பார்த்து சிரித்தான்.
“ஆனாலும், நேத்து உன் ரியாக்ஷன், அமேசிங் கார்த்தி” என்று கண்ணடிக்க,
“உங்களை…? போங்க நீங்க, நைட்டெல்லாம் தூங்கல நான்” என்று சொல்லி அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்து முகத்தை உர்ரென்று வைத்தாள்.
“ஏன் தூங்கல, ஏசி வர்க் ஆகலையா? இல்லை உடம்பு சரியில்லையா?” என்று அவன் கிண்டல் செய்ய,
“உங்களை நான் வேற மாதிரி நினைச்சிட்டேன், ஃப்ராட்” என்று திட்டி குஷனைத் தூக்கி எறிந்தாள் சந்தோஷமாக.
இரவெல்லாம் எவ்வளவு யோசனைகள், அதனை விட உள்ளத்தின் ஓரத்தில் எவ்வளவு உறுத்தல்? இப்போது அதெல்லாம் நீங்கியிருக்க, அவனுடன் அவ்வளவு இயல்பாய்ப் பொருந்தி போக முடிந்தது.
தனக்குள்ளாகவே யோசனையில் உழன்றவள் ஒருவாறு உள்ளம் தேத்தி, காலையில் நித்தியிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“உங்க ப்ரண்ட் காலேஜ்ல லவ் பண்ணினவங்க யாரு? பெயர் என்ன?” என்று கார்த்தி கேட்கவும், நித்திலாவுக்கு ஒரு நொடி அதிர்ச்சி. பின் அடக்கவே முடியாது வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தவள் கிச்சனில் இருந்த கார்ப்பெட்டில் அப்படியே உட்கார்ந்து சிரிக்க ஆரம்பிக்க, கவின் இந்த சத்தம் கேட்டு வந்தவன்,
“அய்யோ! என் பொண்டாட்டி பைத்தியமாகிட்டா” என்று அலறினான்.
“அண்ணீ! என்னாச்சு? ஏன் சிரிக்கிறீங்க?” என்று கார்த்தி பார்க்க, கவினும், “என்னடி ஏன் இப்படி சிரிக்கிற?’ என்று கேட்டான்.
“கவி! அய்யோ! டேய் முடியலடா, இவ தாஸ் காலேஜ்ல யாரை லவ் பண்ணினா கேட்கிறாடா” என்றதும்,
“என்னது? எனக்குத் தெரியாம தாஸு லவ் பண்ணினா?” என்று கேட்டு அவனும் சிரித்தான்.
“அண்ணா! நீங்களுமா?” என்று கார்த்தி பார்க்க,
“ஏன் கார்த்தி? யார் உனக்கு அப்படி சொன்னா?” என்று கவின் கொஞ்சம் சிரிப்பை அடக்கிக் கேட்க, நித்திலா, கவினை இழுத்து அவன் தோளில் அடித்து இன்னும் சிரித்தாள். அதில் மூச்சு வாங்க, கார்த்தி தண்ணீர் கொடுத்தாள்.
“அது.. அவங்கதான் அண்ணா சொன்னாங்க” என்றதும் என்ன சொன்னான் என்று கவினும், நித்தியும் கேட்க, கார்த்தி சொல்ல,
“எது அவன் காலேஜ் ஜூனியரா? அவன் படிச்சது மென்ஸ் காலேஜ். அந்த பரதேசி ஸ்கூல் படிச்ச இவளுக்குப் பாடிகார்ட் வேலைத்தான் பார்ப்பான் பாதி நேரம். அப்புறமும் எங்க இரண்டு பேருக்கும் நடுவுல சுவர் எழுப்பி நிப்பான். இதுல எங்க லவ் பண்ண அவனுக்கு நேரம், சும்மா உன்னைக் கலாய்ச்சி விட்டிருக்கான்மா” என்றான் கவின்.
“நிஜமாவாண்ணா?” என்று கார்த்தி கண்கள் மின்ன சந்தோஷத்துடன் கேட்க, அதனைப் பார்த்த கவின்,
“சத்தியமா கார்த்தி, எங்க மூணு பேருக்குள்ள எந்த சீக்ரெட்ஸூம் கிடையாது. அவன் சைட் எல்லாம் அடிச்சிருக்கான். ஆனா, லவ் எல்லாம் கிடையவே கிடையாது. சும்மா விளையாட்டுக்குச் சொல்லியிருப்பான்” என்றான்.
“ஆமா, ஏன் திடீர்னு அப்படி சொல்லணும் அவன்?” என்று கவின் நித்தியைக் கேட்க, அவள் கார்த்தியைப் பார்க்க, கார்த்தி சொல்லவும்,
“அது சரி! அவனை ஏன் கல்யாணம் செஞ்சுக்கலனு கேட்டா நம்மை வெறுப்பேத்த இப்படி எதாவது ஒன்னை அடிச்சு விடுவான் ராஸ்கல். ஆனாலும், அவன் சொன்னது…ஹாஹா” என்று கவினும், நித்தியும் சிரித்துக் கொண்டு இருக்க, கார்த்தி அறைக்குள் வந்து விட்டாள்.
“இது ஒரு விஷயமா? ஏன் இவ்வளவு டென்ஷன்? ஒருவேளை உண்மையா இருந்திருந்திருந்தா?” என்று காளிதாஸன், கார்த்தியைப் பார்த்துக் கேட்டான். என்ன சொல்வாள் என்று ஒரு ஆவல் அவனிடம்.
“உண்மைன்னு நம்பிதான் நைட்டெல்லாம் யோசிச்சேன், முதல்ல உங்க மனசுல வேறு ஒருத்தங்கன்னு நினைக்கும் போது ஒரு மாதிரி ஆகிடுச்சு. அப்புறம் இத்தன வருஷம் மாறாத மனசு என்னால, எனக்காக மாறியிருக்குன்னா கண்டிப்பா நான் ஸ்பெஷல்தானே? பாஸ்ட் இஸ் பாஸ்ட்னு என்னையே தேத்திக்கிட்டேன்.” என்று சொன்ன கார்த்தியை மிகவும் பிடித்தது காளிதாஸனுக்கு.
“வெரி குட்! இப்படித்தான் இருக்கணும். நேத்து பார்த்தேன் மேடம் முகம் அப்படியே புஸ்ஸுன்னு போச்சு, ஹாஹா” என்று இப்போதும் அவளின் நேற்றையை பாவனையை நினைத்து சிரித்தான் காளிதாஸன்.
“ஏன் அப்படி சொன்னீங்க நீங்க?” என்று கார்த்தி கடுப்புடன் கேட்டாள்.
“ஏன் கல்யாணம் செய்யலன்னு கேட்கணும். அதை விட்டுட்டு நீயே ஒன்னு நினைச்சு அப்படியான்னு கேட்டா, அதான் கடுப்பு. அதனாலதான் ஆமான்னு சொன்னேன்” என்றான் அவனும் கொஞ்சம் கடுப்புடன்.
“பின்ன எல்லாமே இருந்தும் இத்தனை வருஷம் கல்யாணம் செஞ்சுக்கலன்னா யாரா இருந்தாலும் அப்படித்தான் நினைப்பாங்க”
“இந்த மாதிரி ஏன் ஒரு முன் அனுமானம் வைக்கிறீங்க எல்லாரும்? கல்யாணம் செய்யலன்னா காதல் தோல்வி இருக்கணும் அவசியமா என்ன? என்னை இந்த பத்து வருஷத்துல ஆயிரம் தடவ நீ கேட்ட கேள்வியை எல்லாரும் மாத்தி மாத்தி கேட்டுட்டாங்க கார்த்தி, இன்னும் மோசமா கூட கேட்டிருக்காங்க.” என்றதும்,
கார்த்தி உடனே, “இல்ல, பொதுவா எல்லாரும் இந்த ஏஜ்ல மேரேஜ் பண்ணீ குழந்தையோட செட்டில் ஆகிடுவாங்க இல்லையா?” என்று அவனிடம் கேட்க,
“ஆகட்டும்! அதுக்கென்ன? பொதுவா எல்லாரும் ஆகுறாங்க ஓகே, ஆகாதவங்களுக்குக் கண்டிப்பா ஒரு கதை இருக்கணுமா என்ன? எல்லார் மாதிரி ஆகலன்னு ஏன் அப்படி இல்லாதவங்களைக் கேட்கணும் சொல்லு. இப்போ நீ சொன்ன மாதிரி அந்த பொது புத்தி சொல்ற வயசுல கல்யாணம் செஞ்சு இப்போ என் வயசுல குழந்தை இல்லாதவங்க எத்தன பேர் இருக்காங்க தெரியுமா? அப்போ அது அவங்களுக்கு எவ்வளவு வேதனை கொடுக்கும்?”
“இப்படி எல்லாத்துக்கும் எல்லாரும் செய்றாங்க, எல்லாரும் வாழ்றாங்கன்னு சொல்லி அப்படி இல்லாத, இருக்க முடியாத மனுஷங்க மேல நம்ம கருத்தை செலுத்துறதே ஒரு பெரிய வன்முறை தெரியுமா?” என்றதும் கார்த்தி அவன் பேச்சில் திகைத்துப் போனாள்.
இது ஒரு சாதாரணப் பேச்சுதானே? அதற்கு ஏன் இவன் இவ்வளவு யோசிக்கிறான் என்று அவள் யோசித்தாள்.
“இந்த சமூக வரையறைக்குள்ள வராதவங்களை நாம ஏன் வித்யாசமா பார்க்கிறோம்? இங்க எல்லாருமே தனி மனுஷங்க கார்த்திமா. அவங்க அவங்களுக்குத் தனி ஆசை, கனவு, கஷ்டம் எல்லாம் இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் Marriage is a means of social reproduction legally, தட்ஸ் இட்!”
“என்ன?” என்று கார்த்தி கேட்க,
“ஆமா, இனவிருத்திக்கான ஒரு வழி அவ்வளவுதான். எல்லாரும் கல்யாணம் செஞ்சு என்ன செய்றானுங்க சொல்லு, நாமளா இந்த காதல், கல்யாணம் எல்லாத்தையும் glorify செய்றோம்” என்றதும் அவளும், அவனைக் காதலிக்கிறாள் தானே? அதை குறை சொல்வது போல் இருக்க,
“சும்மா எல்லாத்துக்கும் நீங்க பிலாஸஃபி பேசாதீங்க, அன்பு இருக்கறதால உலகமே சண்டை இல்லாம இருக்கு. ஏன் உங்கப்பா, அம்மா எல்லாம் கல்யாணம் செஞ்சுக்கலையா?” என்று கார்த்தி வேகமாய்த் திருப்பிக் கேட்க,
அவளைக் கிண்டலாய்ப் பார்த்தவன், “எங்கப்பாம்மா கல்யாணம் செஞ்சாங்கதான், நான் சொல்லவரது என்னன்னா கல்யாணம் செய்றதை எப்படி சாதாரணமா பார்க்கிறோமோ, குழந்தை இருக்கறதை எப்படி நார்மலைஸ் பண்றோமோ, அதை மாதிரி மேரேஜ் செய்யாதவங்களையும் பாருங்கன்னுதான். டைவர்ஸீயை, சிங்கிள் மதரை, ஃபாதரை ஏன் என்னமோ வேற்றுக்கிரகவாசி மாதிரி பார்க்கணும்? நான் கல்யாணம் செஞ்சா மட்டும் என் புள்ளையை மத்தவங்க படிக்க வைக்கப் போறாங்களா இல்லையே? சும்மா எல்லாத்துக்கும் ஒரு ஃப்ரீ அட்வைஸ்” என்றான் எரிச்சலாக.
“அன்பாலதான் உலகம் இயங்குது, ஒத்துக்கிறேன். ஆனா, அதை காதல்னு மட்டும் ஏன் உன்னதப்படுத்தணும், உயர்த்திக்காட்டணும்? அம்மா நம்ம மேல வச்சுருக்க அன்பு கூட உயர்வானதுதான். எதையும் இதுதான் சிறப்புன்னு ஏன் மிகைப்படுத்துறீங்க? எல்லாருக்கும் இங்க வாழ உரிமை உண்டு, அடுத்தவங்களைக் கஷ்டப்படுத்தாமா, நல்ல வழியில நேர்மையா என்னவும் செய்யலாம். எல்லாரும் செய்ற மாதிரி செய்யலன்னா அது தப்பா?” என்று கேட்க, உண்மையை சொல்லப் போனால் கார்த்திக்கு உண்ட மயக்கத்தில் அவன் பேச பேச உறக்கம்தான் வந்தது.
“நீங்க ஏன் இப்போ பொதுக்கூட்டத்தில பேசுற மாதிரி பேசுறீங்க?” என்று கார்த்தி தாங்க முடியாது கேட்டு விட,
“நான் பொதுக்கூட்டத்தில பேசுறதெல்லாம் கேட்டிருக்கீயா?” என்று காளிதாஸன் இப்போது புன்னகையுடன் கேட்டான்.
“இல்லை, இல்லை! நான் அதெல்லாம் கேட்கவே மாட்டேன். எப்பவாது நியூஸ்ல யாராவது பேசி பார்த்திருக்கேன். அதான்” என்றவள்,
“தெரியாம லவ் ஃபெயிலரான்னு கேட்டுட்டேன் பாஸ், விட்டிருங்க என்னை” என்று அவள் பாவமாய்க் கேட்க,
“ஹஹா! இனிமே யாரையும் இப்படி கேட்க கூடாது ஓகே?” என்றதும், அவள் உடனே தலையசைத்தாள்.
“நேத்து உன்னை டென்ஷன் பண்ணீட்டேன் புரிஞ்சது, சரி இன்னிக்கு உண்மையை சொல்லி கல்யாணப்பொண்ணை சந்தோஷப்படுத்துவோம்னுதான் நினைச்சு வந்தேன், உனக்கே தெரிஞ்சிடுச்சு” என்றான்.
“ஆமா, மேடம் எதுக்கு போய் நித்திக்கிட்ட எல்லாம் கேட்டீங்க?” என்று அவன் கேட்க,
“ம்ம், நாளைக்கு உங்க எக்ஸ் பெயரை நம்ம புள்ளைக்கு வச்சிட்டா எனக்குத் தெரியணும்ல, அதான்” என்றாள் கிண்டலாக.
“அம்மாடி! இவ்வளவு யோசிச்சியா நீ? எனக்கு எக்ஸ், வை எல்லாம் ஒன்னும் கிடையாது. என் அம்மா, நித்திக்கு அப்புறம் என் லைஃப்ல ஸ்பெஷலான பொண்ணு நீ மட்டும்தான், நெக்ஸ்ட் நம்ம மகளோ, இல்லை மருமகளாவோ இருக்கலாம்” என்று அவன் சொன்ன விதத்தில் கமஞ்சூல் எழிலியாய் மாறிப்போனது பெண்ணின் வானம். (கமஞ்சூல் எழிலி – அதீத மழை தரும் கார்மேகங்கள்).
✅ End of Episode 15
💬 0 Replies
Log in
or
Register
to reply