Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 12

காளிதாஸன் 12

கார்த்தியின் வயது இடிக்கிறதே என்று கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள, அவர்கள் பேசும் முன் கார்த்தியே, “இங்க பாருங்க டாக்டர், உங்க ப்ரண்ட் எனக்கு வேண்டாம்னு சொல்ல வயசு தவிர வேற காரணமிருக்கா?” என்றாள் நித்திலாவிடம் நேரடியாக.

“இல்லை” என்று அவள் சொல்ல,

“அவருக்குக் கெட்ட பழக்கம் எதாவது இருக்கா?” என்றாள் அடுத்து.

“அதெல்லாம் ஒன்னுமே இல்லை. அவன் சொன்ன மாதிரி எனக்கு தங்கச்சி இருந்திருந்தா யோசிக்காம கட்டி வச்சிருவேன்” என்று கவின் சொல்லவும் ,கார்த்தியாயினி முகத்தில் சின்னதாக ஒரு மலர்ச்சி.

 நித்தி, கார்த்தியின் கைப்பிடித்தவள், “அவன் நல்லவன்றதுல டவுட்டே இல்லை. என்ன ரொம்ப அரசியல்ல இன்ட்ரஸ்ட். ஆனா, உனக்கு என்ன தீடீர்னு அவன் மேல லவ்? ப்ரஸ்ல கூட சொல்லிட்ட” என்று கேட்க,

“ப்ரஸ்ல சொல்லும் போதுதான் ஃபீல் பண்ணினேன், லவ் அட் ப்ர்ஸ்ட் சைட் இல்லைதான். ஆனால்,  ஃபீல் பண்ணின அடுத்த நிமிஷம் சொல்லிட்டேன் டாக்டர்” என்றாள் கார்த்தி.

“டாக்டர்னு சொல்லாத. இந்தா, இவர் உனக்கு அண்ணா, என்னை அண்ணியாக்கிடு. கவி, அவனை சமாளிக்க வேண்டியது உங்க ஜோலி” என்றாள் நித்திலா.

காளிதாஸனிடம், அவர்கள் கட்சித்தலைவரோ, “தம்பி! நீ பயப்படாத, நானே என் தலைமையில கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். பொண்ணு பாரு எவ்வளவு தைரியமா காதலிக்கிறோம் சொல்லிடுச்சு” என்று பேச அவருக்குப் புரிய வைக்கப் போராடினான்.

இவன் இங்கே அவரிடமும், மகாதேவனிடமும் மாறி மாறி செல்பேசியில் பேசிக் கொண்டிருக்க, வெளியூர் சென்றிருந்த சிவகாமியும் மகனின் வீட்டிற்கு வந்து விட்டார்.

 

அவரைப் பார்த்துவிட்டு நித்திலா உடனே, “என்ன சிவகாமி? மருமகளைப் பார்க்கணும்னு ஓடி வந்துட்டீங்களா?” என்று அவரை வம்பு செய்ய, கார்த்தியைப் பார்த்த சிவகாமி,

“அன்னிக்கு அவன் கடத்தின பொண்ணுதானே?” என்று நித்திலாவைப் பார்க்க,

“அவர் என்னை அழைச்சிட்டுதான் வந்தார்” என்றாள் கார்த்தி உடனே.

“பொண்ணுங்களை பகடையாக்கிறதை நீ நியாயப்படுத்தாத. ஆமா உன் வயசென்ன? அவன் வயசென்ன? அவன் உன்னை விரும்புறான்னு ஏன் பொய் சொன்ன?” என்ற சிவகாமியின் கண்டிப்பு கார்த்தி எதிர்ப்பார்க்கவில்லை.

 “தப்புதான். ஆனா, நான் அவரை விரும்புறேன்மா” என்றாள் சின்னதாகி விட்ட குரலில்.

“இதெல்லாம் ஒத்து வராதுமா” என்றார் சிவகாமி.

“அத்த, இப்படியே பேசினா அவன் எப்பவும் தனிமரமாத்தான் நிப்பான். கொஞ்சமாச்சும் பொறுப்பான அம்மாவா நடந்துகோங்க” என்று  நித்தி கத்த,

கவினோ, “நித்தி, அதிகம் பேசுற” என்று அதட்டினான்.

“நித்தி! பொறுப்பான அம்மான்றதாலதான் இப்படி பேசுறேன். அம்மான்னா எல்லாருக்கும் அம்மாதான், இந்த பொண்ணு அவசரத்துல முடிவெடுக்குறா. கண்ணாவுக்கும், இந்த பொண்ணுக்கும் எப்படி சரி வரும்? ப்ராக்டிலா யோசிச்சு பேசு நித்தி. அவன் குடும்பமா இருக்கணும் நீ நினைக்கிறது சரி. அதுக்காக இந்த பொண்ணை யோசிக்க வேண்டாமா?” என்று அவர் கேட்க,

 “ம்மா, அவன் எத்தனை நாள் தனியா இருப்பான்?” என்று கவினும் ஆதங்கமாகக் கேட்க,

“அவனோட வாழ்க்கை கவி இது. அவன்தான் முடிவெடுக்கணும். தப்பு செஞ்சா தட்டிக் கேட்கலாம். அவன் என்ன சொல்றான்?” என்றதற்கு அவனின் முடிவை கவின் சொல்ல,

நித்தி உடனே, “இந்த பொண்ணுக்கு அவனைப் பிடிச்சிருக்கு” என்றாள் கொஞ்சம் கோபமாகவே.

“எத்தனை நாள் தெரியும் உனக்கு என் மகனை? அவன் உனக்கு உதவி செஞ்சதால இந்த காதலா?” என்று அவர் பேச,

கார்த்தி அவரைப் பார்த்தவள், “வயித்துல உங்க மகனை சுமந்துப்போ அவரை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்கதானேமா? ஆனாலும், என் மகன்னு ஒரு பாசம் இருக்கும்ல, அது மாதிரிதான் எனக்கு உங்க பையனைப் பார்க்கும்போது இவர் எனக்கானவர்னு தோனுது”

“அவர் சொல்றவரைக்கும் அவரோட வயசு எல்லாம் எனக்குத் தெரில. அந்த ஒரு காரணத்துக்ககாக நான் அவரை வேண்டாம் சொன்னா என்னை விட முட்டாள் யாருமே இல்லை. உங்க மகனை நீங்க ரொம்ப ஒழுக்கமா வளர்த்து வச்சிட்டீங்க. ஆனா, என்னோட வீட்ல உள்ளவங்க அப்படி இல்லை, சாகணும்னு நினைச்ச எனக்கு வாழணும்னு தோன வச்சவர் உங்க மகன்தான்” என்று கண்ணீருடன் சொல்லும்போது காளிதாஸன் கண்ணாடி கதவைத் தள்ளிக்கொண்டு வந்தவன், அம்மாவை எதிர்ப்பார்க்கவில்லை.

“ம்மா” என்று பார்க்க, “என்னடா கண்ணா?” என்றார் மகனிடம்.

“டேய், நீ பேசுனியா இல்லையா?” என்று கவினைப் பார்க்க, அவன் நித்தியைப் பார்க்க,

“இவருக்கு ஒரு தங்கச்சி இருந்தா கண்ணை மூடிட்டு உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாராம்” என்று கண்கள் சிரிக்க நித்தி சொல்ல,

“உன்னையெல்லாம்” என்று பல்லைக் கடித்த காளிதாஸன், கார்த்தியை அவனின் அலுவலக அறைக்குள் அழைத்துப் போனான்.

அவளை தனக்கெதிரே உட்கார சொன்னவன், “இங்க பாருங்க, இந்த மீடியாவுக்கு  எல்லாமே கொஞ்ச நாள்தான். தினமும் ஒரு நியூஸ் மாறும். நம்ம நாட்ல பத்து வருஷம் லவ் பண்ணி அப்புறம் பிரிஞ்ச செலிபிரட்டீஸ் எல்லாம் உண்டு. கொஞ்ச நாள் உங்களுக்கு உங்க வீட்டாளுங்க கொடுத்த டென்ஷன் குறைஞ்சதுன்னா இந்த முடிவே அபத்தமா தெரியும்” என்றான் நிதானமாக.

“நீங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்கல, அதுக்குக் காரணம் சொல்லுங்க” என்று  கார்த்தி கேட்க,

“எனக்கு இஷ்டமில்ல, செஞ்சுக்கல. அதைவிட எனக்கு வாழ்க்கையில நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்குது” என்றான் எடுத்தெறிந்து.

“உங்க வாழ்க்கையில வேற பொண்ணு இல்லாதப்போ, என்னை ஏத்துக்கிறதுல என்ன ப்ராப்ளம்? எல்லாரும் ஒரு நாள் கல்யாணம் செஞ்சுத்தானே ஆகனும்” என்று கார்த்தி கோபமாய்க் கேட்க,

“அதுக்காக எல்லாம் உங்களை என் லைஃப்ல சேர்க்க முடியாது” என்று காளிதாஸன் காட்டமாய்ச் சொல்ல,

கார்த்தியோ, “அப்போ என் லைஃப்ல நீங்க வந்துடுங்க” என்றாள்.

“கார்த்தி! நீங்க செஞ்சு வச்சுருக்க விஷயத்தோட விளைவு புரியல. உங்கப்பாவும், அவர் கட்சியும் என்னை என்ன சொல்வாங்க தெரியுமா? வயசுல சின்னப்பொண்ணை ஏமாத்திக் கல்யாணம் செய்ய பார்க்குறேன்னு சொல்வாங்க. புரிஞ்சிட்டு பேசுங்க”

“ஸ்டாப் இட்! நான் ஒன்னும் டீன் ஏஜ் பொண்ணு இல்லை காளிதாஸ். அவங்க அப்படி பேசினா அதுக்குப் பதில் சொல்லத் தெரியாதவர் இல்லை நீங்க. என்னை வேண்டாம்னு இவ்வளவு கன்வீன்ஸ் பண்றீங்களே, அதை அவங்க கிட்ட காட்டுங்க. உங்களை லவ் பண்றதுன்னு தப்புன்னா, அதை தெரிஞ்சே செய்வேன் நான்” என்றவளின் பேச்சில் காளிதாஸனுக்குக் கார்த்தியாயினியின் காதல் தெரியவில்லை. மாறாய் பிடிவாதம் தெரிய,

“நீங்க இப்படியெல்லாம் பேசினா என்னோட முடிவு மாறும் நினைக்காதீங்க கார்த்தி. நீங்க சொன்ன மாதிரி ப்ரஸ்ல நான் பேசிக்கிறேன். ஒரு வதந்திக்காக எல்லாம் வாழ்க்கையை மாத்திக்க நான் முட்டாள் இல்லை” என்றான் முடிவாக.

கார்த்தி அவன் பேச்சில் எழுந்து நின்று, “உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க, என் முடிவை நான் தேடிக்கிறேன்” என்றவள் குரல் இடற, வேகமாய் அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

அவளின் பேச்சும் செய்கையும் காளிதாஸனுக்குப் பதற்றத்தை உண்டு செய்ய அவள் பின்னால் வேகமாக ஓடினான்.

கார்த்தி முடிவைத் தேடிக் கொள்கிறேன் என்று கண்ணீருடன் சென்று விட, காளிதாஸனுக்கு சட்டென்று ஒரு பதற்றம் ஒட்டிக் கொள்ள, “கார்த்தி! நில்லுங்க” என்று குரல் கொடுத்தபடியே பின்னால் செல்ல, அவளோ நேற்றிரவு இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

அவன் சத்தம் கேட்டு, சிவகாமி, நித்தி, கவின், வாலி எல்லாம்  ஓடி வந்தனர்.

“கண்ணா, என்னாச்சு?” என்று சிவகாமி கேட்க,

“ம்மா, பேசிட்டு இருந்தோம். நான் முடியாதுன்னு சொல்லவும் இவங்க.. முடிவு தேடிக்கிறேன்.. அப்படி” என்று டென்ஷனாகப் பேசியவன்,

“கார்த்தி கதவைத் திறங்க, முட்டாள்த்தனமா எதுவும் செய்யாதீங்க” என்று கத்தினான்.

அவன் சொன்னதில், எல்லோரும் பதறிப் போய் கதவைத் தட்டினர்.

காளிதாஸன், “கார்த்தி, இப்ப திறக்க போறீங்களா இல்லையா?” என்று குரல் கொடுக்க, கார்த்தி கதவைத் திறக்கவும், காளிதாஸனின் கண்கள் ஃபேனைப் பார்க்க, அதில் கடுப்பாகி விட்டாள் பெண்.

“என்னை முட்டாள்னே முடிவு பண்ணிட்டீங்களா நீங்க?” என்று அவனிடம் கத்தினாள்.

அதற்குள் சிவகாமி, “என்னமா நீ? ஏன் இப்படி?” என்று அவரும் பேச பொறுமையிழந்தவள்,

“மா, நீங்களும் ஏன்?” என்று அவரிடம் கேட்டவள், காளிதாஸனைப் பார்த்து,

“என்ன முட்டாள்த்தனமான முடிவு? செத்துடுவேன் நினைச்சீங்களா? எஸ், நினைச்சிருக்கேன். இப்போ இல்லை, உங்களை முதல் முறை பார்த்துட்டு போன பின்னாடி. ஆனா, இப்போ ஏன் நான் சாகப் போறேன்?” என்று அவனை நேருக்கு நேராய்ப் பார்த்து கேட்க காளிதாஸன்,

“நீங்கதானே அழுதுட்டு ஏதோ முடிவு எடுக்கப் போறேன்னு சொன்னீங்க?” என்றான்.

“சொன்னா? சொன்னா என்ன?” என்றாள் எரிச்சலுடன்.

இவர்கள் பேசட்டும் என்று நித்திலா, எல்லோரையும் இழுத்துக் கொண்டு ஹாலுக்குப் போய் விட, அறைக்குள் நின்றபடி கதவருகே கார்த்தியும், வெளியே காளிதாஸனும் பேசினர்.

காளிதாஸன், கார்த்தியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை ஆராயும் பார்வைப் பார்க்க,

“என்ன பதில் இல்லை? உங்களைப் பிடிச்சிருக்குன்னு ஊர் முன்னாடி சொல்லி நான் செத்துப் போய்ட்டா உங்களை அது பாதிக்கும்ன்ற அறிவு கூட இல்லாதவளா நான்? ஓகே! எனக்கும் அறிவு இருக்குன்னு உங்களுக்குப் ப்ரூவ் பண்ற சான்ஸ் எனக்குக் கிடைச்சதில்லை. நீங்க என் வீட்ல இருந்தவங்களைப் பத்தி சொன்னப்போ நான் நம்பல, அது குடும்பத்து மேல நம்ம வைக்கிற நம்பிக்கை.”

“குடும்பம்ன்றது நாம தேடிக்கிற உறவில்லை, தானா அமையறது. பொறந்ததிலருந்து அவங்களைப் பார்க்குறோம். அந்த பாதுகாப்புல வளரும் போது அவங்களை எப்படி சந்தேகப்பட முடியும்? வெளியாட்கள் கிட்டதான் அந்த எச்சரிக்கை எல்லாம் இருக்கும். நீங்க சொன்ன மாதிரி ஏமாத்தினா, அவங்கதானே தப்பு? நம்பின நான் முட்டாளா?” என்று உணர்ச்சிவசத்தில் கத்த,

“கார்த்தி, ரிலாக்ஸ்” என்று காளிதாஸன் சொல்ல, அவள் கேட்கவில்லை.

அறைக்குள் அவளை இழுத்துப் போனவன், அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்து, தண்ணீரை எடுத்துக் கொடுக்க, வாங்கிக் குடித்தாள்.

“உங்களைப் பிடிச்சிருக்கு சொல்லி ஒரு மணி நேரத்துல சாகற அளவுக்கு என்னோட காதல் ஒன்னும் முட்டாள்த்தனமானது கிடையாது காளிதாஸ். நானும் கோழை இல்லை. அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” என்றாள் அழுத்தமாக.

ஏனோ கார்த்தி சொன்ன காதல் விட, இந்த அறிவும் தெளிவும் அவனுக்குப் பிடித்திருந்தன. மீண்டும் அவளாகவே நீரை எடுத்துக் குடித்து விட்டு,

“ஓகே! எனக்குப் புரியுது, பிடிச்சிருக்குன்னு சொல்லி உங்களைக் கம்பல் செய்றது தப்பு. நானும் ஒருத்தரை இப்படி வேண்டாம்னு சொல்லிட்டேன், அந்த நவீன் நிறைய சாபம் கொடுத்துட்டான் போல” என்று தன் போக்கில் சொன்னவள், அவனின் பார்வை தன் மீதே இருப்பது உணர்ந்து, “என்ன?” என்று பார்த்தாள்.

“தப்பா ஜட்ஜ் பண்ணிட்டேன், ஸாரி. ஆனா, அழுதுட்டே முடிவு தேடிக்கிறேன் சொன்னா என்ன நினைக்குறது?” என்று கேட்டவன், அவளுக்கு முன்னே ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டு உட்கார்ந்தான்.

“அழுதா? ஒரு டென்ஷன்ல அழுதேன். நீங்க என்னை கன்சீடர் செய்யாம வேண்டாம்னு சொல்றதுலயே இருக்கீங்க, அது கொடுத்த வருத்தம். அழுதேன்” என்ற கார்த்தி,

“முடிவு தேடிக்கிறேன். அது.. சாகறதான் முடிவா?” என்று அவனைப் பார்க்க,

“என்ன முடிவு நீங்களே சொல்லுங்க?” என்றான். அவனும், அவள் கொடுத்த டென்ஷன் எல்லாம் குறைந்தவனாக. முகத்தில் பழைய புன்னகை மீண்டிருந்தது.

“அது நான் சொன்னதை ப்ரஸ்ல மாத்தி சொல்லிடலாம் நினைச்சேன்”

“என்ன மாத்தி சொல்லுவீங்க?”

“ம்ம், நான்தான் இவரை லவ் பண்றேன். இவர் பண்ணலன்னு க்ளாரிஃபை பண்ண நினைச்சேன்” என்றதும் இன்னும் அவனிடம் விரிந்த புன்னகை.

“தென்?” என்று கேட்க,

“நானும் அவசரப்பட்டுட்டேன், நான் ஃபீல் பண்ணீனா நீங்களும் ஃபீல் செய்யணும்னு அவசியமில்லை. உங்களுக்கு டைம் கொடுக்காம நான் ரொம்ப பேசிட்டேன். நீங்க டைம் எடுத்து உங்க முடிவு சொல்லுங்க” என்று கார்த்தியும் நிதானமாய்ப் பேசினாள்.

முதல்முறை அவன் பார்த்த பாவை மீண்டிருந்தாள், சின்ன புன்னகை. நிதானம் நிறைந்த ஆளுமை. உணர்ச்சிகளை அழகாய் அடக்கி அறிவாய்ப் பேசிய அந்த கார்த்தியை மீண்டும் கண்டான்.

“எவ்வளவு டைம்? எத்தனை நாள்?” என்று குரலில் கிண்டலுடன் கேட்டான் காளிதாஸன்.

“எவ்வளவு நாள், எவ்வளவு வருஷம் ஆனாலும் சரி. எனக்கு உங்க மேல இருக்க இந்த காதல், ஃபீல் போகாது. அப்படி உங்களுக்கு என்னை மாதிரி தோனலனாலும், அது தப்பில்லை. ஸோ, காத்திருப்பேன்” என்றாள்.

“காத்திருப்பீங்களா? இதுக்கு மேல வெயிட் பண்ணினா மேல்மாடி  வைட் வாஷ் பண்ணீன மாதிரி ஆகிடும் கார்த்தி. மொத்தமா நரைச்சிடும்” என்று சொல்லி அவன் தலையைக் கோதிக் கொண்டு சிரிக்க,

“நரைக்கிறதுதான் உங்க கவலை. நான் நினைக்கிறதை யோசிக்க மாட்டீங்க இல்லையா?” என்று கார்த்தி அவனை கேட்க,

“எனக்கு இன்னும் ஆச்சர்யமா இருக்கு, நேத்து அழுதுட்டே என்னை வந்து பிடிச்ச பொண்ணா இதுன்னு” என்று காளிதாஸன் கிண்டலாய் பார்க்க,

“உங்களை மறுபடி கட்டிப் பிடிச்சுக் காட்டுறேன், அந்த பொண்ணு நானான்னு தெரிஞ்சிடும்” என்று முறைத்து கொண்டு சொல்ல, இப்போது வாய் விட்டு சத்தமாய் சிரித்தான்.

“கார்த்தி! யூ ஆர் அமேசிங்!” என்று அவளைப் பார்த்து, பார்த்து அவள் பேசியதை நினைத்து, நினைத்து சிரித்தான்.

✅ End of Episode 12
How did you feel about this episode?
❤️ 5 😂 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 6 days ago

Very nice 

Kavi Natarajan Reader 6 days ago

💞💞💞💞💞💞💞💞💞

Mrs Beena loganathan Reader 6 days ago

காளிதாஸ் சிரிச்சா நானும் சிரிப்பேன்.... அப்படி ரசித்து படித்த கதை....😂😂💕💕💞💓💕❣️❣️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top