Episode 14
காளிதாஸனுக்குக் கொஞ்சமும் குறையாமல் கோபம் கொண்டாள் கார்த்தியும். வேகமாக அவன் பின்னால் சென்றவள், அவனை முன்னேற விடாமல் கரத்தைப் பிடித்தாள்.
“நீங்கதான் என்னை இன்னும் ராஜரத்னம் மகளா பார்க்குறீங்க” என்றாள் கார்த்தி, கோபத்துடன் சேர்ந்த ஒரு அழுத்தமான குரலில். அவள் கையைப் பிடித்ததும் அசையாமல் நின்ற போதிலும் காளிதாஸன் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. கோபத்தில் அவளிடம் பேச வேண்டாம் என்று அவன் மௌனமாய் நின்றிருக்க, கார்த்தியின் பேச்சு பேச வைத்தது அவனை.
“யார் நானா?” என்று இப்போது அவள் முகம் பார்த்து அவன் திரும்ப,
“ஆமா நீங்கதான். வீட்டு ஞாபகம்ன்னா அவங்க இரண்டு பேர் மட்டும்தானா? அம்மா, தம்பி, அண்ணி, முகில் எல்லாம் அந்த வீட்லதான் இருக்காங்க” என்று அவள் கத்த, காளிதாஸனுக்கு அவனின் தவறு புரிய,
“கார்த்தி! ஸாரி!” என்றவன், “இங்க நின்னு பேச வேண்டாம், வா உள்ள” என்று அவளை அறைக்குள் இழுத்துப் போனான்.
“என்ன ஸாரி? ராஜரத்னம் பொண்ணா இருக்கணும் நினைச்சிருந்தா நான் ஏன் உங்களோட வரப் போறேன்?” என்று ஆத்திரத்துடன் கத்தியவளுக்கு, அவ்வளவு மன உளைச்சல்.
காளிதாஸனைக் கண்ட நாள் முதலாய் பெண்ணுக்குள் போராட்டம்! அதுவும் அவளுக்குள் அவளுடனே. தவறு செய்தவர்கள் தன் குடும்பத்தினர்கள் என்று தெரிந்தும் அவர்களைத் தட்டிக் கேட்க முடியாத அடங்காத கோபம், அழுத்தமாய் அவளை ஆட்கொண்டிருக்க, செல்வாவின் அட்டூழியங்கள் இன்னும் அவளைத் தகிக்கச் செய்திருந்தன.
திருமணம் என்று வீட்டினரின் வற்புறுத்தல், மறுத்ததால் செல்வா காட்டிய வன்முறை, அவனின் வன்மம் என்று எல்லாம் சேர்ந்து வஞ்சியை வதைத்தது. இதில் இளங்காலை பனியாய் காளிதாஸன் மீது அவள் கொண்ட காதல், காதல் என்பதை விட காளிதாஸன் தனக்கு வேண்டும் என்ற பிடிவாதம், பிடித்தம் எல்லாம் அவளை உணர்ச்சிக் குவியலாய் மாற்றியிருக்க, குரலில் அவ்வளவு கோபம்.
காளிதாஸ் “ஸாரி கண்ணா! அது சட்டுன்னு டென்ஷன் ஆகிட்டேன்மா” என்று மன்னிப்புக் கேட்டான்.
“என்ன டென்ஷன்? என்னை விட உங்களுக்கு டென்ஷனா? உங்களைப் பார்த்த அன்னிலிருந்து எனக்கு டென்ஷன்தான். அப்படி கத்துறீங்க? நாளைனைக்குக் கல்யாணம் வச்சிட்டு கல்யாணம் வேணுமா வேண்டாமா யோசின்றீங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? அப்படி ஒன்னும் என்னைக் கஷ்டப்பட்டுக் கல்யாணம் செய்ய வேண்டாம்னுதானே நான் சொன்னேன். பெரிய இவராட்டம் கார்த்திக்காக கல்யாணம் சொல்லிட்டு இப்போ ஈசியா என்னை வேண்டாம் சொல்றீங்க இல்ல” என்று அவனை விடாது கேள்வி கேட்க,
நித்திலா வரும் சத்தம் கேட்க, சட்டென கார்த்தியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். குரல் கொடுத்தபடியே வந்த நித்தி பின்னாலிருந்து கண்டது கார்த்தியை அணைத்திருந்த காளிதாஸனைத்தான்.
“தாஸேட்டா! ஞான் ஒன்னும் கண்டில்லா” என்று சிரித்தபடி அவள் போய் விட,
கார்த்தியிடம் குனிந்து, “நித்தி இப்படி உன்னைப் பேசினேன் தெரிஞ்சா என்னை காலி பண்ணிடுவா, அதான்” என்று சொல்ல, கார்த்திக்கு இன்னும் கோபம் பெருகியது.
“அவங்களுக்காக, நீங்க என்னை சமாதானம் செய்ய வேண்டாம், இப்படி கட்டிப் பிடிக்கவும் வேண்டாம்” என்று அவள் விலகப் பார்க்க,
காளிதாஸனுக்குக் கார்த்தியின் கலங்கிய கண்கள் பார்க்கவும் நிறையக் காயப்படுத்தி விட்டோம் என்று புரிய, மனத்திற்கு கஷ்டமாய் போனது.
தன்னவளாக போகிறவள், தன்னை நினைக்கிறவள், நேசிக்கிறவள் என்று உள்ளம் சொல்ல ஆறுதலாய் அணைத்திருந்தவன், ஆசையாய் அணைத்து,
“கஷ்டப்பட்டு உன்னைக் கல்யாணம் செய்யவும் நினைக்கல, இப்போ இப்படி கட்டிக்கவும் இல்லை. எல்லாம் என் இஷ்டப்பட்டுதான்” என்று அவளை இருகைகளாலும் சேர்த்து வளைத்தான்.
“விடுங்க என்னை, சும்மா பேச்சுக்கு சொல்றது இதெல்லாம். கார்த்தின்ற பொண்ணுக்காகத்தான் கல்யாணம்னு சொல்லிட்டு அந்த பொண்ணுக்கு மனசு இருக்கும், அதுல வருத்தம் இருக்கும் எல்லாம் நினைக்க மாட்டீங்க இல்லை” என்று அவள் அணைப்பில் இருந்து கொண்டே கேட்கவும்,
“என்ன வருத்தம்?” என்றான்.
“முதல்ல விடுங்க, நித்தி அண்ணி போய்ட்டாங்க” என்று அவள், அவன் கைகளை விலக்கப் பார்க்க,
“நீ அழுறதை அவ பார்க்க வேண்டாம் நினைச்சு சொன்னேன், மத்தபடி உன் மேல் இஷ்டம் இல்லைன்னு ஏன் நீயே நினைச்சுக்கிற கார்த்தி?” என்று அவன் சோர்வாய்க் கேட்க,
“இஷ்டம் இருக்க மாதிரி என்ன செஞ்சீங்க நீங்க? ஒரே நிமிஷத்துல நான் பேசுறதைக் கேட்காம கல்யாணம் வேண்டாம் சொல்லிட்டு..” என்றவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கின. அழுகையை அடக்கப் பார்க்க முடியவில்லை. சட்டென அவளும் அவனைக் கட்டிக்கொண்டு அழுதே விட்டாள்.
“ஹேய் கார்த்திமா, கண்ணா! என்னை மன்னிச்சிடு. நான் பேசினது தப்புதான், தெரியாம பேசிட்டேன். என்னோட தப்புக்கு என்னைப் பேசு, திட்டு. நீ ஏன் அழற?” என்று அவன் கேட்க, கார்த்தியின் அழுகைக் குறையவில்லை.
“தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் தேம்பலுடன்.
அந்த அழுகை, அவள் சொல்லிய விதம் எல்லாம் காளிதாஸனைக் கரைத்தது. தன்னுடையைப் பேச்சு இவளை இப்படி பாதிக்குமா என்று மிகவும் வருந்தினான்.
அம்மா சொன்னதெல்லாம் நினைவில் வந்தது. திருமணம் என்றால் இருவரின் மனம் இணைவதல்லவா? இவளை யோசிக்காது ‘தான்’ என்ற எண்ணமும், தனது கோபமும் நியாயமில்லை என்று புரிந்தது.
“கார்த்தி கண்ணா! இப்படி என்னால நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. உங்கப்பா, அண்ணா செஞ்சதுக்கு உங்கிட்ட அந்த கோபம் ரொம்ப தப்புதான். ப்ளீஸ், இதுதான் லாஸ்ட் எனக்கு, இனி இப்படி பேச்சே வராது. என்னை நம்பு” என்றான் உளமாற.
“நம்பினதாலதான் இப்படி இங்க உங்ககூட இருக்கேன்” என்றாள். இப்போது குரல் தெளிந்திருக்க, அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் அப்படியே பேசினாள்.
“அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் நான். என்னோட கல்யாணம் எவ்வளவு சந்தோஷமா இருக்க வேண்டிய நாள். ஆனா, முடியல. என்னவோ மனசெல்லாம் ஒரு பாரம். உங்களுக்கு நான் ஏன் என்னோட எங்கேஜ்மெண்ட் ஸ்டாப் பண்ணினேன் தெரியுமா?” என்று அவனைக் கேட்க, அவன் தெரியாது என தலையசைக்க,
“எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருந்தது, உன்னோட அப்பா அண்ணா செய்ற வேலையால எல்லாரும் கஷ்டப்படும் போது நீ மட்டும் சந்தோஷமா கல்யாணம் செஞ்சுப்பியான்னு என் மனசாட்சி கேட்டுச்சு. அதான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் தனியா நின்னா அப்பாவோட குற்றவுணர்ச்சி அதிகமாகும் நினைச்சேன், மத்த பொண்ணுங்க லைஃப் செல்வா ஸ்பாயில் பண்றதை இவரும் தடுக்கல தானே? அந்த கோபம் எனக்கு” என்றவள் நிமிர்ந்து காளிதாஸன் முகம் பார்த்து கொஞ்சம் நிதானித்து குரலைத் தாழ்த்தி,
“நான் என்னோட டிசிஷன்ல ரொம்ப உறுதியா இருந்தேன். இந்த செல்வா என்னை அடிச்சான், வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சான், அப்பவும் என்னோட முடிவுல நான் மாறல. பட் எல்லாமே மாறிடுச்சு, உங்களைப் பார்த்தப்போ” என்ற போது காளிதாஸனின் கண்கள் கனிவுடன் அவளைப் பார்த்தன. அவன் கண்களைப் பார்த்தவள்,
“உங்க கிட்ட காதல் சொல்லுவேன், கல்யாணத்துக்குக் கேட்பேன் எல்லாம் நான் நினைக்கவே இல்லை. ஆனா, என்னால உங்களை விட்டு விலகி இருக்க முடியல. அப்போ இப்பவும் எனக்கு என்னோட சுயநலம்தான் பெருசுனு என் மனசு சொல்லுது, முன்னாடி என்னமோ பெரிய தியாகி மாதிரி நினைச்சிட்டு இப்போ உங்ககூட இப்படி நிக்கிறேன்..” என்ற போது மீண்டும் கண்களில் கண்ணீர்.
இப்போது அவள் நிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதும் அவளின் அந்த மனத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. எப்போதும் போல் ராஜரத்னத்துக்கு இப்படி ஒரு பொண்ணா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
பெண்கள் என்னதான் சுமந்து பெற்றாலும் பெயர் எடுக்கையில் எல்லாம் ஆண்களின் வாரிசுகளாவே பிள்ளைகள் அடையாளம் காணப்படுகிறார்கள். இங்கே காளிதாஸனும் அப்படியே நினைத்தான், விசாலாட்சி என்ற தாயின் வளர்ப்பு கார்த்தி என்று காளிதாஸன் அறியவில்லை.
“உனக்குத் தெரியுமா கார்த்தி? எல்லாரும் உன்னை மாதிரி இருக்கறதில்லை. வீட்ல உள்ளவங்க தப்பு செஞ்சா, அதுக்கு துணைப் போறவங்க இல்லையா வீடு நல்லா இருந்தா போதும்னு அமைதியா ஒதுங்கிப் போறவங்கதான் இங்க நிறைய. நீ, உன்னையே வருத்திக்கிட்ட கண்ணா. உனக்கென்ன அந்த செல்வாவை தண்டிக்கணும், அதானே கண்டிப்பா நடக்கும். அண்ட் நீ இப்படி இருக்கிறது தப்பெல்லாம் இல்லை” என்று அவர்கள் நெருக்கம் காட்டி சொன்னவன்,
“உண்மையில நமக்குத் தெரியாதவங்களை எதிர்த்திடலாம். ஆனா, வீட்டுக்குள்ள எதிர்க்க பெரிய தைரியம் வேணும், என் கார்த்திக்கு நிறைய இருக்கு” என்று அவன் சொன்ன கணத்தில் உள்ளத்தில் அத்தனை நேரம் இருந்த உளைச்சல் குறைந்து ஒரு உற்சாகம். அவனுடனான நெருக்கம் மயக்கம் தர, மெல்ல விலகப் பார்க்க, அவன் விடவில்லை.
அவன் விடாமல் பிடித்திருக்க, இவளுக்கு என்ன? உரிமையுள்ளவளாய் அவனை உள்ளமெல்லாம் நிறைத்தவளாய் நன்றாய் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
“அது என்ன என் கார்த்தி?” புருவம் தூக்கி ஆவல் குரலில் காதல் பெண் கேட்டாள்.
“இல்லையா அப்போ?” என்று காளிதாஸன் கேட்க,
“அப்போ டூ யூ லவ் மீ?” என்று கார்த்தி அவனிடம் பதிலை எதிர்ப்பார்க்க,
“இல்லம்மா” என்றதில் அவள் முகம் ஏமாற்றம் காட்டினாலும் ஏற்றுக் கொண்டாள்.
“கார்த்தி மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்த அப்புறம்தான் இந்த கல்யாணம் எல்லாம். இப்போ அட் ஃபார்டி இவ்வளவு டிஃப்ரன்ஸஸ் நமக்குள்ள. ஆனாலும், உனக்கு என்னைப் பிடிச்சதால, உன்னைப் பிடிச்சதால இந்த கல்யாணம்” எனும் போது கார்த்திக்குக் குளுமையாய் இருந்தது அந்த பதில்.
“நீ, உன்னைத் தண்டிச்சிக்கறதால எதுவும் மாறாது கார்த்திமா, உண்மையை சொல்லணும்னா என்னைக் கல்யாணம் பண்ண போறதே செல்வாவுக்கு ஷாக்காதான் இருக்கும். எல்லாருக்கும் இங்க அவங்க அவங்க வாழ்க்கையை வாழ உரிமை இருக்கு. ஸோ, உன்னோட இந்த முடிவு தப்பே இல்லை. நம்ம கல்யாணம் நிச்சயம் சந்தோஷமா நடக்கும். என்னோட பேச்சை மன்னிச்சிடு”
“பரவாயில்லை, இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. மன்னிச்சிடுறேன்” என்று கார்த்தி மீண்டிருந்தாள்.
அவளை விட்டு விலகிய காளிதாஸன், “ஓகே, நான் கிளம்புறேன்” என்று சொல்ல,
“அதுக்குள்ளவா?” என்று கார்த்தி பார்க்க,
“மணி பதினொன்றரை” என்றான், அவன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே.
தீடீரென கார்த்தி தனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் சந்தேகத்தை அவனிடம் கேட்டாள்.
“உங்களுக்கு லவ் ஃபெயிலரா? அதான் இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணலையா?” என்று கேட்க, காளிதாஸன் முகம் ஒரு நொடி இறுகி மீண்டது.
✅ End of Episode 14
💬 1 Reply
Log in
or
Register
to reply