Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 10

காளிதாஸன் 10

‘காதலுக்கு எதிரா ஆளுங்கட்சி??’

‘எதிர்க்கட்சி எம்.எல்.ஏவின் காதல் ஆளுங்கட்சி ப்ரமுகரின் மகளுடனா?’

‘கட்சி மோதலினால் கட்டாயக் கல்யாணம். ஆளுங்கட்சியின் அராஜகம்!’

‘காதலியைக் கரம் பிடிப்பாரா, காளிதாஸ்?’

ஒவ்வொரு செய்தித்தாளிலும், செய்தி சேனல்களிலும் மற்ற செய்திகளுடன் இதுவும் கூட முக்கிய செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது. வேறு முக்கிய செய்திகள் இல்லாமல் போக, கிடைத்ததை திரித்து ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த வண்ணம் செய்திகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். இதில் கார்த்தியாயினி அழுகையுடன் காளிதாஸனைக் கட்டி அணைத்தக் காட்சி வேறு அடிக்கடி காட்டப்பட்டது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் எல்லாம் அவரவர் கருத்தை முன் வைத்தனர். முதல்வர், ராஜரத்னத்தை அழைத்துக் கத்தி விட்டார்.

“காதலிச்சா கட்டி வைக்காம எதுக்கு இந்த கட்டாயக் கல்யாணமெல்லாம்? உன்னால பாரு கட்சி மானம் காத்துல போகுது” என்று கடிந்துக் கொண்டார். ராஜரத்னத்தின் மறுப்புகளை அவர் காதில் வாங்கவே இல்லை. காளிதாஸன், கார்த்தியாயினியைக் கடத்தியதைக் கூட சொல்ல நினைக்க, ஏன் முன்பே சொல்லவில்லை என்ற கேள்வி வரும். நீ ஏன் அவனின் மிரட்டலுக்குப் பயந்தாய் என்று கேட்டால் செல்வாவின் செயல்களை சொல்ல வேண்டுமே. அதற்கு பயந்து அவர் அமைதியானார்.

செல்வரத்னம் கொதித்துப் போயிருந்தான். காளிதாஸனை அவன் அங்கு எதிர்ப்பார்க்கவே இல்லை. அவனின் அத்தனை முயற்சிகளும் வீண் என நினைக்க நினைக்க தங்கை மீதும், அந்த காளிதாஸன் மீதும் கொலைவெறி வந்தது.

அதிலும் அத்தனை பேர் முன்னிலையில் காளிதாஸனை தங்கைக் கட்டிப் பிடித்து அழுத காட்சி அவமானமாய் உணர்ந்தான். வந்த ஆத்திரத்துக்கு இருவரையுமே கொன்று விடும் வேகம் அவனுக்கு. ஆனால், இப்போது எது செய்தாலும், அவன் பெயர் வந்து விடும் என்பதால் அமைதியாக இருந்தான்.

தன் வீட்டில் இருந்த காளிதாஸனும் இந்த செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். மணி ஏழுதான் ஆகியிருந்தது, ஒன்பது மணிக்கு ப்ரஸ் மீட் ஏற்பாடு செய்திருந்தான்.

நேற்றையை நிகழ்வு இப்படி திரும்பும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை. உண்மையில் கார்த்தியாயினியைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே சென்றான். வேறு யாரையாவது அனுப்பினால் அந்த நயவஞ்சகர்கள் நாடகமாடி விடுவார்கள் என்று தானே முன் நிற்க, அதற்கு பிறகு  நடந்தவை எல்லாம் அவனை மீறிய செயல்கள்.

அதற்காக அவன் வருத்தம் கொள்ளவில்லை. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றே அதனை ஒதுக்கி விட நினைத்தான். இன்னும் சில நாட்கள் இதனைப் பேசுவார்கள், வேறு செய்தி கிடைத்தால் அதற்குத் தாவி விடுவார்கள். அதுதானே நிதர்சனம்!

கார்த்தி என்ன நினைக்கிறாள் என்று அவனின் எண்ணங்கள் அவளை சுற்றின. இரவுக்கு மேல்தான் இந்த செய்தி பரவத் தொடங்கியது. அதுவும் இன்று காலைதான் எல்லாருக்கும் தெரிய வந்தது. அவன் வீட்டின் கீழ் அறையில் கார்த்தி உறங்கிக் கொண்டிருக்க, மெல்ல கதவைத் தட்டினான். அவள் திறக்கவில்லை என்றதும் கொஞ்சம் வேகம் கொடுத்துத் தட்ட, அவள் கதவை தாள் போடாமல் மறந்து விட்டாள் போல. உடனே திறந்து கட்டிலில் பார்க்க, அப்படியொரு நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள்.

காளிதாஸனுக்கு இருந்த டென்ஷன் கூட அவளிடம் இல்லை.  அவளைத் தொந்தரவு செய்யாமல் கதவை மூடியவன் சிறிது நேரம் சென்று எழுப்பலாம் என்று நினைத்தபடி அவன் அறைக்குப் போனான். சார்ஜில் போட்டிருந்த போன் சத்தம் செய்ய, பார்த்தால் கவின் அழைத்தான்.

“சொல்லு கவி” என்று காளிதாஸ் பேச, அந்த பக்கம் கவினின் சிரிப்பு சத்தம் கேட்டது.

“கவி! என்னடா?” என்று காளிதாஸ் அதட்டவும்,

“மச்சான், நேத்து உன் ரியாக்ஷன் யாருக்குத் தெரிஞ்சதோ, இல்லையோ எனக்குத் தெரிஞ்சது. ரீபிட்ல பார்த்துட்டு இருக்கேன்” என்று கிண்டலாய் சொல்லி சிரித்தான் கவின்.

“செருப்புப் பிஞ்சிடும்டா பரதேசி” என்று எரிச்சல்பட்டான் காளிதாஸ்.

“எனக்கு ப்ரஸ் மீட் இருக்கு, நீ இப்படி வெட்டிக்கதை பேசணும்னா அப்புறம் கூப்பிடு” என்று காளிதாஸன் போனை வைக்கப் போக,

“ஹே மச்சி! கோச்சுக்காதடா, மாமா உனக்குக் கூப்பிட்டாராம். நீ எடுக்கலையாம். அவருக்குப் பேசு” என்று சொல்லி வைக்க, இவனும் மகாதேவனுக்கு அழைத்தான்.

“மாப்ள!  நீ ஒன்னும் கவலைப்படாத, எதுனாலும் பார்த்துக்கலாம். உன்னால கட்சிக்கும் கூட ஆதாயம் இருக்குன்னு தலைவர் ஒரே புகழாரம்டா. என்ன உதவின்னாலும் செய்றேன் சொல்றார்” என்று உற்சாகமாய்ப் பேசினார் அவர்.

“மாமா, நீங்களும் ஏன் மத்தவங்க மாதிரி பண்றீங்க?” என்று கோபம் கொண்டவன் தான் கார்த்திக்கு உதவி செய்ய மட்டுமே போனதாகச் சொன்னான்.

உண்மையும் அதுதான்! 

கார்த்தியாயினி என்றவள் காளிதாஸனின் நினைவுகளில், நிகழ்வுகளில் இந்த சில மாதங்களாக எங்கேயும் இல்லை. தேர்தல் சார்ந்த வேலைகளில் அவன் இருக்க, இரண்டு நாட்களுக்கு முன் அவன் தொகுதி மக்களுக்கு உதவும் வகையில் வைத்திருந்த ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைப்பு வந்தது.

கார்த்திக்கு என்ன செய்தாவது இதில் இருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணம் இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள். அத்தனை வழிகளையும் அண்ணன் என்ற அயோக்கியன் அடைத்திருக்க, அம்மாவும் அண்ணியும் கூட அந்நியமாகிப் போனார்கள்.

விசாலாட்சி மகள் இப்படியே தனியாக இருந்து விடுவாளோ என்று பயந்து போனவர், மகளின் பேச்சுகளைக் காதில் வாங்கவே இல்லை. எவ்வளவோ கெஞ்சியும் கூட அவளிடம் அலைப்பேசி கொடுக்க மறுத்து விட்டார். மகன் அப்படி ஓதியிருந்தான்.

பணத்திற்காக தன்னை திருமணம் செய்பவன் நல்லவனாகவா இருப்பான்? இதற்கு நவீனும், சுமனுமே பரவாயில்லை என்றே தோன்றியது. செல்வா பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்தால் நிச்சயம் வாழ்க்கை நரகமாகி விடும் என்று கார்த்திக்குத் தெரிந்தது.

திருமண வேலையாய் கயல்விழி வெளியே சென்றிருக்க, செல்வா, அம்மாவை வீட்டில் வைத்து விட்டு அவனும் வெளியே சென்றான். ரத்னம் கட்சிப் பணிக்காக போயிருக்க, விசாலாட்சிக்கு உடல் நலமில்லை. மருந்து எடுத்துக் கொண்டு உறங்கிப் போயிருக்க, வீட்டில் கார்த்தியும், செல்வாவின் மகன்  முகில் மட்டுமே விழித்திருந்தனர். வெளியே வாட்ச் மேன், ட்ரைவர் என இருவர் இருக்க, யாரையும் வீட்டிற்குள் தன் அனுமதியின்றி விடக் கூடாது என்று உத்தரவிட்டுப் போனான்.

முகிலுக்குப் போர் அடிக்க, அத்தையிடம் விளையாடலாம் என்று வெளியே சென்று ஜன்னல் வழியே அத்தையை அழைத்தான்.

“அத்த! ஏன் நீ என்னோட விளையாடறதில்ல?” என்று அவன் கோபத்தில் கேட்க, அவன் பார்த்தது அழுதுக் கொண்டிருந்த அவன் அத்தையைத்தான்.

“முகி, வீட்ல யார் இருக்கா?” என்றாள் அவசரமாக. அவன் சொல்ல, சாவி அம்மாவிடமிருந்து எடுத்து கதவைத் திறந்தாலும் வெளியே வாட்ச் மேனை மீறி செல்ல முடியாது. யோசித்தவள்,

“அத்தை.. அழாத” என்ற அண்ணன் மகன் குரலில் தன்னை மீட்டவள்,

“முகி, அத்தை அழக்கூடாதுன்னா ஒரு ஹெல்ப் செய். ப்ளீஸ் அத்தை சொல்றதை யார்கிட்டவும் சொல்லக் கூடாது, பிங்கி ப்ராமிஸ்” என்று கேட்க, அத்தை என்றால் அவனுக்கு மிகவும் இஷ்டம். அவன் ஒத்துக் கொள்ளவும்,

“உன்னோட டேப் எடுத்துட்டு வா” என்றாள். முகில் கொண்டு வரவும், இந்த சூழலில் இவர்களை எதிர்த்து தனக்கு உதவக் கூடிய ஒருவன் காளிதாஸன் என்றே காரிகை மனம் சொல்ல, உடனே அவனின் பெயரை கூகுளில் டைப் செய்தாள். அவனின் ஹெல்ப்லைன் எண் கண்ணில் பட, அது செல் நம்பர் என்பதால் உடனே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“எனக்கு ஹெல்ப் பண்ணுங்க, ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சு  இரண்டு நாள்ல மேரேஜ் பண்ண பார்க்கிறான் செல்வா, எனக்கு வேறு யாரும் உதவ முடியாது. ப்ளீஸ், கார்த்தியாயினி” என்று வேகவேகமாக ஆங்கிலத்தில் அனுப்பி வைத்தவள் அவனின் எண்ணுக்கு அழைக்கவும் செய்ய, அழைப்பு எடுக்கப்படவில்லை.

தன்னால் முடிந்ததை செய்துவிட்டு இனி நடப்பதைப் பார்க்கலாம் என்று முகிலிடம் டேப் ஐ நீட்டியவள்,

“யார்கிட்டவும் சொல்லாத” என்று சொல்ல, அவனும் கேட்டுக் கொண்டான்.

தன்னால் முடிந்த மட்டும் போராடியவளுக்கு காளிதாஸன் வந்தது அத்தனை பெரிய ஆறுதல். அவனைக் கண்ட நொடி இவனால் மட்டுமே எனக்குத் தீர்வு என்ற எண்ணம் தீவிரமாய் மனத்தில் ஓட, அவனை நோக்கி ஓடினாள்.

காளிதாஸனிடம் இரவு நேரத்தில் அன்றையை ஹெல்ப் லைனில் வந்த செய்திகள், அழைப்புகள் எல்லாம் சொல்வது வாலியின் வழக்கம். கார்த்தியியாயினின் மெசெஜைப் பார்த்து இருவருமே அதிர்ந்து போக, உடனே விசாரிக்க, அது உண்மை என்று தெரிய வர,

“அண்ணா, இந்த நம்பருக்குக் கால் பண்ணுவோமா?” என்று வாலி கேட்க,

“அப்படி ஈஸியா போன் கிடைச்சிருந்தா அவங்க நம்ம ஹெல்ப் கேட்க மாட்டாங்க, அது யார் நம்பர்னு செக் பண்ணு. ஹவுஸ் அரெஸ்ட்னு சொல்லியிருக்காங்க பார்ப்போம்” என்றான். அந்த எண் கயல்விழியின் பெயரில் இருக்க, மீண்டும் அழைக்க வேண்டாம் என்றான்.

“அண்ணா! இப்பவே எதாவது செய்யணும். பாருங்க சொந்த தங்கச்சியைக் கூட என்ன கொடுமை செய்றானுங்க” என்று வாலி பொங்கினான்.

“அவங்க வீட்டுப்பொண்ணு விஷயம் வாலி, சம்மந்தமில்லாம நம்ம தலையீட்டா ஈஸீயா டைவர்ட் பண்ணிடுவாங்க. கரெக்டான டைமுக்குப் போகலாம்” என்று சொல்லி காத்திருந்தவன் திருமணத்திற்கு முதல் நாள் சென்று நின்றான்.

செல்வாவும், ராஜரத்னமும் எதாவது தகிடுதத்தம் செய்வார்கள். இவன் எதிர்க்கட்சிக்காரன் வேறு! விஷயத்தைத் திசைத் திருப்பினால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எல்லாம் யோசித்து முன் எச்சரிக்கையாக மீடியா ஆட்களையும் அங்கே வரவைத்தான்.

காளிதாஸன் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வேண்டுமென்றே தங்கள் வீட்டு விஷேஷத்தில் குந்தகம் விளைவிக்கிறான் என்று செல்வா சொல்ல, கமிஷனரும் அவர்களுக்கு ஆதரவாகப் பேச, காளிதாஸன் விடவில்லை.

“உண்மையா அவங்க பொண்ணுக்குத் திருமணத்தில விருப்பம் இருக்குன்னு சொல்ல சொல்லுங்க. நாங்க போயிடுவோம்” என்று அவன் வாக்குவாதம் செய்தான்.

இங்கு வீட்டில் கார்த்தியை ரெடியாகச் சொல்லி அம்மாவும், அண்ணியும் போராட, ராஜீவ் அன்று மாலை ஃப்ளைட்டில்தான் கான்பூரில் இருந்து வந்தான். அவன் நேரே அறைக்குச் சென்று தயாராக, அவனுக்கும் வீட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. இந்த சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வர, கார்த்தி வந்த வேகமும் அவளின் அழுகையும் காளிதாஸனை அணைத்ததும் என்று எல்லாம் பதிவாக, பார்த்த குடும்பத்தினருக்குப் பதறியது.

கார்த்திக்காயினி அழுகையுடன் நெஞ்சில் சாய, திகைத்துப் போனான் காளிதாஸன். நாசூக்காய் அவளை விலக்கினான்.

“ஏய்!” என்று கத்திக் கொண்டு செல்வா கார்த்தியை இழுக்கப் பார்க்க, கார்த்தியைப் பிடித்து தன் வலப்பக்கம் நிற்க வைத்தான் காளிதாஸன். வாலியிடம் கண்காட்ட, அவன் அவளின் மறுப்பக்கம் வந்து நிற்க, பாவைக்கு நொடியில் பாதுகாவலன் ஆனான்.

“காது! என்னடி செய்ற?” என்று விசாலாட்சி மகளை அதட்ட, “கனிம்மா” என்று ரத்னம் மகளை இழுக்கப் பார்க்க, ராஜிவ் வேறு என்ன நடந்தது, நடக்கிறது என்று புரியாதவனாக,

“அக்கா, என்ன செய்ற? முதல்ல வீட்டுக்குள்ள வா” என்று அவள் அருகே போக, காளிதாஸ் கை நீட்டி தடுக்க, அவனை முறைத்தான் ராஜீவ்.

அதற்குள் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு கார்த்தியிடம் கேள்வி கேட்க, தடுமாறிப் போனாள் அந்த சூழலில்.

“கார்த்தி, நான் இருக்கேன். பேசுங்க” என்று காளிதாஸன் சொல்லவும்,

“உங்களுக்கு விருப்பமில்லாத கட்டாயக் கல்யாணமா இது?” என்று கேள்வி வர,

“ஆமா, எனக்கு விருப்பமில்லன்னு சொல்லியும் என்னை அடைச்சு வச்சுக் கல்யாணம் செய்ய பார்த்தாங்க” என்று அவள் சொல்ல, வாலியிடம் கண் காட்டியவன் காரில் கார்த்தியை ஏறச் சொல்ல,

ரத்னம், “என் பொண்ணை அவன் எப்படி அழைச்சிட்டுப் போகலாம்” என்று கத்த கமிஷனரைப் பார்த்த காளிதாஸன்,

“அவங்க மேஜர். எல்லார் முன்னாடியும்தான் அவங்க பதில் சொன்னாங்க. வர இஷ்டமில்லன்னா அவங்க சொல்லட்டும்” என்று சொல்ல,

“இல்லை, எனக்கு இங்க பாதுகாப்பில்ல” என்று கார்த்தி சொல்லி விட, அதன்பிறகு என்ன செய்ய முடியும்?

“காளிதாஸ் ஸாரைத்தான் நீங்க லவ் பண்றீங்களா?” என்று வேறு ஒரு நிருபர் கேட்க அதற்கெல்லாம் கார்த்தியைப் பதில் சொல்ல விடாமல்,

“அவங்க உதவிக் கேட்டாங்க, செஞ்சேன்” என்றவன், காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

இதுவரை எல்லாம் காளிதாஸன் நினைத்தது போலவேதான் நடந்தது. ஆனால், கார்த்தி ஒரு உணர்ச்சி வேகத்தில் அவனைக் கட்டியணைத்திருக்க, அந்த செய்தி பல புரளிகளை, ஊகங்களைக் கட்டவிழ்த்து விட்டது.

கார்த்திக்கு அவனின் வீட்டிற்குச் சென்றதும்தான் உணர்வே வந்தது.

காளிதாஸன் அவள் முன்னே வந்து உட்கார, “ஸாரி, நான் ஏதோ டென்ஷன்ல….” என்றவள் அவனின் உதவி நினைவு வர, 

“ரொம்ப தேங்க்ஸ்! நீங்க இல்லைன்னா சாகறது தவற எனக்கு வேற வழியில்லை”என்று கைக் கூப்பினாள்.

“அவனைக் கொல்லாம நீங்க சாவேன்னு சொல்றீங்களா? எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க பயப்படாதீங்க”என்றவன், நடந்த எல்லாவற்றையும் அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள மீண்டும் சாரி என்று கார்த்தி சொல்ல, அவன் தலையசைத்தான்.

“ஓகே! ரிலாக்ஸ்! ஜஸ்ட் எ ஹக்! உங்க சிட்டிவேஷன் புரியுது” என்றான் பெருந்தன்மையாக.

கார்த்திக்குத்தான் உள்ளம் உறுத்த, “உங்க வீட்ல தப்பா நினைப்பாங்களா?” என்றாள் தயக்கத்துடன். தன்னால் அவன் வாழ்வில் எந்த பிரச்சனையும் வர அவள் விரும்பவில்லை.

“அம்மாவுக்கு என்னைத் தெரியும்” என்றான் புன்னகையுடன்.

“உங்க மிஸஸ்?” என்று கார்த்தி இழுக்க, வாலி உடனே,

“எங்கண்ணன் சிங்கிள். அவருக்குக் கல்யாணம் ஆகல” என்றான்.

காளிதாஸன் இன்னும் முறைக்க, “உங்களுக்கு லவ்வர் இருக்காங்களா? தப்பா நினைப்பாங்களா? நான் பேசவா?” என்று அவனின் முறைப்பைக் கண்டு கார்த்தி வேகமாய்க் கேட்க,

“அதெல்லாம் இல்லங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க. வாலி பார்த்துக்கோ” என்று சொல்லி போக, காளிதாஸனுக்கு நிறைய அழைப்புகள். எல்லாவற்றையும் சமாளித்து உறங்கிப் போக, விடிந்ததும் பார்த்தால் ‘ஜஸ்ட் எ ஹக்’ என்று அவன் நினைத்த செய்கை பலவாறாகப் பரவி இருந்தது.

மகாதேவனுக்கு எல்லாம் விளக்கி சொல்ல, “ஆனா, அந்த பொண்ணு உன்னைக் கட்டிப்பிடிச்சது வச்சு, நீ வேற காப்பாத்தப் போனியே டா…. இப்ப வேற மாதிரி பேச்சாகிடுச்சு, மாத்தி எப்படி சொல்றது?” என்று அவர் இழுக்க,

“மாமா, நேத்தே எவனோ ஒரு லூசு ரிப்போர்ட்டர் கேட்க நான் ஹெல்ப் பண்ணினேன்னு சொல்லிட்டேன், இவனுங்க இஷ்டத்துக்குப் பேசறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது” என்றவன்,

“இப்போ ஒன்பது மணிக்கு நான் ப்ர்ஸ்மீட் வச்சிருக்கேன், எல்லாம் தெளிவா பேசி நான் முடிச்சிட்டுப் பேசுறேன் மாமா. என்னை வச்சோ, கார்த்தி வச்சோ நீங்க அரசியல் பண்ண வேண்டாம், உதவின்னு வந்த பொண்ணை வச்சு விளையாடாதீங்க” என்றான் கடுப்பாக.

கார்த்தியிடம் காலையில் விஷயத்தைப் பகிர்ந்து, “நீங்க நடந்ததை சொல்லுங்க. வேற எப்படி கேட்டாலும் உண்மையை மட்டும் சொல்லுங்க” என்று சொல்லி அழைத்துப் போனான்.

முதலில் சில கேள்விகளுக்கு தெளிவாய்ப் பதில் சொன்னாள்.

தீடீரென, “எம்.எல்.ஏ காளிதாஸை நீங்க விரும்புறதாலதான் உங்கப்பா ஒத்துக்காம வேற ஏற்பாடு பண்ணினார்னு சொல்றாங்களே அது உண்மையா?” என்று கேட்க, கார்த்தி ஒரு நொடி தடுமாறினாள்.

அவள் யோசிக்க கூட விடாமல், “அவரை லவ் பண்ணினதாலதான் அவர்கிட்ட உதவி கேட்டீங்களா?” என்று அடுத்தடுத்து அம்புகளாய் கேள்விகள் வர, தானாய் தலைவியின் விழிகள் தயக்கத்துடன் காளிதாஸனைக் கண்டது.

அவன் இவளின் தவிப்பை உணர்ந்து தலையசைத்து கண்ணால் தைரியம் சொல்ல, அந்த நொடி கவிதை!

இவள் வினாவின் விடையாய் அவன் மாறிப்போன கணம்! நொடியில் முடிவெடுத்தவள், “எஸ்! நானும் இவரும் லவ் பண்றோம். எங்க வீட்ல ஒத்துக்கல” என்று நிமிர்வாய் அவர்களிடமிருந்து வந்த அத்தனை கேள்விக்கும் கார்த்தி பதில் சொல்ல, காளிதாஸன் வேகமாய் எழுந்தவன்,

“என்ன உளறுறீங்க?” என்று அவளருகே வந்து மெல்ல சீற, ஜோடியாய் அவர்களின் புகைப்படம் பதிவானது.

“கங்கிராட்ஸ் ஸர்!” என்று பத்திரிக்கையாளர்கள் வாழ்த்த,

“எப்போ பார்த்தீங்க?” என்று நிறைய கேள்விகள் வர, கோபத்துடன் அங்கிருந்து கார்த்தியை இழுத்துக் கொண்டு போனான் காளிதாஸன்.

முடிவுகள் எப்போதும் எல்லாவற்றையும் முடித்து வைப்பதில்லை. கார்த்தியின் முடிவும் அப்படித்தான்.

முடிவில் ஒரு தொடக்கம்!

 

************

புதுசா படிக்கிறவங்க எப்படி இருக்குனு சொல்லுங்க friends. சீக்கிரமே புது கதையோடு சந்திப்போம், அதற்குள் தளத்தில் எல்லாரும் பதிவு பண்ணிக்கோங்க. 

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 5 😂 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Kavi Natarajan Reader 1 week ago

💞💞💞💞💞💞💞💞💞

❤️ 2 more...
Srichitra Reader 1 week ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 week ago

கவின் சிரிப்பு 

காளி நீ காலி......

❤️ 1 more...
Vidhya s Reader 1 week ago

கார்த்தி டக்குனு முடிவு பண்ணியாச்சு காளிதாஸ கல்யாணம் பண்ண

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top