Episode 11

காதல் 11

“அமிழ்தா, அம்மு, பேபி” என்று ஜனா குரல் கொடுத்தவாறே பயத்துடன் மாடிக்குச் சென்று பார்க்க, அங்கும் குழந்தையில்லை. மீண்டும் கீழே இறங்கி வந்தவன் சத்தம்போட, அவன் சத்தம் கேட்டு சௌந்தர்யா, வர்ணவி எல்லாரும் குழந்தையைத் தேடினார்கள்.

“டேய் ஜனா” என்று ரங்க நாயகியின் குரல் கேட்க,

“தாத்தா ரூம்ல பார்த்தியா ஜனா? அங்க இருக்கா போல, அத்தைக் கூப்பிடுறாங்களே” என்று சௌந்தர்யா கேட்கவும், முழித்தவன் உடனே தாத்தாவின் அறைக்குள் சென்றுபார்க்க, கூடவே வர்ணவியும் சௌந்தர்யாவும் போனார்கள்.

அங்கு போய் பார்த்தால், ரங்க நாயகியின் கையைத் தன் பிஞ்சு விரலால் பிடித்துக் கொண்டு அவரின் மடியில் உட்கார்ந்திருந்தாள் அமிழ்தா. ஜனார்த்தனைப் பார்த்ததும் ரங்க நாயகி,

“உனக்குத் தான் உன்னோட பொண்ணை என்கிட்ட காட்டணும்னு ஆசையில்ல, ஆனா அவ என்னைத் தேடி வந்துட்டா பார்த்தியா?” என்றார் பெருமையுடன்.

“நேத்து என்னைப் பார்த்தியே ஆத்தா, என் மடியில தானே இருந்தா, உன்னோட பேத்திதானே அவ கொஞ்சுறதுக்கு என்ன? பார்த்தியா என் பொண்ணு எப்படி ஜம்முன்னு வந்து உட்கார்ந்துட்டா” என்றவன்,

“ஏன் பேபி அப்பா கூப்பிட்டேனே காதுல விழலையா உனக்கு?” என்று குழந்தையிடம் கேட்க,

“டாடி நீங்கதானே என்னை ஃபைன்ட் பண்ணனும், நானே எப்படி வதுவேன்?” என்று முறைத்தபடி கேட்க, வர்ணவி பக்கென்று சிரித்துவிட்டாள்.

“அண்ணா, பார்த்தியா டா உன் பொண்ணு உனக்கு ஹைட் அண்ட் சீக் கூட விளையாட தெரியலைன்னு சொல்லிட்டா” என்று சிரிக்க, சௌந்தர்யாவும் சிரித்துவிட்டார்.

மருமகள் சிரிக்கவும், உடனே ரங்க நாயகி,

“என்ன சிரிப்பு உனக்கு? ஏய் வரு உனக்கு என்னடி? குழந்தையை ஒழுங்கா பார்க்கத் தெரியாம எல்லாம் தேடுறீங்க? எப்பவும் குழந்தைங்க மேல ஒரு கண்ணு வச்சிருக்கணும், புரிஞ்சதா?” என்று அதட்டினார்.

வர்ணவியும் சௌந்தர்யாவுடன் வெளியே சென்றுவிட, ஜனா மட்டும் அவருடன் இருந்தான். ஜனாவிடம்,

“இந்த சின்னக்குட்டி என்ன பண்ணினா தெரியுமாடா? உனக்குத் தெரியாம இங்க வந்து ஒளிஞ்சிட்டு இருந்தா, என்ன பண்றனு கேட்டா அப்பா கூட விளையாடுறேன் சொல்லாதீங்க அப்பத்து அப்படின்னு கட்டில் பின்னாடி உட்கார்ந்திருந்தவ, நான் கையில தைலம் தடவுறதுப் பார்த்து, நான் பண்றேன்னு என் கையைப் பிடிச்சிட்டு இருக்கா” என்றவரின் கண்ணில் ஈரம்.

“பார்டா, எப்படி என் பொண்ணு?” என்று ஜனார்த்தனும் பெருமையாக சொல்ல,

“இவ என் கூட கொஞ்ச நேரம் இருக்கட்டுமே” என்று ரங்க நாயகி கேட்க, ஜனாவால் மறுக்க முடியவில்லை. அவரின் உலகம் கணவர், குடும்பம் என்று மிகவும் சிறியது, வீடு, அவரின் அறை, டீவி என்றுதான் அவர் வாழ்க்கை ஓடும், வாய் அதிகம் பேசுவார், ஆனாலும் பேரப்பிள்ளைகள் மீது ப்ரியம் அதிகம். இப்படியெல்லாம் ரங்க நாயகி அவனிடம் எதுவும் கேட்டதில்லை. அதனால்,

“அதுக்கென்ன ஆத்தா, உன் பேத்தி நீ வச்சிக்கோ” என்றவன் அறையைச் சுற்றிப்பார்த்துவிட்டு,

“எங்க போனார் உன் வீட்டுக்காரர்?” என்று கேட்டான்.

“என்னடா உன் பொண்டாட்டி வந்ததும் வாய் நீளுது? அவர் செக் அப்காக டாக்டர்கிட்ட போயிருக்காரு” என்றதும்,

“என்ன ஆத்தா நீ? நானே கல்யாணம் ஆனதெல்லாம் மறந்து போய் இருக்கேன், நீ வேற?” என்று அவன் சோகமாகப் பேச,

“உன் மூஞ்சியைப் பார்த்தா மறந்த மாதிரியெல்லாம் தெரியலையேடா, என்னவோ போ என்ன என்ன வியாதியோ வருது? ஒழுங்கா மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிடு டா” என்று அவர் சொல்லவும் உள்ளுக்குள் பக்கென்றது அவனுக்கு. அவர் கடைசியில் அப்படி முடிக்கவும்தான் தெளிவானான்.

“சரி ஆத்தா, கொஞ்சம் டயர்டா இருக்கு, நான் போய் தூங்குறேன்” என்றவன் வெளியே சென்றான்.

“அமிழ்தா செம சுட்டிடா, உன் ஆத்தாவையே ஒரு நாள்ல கவுத்துட்டா பாரேன்” என்று அவர் ரசித்துப் பேச,

ஜனாவின் முகத்திலும் பெருமை இழையோடிய ஆனந்தம்.

“மா, எனக்குத் தூக்கம் வருது, தூங்குறேன், நீ அமிழ்தாவைப் பார்த்துக்கோ ம்மா” என்று சொல்ல,

“சாப்பாடு இன்னும் கொஞ்ச நேரத்துல ஆகிடும், சாப்பிட்டு மாத்திரைப் போட்டுத் தூங்குடா, நான் அவளைப் பார்த்துக்கிறேன்” என்றதும் அவனும் அப்படியே செய்தான்.

சுதந்திரமலர் அவளின் வீட்டிற்குப் போக, மகள் புகுந்த வீட்டில் இருந்துவிட்டு வர, அவரின் பார்வை அவள் எப்படி இருக்கிறாள் என்று ஆராய்ந்தது. மலர் வீட்டுக்குள் நுழைந்தவுடனே,

“மா, நான் நல்லா இருக்கேன், அங்க எல்லாரும் நல்லா இருக்காங்க, எனக்கு லாக் இன் செய்ய டைம் ஆகிடுச்சு, நான் லேப்டாப்பும் என்னோட டிரஸும் எடுக்கத்தான் வந்தேன், எதுனாலும் அப்புறம் பேசுங்க” என்று சொல்லி அவள் வேலையில் மூழ்கிப்போக, மதிய உணவுக்குக்குத் தான் வெளியே வந்தாள். வந்ததுமே வடிவு அவளிடம்,

“ஏன் ராஜாத்தி தனியா வந்திருக்க? அம்முவை அழைச்சிட்டு வந்திருக்கலாமில்ல, உன்னை அங்க நல்லா கவனிக்கிறாங்களா? அந்த ராங்கி ரங்க நாயகி என்ன சொல்றா உன்னை?” என்று அவர் சாதத்தை வைத்துக்கொண்டே கேள்விகள் கேட்டார்.

“அவங்க எங்கிட்ட பேசவே இல்லை, ஜனா, அத்தை, மாமா, வர்ணவி எல்லாம் எங்கிட்ட நல்லா நடக்குறாங்க, ஒன்னும் பிரச்சனையில்ல ஆத்தா, அம்முவை நான் அப்புறம் அழைச்சிட்டு வரேன், அவ அவங்கப்பா கூட இருக்கட்டும்னுதான் விட்டு வந்தேன்” என்று சொன்ன மகளை சாரதா மெச்சுதலாகப் பார்த்து,

“பரவாயில்லையே அறிவா எல்லாம் செய்ற?” என்று அவர் நக்கலாகப் பேச,

“ம்ம், இத்தனை நாள் உங்களோட இருந்தேன் இல்ல, இப்போ ஜனா கூட இருக்கேன்ல அதான் அறிவாகிட்டேன்” என்று அவருக்கேற்றபடி மலரும் நக்கலாகவே பேசினாள்.

மலரும் ஐந்து மணிவரை வேலைப் பார்த்து, அவளுக்குத் தேவையானவை எல்லாம் எடுத்துக்கொண்டு அப்பாவைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தாள்.

முரளிதரனுக்குப் பெண்ணின் முகம் பார்க்க அவ்வளவு நிம்மதி. சுதந்திராவின் முகத்தில் இறுக்கங்கள் தளர்ந்து பழையபடி ஒருவித மலர்வுடன் இருந்தது.

“ஜனா எப்படி இருக்கார் சுதாம்மா? அம்முவை அழைச்சிட்டு வந்திருக்காலமில்ல” என

“அவர் நல்லா இருக்கார்ப்பா, அவ அவங்க அப்பா கூட இருக்கட்டும்னுதான் விட்டு வந்தேன்” என்றாள்.

“அதுவும் சரிதான், கிருஷ்ணா கல்யாணத்துக்கு நம்ம அவங்களைக் கூப்பிடணும் சுதந்திரா, முன்னாடி மாதிரி தள்ளியே இருந்திட முடியாது, எப்போ வரட்டும்னு சொல்லு” என்றதும் அப்பாவை அவர்கள் எப்படி நடத்துவார்களோ என்ற கவலை பிறந்தது. நிச்சயம் அத்தை, மாமா எல்லாம் நன்றாகவே நடத்துவார்கள். ஆனால் ஜெயப்பிரகாஷும் ரங்க நாயகியும்??

“பத்திரிக்கையெல்லாம் அடிச்சு வரட்டும்பா, அப்புறம் சொல்லிக்கலாம், நான் மாமா அத்தை கிட்ட சொல்லி வைக்கிறேன்” என்றவள் நேரமாகிவிட கிளம்பிவிட்டாள்.

வீட்டிற்குப் போய் பார்த்தால் சாத்வீயும், அமிழ்தாவும் வீட்டின் முன் உள்ள ஊஞ்சல், சறுக்குமரம் என்று எல்லாவற்றிலும் ஏறி இறங்கி விளையாட, வர்ணவியும் சௌந்தர்யாவும் குழந்தைகளைப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

“பேபி!” என்று அமிழ்தாவின் முன் நிற்க, சறுக்குமரத்தில் இருந்த இறங்கிய அமிழ்தா அம்மாவைக் கட்டிக்கொண்டு உற்சாகமாய்ப் பேசிட, கேட்டிருந்த சுதந்திராவுக்குச் சந்தோஷமாக இருந்தது.

“சூப்பர் பேபி, ரொம்ப நேரம் விளையாட்டிட்ட அம்மாவோட வா” என்றதும் அம்மாவை குறுகுறுவென்ற பார்த்தவள்,

“நோ ம்மா, ஐ வில் ப்ளே வித் அக்கா, ப்ளீஸ் ம்மா“ என்ற அமிழ்தா சுதந்திராவைக் கீழே குனிய சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“அம்மா ப்ளீஸ்” என்று கொஞ்சிட சுதந்திராவுக்குக் குழந்தையின் சந்தோஷம் கெட மனமில்லை. அதனால் சௌந்தர்யாவிடம் சொல்லிவிட்டு மாடியேறினாள்.

அறைக்குள் போன மலர், முகமெல்லாம் கழுவி விட்டு வந்து பார்க்க, ஜனா எழுந்து உட்கார்ந்திருந்தான். தலையணையைப் பின்பக்கம் சாய்வாய் வைத்து, கால்களை நீட்டி இருந்தவன் கைகள் நீட்டி அவளை அழைக்க அவன் பக்கம் உட்கார்ந்தாள்.

“என்ன ஜனா? உன் பொண்ணு கூட ப்ரண்ட் ஆகிட்டியா?” என்றதும்,

“என் பொண்ணு கூட கொஞ்சமா ஆகியிருக்கேன், ஆனா என் பொண்ணு ஆத்தா கூட ப்ரண்ட் ஆகிட்டா டி” என்றவன் நடந்ததை சொன்னான்.

“பரவாயில்லையே நம்ம பேபி!” என்று அவளும் சொல்ல, ஜனாவின் கைகள் அவள் அருகே இருக்கவும் அவளை இழுக்க, அவளின் ஈரமுகம் இப்போது அவனருகே. மெல்லமாக அவளின் ஈரமுகத்தைத் தன் கைகளினால் அவன் வருட,

“என்ன வேணும் சார் உங்களுக்கு?” என்று புன்னகையுடன் ஜனாவின் தாடியைத் தடவியபடி மலர் கேட்டாள்.

“இறுக்கியணைச்சு ஒரு உம்மா தரும்” என்றவனின் விழிகளில் பேராவல் இருக்க, அதற்குள் அமிழ்தா,

“மம்மி” என்று கத்திக் கொண்டு ஓடிவர, ஜனாவோ

“ப்ளீஸ் ஒன்னே ஒன்னு, பாவம்டி நான்” என்று கெஞ்சினான்.

“போடா வெண்ண, அம்மு வந்துட்டா ஒன்னும் கிடையாது” என்று அவனை விட்டு எழ, அமிழ்தா அப்பாவிடம் வந்து

“டாடி நம்ம ஓடி விளையாதுவோம், கம் லெட்ஸ் ப்ளே, அக்கா, மம்மி, அத்த எல்லாம் விளையாதுவோம்” என்று உற்சாகமாகப் பேசினாள்.

“பேபி நீ வா நம்ம விளையாடுவோம்” என்று சொல்லி குழந்தையை ஜனா அழைத்துப் போக, அமிழ்தா, வர்ணவி, சாத்வீ என்று எல்லாரும் விளையாட, வெகுவருடம் கழித்து அந்த வீட்டில் ஒரே கொண்டாட்டம்தான். சாத்வீயும் சுட்டிதான் என்றாலும் பிரசன்னா ஜனாவைப் போல் மகளுடன் விளையாடவெல்லாம் மாட்டான். வர்ணவிதான் பெண்ணின் பின்னேயே சுற்றுவாள். இன்று ஜனாவும் இணைய ஆட்டம்தான்.

எட்டு மணி வரை ஓடி ஆடி களைத்தவர்கள் ஹாலில் வந்து கூட, இரவு உணவுக்கு எல்லாரும் கூடினர். மலரையும் வர்ணவி அழைத்துவர, அன்று சௌந்தர்யா இட்லி சாம்பார் செய்திருந்தார். அவர்கள் வீட்டில் வேலை செய்ய ஆள் இருந்தாலும், உணவு என்பது எப்போது வீட்டுப்பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பது ரங்கநாயகியின் கட்டளை.

அமிழ்தா நாற்காலியில் நிற்க மலர் குழந்தைக்கு இட்லி ஊட்ட, மெல்லமாக அம்மாவிடம் அமிழ்தா,

“மா, வாட் இஸ் வெண்ண?” என்றது சாத்வீயின் காதில் விழுந்தது.

“வெண்ணன்னா பட்டர், பட்டர் தானேப்பா?” என்று சாத்வீ பிரசன்னாவிடம் கேட்க, பிரசன்னாவும் “ஆமா சாத்வீ” என்றான்.
அமிழ்தா உடனே “அப்பா இஸ் பட்டரா?” என்று பொதுவாய்க் கேட்க, யாருக்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை. சௌந்தர்யா மட்டும் முகம் கொள்ளா முறுவலுடன்,

“ஹாஹா, டேய் உன் பொண்ணு நீ வெண்ணெய்யான்னு கேட்கிறாடா?” என்றார்.

அமிழ்தாவுக்கு ஊட்டிக்கொண்டிருந்த மலர் உடனே மகளிடம்,

“பேபி அப்பா பட்டர் எல்லாம் இல்ல, ஏன் அப்படி சொல்ற?” என்று கண்டிப்பது போல் கேட்க, எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

“அப்பா வெண்ணன்னு யூ ஒன்லி செட் ம்மா” என்று அமிழ்தா யோசிப்பது போல் விரலை தாடையில் வைத்தவள் ஜனாவைப் பார்த்து,

“மா போதா வெண்ண சொன்னாங்க தானேப்பா?” என்று கேட்டது குழந்தை.

மலர் சங்கடத்துடன் நிற்க, வர்ணவி சிரிப்பை அடக்க முடியாமல் அடக்க, சௌந்தர்யா உடனே,

“என் பையனை வெண்ணெய் சொன்னியா நீ?” என்று அவளை திட்டுவதுபோல் கேட்டார்.

ஜனா உடனே “மா, சும்மா இரு, அமிழ்து பேபி அப்பா இஸ் நாட் பட்டர், அம்மா சாப்பிட பட்டர் கேட்டாங்க ஒகே” என்று பொறுமையாகச் சொல்ல, அமிழ்தா தலையசைத்துவிட்டு அம்மாவிடம்,

“ஆ கொதும்மா” என்று இட்லிக்கு இதழ் திறந்து நின்றாள்.

“மலரே எங்க அண்ணனை சைட் அடிச்சது போதும், நீ முதல்ல பாப்பாவுக்கு சாப்பிட கொடு” என்று கிண்டல் செய்ய, ப்ரசன்ன வாசன் மனைவியை முறைக்க,

“என்ன மாமா ஏன் என்னை முறைக்கிற?” என்று அவள் பாவமாகக் கேட்க, அதற்கும் முறைத்தவன் ஒன்றும் பேசவில்லை.

மலர் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூனில் வைத்துவிட்டு அவள் சாப்பிட உட்கார்ந்தாள். குழந்தைகள் இல்லையென்றதும் வர்ணவியிடம் கண்டிக்கும் குரலில் பிரசன்னா,

“என்ன பேச்சு இது வெண்ண, சைட் அடிக்கிறதுன்னு எல்லாம்? குழந்தை சைட் அடிக்கிறதுன்னா என்னன்னு கேட்டா என்ன சொல்வ வரு நீ? குழந்தைங்க அவங்களா எல்லாம் கத்துக்கட்டும், நீங்க எதுவும் சொல்லித் தர வேண்டாம், அவங்க முன்னாடி இப்படியெல்லாம் இனி பேசக்கூடாது” என்றான்.

‘என்னையும் சேர்த்துதான் இவன் திட்டுறான்’ என்று மலருக்குப் புரிய, மலருக்குப் புரிந்தது ஜனாவுக்கும் புரிய, ஜனா நமட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்திருந்தவன் அம்மாவைப் பார்த்து,

“அம்மா, எனக்கு இட்லி சாப்பிட முடியல, இரண்டு தோசை வேணும்” என்று கேட்க, சௌந்தர்யா சாப்பாட்டில் இருந்து எழுந்தார்.

“அத்தை தோசை தானே நானே செய்றேன், நீங்க சாப்பிடுங்க” என்றதும், ஜனா உடனே ஒரு அதிர்ச்சிபாவம் காட்டியவன் நொடியில் அதனை மாற்றி பாவமாக ஒரு லுக் விட, அதற்குள் மலர் கிச்சனுக்குள் சென்றுவிட்டாள்.

“என்னடா ஷாக் ஆகுற நீ?” என்று ஜனாவிடம் பிரசன்னா கேட்க,

“டேய் மச்சான் அவ தோசை சுட்டா, தோசையே அழுவும்டா, கண்றாவியா செய்வா டா, சாப்பிடுற ஆசையே போய்டும்” என்று புலம்பினான்.

“ஹாஹா, இப்ப உன்னால அதையும் சொல்ல முடியாது, சொன்னா மாட்டிப்ப, தோசையா மவனே கேட்ட, எஞ்சாய் மை ப்ரண்ட்” என்று பிரசன்னா புன்னகையுடன் சொன்னவன் உண்டுவிட்டு எழ, ஜனாவிற்கு அவர்களின் உளதான திருமண வாழ்வின் நினைவுகள் உள்ளத்தில் எழுந்தன.

✅ End of Episode 11
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 4 days ago

Nice 

Mrs Beena loganathan Reader 4 days ago

சொல்லி தந்த பாசம் சொல்லாமல் ஒட்டிக் கொண்டது நேசம் பாட்டியிடம்....


பட்டர் 😂😂😂😂 

பிள்ளைகள் நாம்
பேசுவதை கவனிக்க 
பார்த்து பேசுங்க 
பிரசன்னா கண்டிப்பு....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top