Episode 12

காதல் 12

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் இருக்கும், அன்று ஜனாவிற்குப் பயங்கர பசி. காலை முதல் சைட்டில் அவனுக்கு வேலை இருக்க, மதியம் உண்ணவில்லை. இரவு வீட்டுக்குப் போனவன்,

“மலர் பசிக்குதுடி” என்று சொல்லிக்கொண்டே நுழைய, மலர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். இவன் போய் எழுப்பவும்,

“என்ன ஜனா?” என்று கேட்க,

“பசிக்குது மலர், என்ன இருக்கு சாப்பிட?” என்றான்.

சுதந்திர மலருக்கு சமையல் சுத்தமாகத் தெரியாது, டீ காஃபி அவ்வளவே அவளின் சமையல் ஞானம். கல்லூரி முடிந்ததும் வேலை, அதன் பின் உடனே திருமணம். வீட்டிலும் அவள் அம்மா இல்லையென்றால் அவளின் அப்பத்தா சமையல் செய்துவிடுவார். ஆர்வமும் இல்லை அவசியமும் இல்லை என்பதால் அவள் சமையல் பழகாமல் போக, ஆரம்பத்தில் ஹோட்டலில் வாங்கி உண்டவர்கள், அதன்பின் அவள் கொஞ்சமாக ஏதோ செய்ய முயல, மலர் மிகவும் சொதப்ப, சமையலுக்கென்று ஆள் வைத்தனர்.

“சரசுக்கா எதாவது பண்ணியிருப்பாங்க” என்று அவள் தூக்கத்திலேயே உளற,

“ஹேய் அவங்க லீவ்ல போயிருக்காங்க டி” என்று அவன் கத்தவும் உடனே எழுந்தவள்,

“சாரி ஜனா மறந்துட்டு தூங்கிட்டேன்” என்று அவள் பரிதாபமாக முழித்தாள். என்னவோ இரண்டு நாட்களாக ஒரே சோர்வு அவளிடம்.

“சாப்பாடு கூட செய்ய மறந்துட்டு என்ன தூக்கம் உனக்கு? ச்ச எவ்வளவு பசியோடு வந்தேன்” என்றவன் மெத்தை அருகே இருந்த தண்ணீர் பாட்டிலின் தண்ணீரை மடமடவென குடித்தான்.

“ஆர்டர் பண்ணிக்கலாம் ஜனா” என்று சுதந்திரா போனை எடுக்க,

“ம்ம், நல்லா பண்ணு ஆர்டர், இன்னிக்கு ஹோட்டல்ஸ் எல்லாம் லீவ். பந்த் டி இன்னிக்கு” என்று எரிச்சலாக சொல்ல ரொம்ப பசிக்குது போல என்று நினைத்தவள்,

“அக்கா மாவு வச்சிட்டு போயிருக்காங்க, நான் தோசை சுட்டுத் தரேன்” என்று அவள் கிச்சனுக்குள் போனாள்.

கிச்சனுக்குள் போனவள் தோசையுடன் போராடினாள், பத்து நிமிடம் கழித்து பாதி வெந்து, கிழிந்து என்று ஒரு தோசையுடன் வந்தாள். ஜனார்த்தனுக்கு அன்று மிகுந்த டென்ஷன், கூடவே பசியும் சேர,

“என்ன மலர் இது? கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு? உனக்குத்தான் சமைக்க வரல இல்ல, தூக்கம் வருதுன்னா முன்னாடியே எனக்கு மெசெஜ் போட்டிருக்கலாம்ல” என்று கத்திவிட்டான்.

“நான் வேணும்னா உப்புமா செய்யவா?”

“எம்மா தாயே! உங்கிட்ட சாப்பாடு கேட்டது என்னோட தப்புமா, மணி பத்து இனிமே எப்போ நீ சமைச்சு நம்ம சாப்பிடுறது” என்று எரிச்சலாக சொல்ல, அப்போது பார்த்து பிரசன்னா போன் செய்ய, அவன் இவனின் எரிச்சலானக் குரலில் என்னவென்று கேட்க, இவன் சாப்பிடவில்லை என்றதும் சரி என்று சொல்லி வைத்தவன், அடுத்த பத்தாவது நிமிடம் ஜனார்த்தன் வீட்டிற்கு வந்தான்.

ஜனாவின் வீட்டில் அவனைத் திருமணம் முடிந்து ஏற்கவில்லை என்பதால், அவனின் நண்பனின் அபார்ட்மெண்ட் ஒன்றில்தான் வாடகைக்கு இருந்தான்.

“டேய் மச்சான், கீழ நான் வெயிட் பண்றேன், சீக்கிரம் வா” என்று கூப்பிடவும், மலரிடம் சொல்லலாம் என்று உள்ளே போக, அவள் உப்புமா செய்யும் வேலையில் இருந்தாள்.

“திருந்த மாட்டியா டி நீ?” என்று திட்டியவன்,

“பிரசன்னா என்னைக் கீழ கூப்பிடுறான், பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி கீழே போனவனை பிரசன்னா அவனின் தாத்தாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பிரசன்னா ஜனா சாப்பிடவில்லை என்று அறிந்ததும் உடனே வேலண்ணாவிடம் சொல்லி சீக்கிரம் சமைக்க சொல்லியிருக்க, ஜனாவும் இருந்த பசியில் சுதந்திராவிடம் சொல்லவேண்டும் என்பதையே மறந்து போனான்.

உண்டு முடிக்கவும்தான் மனைவியின் நினைவு வர, சுதந்திர மலருக்கு அழைக்க அவள் எடுக்கவே இல்லை. பின் அவளாகவே அழைக்க, அவளிடம்,

“பிரசன்னாவோட தாத்தா வீட்டுக்கு வந்தேன், இங்க வேலண்ணா சமைச்சார், நான் சாப்பிட்டுட்டேன், உனக்கு என்ன வேணும் இட்லி தோசை இரண்டும் இருக்கு?” என்று கேட்டான். பிரசன்னாவின் பெயரை சொன்னபின் மலர் வாங்குவாளா என்ன? அதைவிட போகும் முன்னே என்னிடம் சொல்லிவிட்டு போகத் தோன்றவில்லை இவனுக்கு. பிரசன்னாவை பார்த்தால் நான் இவன் கண்ணுக்குத் தெரிய மாட்டேன் என்று நினைத்தவள்,

“உன் ப்ரண்ட் உன்னைத் தானே சாப்பிட அழைச்சிட்டுப் போனான், உனக்குப் பசி போற வரை சாப்பிட்டு வீட்டுக்கு வா, எனக்கு நான் சமைச்சுக்கிறேன்” என்று திட்டி போனை வைத்துவிட்டாள்.

“என்ன சொல்றா உன் ராங்கி?” என்று பிரசன்னா கேட்க,

“நீ என்ன எதிர்ப்பார்த்தியோ அதான் அவள் பதில்” என்றான்.

“வேற என்ன சொல்லுவா அவ? இந்த திமிர்ப்பிடிச்சவதான் உனக்கு வேணும்னு சார் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்று பிரசன்னா கோபமாகப் பேச,

“டேய் விடுடா, அவ எப்படியிருந்தாலும் எனக்கு அவதான் முக்கியம், உனக்கு சொன்னா புரியாது” என்றவனை முறைத்த பிரசன்னா,

“சமைக்கவும் வராது, உன்னையும் சரியா கவனிக்கறதில்ல, வேலையை விட சொன்னாலும் கேட்கல, ஒரு ஐடியா சொல்லவா?” என்று ஆரம்பித்தான்.

“என்ன ஐடியா?”

“பேசாம அவளை டைவோர்ஸ் பண்ணிடு, நானே உனக்கு ஏத்த மாதிரி நல்லா பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றான். கேட்டவனுக்கு நியாயமாகக் கோபம்தான் வர வேண்டும், ஆனால் பிரசன்னா இதை முன்பு சொல்லும்போது அவனுக்குப் புரியவைக்க ஜனா நிறைய பேசியிருக்க, அவன் இதையே சொல்லவும் அலுத்துப்போனவன் இப்போதெல்லாம் விளையாட்டாக,

“அதுக்கென்ன மச்சான், நீ பாரு, என்ன என் பொண்டாட்டி உன்னையும் என்னையும் சேர்த்துக் கொன்னுடுவா, தட்ஸ் இட்” என்று சிரித்தான்.

பிரசன்னாவிற்கும் சிரிப்பு வந்துவிட,
“நல்லா சமாளிக்கிறடா” என்றான்.

“டைம் ஆச்சு, அவ தனியா இருப்பா” என்று சொல்லி ஜனா வீட்டிற்கு வந்து பார்க்கையில் மலர் நல்ல உறக்கத்தில் இருந்தாள். எதையாவது சாப்பிட்டிருக்காளா என்று பார்க்க, கிச்சனில் உப்புமா செய்ய ஆரம்பித்து இருந்தவள் அப்படியே அதை நிறுத்தியிருக்க, டைனிங் டேபிளில் பார்த்தால் ஆப்பிள் பழம் ஒன்றின் மிச்சங்கள் மட்டும் கிடந்தது.

“பழம் மட்டும் சாப்பிட்டிருக்கா போல” என்று நினைத்தவன் உறங்கும் அவளுக்கு ஒரு முத்தம் வைத்தவன், ‘பசியில ரொம்ப கத்திட்டேன், ஐ அம் சாரி’ என்று சொன்னவனின் வார்த்தைகள் அவளை சேரவில்லை. உறக்கத்தில் அவளுக்கு என்ன கேட்கும்?

இப்படி சின்ன சின்ன சண்டைகள் அவர்களுக்குள் அதிகம்தான், ஆனால் சிதறிப்போகும் அளவு என்ன செய்தேன் நான் என்ற எண்ணம் இப்போதும் ஜனாவை வேதனைப்படுத்தியது.

அதையெல்லாம் விட அப்போது அப்படியான தோசை செய்தவள், இப்போது எப்படி செய்வாள் என்று பயத்துடன், போடும் நாடகத்தை உடைக்காமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தான். மலர் ஐந்தே நிமிடத்தில் முறுகலான தோசைகளை இரண்டினைக் கொண்டு வந்து வைக்க, ஜனார்த்தனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அவன் கேட்க வேண்டிய கேள்வியை வர்ணவியே கேட்டாள்.

“எப்படி சமைக்க கத்துகிட்ட?”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று அவள் கண்ணடிக்க, ஜனார்த்தனுக்கு அதைப் பார்க்க பார்க்க, அவள் மீதான ஆவலும் காதலும் மீகியது.

“அப்போ எனக்கும் தோசை வேணும்” என்று வர்ணவி கேட்க, மலர் உடனே அவளுக்கும் தோசை சுட போக, சௌந்தர்யாவும் ஜகனும் மகளை முறைத்தனர்.

“என்னப்பா, ம்மா என்ன?”

“அவ இன்னும் சாப்பிடல, நீ நல்லா இட்லி சாப்பிட்டு அவளை வேலை வாங்குறியா? ” என்று கேட்கவும்,

“நான் என்னோட ப்ரண்ட் கிட்ட கேட்டேன் அம்மா. உன் மருமக கிட்ட இல்லை சரியா?” என்று வர்ணவியும் பதில் பேசினாள். அதற்குள் மலர் ஒரு தோசை எடுத்துவர,

“நீ உட்கார்ந்து சாப்பிடும்மா” என்று ஜகன் சொல்ல,

“வரு உனக்கு இன்னும் வேணுமா, சுட்டுத் தரவா?” என்று கேட்டாள்.

“வேண்டாம் டி சும்மா டேஸ்ட் செய்யத்தான் கேட்டேன், இவனோடதை வாங்கியிருப்பேன். நீ உன் ஜனாவுக்காக ஸ்பெஷலா சுட்டுக் கொடுத்திருப்ப, அதை ஏன் வாங்கணும்னுதான் வேற கேட்டேன். அதுக்கே ஓவர்டோஸா இருக்கு” என்று வர்ணவி புலம்ப,

“என்ன ஆச்சு?” என்று மலர் முழிக்க,

“ஒன்னுமில்ல மலர், நீ சாப்பிடு” என்றார் சௌந்தர்யா.

எல்லாரும் ஒருவழியாக உணவு முடித்து அவரவர் அறைக்குச் செல்ல, அமிழ்தாவை ஜனா தன் நெஞ்சில் இருந்து இறக்கிவிடவில்லை. அமிழ்தாவும் அப்பாவின் நெஞ்சிலேயே படுத்துறங்க, அதைப் பார்த்த சுதந்திரா,

“கையை எடு ஜனா, அவளைத் தனியா படுக்க வைக்கிறேன்” என்று சொல்லி குழந்தையை ஓரமாகப் படுக்க வைத்தாள். ஜனா தன் வலக்கையை பிடித்தவாறு முகம் சுழிக்க,

“என்னாச்சு வலிக்குதா?”

“ம்ம்” என்றவனுக்குப் பேசவே முடியவில்லை.

அமிழ்தாவை நெஞ்சில் போட்டு வலக்கையால் தட்டிக்கொடுத்து விடாமல் பிடித்திருக்க, அங்கிருந்த காயம் வலியைத் தந்தது. கட்டு இப்போது பிரிக்கப்பட்டிருக்க, அங்கு மருந்து தடவியவள்

“அதான் வலிக்குதுல்ல, அப்புறம் என்னத்துக்கு அவளை மேல போட்டு தாலாட்டனும்” என்று மலர் திட்டியவள் அவனருகே வந்து படுத்தாள்.

“வலிச்சாலும் என்ன செய்றது, நீதான் என் பொண்ணை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்ட” என்ற வார்த்தைகள் சாதாரணமாக அவனறியாமல் வர, கேட்ட மலருக்கு குத்தியது.

இவன் எல்லாம் மறந்தே என்னை இப்படி பேசுகிறானே இன்னும் நினைவு வந்தால் என்னை என்ன பேசுவான் என்ற கலக்கம் எழ, முகம் அப்படியே அதனைப் பிரதிபலிக்க, ஜனாவிற்கு எப்போதும் அவளைக் காயப்படுத்தும் நோக்கம் இருந்ததே இல்லை. இப்படி சாதாரணமாகப் பேசப்போய் அது எல்லாம் சண்டைகளில் முடிந்துவிடும். இன்றும் அப்படியே ஆக, அவள் பக்கமாகத் திரும்பினான் ஜனா.

“என்ன சொன்னேன் இப்போ? உனக்கு வேலை யூஎஸ் போயிட்ட அதனால தானே அமிழ்து என்னை மறந்தா. விடு மலர்” என்று சொல்ல, மலர் தலையசைத்து கண்மூடினாள்.

மலரின் மூக்கோடு உரசியவன்,
“என்னை வெண்ண சொன்னதுக்கு என் பொண்ணு உன்னை எப்படி மாட்டிவிட்டா பார்த்தியா?” என்று ஜனா பேச்சை வளர்க்க, மலர் அமைதியாக இருந்தாள்.

“இனிமே என்னைப் பேசினா அவ்வளவுதான் டி, சிக்கிடுவ” என்றதும் சிலிர்த்தவள்,

“என்ன சிக்குவாங்க? ஹலோ மிஸ்டர்.ஜனார்த்தன் எனக்கு உங்க பொண்ணு, அம்மான்னு யாரைப் பார்த்தும் பயமில்லை. வெண்ண என்ன விளக்கெண்ணன்னு கூட சொல்லுவேன், என் வாயில என்ன வருதோ எல்லாம் சொல்லுவேன்” என்று கெத்தாகச் சொன்னாள்.

அவளை இடக்கையினால் அணைத்தவன்,
“என்ன வேணுமோ சொல்லிக்கோ, ஆனா யாரும் இல்லாதப்போ சொல்லு டி ராங்கி, இல்லன்னா குடும்பமா சேர்ந்து க்ளாஸ் எடுப்பாங்க” என அவன் விளையாட்டாகச் சொல்ல மலர் புன்னகைத்தாள்.

“ஜனா, உனக்கு ஹெல்த் பரவாயில்லைதானே? நாளையில இருந்து நான் ஆபிஸ் போகவா? கிருஷ்ணா கல்யாணம் வேற வருது, அப்போ லீவ் கிடைக்காது” என்று அனுமதி கேட்க,

“அதுக்கென்ன மலர், ஐ அம் ஃபைன், நீ போய்ட்டு வா” என்று சொல்ல, அவள் அவனிடமிருந்து கொஞ்சம் விலகி படுத்தாள். ஜனா அப்படியே எல்லாம் விடவில்லை. அவளை நெருங்கியவன் கன்னங்களில் முத்தமிட, சுதந்திராவுக்கு ஒரு நொடி அதிர்வு.

உள்ளமெல்லாம் சொல்லவொண்ணா போராட்டம், தயக்கம். விலகிடு என்று ஒரு மனம், விடாதே என்று ஒரு மனம். தடுமாற்றம்! தடுக்கவே முடியா தடுமாற்றம் தத்தையிடம்!

மலருக்குத்தான் யோசனை எல்லாம், ஜனாவோ கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்தான். கன்னத்தில் தொடங்கியவன் முகமெல்லாம் விடாமல் முத்தமிட, எண்ணற்ற பல முத்தங்கள் பதித்துவிட்டான்.

தாங்கவே முடியாத தடுமாற்றம் அகத்தினை ஆட்டுவிக்க, அகத்திணைக்கெல்லாம் வாய்ப்பின்றி போக, சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் சுதந்திர மலர்.
ஜனார்த்தனோ,

“என்ன மலர்?” என்று அவனும் எழ,

“வாஷ்ரூம் போகணும் ஜனா” என்று சொல்லி பாத்ரூமினுள் புகுந்து கொண்டாள். உள்ளே போனவளுக்கு அழுகையாய் வந்தது. என்ன மாறிவிட்டது என்று அவனுக்காக ஏங்குகிறாய்? அவன் மறந்தாலும் அவன் பேசிய பேச்சுகள் உனக்கு மறக்குமா? என்று மனம் சண்டையிட, இன்னொரு மனமோ ஜனா வேண்டும் என்றிட பெரிய போராட்டம்.

இப்படி யோசனையில் அவள் இருபது நிமிடம் பாத்ரூமினுளே இருக்க, பதறிப்போனான் ஜனா.

“மலர், என்னாச்சு?” என்று எழுந்தவன் பாத்ரூம் வெளியே இருந்து குரல் கொடுக்க,

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவனுடன்தான் உன் வாழ்வு என்று மனம் சொல்ல, பிடிக்கவில்லை என்ற பேச்சே கிடையாது.

பிடித்தம்தான், ரொம்பவும் பிடித்தம்தான்! அது யாருக்கும் தெரியவில்லையென்றாலும் அவளகம் அறியுமே! அவன் காதல் சொல்கையில் நிச்சயம் அவளிடம் காதல் இல்லை, நட்பு மட்டுமே.

ஆனால் திருமணம் என்ற பந்தம் அது தந்த பிணைப்பில் அவன் மீதான பிடித்தம் அவளைப் பைத்தியம் ஆக்கவில்லை, அவ்வளவுதான்! அப்படியொரு காதல் அவன் மீது, அதுவும் அவனைப் பிரிந்த பின் இன்னும் அந்த காதல் கூடித்தான் போனது. அவன் நிறைய பேசினான்தான், மறக்கவோ நினைக்கவோ முடியா பேச்சுகள்!

ஜனாவோ பயந்து போனவன், “மலர், என்ன ஆச்சும்மா? கதவைத் திறடி, எவ்வளவு நேரம்?” என்று குரல் கொடுக்க, சுதந்திராவும் கதவைத் திறந்தாள். அவளைக் கண்டதும்தான் ஜனாவுக்கு இயல்பாக மூச்சு விட முடிய, வந்தவளை அப்படியே அணைத்துக்கொண்டான்.

“ஜனா, என்ன? பத்து நிமிஷம் பாத்ரூம்ல இருந்ததுக்கு இவ்வளவு சீனா?” என்றவளை முறைத்தவன் இன்னும் இறுக்கமாக அணைத்தவன்,

“பத்து நிமிஷமா, அரை மணி நேரமாச்சுடி” என்றவன் அவளை விடாது இறுக்கினான்.

‘இரண்டு வருஷம் பிரிஞ்சு போனவளை கண்டுக்கவே இல்லை, முப்பது நிமிஷம் பாத்ரூம் போனதுக்கு இவன் பண்ற கலாட்டா இருக்கே’ என்று நினைத்தவள், எதையும் யோசிக்கவில்லை. ஆம், யோசித்தால் தானே பிரச்சனை என்று நினைத்தவள், என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்று விட்டாள்.

“நாளைக்கு ஆபிஸ் போகணும் ஜனா, விடும்மா” என்று சொல்லியவள் வந்து படுத்துக்கொள்ள, ஜனாவும் அமைதியாக அவளிடம் இருந்து தள்ளி படுத்துக்கொண்டான். தான் நெருங்கியதால் அவள் விலகுகிறாள் என்று புரிந்தவன், அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தான். குழந்தை இருக்கும்போது அவன் மனத்தில் வேறு எண்ணங்களுமில்லை.

ஜனா அமைதியாகப் படுக்க, மலருக்கு இப்போது அவனை கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழ, அவனை பின்னிருந்து அணைத்து முதுகில் முகம் பதித்து உறங்கினாள்.

“ராங்கி” என்று செல்லமாய் அழைத்தவன்,

“அமிழ்தா இருக்கா டி” என்று கிசுகிசுத்தான்.

“டேய் வெண்ண, அது எனக்குத் தெரியும், ஜஸ்ட் கட்டிட்டுத்தான் தூங்குப்போறேன். முத்தம் கொடுக்கிறப்போ எங்கடா போச்சு இந்த அறிவு?” என்று அவனைப்போலவே கிசுகிசுப்பாய்த் திட்ட,

“நாலு முத்தம் மட்டும் கொடுத்து விட்டுட்டேன்னு கோபமா பேபி?” என்றவனின் கையைக் கிள்ளினாள்.

“அப்போ எண்ணிட்டே கொடுத்தியா டா விளக்கெண்ண?” என்று அவள் கடுப்பில் திட்ட,

“ச்ச, ச்ச, நிறையக் கொடுத்திருப்பேன், சும்மா பேச்சுக்கு சொன்னேன் மலர், இன்னும் வேணுமா” என்று அவனும் ஹஸ்கி வாய்ஸீல் பேச,

இரவின் நிசப்தத்தில் அவனின் குரல் மயக்கம் தந்தது. முயன்று மனதை அடக்கினாள்.

“ஒழுங்கா தூங்குடா, எனக்கு நாளைக்கு சீக்கிரம் ஆபிஸ் போகணும்” என்றவளிடம்,

“இப்படி பிடிச்சா எப்படி தூங்குறது?” என்று கிசுகிசுப்பாய்க் கேட்டான்.

“அப்போ தூங்காத, நாளைக்கு நான் போன பின்னாடி தூங்கிக்கோ” என்று யோசனை சொன்னவள் அதற்கு மேல் பேசாமல் அவனை நன்றாக அணைத்து அமைதியாக உறங்கிப்போனாள். இத்தனை வருட தனிமை எல்லாம் தீர, அவனுடன் ஒன்றி, ஒட்டிக்கொண்டு இருப்பதே அவ்வளவு நிம்மதியான உறக்கம்.

ஆனால் ஜனாவின் உறக்கம் தொலைந்தது. அதுவும் மலர் தோசை எல்லாம் அருமையாய் செய்து கொடுத்திருக்க, தனக்காகவே மெனக்கெட்டு கற்றிருக்கிறாள் என்றுதான் தோன்றியது. அதைவிட அணைத்தபோது விலகியவள் தானாக மீண்டும் அணைக்க, என்னவோ அவள் மனத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

என்ன செய்தேன் நான் என்ற எண்ணம் போய் என்னமோ செய்து இருக்கிறேன், அதான் என்னை விட்டுப் போயிருக்கிறாள் என்ற எண்ணம் கவலைத் தந்தது.

அடுத்த நாள் காலையில் ஜனா மகளுடன் கீழே இருக்க, பேத்தியை வைத்திருந்த மகனைப் பார்த்த ஜகன்,

“டேய் அந்த வேளச்சேரி ப்ளாட்ஸ்க்கு பெர்மிஷன் வாங்குனியா?” என்று கேட்டார். அவருக்குதான் அவனுக்கு அம்னீசியா இல்லை என்று தெரியுமே, அதனால் வேலை விஷயமாகக் கேட்டார்.

அவருக்குத் தெரியும் என்று தெரியாத ஜனாவோ “அப்பா, எனக்கு எதுவும் ஞாபகமில்லை, பிரசன்னாவைக் கேளுங்க” என்று வர்ணவியைப் பார்த்தபடி சொன்னான்.

“டேய் நடிக்காம சொல்லுடா, எனக்கு அங்க வேலை இருக்கு, நீ பெர்மிஷன் வாங்கலன்னா நான் வாங்க அப்ளை செய்யணும்” என்றார் ஜகன். மகனுக்கு வேட்டு வைக்கிறோம் என்று தெரியாது அவர் பேச, சௌந்தர்யா இருந்திருந்தாலோ பிரசன்னாவோ காப்பாற்றியிருப்பார்கள்.

“கேட்டுட்டே இருக்கேன் சொல்லாம இருக்க” என்று ஜகன் கேட்டார்.

ஜனாவிற்கு டென்ஷன் ஏறியது. வர்ணவியோ,

“அப்பா அவனுக்கு அம்னீசியான்னு நீங்க மறந்துட்டீங்க” என்றாள்.

ஜகனோ,
“நீ சும்மா இரு வரு, டேய் என்னடா பேசாம பார்க்கிற?” என்று திட்ட, மாடியில் இருந்து இவனைப் பார்த்தபடி மலர் கோபமாக இறங்கிக்கொண்டிருந்தாள். அவள் கோபமுகம் எல்லாம் கேட்டுவிட்டாள் என்று உணர்த்த, தலையைத் தேய்த்தபடி அப்பாவை முறைத்துக்கொண்டிருந்தான் ஜனா.

✅ End of Episode 12
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 4 days ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 days ago

உள்ளுக்குள் வலி இருக்க

உறவுக்குள் ஒளி நிறைக்க 
உணர்வுக்கு வழி வகுக்க
உண்மை வெளி வந்திருக்க
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top