Episode 14
ஜனா உள்ளுக்குள் உண்மையை சொல்வோமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்க, மலரே பேசினாள்.
“இப்பவும் உன் ப்ரண்டை நீ விட்டுக்கொடுக்க மாட்ட இல்ல ஜனா. எப்படியெல்லாம் பேசினான் அவன், உன்னை மயக்கிறேன், உன் சொத்துக்கு ஆசைப்படுறேன்னு” என்று சொல்லும்போதே வார்த்தைகள் வலி தர, விழிகள் கண்ணீர் பொழிய மலரிடம் கவனம் திருப்பினான் கணவன்.
“நீ கூட பேசின தானே? உன் அப்பத்தா எல்லாரும் என்னைப் பேசிட்டீங்க” என்றவள் நெஞ்சில் சுமந்த பாரம் தாங்காது அழ, கதவை தாழிட்டு வந்த ஜனா மலரை அணைத்துக்கொண்டான். மலர் விடாமல் அழ,
“இங்க பார் மலர், அவன் என்னவோ சொல்லிட்டுப் போறான் விடு. நமக்கு இப்போ கல்யாணமாகி குழந்தை இருக்கு, இன்னும் ஏன் அதையே நினைக்கிற” என்ற ஜனாவின் கேள்விக்கு,
“இன்னும் வலிக்குது ஜனா” என்றாள் சுதந்திர மலர் அழுகையுடன்.
இத்தனை வருட தனிமைத் தருணங்கள் இதையெல்லாம் மறக்கவிடாமல் செய்திருக்க, இன்றையை உணர்ச்சிப்பெருக்கினில் எல்லாம் சொல்லி அவள் அழ இந்த சூழ்னிலையில் தானும் நடிக்கிறேன் என்று உண்மையை சொன்னால் இன்னும் விலகிப்போவாள். விட்டுப்போக மாட்டாள் என்ற நிச்சயம் ஒருபுறம் இருந்தாலும் விலகல் என்பது கண்டிப்பாய் உண்டு என்பது புரிய, அதனை விழையவில்லை ஜனாவின் அகம்.
பொய்மை அழகுதான் நன்மை பயக்குமெனில்! அப்படிதான் இருக்கும் இணக்கம் இக்கணம் கெட விரும்பவில்லை ஜனா. தானாய் சிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டான்.
மலரின் உணர்வுகள் புரிய,
“மலர் அப்படியே மயக்குனா என்ன தப்பு? நம்ம இரண்டு பேரும் கணவன் மனைவி. மயங்கி மயக்குறதெல்லாம் தப்பே இல்ல, ரூமி மூணு விஷயம் சொல்லி இருக்கார் என்ன தெரியுமா?” என்றான் கண்களில் காதலுடன்.
“க்ளோஸ் யூர் ஐஸ்…” என்று ஜனா ஆரம்பிக்க,
“ஃபால் இன் லவ்” என்று மலரின் வார்த்தைகள் காதலில் மூழ்கி வந்ததன.
“ஸ்டே தெர்” என்ற ஜனாவின் இதழ்கள் சுதந்திராவின் கன்னத்தில் முத்தங்கள் பதிக்க, ஜனாவின் தோள் சாய்ந்தாள் மலர்.
“இங்க பார் மலர், நம்ம காதல் நமக்குப் புரிஞ்சா போதும். அவங்க அவங்களுக்கு எது காதல்னு அவங்கதான் முடிவு செய்யணும்” என்று ஜனா அழுத்தமாக சொல்லி மலரை அணைக்க,
“மத்தவங்க சொன்னா பரவாயில்லை, நீ கூட சொன்ன” என்ற மலரின் வார்த்தைகள் உள்ளத்தினை உரசியது. ஜனா,
“நான் என்ன சொன்னேன்?” என்று கேட்கையில்தான் மலருக்கு அவனின் இன்றைய நிலை நினைவில் வர,
“ஒன்னுமில்ல” என்றாள்.
“நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லி அருகே படுத்தவனின் அகமெங்கிலும் அவளின் வார்த்தைகளே!
மலர் உறங்கிப்போக, ஜனாவிற்கு உறங்கத் தோன்றவில்லை. மயக்கி மயங்கி மையல் கொண்டது எல்லாம் அவனின் செயலே! அதில் மலர் எங்குமில்லை, அவனின் முடிவுகளை ஏற்றவள் மட்டுமே அவள்.
மையலாய்த் தொடங்கி காதலாய் மாறிய உறவில் விதையிட்டு, உரமிட்டு, உறுதியுடன் நின்றவன் அவன்தான். உறக்கத்தில் மென்மையாய் இருந்த மலரின் முகத்தைப் பார்த்தவனின் அகம் அவர்களின் நிலாக் கால நினைவுகளை ஆவலாய் காதலாய் அசைப்போடத் தொடங்கியது.
சுதந்திராவைப் பார்க்கும் முன்னே அவளைப் பற்றி நிறைய நிறைய அறிந்து வைத்திருந்தான் ஜனார்த்தன். வர்ணவி எப்போதும் வீட்டில் அவள் தோழியைப் பற்றியே பேச, ஜனாவுக்கும் சுதந்திராவின் மீது அவனறியா ஒரு பற்றுதல் பற்றிக்கொண்டதுதான்.
சில வருடங்களுக்கு முன்..
சுதந்திராவும் வர்ணவியும் கல்லூரியில் படித்த காலமது. ஜனா படித்து முடித்துவிட்டு அவர்கள் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தான். பிரசன்னா எம்.எஸ் படிக்க வெளிநாடு சென்றிருந்தான். ஒரு வார இறுதியில் வர்ணவி சுதந்திராவிடம்,
“அப்படி என்ன இருக்கு அந்த லைப்ரரில, நானும் வந்து படிப்பாளி ஆகப்போறேன். வீட்ல போர் அடிக்குது” என்று சொல்ல சுதந்திரா தோழிக்காக நூலகத்தின் வரவேற்பு பகுதியில் நின்றிருக்க, வர்ணவியைக் கண்டதும் மலர்,
“ஹே! வந்துட்டியா? எவ்வளவு நேரம் டி வரு, கொஞ்சம் சீக்கிரம் வரமாட்ட நீ?” என்று கேட்க ,
“இல்லடி என் அண்ணன் ரெடியாக லேட் பண்ணிட்டான்” என்றாள் வர்ணவி.
“வாவ்! அங்கே பார்” என்று மலர் காட்டிய திசையில் வர்ணவியின் பார்வை போக ஜனா காரைப் பார்க் செய்துகொண்டிருந்தான்.
“என்னடி?” என்று யோசனையாக வர்ணவி கேட்க,
“நான் அன்னிக்கு சொன்னேனே என் க்ரஷ், அவர்தான்! என்ன சார்ம் இல்ல, அதுவும் தலைவன் புக் படிக்கும்போது அந்த கண்ணைப் பார்க்கனுமே விழுந்துட்டேன்” என்றாள் மலர் விளையாட்டாக. வர்ணவியோ,
“ரொம்ப புகழ்றியே, சரி வா உன்னோட க்ரஷுக்கு ஒரு ஹாய் சொல்லிடுவோம்” என்றதும் வேற்றுக்கிரகவாசியைப் போல் தோழியைக் கண்ட சுதந்திரா,
“ஏன் டி பரம்பரைப் பைத்தியம் மாதிரி பேசுற? அவன் யாரோ என்னவோ? ஜஸ்ட் பார்த்தேன், சொன்னேன். உடனே போய் பேசுவியா லூசே” என்று திட்டினாள்.
“ஓஹ் பேசிட்டா என்ன பண்ணுவ?” என்று துடுக்காய்ப் பேசினாள் வர்ணவி.
அவர்கள் கல்லூரி சேர்ந்து ஒருவருடமே முடிந்திருக்க வர்ணவியின் குடும்பம் பற்றி ஓரளவு சுதந்திராவிடம் சொல்லி இருந்தாலும் யாரையும் பார்த்ததில்லை. அவர்கள் கல்லூரி மிகவும் கண்டிப்பு என்பதினால் புகைப்படங்கள் கொண்டு வர அவர்களுக்குப் பயம். மலருக்கென்று தனியே செல்பேசியும் கிடையாது, அம்மாவின் கைப்பேசிதான் உபயோகம் செய்வாள். அதிலும் சாரதா மிகவும் கண்டிப்பு என்பதால் அவள் இந்த மெசெஜ், சேட் எல்லாம் செய்ய மாட்டாள்.
வர்ணவி இப்படி பேசினாலும் கண்டிப்பாக அவள் அப்படியெல்லாம் தானாக, தெரியாத ஒரு அன்னிய ஆடவனிடம் பேச மாட்டாள் என்பதுதான் மலரின் எண்ணமாக இருந்தது.
“வரு, நீ பொண்ணுங்க கிட்டயே புதுசா பேச மாட்டா, இதுல அவர் கிட்ட பேச போறியா?”
“என்னடி கலாய்க்கிறியா? பெட் வைக்கலாமா?” என்று வர்ணவி துணிவாகப் பேச,
“வச்சுக்கலாமே?” என்றதும்,
“அப்போ என்னோட அசைமெண்ட் டாபிக் நீதான் நோட்ஸ் ரெடி பண்ணித் தரனும்” என்றாள்.
“பார்க்கலாம் பார்க்கலாம்” என்றாள் சுதந்திரா. வர்ணவியோ உள்ளுக்குள் பொங்கிய உவகையினை அடக்க முடியாமல் அடக்கி அண்ணனிடம் போனவள் சுருக்கமாக எல்லாம் சொல்லி அழைத்துவந்தாள்.
ஜனா ஒரு ஜாலிபேர்வழி. வர்ணவி சொன்னதும் அவனுக்குமே வெகு நாளாய் மலரைப் பார்க்கும் ஆவல் இருக்க, அவளருகே போனவன்,
“ஹாய் மேடம்! என்ன என்னையே பார்க்குறீங்க?” என்று பேசவும் மலருக்கு வார்த்தையே இல்லை. வர்ணவியைக் கலவரமாக என்ன சொன்னாளோ என்று பார்த்தாள்.
மலர் ஜாலியான பெண் என்றாலும் கூட உற்றார் உறவினர் தவிர வேறு ஆண்களுடன் எல்லாம் அவ்வளவாகப் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டாள். ஜனா வந்து பேசவும் படபடப்பாக இருக்க, அவளின் மன நிலையைச் சரியே கணித்த ஜனா,
“சுதந்திரா! நீ டென்ஷன் ஆக வேண்டாம், இதோ இந்த லூசு இருக்கே என்னோட தங்கச்சி, சும்மா உன்னைப் ப்ராங்க் பண்ண சொன்னா” என்றதும் ஒரு மனம் ஆசுவாசமடைய மறுமனமோ அவஸ்தையாய் உணர்ந்தது. வர்ணவியிடம் அவள் அண்ணனைப் பற்றியல்லவா இத்தனை நாட்களாக வர்ணித்துள்ளாள். சங்கடத்துடன் ஜனாவைப் பார்த்தவள்,
“ஹாய் அண்ண்” என்று துவங்க,
“நோ நோ சுதந்திர மலர், ஜஸ்ட் ஜனா வில் டூ, நமக்கு ஒரே சிஸ்டர்தான்” என்று ஜனா குறும்புடன் சிரிக்க, மலரும் பெயருக்கு சிரித்துவைத்தாள். இன்னும் அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்த ஜனார்த்தன்,
“ஓகே நீங்க உங்க வேலையைப் பாருங்க, என்னோட புக்ஸ் உனக்கு எதாவது வேணும்னா இவ கிட்ட சொல்லிவிடு, இல்லன்னா என் நம்பர் தரேன் ஜஸ்ட் மெசெஜ் மீ, அண்ட் தேங்க்ஸ் ஃபார் தி புக்மார்க்” என்று அவன் புன்னகையுடன் நூலகத்தினுள் சென்றுவிட வர்ணவியை முறைத்தாள் மலர்.
ஒரு முறை அண்ணனைக் கேட்காமல் அவனின் புத்தகம் ஒன்றை மலரிடம் வர்ணவி கொடுத்துவிட்டாள். அது தெரிந்து ஜனா சண்டையிட்டு அதை வாங்கித் தர சொல்ல, மலர் பாதி மட்டுமே படித்திருக்க வர்ணவி கேட்கவும் தந்துவிட்டாள். ஆனால் மலரின் வாடிய முகம் கண்டு அண்ணனிடம் வர்ணவி சண்டையிட, ஜனாவும் புத்தகத்தை மீண்டும் தர, மலர் அதனை மிகவும் லாவகமாய்க் கையாண்டு, தேங்க்ஸ் என்று எழுதிய ஒரு புக்மார்க்கை அதனுடன் வைத்துத் தந்திருந்தாள்.
“எப்பூடி?” என்று வர்ணவி சிரிக்க,
“மனுஷியா நீ பிசாசே, எப்படி பயந்துட்டேன் தெரியுமா?” என்று மலர் நெஞ்சைத் தடவினாள்.
“நான் போய் தைரியமா பேசுறேன் சொல்லும்போதே நீ யோசிக்க வேண்டாமா டி?”
“அதான் நானும் யோசிச்சேன், ஆனா உன் அண்ணாவா இருப்பார்னு நான் ஒரு பெர்செண்ட் கூட நினைக்கல, சும்மா நீ பேசாம வந்திருவ நினைச்சேன், ஆமா அவர்கிட்ட எல்லாம் சொல்லிட்டியா?” என்று மலர் கவலையான முகத்துடன் கேட்டாள்.
“ச்ச, ஒன்னும் சொல்லல, ஜஸ்ட் என் ப்ரண்ட் ஹாய் சொல்லு, அவளுக்கு நீ யார் தெரியாது ப்ராங்க் பண்ணலாம் அவ்வளவுதான் சொன்னேன்” என்றதும்தான் மலருக்கு நிம்மதி.
இருவரும் ஒவ்வொரு தளமாக சுற்றிப் பார்க்க, புத்தங்களைப் பற்றிப் பேசுகையில் அவ்வளவு ஆர்வமாய் மலர் பேச, அதைக் குறுகுறுவென வர்ணவிப் பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கிற?” என்று கேட்க,
“இல்ல, நீ ஒவ்வொரு புக்கா எடுத்து சொல்லும்போது என் கண்ணுக்கு நீ அப்படியே சந்திரமுகி ஜோதிகாவா தெரியறடி, ஒட்டியாணம், காசுமாலை, நெத்திச்சுட்டி, சலங்கைனு சொல்றப்ப ஜோதிகா கண்ணுல ஒரு வெளிச்சம் தெரியுமே அப்படி இருக்குடி உன் பார்வை” என்றவளின் பேச்சுக் கற்பனையாய் விரிய சத்தமில்லாமல் வர்ணவி குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
“போடி!” என்ற சுதந்திர மலருக்கும் சிரிப்பு வர தோழியைப்பிடித்துக் கொண்டு சிரிக்க, வர்ணவி மலரைப் பார்த்து,
“ஆனா ஒன்னு டி, எங்கண்ணா என்ன கேட்டாலும் தருவான், பக்கி அவன் புக்ஸ் மட்டும் தரவே மாட்டான். அவ்வளவு புக்ஸ் வச்சிருப்பான், என்னவோ உனக்குத் தரேன்னு சொல்றான்” என்றாள்.
“அதான் நானும் யோச்சிச்சேன், பேசாம உன் ப்ரண்ட்ஷிப் கட் பண்ணிட்டு உன் அண்ணா கூட ப்ரண்ட் ஆகிட்டா அவர் நிறைய புக் தருவார் இல்ல” என்றாள் சிரிப்போடு.
“கட் பண்ணுவ கட் பண்ணுவ” என்று வர்ணவி முறைக்க,
“சும்மா சொன்னேன் டார்லிங்” என்று வர்ணவியைக் கட்டிக்கொண்டு சமாதானம் செய்தாள் மலர். அடுத்து இரண்டு மணி நேரம் மலர் புத்தகங்கள் தேட, வர்ணவி அவளுடனே சுற்றினாள்.
ஜனாவாக வந்து வர்ணவியை அழைக்க தோழிகள் இருவரும் வெளியே வர, ஜனா மலரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து,
“வண்ணதாசன் எழுதினது சிறுகதைத் தொகுப்பு ரொம்ப நல்லா இருக்கும், படிச்சிட்டு சொல்லு சுதந்திரா” என்றான். வர்ணவி மலர் சொன்னதை சொல்லவும் சிரிப்புடன் நின்ற ஜனா,
“அதுக்கென்ன ப்ரண்ட்ஸ் ஆகிட்டா போச்சு, ப்ரண்ட்ஸ்” என்று ஜனா கை நீட்ட,
“ப்ரண்ட்ஸ்” என்றாள் மலரும். மலருடன் ஒரு நட்பு அத்தருணம் மலர, மலரும் நினைவுகளாய் அது அவன் நினைவில் நீங்காது நின்றது. ஜனாவும் வர்ணவியும் சென்றுவிட சுதந்திர மலர் அந்த புத்தகத்தைப் பார்த்தாள். ‘ஒரு சிறு இசை’ என்ற தலைப்பைத் தாய்மையுடன் அவள் விரல்கள் வருடின.
அங்கே காதல் ஒரு சிறு இசையில் தொடங்கியது.
✅ End of Episode 14
Very nice.
நாளும் ரசித்தவன்