Episode 8

வர்ணவியைப் பார்த்தவுடன் படக்கென்று தன் கையைக் கணவனிடம் இருந்து சுதந்திரா உருவிக்கொண்டு, அவளுடன் வந்த மகளைப் பார்த்தாள். அவள் பார்வையுணர்ந்த வர்ணவியும்,

“அம்மா இவளை சாப்பிட சொன்னாங்க, அம்மா கிட்ட போகணும்னு வந்துட்டா” என்றாள் செய்திவாசிப்பாளர் போல். தோழியென்ற உரிமைக் கொஞ்சமும் இல்லை, அண்ணியாக நினைக்கிறாளா என்றால் அதுவுமில்லை.

அதற்குள் அமிழ்தா, “மா காணும்” என்று சொல்லி அவளைக் கட்டிக்கொள்ள, மகளை அணைத்துத் தூக்கியவள்,

“அம்மா அப்பா கூடத்தான்டா இருக்கேன், நீ ஏன் அத்தை கூட இல்ல, ஏற்கெனவே பாரு உன் அத்தைக்கு முட்டைக்கண்ணு, இதுல இவ முறைக்கும்போது எனக்குப் பயமாயிருக்குல” என்று குழந்தையிடம் பேசுவது போல் வர்ணவியை சுதந்திரா கலாய்க்க, வர்ணவி அதற்கும் முறைத்தாள்.

இதைக் கேட்ட ஜனா உடனே,
“உங்க இரண்டு பேருக்கும் என்னடி சண்டை? ஏன் அவளை ஓட்டுற?” என மனைவியிடம் அப்பாவியாகக் கேட்டான்.

“சண்டையெல்லாம் ஒன்னுமில்ல, அப்படியே இருந்தாலும் சொல்ல மாட்டோம்” என்று சுதந்திரா சிரிக்க,

சௌந்தர்யா மகனின் அறைக்கு ஒரு தட்டில் பழங்களுடனும், பழச்சாறுடனும் வந்தார். பழச்சாற்றை மகனிடம் கொடுத்து குடிக்க சொன்னவர், சுதந்திராவிடம்,

“மலர், இவ என்ன சாப்பிடுவா எல்லாம் சொல்லிட்டா நான் கரெக்டா இவளுக்குக் கொடுத்துடுவேன், சாப்பிட சொன்னா அம்மா கிட்ட போகணும்னு வந்துட்டா” என்றார் குறையாய்.

“எல்லாம் சாப்பிடுவா அத்தை, காரம் மட்டும் ரொம்ப கொடுக்க மாட்டேன்” என்றாள் சுதந்திரா.

ஜனாவோ நின்றுகொண்டிருந்த வர்ணவியைப் பார்த்தவன்,
“ஏன் வரு சாத்வீ பெருசா வளர்ந்திருப்பா இல்ல, என்ன படிக்கிறா?” என்று கேட்டான், ஐந்து வருடம் முன் அவள் சின்னக்குழந்தைதானே?

மகனின் கேள்வியில் ’அடப்பாவி ஆஸ்கார் அவார்ட்டா கொடுக்கிறாங்க, இந்த ரேஞ்சுக்கு நடிக்கிறான்’ என்று பார்க்க, அவனோ யாரும் அறியாமல் அம்மாவை முறைத்தான். வர்ணவியோ அப்பாவியாக,

“அவ யூ.கே.ஜி படிக்கிறாண்ணா, ஸ்கூல் போயிருக்கா” என்றவள் அம்மாவைப் பார்த்து,

“மா நான் மாமாவுக்கு சாப்பாடு அனுப்பணும், கீழே போறேன்” என்றாள்.

“அமிழ்தாவுக்கு இந்த பழத்தை ஊட்டிவிடு மலர்” என்று சௌந்தர்யா சொல்ல, சுதந்திராவும் மகளை வெளியே அழைத்துச் சென்று ஊட்டினாள். மனைவி போனதும்

“ஏன்ம்மா என்னை அப்படி பார்த்த?” என்று ஜனா கடுப்பாகக் கேட்க,

“என் மகன் எவ்வளவு அருமையாய் நடிக்கிறான்னு பார்த்தேன் டா ஜனா” என்று அவர் ஒற்றைக்கையால் அவன் முகம் சுற்றி திருஷ்டி எடுக்க,

“மா, போம்மா எனக்கே கடுப்பா வருது” என்றான் கோபமாக.

“அடப்பாவி எங்கிட்ட ரொம்ப நடிக்காதடா, மலரைப் பார்க்கிறப்ப உன் மூஞ்சில வடியற தண்ணியை வச்சு சென்னை மொத்தமும் தண்ணி சப்ளை பண்ணலாம் போல, அப்படி இருக்கு” என்று நக்கல் செய்ய,

“மா, அவ மேல பாசம் இல்லன்னு எப்போ நான் சொன்னேன்? அதில்ல விஷயம், பாரு அமிழ்தா அவளை விட்டு இருக்க மாட்டேங்கிறா, நம்ம யார்கிட்டவும் வர மாட்றா, உங்களை விடு எங்கிட்ட கூட வரதில்ல, எப்பவும் அம்மா அம்மாதான், எல்லாம் அவ என் பொண்ணை எங்கிட்டு இருந்து பிரிச்சதால” என்று கோபத்தில் பேச,

“டேய் லூசு மாதிரி பேசாதடா, அவ செஞ்ச தப்பை மனசுல வச்சிட்டே இருந்தா இரண்டு பேருக்கும் கஷ்டம்தான், அமிழ்தா குழந்தைடா, நாலு நாள்தான் ஆகுது நம்மைப் பார்த்து, நம்ம சாத்வீ கூட உடனே எல்லார்கிட்டவும் பழகிடுவாளா என்ன? அவ பிரிஞ்சதால மட்டுமில்ல இப்போ நீயும் வருவும் எங்கிட்ட க்ளோஸ், அதுக்காக அப்பா கோச்சிப்பாரா என்ன?” என்று மகனுக்குப் புத்தி சொன்னார்.

அதைப்பற்றிதான் மலரும் அமிழ்தாவிடம் பேசினாள்.
“பேபி ஏன் நீ யார்கிட்டவும் போக மாட்டேங்கிற, அப்பா பாவமில்ல டா” என்று கேட்க குழந்தையிடம் பதில் இல்லை.

“பேபி! இங்க பார் இதான் நம்ம வீடு, இங்க அமிழ்துவோட தாத்தா, அப்பத்தா, அத்தை, மாமா, அப்பா அண்ட் அம்மா எல்லாரும் இருக்காங்க. எல்லாருக்கும் அமிழ்து பேபிட்ட பேசணும் ஆசை, எல்லாருக்கும் அமிழ்தாவை ரொம்பப் பிடிக்கும். இன்னொன்னு தெரியுமா உனக்கு சாத்வீன்னு ஒரு அக்காவும் இருக்காங்க, ஷி வில் ப்ளே வித் யூ“ என்றதும் உற்சாகமாக,

“அக்கா எங்க?” என்று கேட்டாள்.

“அக்கா ஸ்கூல் போயிட்டா, வந்ததும் உன்னோட விளையாடுவா”

“இனிமே வீட்ல அத்தை, அப்பத்தா யார் சாப்பிடக் கொடுத்தாலும் சாப்பிடணும், அம்மாதான் வேணும் சொல்லக் கூடாது. அப்புறம் அவங்க சேட் ஆகிடுவாங்க அமிழ்தா” என்று சொல்லி மகளை அறைக்குள் அழைத்துவர, சௌந்தர்யா மகனின் தலையைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து,

“என்னாச்சு ஜனா? தலைவலிக்குதா?” என்று மலர் அவனருகே போய் கவலையுடன் கேட்க

“ம்ம், லைட்டா” என்றான். உண்மையில் அவனுக்கு அடிப்பட்ட வலி இன்னும் போகவில்லை. அவளின் முகம் பார்த்தவன்,

“பயமாயிருக்குடி மூஞ்சை இப்படி வைக்காத, அடிப்பட்டா வலிக்கத்தான் செய்யும்” என்று திட்ட,

“டேய் சும்மா இரு, அம்முக்குட்டி சாப்பிட்டிங்களா?” என்று பேத்தியை சௌந்தர்யா விசாரித்தார்.

“எஸ் அப்பத்தா, டூ ஆப்பிள், ஃபோர் கிரேப்ஸ்” என்று உண்டதை எண்ணி எண்ணி சொல்ல,

“இரண்டு ஆப்பிள் அதுக்குள்ள சாப்பிட்டாளா?” என்று மனைவியை ஜனா பார்த்தான்.

“எரும மாடே! குழந்தை தெரியாம சொல்றா நான் ஆப்பிளை வெட்டிக் கொடுத்தேன் டா, இரண்டு பீஸ் சாப்பிட்டு உன் பொண்ணு இரண்டு ஆப்பிள்னு சொல்றா, குழந்தையைக் கண்ணு வைக்காதடா” என்றவர்,

பேத்தியைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள, சௌந்தர்யாவிடம் அமிழ்தாவிற்கு ஒரு நெருக்கம் உண்டாகியது. சௌந்தர்யா அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பேச வைத்துக்கொண்டே இருக்க,

அதை ஏக்கமாகப் பார்த்த ஜனார்த்தன் மனது பொறுக்காமல்,

“ஏன் மலர் இவ எங்கிட்ட வரவே மாட்டேங்கிறா? நீ இவளை ஏன் உங்கூட யூஎஸ் அழைச்சிட்டுப் போன” என்று கேட்டு வைக்க, மலர் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள், விழித்தாள்.

இதற்கே இப்படி வருந்துகிறானே இன்னும் இவனிடம் நான் குழந்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நினைவில் வந்தால்? அய்யோ அன்று போல் ஆகிவிட்டால் என்ற அச்சம் அவன் மீதான அக்கறையினால் அவள் அகக்கரையில் எழுந்தது அவளின் முகம் பார்த்த சௌந்தர்யா உடனே,

“பின்ன சின்னக்குழந்தையை விட்டுட்டா போவா? நீதானே அவளை அமெரிக்கா போக சொன்ன? இப்ப இப்படி கேட்கிற, சின்ன குழந்தை எல்லாரையும் மறந்துட்டா, அதை விட நீயும் இவளும் எங்களுக்கு சொல்லாம கல்யாணம் பண்ணினதால் நாங்க உங்கூட பேசாம இருந்தோம், குழந்தைப் பிறந்த கொஞ்ச மாசம் ஆன பின்னாடி பேசினோம். அதுக்குள்ள இவ ஆபிஸ் விஷயமா யூஎஸ் போய்ட்டா” என்ற அம்மாவைப் பார்க்க பார்க்க அவரின் பேச்சைக் கேட்டு அவனுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான்.

மனமோ,
“மா நீ நடிகை இல்லமா மகா நடிகை” என்று சொன்னது. ‘இவளை நான் அமெரிக்கா போக சொன்னேனா, நீ பெரிய சைஸ் ரீலா சுத்துற போ’ என்று அவன் அமைதியாகப் பார்க்க, மகனின் பார்வையில் அவருக்கும் சிரிப்பு வர, கஷ்டப்பட்டு முறைத்தபடி,

“இப்போதான் இவ யூஎஸ்ல இருந்து வந்தா, வந்த மறுநாளே நீ உன் டப்பா காரை எடுத்துட்டுப் போய் மோதி இப்படி வந்து கிடக்குற. அப்புறம் ஹாஸ்பிட்டல்ல இருந்த இவ்வளவு நாள், அப்புறம் எப்படி குழந்தை உங்கிட்ட வருவா?” என்றார்.

‘ஐ அம் ப்ரவுட் ஆஃப் யூ மை மதர்’ என்று அவன் பார்வை சொல்ல, மலரோ மாமியாரின் பேச்சில் ஆசுவாசமாக உணர்ந்தாள். அத்துடன் அவர் நிறுத்தாது உண்மையில் மகா நடிகையாக,

“சும்மா சும்மா மலரை நச்சரிக்காம இருடா. அவளே நீ அடிப்பட்ட டென்ஷன்ல இருக்கா, உன் பொண்ணை உன் கூடவே வச்சிக்கோ, பேசிட்டே இரு. அவளும் பழகிக்குவா” என்றவர் மலரையும் ஜூஸ் குடிக்க சொல்லிவிட்டு குழந்தையைத் தூக்கி செல்லப் பார்க்க

“மா, பேசுன்னு சொல்லிட்டு என் பொண்ணை அழைச்சிட்டுப் போற” என்று கத்தினான் ஜனா.

“டேய் உன் அப்பா பேத்தி கூட இருக்கனும்னு இன்னிக்கு ஆபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்டார். அவரோட கொஞ்ச நேரம் இருக்க வச்சு தரேன் டா, ரொம்ப பண்றான்மா இவன். என் பொண்ணை சின்ன வயசுல ஸோஃபாவுக்குக் கீழ தள்ளிவிட்டுட்டான் எரும, இவன் பொண்ணை மட்டும் எப்படி பாதுகாக்குறான் பாரு” என்று அவர் சொல்லி செல்ல, மலருக்கு அதில் கவனமே இல்லை.

அவளுக்கு ஜனாவை எப்படியோ சௌந்தர்யா சமாளித்துவிட, அதுவே போதுமென்றாகியது. ஜனா அம்மாவிடம் பேசிய பின் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும், கவலை இன்னும் அற்றுப்போகாமல் அகத்தினை அறுக்க, அவன் விட்டத்தை வெறிக்க,

“ஜனா ஒன்னும் யோசிக்காதீங்க, சீக்கிரம் அமிழ்தா செட் ஆகிடுவா, உங்களால முடியாதா என்ன?” என்று அவன் பக்கத்தில் உட்கார்ந்து பேசியபடி அவன் தலையை மெல்லமாகப் பிடித்துவிட்டாள்.

“ஏன் என் பொண்ணு என் பக்கம் வர மாட்டேங்கிறா? ஹாஸ்பிட்டல்ல என் பக்கத்துல உட்கார்ந்திருக்கா, ஒன்னும் பேசமாட்டேங்கிறா, கேட்டாதான் பதில் சொல்றா” என்றவனைக் கனிவாகப் பார்த்து,

“பரவாயில்ல நம்ம பொண்ணு நம்ம டபரா வாய் மாதிரி இல்லாம, கொஞ்சம் அமைதியாய் இருக்காளே சந்தோஷப்பட்டுக்கோ ஜனா” என்றவள் பின் அவன் காதருகே குனிந்தாள்.

“பொண்ணு பக்கத்துல வரலன்னு ஃபீல் பண்ண வேண்டாம், பொண்ணோட அம்மா பக்கம் வரலாமா?” என்று அவள் விழிகளில் வினா வைத்துக் கேட்க,

“இது கேள்வியா பதிலா?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

“புடலங்கா!” என்று அவள் திட்ட,

“அப்போ இந்த புடலங்காய் தான் வேணும், ஆனா பக்கம் வந்து என்ன செய்ய? என்னால கட்டிக்க கூட முடியாது, ரைட் ஹாண்ட் ரொம்ப வலிக்குது” என்றவனிடம்,

“நான் கட்டிக்கிறேன், நீ ஒட்டிக்கோ” என்று சொல்லி அவனை மென்மையாக அணைத்துக் கொள்ள போனவள், தீடீரென ஞாபகம் வந்தவளாக கதவை நன்றாக சாற்றினாள்.

“அந்த கரடி வந்திடும்னு பயந்திட்டியா?” என்று அவன் வர்ணவியை சொல்ல, அவளும் சிரிக்க, இருவரும் அணைத்தபடி அமைதியாக இருந்தனர்.

“ஆமா அப்போ என் முத்தமெல்லாம் எண்ணிட்டு இருந்தியா நீ?” என்று முதலில் விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் துவங்க,

“அய்யோடா, சும்மா கிண்டலுக்கு சொன்னேன்” என்றாள்.

“எப்படி என் பொண்ணு கூட ப்ரண்ட் ஆகுறது சொல்லு” என்று ஜனா கேட்க,

“கையில தானே அடிப்பட்டிருக்கு, கால் நல்லா இருக்குல்ல, உன் பொண்ணு கூட ஓடிப்பிடிச்சு விளையாடு அவ ப்ரண்ட் ஆகிடுவா, என்னையும் அப்பத்தாவையும் பிச்சு எடுத்திடுவா உன் பொண்ணு” என்று அவள் பேச்சுவாக்கில் உளறிக் கொட்டினாள்.

“உன் அப்பத்தா உன்னோட யூஎஸ் வந்தாங்களா?” என்று அவன் அறியாதவனாகக் கேட்க,

“அ…அது அவங்க அத்தை வீட்லதானே இருந்தாங்க, பாரதி ப்ரசவத்துக்குப் போனவங்க, ஸோ அப்படியே நான் அங்க போனதும் என்னையும் பார்த்துகிட்டாங்க” என்றாள் பொய், மெய் எல்லாம் கலந்து.

“ஓஹ்!” என்று இழுத்தவனுக்கு அவள் மீதான காதலை இப்போது கோபம் முந்தியிருக்க, அதைக் காட்ட நினையாதவனாக, இயலாதவனாக அமைதியாக கண்மூடினான்.

மருந்தின் வீரியத்தின் அவன் உறங்கிப் போக, தினமும் இரவெல்லாம் அவனுடன் இருந்தமையால் மலரும் அவனுடன் உறங்கிப் போனாள். அருகாமையில் ஒரு ஆழ்ந்த தூக்கம் இருவருக்குமே.

இரண்டு மணிக்கு மேல் ஆகியிருக்க, அவர்கள் இருவரும் காணாமல் சௌந்தர்யா மகனுக்குப் போன் செய்ய, அந்த சத்தம் கேட்டு விழித்தான் ஜனார்த்தன்.

“என்னம்மா?” என்று தூக்க கலக்கத்தில் எரிந்துவிழ,

“ஜனா சாப்பாடு எடுத்துட்டு வரவா? சாப்பிட்டு நீ மாத்திரைப் போடனும்டா, இல்லை மலரை வந்து வாங்கிட்டுப் போக சொல்லு” என்றார்.

“அவளும் தூங்குறா, நீ அவளுக்கும் சேர்த்து சாப்பாடு கொடுத்துவிடு” என்று சொன்னவன், மலரை எழுப்ப இன்னும் அவன் மீது நன்றாக சாய,

“முதல்ல எழுந்திரு மலர், அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க, போய் கதவைத் திற” என்றிட, கடினப்பட்டு கண்விழித்தவள் சௌந்தர்யா வரவும் அவரிடமிருந்து சாப்பாடு வாங்கிவைத்தாள்.

“அத்தை அமிழ்தாவுக்கு சாப்பிடக் கொடுக்கணும்” என்று சொல்ல,

“நீ என் பையனைக் கவனி, உன் பொண்ணு எப்பவோ சாப்பிட்டு முடிச்சிட்டா, என் பேத்தியைக் கவனிக்கிறது என் பொறுப்பு” என்று சொன்னபின் அவளும் தலையாட்டிவிட்டு ஜனாவுக்கு ஊட்டிவிட்டு உண்டாள்.

உண்டபின் மீண்டும் இருவரும் உறங்கினர். ஐந்து மணி போல் அவளுக்கு விழிப்பு வர, குளித்து முடித்து கீழே போனவள் சௌந்தர்யாவைத் தேட, அவர் கிச்சனில் வர்ணவியுடன் இருக்க, அங்கு இரண்டு குட்டி நாற்காலிகளில் சாத்வியும் அமிழ்தாவும் உட்கார்ந்திருந்தனர்.

“ஹேய்! சாத்வி குட்டி எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் அத்த, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று சாத்வி சமத்தாகக் கேட்க,

“நல்லா இருக்கேன் டா” என்று அவள் கன்னம் தட்டியவள், மாமியாரைப் பார்த்து,

“சாரி அத்தை டயர்ட்ல தூங்கிட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டாள்.

“அது தெரிஞ்சது அதான் எழுப்பல, அவன் எழுந்துட்டானா?” என்று கேட்க,

“இல்லை தூங்குறார், நான் எதாவது ஹெல்ப் செய்யவா அத்தை?” என்றதும் வர்ணவி சிரித்துவிட்டாள்.

“அம்மா நீ சமைச்சு வச்சா உன் மருமக நல்லா சாப்பிடுவா, அதான் அவ செய்ற ஹெல்ப்” என்று தோழியைக் கிண்டல் செய்ய,

“ஆமா ஆமா, நான் நல்லா ரசிச்சு சாப்பிட்டு பாராட்டுவேன் , சில பேர் மாதிரி நல்லா தின்னுட்டு ஒன்னும் சொல்லாம போகமாட்டேன் என்ன அத்தை?” என்று அவரை இழுக்க, இருவரையும் ‘அட அசடுகளே’ என்ற லுக் விட்டவர்,

“உங்க பொண்ணுங்களைப் பாருங்க, எப்படி சமத்தா இருக்காங்க, நீங்க இரண்டு பேரும் இன்னும் காலேஜ் படிக்கிற மாதிரி மாத்தி மாத்தி திட்டிக்கிறீங்க?” என்று அவர் திட்டினார்.

“அம்மா நான் மாமாவைப் பார்க்க போறேன்” என்று வர்ணவி நழுவி விட,

“ஹேய் முதல்ல இவங்க இரண்டு பேரையும் அழைச்சிட்டுப் போய் இந்த பக்கோடாவை சாப்பிட வை, உங்க அப்பாவுக்கு இந்த ப்ளேட்டை எடுத்துட்டுப் போய் கொடு, உன் மாமாவுக்கு டீ இதுல இருக்கு, அதையும் எடுத்துக்கோ” என்று வரிசையாகச் சொன்ன அம்மாவைப் பார்த்த வர்ணவி,

“மா, உன் வீட்ல வந்து இருக்கேன்னு என்னை இவ்வளவு வேலை வாங்குறியா? இந்த மாமியார் கெத்தையெல்லாம் உன் மருமக கிட்ட காட்டு” என்றாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியும், நீ சொன்னதை செய்” என்றிட, குழந்தைகள் கையில் பக்கோடா தட்டினைக் கொடுத்தவள், கணவனுக்கு டீயை எடுத்துக் கொண்டு போனாள்.

அவள் போனதும் மலர் சௌந்தர்யாவிடம்,

“தேங்க்ஸ் அத்தை” என்று சொல்ல,

அவர் “ எதுக்கு?” என்றதுக்கு,

“இல்ல ஜனாவை சமாளிச்சதுக்கு” என்றாள் மெல்லமாக.

“அது கிடக்கட்டும், அன்னிக்கு சாத்வீ பர்த்டேல என்னைப் பார்த்ததானே? அப்ப கூட எங்கிட்ட ஏன் நீ அமிழ்தா பத்தி சொல்லாம இருந்த?” என்றார் கோபமாக.

அவர் கோபமாகக் கேட்க, அன்று அவர் காட்டிய அன்னியத்தன்மை நினைவில் வர,

“நீங்க மட்டும் என்னைப் பார்த்தவுடனே வா மருமகளேன்னு பேசினீங்களா? என்னைக் கண்டுக்காம தானே இருந்தீங்க, நானா பேசவும்தானே பேசினீங்க, அப்போ நான் ஏன் சொல்லணும்?” என்று மலரும் பதில் பேச,

“அப்படியே மேடம் என் பையனோட ரொம்ப சந்தோஷமா குடும்பம் நடத்தின? நான் வா மருமகளேன்னு வரவேற்க, என் பையன் நீயில்லாம எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா?” என்று திருப்பிக் கொடுத்தார்.

“நாங்க மட்டும் குளுகுளுன்னு இருந்தோமாக்கும்?” என்று மலர் முணுமுணுக்க,

“நீ அமெரிக்கா தானே போன? ஆஃப்ரிக்கா போன மாதிரி பேசற? அங்க குளுகுளுன்னுதானே இருந்துச்சு?” என்று அவர் நக்கல் செய்ய, அவள் முறைக்க

“என்ன முறைக்கிற? குளுகுளுன்னு இல்லன்னு சொல்ற, உனக்குத்தான் அவனை இவ்வளவு பிடிக்குதுல்ல அப்புறம் ஏன் பிரிஞ்சீங்க?” என்று விடாது கேட்டார்.

“அத்தை ப்ளீஸ், அதையெல்லாம் நான் பேச விரும்பல, நான் அவரை விட்டுப் போனது வேணும்னா தப்பா இருக்கலாம். ஆனா என்னைப் போக வச்சது அவர்தான், அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்” என்று அவள் அழுத்தமாக நிற்க,

“அவன் என்ன செஞ்சான் சொன்னா தானே மலர் எங்களுக்குத் தெரியும்? இல்லன்னா உன் மேல தானே நாங்க தப்புன்னு நினைப்போம்”

“பரவாயில்ல அத்த, அப்படி கூட நினைச்சிக்கோங்க” என்று இருவரும் பேசுகையில் அமிழ்தா அம்மாவிடம் ஓடிவர,

“அவளுக்குப் பால் ஆத்தி வச்சிருக்கேன், நீ அவளைக் கவனி” என்று சொன்ன சௌந்தர்யா மகனைப் பார்க்கச் சென்றார்.

“ரூம்லயே இருக்காத ஜனா, அத்தையும் மாமாவும் உன்னை எங்கேன்னு கேட்டாங்க. நீ மலர் கூட இருக்கறதால அவங்க ரூமுக்கு வர மாட்டேங்கிறாங்க, வெளியே வா. அதோட உன் பொண்டாட்டியையும் வெளியே இருக்க வை, எப்பவும் உன்னோடவே இருக்கா” என்ற அம்மாவை முறைத்த ஜனார்த்தன்,

“ஏன் தாயே? என் பொண்டாட்டி இரண்டு வருஷம் கழிச்சு இப்போதான் என்னோட இருக்கா, அதுவும் உனக்குப் பொறுக்கலையா?” என்று பாவமாகப் பேச,

“டேய் பக்கீ! நான் அதை சொல்லல, அவ உன்னோட என்னோட தான் பேசுறா, அவ இந்த வீட்டு மருமக. அவ எல்லார் கூடவும் பழகினாதான் அமிழ்தாவும் பழகுவா, ஹாஸ்பிட்டல்ல இருந்தவரைக்கும் நம்ம வீட்டு சாப்பாடு கூட அவ சாப்பிடல, இப்பவும் உன்னோட ரூம்ல தான் சாப்பிட்டா. அவளா வரமாட்டா போல, நீ என்னமோ பண்ணி வச்சிருக்க” என்று மகனைப் பேசினார்.

“நான் என்ன பண்ணினேன்?” என்று அவன் கேட்க,

“அடிச்சிக் கேட்டாலும் அதை உன் பொண்டாட்டி எங்கிட்ட சொல்ல மாட்டேங்கிறா, அதனால அதை விட்டுத்தள்ளு, இப்போ கீழ வந்து உட்காரு” என்று சொல்லி மகனை கீழே அழைத்து வந்தார்.

அவன் வந்து ஸோஃபாவில் உட்கார்ந்ததும், “மாமா” என்று சாத்வீ அவன் மீது தாவியேற,

“அட சாத்வீ எவ்வளவு பெருசாகிட்டா!” என்று அவன் ஆச்சர்யம் காட்ட, அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பிரசன்னா நண்பனிடம் மெதுவாக,

”கேரக்டர்லயே வாழ்றடா மச்சான் நீ” என்று கலாய்த்தான்.

“வாயை மூடுடா பரதேசி” என்று ஜனா பிரசன்னாவைத் திட்ட,

சாத்வீ ஜனாவின் மீது ஏறியது கண்ட அமிழ்தா உடனே அம்மாவிடம்,

“ஹூ இஸ் மை மாமா?” என்று கேட்க, அங்கிருந்த எல்லார் காதுகளிலும் அது தெளிவாக விழுந்தது. 

சாரி, கொஞ்சம் வேலை. அதான் முன்னாடியே போட முடியல. அரங்கேற்ற வேளை – புதிய ஒலிப்புத்தகம், லாலாவின் கதை. மோனிகாவின் குரலில் காற்றோடு பேசும் கதைகளில் வெளியாகி உள்ளது. கேட்டு மகிழுங்கள். 

அரங்கேற்ற வேளை – click here to listen to audionovel.

WHATSAPP CHANNEL LINK – FOR INSTANT UPDATES, YOU CAN FOLLOW HERE. 

INSTAGRAM – KAATRODUPESUMKADHAIGAL – STAY IN TOUCH

✅ End of Episode 8
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 week ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 week ago

நடிப்பை நடப்பு மறந்து

நடிக்கும் நடிகன்.....
நல்லா இருக்கு 
😂 1 more...
Roja Saradha Mary Reader 6 days ago

ஜனா நடிப்பு சூப்பர்

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top