Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 10

தூரம் 10

சக்திக்கு சரோஜினிக்கென நேரம் ஒதுக்காதது வருத்தமாக இருந்தது. இடையில் அவளுடன் போனில் பேசும்போது கூட கத்தியிருக்க, இன்று அவளை தஞ்சாவூர் வர சொல்லியிருந்தான். அவர்கள் ஊரில் காதல் வளர்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு, உறவுகள் யார் கண்ணிலாவது சிக்குவர், சக்திக்கு அதில் பயமில்லை. அதே நேரம் இப்போது நேரமுமில்லை. திருமணம் பற்றி வீட்டில் பேசும்போது சொல்லிவிடலாம் என்று எண்ணம். அதுவரை இப்படி யாருக்கும் தெரியாமல் இருப்பது கூட ஒரு சுவாரசிய சாகசமாக இருந்தது. வயதும் வாலிபமும் அதனை விரும்பியது.

“பரவாயில்லை சக்திக்கு என்னை ஞாபகமெல்லாம் இருக்கு” என்று தன் பக்கத்தில் வந்தமர்ந்தவனை பார்த்து சரோஜினி சொல்லவும்,

“சரோ! எனக்கும் உன்னோட இருக்க ஆசைதான். வேலை டென்ஷன், தஞ்சாவூர் யுனிவர்சிட்டி கேஸ் சொல்லிருக்கேன்ல, அரி அத்தான் கூட பார்க்கிறாரே அது கோர்ட்ல ஹியரிங் வருது. அது முடிஞ்சிட்டா கொஞ்சம் ப்ரீ” என்றான் சக்தி.

“உன் வேலை தெரியாதா சக்தி? விடு” என்று சரோஜினி சமாதானமாக சொல்ல, புடவையில் இருந்த சரோஜினியை கண்சிமிட்டாமல் பார்த்தவன் மேஜையில் கையூன்றி, கன்னம் வைத்து,

“சரோசா யூ ஆர் ஸோ ப்யூட்டிபில், ஸோ எலிகண்ட், ஜஸ்ட் லுக்கிங் லைக் அ வாவ்” என்றான் பாவனையாக.

“சக்தி!” சரோஜினி அவன் தொடையைக் கிள்ளினாள்.

அவளின் செயலை எதிர்ப்பார்க்காத சக்தி சட்டென்று துள்ளி, “ஏட்டி! பப்ளிக்ல என்ன பண்ற? ச்ச பாரத நாட்ல ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை.” என்றான் தொடையைத் தேய்த்தபடி.

“ப்பா! ரொம்ப பண்ணாத.”

“பார்டா! யார் ரொம்ப பண்ணினா? நீயா இல்லை நானா? அழகா இருக்கன்னு சொன்னா கிள்ளி வைக்கிற, வன்முறை தப்புன்னு சுதந்திர விலாசத்துல சொல்லிக்கொடுக்கலயா டி?” என்று வம்பிழுத்தான்.

“நான் திலகர் பேத்தி, காந்தி பேத்தியில்லை. சோ வன்முறை தப்பில்லை”

“அப்போ நானும் கிள்ளவா?”

சரோஜினி உதடுக்குள் சிரிப்பை அடக்கி, “போதும் சக்தி! ஜூஸ் சொல்லு. நீ வந்ததும் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா வழக்கம்போல போலீஸ் லேட்” என்றாள்.

உடனே வேலை செய்பவரை அழைத்து இரண்டு பழச்சாறு சொன்னவன் சரோஜினியிடம்,

“ஆனா நீ சிட்டா பறந்து வந்திருக்கியே, ஐ லைக் திஸ். பொதுவா பொண்ணுங்க எல்லாம் சீக்கிரம் கிளம்ப மாட்டாங்கனு சொல்வாங்க” என்று கேட்டான்.

“உனக்கே எப்பவாச்சும்தான் லவ் பண்றோம்னு ஞாபகம் வந்து பார்க்கக் கூப்பிடுவ, அப்போ போய் நானும் லேட் பண்ணலாமா? உனக்காக ஸ்கூல்க்கு லீவ் சொல்லிட்டு வந்திருக்கேன்.” என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சக்தியும் சரோஜினியும் பழச்சாறோடு பார்வையால் ஒருவரை ஒருவர் பருகி, வம்பிழுத்து வாயடித்தனர். அப்போதுதான் சித்ரஞ்சன் அங்கு வந்தான்.

சரோஜினி சித்ரஞ்சன் அங்கே வருவான் என்று கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. சக்தி பேசியதும் சித்ரஞ்சன் சென்றுவிட,

“அறிவிருக்கா சக்தி உனக்கு? சித்தப்பா கிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று கத்த,

“அப்படியென்ன தப்பா பேசிட்டேன்?” என்று அலட்சியமாகக் கேட்டான் சக்திவேல்.

“என்னைக்கா இருந்தாலும் தெரியத்தானே போகுது? தெரிஞ்சா என்ன இப்போ? ஆனாலும் உன் சித்தப்பன் சித்ரஞ்சனுக்குக் கொழுப்பு ஜாஸ்திடி. எங்கத்தையை மட்டும் டாவடிச்சு கல்யாணம் பண்ணிப்பாராம், அவர் வீட்டு பொண்ணுன்னா மட்டும் என்னை கேள்வி கேட்கிறார்? மோடீவ்வாமே, என்ன மோடீவ்? உன்னைக் கட்டி கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி பெத்துக்கிறதுதான்” என்று சக்தி பேச, சரோஜினி கோபமாக முறைத்தாள்.

“என்ன சரோ முறைக்கிற? உண்மையைத்தானே டி சொன்னேன்.”

“நீ பேசாம இரு சக்தி. எனக்கே சித்தப்பா என்ன சொல்வாரோனு டென்ஷனா இருக்கு”

“அப்போ சத்யாகிரகம் பண்ணுவேன், உண்ணாவிரதம் இருப்பன்னு சொன்னதெல்லாம் உருட்டா டி? சும்மா பில்டப் விட்டிருக்க. அப்போ உங்கப்பா, தாத்தா நான் வேண்டாம் சொன்னா எவனையாவது கட்டிப்பியா?” என்றதும் சரோஜினி சிவந்த விழிகளோடு கோபத்தில் சக்தியின் தொடையில் வலிக்கும்படி கிள்ளினாள்.

“அம்மா!” என்று அவன் வலி தாங்காமல் கத்தியதில் சிலர் திரும்பிப் பார்க்க, சக்தி சரோஜினியை முறைத்தான்.

சரோஜினி பதிலுக்கு முறைத்தாள். அவள் முகத்தில் இருந்த கலக்கம் சக்திக்கும் புரிய, கிண்டலை எல்லாம் விட்டு,

“சரோ! சரோஜினி! இங்க பார். என்ன பண்ணிடுவார் உங்கப்பா? எதாவது பேசினா நீ நம்ம வீட்டுக்கு வந்துடு. நான் பார்த்துக்கிறேன், சரியா?” என்று அனுசரணையாக சொன்னான்.

“வந்தா வா மருமகளேன்னு உங்கம்மா என்னை வரவேத்துடுவாங்க பாரு. பூவுக்கே அந்த பேச்சு பேசினாங்க. எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையெல்லாம் இருக்கு சக்தி, அதே நேரம் எங்க வீட்ல உள்ளவங்க சம்மதத்தோட சந்தோஷமா பண்ணிக்கணும்னு ஒரு பெர்சண்ட் பேராசையிருக்கு. சித்தி மாதிரி ஒட்டு உறவே இல்லாம இருக்கிறதெல்லாம் நினைச்சாலே பயமாயிருக்கு. பேசாம இப்படியே காதலிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு கூட தோணுது”

“என்னது காதலிச்சிட்டே இருப்பியா? அப்போ நான் கடைசிவரைக்கும் பிரம்மசாரியாவே இருக்கணுமா? உன்னை நம்பி நான் என் பசங்களோட விளையாடுற அளவுக்குக் கனவு கண்டுட்டேனே” சக்தி புலம்ப, சரோஜினியின் கலக்கமான முகத்திலும் சின்னதாய் சிரிப்பு எட்டிப்பார்த்தது. சரோஜினியின் கையை அழுத்திப் பற்றியவன்

“சிரிடி சரோ. இதெல்லாம் பெரிய விஷயமா? நான் பார்த்துக்கிறேன்.” என்று சக்தி சொல்லவும்தான் சரோஜினிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இருவரும் உணவகத்தை விட்டு வெளியே வர, சரோவை அவர்கள் ஊர் செல்லும் பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைத்தான்.

சித்ரஞ்சன் அன்று எப்படியாவது மாமனார் வீட்டில் பேச வேண்டும் என்று நினைத்திருக்க, நிச்சயம் சரோஜினியும் சக்தியும் காதலிப்பார்கள் என்று கடுகளவிலும் அவன் கற்பனை இருந்ததில்லை. இதில் இந்த சக்தி எப்படி பேசுகிறான்? பயமாக வேறு இருந்தது.

தன்னை பழிவாங்க தன் அண்ணன் மகளை காதலிக்கிறானோ என்றெல்லாம் நினைக்க நினைக்க பதட்டமாக உணர்ந்தான். இரு குடும்பத்திற்கும் ஆகாதெனும்போது எப்படி இந்த காதல்? ஏன் இந்த காதல்? என்றெல்லாம் எண்ணம் போனது.

அவனுமே அப்படி ஆகாத குடும்பத்து பெண்ணின் மீது ஆசைகொண்டவன் என்றெல்லாம் மறந்தது. அன்று வாலிபனாய் காதலுக்காக செய்த எதுவும் தவறாகப்படவில்லை. இன்றோ அண்ணன் மகள் என்று வரவும், வயது, அனுபவம் அவன் வேலை எல்லாம் அவனை காதற்பாதையில் யோசிக்கவிடவில்லை. அதே பதற்றத்தோடு வீடு வந்தான் சித்ரஞ்சன்.

“ஆத்தா, நேத்துதானே கிடாவிருந்து சாப்பிட்டோம். இன்னிக்கு ஏன் என்னை கடைக்கு அனுப்புற?” லாலா அஞ்சம்மாவிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.

“டேய் உனக்கு ஆட்டுக்கால் கடிக்க பல் செத்துப்போச்சுன்னா கிடக்குது போ. உன் சித்தப்பனுக்கு வாங்கிட்டு வர சொன்னேன். பல்லு செத்த பய.” என்று அஞ்சம்மா பேரனை வசைப்பாட,

“போதும் ஆத்தா, இப்போ என்ன ஆட்டுக்கால் வாங்கணும். அதானே?” என்று லாலா கடைக்குச் சென்றுவிட்டான். வசுந்த்ரா சித்ராவுக்கு சமையலில் உதவி செய்தாள். பகத் திலகருடன் அவர்களின் தென்னந்தோப்புக்குச் சென்றிருந்தான்.

“அவருக்கு நான் வாரத்துல ஒரு நாள்தான் கா நான்-வெஜ் கொடுக்கிறதே, தம்பிக்கு இரண்டு நாள் முட்டை கொடுப்பேன். நேத்துதான் கிடாவிருந்துல நல்லா சாப்பிட்டோம். நீங்களாச்சும் சொல்லியிருக்கலாம்ல கறி வாங்க வேண்டாம்னு”

“என் மகனுக்கு வாங்கறதுக்கு நீ என்னடி சொல்றனு அத்த என்னை பேசும். சித்துவாச்சும் பரவாயில்ல சின்ன வயசு. உங்க மாமாவுக்கு ஐம்பத்தாறு ஆகுது, இன்னும் என்னமோ பச்ச புள்ள மாதிரி என் மவனுக்கு அத செஞ்சு கொடு இத செஞ்சு கொடுன்னு என்னை படுத்தி எடுக்குறாங்க” என்று சித்ரா புலம்ப,

“என்னது உங்க கொழுந்தனாருக்கு சின்ன வயசா? முப்பத்தெட்டு வயசாகுது. நீங்க ஏன் மாமாவுக்குக் கொடுக்கிறீங்க? அவர் கிட்ட சொல்லுங்க” வசுந்த்ராவும் சித்ராவும் பேசிக்கொண்டிருக்க, சித்ரஞ்சன் வீடு வந்துவிட்டான். வந்ததும் திண்ணையில் அமர்ந்திருந்த அம்மாவை கூட கவனிக்காது, விறுவிறுவென்று மாடியேறி அவனறைக்குச் சென்று சட்டையைக் கழட்டிவிட்டு மின்விசிறியைப் போட்டு காற்றாட உட்கார்ந்தான்.

சித்ரஞ்சனுக்கு அவன் அப்பா என்றால் இப்போதும் பயம். அதைவிட வசுந்த்ரா அப்பாவை கண்டால் பயம். இத்தனை வருடங்கள் கழித்து கொஞ்சம் மனம் இளகியிருப்பார், இல்லை இளக்கிவிடலாம் என்று சித்ரஞ்சன் நினைத்திருக்க, சக்தி குறுக்கே வந்து அத்தனையும் கெடுப்பான் என்று தெரியவில்லை. இப்போது சரோஜினி விஷயத்தில் எந்த முடிவெடுக்கும் எண்ணமும் அவனுக்கில்லை. அதே நேரம் வீட்டில் இதனை சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் வேறு, சித்ரஞ்சனுக்கு அண்ணன் மக்கள் மீது பாசம் அதிகம். சிறு வயதிலிருந்து அவன் வளர்த்த பிள்ளைகள். அதிலும் சரோஜினி என்றால் இன்னும் செல்லம். இப்போது சக்தியை நம்பலாமா, அவன் உண்மையில் சரோஜினியைக் காதலிக்கிறானா என்று தவிப்பாக இருந்தது.

அவன் காதலித்த காலத்தில் அவனுக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றுதான், அவன் காதல் மட்டுமே! அதை நிறைவேற்ற என்ன வழி என்று பார்த்தானே தவிர வேறெதையும் யோசிக்கவில்லை, காதலியைக் கூட யோசிக்காத காதல் அவனுடையது. இப்போது அப்படியில்லை, காதல் ஒரு பக்குவம் தந்திருந்தது.

தந்தையாக யோசித்தது மனம். சக்தி தவிர வேறு யாரை சரோஜினி காதலித்திருந்தாலும் மனம் இப்படி பயப்படுமா என்று சித்ரஞ்சனுக்குத் தெரியவில்லை. அதுவும் சக்தியின் பேச்சும் தோரணையும் சுத்தமாக ஒப்பவில்லை. அதே நேரம் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தான்.

அவன் யோசனையில் இருக்க, வசுந்த்ரா உள்ளே வந்தாள். மனைவியிடம் சொல்லத்தோன்றவில்லை. சரோஜினியிடம் பேச வேண்டும் என்று நினைக்க,

“என்னாச்சு? போன வேலை முடிஞ்சதா? ஏன் இப்படி தனியா வந்து உட்கார்ந்திருக்கீங்க? இந்தாங்க டீ” என்று நீட்டினாள். தேனீரைப் பருகியவன் அமைதியாக இருக்க, வசுந்த்ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சித்ரஞ்சன் அவளோடு வீட்டிலிருந்தால் அவன் குரல் கேட்டு கொண்டே இருக்கும். மனைவிக்குத் ‘தான்’ மட்டுமே இப்போது துணை என்ற எண்ணமா இல்லை அவளோடு பேசுவது அவ்வளவு பிடிக்குமா தெரியாது. காரணமான பேச்சென்றில்லை, பேச காரணம் தேடி பேசுவான். இருவரும் வம்பு சண்டை வளர்த்தாலும் பேசாமல் இருந்ததில்லை. வேலையில் எதாவது டென்ஷன் என்றால் மட்டுமே சித்ரஞ்சன் இப்படி சிந்தனையில் இருப்பான்.

“ஊருக்கு வந்தும் வேலைப் பத்தி யோசிக்கணுமா டி.எஸ்.பி” என்று வசுந்த்ரா கேட்கும்போதே, சரோஜினி கதவைத் தட்டினாள்.

“உள்ள வா சரோ” என்று பாதி திறந்திருந்த கதவின் வழி பார்த்து வசுந்த்ரா சொல்ல,

உடனே உள்ளே நுழைந்த சரோஜினி, “சித்தப்பா, சக்தி நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அவன் ரொம்ப நல்ல டைப்” என்று பேச,

“அப்புறம் பேசலாம் சரோ, நீ போ” என்று அண்ணன் மகளை விரட்டினான் சித்ரஞ்சன்.

“இல்லை சித்தப்பா” என்று சரோஜினி மறுக்க, “சொன்னா கேட்கமாட்டியா?” என்று அதட்டினான்.

“என்னாச்சு சரோ?” என்று சித்தி கேட்க, சரோஜினிக்கு மறைக்கும் எண்ணமில்லை. எப்படியும் சித்தியிடம் சித்தப்பா சொல்லாமல் இருக்கமாட்டார், அதைவிட வசுந்த்ராவின் அண்ணன் மகன் வேறு. அதனால்,

“நானும் சக்தியும் லவ் பண்றோம் சித்தி. இன்னிக்கு நாங்க தஞ்சாவூர்ல மீட் பண்ணினதை சித்தப்பா பார்த்துட்டாங்க. சித்தப்பா நானே உங்ககிட்ட இதை பத்தி பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்..” என்று சரோஜினி சித்தப்பனிடம் பேச,

“ஏட்டி சரோ! நீ என்ன சொல்ற? சக்தியை லவ் பண்றியா?” என்று யோசனையாகக் கேட்ட சித்தியிடம்,

“ஆமா சித்தி. சக்திதான்! நம்ம சக்தியைத்தான் சொல்றேன்” என்றாள் சரோஜினி.

“என்னது நம்ம சக்தியா? எப்போயிருந்துடி அவன் நம்ம சக்தியானானான்? எப்படி டி?” என்று வசுந்த்ரா ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த குரலில் நம்ப முடியாது கேட்க,

“அது ஒரு அஞ்சு வருஷமா” சரோஜினி சித்தப்பாவை பார்க்காமல் சித்தியை மட்டும் பார்த்து பதில் சொன்னாள். வசுந்த்ரா சித்ரஞ்சன் அளவெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக எப்படியென்ற ஆவல் மட்டுமே. வசுந்த்ரா புன்னகையோடு,

“அஞ்சு வருஷமாவா? எப்படி டி?” என்று கேட்டாள்.

“எப்படின்னா? நீங்க சித்தப்பாவை லவ் பண்ணலயா? அப்படித்தான் சித்தி.”

சரோஜினி சிரிப்போடு பதில் சொல்லி சித்தப்பா சித்தியைப் பார்க்க, வசுந்த்ரா சித்ரஞ்சனை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்தாள். சரோஜினி அதனை காதல் பார்வை என்று தவறாக நினைத்தாள். சித்ரஞ்சனோ ‘இந்த சரோ பேசுறதெக்கெல்லாம், என் பொண்டாட்டி என்னை வச்சி செய்யப்போறா’ என்று கடுப்போடு பார்த்தான்.

சரோஜினி காதல் என்ற பாதையில் நீயும் நானும் ஒன்று என்பது போல் பெருமையாகப் பேசி சித்தியைப் பார்க்க, அவள் மனதின் எண்ணமோ,

‘உங்க சித்தப்பாவுக்கு எப்படி லவ் வந்துச்சுன்னே எனக்கு இன்னும் புரியல, இதுல நீ வேற’ என்றிருந்தது.

“எங்க கத’ய விடு, நீ சொல்லு சரோ”

சித்தி கேட்கவும் “அது நான் சென்னையில் படிச்சப்போ சக்தியோட கோச்சிங் க்ளாஸ் என் ஹாஸ்டல் பக்கம், அப்படியே பேசி பழகி நான்தான் சித்தி ப்ர்ஸ்ட் ப்ரோபோஸ் பண்ணினேன். சக்தி மேல தப்பில்லை, நீங்க சித்தப்பா கிட்ட சொல்லுங்களேன். அவர் ரொம்ப கோவமா இருக்கார்”

“பின்ன நீ செஞ்சதுக்குக் கோவமா இல்லாம எப்படி இருப்பேன்? வீட்ல பொய் சொல்லிட்டு அவனோட ஊர் சுத்துற? பொறுப்பான டீச்சர் வேலையில இருந்துட்டு இப்படி செய்யலாமா? அண்ணனுக்குத் தெரிஞ்சா என்னவாகும்?” என்று சித்ரஞ்சன் எழுந்து நின்று கத்த, வசுந்த்ரா கணவனின் கையை அழுத்தமாக பிடித்தாள்.

“டீச்சர்’ரா இருந்தா லவ் பண்ண கூடாதா? ஸ்கூல்’ல மட்டும்தான் அவ டீச்சர்.”

“அப்படி சொல்லுங்க சித்தி” என்று சித்தியைக் கட்டிக்கொண்ட சரோஜினி,

“இப்போ தெரியுது சித்தி சித்தப்பா எப்படி உங்ககிட்ட இம்ப்ரெஸ் ஆனாருன்னு” என்று வேறு ரசனையாக சொல்ல, சித்ரஞ்சன் பார்வை மனைவியிடம்.

“சித்தி! பாருங்க சித்தப்பா உங்களை கட்டிப்பிடிச்சிருக்கேன்னு என்னை கோவமா பார்க்கிறார். நீங்கதான் சித்தி எப்படியாச்சும் சித்தப்பா கிட்ட சொல்லி வீட்ல பேச சொல்லணும்” சரோஜினி கோரிக்கை வைக்க,

“சரோ! நீ டென்ஷன் ஆகாம போ. நான் பார்த்துக்கிறேன்” என்ற வசுந்த்ராவின் பேச்சில் நம்பிக்கை வர, சரோஜினி “தேங்க்ஸ் சித்தி” என்று நன்றி சொல்லி போனாள்.

சரோஜினி செல்லவும் வசுந்த்ரா கதவை சாற்றிவிட்டு கணவனை பார்த்தாள்.

“சக்தி ஏன் இப்படி பண்றான் வசு?” என்ற சித்ரஞ்சன் சக்திவேல் பேசியதெல்லாம் சொல்ல,

“உங்களுக்கு மட்டும் அடுத்த வீட்டுப் பொண்ணு மேல லவ் வரும், அவனுக்கு வரக்கூடாதா? என்ன நியாயம் இது?” வசுந்த்ராவின் குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது. அந்த கொஞ்சத்தை சித்ரஞ்சன் குறைத்திருக்கலாம், அவன் நேரம் அந்த கொஞ்சம் அவன் பேச்சில் கூடுதலாகிப்போனது.

வசுந்த்ராவுக்கு இவன் என்னமோ நல்லவன் போல் என் அண்ணன் மகனை பேசுவானா என்ற ஆத்திரம். மறக்க நினைத்த அவன் செயல் மீண்டும் நினைவில் வர, அவ்வளவுதான் சித்ரஞ்சன் சிக்கினான்.

“கண்டிப்பா நீங்க செஞ்ச மாதிரி சக்தி என்னைக்கும் செய்ய மாட்டான்” என்ற வசுந்த்ராவின் குரலில் கோபம், எள்ளல் எல்லாம் கலந்திருக்க, சித்ரஞ்சனை அது காயப்படுத்தியது.

“என்னடி நான் செஞ்சேன்? என்னை சின்ன பய கூட கம்பேர் பண்ணி பேசுவியா?” என்று சித்ரஞ்சன் வசுந்தராவை நெருங்கி நின்று கோபத்தில் கத்த, வசுந்த்ராவும் கத்தினாள்.

“ஏன் என்ன செஞ்சீங்கன்னு மறந்து போச்சா? விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல கட்டாயப்படுத்தி தாலி கட்டிட்டு பெரிய இவனாட்டம் பேச்சை பாரு”

கொதிப்போடு அவள் வார்த்தைகள் விழ, அதன் சூடு சித்ரஞ்சனால் தாங்க முடியவில்லை.

வசுந்த்ராவின் தோளைப்பற்றியவன் “உன்னை கல்யாணம் பண்ணி நான் என்ன கொடுமையா டி பண்றேன்? எத்தன வருஷம் இதே சொல்லி என்னை பேசுவ, கொஞ்சமும் என் காதலை புரிஞ்சிக்க மாட்ட இல்ல.” என்றான் ஆதங்கமாக.

“கட்டாயப்படுத்துறதுக்குப் பெயர் காதலா?” என்று வசுந்த்ரா கேட்க,

“போடி” என்று அவளை உதறிவிட்டு கதவை திறந்த சித்ரஞ்சன் அங்கே அதிர்ச்சியில் நின்றிருந்த லாலாவை பார்த்து திகைத்தான்.

“தாத்தா கூப்பிட்டார் சித்தப்பா” என்றான். லாலா என்ன கேட்டான் என்று தெரியவில்லை என்றாலும் அதனை எல்லாம் யோசிக்கும் மனநிலையில்லாது கீழிறிங்கி சென்றான் சித்ரஞ்சன். லாலாவின் மனதிலும் சித்ரஞ்சன் கீழிறங்கி போனான்.

சித்தியின் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியின் தாக்கம் இன்னும் அவனிடம் மிச்சமிருந்தன.

“விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல கட்டாயப்படுத்தி தாலி கட்டிட்டு பெரிய இவனாட்டம் பேச்சை பாரு”

அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிய, “அப்போ சித்தி சித்தப்பாவை லவ் பண்ணலயா?” என்றதிலேயே லாலாவின் எண்ணம் உழன்றது.

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Sathya Velusamy Reader 3 weeks ago

சிக்கிட்டாண்டா சிவனாண்டி

😂 2 more...
Srichitra Reader 3 weeks ago

Very nice. 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top