Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 24

தூரம் 24

லட்சுமணன் வரவும் சக்தி உள்ளே சென்றான். எதுவுமே செய்யாத தோரணையில் நடுவீட்டுக்குள் சென்றவன் தலையணையை எடுத்துத் தரையில் போட்டு, தலைக்குக் கைகொடுத்து கால்மேல் கால் போட்டு தொலைக்காட்சியைப் பார்த்தான்.

பேரனின் செயல்களைப் பார்த்த லட்சுமணனுக்குப் புன்னகை. அவரின் செல்லப்பேரன், நல்ல வேலை, நல்ல குணம் என்று அவனால் எப்போதும் பெருமையே. அவனின் விருப்பத்துக்கு அவரால் தடைபோட முடியாது. அதே நேரம் அத்தனை வருட வீம்பையும் விட முடியவில்லை.

“என்னடா ஒரே சத்தம்? என்ன கலாட்ட பண்ணின?” லட்சுமணன் அங்கிருந்த மர சோபாவில் உட்கார்ந்தபடி பேரனைப் பார்த்தார்.

“கலாட்டாவா? நான் பாட்டுக்கு செவனேனு கல்லரசி தின்னுட்டு இருந்தேன் தாத்தா” என்றான் தொலைக்காட்சியில் கவனமாக. அவனாக ஒரு முறை எல்லாரிடமும் கேட்டுவிட்டான், இனிமேல் கேட்பதாக இல்லை.

“நம்ம வீட்ல கல்லரசி அவிச்சியாம்மா?” என்று மருமகளை கேட்டார் லட்சுமணன்.

“இல்லையே மாமா” என்று சசிகலா சிரிப்பை அடக்கி சொல்ல,

“ஏண்டா பார்க்கிறவன் என்ன நினைப்பான்? இப்படித்தான் சுவர்ல உட்கார்ந்துட்டு அந்த புள்ள கிட்ட வம்பு பண்ணுவியா? அந்த இடியட் வேற என்னமோ நான் சொல்லிக்கொடுத்து நீ செய்ற மாதிரி என்னை முறைச்சிட்டுப் போறான்” லட்சுமணன் பேரனைத் திட்ட,

“தாத்தா! நான் வம்பெல்லாம் பண்ணல, லவ் பண்ணிட்டு இருந்தேன்.” என்றான்.

லட்சுமணன் பேரனை முறைத்தவர் ஒன்றும் பேசவில்லை. திண்ணையில் உட்கார்ந்தவரிடம் யோசனைகள். பாஸ்கரன் வரவும் சசிகலா அவரிடமும் மகன் செய்ததை சொல்ல, அன்றிரவே அப்பாவிடம் பேசினார் பாஸ்கரன்.

“நானே பேசணும் நினைச்சேன் டா” என்று ஆரம்பித்த லட்சுமணன்,

“என்னைக்கு நல்ல நாள்ன்னு பார்த்து நீங்க அவன் வீட்ல போய் பேசிட்டு வந்துடுங்க.” என்றிட,

“அப்பா நீங்க இல்லாம எப்படிப்பா?”

“டேய்! எனக்கும் அவனுக்கும் செட் ஆகாதுடா. என் பேரன் கல்யாணம் நான் நடத்தி வைப்பேன். ஆனா அவன் வீட்டுக்கு வரமாட்டேன்” என்றார் பிடிவாதமாக.

சசிகலா வசுந்த்ராவிடம் முதல் நாள் இரவே சொல்லியிருக்க, அடுத்த நாளே பெண் பார்க்க முடிவானது. சித்ரஞ்சன் விஷயம் தெரியவும் வீட்டில் சொல்லிவிட்டான். திலகரும் பேத்திக்காக சந்தோஷப்பட்டார், சித்ரஞ்சனின் செயலை மன்னித்த மருமகளுக்காகவே அவர் இந்த விஷயத்தில் இறங்கி வந்தார்.

அதைவிட மகனின் செயலில் வருந்தியவருக்கு சக்தியின் நேர்மை பிடித்திருந்தது. பேத்திக்காக அவன் வந்து நின்றது அவரை கவர்ந்தது, அவருக்குப் பிடிக்காத வீட்டின் பேரன் என்பதை தவிர தனிப்பட்ட முறையில் சக்திவேலைப் பிடிக்காமல் போக அவரிடம் காரணங்கள் இல்லை.

அடுத்த நாள் சக்தி வழக்கம்போல் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, சசிகலா மகனிடம்,

“சக்தி! இன்னிக்கு சரோவைப் பொண்ணு பார்க்க வரோம்னு உன் அத்த கிட்ட சொல்லிட்டேன்” என்று தகவல் சொல்ல,

“என்ன அத்தைக்கு சொன்னியா? ம்மாஆஆ! என்கிட்ட நேத்தே சொல்லியிருக்கலாமில்ல நான் இப்போ டியுட்டிக்குப் போகணும். முன்னாடியே சொல்லியிருந்தா லீவ் போட்டிருப்பேன். எனக்கு லீவ் வரப்ப போலாம்” என்றான் சக்திவேல்.

“என்னது? உனக்கு என்னைக்கு லீவ் கிடைக்குது, கடல் வத்தித்தான் கருவாடு தின்னனுமா உனக்கு? போலிஸ்கார பயலுக்கு என்னைக்கு டியுட்டி என்னைக்கு லீவ்னு தெரிய மாட்டேங்குது. இத்தன நாளா எப்போ கல்யாணம்னு கேட்டுட்டு இப்போ வந்து இன்னொரு நாள் போலாமான்னா கேட்கிற. அதெல்லாம் முடியாது.”

“ம்மா மாப்பிள்ளை நான் இல்லாம நீ பொண்ணு பார்க்க போறியா?” கோபமாகக் கேட்டான் சக்தி.

“ஆமா அப்படியே முதல்தடவ பார்க்க போற, காலையில தண்ணி பிடிக்க போனா, எட்டிப்பார்த்தா நைட்டிப் போட்டு நிப்பா சரோ. இவன் என்னமோ பார்க்காத மாதிரி சொல்றான். அந்திக்கு வந்து பார்த்துக்கோ டா” என்ற சசிகலா அவர் வேலையைப் பார்க்க போய்விட்டார்.

சக்தி அம்மாவை முறைத்தபடி அவன் அறைக்குச் சென்று காக்கி சட்டையை மாட்டியபடி சரோஜினிக்கு அழைத்தான்.

“ஹேய் சரோ! இன்னிக்குப் பொண்ணு பார்க்கறதாமே? என்கிட்ட எங்கம்மா இப்போதான் சொல்றாங்க. நான் எப்படிடி வரது? இப்போ சொன்னா எஸ்பி பெர்மிஷன் கூட கொடுக்க மாட்டார்.” சக்தி வருத்தமாக, பெண் பார்க்க போக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஏமாற்றத்தில் பேச,

“உனக்கே இதெல்லாம் ஓவரா இல்லையா சக்தி? என்னமோ புதுசா பார்க்கிற மாதிரி?” சரோஜினி கிளுக்கிச் சிரித்தாள்.

“ஏட்டி என்ன அதப்பா? மாமியாரும் மருமகளும் ஒரே மாதிரி சொல்றீங்க? தினமும் பார்க்கிறதும் இன்னிக்கும் ஒன்னா? எட்டிப்பார்த்தா நீ நிப்பன்றதால கல்யாணத்தையும் காம்பவுண்ட் சுவர்ல வச்சே நடத்திடலாமா?” சக்தி கடுப்பாகக் கேட்டான்.

“ஹாஹா! நீ சொல்றதைக் கேட்டா எல்லாரும் அப்படித்தான் சொல்வாங்க. வேணும்னா ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் கேளேன்” சரோஜினியும் சக்தி பேசவும் ஆசைகொண்டு கேட்டாள்.

“ம்ஹூம்! நோ சான்ஸ். இப்பவே லீவ் பெர்மிஷன் எல்லாம் கேட்டா கல்யாண டைம்ல கஷ்டம். பின்னாடி வேற நெறைய தேவைப்படும். இட்ஸ் ஓகே, இப்ப பொண்ணைப் பார்க்க மட்டும்தானே முடியும்?” என்றவனின் பேச்சில் சரோஜினிக்குப் புன்னகை. தன்னை தேடுகிறானே என்று ஆனந்தப்பட்டாள்.

“இப்போ என்ன உனக்கு என்னைப் பார்க்கணும்னா சொல்லு, ஈவினிங் எங்காச்சும் மீட் பண்ணலாம். ஆசை தீர பார்த்துக்கோ” சரோஜினி இயல்பாக சொல்ல,

“ஹேய்! கட்டுப்பாட்டோட இருக்கேன் டி. கண்டபடி பேச வைக்காத.” என்றான் சிரிப்பை அடக்கி.

“நான் என்ன தப்பா சொன்னேன்?” சரோஜினி புரியாமல் கேட்க,

“போடி! எனக்கு டியுட்டிக்கு டைமாச்சு, நான் கிளம்புறேன்” என்று சக்தி போனை வைத்தான்.

சரோஜினியோ வசுந்த்ராவிடம் போனவள், “சித்தி! சக்திக்கு இன்னிக்கு லீவ் இல்லையாம்” என்றதும்,

“அதுக்கு?” என்று வசுந்த்ரா கேட்க,

“போங்க சித்தி! சக்தி மாதிரியே கேட்குறீங்க. நான் எதுக்கு சொல்றேனு புரியலையா?” என்ற சரோஜினி வசுந்த்ராவின் தோளைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“சரோ! நான் சக்தி இல்லடி அவன் அத்தை. என்னை ஏன் கொஞ்சுற?” வசுந்த்ரா சிரிப்பை அடக்கிக் கேட்க,

“சித்தி! சித்தப்பா கிட்ட சொல்லி சக்திக்கு லீவ் தர ரெகமெண்ட் பண்ணலாமில்ல” கொஞ்சலாக சரோஜினி கேட்க,

“ஓஹ், நான் கேட்டா சித்தப்பா லீவ் தருவாரா?” என்ற வசுந்த்ரா நடுவீட்டில் சோபாவினை ஓரமாய்ப் போட்டுக்கொண்டிருந்த சித்ரஞ்சனை அழைத்தாள்.

“என்ன வசு?”

“சக்திக்கு இன்னிக்கு லீவ் இல்லையாமே? நீங்க அவனுக்கு லீவ் பெர்மிஷன் கொடுக்க முடியுமான்னு நான் கேட்கல, சரோஜினி மேடம் கேட்டாங்க” என்றதும்,

வசுந்த்ராவை முறைத்த சித்ரஞ்சன், “நீ கிளம்பாம இங்க என்ன பண்ற சரோ. போய் ரெடியாகு” என்று அதட்டினான்.

“சித்தப்பா சித்தி சொன்னது”

“அதுக்குப் பதில் சொல்லியாச்சு” என்றபடி அவன் போய்விட,

“என்ன சித்தி? சித்தப்பா ஒன்னும் சொல்லாம பதில் சொல்லிட்டேன்றார்” என்று சரோஜினி வசுந்த்ராவைப் பார்த்தாள்.

“உன் சித்தப்பா வேலை விஷயத்தில் ரொம்ப ஸ்டீரிக்ட் சரோ. பதில் சொல்லாம இருந்தார்னா நோன்னு அர்த்தம். நான் செய்ய மாட்டேன்னு தெரிஞ்சும் என்னை கேட்பியான்னுதான் ஏடிஎஸ்பி முறைச்சார். வேணும்னா நீ மறுபடி கேளேன்”

வசுந்த்ரா சிரித்தபடி சொல்ல, “போங்க சித்தி” சிணுங்கியபடி அவள் அறைக்குச் சென்று தயாரானாள்.

சசிகலாவும் பாஸ்கரனும் சுதந்திர விலாசம் சென்றனர். அவர்கள் அதுவரை அங்கே வந்ததில்லை. பாஸ்கரனும் சசிகலாவும் கிளம்பும் முன்னே சசிகலா ஒருமுறை அழைத்து சொல்லியிருக்க, அவர்கள் வாசலுக்கு செல்லவுமே வாஞ்சி நாதனும் சித்ராவும் சென்று வரவேற்றனர்.

“வா பாஸ்கரா, வாம்மா” என்று வாஞ்சிநாதன் வரவேற்க,

“வாங்க அத்தான்” என்று சித்ரஞ்சனும் அழைக்க, வசுந்த்ரா சந்தோஷமாக அண்ணியின் கையைப் பிடித்தாள்.

“வாங்க மாமா” என்று லாலாவும் திண்ணைக்கு வந்தழைக்க, பாசமாய் அவன் தோள் தட்டினார் பாஸ்கரன்.

“வாப்பா” என்று திலகர், அஞ்சம்மாளும் அழைத்து வீட்டினுள் உட்கார வைத்து உபசரித்தனர்.

பெரியவர்கள் எல்லாரும் கூடியிருக்க லாலா அங்கிருந்த அறைவாசலில் சாய்ந்து நின்று வேடிக்கைப் பார்த்தான். வசுந்த்ரா அண்ணனுக்கும் அண்ணிக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுக்க,

“அப்புறம் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்” என்றார் திலகர்.

புன்னகையோடு தலையசைத்த பாஸ்கரனும், “சக்தியோட விருப்பம்தான் மாமா எங்களுக்கும். சரோஜினியை எங்க சக்திக்குப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம். உங்களுக்கு சம்மதம்தானே?” என்று கேட்டார்.

பழையதைப் பேசவில்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்த பாஸ்கரனை மெச்சுதலாகப் பார்த்த திலகர்,

“உன் மகன் அப்படியே உன்னை மாதிரி” என்றார் சிரிப்போடு.

“சரோஜினியைக் கூப்பிடும்மா சித்ரா” என்று மருமகளிடம் சொல்ல,

லாலா சரோஜினியின் அறைக்கதவை தட்டியவன், அவள் கதவைத் திறக்கவும், “சரோஜினி அப்படியே கொஞ்சம் அந்த அடக்கத்தை எல்லாம் எடுத்துட்டு மெதுவா வா பார்ப்போம்” என்று மெல்ல சொல்ல,

“டேய் என்னை டென்ஷன் பண்ணாத” என்றாள் சரோஜினி.

அதற்குள் வசுந்த்ரா, “வா சரோ” என்றழைத்துப்போக சரோஜினி புன்னகையோடு எல்லார் முன்னும் நின்றாள். உண்ஂமையில் அந்த கணம் சக்தியை எதிர்ப்பார்த்தாள். காதலித்தாலும் அடிக்கடி கண்டாலும் இன்று அவன் உடனிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் அவளுக்கு.

அவள் அமைதியாக நிற்க சசிகலா உடனே, “அம்மாடி சரோ போதும் ரொம்ப நேரம் அமைதியா நிக்காத வாய் வலிக்க போவுது. வந்து இங்க உட்கார்ந்து என்கிட்ட பேசு” என்றதும் லாலா சிரித்துவிட, வசுந்த்ராவுக்கும் சிரிப்பு.

“ஏன் அண்ணி?” என்றிட,

“பின்ன இவளை எத்தன வருஷமா பார்க்கிறேன். இப்படி நின்னா எனக்கே நம்ப முடியலல” என்றார் சிரிப்போடு.

சரோஜினி அவர் பக்கத்தில் சென்றமர, திலகரிடம் பாஸ்கரன் திருமணம் பற்றி பேசினார். மூன்று மாதத்தில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அரைமணி நேரம் எல்லாம் பேசிவிட்டு செல்ல, போகும் முன் சசிகலா சரோஜினியிடம்,

“இந்தாடி சரோ, அந்திக்கு அப்படியே நம்ம வீட்டைக் கொஞ்சம் எட்டிப்பாரு. இன்னிக்கு உன்னை பார்க்க முடியலன்னு சக்தி என்னோட ஒரே சண்டை. இல்லன்னா என் மகன் ஏங்கிப்போயிடுவான். சரியா?” என்று சொல்லிவிட்டு போனார்.

சரோஜினி விழிக்க,

“ரொம்ப எங்க பொண்ணை வம்பிழுக்காதீங்கண்ணி” என்றாள் வசுந்த்ரா.

“எது நான் வம்பிழுக்கிறேனா? எனக்கு இவளை வம்பிழுக்கிற வயசு பாரு, உன் அண்ணன் மவன் வந்து மூஞ்சைக் காட்டிட்டு நிப்பான். அதுக்கு சொன்னேன் வசு” என்றார் சசிகலா.

அன்று மாலை வீடு வந்த சக்தியிடம் பாஸ்கரன் விஷயத்தைப் பகிர, சக்தி அப்பாவிடம் சமத்தாகக் கேட்டுக்கொண்டான். இரவு உணவு முடியவும் வெளியே கயிற்றுக் கட்டிலில் லட்சுமணன் உட்கார்ந்து வாசலை வேடிக்கைப் பார்க்க, அவரை இடித்துக்கொண்டு உட்கார்ந்தான் சக்தி.

“என்னடா சக்தி சந்தோஷமா?”

“தேங்க்ஸ் தாத்தா” என்று சக்தி தாத்தாவை அணைத்துக்கொண்டான்.

“ஹாஹா என்னடா?” லட்சுமணன் தன் பற்கள் தெரிய சிரித்தார்.

“எனக்கு சரோவைப் பிடிச்சாலும் நீங்களாம் பிடிக்கலன்னு சொல்லிட்டா என்ன பண்றதுனு கவலையா இருக்கும். அத்த விஷயம் வேற உங்களை கஷ்டப்படுத்திடுச்சு இல்லையா? அதனால எப்பவும் இது டென்சனாவே இருக்கும். இப்போ எல்லாம் நல்லபடியா நடக்கவும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஐ அம் ஹாப்பி” என்ற பேரன்,

“ஆனாலும் உனக்கு ரொம்ப பிடிவாதம் தாத்தா. திலகரே இறங்கி வந்துட்டார், நீ எனக்காகப் போய் பொண்ணு கேட்டிருக்கக் கூடாதா?” என்றான் தாங்கலாக.

“ரொம்ப ஆட்டிடியுட்” என்று முணுமுணுக்க,

“என்னடா ஆட்டிடியுட்?” லட்சுமணனும் முறைத்தார்.

✅ End of Episode 24
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 4 weeks ago

Very nice.

Mrs Beena loganathan Reader 2 weeks ago

பகையாய் இருந்த 

பக்கத்து வீடு,

பந்தமாய் மாறிட
பிரமாதம்...

பிரிவை விதைத்த பெரியவர்கள்
பிணைப்பைத் தேடி வந்த தருணம்....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top