Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 3

இடைவெளி 3

“ராம்..? கையை எடுங்க” சாதனா சொல்ல,

“எனக்குப் பிடிச்சிருக்கு, எடுக்க மாட்டேன்” என்றான் அடமாக. இந்த ராம் நிச்சயம் சாதனாவிற்குப் புதிதாகத் தெரிந்தான். இதுவரை இப்படியெல்லாம் அவன் நடந்ததே இல்லை.

அவளுக்குத் தெரியவில்லை. பிடித்தவள் என்று பிடித்து வைக்காமல் அவன் சுதந்திரமாக விட்டிருக்க, இப்போது விவாகரத்து என்று உறவே ஊசலாடும் நிலைக்கு வந்ததும், அவன் பிடிவாதம் பிடித்தேனும் அவளைப் பிடித்து வைக்க நினைத்தான்.

சாதனா அவன் அடமாகப் பேசவும் ஒன்றும் பதில் சொல்லவில்லை, மஞ்சள் வெயில் கொஞ்சிய மாலை பொழுது,  நடுவெயிலுக்கும் இருளுக்குமான இடைவெளி நேரம். இவள் இடைவெளியில் இவன் கரங்கள் அழுத்தமாக இருக்க, சதுவுக்கும் இப்படி நடப்பது புதிதாக இருந்தது.  நீலம், அதில் வெண்மேகம், அதன் கீழே உயர்ந்து வளர்ந்த பச்சை மரங்கள்.

சிமெண்ட் சாலை போடப்பட்டிருக்க, அன்று வார நாள் என்பதால் அந்த சாலை கூட மிகவும் அமைதியாக இருந்தது. இருவருமாக மௌனத்தின் தூரத்த்தைக் கடந்தனர். நடந்து கொண்டே வந்தவர்கள் மக்கள் நடமாட்டமில்லாத ஒரு சமவெளிக்கு வந்தனர். சில உள்ளூர் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. சமபரப்பில் ஒரு பக்கமிருந்த பாறையில் சாதனா கால்வலி தாங்காது உட்கார, இப்போதும் கரத்தை எடுக்கவில்லை அவள் கணவன்.

“இங்க யாரு பார்க்கிறா? போதும் கையை எடுங்க ராம். கொஞ்சம் ரிலாக்ஸா உட்காரனும் நான்” என்றதும் முகத்தைத் தூக்கி வைத்தபடி கையை எடுத்தான். இருகைகளையும் கன்னத்தில் வைத்து, சுற்றி இருந்த இயற்கையை ரசித்தாள் சாதனா. ராம் வழக்கம்போல் சாதனாவைப் பார்த்தான். 

“சது” என்று ராம் பேச நினைக்க செல்வாவிடமிருந்து அழைப்பு.

“இவனா?” என்று முணுமுணுத்தபடி எடுக்க, அவன் பாவனையை சுவாரஸ்யமாகப் பார்த்தாள் சாதனா. 

“என்ன மிஸ்டர். பரசுராம் ஆபிஸ் பக்கம் ஆளை காணும்?” செல்வா தன் கணீர் குரலில் கேட்க, 

 

“நான் லீவ் அப்ளை பண்ணிட்டுதான் ஸார் வந்தேன்” என்றான்.

“யார்கிட்ட சொன்னீங்க? மேனேஜர் இப்படி பொறுப்பில்லாம இருக்கலாமா? ஒரு மெயில் இல்லை, மெசெஜ் இல்லை. யார்கிட்ட சொன்னீங்க?” என்று அவன் அதட்ட,

“என் மத்த இரண்டு செல்லம் மாதிரி இவன் இருக்கக் கூடாதா?” என்று மனத்தில் நினைத்தவன்

“மாதவன் ஸார்கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன்”

“அவர்கிட்ட சொன்னா ஆச்சா? உங்க பொண்டாட்டி டைவர்ஸ்  நோட்டீஸ் அனுப்பினாங்களே, அது விஷயமா கோர்ட் போயிருக்கீங்களா ஸார்?” என்று நக்கலாக செல்வா கேட்க,

“செல்வா, மாமா பாவம்டா. இப்போதான் டா சதுவோட பேச வந்தேன்” என்று பரசு கெஞ்ச செல்வாவின் முகத்தில் சிரிப்பு. எதிரில் நின்று தம்பியின் சேட்டைகளைப் பார்த்த மாதவன் குலுங்கி குலுங்கி சிரித்தான்.

“யார் ராம்?” சது ஆர்வமாகக் கேட்டாள். பரசுராம் தள்ளி நின்று பேசினாலும் அவன் பாவனையில் இவளுக்கும் புன்னகை.

“செல்வா” என்றான் மெல்ல.

“கொடுங்க” என்று போனுக்காக கை நீட்டினாள் சாதனா. அவனைப் போலவே தள்ளி போனவள்

“என்னடா என் புருஷனை ரொம்ப மிரட்டுற?” என்று தம்பியை செல்லமாக அதட்டினாள்.

“சதுக்கா! ,மாமா போன் செஞ்சா கூட எடுக்கமாட்டேன்னு போன, இப்போ என்ன அவர் போனை எடுக்கிற அளவுக்கு முன்னேறிட்ட போல..” என்றான் செல்வா கிண்டலாக. 

“அதெல்லாம் எங்களுக்குள்ள? நீ ஏன் அவரை வம்பிழுக்கிற?” என்று சாதனா திரும்பிக் கேட்டாள்

“எங்க மாமா நாங்க வம்பிழுப்போம், அதெல்லாம் எங்களுக்குள்ள” என்றான் செல்வாவும் அக்காவைப் போல்.

“உங்களை ஊருக்கு வந்து கவனிச்சிக்கிறேன், அவர் டைவர்ஸ் பண்ண வேண்டியது உங்களைத்தான் டா! பாவம் பரசு! அப்படி டென்ஷனாகிட்டார், அந்த உதய் கையை உடைக்கிறேன், என் சைன் போடுறானா அவன்?” என்றாள் கொஞ்சம் கோபமாக.

“ஹாஹா, வேற என்ன செய்ய சொல்ற? அவர் போன் செஞ்சா நீ எடுக்க மாட்டேங்கிற, அவரும் உன் இஷ்டத்துக்கு விடுறார். இப்படி அதிரடியா எதாவது பண்ணினாதான் மாம்ஸ் சரி படுவார்னு தெரியும். அதான் ஒரே ஒரு நோட்டீஸ், ஓவர் நைட்ல நீ இருக்க இடம் வந்தார் பார்த்தியாக்கா?” என்று கேட்டான் செல்வா. அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டு இருக்க, பரசுவின் பார்வை இங்கேதான். இருள் சூழ்ந்திருக்க, மனைவியை நெருங்கி வந்தான்.

“சது, இருட்டாகிடுச்சு. நம்ம காட்டேஜ் போகணும்” என்று பரசுராம் வந்து சொல்ல, அவனிடம் போனை நீட்டினாள்.

“சொல்லு செல்வா” என்றான்.

“மாமா, வரும்போது அக்காவோட வரணும். இல்லைன்னா அக்கா புருஷன்னு பார்க்காம அக்கக்கா பிரிச்சிடுவேன்” என்று மிரட்டினான் செல்வா.

“டேய்! போதும், போனை கொடு” என்று மாதவன் அதட்டி தம்பியிடமிருந்து வாங்கினான்.

“ஏண்டா அவன் பக்கத்துல நின்னுட்டே தான் என்னை மிரட்ட விட்டியா நீ?” மாதவனை பரசுராம் திட்ட,

“அதெல்லாம் இருக்கட்டும், அவன் சொன்னதை செய் மாமா நீ” என்றான் மாதவனும்.

“ஓன் மினிட்” என்று சாதனாவிடமிருந்து தள்ளிச் சென்றவன்

“எனக்கே அட்வைஸ் பண்றீங்களே, உங்க போதனையை என் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் செய்ங்கடா. மாமா நல்லவர்னு நாலு வார்த்தை சொல்லி அவளை காம்ப்ரமைஸ் பண்ணி விடுங்க” என்று கேட்டான்.

“அவ எங்க பேச்சைக் கேட்டுதான் எல்லாம் செய்வா பாருங்க, இப்ப எதாவது பேசினா எங்க பேச்சைக் கேட்டுத்தான் உன்னைக் கட்டினேன் சொல்லுவா மாமா, ஒழுங்கா நல்ல புருஷனா நடந்து எங்க மூணு பெயரையும் காப்பாத்தனும் மிஸ்டர். பரசுராம். ஒகே?” என்று மாதவன் மிடுக்காகக் கேட்க,

“அடுத்த மூணு மாசத்துல உனக்கும் கல்யாணம் ஆகும்டா மாப்பிள்ள, அப்ப உன்னை கவனிச்சிக்கிறேன், ஒரு அக்கா புருஷன் என்றும் பாராமல் அன் லிமிட்டெட்டா கலாய்க்கிறீங்களேடா காட்ஸில்லா பாய்ஸ்” என்று பரசுராம் திட்டினேன்.

“சீக்கிரமே என் புள்ளைக்கு உங்களை மாமாவாக்கி மூணு பேர் மேலையும் உச்சா போக விடுறேன் இருங்கடா, அப்போ தெரியும் இந்த பரசுராம் யாருனு” என்று சபதம் போட,

“அதெல்லாம் நாங்க டயபர்ஸ் மாட்டிடுவோம்” என்று மாதவன் சொல்ல,

“போனை வைங்கடா பிக்காலி பசங்களா, அவகிட்ட பேசும்போதெல்லாம் மாமா ஓமான்னு  வந்துட்டு இவனுங்களை மாமாவாக்கனுமாம். நீங்க ப்ரதர்ஸ் இப்படி செஞ்சா நான் சர்ச் பாதராத்தான் ஆகனும். நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்று போனை வைத்தவன் மனைவியைப் பார்த்தான்.

அவள் முகத்தில் ஆழ்ந்த யோசனை.

‘மலையிறக்க சொன்னா இவனுங்க மலையுச்சிக்கு ஏத்திவிட்டானுங்க போலயே!’ என்று கலவரமாக அவளைப் பார்த்தான். அந்த சிமெண்ட் சாலையில் ஆங்காங்கே மஞ்சள் விளக்குகள் ஒளிர்ந்திருக்க, லேசான குளிர். மாலையிலிருந்து இருளாக வானம் மாறியிருக்க, சாதனா நடக்கவும், பரசுவும்

அவளருகே கையைப்பிடித்தபடி நடந்தான். சாதனா பதில் பேசவில்லை.

“சது, என்னாச்சு?” என்று பரசுராம் கேட்க,

“என்ன உங்களை ரொம்ப ஓட்டுறானுங்களா?” என்று சின்ன சிரிப்புடன் கேட்டாள் சாதனா.

“அதெல்லாம் இல்ல, சும்மா ஜாலியா” என்றான் அவனும் சிரிப்போடு.

“அவனுங்க பேசுறது கோவமே வராதா உங்களுக்கு?”

“ஹேய்! நாங்களாம் ப்ரண்ட்ஸ், நீ ஏன் அப்படியெல்லாம் நினைக்கிற, உண்மையில எனக்கு அவனுங்க மூணு பெயரைப் பார்க்கும்போது நானும் அவனுங்க கூட பொறக்கல தோணும்” என்றதும் சாதனா சத்தமாக சிரித்துவிட்டாள்.

சாதனா அப்படியெல்லாம் சத்தமாக சிரிக்க மாட்டாள். தம்பிகள் போல் நிறைய விளையாட்டெல்லாம் கிடையாது, அக்கா என்பதால் கொஞ்சம் பொறுப்பு ஒட்டிக்கொண்டே இருக்கும். அதுவும் கம்பெனி பொறுப்பெல்லாம் ஏற்றபின் இன்னும் மிடுக்குதான் பெண்ணிடம், இந்த சிரிப்பு ராமிற்கு மிகவும் பிடித்தது.

ஆனாலும்,  அவன் சொன்னதில் அவனுக்கே சிரிப்பு வந்துவிட,

“ஹேய் அது வேற, இன்ஃபாக்ட் ஜீவா கூட அப்படி இருக்கனும் தோணும், ஆனா எங்களுக்குள்ள ஏஜ் கேப். ப்ச்” என்றான்.

“என்ன ஏஜ் கேப்பா? ஜீவாவை விட உதய் இரண்டு வயசு சின்ன பையன்” என்று கணவனை பார்த்தாள் சாதனா.

அதற்கு அவனிடம் பதில் இல்லை. சாதனாவும் துருவிக் கேட்கவில்லை, விட்டுவிட்டாள். சில நிமிட மௌனத்திற்குப் பின்,

பரசுராம், “சது, சாரி” என்றான் குரல் கமற,

“அன்னிக்கு நான் பேசினது ரொம்ப அதிகம், உன்னை அது ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கும் தெரியுது, ஆனா நானும் அதனால ஹர்ட் ஆகியிருக்கேன் சது. போதும் இந்த இடைவெளி. என்னால இதை கடக்க முடியல, ஐ மிஸ் யூ. கோவம்னா அன்னிக்கு மாதிரி கத்து, இல்லை அடி.” என்றான்.

சாதனாவோ ஒரு பெருமூச்சுடன்,

“நீங்க ‘பேசினதை’ விட ‘நீங்க’ பேசிட்டீங்கன்னுதான் ராம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது., இருக்கு! உங்ககிட்ட  நான் அதை எதிர்ப்பார்க்கல, மாதவன், செல்வா தாத்தா எல்லாம் சொன்னாலும் உங்களை எனக்கு பத்து வருஷமா தெரியும். ஆபிஸ்ல தினமும் பார்த்திருக்கேன்.  நிறைய மரியாதை வைச்சிருந்தேன்” எனும்போதே அந்த மரியாதை சரிந்ததை சரியாகப் புரிந்து கொண்டான் பரசுராம்.

நிச்சயம் வலித்தது! அவனே அதை உடைத்திருக்கிறான் எனும்போது இன்னும் வலித்தது. ஆனால்,  எப்போதும் கடந்த காலத்தை நினைப்பவன் இல்லையே அவன், வருத்தங்கள் எல்லாம் வாழ்வோடு கலந்தது. இந்த நொடி, அதுதான் நிஜம் என உணர்ந்தவன்

“சது! உனக்கு அது கஷ்டமா இருந்திருக்கும் புரியுது, பட் தப்பே செய்யாத மனுஷங்க இல்லைதானே? நான் அந்த டைம் எமோஷனலா இருந்தேன், நானே என் கன்ட்ரோல்ல இல்லை. என்னை மீறின செய்கை, கோவம். இனியொரு சான்ஸ் கொடு,  உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு காட்டினதே இல்லை நான். இந்த டைவர்ஸ் எல்லாம் வேண்டாம் சது..” என்றான் உருக்கமாக.

“சான்ஸ் கொடுத்தா?” என்று அவள் கேள்வியாக நிறுத்த

“சான்ஸ் கொடுத்தா நான் சாதா ராமன் இல்லை சாதனா ராமன்னு உனக்குப் ப்ரூவ் பண்றேன்” என்றதும் அவன் கையை விட்டு விட்டு வாய்விட்டு சிரித்தாள் சாதனா.

“ராம்… நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்களா? ஹாஹா அய்யோ …ராமா” என்று அவள் முகமெல்லாம் ப்ரகாசிக்க சிரித்தாள்.

“அசிஸ்டெண்ட் மேனேஜர் பேசக்கூடாது, ஹஸ்பண்ட் பேசலாம்” என்றான் கண்ணடித்து.

சாதனாவிற்கு அவன் செய்கையில் இன்னும் புன்னகை விரிந்தது. அவள் எங்கே விவாகரத்து எல்லாம் நினைத்தாள். சாதனாவிற்குக் கோபத்தில் வார்த்தை விடுவது பிடிக்காது, கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அவளே சரியாகிவிடுவாள். அதற்குள் அவளின் தம்பிகள் செய்த தகிடுதத்தம் இது.

அவளைப் பொருத்தவரையில் வேண்டாம் என்றால் வேண்டாம்! முடிவெடுத்த பின் அதனை யோசிக்கவே மாட்டாள். எண்ணம் எதுவானாலும் உறுதிதான் அவளிடம்!

பரசுராமின் வருத்தம் சாதனாவிற்கும் கஷ்டமாக இருந்தது. இந்த இடைவெளியில் கொஞ்சம் வருத்தம் மட்டுமே வஞ்சியிடம் எஞ்சியிருந்தது! அதனால் அவனிடம்

“நீங்க வேண்டாம்னு நினைக்க அன்னிக்கு ஒரு நாள்தான் காரணம் ராம், ஆனா வேணும்னு நினைக்க நிறைய ரீசன்ஸ் இருக்கு” என்றதும் பரசுராம் முகம் பளிச்சென்றது.

“என்ன ரீசன்ஸ்?” என்று ஆவலாகக் கேட்க,

“அது நீங்க வேணும்னு நினைக்கிறப்ப சொல்றேன்” என்றாள் வேண்டுமென்றே. என்னவோ அவனை வம்பிழுக்கத் தோன்றியது. அதனால் டைவர்ஸ் விஷயத்தை சொல்லாதுவிட்டாள்.

முன்பு அவன் கல்லூரி சீனியர், பின் அவள் அலுவலகத்தில் வேலைப்பார்ப்பவன், கணவனாகிவிட்டாலும் அந்த பெரிய இடைவெளி கடக்கப்படாதே இருக்க, அதற்குள் ஒரு சண்டை! இயல்பாக அவர்கள் பேச, பழகவே இரண்டு மாதங்கள் ஓடிப்போயிருக்க, தம்பிகளிடம் இருக்கும் அந்த அன்யோன்யம் அவர்களிடம் இல்லை.

“அப்போ இப்ப வேண்டாமா?” பாவமாக அவன் முகத்தை வைத்திருக்க,

“டைவர்ஸ் வேண்டாம் சொன்னேன், டிஸ்டண்ட்ஸ் அப்படியே தான் இருக்கு!” என்று ஆணையாக சாதனா சொல்ல, அவளை நெருங்கி நின்றவன் முன்பு போலவே இடையில் கரம் வைத்துப் பிடித்தான்.

“போதும், இவ்வளவு டிஸ்டண்ட்ஸ்! நான் வேற உன் தம்பிங்க கிட்ட சபதம் போட்டிருக்கேன், என்னை சோதிக்காத சாதனா” என்றான் கெஞ்சலாக. மனைவி டைவர்ஸ் இல்லை என்று சொன்னதிலே அவனிடம் ஆயிரம் யானையின் பலம்.

சின்னதாக விஷயம் கிடைத்தாலும் அத்தனை சந்தோஷம் கொள்பவன், சாதனா சாதாரணமாகப் பேசிவிட, உற்சாகம் உள்ளமெங்கிலும்.

“என்ன சபதம்?” என்று அவள் கேட்க,

“அது..” என்றவன்

“அவனுங்களை சீக்கிரம் மாமா ஆக்குறேன் சொல்லிட்டேன்” என்றான் வேகமாக.

“சின்ன பசங்க கிட்ட என்ன பேச்சு இதெல்லாம் ராம்?” என்றாள் சாதனா கடுப்பாக.

“அவனுங்களா சின்ன பசங்க, கொஞ்சம் அசந்தா என்னை அக்கா புருஷன் பார்க்காம ஆன்லைன்ல வித்துருவானுங்க, கேடி பெலொஸ்” என்றான்.

“யார் அவனுங்க? எங்க மாமான்னு தான் பேச்சு வருது. ரொம்பத்தான் உங்களுக்கு சப்போர்ட் பண்றானுங்க” என்றாள் சாதனா கடுப்பாக.

“ச்ச, மச்சானுங்க மச்சானுங்கதான்மா! ஏதோ தவம் பண்ணியிருக்கேன்” என்று பரசுராம் சிலாகித்து பேச சாதனா முறைத்தாள்.

“என்னைப் பத்தி இப்படியெல்லாம் பேச்சு வரல” என்றாள் புருவம் உயர்த்தி. அவள் மனதுக்குள் அவர்களின் நட்புணர்வு கண்டு மகிழ்ச்சிதான், ஆனாலும்,  சீண்டினாள்.

“சது, என்ன நீ! நீதான் எனக்குப் ப்ரஸ்ட். அவனுங்க எல்லாம் வொர்ஸ்ட்! அந்த மாதவன் ஒரு மாங்கா மடையன், செல்வா ஒரு செங்கல் தலையன், அந்த சின்னவன் ஒரு வாலில்லாத சிம்பன்ஸி!” என்றதும் இன்னும் முறைத்தாள்.

“என் தம்பிங்கள என் முன்னாடியே இப்படி பேசுவீங்களா, போங்க நீங்க!” என்று அவன் கையை எடுத்துவிட்டு வேகமாக முன்னே  நடக்க,

“சது, சும்மா சொன்னேன். உன் ஹஸ்பண்ட் பாவம்டி” என்று அங்கேயே நின்று கத்தினான்.

“என்னடி நீ ஓவரா பண்ற? அப்படி பேசினாலும் முறைக்கிற இப்படி பேசினாலும் முறைக்கிற. இங்க பாரு நீ கோவப்பட்டா ஒன்னு மேல போய் இமாலயஸ்ல பரசுபாபா ஆகிடுவேன் இல்லை கீழே இறங்கி கங்காவுல போய் அகோரி ஆகிடுவேன்.” என்று பரசுராம் முகத்தை சுருக்கி சொல்ல

“அகோரி ஆகிடுங்க சரியா இருக்கும் ராம்” என்று சாதனா சிரிக்க, வேகமாக ஓடி வந்தவன் மனைவியின் தோளில் கைப்போட்டு,

“கோவம் போச்சா?” என்றான் அவள் சிரிப்பது கண்டு.

“கோவமெல்லாம்  இல்லை, வருத்தம் கொஞ்சம் இருக்கு.

“அப்போ இனி தனி ரூம் வேண்டாம்ல?” பரசு கண்கள் மின்ன மனைவியிடம் கேட்க,

“அப்படி ஒன்னும் நான் சொல்லலயே!” என்று அவனை வெறுப்பேற்றினாள்.

“சது?”

“ரூம் வந்துடுச்சு, கையை எடுங்க. டின்னர் சாப்பிடலாம்” என்றாள் சாதனா.

“எடுக்க மாட்டேன்” என்று அவன் பிடிவாதம் பிடிக்க,

“உங்களை எனக்குத் தெரியவே இல்லையோ ராம், எனக்குத் தெரியாம பரசுராம்குள்ள பல ராம் இருக்காங்களோ? முன்னாடியெல்லாம் நீங்க இப்படி கிடையாதே?” என்று சாதனா யோசனையாகப் பார்க்க,

“முன்னாடி இப்படியெல்லாம் கைவைச்சா உன் மூணு தம்பிங்களும் பஞ்சராக்கி பறவைகளுக்குப் பஃபே சாப்பாடா இந்த பரசுவை போட்டிருப்பானுங்க. ஹஸ்பண்டா இருக்கும்போதே மேடம் பக்கத்துல விடல, இதுல் முன்னாடி இல்லை பின்னாடி இல்லையாம்” என்றான் கடைசியில் முணுமுணுப்பாக.

“ராம், என்ன சாப்பிடுறீங்க. சொல்லுங்க” என்று சாதனா கேட்க,

“எனக்கு சாப்பிடுற மாதிரி எதுனாலும் சொல்லு சது” என்றவன் அறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு கீழே இறங்கினான். இருவரும் ஒன்றாகவே உண்டனர், பின் சாதனா அவள் அறைக்குப் போய்விட, பரசுவின் பார்வை புரிந்தாலும் சாதனா இறங்கிடவில்லை.

இருள் சூழ்ந்த அந்த பொழுதில், ஹிமாலய மலைத்தொடர் வெண்மேகமாகக் காட்சித் தர, அருகே இருந்த அருவியின் ஓசை நிசப்தத்தில் இன்னும் நன்றாகக் கேட்டது. ஒரு பக்கம் நண்பர்களாக வந்தவர்கள் எல்லாம் பாட்டு பாடியபடி அந்த இரவை உற்சாகமாக்கிக் கொண்டிருக்க, தனியாக இருந்த பரசுராம் பால்கனியில் நின்றுகொண்டு மாதவனுக்கு அழைத்தான்.

“என்ன மாம்ஸ், எனக்குக் கூப்பிட்டிருக்க? என்னமோ சபதமெல்லாம் போட்டீங்க?”

“உங்கக்காவைக் கட்டிட்டு சபதம்தான் போட முடியும், போடா” என்றான் கடுப்பாக

“என்ன இது எங்க அத்தான் கிட்ட எனர்ஜியே இல்லை?” மாதவன் அக்கறையாகக் கேட்க,

“பின்ன என்னடா? கோவமில்லன்றா, ஆனா ரூமுக்குள்ள சேர்க்க மாட்டேங்கிறா. என் ஒருத்தனுக்கு மட்டும் எட்டாயிரத்துக்கு ரூம், கொஞ்சம் கூட எக்கானமிக் சென்சே இல்லை அவகிட்ட” என்றான்.

“யோவ் நான்சென்ஸ் மாமா, எட்டாயிரத்துக்கா ஃபீல் பண்ற? கட்டின பொண்டாட்டியை விட்டு பிரிஞ்சு இருக்கோம்னு ஃபீல் பண்ணலையா நீ? இங்க டைவர்ஸ் நோட்டீஸ் பார்த்துட்டு அந்த ஃபீல் பண்ணின?” என்று மாதவன் கடுப்புடன் கேட்க,

“டேய் அதான் டா சொல்றேன். பக்கத்து ரூம்தானே? ஆனா பக்கமா சேர்க்க மாட்டேங்கிறா? சரியான ராங்கி! ராட்சஸி!” என்று திட்டினான்.

“பக்கத்து ரூமா? பார்த்துய்யா வந்தா உன்னை பங்கம் பண்ணிடுவா, அப்புறம் டைவர்ஸூதான்!!! ஊஊஊஉ” என்று மாதவன் வம்பு செய்ய, கதவு தட்டப்படும் ஓசையில்,

“இருடா, யாரோ கதவைத் தட்டுறாங்க” என்று பரசுராம் கதவைத் திறக்கப் போனான்.

பார்த்தால் சாதனா அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

“கொஞ்சம் மெதுவா பேசுங்க சார், பக்கத்து ரூம்ல டிஸ்டர்ப் ஆகுது” என்று அவள் சொன்ன தோரனையே எல்லாம் கேட்டுவிட்டாள் என்று உணர்த்த,

‘ஏழரையை ஏர்ல கூட்டிட்டு வந்துட்டேன் போலயே, அங்கேயும் பேசித்தான் அவளோடு சண்டை, இங்கேயுமா?’ என்று முழித்தான்.

“யோவ் மாமா, என்னாச்சு பேசு” என்று மாதவன் கத்துவது அருகே நின்ற சாதனாவுக்கும் கேட்க,

“பேசுங்க சார்” என்று சாதனா சொன்ன விதத்தில் எங்கே பேச்சு வந்தது பரசுராமிற்கு?

 

✅ End of Episode 3
How did you feel about this episode?
❤️ 2 😂 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 2 months ago

மச்சானுங்க  கூட

மல்லு கட்டும் 
மாமன் ராம் பாவம் டா.....
மனைவியை சமாதானப்படுத்துவானா மச்சான சமாதானப்படுத்துவனா????
❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 2 months ago

சின்ன விஷயத்தையே சந்தோஷப்படும் ராம் சாதனாவின் சிரிப்பு சாதனையே அவனுக்கு....

❤️ 2 more...
Kavi Natarajan Reader 1 month ago

😍😍😍😍😍😍

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top