Episode 2

ஒரு காதல் 2

வழக்கம்போல் அலாரம் சத்தம் கேட்டு எழுந்த சௌந்தர ராஜன் மகனைப் பார்க்க, அவன் போர்த்திகொண்டு கிடப்பது கண்டு,

“இளந்திரையா! எழுந்திருடா, பொழுது விடிஞ்சாச்சு” என்று சொல்லவும் ஒன்றும் பேசாமல் எழுந்தவன் பாத்ரூமினுள் புகுந்துகொண்டான்.

இளந்திரையன் குளிக்கச் சென்றுவிட, சௌந்தர்ராஜன் அப்படியே சோஃபாவில் உட்கார்ந்திருந்தார்.

“மாமா, இந்த பாத்ரூம் ஃபீரிதானே? குளிச்சிட்டு வாங்க, அதுக்குள்ள நான் சமைச்சிடுவேன், பொங்கல் வச்சிட்டேன் சட்னி மட்டும்தான் அரைக்கனும்” என்றவளை ஒரு பார்வை பார்த்தவர் பின் பெட்ரூம் கதவைப் பார்த்தார்.

அது சாற்றியிருக்கவும் எழுந்தவர் தனது பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த சாமி படத்தின் முன் நின்றார். நின்றவர் மருமகளைப் பார்த்து

“இங்க வா வல்லி” என்று சொல்ல, வல்லியும் போய் நிற்கவும் அவளிடம் தன் கையை நீட்டினார்.

நீட்டிய கரத்தினுள் இருந்தது மாங்கல்யம்!

இளந்திரையனுடனான பந்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டி அவள் விலக்கி வைத்த ஒன்று. அதனைக் காணவும் கசப்பான உணர்வு அவளினுள். கூடவே அதிர்ச்சி வேறு, ஏற்கெனவே பத்திரிக்கையில் ஒன்றாய் அவளின் பெயர் அவனுடன், கணவனுடன்!

இப்போது இது எதற்கு? என்று யோசிக்க, சௌந்தரராஜனோ அவசரமாய்
“நீயும் அவனும் ஒன்னா நின்னுதான் கமலியோட கல்யாணத்தை நடத்தனும், அப்போ உனக்கு இது தேவைப்படலாம். உன் அத்தைக்குக் கூட தெரியாது, இதை நான் பத்திரப்படுத்தி வச்சிருக்கறது. ஒருவேளை மாமனாரா மட்டும் இருந்தா இதை செய்வேனா தெரியல, உன் தாய்மாமனாவும் போய்ட்டேனே, நான் உன்னை வேறையா கமலியை வேறையா நினைச்சுப் பார்த்ததில்ல, அதான் இதை இங்க வரவும் எடுத்தாந்தேன்” என்றவர் மகன் வருகிறானா என்று பார்த்துக்கொண்டே

“முதல்ல இதை வாங்கு” என்று அவளின் கைப்பிடித்து அதில் அவளின் தாலியை வைத்தவர்

“இளா என்னோட மகன்றதால உன்னை அவனுக்குக் கட்டிவைக்கல வல்லி, அவனுக்கு அவங்க அம்மா மாதிரி வாய் ஜாஸ்தி, பட்டுன்னு பேசுவான். அவன் நல்லவனா இருந்தாவாசிதான் உனக்கு அவனை கட்டிவச்சேன். இத்தனை நாள் நீ ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம் இருந்தீங்க, இப்போ கமலி கல்யாணத்துக்கு நீ பத்து நாள் முன்னாடியே வந்திடனும், லீவ் எடுத்துடும்மா” என்று சொல்லியவர் குளிக்கப் போய்விட

வஞ்சுளவல்லிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கையில் உறுத்திய மாங்கல்யத்தைக் கண்டவளுக்கு மாமனின் பேச்சை மீறமுடியவில்லை, அதனால் அதனை எங்கு பத்திரமாய் வைக்கலாம் என்று யோசித்தாள்.

பிறகு அவள் சமைத்து அலுவலகம் கிளம்ப, அப்பாவும் மகனும் பத்திரிக்கை வைக்கப் போனார்கள். அவர்கள் இரவு ஏழு மணி போல் வந்துவிட, அப்போதுதான் வல்லியும் அலுவலகத்தில் இருந்து வந்தாள். அவள் மேக்சி அணிந்து இருக்க இளந்திரையனின் விழிகள் மனைவியை உடையைத்தான் ஆராய்ச்சி செய்தது.

“பார்டா, இஞ்சி இந்த டிரஸ்லாம் போடுறதை” என்று மனத்தினுள் வியந்துகொண்டான்.

சௌந்தர்ராஜன் மருமகளிடம்
“வல்லிமா, நாங்க கிளம்புறோம்மா, சீக்கிரம் ஊருக்கு வரதைப் பாரு” என்று சொல்ல

“சரிங்க மாமா, சாப்பிட்டுப் போகலாம் இருங்க” என்றவள் கிச்சனுக்குள் போக

“வல்லி நில்லும்மா, சாப்பாடெல்லாம் வேண்டாம், மதியம் வெளியே சாப்பிட்டதே அப்படியே இருக்குது, இடையில நாலு டீ குடிச்சிட்டேன்” என்றார்.

“முடிஞ்சா இந்த வாரமே வாம்மா” என்று மருமகளை எப்படியாவது ஊருக்கு வரவைக்கும் வேகத்தில் அவர் பேச, இன்னொரு பக்கம் இளந்திரையன் அவனின் அம்மா மாதவியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“ஏதோ சம்மந்திக்காரங்களுக்கு உனக்குக் கல்யாணம் முடிஞ்ச செய்த தெரிஞ்சதொட்டி அவளையெல்லாம் அழைக்க வேண்டி கிடக்குதுடா, என்ன சொல்றா அந்த சீமை சிங்காரி?” என்று மாதவி கேட்க

“நான் ஒன்னும் கேட்டுக்கலம்மா, அப்பாதான் பேசினார்” என்றதும்

“அதானே நீ எப்படி பேசுவ, என் புள்ளைக்கு என்ன மாதிரி ரோஷம்தான் முக்கியம், எல்லாம் உங்கப்பாரை சொல்லணும், தங்கச்சி மவளைக் கண்டதும் அப்படியே பாசமலர் சிவாஜி மாதிரி பேசுவார்டா உன் நொப்பா” என்று கணவனைக் கிண்டல் செய்தார்.

“ம்மா, அதெல்லாம் ஒன்னுமில்ல, இங்க எங்களுக்குப் பத்திரிக்கை வைக்கவே நேரம் சரியா இருக்கு”

“அப்படியா டா? அதைவிடு இங்க பார் இளா அம்மா எப்பவும் சொல்றதுதான், கமலிக்கு என்னை மாதிரி நாத்தனார் தொல்லை இல்லாம நல்ல சம்மந்தம் அமைஞ்சிருச்சு, ஒத்தப்பிள்ளையா போய்ட்டார் மாப்பிள்ளை. அதான் அவளும் வந்து நின்னா சபையில மரியாதைன்னு பார்க்கிறேன். அதுக்காக அம்மா அவளோட உன்னை வாழ சொல்லிடுவேனோன்னு நீ கவலைப்படாத, உங்கப்பாரு தான் ஒரு தடவை உன் வாழ்க்கையை இப்படி ஆக்கிட்டாரு, கல்யாணம் நல்லபடியா முடியட்டும். அப்புறமா அவளை வெட்டிவிட்டுடலாம்” என்றதும் அவன் மனத்தில் சுருக்கென்றது.

“ம்மா, கல்யாணம்னு நல்ல விஷயம் பேசும்போது என்ன பேச்சு இது?” என்றான் கொஞ்சம் அதட்டலாக.

“இப்போ கமலி கல்யாணம்தானே ம்மா முக்கியம், அதைப் பத்தி மட்டும் பேசுவோம், அப்புறம் எனக்கு வேலை இருக்கு, கமலி கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி நான் வரேன். இங்க நான் எதாவது ரூம் பார்த்துத் தங்கிக்கிறேன்” என்றான் இளந்திரையன்.

“என்னடா சொல்ற? நம்ம வீட்லதான் ஒன்னுக்கு நாலு ரூமா இருக்கே இப்போ”

“ரூம் இருந்து என்ன செய்ய? நம்ம ஊர்ல நெட் கனெக்ஷன் சரியா கிடைக்கறதில்லமா, எனக்கு ஆபிஸ் வொர்க் அங்க சரிப்படாது, நான் எதாவது ப்ரண்ட் ரூம்ல தங்கிக்கிறேன்” என்றான் முடிவாக.

இளந்திரையன் தங்கையின் திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்தான், இப்போதைக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டிருந்தான். அவனது வேலை புனேவில், எப்படியும் ஜவுளி எடுக்க, நகை எடுக்க எல்லாம் சென்னை வரவேண்டி இருக்கும். மாப்பிள்ளையின் வீடும் சென்னைதான்.

ஊரில் இருந்த ஒருவாரமும் அவனால் வேலை செய்யவே முடியவில்லை, லேப்டாப்பை அப்படியும் இப்படியும் தூக்கிக் கொண்டு அலையவே சரியாய் இருக்க, இங்கிருப்பதே சௌகரியம் என்று முடிவு செய்திருந்தான். தங்குவதற்கு அவன் ஆன்லைனில் இடம் தேடியபடியே வஞ்சுளவல்லியின் வீட்டிற்கு வந்தவன் தந்தையிடமும் அதை சொல்ல சௌந்தர்ராஜன் சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தவர் பின் வேகமாய்,

“டேய் இருபது நாளுக்காக ஏன் டா வீணா வேற இடம் பார்க்குற? நம்ம வல்லி கூடவே தங்கிக்கோ” என்று சொல்ல அவன் அப்பாவை ‘என்ன இது?’ என்பது போல பார்த்தான். மாமாவின் பேச்சு அங்கு நின்ற வஞ்சுளவல்லிக்கும் அதிர்வைத் தந்தது.

மாமாவுடன் அவன் இருப்பது வேறு, ஆனால் இருவர் மட்டுமே தனியே? இதுவரை அப்படி யோசனை கூட இருவருக்கும் இருந்ததில்லை, திருமணம் ஆன போதிலும் அப்படி தனித்தோ தனிமையிலோ இருவருமே இல்லை.

இப்போது ராஜனின் பேச்சு இருவருக்குள்ளும் அதிர்வலையை உண்டு செய்திருக்க,
“அதெல்லாம் வேண்டாம்ப்பா, நான் வேற இடம் தேடிக்கிறேன்” என்று தன் மறுப்பை இளந்திரையன் சொல்ல

“டேய்! எப்படியும் எங்கேயோ இருக்கிறதுன்னு ஆகிப்போச்சு, இங்க எல்லா வசதியும் இருக்கு, வல்லி உனக்கு ஒன்னும் ப்ரசன்னையில்லையே ம்மா? இல்ல எதாவது?..” என்று அவர் இழுக்க

“அதெல்லாம் இல்ல மாமா, அவர் இருக்கறதுல ஒன்னும் ப்ரச்சனையில்லை” என்று உடனே சொல்லிவிட்டாள் வஞ்சுளவல்லி.

‘இஞ்சி மாமா சொன்னா ஆமான்னு மட்டும்தான் சொல்லுவா’ என்று மனைவியை மனத்தினுள் கடிந்தான்.

“அப்புறமென்ன டா? வல்லியே ஓகே சொல்லிடுச்சு. நீ என்ன பண்ணு ஒரு நாள் வல்லியும் நீயும் சம்மந்தி வீட்டை நேர்ல பார்த்துட்டு வாங்க, உங்களைத்தான் பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தாங்க” என்றதற்கு இளந்திரையன் எந்த மறுப்பும் சொல்லவில்லை. அதுவே பெரிய ஆச்சரியமாய் இருந்தது சௌந்தர்ராஜனுக்கு.

அதன்பின் அப்பாவை பஸ் ஏற்றிவிட இளந்திரையன் சென்றான். அங்கு அவர் மகனிடம்
“தம்பி, உங்கம்மா கிட்ட நீ வல்லியோட இருக்கன்னு இப்போதைக்கு சொல்ல வேண்டாம், அப்புறம் ரொம்ப பேசுவா” என்று சொன்ன அப்பாவிடம்

“நான் என்ன தப்பா செய்றேன்ப்பா? அதெல்லாம் அம்மா கிட்ட இங்க தங்குறேனே சொல்லிடுங்க, அவங்க பேசினா நான் பார்த்துக்கிறேன்” என்றவனின் உறுதியில் உவகைப் பெருக்கெடுத்தது சௌந்தர் ராஜனுக்கு.

இளந்திரையனை வெளியில் இருந்து பார்த்தால் அம்மா பிள்ளையாகத் தெரிவான், அவரிடம்தான் அதிகம் பேசுவான். ஆனால் உண்மையில் அவனின் வாழ்க்கையின் அத்தனைப் பெரிய முடிவுகளையும் அவனின் அப்பாவின் முடிவுக்கே விட்டவன் அவன்.

அதனையும்விட அவன் நினைத்தால் செய்யாமல் விடமாட்டான் என்பதும் ராஜனுக்குத் தெரியும். மகனுக்கும் மருமகளுக்கும் இந்த தனிமை அவசியம் என்று நினைத்தார் சௌந்தர்ராஜன்.

‘நேத்து இங்க வர யோசிச்சதென்ன? இப்போ இங்க டேரா போட நினைக்கிறதென்னடா இளா?’ என்று அவனே தனக்குள் கேட்டுக்கொண்டான்.

அவன் மௌனமாக இருக்க, வஞ்சுளவல்லிக்கும் தான் செய்வது சரியா தவறா என்ற யோசனை. அதனையும் விட தனிமையின் பதற்றம்! சொந்த வீட்டிலேயே ஒரு இறுக்கம் அவளுக்கு. நிலைத்திருந்த நிசப்தம் கலைத்தாள் கமலி, அண்ணனுக்கு அழைத்தவள்

“அண்ணா நீ சென்னையில இருக்கப் போறியாமே, நான் வல்லிக்கிட்ட பேசணும், உன் போன் கொடு ப்ளீஸ்” என்றதும் அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை, எழுந்து அவன் வெளியே வாசல் பக்கம் வந்து நின்று தங்கையிடம்

“ஏய் நீ இப்பவும் அவ கூட பேசுவியா? அம்மாவுக்குத் தெரியாம பேசுறியா?” என்று அவன் விசாரணையைத் துவங்க

“அண்ணா, எனக்கு என் அத்தாச்சி வல்லியை எப்பவுமே பிடிக்கும், அவ கூட போன் அவ்வளவா பேசறதில்ல, ஆனா மெசெஜ் பண்ணுவேன். எனக்குக் கொஞ்சம் திங்க்ஸ்லாம் வாங்கனும் அவ கிட்ட அது பத்திப் பேசணும், அவ போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது, அம்மா வரதுக்குள்ள கொஞ்சம் அவ கிட்ட கொடுண்ணா” என்றதும் மீண்டும் வீட்டினுள் நுழைய, அவள் தோசை ஊத்திக் கொண்டிருந்தாள்.

தங்கையிடம், “ஒரு நிமிஷம்” என்று சொல்லி ஹோல்டில் போட்டவன்
“கமலி உங்கிட்ட பேசனுமாம், எனக்கு நைட் சாப்பாடு வேண்டாம், பசியில்லை” என்று சொன்னவன் போனை அவளிடம் நீட்ட, அவள் வாங்கியதும் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வந்து சோஃபாவில் உட்கார்ந்து வேலைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

அவன் வேலையில் ஆழ்ந்த நேரத்திற்குள் கமலியிடம் பேசி முடித்த வல்லி டீபாயின் மீது போனை வைத்துவிட்டு உண்டு முடித்தாள். பின் அவனுக்குப் பால் கலக்கி டீபாய் மீது வைத்தவள்,

“எதுவும் சாப்பிடாம தூங்காதீங்க” என்று சொல்லிவிட்டு உள்ளிருந்து மெத்தையை எடுத்து வர

“எனக்கு மெத்தை வேண்டாம் வல்லி” என்றான் இளந்திரையன். அவள் கேள்வியாய் நோக்க
“அது உன்னோடதுதானே? உனக்கு வச்சுக்கோ, இந்த வசதியெல்லாம் நான் எதிர்ப்பார்க்கறதில்லை, எனக்கு பாய் கொடு போதும்” என்று அவன் பேசியதுதான் இத்தனை வருடத்தில் நீளமான பேச்சு.

“இல்ல எப்பவும் நீங்க பெட்லதானே தூங்குவீங்க? எனக்கு ப்ராப்ளமில்லை” என்றாள்.

“இல்லை எனக்கு வேண்டாம்” என்றான் உறுதியாய். பின் அவனாகவே

“நேத்து நல்லா தூங்கிட்டு இன்னிக்கு இப்படி பேசுறானே பார்க்காத, அப்பா முன்னாடி பேச வேண்டாம்னு இருந்தேன்” என்றதும் எதற்கு இவனுடன் உனக்கு விவாதங்கள் என்று அவள் மனம் திட்ட பேசாமல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவனுக்குப் பாய் விரித்து அதன் மேல் ஒரு போர்வை விரித்து தலையணை போட்டவள், கதவைப் பூட்டிவிட
“எனக்குக் கொஞ்சம் வொர்க் இருக்கு, நீ உன் ரூம் லாக் பண்ணிக்கோ, உனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்” என்றதற்கு தலையசைத்து அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள். முதல் தனிமையைக் கூட தனியாகவே கடந்தனர் கணவனும் மனைவியும்!!

✅ End of Episode 2
How did you feel about this episode?
❤️ 2 😮 1 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Radhi Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

திருமணம் முடிந்தும்

தனித்தனியா.....
Meenakshi subbhuraman Reader 1 month ago

என்னடா நடக்குது இங்கே 

Saraswathi Reader 4 weeks ago

Interesting

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top