Episode 6
மறந்துவிட்டான்! அவர்களின் திருமணத்தை, அதன் பின் நடந்த எல்லா இனிய பொழுதுகளை, சண்டைகளை சச்சரவுகளை, பிரிவை எல்லாம் எல்லாம் மறந்துவிட்டான் ஜனா. ஜனாவின் பேச்சில் திகைத்த மலர்,
“வேணும்னு ட்ராமா பண்றியா ஜனா?” என்று திட்ட,
அவனோ,
“என்ன மலர் சொல்ற? என்ன ட்ராமா? என்ன ஆச்சு?” என்று அவளை விட பதட்டமாகக் கேட்டான். அவனின் நெற்றிச்சுருக்கமும் முகமும் அவன் உண்மையை சொல்கிறானோ என்று நினைக்க வைக்க, ஒன்றும் விளங்காமல் வெளியே வந்து வீட்டினருடன் பேசிய டாக்டரிடம் அவள் சொல்ல, டாக்டர் உள்ளே சென்று அவனுடன் சில நிமிடங்கள் பேசியவர் அவனுக்கு retrograde amnesia என்றார், தலையில் அடிப்பட்டதினால் சில ஞாபகங்கள் அவனுக்கு மறந்து, நினைவில் இருந்து அழிந்து போயிருக்கும் என்றார்.
அதன்பின் வீட்டினர் எல்லாரும் அவனைப் போய் பார்த்து வந்தனர், பிரசன்னா, ஜகன், முரளி எல்லாரும் டாக்டரிடம் பேசிவிட்டு வந்தார்கள், எல்லாரும் அவர்களையே பார்க்க,
“ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, ஒரு த்ரீ டேய்ஸ் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் சொல்லிட்டாங்க, அவனுடைய ஞாபகம் எல்லாம் தானா வரட்டும், ஃபோர்ஸ் பண்ண வேண்டாம் சொன்னாங்க டாக்டர்” என்றான் எல்லாரிடமும்.
சிறிது நேரத்தில் ஜனாவை ஜெனரல் வார்டிற்கு மாற்றினர், பிரசன்னா நண்பனுக்காக தனியாகவே ஒரு அறைக் கேட்டிருந்தான், எல்லா வசதியுடன், டீவி, ப்ரிட்ஜ், மெத்தை, ஏசி என்று சகலமும். இரவில் யாராவது ஒருவர் மட்டுமே அவனுடன் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட, பிரசன்னா ஜகனிடம்,
“மாமா, நீங்க வீட்டுக்குப் போங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றதும், அதுவரை ஜனாவின் உடல் நிலைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்க மலர் விழித்துக்கொண்டு, சௌந்தர்யாவிடம்,
“ஆன்ட்டி நான் அவரைப் பார்த்துக்கிறேன், வேற யாரும் இருக்க வேண்டாம்” என்றதும் வர்ணவி உடனே,
“ஏன் இவ்வளவு பண்ணினது பத்தலையா உனக்கு? அதெல்லாம் நீ இருக்க கூடாது” என்றவளை முறைத்த மலர்,
“நோ மோர் வொர்ட் ப்ரம் யூ வர்ணவி” என்றாள் அதட்டலாக.
சௌந்தர்யாவைப் பார்த்தவள், “நான் பார்த்துக்கவான்னு பெர்மிஷன் கேட்கல ஆன்ட்டி, நான் உங்களுக்கு சொல்றேன் அவ்வளவுதான்” என்றதும் சௌந்தர்யாவிற்குப் புன்னகை எட்டிப்பார்க்க,
“பிரசன்னா நீ வருவை அழைச்சிட்டு வீட்டுக்குப் போ, நானும் மாமாவும் எங்க கார்ல வரோம்” என்று சொல்ல, வர்ணவி அம்மாவை முறைத்துப் பார்க்க, பிரசன்னா அவளின் கையைப் பிடித்து இழுத்துப் போனான்.
“மாமா பார்த்தியா அவளை? என்னமோ அண்ணா கூடவே இருந்து குடும்பம் நடத்தினவ மாதிரி பேசுறா?” என்று எரிந்து விழ,
“குடும்பம் நடத்தாமதான் ஒரு குட்டிப்பாப்பா இருக்கா?” என்றான் நக்கலாக.
“என்ன நீ எப்போ இருந்து அவளுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பிச்ச? இத்தனை வருஷமா அண்ணாவுக்கு வேற கல்யாணம் பண்ற ஐடியாதானே உன்னோடது?” என்று கோபமாகப் பேச,
“எப்போ இருந்துன்னா அவனுக்கு குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச பின்னாடிதான்” என்றவன் மனைவியைப் பிடித்து நிறுத்தி,
“இத்தனை வருஷம் நீ எதிர்ப்பார்த்த விஷயம் தானே இப்போ நடக்குது? அதுக்கு சந்தோஷப்படாம ஏன் டி இப்படி?” என்று கிண்டலாய்க் கேட்க,
“அவ செஞ்சது தப்பு தானே?” என்று ஆரம்பித்தாள்.
“வரு, சாத்வீயை விட்டு வந்திருக்கோம், தாத்தாவும் அம்மச்சியும் எவ்வளவு நேரம் முழிச்சிருப்பாங்க? அவங்களுக்கு இன்னும் நான் விஷயம் சொல்லல, காலையில சொல்லிக்கலாம் சரியா?அப்புறம் நம்ம இதை பேசுவோம்” என்று சொல்லி அவளை அழைத்துப் போனான்.
மகளும் மருமகனும் போய்விட, மலரின் கையைப் பிடித்துக்கொண்டவர்,
“நீ உன்னோட அவரைப் பார்த்துக்கலாம், ஆனா அது இன்னிக்கு மட்டுமா இல்லை எப்பவுமேவா? அதை மட்டும் எனக்கு சொல்லு. இப்ப அவசரத்துல சொல்லிட்டு நாளைக்கு அவனுக்கு எல்லாம் ஞாபகம் வந்த பின்னாடி திரும்பவும் பழசைப் பிடிச்சு சண்டைப் போட்டு அமெரிக்கா ஆஃப்ரிக்கான்னு போகக் கூடாது” என்று அன்பாக ஆரம்பித்தவர் கண்டிப்பாக முடித்தார் சௌந்தர்யா.
ஒரு நிமிடம் யோசித்தாள் சுதந்திர மலர், நிச்சயம் ஜனாவைப் பிரிய முடியுமா என்று தெரியவில்லை, அதுவும் இப்போது சத்தியமாக அப்படி முடியுமா என்று தோன்றவில்லை. அவளுக்கும் அவனுக்குமான பிரச்சனைகள் தீரவில்லை, அவளுக்கும் அவனுக்குமான பிரச்சனையில் அமிழ்தாவை இனியும் அப்பா இன்றி தவிக்க வைக்க அவள் விரும்பவில்லை.
அமிழ்தாவிற்கு இன்னும் அம்மாவைத் தாண்டி விவரம் தெரியாது, ஆனால் இனிமேல் தெரிந்து விடுமே, இவ்வளவும் யோசிக்க யோசிக்க மீண்டும் ஒரு மனசோர்வு மலரினுள், இந்த நொடி அவன்தான் முக்கியம் என்பது மட்டுமே எண்ணம் ஆகத் தோன்றிவிட,
“எப்பவும் பார்த்துப்பேன் நல்லா பார்த்துப்பேன்” என்றவளின் கண்ணீரைத் துடைத்த சௌந்தர்யா,
“அழக்கூடாது மலர், நீ உன் அவரைப் பார்த்துக்கோ சரியா?” என்று செல்லமாக அவள் கன்னம் தட்டினார்.
“அண்ணா இனிமே அவளாச்சு, அவளோட அவராச்சு, நாங்க உங்களை வீட்ல விட்டுட்டு கிளம்புறோம்” என்று சொல்ல
சாரதாவிடம் இருந்த மகளை தன்னிடம் தருமாறு மலர் சொல்ல,
“இவளை வச்சிட்டு எப்படி டி நீ இங்க இருப்ப? அவ தான் தூங்கிட்டாளே, நாங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம் மலர்” என்ற சாரதாவிடம்,
“இல்லம்மா இடையில அழுதா கஷ்டம், நானே வச்சுக்கிறேன்மா, ப்ளீஸ்” என்றவள் குழந்தையையும் வாங்கிக் கொண்டாள். அவளை சாப்பிட சொல்ல, எதுவும் வேண்டாம் என்று மறுத்தாள்.
எல்லாரும் ஜனாவிடம் சொல்லிக் கொண்டு செல்ல, குழந்தையை அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட மெத்தையில் படுக்க வைத்தவள், ஜனாவின் அருகே வந்து ஸ்டூலில் உட்கார்ந்து அவனைப் பார்த்தாள்.
“நிஜமா எல்லாம் மறந்திட்டியா ஜனா?” என்று அவள் கூர்மையாக அவனைப் பார்த்துக் கேட்க, நெற்றி சுருங்க அவளைப் பார்த்தவன்
“என்ன ஆச்சு மலர் உனக்கு? எனக்கே எதுவும் ஞாபகம் இல்லன்னு இருக்கேன், கல்யாணம் குழந்தைன்னு ஒன்னுமே எனக்குத் தெரியல, நீ இப்படி கேட்டு டென்ஷன் பண்ற டி என்னை போ” என்று அவன் கண்களை மூடி கொண்டான். அவன் நெற்றி சுருக்கியதில் தலையில் வலியெடுக்க, வலக்கையினால் தலையைத் தேய்க்கப் போக,
மலருக்கும் ஐயமெல்லாம் அந்த நொடி விலகிட,
“என்ன ஆச்சு?” என்றாள்.
“வலிக்குது” என்றான் உண்மையாக.
“தையல் போட்டிருக்காங்க இல்ல, சரியாகிடும்” என்று அவள் விரல்கள் அவனின் முன் நெற்றியை மென்மையாக வருடிக்கொடுக்க, அந்த வருடலில், வாஞ்சையில் உறங்கிப் போனான்.
அவன் உறங்கியதும், மகளின் அருகே வந்த மலர் ஜனாவைப் பார்வையில் வைத்தபடி கண்களை மூடினாள். முதன் முறையாக அவன், அவள், அமிழ்தா! நினைவில் மட்டுமே இருந்த ஒன்று இன்று நிஜமாய்! ஒருவித நிம்மதி, நிறைவு மலரிடம்!
அப்படியே உறக்கம் கண்களைத் தழுவ, கூடவே அவனின் நினைவலைகள், அகக்கடலின் ஆர்ப்பரிப்பாய் மேலே எழுந்தன.
முதன்முதலில் ஜனாவைப் பார்க்கையில் அவனுடன் வாழ்க்கை என்றோ, அவன் தான் வாழ்க்கை என்றோ என்ற எண்ணமெல்லாம் துளி கூட மலரிடம் கிடையாது. அவள் கல்லூரி படித்த சமயம் வாராவாரம் ஞாயிறன்று எக்மோர் கன்னிமாரா நூலகம் செல்வாள். அன்று கனமழை, அடித்துத் துவைத்தது. இவளுக்குக் குளிர் தாங்கவில்லை, அதனால் இரண்டாம் மாடியில் இருக்கும் ஆங்கில புத்தகங்கள் இருக்கும் அறைக்குள் புகுந்தாள், அங்குதான் கொஞ்சம் அடைசலாக இருக்கும், அறையும் சிறிது, கதகதப்பாக இருக்கும்.
ஒரு மூலையில் போய் அவள் உட்கார்ந்து கொண்டாள், கையில் கிடைத்த ஒரு அகதா க்ரைஸ்டியின் நாவலைப் படிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு முன்னிருக்கையில் ஒருவன் மட்டுமே உட்கார்ந்திருந்தான். அவன் கையிலும் ஒரு புத்தகம், ‘கைட் ரன்னர்’ என்று காலித் ஹோசைனி எழுதியது. முதலில் சில நொடிகள் அவள் புத்தகத்தில் திளைத்தவள் குளிர்தாங்காது வேடிக்கைப் பார்க்க, ஜனா அசையவில்லை. அவனின் விழிகள் அங்குமிங்கும் அந்த புத்தகத்தினுள்ளேயே போய் வர, அவனின் உடையைப் பார்க்க, வைட் ஷர்ட், ஜீன்ஸ்.
‘அடடே அழகு!’ என்று நினைத்தவள் அவனைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தாள், சைட் அடித்தாள் என்று வைத்துக்கொள்ளலாம். அதுவும் புத்தகம் படிக்கும்போது அவனின் விழிகளே பல மொழிகள் பேசின, மகிழ்வோ சோகமோ அவனின் விழிகள் அதனை பிரதிபலிக்க,
‘அழகா படிக்கிறாரே’ என்று நினைக்கத் தோன்றியது. படிப்பது அழகு என்றால், படிப்பவரை ரசிப்பது கூட அழகுதான் போல. வரிக்கு வரி அவன் விழி பாவம் என்று கேட்டாலும் அவளுக்கு மறக்காது.
இரண்டு மணி நேரம் கழித்து அவன் எழுந்து போய்விட, புத்தகத்தை எங்கு வைக்கிறான் என்று பார்த்தவள், அப்படியென்ன இருக்கு அதில் என தெரிய, அந்த புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டாள், அந்த வாரம் அதனை இரவல் பெற்றாள்.
இத்தனைக்கும் அவளுக்கு அவன் பெயரென்ன, ஊரென்ன, யாரென என்று ஒன்றும் தெரியாது, நடந்து செல்கையில் செவியோரம் தீண்டிடும் தூர இசையாய் அவன், இசையின் வேரென்ன என்றெல்லாம் அப்போது ஆராயத் தோன்றாதே, எங்கு இருந்து வருகிறதென்பதெல்லாம் நினைக்கத் தோணாமல் அந்த நொடி இசை மட்டுமே பிரதானமாக இருக்கும். ரசித்துக் கடந்துவிடுவோம். அப்படியானவனாகத் தான் இருந்தான் ஜனா. சில நேர ரசனை, அவ்வளவே!
ரசனையெல்லாம் காதல் ஆகிடாது, ஆனால் காதலில் கண்டிப்பாக ரசனை உண்டு!
அப்படி தூர இசையாய் இருந்தவன், இன்று அவளுக்கான தனிப்பாடலாக மாறினான், காலத்தால்! காதலால்!
உறக்கம் கண்களைக் கெஞ்சினாலும் இப்படி நீங்கா நினைவுகள் மலரை உறங்கவிடவில்லை. கொஞ்ச நேரம் உறங்கியவள் மீண்டும் ஜனாவின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டாள், அவனின் விரல்களை வருடியவள் அப்படியே உறங்கிப் போக, காலையில் நர்ஸ் வந்து அவனைப் பார்த்தபோதுதான் விழித்தாள் சுதந்திரமலர்.
நர்ஸ் அவனை செக் அப் செய்துவிட்டு டிரிப்ஸ் போதும் என்று எடுத்துவிட்டார். போன சிறிது நேரத்தில் அமிழ்தா விழித்துக் கொண்டு அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டாள். அமிழ்தாவையே சுற்றியது ஜனாவின் பார்வை. அதனைப் பார்த்த மலர்,
“மறந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்ல ஜனா, நீங்க ஸ்டேர்ய்ன் செய்யக் கூடாது டாக்டர் சொன்னாங்க. நான் தான் உன்னோட ஒரே பொண்டாட்டி, இவ தான் நம்ம ஒரே பொண்ணு அமிழ்தா” என்று புன்னகையுடன் மலர் சொல்ல, ‘இங்க வா’ என்று அவன் விழிகள் சொல்ல, அவளும் அமிழ்தாவின் கைப்பிடித்து அவனருகே போக
“ஒரே பொண்டாட்டின்னு சொல்லிக்கோ டி, அது என்ன ஒரே பொண்ணு, அடுத்து தம்பி தங்கச்சியெல்லாம் கிடையாதா? எனக்கு வேற ஒன்னுமே தெரியல, காதலிச்சோம் ஓகே, காரை எங்கேயோ விட்டு கண்முழிச்சுப் பார்த்தா கல்யாணமாகி குழந்தை இருக்கு, இடையில சம்திங் சம்திங் எல்லாம் எனக்கு ஞாபகமே இல்ல” என்றான் விஷமமாக.
அவன் பேச்சில் வெட்கம் வேர் விட, மெல்லமாக அவன் கையில் அடித்தவள்,
“ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டு என்ன பேசுற நீ? டர்டி ஃபெலோ டா நீ” என்று திட்டியவள், அமிழ்தாவைத் தூக்கி ஸ்டூல் மேல் உட்கார வைத்து,
“அமிழ்தா, அப்பா கூட பேசிட்டு இரு, அம்மா வாஷ்ரூம் போய்ட்டு வரேன்” என்று சொல்லிப் போக, அவ்வளவு பேசும் அவனுக்கும் அவளுக்கும் அப்படியே எதிர்மாறாக அவள் பெண் அமிழ்தா பேசாமல் அப்பாவின் முகம் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
மலர் போனதும்,
“என்ன பேபி, அப்படி பார்க்குறீங்க? அப்பாவுக்கு அடிபட்டுடிச்சு, அதான் கட்டுப் போட்டிருக்கு” என்று சொல்ல, ம்ஹூம் அமிழ்தா அம்மா எப்போது வருவாள் என்றே பார்த்தாள்.
அவள் வந்தபின்,
“அம்மா அப்பா ஏன் காணும்? யூ.எஸ் வல்ல, அதிபத்திச்சா?” என்று கேட்க, திகைத்த மலருக்கு என்ன சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. அப்போது பார்த்து காலை உணவுடன் உள்ளே வந்த சௌந்தர்யா,
“அம்முக்குட்டி, அப்பாவுக்கு அடிபட்டுச்சா அதான் அவன் இங்க என்னோட இருந்தான், அம்மாவுக்கு வேலை இருந்ததால அவளும் நீயும் யூஎஸ் இருந்தீங்க” என்றதும் அமிழ்தா ஒரு முறை அப்பாவைப் பார்த்தவள் பின்,
“சதியாச்சா?” என்று கேட்டாள்.
புன்னகையுடன்,
“சரியாச்சு பேபி” என்ற ஜனா அம்மாவிடம்,
“மா, இவ யூஸ் போனாளா? எப்போ அது?” என்று அதனை அறிந்து கொள்ள வேண்டிக் கேட்டான்.
“அது நான் ஆன்சைட் ப்ராஜ்க்ட்காகப் போனேன் ஜனா, இப்போ ஏன் அதையெல்லாம் நீங்க யோசிக்கிறீங்க, டாக்டர் ரொம்ப யோசிக்கக் கூடாது சொன்னாங்க” என்று மலர் அவனை வாய் மூட செய்ய,
சௌந்தர்யாவும் அதையே சொன்னவர்,
“மலர் இவனுக்கு ஹாஸ்பிட்டல்ல சாப்பாடு கொடுத்துடுவாங்க, உனக்கும் பாப்பாவுக்கும் நான் வீட்ல இருந்து கொண்டு வந்தேன், நீ முதல்ல சாப்பிடு, நைட்டும் சாப்பிடல” என்றார்.
மலருக்கு ஒரு தர்மசங்கடம். அவர்கள் வீட்டு சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல நினைக்க, சௌந்தர்யா அவள் முகத்தையே ஆராய்ந்தவர் மெதுவாக,
“நேத்து எப்பவும் ஜனா விட்டு போக மாட்டேன்னு சொன்ன மலர், ரொம்ப யோசிக்காம சாப்பிடு, நான் தானே சமைச்சேன், என் புள்ளையை விட என் சமையல் ரொம்ப நல்லாயிருக்கும்” என்று அவர் சொல்லவும் மலரின் முகம் அலர்ந்தது.
“நான் ப்ரஸ்ட் அமிழ்தாவுக்குக் கொடுக்கிறேன் ஆன்ட்டி” என்றவளை முறைத்தவர்
“எல்லாம் மாறனும்னா முதல்ல நீ மாறு, குழந்தைக்கு உறவுமுறை சொல்லித் தர முன்னாடி என்னை நீ அத்தைன்னு கூப்பிடு, இன்னும் நான் உன் ப்ரண்ட் வர்ணவி அம்மா மட்டுமில்ல” என்றார் இலகுத்தன்மையில்லா கண்டிப்பான குரலில்.
“சாரி அத்தை” என்று தன்னைத் திருத்திக்கொண்டாள் மலர். அவள் குழந்தைக்கு ஊட்டுகையில் சௌந்தர்யாவை அழைத்து வந்த பிரசன்னா உள்ளே வந்து நண்பனை விசாரித்தான். அப்போது சரியாக மலரின் அப்பாவும் அம்மாவும் வர, சௌந்தர்யா அவர்களை வரவேற்க, ஜனாவிடம் இருவரும் நலம் கேட்டனர்.
சாரதா பேத்திக்கு ஊட்டும் மகளைப் பார்த்தவர்,
“மலர், நைட் முழுசும் இங்க இருந்துட்ட, வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு அப்புறம் வரலாம் சரியா?” என்று அவளை வீட்டுக்கு அழைக்க, அதுவும் சரிதான் என்று நினைத்தவள்,
“அத்தை, நான் அமிழ்தாவோட வீட்டுக்குப் போய்ட்டு வரேன். நீங்க அதுவரைக்கும் கூட இருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“அவன் கூட இருக்கறதுக்குத் தானே நான் வந்தேன்” என்று சௌந்தர்யாவும் சொல்ல, குழந்தைக்கு ஊட்டியதுடன் எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள், எப்படியோ சாப்பிடாமல் தப்பித்தாள்.
பிரசன்னா நண்பனிடம் ஏதோ பேச, மலர் போய் ஜனாவின் அருகே நின்றதும், அவன் உடனே வெளியே போய்விட, ஜனாவும் மலரும் மட்டும் இருக்கட்டும் என்று நினைத்து அமிழ்தாவைத் தூக்கிக் கொண்டு சாரதா வெளியே போனவர்,
“மலர், அப்பாவும் நானும் வாசல்ல வெயிட் பண்றோம் வந்துடு” என்று சொல்லிப் போக, சௌந்தர்யா பிரசன்னாவுடன் அறைக்கு வெளியே நின்றார்.
ஜனாவின் அருகே சென்ற மலர்,
“நான் வீட்டுக்குப் போய்ட்டு குளிச்சிட்டு வரேன், நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்றதற்கு அவன் சரி என்று தலையசைக்க, வரேன் என்று சொல்லி அவள் நகர, அவனின் விரல்கள் அவள் விரல்களை விடாது பிடிக்க,
“என்ன ஜனா?” என்று கேட்டாள்.
“அதான் கல்யாணம் ஆகிடுச்சே, இப்ப கிஸ்லாம் தாராளமா கொடுக்கலாமே?” என்றதும்,
“ஓ! கிஸ் வேணுமா?” என்றவள்,
“நம்ம எப்போ கடைசியா கிஸ் பண்ணினோம் சொல்லு, நான் தரேன்” என்று டீல் பேசினாள்.
உணர்ச்சி வேகத்தில் ஒருவேளை உண்மையை சொல்வானோ, இன்னும் கூட அவனுக்கு எல்லாம் மறந்தது என்று நம்பவே முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.
“உன் பர்த்டேவுக்கு நான் மைசூர் வந்தேனே அப்போ” என்று அவன் சொல்ல,
“ஓகே ஒகே” என்று அவள் சொன்னதும்,
“என்ன ஒகே? தலையெல்லாம் வலிக்குது டி ராங்கி, யோசிச்சா டென்ஷன் ஆகுது” என்று அவன் வலியுடன் சொல்ல, மலருக்கு உடலில் ஒரு நடுக்கம், அவன் பேசிய பேச்சுகள் ஓட அசைவற்று நின்றாள்.
அதற்குள் அமிழ்தா அழுகிறாள் என்று அவள் அம்மா போன் செய்ய,
“வரேன் ஜனா” என்றவளின் கைவிரல் பிடித்தவன், அதில் மென்மையாக முத்தம் பதித்தான். புன்னகையுடன் அவளுக்கு விடைகொடுத்தான்.
மலர் வெளியே போனதும் சௌந்தர்யா உள்ளே வர,
“என்னால நம்பவே முடியலம்மா, அதுக்குள்ள எங்களுக்குக் கல்யாணமாகி குழந்தை இருக்கு” என்று சொல்ல,
மகனை கிண்டலாகப் பார்த்தவர்,
“என்னால கூட நம்ப முடியல, என் பையன் இவ்வளவு செமையா நடிப்பான்னு” என்று சிரித்தார்.
“மா, எனக்கு நிஜமாவே எல்லாம் மறந்துடுச்சு” என்று அவன் அடித்துப் பேச,
“நான் உன் அம்மா டா” என்று அவர் சிரிக்க,
“கேடிம்மா நீ ” என்று அவனும் சிரித்துவிட்டான்.
✅ End of Episode 6
Adapaavi
Nice
அடப்பாவி....